1. என் அகமானவனே

Loading

“முடியாது… முடியாது… முடியாது…” என்று அந்த அறை அதிரக் கத்திக் கொண்டிருந்தான் அதியமான்.

 

6 அடிக்கும் மேல் உயரம், வசீகர முகம், சிவந்த அழுத்தமான இதழ்கள், எதிரில் இருப்போரை நொடியில் தன் வசப்படுத்தும் பழுப்பு மற்றும் பச்சை நிறங்களின் கலவையைக் கொண்டிருக்கும் ஹேசல் அம்பகம், பரந்த நெற்றியில் அடர்த்தியான இரு புருவங்கள், கூர் நாசி, இறுகிய தாடை, அலைபாயும் சில்கி கேசம், நேர்த்தியான இரு காதுகள், தொண்டைக்கு மையத்தில் ஆதாமை நினைவுப்படுத்தும் அடையாளச் சின்னம் உடைய நேர்த்தியான கழுத்து, அகண்ட தோள்பட்டை, திண்ணிய வலிமை பொருந்திய நெஞ்சம், கிரேக்க சிற்பங்களை அச்சில் வார்த்த படிக்கட்டு வயிறும், நீண்ட நெடிய கால்கள் என்று ஆண்மகன்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட அத்தனை அம்சங்களும் தன்னகத்தே கொண்டுள்ள மிகவும் நேர்த்தியான அழகன்.

 

அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் என்று யாரும் கிடையாது. விவரம் தெரிந்ததில் இருந்து ஆசிரம வாழ்க்கை.

 

அந்த ஆசிரமத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆதரவற்ற பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு பணக்காரர் முழுமையாக அந்தப் பிள்ளை வளர்ந்து சுயமாகத் தன் வாழ்வில் சொந்தக் காலில் நிற்கும் வரை அந்தப் பிள்ளைக்கு தேவையான அனைத்தும் அவர்களே பொறுப்பு வகித்து செய்து தருவர்.

 

ஆனால் அந்த நபர் யார்? எவர்? என்று யாருக்கும் சொல்ல மாட்டார்கள். ஏன், உதவி பெறும் பிள்ளைகளுக்கே அந்த மனிதகுலத்தின் மாணிக்கம் யார் என்று தெரியாது. அந்த விவரம் அனைத்தும் ஆசிரம நிர்வாகத்தால் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.

 

அப்படிப்பட்ட ஒரு மாணிக்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு, அவர் உதவியால் சிறந்த சிற்பிகளால் உளி கொண்டு நன்முறையில் செதுக்கப்பட்ட சிற்பம் தான் நம் நாயகன் அதியமான்.

 

இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்து விட்டு கஃபேயில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறான்.

 

அத்துடன் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு நேரத்தில் பார் டெண்டராகப் பணியாற்றுகிறான். இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுவிட்டு எதற்காக இந்த வேலை பார்க்க வேண்டும்? ஏனெனில் அதியமான் குறிக்கோள் வேறு.

 

அவன் லட்சியப் பாதைக்கு ஆங்கிலமும் அவசியம் என்பதால் கல்லூரி பாடப்பிரிவில் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்து நன்கு முறையாகப் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றான்.

 

சரி, அப்படி என்ன அவன் லட்சியம்? சினிமா துறையில் சாதனை படைப்பது. ஆம், திரைப்படத் துறையில் நடித்து பெரிய நாயகன் ஆவதே அதியமானின் முதன்மை கனவு, லட்சியம்.

 

அப்படி சொன்னால் கூட பொருந்தும். லட்சியம் என்று சொல்லவதை விட தீராத வெறி என்று கூறினால் சாலச் சிறந்தது.

 

அதனால் காலையில் ஆக்டிங் ஸ்கூல் செல்வது மற்றும் மதியம் மாடலிங் பண்ணுவது, பின் பகுதி நேர வேலைக்குச் சென்று அதில் வரும் பணத்தைக் கொண்டு தன் ஆக்டிங் ஸ்கூல் கட்டணம் கட்டுதல், மாடலிங் பண்ணுவதற்குத் தேவையான செலவு போக மிதமான பணத்தில் தன் தனிப்பட்ட தேவையைச் சிக்கனமாகப் பூர்த்தி செய்து கொள்ளுவது என்று அயராது தன் லட்சியத்திற்காக உழைக்கிறான்.

 

‘ஒழுக்கம் விழுப்பம் தரும், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’ என்று திருக்குறளில் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிருக்கும் மேல் என்று ஒப்பிட்டதைப் பின்பற்றி வரும் ஒழுக்க சீலன்.

 

வெண்மை நிறப் புறத்தோற்றம் கொண்டவனின் அகமும் தூய்மையான, கலப்படமற்ற வெண்மையான பாலின் தன்மை ஒத்ததே.

 

கோபம் இருக்கும் இடத்தில் தானே குணமும் இருக்கும்? அப்படித்தான் தேவையான இடத்தில் கோபமும் வரும், பிறர் உதவி என்று வந்தால் என்ன உதவி தேவை என்று பார்த்தாலே தன்னால் இயன்ற அனைத்து உதவியும் செய்து முடித்தால் தான் அடுத்த வேலையே ஞாபகம் வரும் மேன்மையான குணம் கொண்டவன்.

 

அதனால் அவன் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வாய்ப்பையும் தவற விட்டிருக்கிறான், ஆனால் அதைப் பற்றி அதியமான் கவலைப்பட்டதில்லை.மனசாட்சிப்படி வாழ்கிறான். இளகிய மனம் கொண்டவன்.

 

ஆக மொத்தம் எல்லோரும் சமம் என்று எண்ணி அனைவர்க்கும் நன்மையே நினைக்கும் அக்மார்க் நல்ல பையன்.

 

“அதி, இப்படி சொன்னா என்ன அர்த்தம்?” என்று அவள் அயர்வாகக் கேட்க.

 

“என்ன அர்த்தம்னா? முடியாதுனு அர்த்தம்” என்று அவன் உஷ்ணமாக உரைத்துவிட்டு கட்டிலில் போய் பொத்தென்று அமர்ந்தான். அவன் அமர்ந்த வேகத்தில் கட்டில் ஒரு ஆட்டம் ஆடியது.

 

ஆஷ்லி மெல்ல அதியமானிடம் நடந்து சென்று கட்டிலில் அவன் கால் அருகில் மண்டியிட்டு அமர்ந்து, கட்டில் விளிம்பைப் அழுத்தமாகப் பிடித்திருக்கும் அவன் இரு கைகளையும் தன் தளிர் கைகளால் பிடித்து, சிப்பிக்குள் முத்து இருப்பது போன்று அவன் இரு கைகளையும் ஒன்று போல் இணைத்து தன் இரு கைகளுக்குள் அடக்கிக்கொண்டு, அவனின் வசீகர முகத்தை நிமிர்ந்து பார்த்து,

 

“அதி, பிளிஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்” என்று தன் அஞ்சனம் தீட்டிய விழிகளைச் சுருக்கி இறைஞ்சலான குரலில் கேட்க,

 

அதியமான் தன் கண்களை மூடி ஆழ் மூச்செறிந்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி மெல்லக் கண் திறந்து நிதானமான குரலில்,

 

“நீ என்ன கேட்கிறேன்னு உனக்குப் புரியுதா இல்லையா, ஆஷ்லி?” என்று அதியமான் சற்று குனிந்து அவள் கண்களை கூர்மையாகப் பார்த்துக் கேட்டான்.

 

அதற்கு அஷ்லி, “நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை, புரியாமல் பேச. நல்லா புரிஞ்சி தெளிவா தான் பேசுறேன். சரி, இப்போ முடிவா உன் பதில் என்ன, அதி?” என்று கேட்டாள் அவன் கண்களைப் பார்த்து.

சட்டென அதியமான் தன் கையை அவள் பிடியிலிருந்து உதறி விடுவித்துக் கொண்டு, “உயிரே போனாலும் இந்த விஷயத்தை என்னால செய்யவும் முடியாது. இதுக்கு நான் ஒரு காலமும் சம்மதிக்கவும் முடியாது, ஆஷ்லி” என்றான், சற்று முன்னோக்கி நடந்து, அவளுக்கு தன் விருப்பமின்மையைத் தெரிவிக்கும் விதமாக அவளுக்குத் தன் முகத்தைக் காட்டாமல் திரும்பி நின்றுகொண்டு.

 

அதற்கு அவள், “அப்போ உன் முடிவில் உறுதியா இருக்க, அப்படிதானே அதி?” என்று கேட்க.

 

“ஆமா, என் முடிவில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது” என்றான் அதியமான் முடிவாக.

 

சிறிது நேரம் அந்த அறையில் மௌனமே ஆட்சி புரிந்தது.

 

“ஓகே, ஃபைன். இதுக்கு மேல உனக்கு எப்படி புரிய வைக்கிறதுனு எனக்குத் தெரியல, உனக்குப் புரிய வைக்க முடியும்னு தோணல”.

 

“சூழ்நிலையைப் பத்தி புரியாதவங்களுக்கு சொன்னா புரிஞ்சி, அதுக்கு ஏத்த மாதிரி நடந்துபாங்க, ஆனா சூழ்நிலையைப் பத்தி நல்லா தெரிஞ்சு புரிஞ்சிக்க மாட்டேன்னு வீம்பா, எனக்கு என்ன தோணுதோ அது தான் செய்வன்னு இருக்குறவங்க கிட்ட என்ன சொல்ல?” இதற்கு மேல் இங்கு நின்று மேற்கொண்டு இவ்விவகாரத்தை வளர்ப்பது பயனற்றது என்பது புரிந்துகொண்டு, அங்கிருந்து வெளியேறும் பொருட்டு அந்த அறையின் கதவை நோக்கிச் சென்றாள்.

 

“அதி, ஆனா இதுவரைக்கும் நமக்குள்ள இருந்த எல்லாம் இதோடு, இந்த நிமிஷத்தோட இங்கேயே முடியுது.”

 

“இதுக்கு மேல் உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்ல, இனி என்னைத் தேடி எங்கும் வராத. குட் பாய்” என்று உணர்ச்சிகளற்ற குரலில் நிர்மலமாக உரைத்துவிட்டு, அவனைத் திரும்பியும் பார்க்காமல் வேக நடையுடன் விறுவிறுவென்று அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டாள்.

 

அவள் மூடிச் சென்ற கதவையே நிலைக்குத்திய பார்வையுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

புயல் அடித்து ஓய்ந்த பின்னர் நிலவும் அமைதியைப் போல் அந்த அறை நிசப்தமாக இருந்தது.

 

இப்போது என்ன சொல்லிவிட்டுச் செல்கிறாள், எங்களுக்குள் எந்த உறவும் இனி இல்லை என்றா? எப்படி! எப்படி! அவளால் இப்படி கூற முடிந்தது?

 

நான் அவளுக்கு வேண்டாமா? என் அரவணைப்பு, பாசம் தேவையற்றதா? என் அன்பைத் துச்சமாகக் கருதி என்னை முற்று முழுதாகத் தூக்கி எறிந்து சென்றுவிட்டாளா? எப்படி முடிந்தது? அவளால் எப்படி இப்படி பற்ற வார்த்தைகளைச் சர்வ சாதாரணமாக என்னிடம் கூற முடிந்தது?

 

என்னை விட்டு பிரியும் முடிவை எப்படி அவளால் இவ்வளவு இலகுவாக எடுக்க முடிந்தது? அவனால் இன்னும் கூட அவன் இன்னுயிர் காதலி உதிர்த்துவிட்டுச் சென்ற வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல், அந்த நிமிடங்களைக் கடக்கத் தவியாய் தவித்து, கால நேரம் மறந்து தன் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து, உடலால் செயலற்று சிலையாக அமர்ந்திருந்தான்.

 

அவனால் நம்பவே இயலவில்லை. காதலியா???

 

ஆம், காதலிதான்!

 

அவனது ஆருயிர் காதலி, அவனின் இருதயத்து ராணி, அவன் அன்பிற்கு அரசி.

 

அவள் அஷ்லி. அவன் அன்பிற்கினியாள்.

 

ஓர் ஆண்டல்ல, இரு ஆண்டல்ல, ஐந்து ஆண்டு காதல் இவ்விருவருக்குள்ளும்.

 

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய நேசம்.

 

எதிரியிலிருந்து நட்பாகி, நட்பிலிருந்து காதலாய் இன்றளவும் தொடர்கின்றது.

 

தொடர்கிறதா? அது அவர்களுக்கே வெளிச்சம்! இருவருக்கும் ஒரே மாதிரியான லட்சியம்தான்.

 

வெள்ளித்திரையில் ஜொலிப்பது அந்தக் குறிக்கோளை நோக்கியே இவர்களின் பயணம் ஒன்றாக நகர்கிறது.

 

மற்ற காதலர்கள் போன்று இவர்கள் இருவரும் கிடையாது. இவர்கள் காதல் நல்ல புரிதலான நேசம்.

 

சண்டை, பொறாமை, அடக்குமுறை, வீண் வாதம் என்று எதுவும் அற்ற மேன்மையான காதல் இவர்களது. இப்பொழுது நடந்து முடிந்த இந்த வாக்குவாதமே இவ்விருவருக்குமான முதல் சண்டையாகும்.

 

நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணி துளிகளாகக் கரைந்து கொண்டிருந்தது. அதியமான் எவ்வளவு நேரம் தன் சிந்தனையில் உலன்றுகொண்டு அப்படியே அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை.

 

அவனின் செல்போனில் ரிமைன்டர் மாலை 6 மணி என்று ஒலி எழுப்பி, அவனின் பகுதி நேர வேலைக்கு ஆயத்தமாக நேரமாகிவிட்டது என்று அவனுக்கு நினைவூட்டும் அறிவிப்பு வந்த பின்னரே நிகழ்வுகாத்திற்கு திரும்பினான்.

 

அவனின் கவலையை எல்லாம் சற்று தள்ளி வைத்துவிட்டு, பின்னர் நொடியும் தாமதிக்காமல் அன்றாட வாழ்க்கைக்குப் பயணமாகத் தயாராக ஆயத்தமானான்.

 

இதுவே அவனின் குணம்.

 

என்னதான் எண்ணிலடங்கா கவலைகள் வரிசை கட்டி நின்றாலும் அன்றாட வாழ்க்கையில் அதை புகுத்த மாட்டான்.

 

அந்த வகையில் அவனின் வாழ்க்கை முறை சரியே.

 

இந்தப் பழக்கம் நம் அனைவருக்கும் மிகவும் அவசியமாகும்.

 

பலர் அன்றாட வாழ்க்கையில் ஏராளமான கவலைகளை இணைந்து ஒரு நிலையற்ற வாழ்க்கை வாழ்கின்றனர்.

 

கவலையில்லா உயிரினங்கள் ஏது?

 

அன்றாட நம் வேலையை நன்முறையில் செய்து கட்டுக்கோப்பாகச் சீர்பட வாழ்க்கையை நன்முறையில் வாழ்வதே நல்வாழ்வாகும்.

 

இதுவே கவலையற்ற வாழ்க்கைக்கு சிறந்த வழியாகும்.

 

யார் இவ்விருவர்? எதைப் பற்றி இவ்வளவு விவாதித்து சண்டையிட்டுக் கொள்கிறார்கள்? எதை அவள் செய்யக் கூறி அவன் அதை நிராகரிக்கிறான்?

 

தெரிந்துகொள்ளப் படியுங்கள் ‘என் அகமானவனே’.

 

கதையை  பற்றிய உங்கள் கருத்துக்களை கூற மறவாதீர்கள் நண்பர்களே.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்