
தன்னறைக்குச் சென்ற அன்விதா, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அமையாவின் தலையைக் கோதி விட்டாள்.
அகமொழியிடம் சொன்னதெல்லாம் பாதி தான். சொல்லாத விஷயங்கள் பல உண்டு!
அவள் கருவுற்ற போது, விஷ்ணு ஆடிய ஆட்டமெல்லாம் கொஞ்ச நஞ்சமில்லை.
“ஞான் நாட்டில் போயிட்டு வருன்னதினு முன்பே நீ எங்கனே கன்சீவ் ஆகான் பற்றும்?(நான் ஊருக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள நீ எப்படி கன்சீவ் ஆக முடியும்?)” எனக் குடைந்து எடுத்தவன், “பிரணீத் வந்தோ?” எனக் கேட்டான் கூர்மையாக.
அந்த நேரம் அக்கேள்வியின் உள்ளர்த்தம் அவளுக்குப் புரியவில்லை.
“அவன் தான் அப்ராட் போய்ட்டானே. அப்பறம் எப்படி விஷ்ணு வர முடியும்?” என வெள்ளந்தியாகப் பதில் அளித்தது இப்போது நினைத்தாலும் வலித்தது.
அமையாவின் முதல் பிறந்தநாளைக்கு தனது படிப்பை முடித்து விட்டு இந்தியா வந்தவனை, வம்படியாக பிறந்த நாள் விழாவிற்கு வரவழைத்தது அவள் தான். அப்போதே விஷ்ணு சண்டையிட்டான்.
“எந்தா… அவனை காணாதே இரிக்கான் பற்றாதாயோ நினக்கு?(ஏன் அவனைப் பார்க்காம இருக்க முடியலையோ?)” என்று.
அதன்பிறகே அவன் எந்த அர்த்தத்தில் தன்னிடம் பேசுகிறான் எனப் புரிந்து இறுகிப் போனாள். அதன்பிறகே விஷ்ணுவின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச காதலும் மெல்லக் கரைந்து போனது.
கிட்டத்தட்ட ஆறாம் வகுப்பிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள் ப்ரணீத்தும் அன்விதாவும். பேச ஆயிரம் விஷயங்கள் கூட இருந்தது.
“அவனோடே மாத்ரம் நினக்கு எந்தா இத்ர ஒரு சிரிப்பு?” எனக் குத்துவான்.
கல்லூரி படிக்கும்போதே விஷ்ணுவிற்கு ப்ரணீத்தை நன்கு தெரியும். அர்ஜித்தின் நண்பனாக விடுமுறை நாள்களில் அவன் விஷ்ணுவின் வீட்டில் தான் இருப்பான்.
மூவரும் ஒன்றாக சுற்றியதை எல்லாம் ப்ரணீத் புகைப்படமாக அனுப்பி இருக்கிறான். அப்போதெல்லாம் விஷ்ணுவின் மீது ஈர்ப்பு இருந்ததில், அதனை ஆர்வமாகப் பார்த்து சிரித்த நாள்களெல்லாம் இருக்கிறது.
கல்லூரி நாள்களில் விஷ்ணுவும், ப்ரணீத்துமே நல்ல நண்பர்களாகத் தான் இருந்தனர்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு மட்டும் ஏன் விஷ்ணுவிற்கு ப்ரணீத்தை பிடிக்காமல் போனதென்று இப்போது வரை தெரியவில்லை.
அதற்காகவெல்லாம் அவள் நட்பை துண்டிக்க முயலவில்லை. அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவன் மட்டும் தான்.
பிறந்த நாள் விழாவிற்கு பிறகு ப்ரணீத்தும் இங்கு வரவில்லை.
விஷ்ணுவும் அவனை வைத்துக் குத்தி பேசுவதில்லை. ஆனால், அவளுடன் உறவு வைத்துக்கொள்ள, ஆணுறை பயன்படுத்தியபோது அது அவளுக்கு அதீத எரிச்சலை கொடுத்தது. அவனது முரட்டுத்தனம் கொடுக்கும் வலி போதாதென்று இது வேறு அதிகம் படுத்தி, அவளுக்கு காயத்தைக் கொடுத்தது.
“ரொம்ப எரியுது விஷ்ணு. புண் ஆகுது… இது வேணாமே” எனக் கெஞ்சிப் பார்த்தாள்.
“நீ மீண்டும் கன்சீவ் ஆனால், என்டெ நிலைமை ஆலோசிச்சு நோக்கு அன்வி. சும்மாவே அமையா என்னே நின்டெ அடுத்தேக்கு விடாறு இல்லா…(நீ மறுபடியும் கன்சீவ் ஆனா, என் நிலைமையை யோசிச்சு பாரு அன்வி. சும்மாவே அமையா என்னை உன் பக்கம் விட மாட்டுறா…)” எனக் குழைந்து பேசிட, என்னவோ அவளால் ரசிக்க இயலவில்லை.
“வேற ஏதாச்சு யூஸ் பண்ணலாம்ல… நெட்ல பார்த்தேன். லேடக்ஸ் ஃப்ரீன்னா இரிட்டேஷன் கம்மியா இருக்கலாம்னு…”
“பட் எனிக்கு அது ஃபிட் அல்லா…” என்றவனிடம் பேச இயலவில்லை.
காப்பர் – டி வைக்கச் சொல்லி வற்புறுத்தினான். அவளுக்கு குழந்தை பிறந்தபிறகு ஏற்பட்ட, பெல்விக் வலி தொடர்ந்து இருப்பதால், மருத்துவர்கள் காப்பர் – டியைப் பரிந்துரைக்கவில்லை.
“டேப்லட் ஏதாச்சு போட்டுக்குறேன் விஷ்ணு. இது ரொம்ப கஷ்டமா இருக்கு” எனக் கெஞ்சி கூத்தாடி மாத்திரை போட்டுக்கொண்டவளுக்கு சில ஹார்மோன் மாத்திரைகள் சேரவில்லை பாவம். உடல் உபாதையில் கொண்டு வந்து நிறுத்தியதில் சோர்ந்து போனாள்.
வேறு வழியே இல்லாமல், அவன் கொடுக்கும் வலி நிறைந்த உறவிலிருந்து தப்பிக்க, அமையாவை இரவு அதிக நேரம் விழித்திருக்க வைத்தாள்.
அப்படியே தூங்கினாலும் லேசாய் இவள் சத்தம் எழுப்பினாலே சிணுங்கி எழுந்து விடுவதால், விஷ்ணுவிற்கு எரிச்சல் மண்டியது.
சில நேரம் “அடிவயிறு ரொம்ப வலிக்குது விஷ்ணு. இன்னைக்கு வேணாம் ப்ளீஸ்!” என அழுகத் தொடங்கி விடுவாள்.
“நினக்கு என்டெ கூடே இரிக்கான் இஷ்டமே இல்லா அல்லோ… இதே பிரணீத் ஆனெங்கில் இருந்தேனே அல்லோ!(உனக்கு என் கூட இருக்கவே பிடிக்காதுல. இதே பிரணீத்’னா இருந்துருப்பல்ல)!” என ஒருமுறை கேட்டு விட்டான்.
அதிர்ந்தே போனாள் அவள்.
“அவன் என் பெஸ்ட் ப்ரெண்ட். இப்படி அசிங்கமா பேசாதீங்க விஷ்ணு…” என முதன்முறை கோபம் கொண்டாள்.
“என்ன கேட்டீங்க ப்ரணீன்னா இருந்துருப்பேனான்னா? ம்ம்ஹும் அவனுக்கு என்னைக் கஷ்டப்படுத்தவே தெரியாது. ஒவ்வொரு விஷயத்துலயும் எனக்காக மட்டும் தான் அவன் யோசிப்பான். நீங்க அப்படியா யோசிக்கிறீங்க? இப்ப கூட எனக்கு உங்க கூட வாழப் பிடிக்கலைன்னு சொன்னா என்னை இங்க இருந்து கூட்டிட்டே போயிடுவான்…” என அழுத்தம் திருத்தமாக கூறியவளைக் கண்டு விஷ்ணு அதிர்ந்தான்.
“இப்போ எந்தினா ஓவரா பறயுன்னே? ஒரு ஃப்ரெண்டிங்கு கொடுக்குன்ன இம்பார்ட்டன்ஸ் கூட எனிக்கு இல்லா அல்லோ… ஒரு திவசம் எங்ஙிலும் என்டெ கூட முகம் சந்தோஷத்தோடே வெச்சுட்டு இருந்திருக்காயோ நீ?(இப்ப எதுக்கு ஓவரா பேசுற. ஒரு ஃப்ரெண்டுக்கு காட்டுற இம்பார்ட்டன்ஸ் கூட எனக்கு இல்லைல. ஒரு நாளாவது என் கூட முகத்தை சந்தோசமா வச்சுட்டு இருந்துருக்கியா?)”
‘நீங்க சந்தோசமா வச்சுக்கலையே’ வெடுக்கென கூற வந்தவள், அமைதியாகி விட்டாள்.
அதன்பிறகு மறந்தும் அவன் பிரணீத்தை இழுப்பதில்லை. எங்கே, தன்னை விட்டுச் சென்று விடுவாளோ எனப் பயந்தானோ என்னவோ, அவளை இவ்விஷயத்தில் அதிகம் தொந்தரவு செய்யவும் இல்லை.
மீண்டும் பிரணீத் இங்கு வந்தபிறகே விஷ்ணுவின் எரிச்சல் அளவுக்கு மீறி சென்று கொண்டிருந்தது.
உறக்கம் கூட அன்விதாவிற்கு வலி நிறைந்ததாகவே இருக்க, மறுநாள் பொழுது அழகாய் புலர்ந்தது.
காலையிலேயே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்த அர்ஜித் அகன், “எந்தாடி?” என வினவ, “தலை வலி” என்றாள்.
பாவம் அன்விதாவை எண்ணி அவளுக்குத் தான் உறக்கம் கெட்டது.
தைலத்தை எடுத்துக் கொடுத்தவன் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருக்க, “தேய்ச்சு விட… இன்னொரு கல்யாணம் பண்ணனுமா?” என விழி நிமிர்த்தி முறைத்தாள்.
அவளை இடுப்பில் கையூன்றி முறைத்தவன், அவள் தாடையை நிமிர்த்தி தைலத்தை தேய்த்து, கொஞ்சம் மசாஜ் செய்து விட, சற்றே வலி குறைந்தது.
“நல்லா மசாஜ் பண்ற மேன் நீ?” எப்போதும் போல கேலி செய்தவளிடம், “ஞான் நல்லாயி மசாஜ் செய்யுவான் எனிக்கு அறியாம்னு நினக்கு அறியீல்லேடி காந்தாரி?(நான் நல்லா மசாஜ் பண்ணுவேன்னு உனக்குத் தெரியாதா காந்தாரி)” என்றான் குறும்பாக.
இரத்தம் உறைய வெட்கம் ஆட்கொள்ள, “காலங்காத்தால வேலைக்கு கிளம்புறப்ப பேசுற பேச்சா இது. போடா” எனத் திட்ட வந்தவளுக்கு அது சிணுங்கலாகாவே முடிந்ததில் இன்னும் கொஞ்சம் தான் நாணமேறிப்போனது.
அவன் தீண்டி திணற வைத்த இடங்களெல்லாம் நினைவிற்கு வந்து அவஸ்தை கொடுக்க,
“ஜஸ்ட் ஞாபகப்படுத்துனேன் காந்தாரி” என்றவனின் இதழ்கள் புன்னகைக்கத் துடித்தது.
“ஹய்ய ரொம்பத் தான்” என நொடித்துக்கொண்டு குளியலறைக்குள் ஓடி விட்டாள்.
மீண்டும் மாலை ஏழு மணியளவில் இருவருமே வீட்டிற்கு வந்து விட, அகமொழி ஏதோ யோசனையிலேயே இருந்தாள்.
“எந்தாடி… இன்னு சேரி உடுத்தீல்லே?” என விழி உயர்த்திக் கேட்க, உண்மையில் அவளுக்கு அடிவயிறு பிசைந்தது.
“அது… அகன்” அவள் தயங்குவதைக் கண்டு, அவன் புருவம் சுருக்க,
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றாள் அவனைப் பாராமல்.
“எந்தினா(ஏன்?)” அவன் கேட்கும்போதே, கதவைக் கூட தட்டாமல் எப்போதும் போல உள்ளே வந்தாள் அனகா.
அவள் முகமே சரியில்லாது இருக்க, “எந்தா அனு?” என வினவினான் அர்ஜித் அகன்.
“அர்ஜி… அமையாக்கு திடீர்னு பயங்கர பீவர். அம்மா உன்னே ஹாஸ்பிடலில் கொண்டுபோக வர பரஞ்சு.”
“என்னாச்சு அவளுக்கு” அகமொழி பதற,
உடனே கார் சாவியை எடுத்த அர்ஜித் “ஏடத்தி எவிடே?” என வினவியதில், அனகா கண் கலங்க நின்றாள்.
“எந்தாச்சு அனு” அர்ஜித் கேட்டதில்,
“அது… அர்ஜி… ஞான் ஈவ்னிங் காலேஜ் கழிஞ்ஞு வீட்டில எத்தியப்போ வீட்டில யாரும் இல்லா. விஷ்ணு சேட்டனும் ஏடத்தியும் பயங்கர வழக்கு ஆயிருன்னு. எந்து சம்சாரான்னு மனஸிலாயீல்லா. ஏடத்தி எப்பழும் இங்ஙனெ கத்தி சண்டை இடாறு இல்லா. சண்டை கூடி சேட்டன் ஏடத்தியை அடிச்சுப்போயி (அது… அர்ஜி… நான் ஈவ்னிங் காலேஜ் முடிச்சு வீட்டுக்கு வந்தேன். வீட்ல யாரும் இல்ல. விஷ்ணு சேட்டனும் ஏடத்தியும் ரொம்ப காரசாரமா வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தாங்க. என்ன பேசுனாங்கன்னு புரியல. ஏடத்தி எப்பவும் அப்படி கத்தி பேசி சண்டை போட்டது இல்ல. பேச்சு வார்த்தை முத்திப்போய் சேட்டா ஏடத்தியை அடிச்சுட்டாரு)” என்றதில் அர்ஜித் அதிர்ந்தான்.
“இப்போ ஏடத்தி எவிடே?”
“அவரு ‘அம்பலத்தில்(கோவிலுக்கு) போகுன்னு அமையாவை நோக்கிக்கோ’ன்னு பரஞ்சிட்டு போயீ அர்ஜி. ஆனா போன் பண்ணா எடுக்காறு இல்லா. வீட்டில வேற அவரு எவிடேன்னு சோதிக்குன்னு. ஞான் இதுவரை ஒன்னும் பரஞ்ஞீல்லா…” என்றவளுக்கு வேதனையாக இருந்தது.
“ப்ச்… ஏது அம்பலத்தில்(எந்த கோவிலுக்கு) போயீ?”
“அறியீல்லா… பக்கத்தில் தான் பரஞ்ஞு (தெரியல… பக்கத்துல தான் சொன்னாங்க)”
“எந்தா அனு… எனிக்கு ஒரு போன் செய்யாமாலை?” அர்ஜித் அதட்ட,
“இல்லா அர்ஜி… அமையாவும் சேட்டன் ஏடத்தியை அடிச்சதை கண்டு பேடிச்சுப்போயீ. அம்மா வேணம்னு ஒரே அழுகை வேற” என்றாள் பரிதாபமாக.
அகமொழி தான், “அகன் டைம் வேஸ்ட் பண்ணாம, அமையாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போகலாம். அக்கா இங்க பக்கத்துல தான் போயிருப்பாங்க. வந்துடுவாங்க” என்றாள்.
மூவரும் கீழே செல்ல, சுஜாதாவும் கல்யாணியும் பதறி இருந்தனர்.
“வளரே சூடாயிட்டு இரிக்குன்னு அப்பா. சீக்கிரம் ஹாஸ்பிடலில் போகூ” கல்யாணி கூற,
சுஜாதா கிளம்பி இருந்ததை கண்ட அகமொழி, “நாங்க ரெண்டு பேரும் கூட்டிட்டுப் போறோம் அத்தை. நீங்க பேனிக் ஆகாதீங்க” என்று அவரை விடுத்து அமையாவைத் தூக்கிச் சென்றாள்.
அர்ஜித்தும் விடாமல் அன்விதாவிற்கு அழைக்க, அழைப்பே போகவில்லை.
“ப்ச்… ஈ ஏடத்தி எவிடே போயீ” என்ற கோபம் மிளிர, அழுது அழுது சோர்ந்திருந்த அமையாவைப் பார்த்து வருந்தினான்.
அனகாவை சொல்லி, அருகிலிருந்த கோவிலில் எல்லாம் சென்று பார்க்கச் சொல்லி இருந்தான்.
இறுதியில் கோவில் வாசலில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்த அன்விதாவைக் கண்டதும் தான் அனகாவிற்கு உயிரே வந்தது.
“ஏடத்தி”
அவளை உலுக்கியதுமே நிகழ்விற்கு வந்தவள், “என்ன அனு?” என்றிட, அவள் விவரம் கூறியதில் அன்விதாவும் பதறினாள்.
“அம்மா…” எனச் சத்தம் வராமல் தேம்பிக் கொண்டிருந்த அமையாவை நெஞ்சில் போட்டுத் தட்டிக்கொடுத்த அகமொழி, “அம்மா வந்துடுவாங்க அமையாகுட்டி. அழாதீங்க. ரொம்ப பீவர் வந்துடும்டா…” என்றாள் அவள் கேசத்தை கோதியபடி.
அதற்குள் அனகா அன்விதாவிடம் விவரம் சொல்லி விட்டதாகக் கூற, அதன்பிறகே அர்ஜித்திற்கு நிம்மதி பிறந்தது.
ஆனாலும் அமையா அழுவதைக் கேட்க கேட்க அன்விதாவின் மீதே கோபம் பீறிட்டு எழுந்தது. “எந்து பிரச்சனை ஆணெங்ஙிலும் வீட விட்டு போயா சரி ஆகுமோ? (எந்த பிரச்சினைன்னாலும் வீட்டை விட்டுப் போனா சரி ஆகிடுமா?)” எனக் கடிந்தவனைத் திரும்பி முறைத்த அகமொழி, “உங்க அண்ணா அடிச்சது மட்டும் சரியா?” என்றாள் சீறலாக.
இதில் அமையா அகமொழி மீது வாந்தி எடுத்து விட, அவளது டாப்ஸ் முழுதும் நனைந்தது.
“அகன் காரை நிறுத்து…” என்றவள் அவளை இறக்கி துடைத்து விட்டு, “நல்லவேளை அவள் மேல எடுத்துக்கல” என்று டிஸ்யூவால் தனது உடையைத் துடைத்துக் கொண்டாள்.
“அகன் பாப்பாவை நீ வச்சுக்கோ. நான் கார் ஓட்டுறேன். ஈரமா இருக்கு ட்ரெஸ். அவளை மடில உக்கார வச்சா அவளுக்கு இன்கன்வீனியன்ட்டா இருக்கும்…” என்றதில் அவளை அமைதியாக ஏறிட்டவன், அமையாவை வாங்கிக்கொள்ள, சிறிது நேரம் சென்றதும் “மொழி… இவிடே ஓரமாய் காறு நிறுத்து!” என்றான்.
“இங்க எதுக்கு அகன். ஹாஸ்பிடல் இன்னும் கொஞ்சம் தூரம் போகணும்ல?” என்றிட அவன் அப்போது தான் சோர்ந்து கண்ணயர்ந்த அமையாவை சீட்டில் அமர வைத்து விட்டு விறுவிறுவென அவள் அமர்ந்திருந்த ஜன்னல் பக்கம் வந்தான்.
“போகணம்… நின்டெ டாப்ஸ் அவிழ்த்து!” என்றபடி அவனது சட்டையைக் கழட்ட, “எதே?” என விழித்தாள்.
“இவிடே அந்தகாரம் ஆணுடி. ஈ அந்தகாரத்தில் புறத்து நின்று அகத்து நோக்கியா காணான் பற்றீல்லா. சட்டுன்னு டாப்ஸ் அவிழ்த்திட்டு இதீ இடு!(இங்க இருட்டா இருக்குடி. இந்த இருட்டுல வெளில இருந்து உள்ள பார்த்தா தெரியாது. சட்டுன்னு டாப்ஸை கழட்டிட்டு இதை போடு)” என்று தனது சட்டையைக் கொடுத்தான்.
“டேய் நடுரோடு!”
“இவிடே ஆளு நடமாட்டம் சுத்தமாய் இல்லாடி. சுற்றும் மரம் தன்னே. ஈரத்தோடே ஈ தணப்பில் இருந்தா, ஜன்னி வந்நிரும். அவிழ்த்து முதல்ல!”
“ஜன்னி வந்தா வரட்டும். தெரியாத இடத்துல நின்னு எப்படி ட்ரெஸ் மாத்துறது?”
“இப்போ நீ அவிழ்க்குன்னோ? அதோ ஞான் அவிழ்த்து தரட்டோ?(இப்ப நீ கழட்டுறியா. நான் கழட்டி விடட்டுமா?)” அவன் விழி இடுங்க வினவ, ‘இவனோட…’ எனப் பல்லைக்கடித்தவள், அவனிடம் இருந்து சட்டையைப் பிடுங்கிக்கொண்டு பின் சீட்டில் வந்து அமர்ந்தாள்.
அவனோ “வெய்ட் செய்யு…” என்றபடி கார் கவரை எடுத்து போட்டு விட்டதில், காரே கும்மிருட்டு ஆனது.
சற்றே நிம்மதியாகி உடனடியாக உடையை மாற்றியவள் “மாத்திட்டேன்” எனக் குரல் கொடுத்ததில், கார் கவரை டிக்கியில் போட்டவன், மீண்டும் அமையாவை தனது மடியில் இருத்திக் கொண்டான்.
ஸ்லீவ் லெஸ் சிவப்பு நிற பனியனில் ஆர்ம்சைக் காட்டியபடி அமர்ந்திருந்தவனை ஓரக்கண்ணில் பார்த்தவள், “இப்ப உனக்கு மட்டும் குளிராதாக்கும்…” என்றபடி தனது துப்பட்டாவை நீட்டினாள்.
அதனை வாங்கிப் போர்த்திக்கொண்டவன், அமையாவிற்கும் போர்த்தி விட்டு அவளை அணைத்துக்கொள்ள, அதையும் ரசித்து தொலைத்தது அவள் இதயம்.
ஏற்கனவே அவனது வாசம் மட்டுமே அவள் நாசியில் வியாபித்திருந்தது. இப்போது அவன் சட்டையும் அவளிடம் வந்ததில், மூச்சு விடும்போதெல்லாம் கூட அவனது வாசம் தான். சந்தன அத்தரின் மனம் அவன் வியர்வை கலந்து புது போதையூட்டியது.
அர்ஜித் அகனும் அமையாவைத் தட்டிக்கொடுத்தபடி அவளது துப்பட்டாவினுள்ளேயே முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
வெண்மல்லிகை கலந்த வெண்ணிலா பெர்பியூமின் வாசம் ஆடவனை மயக்கியது.
தனது துப்பட்டாவினுள் தலையைப் புதைத்திருந்தவனைக் கண்டு அவளுக்குத் தான் ஐயோ என்றிருந்ததது.
“பாப்பாக்கு உடம்பு சூடு பரவாயில்லையா?”
அவள் கேட்டதில், “ம்ம்! பெட்டர் தான். பயங்கரமாய் சுணங்ஙிப்போயீ…” என்று அமையாவின் உச்சந்தலையில் நெற்றியை பதித்துக் கொண்டான்.
அவளை எண்ணி வருந்துவது புரிந்தது அவளுக்கு. எவ்வித உணர்வென்றாலும் நெற்றியை அழுத்தி அடக்கிக் கொள்வது அவன் இயல்பு போலும்!
அவனது ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு மேனரிஸமும் அவளுக்கு மனனம் ஆகவே தொடங்கியது.
பின் அர்ஜித் விழி திருப்பி அகமொழியைப் பார்த்தான்.
அத்தனை இருட்டினுள் மலைப்பிரதேசத்தில் இலாவகமாக கார் ஓட்டியவளைக் கண்டு நெற்றி மத்தியில் வரி விழுந்தது.
அவனது ஓட்டுநர், எத்தனை கேட்டும் அவன் தவறை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகினும் அகமொழி சொன்னதற்கிணங்க அவனை அலுவலக ஓட்டுநராக வைத்துக் கொண்டான்.
இப்போது அகமொழி கார் செலுத்தும் விதத்தில், தங்களது முதல் சந்திப்பில் தவறு தனது புறம் தானோ என்றொரு சந்தேகம் பிறக்க, அந்நேரம் காரை நேராக மருத்துவமனை வாயிலில் நிறுத்தினாள்.
வாசத்தை பகிர்ந்து கொண்ட இருவருக்கும் புரியவில்லை, வாசத்தைப் போல நேசத்தையும் உணரும் இறுதி இரவு இது என!
அகன் வசமாவாள்
மேகா
ஹாய் டியர்ஸ்… இன்னைக்கு குட்டி யூடி தான். நாளைக்குப் பெருசா போடுறேன். குட் நைட் சுவீட் அகன் ட்ரீம்ஸ்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
12
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நாளைக்கு பிரிச்சு விடுவேங்களே விஷ்ணுவாலா
என்ன இறுதி இரவா? யார் பிரிய போவது?no, no please