Loading

“உங்கப் பொண்ணோட முகத்தைப் பாருங்க” என்று தன் மாமியாரிடம் கூறினான் அற்புதன்.

 

அதைக் கேட்ட மீனாவோ, தன்னுடைய மகளைப் பார்க்க, அவளது கூம்பிப் போன முகம் காணக் கிடைத்தது.

 

உடனே அவளருகே சென்று,”நம் இப்படி முகத்தை வச்சிட்டு இருந்தால் நாங்க எப்படி கிளம்பறது? அடிக்கடி வந்துட்டுப் போவோம்ன்னு சொன்னேன்ல? சிரிச்ச முகமா எங்களை வழியனுப்பி வைடா ம்மா” என்று அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் அவளது அன்னை.

 

தானும் தமக்கையிடம் சென்று அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டு,”சிரி அக்கா. ப்ளீஸ்!” என்றாள் யாதவி.

 

அவர்கள் இருவருமாக சேர்ந்து எப்படியோ யக்ஷித்ராவைப் புன்னகைக்க வைத்து விட்டார்கள்.

 

“சரிம்மா. யாது! பத்திரமாகப் போயிட்டு வாங்க” என்று அவள் கூறியதும் தான், இவர்களுக்கும் முகம் தெளிந்தது.

 

அவர்களை வீட்டிற்கு அழைத்துப் போக ஆட்டோ வந்து விட்டது.

 

“கொஞ்சம் இருங்க” என்று அவர்கள் கொண்டு வந்தப் பாத்திரத்திலேயே தாங்கள் செய்த பலகாரங்களை வைத்துக் கொடுத்தார் கீரவாஹினி.

 

அவர்கள் அன்பாகத் தருவதை வேண்டாமென்று மறுத்துச் சொல்லக் கூடாது என்பதால், அதைப் பெற்றுக் கொண்டு,”நாங்கப் போயிட்டு வர்றோம்” என்று கூறி விட்டு வாயிலில் நின்றிருந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள் மீனா மற்றும் யாதவி.

 

அவர்களுக்குக் கையசைத்து விட்டு அனைவரும் வீட்டினுள் பிரவேசித்தனர்.

 

“அவங்க இப்படியே வந்து போக இருக்கனும்” என்று வெளிப்படையாகவே சொல்லி வேண்டிக் கொண்டார் அகத்தினியன்.

 

அதன் பின்னர், தங்கள் அறைக்கு வந்த யக்ஷித்ராவோ,”அம்மாவையும், யாதுவையும் பார்த்ததும் எனக்கு என்னோட கடந்த காலம் ஞாபகம் வந்துருச்சு ங்க” என்று கணவனிடம் சொன்னாள்.

 

“எங்கிட்டே ஷேர் பண்ற விஷயமாக இருந்தால் கண்டிப்பாக சொல்லும்மா” என்று அவளிடம் கனிவுடன் கூறினான் அற்புதன்.

 

அவனிடம் மீண்டும் தன் கதையைச் சொல்லத் தயாரானாள் யக்ஷித்ரா.

 

தனது மனைவியும், மகள்களும் தன்னிடம் தேவை இருப்பின் மட்டுமே பேசுகின்றார்கள் என்பதைப் புரிந்து கொண்டார் கிரிவாசன்.

 

தன்னிடம் வாக்குவாதம் செய்யும் துணிவு இருக்கும் இளைய மகள் யாதவி கூட இப்பொழுதெல்லாம் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை அவர் இப்போது தான் உணரத் தொடங்கினார்.

 

இவர்கள் மூவரும் இவ்வாறு இருப்பதற்கு என்னக் காரணம்? என்று அறியாமல் குழப்பத்திற்கு ஆளாகிய கிரிவாசனோ,”மீனா!” எனத் தன் மனைவியை உரக்க அழைத்தார்.

 

சமையல் அறையில் வேலையாக இருந்தவரோ, கணவனுடைய அழைப்பில் அவரிடம் சென்று,“என்னங்க?” என்றார் மீனா.

 

“இந்த வீட்டில் என்ன தான் நடக்குது?” என்று அவரிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பினார் கிரிவாசன்.

 

“புரியலை ங்க” 

 

“இந்த வீட்டில் உன்னோட இரண்டு பொண்ணுங்களும் வர வர இருக்கிற இடமே தெரியாமல் இருக்காங்க! என்ன விஷயம்?” என்கவும்,

 

“இது ஒன்னும் புதுசு இல்லையே ங்க? அவங்க எப்பவுமே அப்படித் தானே இருப்பாங்க?” என்று தன் கணவனிடம் வினவினார் மீனா.

 

“ஆமாம். ஆனால் இப்போ எல்லாம் ரொம்ப அமைதியாக இருக்கிறா மாதிரி இருக்கு. உன்னோட சின்ன மகளோட சத்தம் கூடக் கேட்க மாட்டேங்குது!” என்றார் கிரிவாசன்.

 

அதைக் கேட்டதும், தங்கள் அறையில் படித்துக் கொண்டிருந்த யக்ஷித்ராவும், யாதவியும் திடுக்கிட்டுப் போயினர்.

 

அவர் தங்களை எப்போது வேண்டுமானாலும் அழைத்து என்னக் குறை என்று கேட்டு விடுவாரோ? என்ற பயம் அவர்களைப் பீடித்துக் கொண்டது.

 

தாயின் பதிலைக் கேட்கக் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டார்கள் சகோதரிகள் இருவரும்.

 

“அவங்க ரெண்டு பேரும் எக்ஸாமுக்குப் படிச்சிட்டு இருக்காங்க” என்று அவரிடம் கூறினார் மீனா.

 

இந்தக் காரணத்தைக் கூறினால் மட்டும் தான், அவர் அமைதியாக இருப்பார் என்பதை முன்னரே அறிந்திருந்ததால் தான், அவருடைய வழியிலேயே கிரிவாசனுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறார் அவரது மனைவி.

 

அவருடைய இந்தப் பதிலானது, யக்ஷித்ரா மற்றும் யாதவியையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது எனலாம். 

 

தங்கள் அன்னையே இந்த விஷயத்தைச் சமாளித்துக் கொள்வார் என்ற தெளிவுடன் அக்காவும், தங்கையும் அவர்களது பாடத்தைப் படிக்கத் தொடங்கினார்கள்.

 

ஆனால், அவர்களும், அவர்களது தாயாரும் எண்ணியதைப் போல, அந்த விஷயத்தைக் கிரிவாசன் எளிதாக விடவில்லை.

 

“இன்னும் கொஞ்ச நாளில் பப்ளிக் எக்ஸாம் வரப் போகுது! யக்ஷித்ராவை நல்லா படிக்கச் சொல்லு!” என்றவரோ,

 

“எக்ஸாமுக்குப் பத்து நாளைக்கு முன்னாடி ஒரு டெஸ்ட் வைப்பேன். அதுக்குத் தயார் பண்ணச் சொல்லு!” என்று தன் மனைவிக்குக் கட்டளை பிறப்பித்தார் கிரிவாசன்.

 

“எப்போ பார்த்தாலும் இப்படி டெஸ்ட் ஆக வச்சிட்டு இருந்தால் எப்படி ங்க? அவளுக்குச் சலிச்சுப் போயிரும்! அதே மாதிரி மனசு விட்டுப் போயிடாதா?” என அவரிடம் நிதானமாக கேட்டார் மீனா‌.

 

அவரது இந்தக் கேள்விகள் யாவும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகத் தான் இருந்தது.

 

ஆனாலும்,” அவ பன்னிரெண்டாம் கிளாஸ் படிக்கிற பொண்ணு! அப்படியிருக்கும் போது, இப்படியெல்லாம் டெஸ்ட் வச்சா தானே நல்ல மார்க் எடுப்பா?” என்றார் அவரது கணவர்.

 

“அவளோட மனசு, உடம்பை எல்லாம் வருத்திக்கிட்டு அவ்வளவு நல்ல மார்க் எடுக்கனும்ன்னு அவசியம் இல்லைங்க!” என்று தடாலடியாக உரைத்தார் மீனா.

 

அதைக் கேட்டதும், அவருக்கு முனுக்கென்று கோபம் வந்து விட,”என்னப் பேசுற நீ?” என்று தன் மனைவியிடம் கர்ஜிக்கவும்,

 

“இப்படியே சொல்லி சொல்லியே தான் அவ கொஞ்ச நாளைக்கு முன்னாடி மயக்கம் போட்டு விழுந்தா!” என்று தன்னையும் மீறிக் கத்தி விட்டார் மீனா.

 

அதைக் கேட்டதும் விதிர்விதிர்த்துப் போன கிரிவாசனோ,“என்னது?” என்று அவரிடம் புரியாமல் வினவி விட்டு,”யக்ஷி!” என்று மகளை அழைத்தார் கிரிவாசன்.

 

“என்னை அப்பா கூப்பிட்றார். நான் போயிட்டு வர்றேன். அப்போ தான், நான் அம்மாவுக்கும் சாதகமாகப் பேச முடியும்” என்று தங்கையிடம் கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறினாள் மூத்தவள்.

 

“நீயே உன் மனசில் இருக்கிறதை அவர்கிட்ட சொல்லிரு!” என மகளிடம் கூறி விட்டு ஒதுங்கிக் கொண்டார் அவளது அன்னை.

 

அந்த சம்பாஷணைகள் நிகழும் நேரத்தில் தாய்க்கும், தமக்கைக்கும் தன்னாலான ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டுத், தான் இருந்த அறையில் இருந்து வெளிப்பட்டாள் யாதவி.

 

அவள் தன்னருகே வந்து நின்றதும், ஒரு புது தெம்பு உருவானதைப் போல உணர்ந்ததாலும், இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதாலும், தன் தந்தையைப் பார்த்து தைரியமாகப் பேச ஆரம்பித்தாள் யக்ஷித்ரா.

 

மூவரும் ஒன்றாக சேர்ந்து நின்று கொண்டுத் தன்னை மட்டும் தனிமைப்படுத்தி விட்டதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தாலும், தன் மேல் என்னக் குற்றச்சாட்டை வைக்கப் போகிறார்கள்? என்பதைக் கேட்கத் தயாராக இருந்தவரைக் கண்டு,

 

“அப்பா!” என்று தன் மூத்த மகள் ஆரம்பித்ததும், தன்னுடைய விழிகளையும், செவிகளையும் கூர்மையாக்கிக் கொண்டார் கிரிவாசன்.

 

“நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மயக்கம் போட்டு விழுந்ததுக்குக் காரணம் என்னத் தெரியுமா?” என்று அவரது செயல்கள் தன்னை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதையெல்லாம் ஒன்று விடாமல் அவரிடம் ஒப்புவித்து முடித்தாள் யக்ஷித்ரா.

 

அவற்றையெல்லாம் கேட்டதற்குப் பிறகும் கூட, இதில் தன்னுடைய தவறு என்ன என்று புரியாமல் குழம்பிப் போய் அவளை ஏறிட்டுப் பார்த்தவரோ,“நான் நீங்கப் பண்ற எல்லா விஷயத்திலேயும் தலையிட்டுக் கண்டிப்பு காட்டலையே? படிப்பு விஷயத்தில் மட்டும் தான் கண்டிப்பு காட்டுனேன்! அதில் என்னத் தப்பு இருக்கு?” என்று அவளிடம் வினவினார் அவளது தந்தை.

 

“நாங்கப் படிப்பில் முதல்ல வந்துட்டு ஃபிஸிக்கல் அண்ட் மென்டல் ஹெல்த்தில் ஃபெயில் ஆனா என்னப் பண்றது ப்பா?” என்று இப்போது கேள்வியை எழுப்புவது தன்னுடைய முறை என்பதைக் காட்டிக் கொண்டாள் யாதவி.

 

இவ்விருவரையும் பேச விட்டு வேடிக்கை பார்க்கும் மனைவியைக் கண்களாலேயே எரித்துக் கொண்டிருந்தார் கிரிவாசன்.

 

“அம்மாவை ஏன் முறைக்கிறீங்க? யாது கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்க ப்பா” என்று அவரிடம் சொன்னாள் யக்ஷித்ரா.

 

“உங்க ஃபிஸிக்கல் அண்ட் மென்டல் ஹெல்த்துக்கு என்னக் குறை வந்துச்சு?” என்று கேட்டவுடன்,

 

“மன‌ அழுத்தத்தால் தான் அக்கா மயக்கமே போட்டு விழுந்தா! அப்போ அது பாதிச்சிருக்குன்னுத் தானே அர்த்தம்?” என்றாள் யாதவி.

 

“நான் உங்களைப் படிக்கச் சொல்றதும், டெஸ்ட் வைக்கிறதும் தான் அதுக்குக் காரணமா? அப்படின்னா, நீ மயக்கம் போட்டு விழுந்ததுக்கு அப்புறமும் டெஸ்ட் வச்சேனே? அதை ஏன் எழுதுன? எழுத முடியாதுன்னு சொல்லி இருக்கலாமே?” என்று மூத்தவளிடம் வினவவும்,

 

“இந்தப் பப்ளிக் எக்ஸாமை எழுதி முடிக்கிற வரைக்கும் அமைதியாக இருப்போம்ன்னு நினைச்சுத் தான் உங்ககிட்ட எதுவும் சொல்லி நியாயம் கேட்காமல் இருந்தோம். ஆனால், இப்போ நீங்களே எல்லாத்தையும் கேட்ட அப்பறம் நாங்க எதுக்கு அமைதியாக இருக்கனும்ன்னு தான் பதில் சொல்லிட்டு இருக்கோம்!” என்று தந்தையிடம் தீர்க்கமாக உரைத்தாள் யக்ஷித்ரா.

 

“ஓஹ்ஹோ! அது வரைக்கும் எதுக்கு வெயிட் பண்ணனும்? இப்போவே எல்லாத்தையும் பேசி முடிச்சிடலாம். அதுக்கப்புறம் நீங்க நிம்மதியாக இருங்க” என்று என்று தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களைப் பார்த்துக் கூறினார் கிரிவாசன்.

 

“சரிப்பா. நான் அது வரைக்கும் காத்திருக்கலை. நீங்க இப்படியே தான் செஞ்சிட்டு இருக்கப் போறீங்களா? எங்களோட மனசைப் புரிஞ்சிக்கவே மாட்டீங்களா?” என்றாள் அவரது இளைய மகள்.

 

“என்னப் புரிஞ்சுக்கனும்? நான் உங்களுக்கு எதுவுமே செய்யாமல் உங்களைக் கொடுமைப்படுத்திட்டு இருக்கிறா மாதிரி பேசுறீங்களே! படிப்பு விஷயத்தில் இப்படி கண்டிப்பாக இருந்தால் தான் உங்களோட எதிர்காலம் நல்லா இருக்கும்!” என்று தன் பக்க நியாயத்தைக் கூறி வாதாடியவரிடம்,

 

“நீங்க எங்களுக்குச் சாப்பாடு போடாமல், எதுவும் வாங்கிக் கொடுக்காமல் கொடுமைப்படுத்துறீங்கன்னு நாங்க சொல்லவே இல்லை ப்பா! ஆனால், நீங்க எங்ககிட்ட படிப்பு விஷயத்தில் காட்ற கண்டிப்பைக் கொஞ்சம் குறைச்சுக்கோங்கன்னு தான் சொல்றோம்!” என்று அவருக்குப் பதிலளித்தாள் யக்ஷித்ரா.

 

“அப்போ நீங்கப் படிப்பில் தத்தியாக இருந்தால் பரவாயில்லையா? ஒன்னும் பிரச்சினை இல்லையா?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டவரோ,”உனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை போலவே?” என்று சொல்லித் தன்னுடைய மனைவியிடமும் அதைப் பற்றிய விளக்கத்தை எதிர்பார்த்தார் கிரிவாசன்.

 

அதற்குப் பதிலளிக்க முன் வந்த தன் மகள்களைச் சைகையாலேயே தடுத்து நிறுத்தி விட்டு,”அவங்க ஏற்கனவே நல்லா தான் படிக்கிறாங்க! ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கிறாங்க! அதுக்கு மேலே படிச்சு என்னப் பண்ணப் போறாங்க?” என்று அவரிடம் வினவினார் மீனா.

 

“ம்ஹ்ம்! உங்க யாருக்குமே படிப்போட அருமை தெரியலைன்றது இப்போ தான் எனக்குப் புரியுது!” என்றதும்,

 

“அதோட அருமை தெரிஞ்சதால் தான் நாங்க டியூஷன் போறோம்! நீங்க வச்ச டெஸ்ட்ஸ்ஸை எல்லாம் எழுதிட்டு இருந்தோம் ப்பா!” என்று அவரிடம் விளக்கிக் கூறினாள் யாதவி.

 

“அதைப் பண்ணாதீங்கன்னு தானே இப்போ சண்டை போட்டுட்டு இருக்கீங்க? அப்பறம் என்ன அருமை தெரியுதுன்னுப் பொய் சொல்லிட்டு இருக்கீங்க?” என்று தன் இளைய மகளிடம் கத்தினார் அவளது தந்தை.

 

“அப்படியே இருந்துட்டு போகட்டும். எங்களால் இதையெல்லாம் இனிமேல் சகிச்சிக்கிட்டு இருக்க முடியாது ப்பா!” என்று தன்னுடைய முடிவை அவரிடம் உறுதியாக கூறி விட்டாள் யக்ஷித்ரா.

 

அவளது தீர்க்கமான வார்த்தைகளைக் கேட்டப் பிற்பாடு, தன் மனைவி மற்றும் மகள்களை மௌனமாக ஏறெடுத்துப் பார்த்து விட்டு,”சரி. இதுக்கப்புறம் படிப்புன்னு இல்லை, நான் உங்களை எந்த விஷயத்திலேயும் கண்டிக்கப் போறது கிடையாது! டெஸ்ட்டும் வைக்க மாட்டேன்! அவங்கவங்க இஷ்டத்துக்கு இருந்துக்கோங்க! நான் உங்களுக்குச் செய்ற நியாயமான செலவுகள், விஷயங்களைத் தவிர மத்ததுக்கு என்னை எதிர்பார்க்காதீங்க!” என்று அவர்களிடம் உரைத்து விட்டு உள்ளறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டார் கிரிவாசன்.

 

“என்ன இப்படி சொல்லிட்டுப் போறார்! இதுக்கு என்ன அர்த்தம்?” என்று தன் மகள்களிடம் குழப்பத்துடன் வினவினார் மீனா.

 

“அவர் இனிமேல் நமக்கு எந்தவித சலுகைகளையும் கொடுக்க மாட்டாராம்! அத்தியாவசியத்தைத் தவிர வேற எதையும் நமக்குச் செய்ய மாட்டேன்னுச் சொல்லிட்டுப் போறார் ம்மா!” என்று அவருக்கு விளக்கம் அளித்தாள் யாதவி.

 

“இதுக்கு முன்னாடியும் அப்படித் தானே இருந்தார்? இப்போ என்னப் புதுசா சொல்றா மாதிரி பேசிட்டுப் போயிருக்கார்?” என்றார் அவளது அன்னை.

 

“விடுங்க ம்மா. நாம அவர்கிட்ட இதையெல்லாம் சொல்லனும்ன்னு தானே இவ்வளவு நாளாக வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இப்போ சொல்லியாச்சுல்ல? அவர் பொறுமையாக உட்கார்ந்து எல்லாத்தையும் யோசிச்சுப் பார்க்கட்டும்” என்று சொல்லி விட்டு யக்ஷித்ராவும்,யாதவியும் தங்கள் அறைக்குப் போனார்கள்.

 

அன்றைய தினத்தில் இருந்து, தன் மகள்களிடம் மட்டுமில்லாமல் மனைவியிடமும் கூடப் பேச எத்தனிக்கவில்லை கிரிவாசன்.

 

யக்ஷித்ரா மற்றும் யாதவியிடம் அவர்களது படிப்பைப் பற்றிக் கூட எந்த விவரங்களையும் கேட்டுக் கொள்ளவில்லை அவர்.

 

தன்னுடைய வேலையில் மட்டும் தான் கவனத்தைச் செலுத்தியவரோ, தன் குடும்பத்திற்கான அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்தார் அந்தக் குடும்பத் தலைவர். 

 

                 – தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்