Loading

27 – வலுசாறு இடையினில்

 

அங்கிருந்து தப்பிய இருவரையும் நான்கு பேர் பின் தொடர்ந்தனர். அவர்களுடன் இளவேணியும், செங்கல்வராயனும் இருந்தனர். 

 

“சீக்கிரம் போ .. அவனுங்க நம்ம கிட்ட இருந்து தப்பிக்க கூடாது..”, என இளவனி அவசரப்படுத்தினாள். 

 

“பிடிச்சிடலாம் வேணி.. நீ டென்ஷன் ஆகாத”, என செங்கல்வராயன் அவளை சமாதானம் செய்தபடி அவர்கள் செல்லும் திசையை அனுமானிக்க முயன்றார். 

 

“இது வர்மன் குலதெய்வ கோவிலுக்கு போற வழியாச்சே .. இந்த பக்கம் இவனுங்க ஏன் போகணும்?” ,என தனக்கு தானே கேட்டு கொண்டான் செங்கல். 

 

“வர்மன் கோவிலா? சீக்கிரம் அவனுங்கள பிடி.. அவனுங்க வர்மன் கிட்ட மட்டும் போகவே கூடாது.. “ ,என கார் ஓட்டுபவனை அவசரபடுத்தினாள். 

 

“அந்த கோவிலுக்கு அவனுக்கு முன்ன நம்ம போய்டலாம் வேணி.. டேய் வண்டிய வலது பக்கம் திருப்பு.. நம்ம எல்லகாளி கோவில் வழியா போய் குறுக்கு ரோடுல திரும்பு என கூறினார். 

 

“அவங்க பின்னாடி வரல டா.. சீக்கிரம் போ.. “, என தேவராயன் பின்னால் திரும்பி பார்த்தபடி கூறினான். 

 

“அண்ணே அவங்க குறுக்கு வழில வர தான் அப்போவே வலது பக்கம் திரும்பிட்டாங்க.. “, என மருதன் கூறினான். 

 

“நாம இப்ப என்ன பண்றது?”

 

“நீ நடக்க ரெடியா சொல்லு?” ,என கேட்டான். 

 

“கால ஒடச்சி கெடக்க சமயத்துல தான் டா நீங்க ரன்னிங் ரேஸ் வைக்கறீங்க.. சொல்லு எப்டியோ ஒண்ணு வந்து தொலையாறேன்..” ,என கூறினான். 

 

“அவங்க பெரிய ரோடுல தான் வரமுடியும் .. எபிடியும் இருவது நிமிஷம் ஆகும்.. நம்ம இப்ப வயல்வரப்புல நடக்க ஆரம்பிச்சா பத்து நிமிஷம் தான் கோவில்”, என கூறினான். 

 

“சரி வா போலாம்.. என் கல்யாணம் எப்டி எல்லாம் நடத்தனும்ன்னு நெனைச்சிட்டு இருந்தேன்.. கடைசில சொந்த அத்த பொண்ண கட்ட இவ்வளவு கஷ்டம் படுவேன்-ன்னு கனவுல  கூட நெனைக்கல டா..” என கூறியபடி வரப்பில் நடக்க ஆரம்பித்தான். 

 

“காலு வேற விண்ணு விண்ணு ன்னு வலிக்குது டா.. கொஞ்ச நேரம் நில்றா..” ,என நின்றான். 

 

“அண்ணே.. நீ இப்படி எல்லாம் நின்னா விடிஞ்சி தான் கோவிலுக்கு போக முடியும்.. வா உன்ன நான் தூக்கிக்கறேன்”, என அவனை அசலட்டாக தூக்கினான்மருதன். 

 

“டேய் டேய்.. வேணாம் டா.. நீ கீழ பொட்ட இருக்கற எழும்பு எல்லாமே ஒடஞ்சிடும் .. விடு .. நானே நடந்து வரேன்..” ,என கத்தினான். 

 

“கத்தாம வா ண்ணே..சின்ன புள்ளையாட்டம் .. உன்ன கீழ எல்லாம் போடமாட்டேன்.. ரெண்டு மாசமா உன்ன தூக்கி தூக்கி எனக்கு சர்வீஸ் ஆகிறிச்சி ..”, என பேசியபடி வரப்பில் வேக வேகமாக நடக்க தொடங்கினான். 

 

மருதன் கூறியது போல பத்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தனர். வாசலில் நின்று வர்மனும், வேல்முருகனும் வட்டிக்காகவும், ராயனுக்காகவும் காத்து கொண்டு இருந்தனர். 

 

“என்ன மாப்ள .. ரெண்டு பேரையும் காணோம்?” ,என வர்மன் நேரத்தை பார்த்து கொண்டே கேட்டான். 

 

“வட்டிய தூக்கிட்டாங்க மச்சான்.. அவன என் மாமனார் வீட்ல தான் வச்சி இருக்காங்க.. எங்க அத்த இப்ப தான் ஃபோன் பண்ணி சொல்லிச்சி.. சரி அவன் அங்கயே இருக்கட்டும் ன்னு சொல்லிட்டேன்.. “, என வேல்முருகன் கூறினான். 

 

“செங்கல் வேலயா ?”, என வர்மன் கேட்டான்.  

 

“இல்ல இது வேற ஆளு.. மொத நாம இந்த கல்யாணத்த முடிக்கலாம்.. முடிச்சிட்டு அங்க போய் வட்டிய பாத்துக்கலாம்.. அவனுக்கு ஒண்ணும் ஆகாது”, என வேல்முருகன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மருதன் தேவராயனை தோளில் தூக்கி வருவது கண்டு இருவரும் அவனை நோக்கி ஓடினர். 

 

“என்னடா ஆச்சி?”, என வேல்முருகன் கேட்டான். 

 

“செங்கல்லும் அது பொண்ணும் வராங்க.. சீக்கிரம் கல்யாணம் முடிக்கணும்” , என கூறியபடி நேராக மூவரும் அவனை மானமேடையில் கொண்டு வந்து அமரவைத்தனர். 

 

“டேய் டேய்.. ஏண்டா இப்டி பண்றீங்க..? என் கல்யாணம் கொஞ்சம் சந்தோஷமா செஞ்சிக்க விடுங்க டா..” ,என தேவராயன் கெஞ்சினான். 

 

“நீ நிதானமா சந்தோஷமா அப்பறம் இரு மாப்ள.. இந்தா இந்த சட்டைய போடு.. ஐய்யரே சீக்கிரம் மந்திரம் சொல்லுய்யா..”, என வர்மன் அவசரப்படுத்தினான். 

 

தேவராயனை மணமேடையில் நிற்க வைத்தே உடை மாற்றி அலங்காரம் செய்து அப்படியே அவன் கழுத்தில் மாலை போட்டு அமரவைத்தனர். 

 

“இதுலாம் ரொம்ப அநியாயம் டா..”, என தேவராயன் கூறும் போதே பானு சர்வ அலங்காரத்தில் வந்து அவன் அருகில் அமர்ந்தாள். 

 

அவள் வந்ததும் தாலி எடுத்து கொடுத்து கட்ட சொன்னார் ஐயர். 

 

மருதன் கண்களில் நீர் வழிந்தபடி அட்சதை தூவினான். வர்மனும், வேல்முருகனும் இருபக்கம் இருந்து அவனை அணைத்து கொண்டனர். 

 

பானு கண்களில் நிற்காமல் நீர் வழிந்தது. நீலா ஆச்சி இருவரையும் மனதார ஆசீர்வதித்து இறைவனை தரிசனம் செய்ய அனுப்பி வைத்தார். 

 

அவர்கள்  அந்த பக்கம் சென்றதும் செங்கல்வராயன் அந்த கோவிலின் உள்ளே வந்தான். 

 

இளவேணியும் வந்து சுற்றும் முற்றும் எல்லா இடத்திலும் தேடிவிட்டு வெளியே சென்றனர். 

 

நம்மவர்கள் அனைவரும் மற்றொரு வாசல் வழியாக வெளியே சென்று இருந்தனர். 

 

“அவனுங்க எங்க போய் இருப்பாங்க?” ,என இளவேணி கேட்டாள். 

 

“அந்த பாத முடியற எடம் இது தான் வேணி.. அதான் நம்ம முன்ன வரலாம்னு இப்டி வந்தது..” ,என செங்கல்வராயனும் கூறினான். 

 

“அவனுங்க பின்னாடி போய் இருந்தா கூட நம்ம கண்ணு முன்னாடி இருந்து இருப்பாங்க.. அவங்களுக்கு முன்ன வரலாம்னு நீ சொன்னத கேட்டு இப்டி கோட்டை விட்டுட்டு நிக்கறோம் பாரு “, என செங்கல்லை வறுத்து எடுத்தாள் இளவேணி. 

 

“வா அவன் வீட்டுக்கு போய் நெலவரம் என்னனு பாக்கலாம்..” ,என அவளை அழைத்து கொண்டு தேவராயன் இல்லம் சென்றான். 

 

அரை மணி நேர பயணத்தில் இளவேணி மிகுந்த மானஉலைச்சலுக்கு ஆளாகி இருந்தாள். எங்கு தவறு நடக்கிறது என்று புரியாமல் தந்தையை திட்டியபடி இருந்தாள். அங்கே எல்லாரும் வழக்கம் போலவே இருந்தனர். திருமணத்திற்கு உண்டான கலகலப்பு மட்டுமே இருந்தது. 

 

இளவேணியும் செங்கல்லும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து கொண்டனர். 

 

தங்கதுரை அவர்கள் இருவரையும் வரவேற்று, “ என்ன இப்படி வேர்க்க விறு விறுக்க வந்து இருக்கீங்க? போய் ரெடி ஆகுங்க.. இன்னும் அரை மணி நேரத்துல கோவிலுக்கு கெளம்பனும்.. “, என இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தார். 

 

“வாங்க மாமா ..” , என எதிரில் மருதன் வந்து வரவேற்று விட்டு தாயை தேடி சென்றான். 

 

“இவன் என்ன இங்க இருக்கான்?” ,என செங்கல் மகளிடம் கேட்டார். 

 

“என்னமோ நடக்குது ப்பா.. நம்ம உஷாரா இருக்கணும்..” , என கூறிவிட்டு ஒரு அறைக்குள் நுழைந்து தயாராகி வெளியே வந்தாள். 

 

“அப்பா .. அப்பா..”, என அவள் கூப்பிட்டு கொண்டு வந்த பொது தேவராயன் அவளை சிரிப்புடன் நெருங்கினான். 

 

“என்ன திடீர் மாமன் மகளே .. அம்சமா ரெடி ஆகி இருக்க.. பக்கத்துல இன்னொரு பலகை போட சொல்றேன் என்னை கட்டிக்கறியா?” ,என வம்பு செய்தான். 

 

“உனக்கு பேசி இருக்க பொண்ண மொத கட்டு தேவராயன்..”

 

“அது நீங்க பேசினா பொண்ணு.. நான் விருப்ப படற பொண்ணுக்கு நான் எப்ப வேணா தாலி கட்டலாம்.. உனக்கு கூட ஒரு தாலி ரெடி பண்ண சொல்றேன்.. சரியா ன்னு சொல்லு?” ,என சிரித்தபடி அவள் அருகில் நெருங்கி நின்று பேசினான். 

 

“அறிவில்ல உனக்கு.. கொஞ்ச நேரத்துல கல்யாணம் வச்சிக்கிட்டு இப்படி என்கிட்ட பேசற.. “, என அவனை திட்டிவிட்டு தந்தையிடம் சென்றாள். 

 

மகள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது கண்டு என்ன என்று விசாரித்தார். 

 

“அந்த தேவராயன் சரியான பொம்பள பொறுக்கி போல ப்பா.. சரின்னு சொல்லு உனக்கும் ஒரு தாலி கட்டரேன் ன்னு வம்பு பண்றான்.. ச்சே.. என்ன மனுஷனோ இவன்?” ,என எரிச்சலாக கூறினாள். 

 

“சும்மா அவன் மாமன் பொண்ணுன்னு வெளாட்டுக்கு பேசி இருப்பான் வேணி.. “, என் செங்கல் சமாதானம் செய்தான். 

 

“இதுக்கு பேரு வெளையாட்டா  ப்பா?” ,என முறைத்தாள். 

 

“கிராமத்துல இப்டி தான் மாமன் பொண்ணுங்க கிட்ட பசங்க வம்பு பண்ணுவானுங்க ம்மா.. விடு.. நீ பயந்த மாதிரி எதுவும் நடக்கல.. 

யாரயோ தான் நாம தொறத்திட்டு போய் இருக்கோம்”, என செங்கல் கூறினான். 

 

“இல்லப்பா.. இங்க வழக்கத்த விட சந்தோஷம் அதிகமா இருக்கு.. என்னமோ நமக்கு தெரியாம நடக்குது” ,என இளவேணி சுற்றிலும் பார்வையை வீசியபடி பேசினாள். 

 

“நீ தேவை இல்லாம டென்ஷன் ஆகாத.. பையன் நம்ம கண்ணு முன்ன தான் இருக்கான்.. பொண்ணும் நம்ம கை குள்ள தான் இருக்கு .. கண்டிப்பா நம்ம நினைச்சா மாதிரி இந்த கல்யாணம் நடக்கும்..” ,என செங்கல் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தான். 

 

“சரி.. நான் முன்ன நங்கை வீட்டுக்கு போறேன். அங்க அந்த கெழவி ஓவரா கடுப்பு ஏத்துது.. நங்கை கூட இருந்து என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு பாத்தா அது எண்ணையா ரூமுக்குள்ளயே விடல.. அந்த பாண்டி பயலும் திரும்ப எப்ப போனான்னு தெரியல”, என கூறினாள். 

 

“அந்த ஏகாம்பரம் பொண்ணு மேல இருக்க கோவத்துல நாமலே இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொன்னாலும் கேக்கமாட்டான்.. அதனால கவல படாத.. நீ வண்டி எடுத்துட்டு போறியா?” ,என கேட்டான் செங்கல். 

 

“ஆமா.. நீங்க இவங்க கூட வந்துடுங்க.. யாரயும் நான் நம்ப தயாரா இல்ல”, என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். 

 

“என்ன ஒரு டிக்கெட் கெளம்பிரிச்சி ..” ,என கூறியபடி மருதன் தேவராயன் அருகில் வந்தான். 

 

“பொண்ணு வீட்டுக்கு போவா டா.. பானு எங்க?” ,என மெல்ல கேட்டான். 

 

“பொண்ணு வீட்ல தான்”, என அவனும் சிரித்துகொண்டு சொன்னான். 

 

“எல்லாம் சரியா தானே நடக்குது?”, என மீண்டும் கேட்டான். 

 

“எல்லாமே சரியா இப்ப தான் நடக்குது ண்ணே.. நீ கவல படாம இரு”, என கூறிவிட்டு தந்தையிடம் வந்தான். 

 

“அப்பா..”, என அழைத்தான். 

 

“நீ அண்ணன கூட்டிக்கிட்டு நம்ம புது வண்டில கோவிலுக்கு வந்துடு. கெளம்பு.. உனக்கு பின்னாடி நாங்க வந்துடறோம் “, என கூறினார் தங்கதுரை. 

 

“மாப்ள மட்டும் தனியா போகணுமா தங்கம்?”, என செங்கல் கேட்டான். 

 

“வேற என்ன பண்றது? மத்த எல்லாரும் சீர் மத்த சாமான் எடுத்துட்டு வரணும்.. மாப்ள வண்டில பொருள அடைச்சிக்கிட்டு போனா நல்லாவா இருக்கும்?” ,என கேட்டார். 

 

“சரி நான் மாப்ள கூட போறேன்.. நீங்க சீக்கிரம் கெளம்பி வாங்க.. உன் அக்கா தங்கச்சி எல்லாம் எங்க? ஆரத்தி எடுக்கணும் ல கோவில்ல ..”, என கேட்டார். 

 

“அவங்கள முன்னயே அனுப்பி வச்சிட்டேன் .. அவங்க அங்க போய் இருப்பாங்க .. நீ பையன் கூட போ.. எனக்கு அப்ப தான் நிம்மதியா இருக்கும்” , என கூறி செங்கல்வராயனை தேவராயன் உடன் அனுப்பி வைத்தார். 

 

வினிதா வீட்டில் வட்டி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் விழுந்து கிடந்தான். எதிரே வேம்பு ஆச்சி கையில உலக்கையுடன் நின்று இருந்தார். 

 

“சொல்லு டா.. எங்க டா என் பேத்திய தூக்கிட்டு போக பாத்த?” ,என மிரட்டி கொண்டு இருந்தார். 

 

“நான் எங்காயும் தூக்கிட்டு போகளா பாட்டி.. நான் சும்மா தான் கை ஆட்டுனேன்.. அதுக்கு ஒலக்கை வச்சி விசாரிக்கறது எல்லாம் ரொம்ப டூ மச் ..” ,என வட்டி கூறினான். 

 

“உன்ன இன்னிக்கி மட்டும் இல்ல .. ஏற்கனவே 2 3 தடவ பின் வாசல் பக்கம் பாத்து இருக்கேன்.. சொல்லு யார பாக்க வந்த? சொல்றீயா வாய்லயே நெல்லு இடிக்கவா?”

 

“அய்யோ.. சரியான பைத்தியக்கார கெழவியா இருக்கும் போலவே.. எது சொன்னாலும் ஒத்துக்க மாட்டேங்குது.. ஆண்டவா என்னை காப்பாத்த வா ப்பா”, என புலம்பினான். 

 

“அச்சச்சோ .. பாட்டி.. இந்த மாமாவ எதுக்கு கட்டி வச்சி இருக்க?” ,என கேட்டபடி வினிதா அங்கே வந்தாள். 

 

“இவன் நம்ம வீட்டு பின்னாடி வந்து குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தான். இவன் முழியே சரி இல்ல டி.. என் பேத்திய தான் என்னமோ செய்ய வந்து இருக்கான்..” ,என கூறினார். 

 

“உங்க பேத்திக்கு நல்ல வாழ்க்கை கெடைக்க தான் நாங்க எல்லாருமே போராடிட்டு இருக்கோம் ..”, என சொல்லியபடி வட்டியின் கை கால கட்டுகளை அவில்த்து விட்டாள். 

 

“நாங்க எல்லாம் ன்னா?” ,என வினிதாவை கண்கள் இடுக்கி பார்த்து கேட்டார். 

 

“நாங்க எல்லாரும் தான் வேம்பு”, என கூறியபடி நீலா ஆச்சி அங்கே வந்தார். 

 

“நீ..”, என யோசனை செய்தார். 

 

“நான் தான் டி .. நீலா .. நீலாயதாட்சி ..” , என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். 

 

“நீலா .. சிங்காரவேலன் அண்ணே சம்சாரம் நீலா வா?”,என கேட்டார். 

 

“ஆமா டி.. அவரு சம்சாரம் தான்.. எப்டி இருக்க?” ,என கட்டிகொண்டு கேட்டார். 

 

“எனக்கு என்ன கொற ? நல்ல இருக்கேன்.. நீ எப்டி இருக்க டி?” ,என வாஞ்சையுடன் கேட்டார். 

 

“நல்லா இருக்கேன்.. “, என நீலா ஆச்சி கூறிவிட்டு வர்மனை அருகில் அழைத்தார்.  

 

“இவன் என் பேரன்.. சிம்ம வர்மன்”, என அறிமுகம் செய்து வைத்தார். 

 

“ராஜாவாட்டம் இருக்க கண்ணு.. மாகராசன வாழ்வ யா..” ,என மனதார ஆசீர்வதித்தார். 

 

“அப்ப உங்க பேத்திய குடுங்க “ ,என கூறியபடி வட்டி வந்து நின்றான். 

 

வேம்பு பாட்டி அவனை முறைத்தார். 

 

“என்ன மொறைக்கறீங்க? உங்க பேத்தி வாழ்க்கை நல்லா இருக்கணும் ன்னு நெனைச்சா என் மச்சானுக்கு கட்டி குடுங்க..” ,என வட்டியும் முறைத்தபடி வம்பு பேசினான். 

 

“அன்னிக்கி கோவில்ல உன்னோட பேசிட்டு இருந்தது இவங்க தானா ?” ,என வேம்பு பாட்டி வினிதாவை கேட்டார். 

 

“ஆமா பாட்டி.. அண்ணே அவள விரும்பராரு .. உங்க பேத்தி தான் சட்டையே பண்ணமாட்டேங்கறா.. இன்னிக்கி இவங்க’ரெண்டு பேருக்கும் தான்’கல்யாணம் நடக்கணும். இதுக்கு நீங்க தான் பொறுப்பு” , என கூறிவிட்டு நீலா ஆச்சி அருகில் சென்று நின்றாள். 

 

வேம்பு பாட்டி யோசனையுடன் அனைவரையும் பார்த்தார். அவரின் யோசனை கண்ட நீலா ஆச்சி, “ வேம்பு .. உனக்கு என் குடும்பத்த பத்தி நல்லா தெரியும். என் பேரனுக்கு மூணு வயசா இருக்காறப்பவே மகனும் மருமகளும் ஒரு விபத்துல எறந்துட்டாங்க .. அதுக்கு அப்பறம் நான் தான் அவன வளத்துனேன்.. உனக்கு என் வளப்பு மேல நம்பிக்கை இருந்தா மட்டும் உன் பேத்திய குடு..” ,என கூறினார். 

 

“அது இல்ல நீலா.. உன்மேல உன் குடும்பத்து மேல எல்லாம் எனக்கு சந்தேகம் இல்ல .. எனக்கு தயக்கம் எல்லாம் என் பேத்திய நெனைச்சி தான். அவ வாழ்க்கை வெறுத்து இருக்கா.. கல்யாணம் வேணாம் ன்னு சொல்றா.. இப்ப உன் பேரனுக்கு கட்டி குடுத்தா அவ மனசு அத எப்டி எடுத்துக்கும்? ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ தானே கல்யாணம் செய்யறது.. அவ அப்பன் பண்ற தப்ப நானும் இப்ப பண்ண கூடாது இல்லயா ?” ,என பொறுமையாக கேட்டார். 

 

“உங்க பேத்திக்கு சொன்னா எல்லாம் புரியாது பாட்டி.. கொஞ்சம் அதிரடியா நாம ஏதாவது செஞ்சா தான் இவங்க ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் நல்லது.. இவ்வளவு நடந்து கூட உங்க பேத்தி வாய தொறந்து உங்ககிட்ட இவர பத்தி ஒருவார்த்த சொன்னாளா? “ , என வினிதா கேட்டாள். 

 

தான் வந்த இரவு பேத்தியிடம் ஏன் இந்த அவசர திருமணம் என்று கேட்டதற்கு, அவள் ஒரு நொடி அமைதியாக இருந்து வர்மன் அவளிடம் சவால் விட்டத்தில் இருந்து அவர் வரும் சற்று நேரம் முன்பு வரை நடந்ததை ஒன்று விடாமல் கூறினாள். 

 

“அவ இந்த பையன பத்தி எல்லாமே சொன்னா வினிதா.. இவன் போட்ட சவால்.. அவ போட்ட சவால்.. அது யாரோ படமா எடுத்து அந்த எடுபட்ட பய ராஜானுக்கு குடுத்து, அவன் அப்பன் கிட்ட காட்டி அடுத்த நாள் கல்யாணம் முடிவு பண்ணாங்க ன்னு எல்லாமே சொன்னா.. “, என கூறியதும் அனைவரும் அமைதியாக இருந்தனர். 

 

வர்மன் வேம்பு பாட்டி அருகில் வந்து, “ பாட்டி.. எனக்கு அவள ரொம்ப புடிக்கும்.. நேசிக்கறேன்னு சொல்றத விட அவ என்கூட இருந்தா அவ விருப்பபடி இருக்க வைக்க என்னால முடியும்ணு தான் நினைக்கறேன் .. இத்தன வருஷமா அவள நான் சீண்டிக்கிட்டே இருக்க ஒரே காரணம் தான்.. அவளோட வலையத்த விட்டு வெளிய வந்து அவள அவ உணரணும்.. இப்ப வரை அவ எப்டி ன்னு அவளுக்கே தெரியாது. அவளோட விருப்பு வெறுப்புல இருந்து அவ யோசனை , அவ கனவு , அவ ஆசை எல்லாமே நான் கூட இருந்து அவளோட உழைக்க ஆசை படறேன்.. “

 

“இது எல்லாமே அவமேல உனக்கு இருக்க இரக்கத்துனால தானே?”, என வேம்பு பாட்டி கேட்டார். 

 

“இரக்கமா இருந்தா நான் ஏன் பாட்டி அவளுக்காக இவ்ளோ மெனக்கெடணும்? வேற ஒரு நல்ல பையன அவளுக்கு கட்டி வச்சா போதும்ல ?”, என அவன் எதிர் கேள்வி கேட்டான். 

 

“சரி இந்த ஒரு வார்த்தை சொல்லு.. என் பேத்தி உனக்கு கட்டி வச்சா அவள நீ எப்டி நடத்துவ?” ,என கேட்டார். 

 

“என் இன்னொரு பாதியா நடத்துவேன் பாட்டி..” என கூறினான். 

 

“நீலா .. உன் பேரன எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு.. என் பேத்திய உன் வீட்டுக்கு அனுப்ப எனக்கு முழு சம்மதம்..” , என வேம்பு பாட்டி கூறினார். 

 

“ரொம்ப சந்தோஷம் வேம்பு..”, என நீலா ஆச்சி அவரை கட்டிக்கொண்டார். 

“சரி பொண்ண எப்டி தூக்கறது?”, என வட்டி கேட்டான். 

 

“நீ ஏன் பொண்ண தூக்கணும்? என் பேத்திய கல்யாணம் பண்ணி உங்களோட அனுப்பி வைக்கறேன் .. வாணி ..”, என அழைத்தார். 

 

“பெரியம்மா..”, என  அழைத்தபடி வேல்முருகன் பின்னால் இருந்து வந்தார் வாணி. 

 

“உன் புருஷன் வந்துட்டாறா ?”, என கேட்டார். 

 

“நேத்து ராத்திரி வந்துட்டாரு பெரியம்மா.. தூங்கிட்டு இருக்காரு..” ,என கூறினார். 

 

“அவர சீக்கிரம் எழுப்பு.. மணி அஞ்சி ஆச்சு.. நீலா நீ எடுத்த சேலைய நீயே சபைல உன் கையாள குடு.. இப்ப நான் எடுத்த சீலை கட்டி என் பேத்திய கூட்டிட்டு போறேன்.. வினிதா.. உன்கிட்ட இருக்கறத அவங்க கிட்ட குடுத்துட்டு சீக்கிரம் வா..” , என கூறிவிட்டு நடந்தார். 

 

“வேம்பு.. ரெண்டு பேருக்கும் முகூர்த்தம் 10 மணிக்கு தான் வைக்கணும்”, என நீலா ஆச்சி கூறினார். 

 

“சரி.. நீ என்கூட வா.. “, என அவரை தனியாக அழைத்து சென்று தனது மருமகள் இருவருடன் கோவிலுக்கு அனுப்பி வைத்தார். 

 

“மச்சான்.. நம்ம எல்லாம் இந்த கெழவிங்க முன்ன ஒண்ணுமே இல்ல.. வெத்தல பாக்கு போட்டு மெல்லற மாதிரி அசால்ட்டா பெரிய பெரிய விஷயத்தை செய்யுதுங்க ..” ,என கூறியபடி நொண்டி நடந்தான். 

 

“என்னாச்சி பங்காளி?”, என வேல்முருகன் அருகில் வந்து கேட்டான். 

 

“நீ மாலை வாங்கிட்டு போனியே.. எதிர்ல தானே நான் வந்தேன்.. புல்லெட்டுல கனவுல மெதந்துட்டு உனக்கு கல்யாணம் ங்கற நெனைப்புல போனியா டா?”, என வட்டி அவனை திட்டினான். 

 

“நீ எப்ப பங்காளி எதிர் ல வந்த?” ,என கேட்டான். 

 

“நான் பக்கத்து வயல்ல இருந்து ரோட் ல எதிர்ல தான் டா திரும்புனேன் . அப்ப தான் இந்த கெழவி என்னைய தூக்கிட்டு இங்க வந்து போட்டுச்சி..” , என கூறினான். 

 

“இவங்க தான் உன்ன கடத்திட்டு வந்தாங்களா ? நீ திருடன் கணக்கா முழிச்சன்னு சொன்னாங்க..” , என வேல்முருகன் கேட்டான். 

 

“எல்லாம் நடிப்பு டா.. உங்கள இங்க வர வைக்க தான் என்னைய தூக்கிட்டு வந்தாங்க”

 

“யாரு உன்ன தூக்கிட்டு வந்தது?”

 

“நான் தான் .. என் பேரு தன்ய கிருஷ்ணன் “, என கூறியபடி ஒருவன் அங்கே வந்தான். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      யார் அது ஒரு வேலை வாணியோட ஹஸ்பெண்டோ🤔🤔