Loading

      கதிரவனை கண்டதும் வாயிற்காவலாளி விரைவாகக் கதவுகளை திறந்துவிட்டு வணக்கம் வைத்தான். அவன் சிறு தலையசைப்போடு விறுவிறுவென்று உள்ளே சென்றான். 

 

    நிரஞ்சன் மகிழுந்தை வெளியே நிறுத்திவிட்டு அதிலேயே இருந்துக் கொண்டான். தான் உள்ளே சென்றால் அமுதவள்ளி என்ன பேசுவாள் என்று தெரியும். ஆதலால் வெளியிலேயே நின்று கொண்டவன் அழகிக்கு தாங்கள் வந்து சேர்ந்த தகவலை அனுப்பினான்.

 

    விறுவிறுவென்று வாசல் வரை சென்ற கதிர் வீட்டிற்குள் நுழைய ஒரு நொடி தயங்கினான். தன்னை வெளியே போ என்று சொன்ன வீட்டிற்குள் மறுபடியும் நுழைய அவனது தன்மானம் தடுத்தது. பின், இங்கு என்ன தங்கி விருந்துண்ணவா வந்திருக்கிறோம் என்கிற எண்ணம் அவனை விரைப்பாக வீட்டிற்குள் நுழையச் செய்தது.

 

     அவன் கூடத்தில் கால் வைத்தப்பொழுது அவனது தந்தையும் தொழிலதிபருமான சக்திசுந்தரம் அலுவலகத்திற்குத் தயாராகி அறைவிட்டு வெளியே வந்தார். 

     

    கதிரை கண்டதும் ஒரு பார்வைப் பார்த்தவர் திரும்பி “அமுதா” என்று குரல் கொடுத்தார்.

 

    “ம்ம் வந்துட்டேன்.” என்றபடி அமுதவள்ளி அவருக்கான காபிக் கோப்பையுடன் வந்தாள். வந்தவள் கதிரவனை கண்டதும் எகத்தாளமாக ஒரு பார்வைப் பார்த்தாள்.

 

    “வீராப்பா உங்க சொத்தும் வேணாம் ஒன்னும் வேணாம்னு வீட்ட விட்டு போனவரு இப்ப எதுக்கு வந்துருக்காருனு கேளு.” என்று சக்திசுந்தரம் அமுதவள்ளி மூலமாக கதிரவனை கேட்டார்.

 

   இதற்கடையோரம் விரக்தி புன்னகையை சிதற விட்ட கதிரவன், “இப்பவும் உங்க சொத்து வேணாம்னு தான் இருக்கேன். ஆனா நேத்து உங்க வைஃப் வந்து என் ரூம்ல டிடெக்டிவ் வேலை பார்த்துட்டு போனாங்க. அதான் அவங்களுக்கு தேவையான இன்பர்மேஷன நானே தரலாம்னு வந்துருக்கேன் மிஸ்டர். சக்திசுந்தரம்.” என்று சூடாக பதில் தந்தான்.

 

     “ஏய் எவ்வளோ ஏத்தம் இருந்தா அப்பா பேரையே சொல்லுவ.” என அமுதவள்ளி முழியை உருட்டினாள்.

 

   “என்னது அப்பாவா? ஏன் அன்னைக்கு நான் சொல்ற பொண்ண கட்டலனா சொத்தும் கிடையாது வீட்லயும் இடம் இல்லைனு சொல்லும் போது தெரியலயா அவரு அப்பானு?” என்றவன் இடைவெளி விட்டு ஆழ மூச்செடுத்தான்.

 

    அமுதவள்ளியும் சக்திசுந்தரமும் அவனை இறுக்கமாக பார்த்தபடி நின்றிருந்தனர்.

 

    “அதை பத்தி நான் இப்ப பேச வரல. நான் சொல்ல வந்தத சொல்லிட்றேன். எனக்கு ஒரு பொண்ண பிடிச்சுருக்கு. உங்களுக்கும் நல்லா தெரிஞ்ச பொண்ணு தான். நீங்க சந்தேகப்பட்ட‌ மாதிரியே நான் அழகிய தான் லவ் பண்றேன். அவள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். என்னதான் இருந்தாலும் என்னை பெத்துட்டீங்க. உங்கக்கிட்ட எனக்கு சொல்லவோ அனுமதி கேக்கவோ விருப்பமில்லதான். ஆனா கடமைனு ஒன்னு இருக்கே அதுக்காக சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.” என்று கதிர் நேரடியாக வந்த விஷயத்தை போட்டு உடைத்தான்.

 

    அதனை கேட்டதும் மற்ற இருவரின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

 

   அமுதவள்ளி தன் கணவனை பார்க்க, அவரே முதலில் ஆரம்பித்தார்.

 

    “என்ன டா பேசுற? ஏதோ அப்ப சின்ன பையன் இப்ப கல்யாணம் வேணாம்னு நினைக்கிறான் போலனு ஃப்ரீயா விட்டா உன் இஷ்டத்துக்கு எவளையோ லவ் பண்றேன்னு வர்ற? நீ கம்பெனில பண்ண குட்டி குட்டி சேன்ஜஸ் கம்பெனில நல்ல இம்ப்ரூவ்மென்ட் தந்ததுனு சரி தனியா தொழில் பண்ணனும் விருப்புறான் போல. தனியா பண்ணாலும் அவன் பெரிய ஆளா வருவான்னு நினைச்சு தான் நீ வீட்டை விட்டு போகும்போது கூட எதுவும் சொல்லாம விட்டேன். ஆனா அதுக்காக உன் விருப்பத்துக்கு எல்லாத்தையும் பண்ணலாம்னு நினைக்காத.” 

 

     “என் விருப்பத்துக்கு நான் வாழக்கூடாதுன்னா அப்போ உங்க விருப்பத்துக்கு நான் வாழனுமா?”

 

    “வாழ்ந்தா என்ன தப்புனு கேக்குறேன்? உனக்கு நாங்க என்ன கெட்டதா பண்ண போறோம்?”

 

   “அப்ப என் விருப்பம் உங்களுக்கு முக்கியமேயில்லல. ரைட்.” என்று கால் தரையில் நில்லாது அலைப்பாய்ந்தான். அதுவே அவன் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறான் என்று உணர்த்தியது.

 

   “என் விருப்பத்துக்கு மாறா நீங்க செய்யுற எல்லாமே எனக்கு கெட்டது தான்.”

 

   “இங்க பார் இப்பவும் சொல்றேன். நாங்க சொல்ற பொண்ண கட்டிக்கிட்டா உனக்கு சொசைட்டில நல்ல பேரும் கிடைக்கும் சொத்தும் கிடைக்கும். அதைவிட்டுட்டு யாருனே தெரியாதவள கட்டுனா உனக்கு என்னடா கிடைக்கும்?” என்று சக்திசுந்தரம் குரல் உயர்த்தினார்.

 

   “யாருக்கு வேணும் உங்க பேரும் சொத்தும்? அதை என்னாலயே சம்பாதிக்க முடியும். அவள கட்டுனா என்ன கிடைக்கும்னு தானே கேட்டீங்க. அவள கட்டுனா உங்கக்கிட்ட கிடைக்காத எல்லாமே கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். சந்தோஷம் கிடைக்கும். அன்பு கிடைக்கும். எல்லாத்துக்கும் மேல அவளோட காதல் கிடைக்கும்.” என்று கதிரவனும் குரல் உயர்த்தினான்.

 

   “காதலாம் பெரிய காதல். சும்மா நிறுத்துடா.” என்று அமுதவள்ளி கத்த, கதிரவன் பல்லைக் கடித்தபடி இருவரையும் முறைத்தான்.

 

   “பெரிய ரதிதேவி அவ. நீ இப்ப அவ வேண்டாம்னு வா அழகழகான பொண்ணுங்கள நான் கூட்டிட்டு வரேன் உனக்கு. அதுல எவள பிடிச்சுருக்குனு சொல்றியோ அவள நாங்களே முன்ன நின்னு உனக்கு இந்த ஊரே மூக்குல விரல வைக்குற அளவுக்கு தடபுடலா கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.” என்று சொடக்குப் போட்டாள்.

 

    “அதைவிட்டுட்டு ஊர் பேர் தெரியாதவள காதலிக்கிறேன் கட்டிக்கிறேன்னு வந்து நிக்கிற? அவ உன் மாமாக்கிட்ட வேலை பாக்குற வேலைக்காரி தானே. அவ உன்னை கட்டிக்கிறதுக்கு என்ன தகுதி இருக்கு?” என்றவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான்.

 

   “நீ தான் அவ பின்னாடி அலைஞ்சன்னா அவளுக்கு எங்க போச்சு புத்தி? உன் பணத்தைப் பார்த்து பல் இளிச்சுருப்பா. நீ மட்டும் நான் சொத்தே வேணாம்னு எழுதி குடுத்துட்டு வந்துட்டேன்னு சொல்லேன் உன்னை வேணாம்னு கழட்டி விட்டுடுவா. காசுக்கு காதலிக்கறவ டா அவ.” 

 

   “போதும் இதுக்கு மேல பேசாதீங்க.” என்று பல்லைக்கடித்து எச்சரித்தான்.

 

    “நான் அப்படி தான்டா பேசுவேன். பெத்த வயிறு பத்தி எரியுது. புள்ளயோட நிக்கிறவள நீ ஏன்டா கட்டணும்னு ஆசைப்படுற? புள்ளய வச்சுக்கிட்டு உழைக்க முடியாது காசு உள்ளவனா வளைச்சு போட்டு சொகுசா வாழலாம்னு தானே உன்னை அவ பின்னாடி சுத்த விட்டுருக்கா? அப்படி என்னத்த அவக்கிட்ட கண்டியோ நீயும் அவள கல்யாணம் பண்ணிக்க போறேன்னு வந்து நிக்கிற. அவளுக்குலாம் என்ன தரமிருக்கு? காசுக்காக உன்னை வளைச்சுப்போட நினைச்சவ அந்த புள்ளய ஒழுக்கமாவா பெத்துருப்பா?” என்றது தான் தாமதம் அங்கிருந்த டீபாய் சுக்கு சுக்காக உடைந்து சிதறியது.

 

    அந்த சத்தத்தில் அமுதவள்ளி திகைத்து கதிரவனை பார்க்க, அவன் இரத்தம் ஒழுகும் கையோடு கண்களில் கனல் தெறிக்க உக்கிரமாக நின்றிருந்தான். அவனது செயலே அவனது கோபத்தின் அளவை எடுத்துக்கூற அமுதவள்ளி திகைத்து வாயடைத்துப் போனாள். சக்திசுந்தரமும் இதுநாள் வரையில் பார்க்காத தனது மகனின் மறுமுகத்தைக் கண்டு அதிர்ந்து நின்றிருந்தார்.

 

    “பெத்தவங்களா போய்ட்டீங்களேனு பார்க்கறேன். இன்னொரு வார்த்தை என் அழகியை பத்தி தப்பா வந்தது?” என விரல் நீட்டி அடிக்குரலில் குரலில் சீறினான். 

 

    “பெத்தவங்கனு என்கிட்ட உரிமை எடுக்க முயற்சி பண்ணாதீங்க. அதுக்கான தகுதிய எப்பவோ நீங்க இழந்துட்டீங்க. இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. எப்ப நான் அழகிய காதலிக்கிறேன்னு தெரிஞ்சுதோ அப்பவே அவள தவிர எவ கழுத்தலயும் தாலி கட்டக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். அழகி தான் என் பொண்டாட்டி அதை யாராலையும் மாத்த முடியாது. மாத்தணும்னு முயற்சி பண்ணாக்கூட அது யாரு என்னனு பார்க்க மாட்டேன். அவதான் என் பொண்டாட்டி.” என்று உறுதியாக அழுத்தமாக உரைத்தவன்,

    

     “இந்த சொத்து, பணம், பேர் இது தானே உங்களுக்கு முக்கியம். அதை நீங்களே வச்சுக்கோங்க. எனக்கு இதுல பத்து பைசாக்கூட வேணாம்னு நான் கையெழுத்து போட்ட பத்திரம் சீக்கிரமே உங்களுக்கு வந்து சேரும். இதுக்கப்புறம் இந்த நிமிஷத்துலேர்ந்து என் விஷயத்துல நீங்க தலையிடக் கூடாது. மீறி தலையிட்டு உங்க மரியாதைய நீங்களே கெடுத்துக்காதீங்க.” என்று எச்சரித்துவிட்டு திரும்பி நாலு எட்டு வைத்தான்.

 

    பின் திரும்பி நின்று, “அப்புறம் அழகிய மிரட்டி பார்க்கலாம்னு மட்டும் நினைச்சுராதீங்க. அப்படி சீப்பா எதாவது பண்ணீங்கன்னா நான் பதில் குடுக்க வேண்டியிருக்கும். அப்படி நான் திருப்பி பதில் குடுத்தா நீங்க தாங்க மாட்டீங்க. முக்கியமா உங்களுக்கு சொல்றேன்.” என்று தனது அன்னையை நோக்கி விரல் நீட்டி கோபமாக உரைத்தான்.

 

     “இன்னும் ரெண்டு வாரத்துல எனக்கும் அழகிக்கும் கல்யாணம். பெத்தவங்கனு சொல்லிக்கிட்டு அங்க வந்து பிரச்சனை பண்ணலாம்னு மட்டும் வந்துராதீங்க. என் கல்யாணத்த நீங்க பார்க்கவே கூடாது அதுதான் நான் உங்களுக்கு குடுக்குற தண்டனை.” என்று கோபமும் விரக்தியும் கலந்து அழுத்தமாக உரைத்தவன் அதற்குமேல் அங்கு நில்லாது விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறினான். 

 

      அவனுக்காகக் காத்திருந்த நிரஞ்சன் அவன் கோபமாக வருவதைக் கண்டு அவனை நெருங்க, அப்பொழுதுதான் அவனது வலது கையில் இரத்தம் வழிவதைக் கண்டான். உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். கதிரவன் வர மறுத்தும் அவனை வம்படியாக இழுத்துச் சென்று சிகிச்சை செய்துக் கொள்ள வைத்தான். 

 

     அதற்கு பின் அவனை பலமுறை கேட்டும் அவன் அங்கு என்ன நடந்ததென்று உரைக்காது கோபம் குறையாது தான் நிரஞ்சனோடு பயணித்தான். நிரஞ்சனும் அவனிடம் கேட்டு கேட்டு அலுத்து ஒரு கட்டத்தில் கேட்பதை விட்டுவிட்டான்.

 

    மகிழுந்து கொடைக்கானலை நெருங்கிய வேளையில் தான் கதிரவன் தானாக அங்கு நடந்தவைகளை கூறினான். ஆனால் அப்பொழுதும் அவன் கோபம் குறையாது தான் இருந்தான். கதிர் கூறியதைக் கேட்டதும் நிரஞ்சனுக்கே கோபம் வரத்தான் செய்தது. என்ன பெற்றோர்களோ? என்று தோன்றியது. அமுதவள்ளியும் ஒரு பெண்ணாய் இருந்துக் கொண்டு அழகியை எப்படி அப்படி பேசினாள்? என்று கோபம் வந்தது. கதிர் அவர்களை உதறிவிட்டு வந்தது நல்லதென்றே தோன்றியது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கதிர், அழகியின் திருமணத்தை முடித்து விட வேண்டுமென்ற உறுதியான எண்ணம் அவனுக்கு மட்டுமல்லாது கதிருக்கும் அழகியை விரைவாக திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இன்னும் அழுத்தமாக ஆழமாக மனதில் தோன்றியது.

 

     கதிரவன் அனைத்தையும் சொல்லிவிட்டு அவளை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டான். அழகிக்கு தான் எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டதே என்று வருத்தமாகவும் அவனை நினைத்து மிகவும் கவலையாகவும் இருந்தது. தன் கண்களை துடைத்துக் கொண்டு அவனது முகத்தை இருக்கைகளிலும் தாங்கி தன்னை பார்க்க வைத்தாள்.

 

    அவனது கண்களிலிருந்த வலி அவளை கலங்க வைத்தது.

 

    “உன்னை போய் அப்படி பேசிட்டாங்களே டி?” என்று பல்லைக் கடித்தவன் பின், “அவங்க பிள்ளையா ஏன் பிறந்தேன்னு இருக்கு டி.” என்று சிறுபிள்ளை போல் அழ, அவளும் அழுதாள்.

 

    சட்டென்று தன்னை தேற்றிக் கொண்டவள், “இங்க பாரு அழாத டா. உனக்கு எப்பவும் நான் இருக்கேன்.” என்று தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அவன் ஏங்கிய அன்பையும் அரவணைப்பையும் குறைவில்லாது தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு தர வேண்டுமென்று மனதுள் உறுதி பூண்டாள்.

 

     அவன் அவளை இறுக்கி அணைத்தான். அவன் அவளை அணைக்கும் விதத்திலேயே எவ்வளவு வலியோடு இருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது. எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு அணைத்துக் கொள்ளட்டுமென்று அவள் அமைதியாக அவனது தலைக் கோதினாள்.

 

    மெல்ல மெல்ல அவனது அணைப்பின் இறுக்கம் தளர்ந்தது. உடலில் சக்தி இழந்தவன் போன்று அவள் மீது சாய்ந்தான். அவனை தாங்கிக் கொண்டவள் மெல்ல கட்டிலில் சாய்த்து அமர வைத்து அருகே அமர்ந்து ஆறுதலாக அவனது கையைப் பற்றிக் கொண்டாள். அவன் விழி மூடிக் கொண்டான்.

 

     நேரம் கரைந்துக் கொண்டிருந்தது. அந்த அறையில் நிலவிய மௌனம் கனம் கூடியதாக இருந்தது. அழகிக்கு அவனை பார்க்க பார்க்க அழுகையாக வந்தது எங்கே தான் அழுது அவனை மீண்டும் அழ வைத்து விடுவோமோ என்று அலைப்புறுதலோடு அமர்ந்திருந்தாள். 

 

     மௌனத்தை கலைக்கும் விதமாய் அறையின் கதவு தட்டப்பட, அவள் அவனை பார்த்தாள். அவன் விழி திறக்காதிருந்தான். அவள் எழுந்துச் சென்று கதவைத் திறந்தாள்.

 

      மிருதுளா நின்றிருந்தாள். அவளை கண்டதும் அணை உடைத்த வெள்ளமாய் அவளை கட்டிக்கொண்டு சத்தமிடாது அழுதாள். மிருதுளா அவளின் அழுகையில் பயந்து விட்டாள். அவள் என்னவானதென்று அவளை உலுக்க, அழகி ஒன்றுவிடாது கதிர் கூறிய அனைத்தையும் கூறினாள். 

 

    “ச்சீ. எங்க அம்மானு சொல்றதுக்கே வெக்கமா இருக்கு.” என்று கடுப்பான மிருதுளா, “சரி நீ அழாத. கதிர நினைச்சு கவலைப்படாத. உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்ல அவன் நாளைக்கே சரியாகி அடுத்த வேலைய பார்க்க போயிடுவான். நீயும் இது எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. அவன் எடுத்த முடிவு சரிதான். அவன் என்ன பண்ணாலும் அவன்கூட நாம நிப்போம். இனிமே கதிருக்கு நீ தான் உனக்கு கதிர் தான். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி சந்தோஷமா வாழலாம்னு மட்டும் பாருங்க.” என்று மிருதுளா அவளுக்கு சமாதானம் உரைத்தாளா இல்லை தனக்கு தானே கூறிக்கொண்டாளா என்பதை அவள்தான் அறிவாள்.

 

      “அண்ணி அதிரன் என்ன பண்றான்?”

 

     “அவன பத்தி கவலைப்படாத. அவனை நான் பார்த்துக்குறேன். அவன் சாப்பிட்டுட்டு கவிக்கூட விளையாடுறான். நேரமாகிடுச்சேனு உங்க ரெண்டு பேரையும் சாப்பிட கூப்பிட தான் வந்தேன்.” என்று மிருதுளா கூறியதும் அழகி திரும்பி அறைக்குள் கவலையோடு பார்த்தாள்.

 

   “அவன் வர மாட்டான். நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன். அவனுக்கும் குடுத்துட்டு நீயும் சாப்பிடு.” என்று மிருதுளா திரும்பியபொழுது தான் கவனித்தாள்.

 

    “என்ன அழகி இது? இப்படி சிவந்து இருக்கு?” என்று சேலையை விலக்கி இடையை தொட, அழகி “ஸ்ஸ்” என்று வலியில் முகம் சுருக்கினாள்.

 

     “இப்படியா கட்டிப்பிடிப்பான்? முரட்டு பைய. சரி நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்.” என்றபடி மிருதுளா திரும்பி நடந்தாள்.

 

    “அச்சோ இவன் ஏன் இப்படி இருக்கானோ? பாவம் அழகி! அவர விட்டு இவன் கிட்ட பேச சொல்லணும்.” என்று முணுமுணுத்தபடியே அவள் கீழே செல்ல, கதிரவன் காதில் விழுந்துவிட்டதோ என்று எட்டி பார்த்த அழகி, அவன் இன்னும் கண்மூடியே அமர்ந்திருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டாள். பின் சேலையை இழுத்து சொருகி மறைத்தாள்.

    

     சில நிமிடங்கள் அவளை காக்க வைத்த மிருதுளா உணவு தட்டோடு வர, அழகி அதனை வாங்கிக் கொண்டாள்.

 

    “இந்தா இதை போட்டுக்கோ. எரிச்சல் குறையும்.” என்று மிருதுளா அவளது கையில் ஒரு களிம்பை திணித்துவிட்டு செல்ல, அழகி மெலிதாக இதழ் வளைத்துவிட்டு அறைக்குள் வந்தாள்.

 

    “கதிர்.”, அவன் மெல்ல கண் திறந்து அவளை பார்த்தான்.

 

   அவள் உணவு தட்டைப் பார்க்க, ஏதும் பேசாது எழுந்துச் சென்று முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்தான். அவள் அவனுக்கு ஊட்ட, மறுக்காது உண்டான். பின் அவளும் உண்டு கைக்கழுவி வரும் வரை காத்திருந்தான்.

 

    “சரி கதிர். எதையும் யோசிக்காம படுத்து தூங்கு. நீ தூங்குற வரை நான் இங்க இருக்கேன்.” என்று மென்னகைப் புரிந்தவளை அழுத்தமாகப் பார்த்தான்.

 

   அவள் புருவம் சுருக்க, வேகமாக அவளை நெருங்கி அவளது சேலையை விளக்கி சிவந்திருந்த இடையை கண்டான்.

 

    “என்ன பண்ற கதிர்?” என அவள் பதறி விலக முயல, அவனோ அவள் விலகா வண்ணம் அவளது கைகளை தனது ஒரு கையில் அடக்கி மெல்ல மறுகையால் அவளது இடையை தொட, அவள் வலியில் முகம் சுருக்கினாள்.

 

    நிமிர்ந்து அவளது முகத்தை பார்த்தவன் முந்தியில் அவள் மறைத்து வைத்திருந்த களிம்பை எடுத்தான்.

 

    அவன் என்ன செய்ய போகிறான் என்பதை உணர்ந்த அழகி, “இல்லை கதிர் நானே போட்டுக்குறேன்.” என்று தயங்கியபடி கூறினாள். 

 

    அவன் இப்படி தானும் மிருதுளாவும் பேசியதை கேட்டிருப்பான் அவள் நினைக்கவில்லை. அவ்வளவு நெருக்கமாக அவன் நிற்பதும் அவளது சேலையை விலக்கியதுமே அவளுக்கு மிகுந்த கூச்சத்தை தந்திருக்க, அடுத்து அவன் செய்ய முனையும் காரியம் வெட்கத்தையும் பெரும் தயக்கத்தையும் தந்தது.

 

    “ரெண்டு வாரத்துல நமக்கு கல்யாணம் ஞாபகமிருக்கா?” என்ற அவனது கேள்வியில் அவள் திருதிருவென விழிக்க,

 

    “திரும்பு. வலிச்சா சொல்லு டி.” என்று அழுத்தமாக கூறிவிட்டு அவளது இடுப்பைச் சுற்றிலும் சிவந்திருந்த இடங்களில் களிம்பை மிகமிருதுவாக பூசினான்.

 

    அவனது தொடுகையில் அவள் நெளிய, “ஆடாம நில்லு டி. மருந்து தான் போட்றேன்.” என்றவன் திட்டவும் தான் அசையாது நின்றாள்.

 

     மருந்தை முழுதாய் இட்டுவிட்டு அவனே அவளது சேலையை சரி செய்து விட, அவள் அவனையே இமைக்காதுப் பார்த்திருந்தாள்.

 

    “ரொம்ப சேலைய இழுத்து சொருகாத. துணி பட்டா இன்னும் எரியும்.” என்றவன் அவளை மென்மையாக அணைக்க, அவளும் கட்டிக் கொண்டாள்.

 

    சில நிமிடங்களில் அவன் விலகி, “சரி போய் தூங்கு.” என்றான்.

 

   “நீ தூங்கு நான் போறேன்.” என்றவளை அயர்ந்து போய் பார்த்தான்.

 

   “நீ போடி நான் தூங்குறேன்.”

 

   “ம்ஹூம் நீ தூங்கு. இல்ல உன்னை தூங்க வச்சுட்டு நான் போறேன். வா இங்க.” என்று அவனை பேச விடாது மெத்தையில் அமர்ந்து அவனை கை நீட்டி அழைத்தாள்.

 

   அவனும் தாயை கண்ட சேயாய் ஓடிச்சென்று அவளது மடியில் படுத்துக்கொள்ள, அவளது இதற்கடையோரம் மென்னகை அரும்பியது.

 

   அவள் எதுவும் பேசாது தலைக் கோதிவிட, உள்ளுக்குள் இரணப்பட்டிருந்த இதயத்திற்கு இதமாய் அந்த வருடல் இருந்தது போல் உணர்ந்தான். அவனது மனம் ஒருநிலையில் இல்லாது அலைப்புற்றிருந்தாலும் மிக மெதுவாக அமைதியுறுவதை கவனித்தான். மெல்ல கண் மூடினான். சிறிது நேரத்திலேயே உறங்கியும் போனான்.

 

    மெல்ல அவனது தலையை தலையணைக்கு இடம் மாற்றியவள் கண்கலங்கி அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு விளக்கை அணைத்து வெளியே வந்து கதவை சாற்றினாள். பின் தன் கண்களை துடைத்துக் கொண்டு தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.

    

 

   

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்