Loading

 

துருவ் அடித்ததில் “கொஞ்சமாவது, லவரோட அண்ணன்னு மரியாதை இருக்கா” என்று விது முறைக்க,

துருவ் கை முஷ்டியை சுற்றிக்கொண்டு, “என்ன மரியாதை வேணுமா?” என்று நக்கலாக கேட்க, அவன் அங்கிருந்து ஓடியே விட்டான்..

துருவ் உத்ராவிடம் சஞ்சுவை வெளியில் கூட்டிக்கொண்டு போக சொல்லிவிட்டு, அவனை தாக்க வந்தவர்களை தாக்கினான்.

அந்த நேரத்தில், காஞ்சனா, ஒரு துப்பாக்கியை எடுத்து, உத்ராவை நோக்கி குறிவைத்து, அவள் கண்ணிமைக்கும் நேரத்தில், வெடுக்கென சஞ்சுவை அவள் கையில் வாங்கி, அவன் நெற்றியில் வைத்து அழுத்தினாள்.

அனைவரும் அதிர்ந்து பார்க்க, துருவ் அவளை நோக்கி கால் எடுத்து வைக்க, அவள் “இன்னொரு அடி எடுத்து வச்ச, இவன் மூளை செதறிடும்” என்று மிரட்டியதில் செய்வதறியாமல் நின்றனர்.

அவள் “உங்க எல்லாரையும் இன்னைக்கு சுட்டு தள்ளப்போறேன்” என்று நாராசமாக சிரித்து சஞ்சுவின் நெற்றியில் ட்ரிக்கரை அழுத்தப்போக, அப்பொழுது, பின்னிருந்து அவளை கத்தியால் யாரோ குத்தியது போல் இருந்தது.

துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, சிவந்த கண்களுடன் அவள் திரும்ப, அங்கு ரிஷி நிற்பதை பார்த்து அதிர்ந்து விட்டாள் காஞ்சனா.

காஞ்சனாவை பற்றி எப்படியாவது ரிஷிக்கு புரியவைக்க வேண்டும் என்று, துருவ் தான் அவன் ஆட்களை விட்டு, ரிஷியை தூக்கி வரச்சொன்னான்.

ரிஷி, முதலில் திமிறினான். பின், உள்ளே தான் சஞ்சுவும் இருக்கிறான் என்று சொல்லி ஒருவாறாக, வெளியில் இருந்த ஆட்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு, ரிஷியையும் ஒரு இடத்தில் நிறுத்தி இருந்தனர்..

அப்பொழுது அவன் காஞ்சனா பேசிய அனைத்தையும் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். தான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று நினைத்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.

வெகுநேரம் அப்படியே பிரம்மை பிடித்தது போல் இருந்தவன், சஞ்சுவை அவள் சுட போவது தெரிந்ததும், அங்கிருந்த கத்தியை எடுத்து குத்தி விட்டான்.

காஞ்சனா நீயா இப்படி செய்தாய் என்று அதிர்ந்து நோக்க, அவன் “அம்மா மாதிரி நினைச்சேனேடி உன்னை. நீ என்ன சொன்னாலும், என்ன செஞ்சாலும் அது என் நல்லதுக்காகத்தான்னு நினச்சு, என் தங்கச்சி, என் குடும்பம், என் நண்பன் எல்லாரையும் எவ்ளோ கஷ்டப்படுத்துனேன்..ஆனால் நீ” என்று பல்லைக் கடித்து கொண்டு கோபத்துடன் கூறியவன், மீண்டும் அவளை குத்தினான்.

அதில் அவள் மொத்தமாய் சரிந்து விழுந்து தன் இத்தனை கால ஆட்டத்தையும், மூச்சையும் நிறுத்திக் கொண்டாள்.

ரிஷி வந்ததை உத்ரா அறியவில்லை… அவன் காஞ்சனா பற்றி தெரிந்து கொண்டது அவளுக்கு மகிழ்ச்சியே. ஆனால் இப்படி அவளை கொலை செய்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அந்த நேரம் சரியாக, அர்ஜுனும் மீராவும் போலீசுடன் அங்கு விரைய, அவர்களும் நடந்ததை கண்டு அதிர்ந்தனர். ரிஷி கையில் கத்தியை பார்த்து விட்டு, போலீசார் அவனை கைது செய்தனர்.

துருவ் அவசரமாக, அவனை காப்பாற்ற, “அவன் பையனை காப்பாத்த தான் இப்படி பண்ணுனான்” சொல்லிவிட்டு, வக்கீலுக்கு போன் செய்ய போக, ரிஷி அவனைத் தடுத்தான்.

“நான் ஜெயிலுக்கு போறேன் நண்பா. நான் தப்பு பண்ணும்போதெல்லாம் என்னை காப்பாத்தி எனக்காக நீ நிறைய பண்ணிருக்க… அதுனால உன் பேரும் சேர்ந்தே கெட்டுப்போயிருக்கு. இப்பவும் என்னை காப்பாத்த தான் நினைக்கிற நண்பா. ஆனால் உன் அன்புக்கும், நட்புக்கும் எனக்கு தகுதியே இல்லடா” என்று கண் கலங்க கூற, துருவ் அவனை அணைத்து கொண்டான்.

“லூசு மாதிரி பேசாத நண்பா… நீ என்ன பண்ணாலும் என்னைக்கும் என் நண்பன் தாண்டா” என்று கமறிய குரலில் கூறியவனுக்கு தெரியும், அவன் பெற்றோரை கொலை செய்ததற்கும், உத்ராவை விபத்து ஏற்படுத்தியதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.
 
ரிஷி, அவனைக் கட்டிக்கொண்டு “எனக்கு இது போதும்டா…” என்றவன், உத்ராவைப் பார்க்க, அவர்களின் அன்பில் உருகி, ரிஷியை கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தவள் அருகில் சென்றவன்,

“சாரி உதி… நான் உனக்கு என்னைக்குமே நல்ல அண்ணனா இருந்ததே இல்லைல. ஆனால் இப்போ கூட நீ என் பையன் எப்படியும் போகட்டும்ன்னு நினைக்காம, உன் அண்ணன் பையன்னு அவனை காப்பாத்தத்தான் நினைக்கிற. இப்போகூட, ஒரு நல்ல அண்ணனா உன்கூட இருக்க முடியல…” என்று சொல்ல அவள் வெடித்து அழுது “அண்ணா” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.  

மற்றவர்களும், இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது? யாருக்கு ஆறுதல் சொல்வது? என்று புரியாமல் நின்று கொண்டிருந்தனர்.

உத்ரா, “இவள்லாம் சாக வேண்டியவைதான் அண்ணா. இவளை கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போகணுமா. நான் உன்னை எப்படியும் வெளிய எடுத்துருவேன் அப்பறம் நீ என்கூடையே இரு.” என்று சொல்ல, அவன் தீர்மானமாய் மறுத்து விட்ட்டான்.

“இப்போகூட நீங்க என் மேல இவ்ளோ அன்பு வச்சுருக்குறதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உதி. இந்த ஒரு சந்தோசம் போதும் என் ஆயுசு முழுக்க, இனிமே ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனா கூட உங்களை பார்க்க நான் வரமாட்டேன். என்னை நம்புன பொண்ணுக்கு நான் கொடுத்த தண்டனைக்கு எனக்கு நானே குடுத்துக்குற தண்டனை இது… தயவு செஞ்சு என்னை புருஞ்சுக்கோங்க” என்று உத்ராவிடமும், துருவிடமும் கெஞ்சியவன், சஞ்சுவின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு,

அவனிடம், “எங்க ரெண்டு பேருக்குமே எங்க அம்மா கூட வளர குடுத்து வைக்கல. இப்போ உனக்கும் நான் அந்த சந்தோசத்தை தரல என்னை மன்னிச்சுருடா.” என்று விட்டு அவனை உத்ராவிடம் கொடுத்து, “என் அத்தை உன் அத்தையை வளர்த்த மாதிரி உன் அத்தை உன்னை வளர்ப்பா..  கண்டிப்பா நீ என்னை மாதிரி இருக்க மாட்ட” என்று அவன் தலையை வருடி சொல்லிவிட்டு, கிளம்ப போனவன்,  திரும்பி,

துருவிடம், “வேந்தா, என் தங்கச்சியை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ. நீங்க என்னை பார்க்கலைனாலும் நீங்க சந்தோசமா இருக்கிறதை நான் எங்கயாவது இருந்து பார்த்துகிட்டு தான் இருப்பேன்” என்று சொல்லிவிட்டு, மற்றவர்களை பார்க்க, அவனுக்கு சிறு வயது நியாபகம் தான் வந்தது.

அதிலும் அர்ஜுனும் அவனும் ரொம்ப க்ளோஸ். ஆனால் நாளடைவில் அவர்கள் உறவில் விரிசல் வந்துவிட்டது.

இப்போது அர்ஜுனையும் அஜய் விதுனையும் கட்டி அணைத்து மன்னிப்பு கேட்டவன், போலீசாருடன் சென்று விட்டான்.

எல்லாருமே ஒரு மாதிரியான உணர்ச்சியின் பிடியில் இருந்தனர். இந்த கலவரத்தில் சைதன்யா அங்கிருந்து தப்பித்து வெளியில் போனதை யாரும் கவனிக்கவே இல்லை.

மீரா, சஞ்சுவைத்
தூக்கி கொண்டு, அவனை மீண்டும் கண்ட சந்தோஷத்தில் அழுது கரைந்தாள்.

பின், அங்கிருந்து, அனைவரும் கிளம்பி வீட்டிற்கு சென்று நடந்ததை கூறினர். அங்கேயும் ரிஷியை நினைத்து, அனைவரும் கண்ணீர் விட்டனர்.

பின், ஒருவாறு தன்னை சமன் படுத்திகொண்டு, சஞ்சுவை ஆளாளுக்கு தூக்கி வைத்து கொண்டு, சாப்பாடு கொடுக்க என அவனை தாங்க, லக்ஷ்மியும் அவன் செய்யும் சேட்டையை எல்லாம் உத்ராவிடம் சொல்லி, நீயும் இப்படித்தான் பண்ணுவ உதி… அப்படியே அவன் அத்தை மாதிரி இவன் என்று பெருமையாய் சொல்ல, மீராவுக்கு தான் மனது ஒரு மாதிரி இருந்தது.

அவள் மகனாய் வளர்த்தவன். இன்று தனக்கு அவன் மேல் எந்த உரிமையும் இல்லையா என்று வருந்த, அர்ஜுனும் அவளை கவனித்து கொண்டு தான் இருந்தான்.

பின், அவன் உத்ராவிடம் கண்ணை காட்ட, அவள் மீராவை பார்த்து விட்டு, சஞ்சுவை தூக்கி வந்து, அவள் கையில் கொடுத்தாள்.

மீரா புரியாமல் பார்க்க, “என்னைக்குமே சஞ்சு மேல எங்க எல்லாரையும் விட உனக்கு தான் உரிமை அதிகம்… நீ அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இல்லைனாலும், உனக்கு இங்க இருக்க பிடிச்சாலும் இல்லை இங்க இருந்து போகணும்னு  நினைச்சாலும், இவனும் உன்கூட தான் வருவான். நான் இவனுக்கு அத்தையா இருக்கிறதை விட, நீ இவனுக்கு அம்மாவா இருக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோசம் மீரா. எந்த காரணத்தை கொண்டும், இங்க இருக்குற யாரும் இவனை உன்கிட்ட இருந்து பிரிக்க மாட்டோம்” என்று சொல்ல, அவள் அழுதுகொண்டே உத்ராவை தாவி அணைத்து கொண்டாள்.

உத்ராவுக்கும் கண் கலங்க, அவளை ஆதரவாய் அணைத்து கொண்டாள்.

அஜய் அங்கு வந்தவன், சஞ்சுவை அவன் கையில் வாங்கி கொண்டு, “இவன் என்ன குழந்தையா. இல்லை கொழுக்கட்டையா ஆளாளுக்கு நீ வச்சுக்க நீ வச்சுக்கன்னு ஒவ்வொருத்தர்கிட்டயா குடுக்குறீங்க.” என்று முறைக்க, மீரா சிரித்தே விட்டாள்.

பின், அவன் சஞ்சுவிடம், “நீ வாடா ராசா… இவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் நம்ம விளையாடலாம்” என்று சொல்ல, சஞ்சு, “மாமா, டாம் அண்ட் ஜெரி” என்று சுஜியை கையை காட்டி இருவரையும் சண்டை போட சொன்னான்.

விது, “பாருடா பங்கு, பச்சை மண்ணுலாம் உங்களை வச்சு எண்டர்டைன் பண்ணுதுங்க உனக்கு எப்போடா லைட் எரியும்” என்று கேட்க, அவன் புரியாமல் “என்ன லைட்டு” என்று கேட்டான்.

விது, “தலையெழுத்து.” என்றவன் சுஜியை பாவமாக பார்த்தான். பிறகே சுஜிக்கு நேற்றிலிருந்து வீட்டிற்கு செல்லவே இல்லை என்று உறைக்க, அவசரமாய் கிளம்பினாள்.

விது, அஜயிடம் “டேய் நீ அவளை ட்ராப் பண்ணிட்டு வா” என்று கூற, அஜய், “ஏன் அவளுக்கு வழி தெரியாதாக்கும்” என்று நக்கலடித்தான்.

விது, ‘இப்படி தனியா போனாவாவது இவனுக்கு லைட் எரியும்ன்னு நினைச்சு சொன்னா  இவன் இதுக்குலாம் சரிப்பட்டு வரமாட்டான் போலயே.’ என்று யோசித்து விட்டு, அவனை வற்புறுத்தி அவளுடன் அனுப்பி வைத்து, சுஜிக்கு பெரிய ஆப்பாக வைத்தான்.

மீரா சந்தோசத்துடன் சஞ்சுவை தூக்கி கொண்டு அவள் அறைக்கு செல்ல, அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த துருவ் அங்கிருந்து கிளம்ப முயன்றான். ஆனால் லக்ஷ்மியும், அன்னமும் சாப்பிட்டு தான் போகவேண்டும் என்று அவனை கட்டாயப்படுத்தி இருக்க வைக்க, உத்ரா அமைதியாய் இருந்தாள்.

பின், எதேச்சையாய் திரும்ப, அங்கு அர்ஜுன் அவளை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்ததை கண்டு, இவன் ஏன் நம்மள முறைக்கிறான்… என்று முழிக்க,

அவன் லட்சுமியிடம், “அம்மா நீங்க சாப்பாடை ரெடி பண்ணுங்க. நான் துருவை என் ரூம்க்கு கூட்டிட்டு போறேன்” என்று அவனை இழுத்துக்கொண்டு மேலே போக, உத்ராவும் அவர்கள் பின்னே சென்றாள்.

அர்ஜுனிடம், “என்ன பங்கு”, என்று அவள் கேட்டுகூட முடிக்கவில்லை… அவளை அர்ஜுன் கிழிகிழியென கிழித்தான்.

“உன்கிட்ட இப்போ இந்த செண்டிமெண்ட் சீன் யாராவது கேட்டாங்களா…?” என்று முறைக்க,

அவள் “நீ தானடா… மீராவை சமாதானப்படுத்த சொன்ன” என்று சொல்ல, அவன் கோபமாக, “சமாதானப்படுத்துன்னு நான் சொன்னேனா…? அவளை பாருன்னு தான் கண்ணை காட்டுனேன்.  நானே சஞ்சுவை வச்சுதான் அவளை கரெக்ட் பண்ணலாம்னு நினைச்சுருந்தேன்…  நீ தேவை இல்லாம டயலாக் பேசி இப்படி அநியாயமா பிரிச்சுவிட்டுட்டியே. இப்போ அவள்கிட்ட போய் பேசுனா என்னை கண்டுக்க கூட மாட்டாள்.” என்று பார்வையாலேயே சுட்டெரித்தான்.

உதி அசடு வழிந்து கொண்டு, “ஈஈஈ சாரி பங்கு… ஒரே செண்டிமெண்ட் சீனா இருந்துச்சா. அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். நான் வேணா திரும்ப போய் சஞ்சுவை உனக்கு தரமாட்டேன்னு சொல்லி வாங்கிட்டு வந்துடவா” என்று கிளம்ப ஆயத்தமாக,

அர்ஜுன், “கொலை பண்ணிடுவேன் உன்னை… அப்பறம் யாரும் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஒழுங்கா நீயே ஏதாவது ஐடியா குடு.” என்று மிரட்ட,

அவள் ‘ஹக்கும். என் ஐடியாவை வச்சு என் ஆளையே கரக்ட் பண்ண முடியல..இதுல மீராவை இந்த ஜென்மத்துல கரெக்ட் பண்ண முடியாது…’ என்று முனங்கியவள் அர்ஜுன் என்ன என்று கேட்டதும், “உனக்கு சூப்பர் ஐடியா நான் யோசிச்சு சொல்றேன் பங்கு” என்று அங்கிருந்து நழுவி விட்டாள்.

துருவ் அவள் சமாளிப்பை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டிருக்க, அர்ஜுன் அவனை முறைத்து, “நீ ஏண்டா சிரிக்கிற. உன் பொழப்பும் இங்க சிரிப்பா தான் சிரிச்சுக்கிட்டு இருக்கு… “என்று முறைக்க, அவன், உத்ரா முத்தம் கொடுத்ததை நினைத்து மேலும் சிரித்தான்.

அர்ஜுன் தான், ‘அய்யோயோ அவளுக்கு எல்லாம் மறந்துருச்சுன்னு நினைச்சு நினைச்சு இவன் லூசாகிட்டானோ… இந்த கலவரத்துலயும் சிரிக்கறான்’ என்று தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருக்க, உத்ரா திரும்பி வந்தவள், “அர்ஜுன் உன்னை மீரா கூப்பிடறாள்” என்று சொல்ல, விருட்டென்று மீரா அறைக்கு போனாள்.

அவன் சென்றதும் உத்ரா உள்ளே வந்து, துருவை பார்க்க, அவன் புருவத்தை உயர்த்தி என்ன என்று பார்த்தான்.

உத்ரா, அவனையே சிறிது நேரம் பார்த்து விட்டு, “ஐ லவ் யு” என்று சொல்ல, துருவ் அவளை கண்ணெடுக்காமல் பார்த்து விட்டு, வெளியே செல்ல போனான்.

உத்ரா கோபமாக “நான் உங்க
கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்” என்று சொல்ல,

துருவ், பெருமூச்சு விட்டு, “என்ன பேஸிஸ்ல என்னை லவ் பண்றேன்னு சொல்ற… என்னை பார்த்ததும் உனக்கு பிடிச்சுச்சா. இல்ல என்மேல உனக்கு லவ் ஃபீல் வந்துச்சா.

ஒருவேளை, நான் பேசுன எதையும் நீ கேட்காம இருந்திருந்தா என்னை லவ் பண்ணிருப்பியா?” என்று கூர்மையாய் கேட்க, அவள் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தாள்.

பின் அவனே, “எனக்கு நீ வேணும் உதி… என்னால உன்னை விட முடியாது. ஆனால் அதே நேரத்துல ஒரு சாஃப்ட் கார்னர்ல உன் லவ்
எனக்கு வேணாம்…” என்று சொல்ல,

உத்ரா, “நான் பரிதாபப்பட்டு லவ் பண்றேன்… இல்ல பழசெல்லாம் தெரிஞ்சு என்னால நீ கஷ்டப்பட்டுட்டன்னு நினைச்சு லவ் பண்றேன்னு நான் உங்கிட்ட சொன்னேனா. உன்னை தப்பா நினைச்சது உண்மைதான் ஆனால்…” என்றவள் பேசுவதை நிறுத்திக் கொண்டு,

“சரி, இப்போயும் நான் உன்னை உனக்காக தான் லவ் பண்றேன்னு உனக்கு ப்ரூஃவ் பண்ண நான் என்ன பண்ணணும்” என்று கேட்க, அவன் அமைதியாய் இருந்தான்.

உத்ரா, “இந்த ப்ராஜக்ட் முடிச்சு நீ கிளம்புறதுக்குள்ள, என் காதலை உன்னை உணரவைக்கிறேன். அப்போ நீ ஒத்துப்பியா.” என்று கேட்க, அவன், எதுவும் சொல்ல முடியாமல் நின்றான்..

பின், அவன், “நான் ஒருவாரத்துல ஊருக்கு கிளம்புறேன். நான் வந்தது ப்ரொஜெக்ட்காக இல்லை. உனக்காக தான். நான் வந்த வேலை முடிஞ்சுது…”  என்று சொல்ல,

உத்ரா கடுங்கோபத்துடன். “இந்த ஊரை தாண்டி நீ எப்படி போறன்னு நானும் பார்க்குறேன்…” என்று சவாலாய் முறைக்க, துருவ் அவளின் மிரட்டல் காதலில், மெலிதாய் புன்னகைத்தான்.

ஆனால், அவளை அவனின் ஹனியாய் ஏற்றுக்கொள்ள ஏதோ ஒன்று அவனை தடுத்தது.

மீரா அறைக்கு சென்ற அர்ஜுன், அங்கு சஞ்சு உறங்கிக் கொண்டிருக்க, அருகில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டிருந்த மீராவை அழைத்தான்.

மீரா எழுந்து, அவனை என்னவென்று பார்க்க, அர்ஜுன் “எதுக்கு கூப்பிட்ட” என்று கேட்டதும், அவள் முழித்து “நான் எப்போ கூப்பிட்டேன்?” என்று புரியாமல் கேட்டாள்.

‘இவள் கூப்புடவே இல்லையா? அடிப்பாவி உதி. உன் ஆள் கூட பேசணும்னு நினச்சு என்னை இவள் கூட கோர்த்து விட்டுட்டியே இவள் பேசுனதையே பேசி என்னை டென்ஷன் பண்ணுவாளே’ என்று புலம்பி விட்டு,

  “இல்ல நீ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு” என்று சமாளித்து விட்டு, “ஒரு ரெண்டு நாள் அவன் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்… ஸ்கூல்ல லீவ் சொல்லிக்கலாம்” என்க அவள் சரி என்று தலையசைத்தாள்.

பின் அவன், அவள் அருகில் வந்து, “இனிமே நான் உன்னை லவ் பண்றேன்னு டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். உன்கிட்ட பொறுக்கி மாதிரி நடந்துக்க மாட்டேன்… ஆனால்” என்று அவளை பார்க்க, அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள்.

அவனே மீண்டும் “ஆனால்… எனக்கு என் பிரெண்ட் மீரா வேணும்… எனக்கு திரும்ப கிடைப்பாளா” என்று கெஞ்சும் கண்களுடன் கேட்க, அவளால் அதற்கு மேல் அவனை காயப்படுத்த முடியவில்லை. சிரிப்புடன் சரி என்று தலையசைத்தாள்..

அவன் தான், ‘ஷப்பா ஏற்கனவே ஃப்ரெண்ட் ஆகி கரெக்ட் பண்ணவளை, மறுபடியும் ஃப்ரெண்ட் புடுச்சு கரெக்ட் பண்ண வேண்டியதா இருக்கு. என் ஸ்வீட் சீனிக்கட்டி, உன் வழியிலேயே போய் உன்னை மடக்குறேன் இரு’ என்று மனதில் நினைத்து கொண்டவன், அவளுடன் பேச்சு கொடுத்தான்.

சுஜியை வீட்டில் இறக்கி விட்டவனை, வெளியில் வந்த சுஜியின் அம்மா காயத்ரி பிடித்து கொண்டு, “உள்ள வந்துட்டு போப்பா” என்று கூப்பிட, அவனும் உள்ளே சென்றான்.

எப்பொழுதும் அங்கு வருபவன் தான். சுஜி ஏதாவது சொல்வது கேட்கவில்லை என்றால் அவனையோ இல்லை உத்ராவையோ கூப்பிட்டு தான் சொல்லுவார்.

சுஜியின் அப்பா ராகவன் தான் சிறிது முசுடு. அதிலும், ஏதாவது சேட்டை பண்ணி, கல்லூரியில் சஸ்பெண்ட் ஆகிக்கொண்டே இருக்கும் அஜயையும், உத்ராவையும் முறைத்து கொண்டே தான் இருப்பார்.

 இதில், சுஜியும் சேர்ந்து தான் மாட்டுவாள்.

ஆனால், அவரிடம் கூட, இருவரையும் சுஜி விட்டு கொடுத்ததே கிடையாது. ராகவனும், அவளை ஒரு அளவுக்கு மேல் அதட்ட முடியாமல் அமைதியாக இருந்து விடுவார்.

இப்பொழுது ஹாலிலேயே அவர் அமர்ந்திருக்க , அஜய் ஆஹா இவர்கிட்ட வந்து சிக்கிட்டோமா என்று நினைத்து கொண்டு, “ஹாய் அங்கிள்” என்று இளிக்க, அவர் அவனை முறைத்து விட்டு, சுஜியிடம் “ஏன் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துருக்க வேண்டியது தான…” என்று திட்ட, சுஜி, அவள் பங்கிற்கு ஈஈ என இளித்தாள்.

அவர் தலையில் அடித்து கொண்டு உள்ளே சொல்ல, காயத்ரி “அவரை விடுப்பா…” என்று அஜயிடம் நலம் விசாரித்தவர்.

சிறிது நேரத்தில் சுஜியின் கல்யாண பேச்சிற்கு வந்தார். சுஜி ஐயோ வென்று அவரை பார்க்க, அவர், “இவளை பாருப்பா இன்னும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல மாட்டேங்குறா… நீயாவது சொல்லலாம்ல.. மாப்பிள்ளை வீட்ல இருந்து எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்னு கேட்டுகிட்டே இருக்காங்க” என்று சொல்ல,

சுஜி, “மா.. இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” என்று கேட்க, எப்போதும் அவள் பேச்சிற்கு எதிராய் பேசி அவளை மாட்ட வைக்கும் அஜய் அன்றும் அதனையே கடைபிடித்து,

“ஆண்ட்டி. இதெல்லாம் போய் அவள்கிட்ட என்ன  கேட்டுகிட்டு, நீங்களே நல்ல நாளா பார்த்து ஃபிக்ஸ் பண்ண வேண்டியது தான” என்று சொல்ல, சுஜி அவனை முறைத்தாள்.

அவன் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், “சந்துருவும் நல்ல பையன்… சொந்தமா நிறைய பிசினெஸ் வேற பண்றாரு. அப்பறம் என்ன” என்று கேட்க,

காயத்ரி “அதை உன் பிரெண்டுகிட்ட சொல்லு.என்று சலிக்க, அவன்,

“ஹே பஜ்ஜி… அவன் கூட படத்துக்கு போறதுக்குலாம் ஓகே சொல்லுவ. கல்யாணத்துக்கு ஓகே சொல்ல மாட்டியா” என்று கேட்க, அவளுக்கு தான், கொஞ்சம் கூட அவனுக்கு எந்த வருத்தமும் இல்லையா. தான் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவே இல்லையா என்று மனதினுள் குமுறலுடன் அவனை வெறித்தாள்.

காயத்ரி, “அவள் யாரையாவது லவ் பண்றாளா அஜய்?” என்று அஜயிடம் கேட்டதும்,

அவன் “யாரு இவளா…” என்று சிரித்து விட்டு, “இவளுக்கு லவ் லாம் வராது ஆண்ட்டி. அப்படியே லவ் பண்ணாலும், அவன் ரெண்டே நாள்ல ஓடிடுவான். அந்த சந்துரு அப்பிராணிக்கே இவளை கல்யாணம் பண்ணி வச்சுடுங்க…” என்று மேலும் அவளை காயப்படுத்தினான்.

எல்லாத்தையும் விளையாட்டுத்தனமாய் எடுப்பவன், இதனையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாகவே எடுத்துக்கொண்டான்.

சுஜி, கண்ணில் அடக்கிய கண்ணீருடன்,” சரிமா… கல்யாண தேதி ஃபிக்ஸ் பண்ணுங்க” என்று சொல்ல, அஜய் அவளை ஆச்சர்யமாய் பார்த்து,

“வாவ்.. கங்கிராட்ஸ் பஜ்ஜி”, என்று அவள் கையைப் பற்றி குலுக்க, அவள் அழுகையை அடக்க முடியாமல் அறைக்குள் சென்று குளியறையில் புகுந்து, ஷவரை திறந்து விட்டாள். அதன் அடியில் நின்றவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை..

நினைவில்லை
என்பாயா நிஜமில்லை
என்பாயா நீ என்ன
சொல்வாய் அன்பே

உயிர் தோழன்
என்பாயா வழிபோக்கன்
என்பாயா விடை என்ன
சொல்வாய் அன்பே

சாஞ்சாடும் சூரியனே
சந்திரனை அழவைத்தாய்
சோகம் ஏன் சொல்வாயா
செந்தாழம் பூவுக்குள் புயல்
ஒன்று வர வைத்தால்
என்னாகும் சொல்வாயா

உன் பேரை
சொன்னாலே உள்
நாக்கில் தித்திக்குமே
நீ எங்கே நீ எங்கே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ

ஒன்றா இரண்டா
ஒரு கோடி ஞாபகம் உயிர்
தின்ன பார்க்குதே நண்பா
துண்டாய் துண்டாய் பூமியில்
விழுந்தேன் எங்கே நீ என்
நண்பா

வெகுநேரம் தண்ணீரின் அடியிலேயே நின்று விட்டு, இனிமேலும் அவன் தன்னை புரிந்து கொள்வான் என்று நினைப்பது முட்டாள் தனம் என்று உணர்ந்து, அவனை மறக்க வேண்டும் என்று தனக்குள் உறுதியெடுத்து கொண்டாள்.

துருவின், அந்த பெரிய வீட்டின் மதில் சுவரை கஷ்டப்பட்டு ஏறி குதித்தாள் உத்ரா.

குதித்தவள் கையை தட்டி கொண்டு, ‘நம்மளை பார்க்க நம்ம லவர் வருவாளே. கதவை திறந்து வைப்போம்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா இவனுக்கு.’ என்று அவனை திட்டி கொண்டு, பைப் மேலே ஏறி அவன் அறைக்கு சென்றாள்.

அங்கு அவன் லண்டனில் இவள் கொடுத்து விட்டு போன உடையை கட்டிக்கொண்டு, படுத்திருந்தான்.

உத்ரா, “இவன் ஃபீலிங்ஸ்க்கு ஒரு அளவில்லாமல் போய்கிட்டு இருக்கு” என்று கடுப்படிக்க, அவள் பின்னே வந்த அஜயும், விதுவும், “நீ லவ் பண்றதுக்கு எங்களையும் ஏன் பங்கு இப்படி படுத்துற…” என்று பாவமாய் சொல்ல,

விது.. “ஆமா… உதி அன்னைக்கு இவன் வீட்டுக்கு வந்து வாங்குன அடியே இன்னும் மறக்கல. இன்னைக்கு எந்த வில்லனும் வரமாட்டானே” என்று  கேட்டதும் ,”ப்ச், பேசாம வாங்கடா…” என்று விட்டு, அவன் அறையின் ஜன்னல் வழியே குதிக்கப் போனாள்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த, துருவ் அங்கு உத்ரா, ஜன்னல் வழியே உள்ளே வருவதை பார்த்து, “இவளை” என்று அவளருகில் சென்று முறைத்தான்.

அவனைக் கண்டதும் திருதிருவென முழித்தவள், பின், “அதான் உள்ள வரோம்னு தெரியுதுல ஹெல்ப் பண்றது” என்று சொன்னதும், அவளை முறைத்து விட்டு, அவளை அப்படியே தூக்கி, உள்ளே நிற்க வைத்தான்.

அவள் தான், அவனின் கை தீண்டலில் உருகி நிற்க, துருவ் அவளின் சேட்டையில் அவனை மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

ஜன்னல் வழியே அடித்த காற்றில், அவள் கூந்தல் அவள் முகத்தை மறைக்க, அதனை எடுத்து காதோரம் சொருகினான்.

அதில் அவள் சிவக்க, ஜன்னல் வழியே, அஜயும், விதுனும் “டேய் பொண்ணுங்களை மட்டும் தான் தூக்குவியாடா… கொஞ்சம் எங்களையும் தூக்கி விடுடா.” என்று கதற,

துருவ் ‘நானே என்னை மறந்து என்னைக்காவது தான் ரொமான்ஸ் பண்றேன்… அப்பவும் இவனுங்க வந்து கெடுத்துடுறானுங்க…’ என்று அவர்களை முறைத்து தூக்க போக, அன்று போல் இன்றும் சடசடவென வீட்டினுள் சத்தம் கேட்டது.

அதில் மிரண்ட இருவரும், துருவிடம், “யப்பா ராசா நீ கையை விடு, நாங்க இப்படியே குதிச்சு வீட்டுக்கு ஓடிடறோம்” என்று மீண்டும் வெளியில் தலை தெறிக்க ஓடினர்.

உறைதல் தொடரும்…
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
52
+1
8
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.