Loading

அன்று காவல் நிலையத்தில் நடந்த பிரச்சினைக்கு பிறகு மகிழினி சில நாட்கள் மலரின் வீட்டில் தங்கியிருந்தாள். ஆனால் மலரின் வீட்டாரோ பரதனை நினைத்து பயந்தனர்.

மகிழினி தங்கள் வீட்டில் இருப்பதும் பிடிக்காமல் அவளை வெளியே போக சொல்ல மனமில்லாமல் தவித்தவர்களின் கஷ்டத்தை புரிந்துகொண்டு மகிழினியே ஏதேதோ காரணம் சொல்லி அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

அந்த நேரத்தில் உதயை தவிர தனக்கு உதவிக்கு யாருமில்லையென்று உணர்ந்தவள் எதை பற்றியும் யோசியாது அவனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவளை கிளம்பி ஒரு இடத்துக்கு வரச்சொன்னான்.

மலரின் வீட்டில் தங்கியிருந்தபோது உதய் செய்த உதவியை பற்றி மலர் மகிழினியிடம் சொல்லியிருந்தாள்.

அதோடு கூடுதலாக அவன் அவளை விரும்புவதையும் சொல்ல மகிழினிக்கோ இதை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை.

அவனாக வெளிப்படுத்தும் போது பார்த்துக்கொள்ளலாமென்று எண்ணியவள் அதை பற்றி அறவே மறந்துபோனாள்.

உதய் கொடுத்த அட்ரெசுக்கு வந்து இறங்கியவளை உதய்யே வரவேற்று உள்ளே அழைத்து சென்றான்.

வீடு ஓரளவு பிரமாண்டமாகவே இருக்க ஹாலில் ஒரு வயதான ஜோடி அமர்ந்திருந்தார்கள்.

“ஆண்டி அங்கிள் இவங்க தான் மகிழினி.” என்று அறிமுகப்படுத்த அந்த இருவரின் புன்னகையும் அவளை வாஞ்சையோடு வரவேற்றது.

“மகிழினி இவங்க என் ப்ரெண்டோட பேரண்ட்ஸ். முனீஸ்வரன் அங்கிள் வந்தனா ஆண்டி.”என்று இருவரையும் அறிமுகப்படுத்த மகிழினியும் சிநேகமான புன்னகையை பகிர்ந்தாள்.

“இங்க வாம்மா.” என்று அந்த வயதான பெண்மணி அழைக்க மகிழினி சிறு தயக்கத்துடன் உதயை பார்க்க அவனும் சிறு புன்னகையுடன் போ என்று சொல்ல அவரருகே சென்று அமர்ந்தாள்.

அவளின் தலையை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்த வந்தனா

“ரொம்ப அழகா இருக்கம்மா “என்று சொல்ல அவரருகே அமர்ந்திருந்த முனீஸ்வரன் சத்தமாக சிரிக்க இப்போது அனைவரின் கவனமும் அவர்புறம் திரும்பியது.

“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?” என்று வந்தனா கேட்க

“ஒரு விஷயம் நினைவு வந்துச்சு அதான் சிரிச்சேன்.” என்று முனீஸ்வரன் கூற உதய்க்கோ அங்கொரு குட்டி கலாட்டா நடந்தேறப்போகின்றதென்று புரிந்துபோனது. 

அதை வேடிக்கை பார்ப்பதற்காக அவனும் அவர்களோடு வந்து அமர்ந்துகொண்டான்.

“என்ன விஷயம்?” என்று வந்தனாவும் ஒரு போலியான முறைப்புடனேயே கேட்க

“உன்னை முதல் முதலாக என் வீட்டுக்கு அழைச்சிட்டு போனப்போ நீ அழுத சமாச்சாரம்.” என்று கூற இப்போது வந்தனாவின் பார்வையில் அனல் பறந்தது.

உதய்யோ என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்

“அங்கிள் ஆண்டி அழுதாங்களா?”என்று உதய் கேட்க

“ஆமா உதய். இவளை முதல் தடவை என்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு போனப்போ என் அம்மாவும் இவ தலையை தடவி ரொம்ப அழகா இருக்கம்மானு சொன்னதும் தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சிட்டா.” என்று கூறி மீண்டும் சிரிக்க இப்போது வந்தனாவோ சிறு பிள்ளைபோல் சிணுங்கினார்.

“வேணாங்க சின்ன பசங்க முன்னாடி கிண்டல் பண்ணாதீங்க.” என்று சிணுங்கியவரை பார்த்த உதய்

“அப்போ பெருசா ஏதோ சம்பவம் நடந்திருக்கு போலயே அங்கிள்.” என்று ஆர்வமாக கேட்க

“ஆமா உதய். இவ திடீர்னு அழுததும் அம்மா பயந்துட்டாங்க. என்னான்னு விசாரிச்சப்போ சொன்னா பாரு ஒரு காரணம்” என்றுவிட்டு முனீஸ்வரன் மீண்டும் சிரிக்க இப்போது உதய் மற்றும் மகிழினியின் பார்வை வந்தனாவின் புறம் திரும்பியது.

வந்தனாவோ வெட்கத்தில் நெளிந்தபடியே

“அது அது அது இவரால தான்.” என்று வந்தனா சொல்ல

“சஸ்பன்ஸ் தாங்கல அங்கிள் நீங்களே என்ன நடந்துச்சுனு சொல்லுங்க.”என்று உதய் என்ன நடந்ததென்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்க

“இவளை அழைச்சிட்டு வரும் போது சும்மா டீஸ் பண்ணுறதுக்காக நீ இன்னைக்கு அழகாகவே இல்லை. என் அம்மா என்ன சொல்லப்போறாங்களோ தெரியலனு சொன்னேன். இவ அதை நம்பி பயத்தோட தான் அம்மாவை பார்க்க வந்தா. அம்மா அப்படி சொன்னதும் சின்னப்பிள்ளை மாதிரி அழுது என்னையும் போட்டுகொடுத்துட்டா.” என்று கூறி சிரிக்க வந்தனாவை தவிர மற்ற மூவரும் கற்பனையில் அந்த சம்பவத்தை நினைத்து பார்த்து சிரித்தனர்.

இப்படியே கலகலப்பாக நேரம் கழிய மகிழினியும் அவர்களோடு நன்றாக ஒன்றிப்போனாள்.

உதய் கிளம்புவதற்கு முன் மகிழினியை தனியாக அழைத்து பேசினான்.

“நீங்க கொஞ்ச நாளைக்கு அங்கிள் ஆண்டி கூட இருங்க. உங்க அம்மாவை பத்தி கவலைப்படாதீங்க. அவங்க முழுசா குணமானதும் நானே அவங்களை உங்ககிட்ட அழைச்சிட்டு வரேன். எந்த காரணம் கொண்டும் அங்கிள் ஆண்டிகிட்ட சொல்லாமல் வெளிய போகாதீங்க. பரதன் பிரச்சினை முடியும் வரைக்கும் தான் இந்த பயம். அவனுக்கு தண்டனை உறுதியானதும் நீங்க முன்னாடி மாதிரியே இருக்கலாம்.”என்ற உதய் கூற

“ரொம்ப நன்றி உதய். நீங்க மட்டும் இல்லைனா இப்போ நான் உயிரோட இருந்திருப்பேனானு கூட தெரியல.”என்று அவள் உணர்ச்சி பொங்க பேச

“ஏங்க பழசையெல்லாம் பேசி வருத்தப்படுறீங்க? இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும். நீங்க எதை பத்தியும் கவலைப்படாமல் நிம்மதியாக இருங்க.” என்று உதய் சொல்ல இப்போது மகிழினி எதையோ சொல்ல தயங்கினாள்.

“வேறு ஏதாவது சொல்லனுமா மகிழினி?”என்று கேட்க

“எனக்கு ஒரு வேலை அரேன்ஜ் செய்துதர முடியுமா?” என்று தயக்கத்துடன் கேட்க மெலிதாக சிரித்தவன்

“அதுக்கு ஏங்க இப்படி தயங்குறீங்க? அதுக்கும் நான் ஒரு அரேன்ஜ்மெண்ட் செய்திருக்கேன். அங்கிள் ரிட்டையர்ட் போலீஸாக இருந்தாலும் அவங்களும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை ரன் பண்ணுறாங்க. உங்களுக்கு அங்கேயே ஒரு ஜாப் அரேன்ஜ் பண்ணச்சொல்லியிருக்கேன். டெய்லி காலையில் அங்கிளோட போய்ட்டு அங்கிளோடேயே வந்துடலாம்.” என்று உதய் அவனின் ஏற்பாட்டை சொல்ல மகிழினிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

“ரொம்ப நன்றி உதய்.”என்று அவள் மீண்டும் நன்றி கூற

“அதை விடுங்க. ஆனா ஒரு விஷயம். எந்த காரணத்தை கொண்டும் அங்கிளுக்கு தெரியப்படுத்தாமல் வெளிய எங்கேயும் போகாதீங்க. இது என்னோட கைன்ட் ரிக்வஸ்ட்.” என்று உதய் மீண்டும் நினைவுபடுத்த அவன் சொன்னபடி நடந்துகொள்வதாக உறுதிகொடுத்த பின்பே உதய் அங்கிருந்து கிளம்பினான்.

அதன்பின் மகிழினிக்கு நாட்கள் நன்றாகவே நகர்ந்தது. முனீஸ்வரன் மற்றும் வந்தனாவோடு நன்றாகவே ஒட்டிக்கொண்டாள் மகிழினி. மகிழினியை தன் சொந்த மகளைப் போலவே முனீஸ்வரன் தம்பதிகள் பார்த்துக்கொண்டனர். அவளுக்குமே வேறொருவர் வீட்டில் இருக்கிறோமென்ற எண்ணம் சற்றும் இல்லை. எப்போதுமே கலகலவென்று இருப்பவளுக்கு இவர்களின் அரவணைப்பு பெரும் பாதுகாப்புணர்வை கொடுத்தது. அதோடு அவளின் வாலுத்தனங்களும் அடிக்கடி வெளிப்பட்டு அவர்கள் மூவரின் கூட்டணியையும் வலுப்படுத்தியது.

அன்று உதய் வரும் போது மகிழினியும் வந்தனாவும் ஹாலில் அமர்ந்து மொபைலில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

“எங்களுக்கும் என்ன விஷயம்னு சொன்னா நாங்களும் சிரிப்போம்.” என்றபடியே அவர்களுக்கு எதிரே அமர்ந்தான் உதய்.

தலை நிமிர்ந்து பார்த்த வந்தனா

“கிச்சனுக்கு போய் நீயே பாரு”என்றுவிட்டு அவர் மீண்டும் மொபைலை கவனிக்க உதய்யோ குழப்பத்துடன் கிச்சனை நோக்கி நடந்தான்.

உள்ளே முனீஸ்வரரோ ஏப்ரன் அணிந்துகொண்டு வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார். கண்களோ நொடிக்கு நொடி கலங்கிக்கொண்டிருக்க உதய் அவர் அருகில் வந்தான்.

“என்ன அங்கிள் செய்றீங்க?” என்று அவன் என்ன செய்கிறாறென்று எட்டிப்பார்க்க அவனுக்கும் வெங்காயத்தின் காரத்தில் கண்கள் எரிந்தது.

” என்ன அங்கிள் இப்படி எரியிது?” என்று தன் கண்களை துடைத்தபடியே உதய் கேட்க

“நீ சொல்லிட்ட. ஆனா நா இதை வாய்விட்டு சொன்னா இன்னும் ஒரு வாரத்துக்கு நான் தான் வெங்காயம் நறுக்கனும்.” என்றபடியே அவர் வேலையை தொடர

“என்ன நடந்துச்சு அங்கிள்?” என்று உதய் விசாரிக்க

“அதை நாங்க சொல்றோம்.” என்றபடியே அங்கு வந்தனர் மகிழினியும் வந்தனாவும்.

“நீயே சொல்லு உதய். யாரோட வேலை கஷ்டம்? என்னோடதா அவரோடதா?” என்று வந்தனா கேட்க முனீஸ்வரரையும் வந்தனாவையும் மாறி மாறி பார்த்த உதய்

“உங்களோட வேலை தான் ஆன்டி கஷ்டம்.” என்று கூற

“பார்த்தீங்களா சின்ன பையன் அவனுக்கு தெரியிது. ஆனா இத்தனை வயசாகியும் உங்களுக்கு தெரியல.” என்று வந்தனா நொடித்துக்கொள்ள

“அப்போ யாரு பெருசுனு அடிச்சுக்காட்ட தான் இந்த ஆனியன் கட்டிங் டாஸ்க்கா?” என்று உதய் கேட்க ஆமென்று தலையாட்டினாள் மகிழினி.

“என்ன அங்கிள் இப்படி சிக்கிட்டீங்க? பேசாமல் சரண்டர் ஆகிடுங்க. நான் வேணும்னா ரெகமண்டேஷனுக்கு வரேன்.” என்று உதய் கேட்க

“நானும் அந்த ஐடியாவுல தான் இருக்கேன். இல்லைனா என் கண்ணுக்கு தனியா இன்ஸ்யூரன்ஸ் செய்யவேண்டியிருக்கும்.”என்று புலம்பியபடியே பெண்கள் இருவரிடமும் சரண்டரடைந்துவிட்டார் முனீஸ்வரன்.

இப்படியே நாட்கள் அழகான குட்டி கலாட்டாக்களுடன் செல்ல தன்னை சுற்றியிருந்த பிரச்சினைகளை முற்றாக மறந்துபோனாள் மகிழினி.

அவளின் இந்த மகிழ்ச்சிக்காக முனீஸ்வரனும் உதய்யும் வெளியில் பல வேலைகளை செய்ய வேண்டியிருந்தது.

என்னதான் போலீஸ் பரதனை கைது செய்திருந்தாலும் அவனை வெளியே கொண்டுவருவதற்கு பலர் தயாராக இருந்தனர். அனைவரையும் சமாளிப்பது கஷ்டமென்பதால் அவனின் இந்த செல்வாக்கிற்கு காரணமான நபர்களை வெவ்வேறு விதமாக சரிகட்டினார்கள். முனீஸ்வரன் தன் அதிகாரத்தின் மூலம் சிலரை சரிகட்ட உதய் தன் பணபலத்தால் முடிந்ததை செய்தான். 

ஆனாலும் கூட இருமுறை பரதனின் ஆட்கள் மகிழினியை நெருங்கிவிட்டனர். முனீஸ்வரரின் பலமான பாதுகாப்பினால் அதுவும் முறியடிக்கப்பட்டது. முடிந்தளவு அனைத்தையும் சரிகட்டியவர்களுக்கு பரதனுக்கான தண்டனையை உறுதி செய்யும் முயற்சியில் சிறு தாமதம் ஏற்பட்டது. அதற்கு காரணம் மகிழினி தான். அவனுக்கு தண்டனை உறுதியாவதற்கு முன் விவாகரத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்ற எண்ணிய முனீஸ்வரன் வந்தனாவிடம் விஷயத்தை சொன்னார்.

வந்தானாவிற்கோ மகிழினி பழைய விஷயங்களை நினைத்து மீண்டும் வருந்துவாளோ என்று கவலையிருந்தது. முனீஸ்வரருக்கு தெரியாத சில விஷயங்களை மகிழினி வந்தனாவிடம் பகிர்ந்திருந்தாள். அந்த விஷயங்களை அவள் பகிரும் போது அவள் வேதனையோடு அழுததை நேரில் பார்த்த வந்தனாவுக்கு மீண்டும் அவளை வருத்தக்கூடாதென்ற எண்ணமே இருந்தது.

“ஏங்க அவ காதுக்கு போகாமல் நீங்க இதை ஏற்பாடு செய்ய முடியாதா?” என்று வந்தனா கேட்க

“அப்படி முடியும்னா செய்திருக்கமாட்டேனாம்மா? எனக்கும் மகியை கஷ்டப்படுத்துறதில் விருப்பமில்லை. ஆனா சட்டம்னு ஒன்னு இருக்குமா. அது படிதான் நடந்தாகனும்.” என்று முனீஸ்வரன் கூற வந்தனாவும் மகிழினியிடம் பேசினார்.

ஆனால் அவர் பயந்தபடி மகிழினி எதிரொலி இருக்கவில்லை. மாறாக இம்முறை அவள் தைரியமாகவே இருந்தாள். சாதாரணமாகவே மகிழினி தைரியமான பெண் தான். இடையில் நடந்த சில விஷயங்கள் தான் அவளை பலவீனமாக்கியது. ஆனால் இப்போது முனீஸ்வரன் தம்பதிகள் மற்றும் உதய்யின் ஆதரவு இருப்பதால் அனைத்தையும் எதிர்கொள்ளும் தைரியம் அவளுக்கு இருந்தது.

மகிழினியும் அனைத்திற்கும் ஒப்புக்கொண்டதால் விவாகரத்து வழக்கும் சுமூகமாக முடிய பரதனின் தண்டனைக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் வேகமாக நடந்தேறி அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த செய்தியை மகிழினி அறிந்தபோது தனக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதாக எண்ணி கண்ணீர் விட்டாள் மகிழினி. அதன் பின் உதய் மகிழினியின் அன்னையையும் அழைத்து வந்தான். முனீஸ்வரன் தம்பதிகள் இருவரையும் அங்கேயே தங்கச்சொல்ல மகிழினியின் அன்னையோ தான் தன் சொந்த ஊரிற்கு சென்று சிலகாலம் இருந்துவிட்டு வருவதாக கூறி சென்றுவிட்டார்.

 

இப்போது அனைத்து பிரச்சினைகளும் முடிந்ததால் மகிழினி தன் முந்தைய வேலையை தொடர விரும்பினாள். அவளின் விருப்பத்திற்கு முனீஸ்வரன் தம்பதிகளும் சம்மதம் சொல்ல மீண்டும் ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியில் ஈவன்ட் கார்டினேட்டராக வேலைக்கு சேர்ந்தாள்.

அவள் வாழ்க்கை பழைய நிலைக்கு மாறியிருக்க அவளின் இந்த மகிழ்ச்சிக்கு காரணமானவனை தான் அவளால் ஒரு மாதத்திற்கு மேல் பார்க்கமுடியவில்லை.

சமுத்ரா தன் மாமாவின் இறப்புக்கு சென்றிருந்ததால் உதயே முழுநேரம் கம்பெனியில் இருக்க வேண்டியதாயிற்று. இரண்டு நிறுவனங்களை ஒரே நேரத்தில் பார்க்கவேண்டியிருந்ததால் அவனால் மகிழினியை பார்க்க வரமுடியவில்லை. அதோடு போனில் பேசவதற்கும் அவனுக்கு ஓய்வு நேரம் கிடைக்கவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்