Loading

23 – வலுசாறு இடையினில் 

 

“காமாட்சி .. காமாட்சி .. “, என அழைத்தபடி அவரது அண்ணன் வரதன் உள்ளே வந்தார். 

 

“வாங்கண்ணே .. வாங்கண்ணி ..”, என இருவரையும் வரவேற்று அமர கூறினார். 

 

“வாங்க மச்சான்”, என ஏகாம்பரமும் வரவேற்றார். 

 

“இப்போ தான் நீங்களும் வீட்டுக்கு வந்தீங்களா?”, என பொதுவாக பேச்சை தொடங்கினார் வரதன். 

 

“ஆமா மச்சான்.. இன்னும் கொஞ்ச வீடு தான் பாக்கி இருக்கு. அது நான் மட்டும் நாளைக்கு போனா போதும்..”

 

“நல்லது.. ராக்கெட் வேகத்துல வேலை நடக்குது..”, என சிரித்தபடி கூறினார் வரதன். 

 

“நாளான்னிக்கி கல்யாணம் ஆச்சே மச்சான்.. அதான் இவ்ளோ வேகம்.. எனக்கும் பாரம் கொறையும் பாருங்க சீக்கிரம் கல்யாணம் முடிச்சிட்டா..”, என நங்கையை பார்த்தபடி கூறினார் ஏகாம்பரம். 

 

“பெத்த புள்ளைய பாரமா நினைச்சா எங்க இருந்து மனசுல நிம்மதி சந்தோஷம் வரும்? புள்ளைங்களா மட்டும் தான் நினைக்கணும்.. வரதா .. உன் தம்பியும் தாய் மாமன் சீர் பண்ண வாறேன்னு சொல்றான்.. நீங்க ரெண்டு பேரும் கலந்து பேசி நாளைக்கு நழுங்கு வச்சிடுங்க.. அப்பறம் நாளைக்கே மாப்ள வீட்டுக்காரங்க தாலி கட்டறதும் வச்சிட்டா நம்ம சீர் பண்ண முடியாது.. அப்பறம் அதுக்கும் நம்மல தான் கொற சொல்வாங்க ஒண்ணுக்கு ரெண்டு தாய் மாமனுங்க இருந்தும் யாரும் பொண்ணுக்கு நழுங்கு வைக்கல.. சீர் குடுக்கலன்னு.. நமக்கு எதுக்கு அந்த ஏச்சும் பேச்சும்.. சின்னவன் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துருவான் டா..”, என வேம்பு பாட்டி ஏகாம்பரத்திற்கு ஒரு கொட்டு வைத்து விட்டு, தன் மகனிடம் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை பற்றி கூறினார். 

 

“மச்சான்.. எனக்கு நீங்க மட்டும் சீர் செஞ்சி நழுங்கு வச்சா போதும்.. வேற யாரும் செய்ய வேணாம்”, என ஏகாம்பரம் இப்போது கொடி பிடிக்க ஆரம்பித்தார். 

 

காமாட்சியும், வரதனும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து விட்டு தாயை பார்த்தனர். 

 

“தாய் மாமனுங்க ரெண்டு பேரும் தான் சீர் செய்வானுங்க.. இந்த பாட்டி சீரும் தனியா செய்வேன்.. இத யாரும் தடுக்க முடியாது வரதா..  அவங்க பொண்ணு மேல அவங்களுக்கு எவ்ளோ உரிமை இருக்கோ அதே உரிமை நமக்கும் இருக்கு”, என வேம்பு பாட்டி கணீரென கூறினார். 

 

ஏகாம்பரம் மீண்டும் வாய் திறக்கும்முன் இரத்தினம் அங்கே வந்தார். 

 

“என்ன எல்லாரும் கார சாரமா பேசிட்டு இருக்கீங்க .. கல்யாணம் வேலை எல்லாம் எப்புடி போகுது ஏகாம்பரம்?”, என கேட்டபடி வந்து அமர்ந்தார். 

 

அனைவரும் முகமனாக வரவேற்று உபசரித்தனர். 

 

“எல்லாம் பொண்ணுக்கு தாய் மாமன் சீர் பண்றது பத்தி தான் பேசிட்டு இருந்தோம் ரத்தனம் .. நீயே சொல்லு ரெண்டு தாய் மாமனுங்களும் சேர்ந்து தானே எல்லாம் பண்ணனும்..” ,என வேம்பு பாட்டி அவனிடமே நியாயத்தை கேட்டார். 

 

“ஆமா.. எத்தன பேர் தாய் மாமனுங்க இருந்தாலும் எல்லாரும் சேர்ந்து தான் நழுங்கு வச்சி சீர் செய்யணும். அதானே நம்ம ஊரு வழக்கம் .. என்ன ஏகாம்பரம் நான் சொல்றது சரி தானே?”, என சிரித்தபடி இரத்தினம் கேக்கவும் ஏகாம்பரம் முறைத்தார். 

 

“அப்புடி சொல்லு ரத்தனம் .. பெரியவனே .. சின்னவன் தான் ஃபோன் பண்றான். இந்தா போய் பேசு.. நம்ம குடும்ப வழக்கபடி எல்லாத்தயும் நிறைவா என் பேத்திக்கு  செய்யணும். எந்த கொறையும் யாரும் சொல்லிட கூடாது.. அம்மாடி வாணி.. நீ உன் அண்ணே கூட போய் கொஞ்சம் கூட மாட ஒத்தாசையா இரு.. நான் சின்னவன் வந்த அப்பறம் வீட்டுக்கு வரேன்.. “, என வாணியை அங்கிருந்து கிளப்பினார். 

 

“அம்மா.. வாணி இங்க இருந்தா தான் எனக்கு பரவால்ல.. அவள  அங்க அனுப்பிட்டா நான் ஒத்தை ஆளா அலையணும். ஜாமானமெல்லாம் வாங்கணும்..”, என காமாட்சி கூறினார். 

 

“உனக்கு தொணைக்கு எத்தன பேரு டி வேணும்? நான் வரேன்.. கூட உன் பையன கூப்டுக்கலாம் .. ஜாமான வீட்ல கொண்டு வைக்க ஆகும்.. அப்பறம் அவன் உன்ன வீட்ல கொண்டு வந்து விடட்டும்.. நான் அப்டியே வரதன் வீட்டுக்கு போயிட்டு ராத்திரி இங்க வந்தடறேன் ..”, என அதற்கும் ஒரு வழியை கூறினார். 

 

“என் பையன் நல்லா தூங்கி எந்திரிக்கணும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காரு. அவன எல்லாம் அலச்சல் படுத்த முடியாது..”, என முந்திக்கொண்டு மகனுக்கு  வக்காளத்து வாங்கினார் காமாட்சி. 

 

“ஆம்பள பையன்ன்னு எதுக்கு அவன் இருக்கான்? அக்கா கல்யாணத்துல ஒரு வேலை பண்ண மாட்டானா? என்ன வளக்கறியோ போ ..”, என மகளுக்கும் ஒரு கொட்டு வைத்தார். 

“அவனுக்கு தான் ஒடம்பு சுகமில்லைல .. அவன யாரும் தொந்தரவு பண்ண வேணாம்” ,என ஏகாம்பரமும் கூறினார். 

 

“ஏன் நேத்து கூட பையன் நல்லா தானே இருந்தான் .. “, என இரத்தினம் கேட்டார். 

 

“கொஞ்சம் ஜுரம் அடிக்குது ண்ணே .. அதான் நேத்து ராத்திரி ஆஸ்பத்திரி போயிட்டு வந்தோம்” ,என காமாட்சி அனைவருக்கும் முன் முந்தி கொண்டு பதில் கூறினார். 

 

“சரி சரி.. அப்ப பையன் அலச்சல் பட வேணாம்”

 

“சரி கெளம்பலாம்” , என வரதன் கூறியதும்,  “எல்லாரும் வெளிய போயிட்டா நங்கை கூட யாரு இருக்கறது?”, என வாணி கேட்டார். 

 

“அவ சினேகிதிய வர சொல்லுங்க மாப்ள.. கல்யாணம் முடியரவரை அந்த புள்ள கூட இருக்கட்டும்.. வாணி வரதா கெளம்புங்க.. ஆர அமர ஒக்காந்து பேச நமக்கு யாரும் நேரம் குடுக்கல.. எல்லாமே அவசரகதில நடக்குது.. என்ன ரத்தனம் இப்டி ஒரு எடத்த கொண்டு வந்து இப்டி எங்கள அல்லல் படுத்தற? என்னவோ என் பேத்தி வாழ்க்கை நல்லா இருந்தா சரி.. ”, என இரத்தினத்திற்கும் ஒரு கொட்டு வைத்து விட்டு அங்கிருந்து அனைவரையும் கிளப்பி விட்டார். 

 

ஏகாம்பரம் பெரிய மாமியாரின் ஆட்டகாசங்களை பொறுக்க பல்லை கடித்தபடி அமர்ந்து இருந்தார். 

 

“ஏகாம்பரம்.. உன் மாமனார் இருந்தப்போ இந்த அத்த என்ன என்ன பேசி இருக்குமோ?”, என இரத்தினம் வழிந்த வேர்வையை துடைத்தபடி காது கடித்தார். 

 

“அந்த ஆளு தான் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டானே ரத்தனம்.. ஏதுவா இருந்தாலும் எனக்கிட்டயே கேளு நானே பதில் சொல்றேன்..”, என சிரித்தபடி வேம்பு பாட்டி அங்கே வந்து நின்றார். 

 

“அய்யோ.. நான் ஒண்ணும் சொல்லல அத்த.. நீங்க ஏன் தனியா போகணும் ? ஏகாம்பரம் கடைல வேலை பாக்கற பசங்கள கல்யாணம் முடியரவரை இங்க வர சொல்லு. பாவம் அவங்க எவ்ளோ தூக்கிட்டு அலைய முடியும்..”, என அவருக்கு பரிந்து பேசினார். 

 

“வர சொல்றேன்.. கார்ல போயிட்டு சீக்கிரம் வாங்க.. அந்த பொண்ணு வினிதா நம்பர் போட்டு வர சொல்ல சொல்லு உன் பொண்ணு கிட்ட.. “ ,என உருமிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

 

வேம்பு பாட்டி மகனையும் மருமகளையும் தனியாக அழைத்து சென்று சில விஷயங்கள் பேசி அனுப்பி வைத்தார். காமாட்சி தனியாக வாத்தியாரிடம் மாட்டிக்கொண்ட சிறுமி போல முகத்தை வைத்து கொண்டு தாயுடன் வெளியே கிளம்பினார். 

 

“எப்பா.. இந்த கெழவிங்க எல்லாமே பயங்கரமான ஆளுங்களா இருக்குங்க ப்பா.. எப்டி தான் இவங்கள எல்லாம் அந்த மகராசனுங்க கட்டி மேச்சாங்களோ ?”, என இரத்தினம் வாயிற்குள் முனகியபடி ஏகாம்பரத்தை பார்த்தார். 

 

“என்ன ஏகாம்பரம் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு?”

 

“எல்லாம் அந்த கெழவி தான் இரத்தினம்.. என் உயிர வாங்கறத்துக்குன்னே வந்து இருக்கு..  சீக்கிரம் எல்லா பீடையும் இந்த வீட்ட விட்டு ஒழிக்கணும் ..” ,என பொறிந்து விட்டு வெளியே கிளம்ப தயாராக சென்றார். 

 

“ஏய்..”, என அழைத்ததும் நங்கை வந்து நின்றாள். 

 

“ராஜாவுக்கு வேளைக்கு ஜூஸ் சாப்பாடு எல்லாம் குடுக்கணும். அந்த புள்ள கூட சும்மா ஒக்காந்து  கதை பேசிட்டு இருக்காத.. நான் வெளிய போறேன்.. வீட்ட பூட்டிக்க.. உன் சினேகிதி வந்ததும் எனக்கு ஃபோன் பண்ண சொல்லு..”, என அவளிடம் கடுகு போல காய்ந்து விட்டு வெளியே சென்றார். 

 

இரத்தினம் நங்கையை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே சென்றார். மாலை நேரத்தில் அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் என்று சென்று விட நங்கை இப்போது தான் கொஞ்சம் ஆசுவாசமாக மூச்சு விட்டாள். 

 

“இந்த வினி எருமைய இன்னும் காணோம்?”, என ஹாலில் அமர்ந்தபடி அங்கிருந்த செய்தி தாளை படித்துக்கொண்டு இருந்தாள். 

 

“வினி .. எப்ப வர?” ,நங்கை கேட்டாள். 

 

“கொஞ்ச நேரம் ஆகும் டி.. வெளிய வந்து இருக்கேன்.. நேர்ல பேசிக்கலாம் வச்சிடறேன்” ,என கூறிவிட்டு வினிதா அழைப்பை தூண்டித்தாள். 

 

ஒரு மணி நேரம் கழித்து ரூமில் ராஜன் எழும் அரவம் கேட்டது. மெதுவாக கண்விழித்து வெளியே வந்தவன் நங்கையை பார்த்துவிட்டு, தாயை தேடினான். 

 

எல்லா இடமும் தேடிவிட்டு நங்கையிடம் வந்து, “அம்மா எங்க ?”, என கேட்டான். 

 

“கடைக்கு போய் இருக்காங்க .. “, என அவள் அசிரத்தையாக கூறினாள். 

 

“ச்சே .. எனக்கு ஜூஸ் போட்டு குடு”, என அதிகாரமாக கூறினான். 

 

“நேத்து என்ன பண்ண?”, என நங்கை அவன் முகம் பார்க்காமல் கேட்டாள். 

 

“நான் என்ன பண்ணா உனக்கு என்ன? போய் ஜூஸ் போட்டு கொண்டு வா போ.. எனக்கு பசிக்குது..”, என அதட்டினான். 

 

“நேத்து எங்க போன? என்ன பண்ணன்னு சொல்லு.. “, என மீண்டும் பொறுமையாக கேட்டாள். 

 

“உனக்கு அதுலாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.. கேள்வி கேக்கக்காம சொல்றத மட்டும் பண்ணு.. ஒரு பொட்டச்சி இவ்ளோ பேச கூடாது”, என அவன் சொல்லி முடிக்கும்முன் அவனை அறைந்து இருந்தாள் நங்கை. 

 

“என்ன போதை பொருள் வாங்கின? எங்க வாங்கின? யாரு குடுத்தா? சொல்லு இல்லைன்னா நானே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி சொல்லுவேன் “, என மிரட்டினாள். 

 

அவள் அடித்தத்தில் கீழே விழுந்தவன், எழ முயன்று முடியாமல் மீண்டும் கீழே விழுந்தான். 

 

“ஏய்.. உன்ன சும்மா விடமாட்டேன் டி.. அப்பா .. அப்பா “, என கத்தினான். 

 

“எவ்ளோ வேணா கத்து.. யாரும் இங்க இல்ல.. சொல்லு எங்க கெடச்சது அது? “, என மீண்டும் கேட்டாள். 

 

மறந்து சென்ற பொருளை எடுக்க வந்த ஏகாம்பரம், மகன் கீழே விழுந்து கிடப்பது கண்டு ஆவேசமாக வந்து நங்கையை அறைந்தார். 

 

“ஆம்பள பையன் மேல கை வைக்கற அளவுக்கு திமிர் ஆகிடிச்சா உனக்கு? “ , என மீண்டும் சில அடிகளை கொடுத்தார். 

 

“உங்க பையன் நேத்து போதை மருந்த சாப்டு இருக்கான்.. அவனுக்கு அது எங்க கெடச்சதுன்னு மொத கேளுங்க “, என அவரின் கையை தடுத்துக்கொண்டு பேசினாள். 

 

“பாருங்க ப்பா .. உங்க கைய பிடிக்கற அளவுக்கு வந்துட்டா.. எல்லாம் அந்த வர்மன் சொல்லி குடுத்து தான் இவ பண்றா .. இவளுக்கு இவ்ளோ தைரியம் எல்லாம் இல்லப்பா.. சீக்கிரம் இவள இங்க இருந்து அனுப்பணும் இல்லைன்னா நம்ம மானத்த வாங்கிடுவா ப்பா “ ,என அழுத்தபடியே கூறினான் ராஜன். 

 

“என் பையன் மேல இன்னொரு தடவ கை வச்ச.. உயிரோட விடமாட்டேன்.. அவன் எந்த தப்பும் பண்ணமாட்டான்.. அவன் எந்த போத பொருளும் எடுக்கல.. வீணா அடிவாங்கி சாவாத.. ரெண்டு நாள்ல ஒழுங்கா வீட்ட விட்டு போற வழிய மட்டும் பாரு”, என அவளை மிரட்டி விட்டு மகனுக்கு வேண்டியதை வேலையாட்களை ஏவி செய்து கொடுக்க சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப ஆயுத்தமானார். 

 

“ஒரு நிமிஷம் நில்லுங்க.. உங்களுக்கு தேவை நான் இந்த வீட்ட விட்டு போறது மட்டும் தானே ? நானே போயிடறேன்.. எவனுக்கும் நான் கழுத்த நீட்ட மாட்டேன்.. இந்த கல்யாணத்த நிறுத்துங்க.. எனக்கு விருப்பம் இல்ல.. “, என தைரியத்தை வரவழைத்து கொண்டு பேசினாள். 

 

“தமிழு”, என அப்போது வீட்டிற்குள் வந்த காமாட்சி கத்தினார். 

 

“அப்டின்னு உன் காதலன் சொல்ல சொன்னானா?”, என ஏகாம்பரம் கேலியுடன் கேட்டார். 

 

“எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. நான் யாரையும் காதலிக்கவும் இல்ல.. எனக்கு கல்யாணத்துலையும் விருப்பம் இல்ல.. என்னை விற்றுங்க.. “

 

“அப்பா பொய் சொல்றா ப்பா.. நேத்து நான் வர்மன பாத்தேன் அவன் என்ன சொன்னான் தெரியுமா ப்பா? நீங்க என்ன பண்ணாலும் அவன் தான் இவ கழுத்துல தாலி கட்டுவானாம் ப்பா.. சவால் விட்டான் ப்பா.. இவங்க ரெண்டு பேரும் கூட்டு சேந்து தா எல்லாமே பண்றாங்க ப்பா.. “, என ராஜன் சமயம் பார்த்து பற்ற வைத்தான். 

 

ஏகாம்பரம் கண்களில் கொலை வெறி ஏறியது. இடுப்பில் இருந்த பெல்ட் கழட்டி நங்கையை அடிக்க ஆரம்பித்தார். இடையில் காமாட்சி தடுக்க செல்ல, அவருக்கும் சில அடிகள் கிடைத்தது. 

 

“நீங்க எவ்ளோ வேணா அடிங்க.. என்னை அடிச்சே கூட கொல்லுங்க.. ஆனா எனக்கு கல்யாணம் வேணாம்..”, என நங்கை மீண்டும் கூறினாள். 

 

“வேணாம்ங்க.. ரெண்டு நாள்ல கல்யாணம் வச்சிட்டு இப்டி அடிச்சா தழும்பு போகாதுங்க.. அவ தெரியாம பேசறா .. “, என காமாட்சி ஏகாம்பரம் காலில் விழுந்து கெஞ்சினார். 

 

“என்ன டி அவ நினைச்சிட்டு இருக்கா? அவ சொல்றது எல்லாம் என்கிட்ட நடக்காது.. நான் சொல்றது மட்டும் தான் நடக்கும்.. சொல்லு அவகிட்ட.. இன்னொரு வார்த்த பேசினா நான் கொலைக்காரனா தான் ஆவேன்”, என கத்தினார். 

 

“பெத்த பொண்ண காசுக்காக விக்கறதுக்கு கொலைகாரன் ஆகறது எவ்வளவோ மேல்”, என நங்கையும் கூறினாள். 

 

அவள் அப்படி சொன்னதும் ஏகாம்பரம் மட்டும் அல்ல மற்ற இருவரும் கூட சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றனர். 

 

“என்ன வார்த்த பேசற தமிழு?”, என காமாட்சி தான் முதலில் சுயநினைவு பெற்று பேசினார். 

 

“உண்மைய தான் ம்மா சொல்றேன்.. முப்பது லட்சத்துக்கு தான் எனக்கு இந்த கல்யாணம்.. அவர்கிட்ட இது உண்மை இல்ல ன்னு சொல்ல சொல்லுங்க பாக்கலாம்..” , என ஆவேஷமாக கேட்டாள். 

 

“என்னடி பேசற? அப்பா டி .. “

 

“ஆனா அவரு எனக்கு அப்பாவா எப்போ நடந்து இருக்காரு ம்மா? இந்த நிமிஷம் வரைக்கும் அவருக்கு அந்த நெனப்பு இல்ல.. இனிமேலும் வராது.. முப்பது லட்சம் காசுக்கு எதுக்கு ஒரு கொலகாரனுக்கு என்னை கட்டி வைக்கணும் ? அதுவும் ஏற்கனவே ஒரு பொண்ண அவன் மனசுல நெனைச்சிட்டு இருக்கான். அவன நான் கட்டிக்கிட்டா மட்டும் அவன் என்னை பொண்டாட்டியா பாப்பானா? சொல்லுங்க? அவங்க வசதிக்கும் அதிகாரத்துக்கும் நான் அங்க என்ன கேட்டாலும் எனக்கு நியாயம் தான் கெடைக்குமா? பெத்தவங்க நீங்களே இப்டி இருந்தா அவனுக்கு என்ன வந்தது ன்னு தான் என்னை மிதிப்பான். உங்களால அத கேக்க கூட முடியாது… இப்படி ஒரு கல்யாணம் எனக்கு அவசியம் தானா? “, என கேட்டு விட்டு வாய்விட்டு அழுதாள். 

 

“என்னால வாக்க மீற முடியாது..” ,என ஏகாம்பரம் வேறு பக்கம் திரும்பி நின்று பேசினார். 

 

“நீங்க கடன் அடைக்க எனக்கு வாங்கின நகைய வித்து குடுங்க.. அதுவே நாப்பது லட்சம் வரும்.. “, என தான் அறிந்த வழியை கூறினாள் நங்கை. 

 

“இப்போ விஷயம் காசு இல்ல.. குடுத்த வாக்கும், என் மானமும் தான்.. ஒழுங்கா அவள மணமேடைல வந்து ஒக்கார சொல்லு காமாட்சி..”

 

“அப்போ என் மானம் மரியாதை பத்தி எல்லாம் யாருக்கும் கவலை இல்லல .. உங்க மானம் மட்டும் இருந்தா போதும்.. நாளைக்கு அவங்க வீட்ல  என்னை எப்டி  அசிங்கப்படுத்தினாலும், கொடும பண்ணாலும் நீங்க யாரும் எனக்காக வரமாட்டீங்க.. அதானே?”, என நொறுங்கிய குரலில் கேட்டாள். 

 

அங்கே பெருத்த அமைதி மட்டுமே நிலவியது. யாரும் பதில் பேசவில்லை. 

 

“சரி.. உங்க மானம் உங்களுக்கு பெருசுன்னா என் மானம் எனக்கு பெருசு.. என்னால இந்த கல்யாணம் பண்ணிக்க முடியாது. இப்போவே போலீஸ்கு ஃபோன் பண்ணி என்னை கட்டாயம் பண்ணி கல்யாணம் செஞ்சி வைக்கறீங்கன்னு சொல்றேன்..”, என கூறிவிட்டு ஃபோன் அருகில் சென்றாள். 

 

அடுத்த நொடி அது சுவற்றில் பட்டு சுக்கு நூறாக தெரித்தது. 

 

“இங்க பாரு காமாட்சி.. நான் உசுரோட இருக்கணும்ன்னா அவள ஒழுங்கா மணமேடைல வந்து ஒக்கார சொல்லு.. வீட்ட விட்டு அவ எங்கயும் போக கூடாது. ரூம் குள்ள பூட்டி வை.. அந்த வினிதா பொண்ணு வந்து ஃபோன் ஏதாவது செஞ்சி பிரச்சனை வந்துச்சி.. நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. “ ,என மிரட்டி விட்டு வெளியே சென்றார். 

 

பெல்ட் அடியில் கைகளிலும், முதுகிலும் அதன் அச்சும், காயமும்  ஏற்பட்டு தழும்பாக மாறி இருந்தது. 

 

“ம்மா.. எனக்கு ஒரு வேல கெடச்சி இருக்கு.. உங்க கண்ணுக்கு படாத தூரம் நான் போயிடறேன்.. எனக்கு இந்த கல்யாணம் மட்டும் வேணாம் ம்மா.. நீயாவது புரிஞ்சிக்க ம்மா “, என அழுதபடி கூறினாள். 

 

“என்ன டி பேசற நீ? ஊரெல்லாம் பத்திரிக்க குடுத்தாச்சி.. இப்போ இப்டி சொல்ற.. அம்மாவுக்கு சத்தியம் பண்ணு.. வீட்ட விட்டு நீ கல்யாணம் நடக்கற வரை போகமாட்டன்னு.. அப்பாவுக்கு ஒண்ணுன்னா நான் உயிரோட இருக்க மாட்டேன்.. அப்பா எது பண்ணாலும் நம்ம நல்லத்துக்கு தான் பண்ணுவாரு .. பணம் எல்லாம் நமக்கு பிரச்சனை இல்ல.. அப்பா குடுத்த வாக்கு தான் நமக்கு இப்போ முக்கியம்.. நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க தமிழு .. “ ,என அவளை சமாதானம் செய்தார். 

 

நங்கைக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று புரியவில்லை. அழுது அழுது உடலும் மனமும் ஓயிந்து போய் அவள் அறைக்குள் முடங்கி விட்டாள். 

 

இந்த கூத்தை எல்லாம் வினிதாவும் வந்து பார்த்துவிட்டு நங்கையை காணாமலே திரும்பி சென்றாள். அவள் எடுத்த முடிவில் புது உறுதி பிறந்தது. தன் தோழியின் வாழ்விற்காக துணிந்து ஆச்சி கூறிய காரியங்களை செய்ய ஆரம்பித்தாள். 

 

இரவு மகன் வீட்டில் உணவுண்ட பின் மகள் இல்லம் வந்த வேம்பு பாட்டி, பேத்தியின் நிலை கண்டு மகளிடம் பொங்கினார். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. Janu Croos

   மனுஷனா இந்த ஆளு…வாக்கு முக்கியம்னு பொண்ணோட வாழ்ககைய குழி தோண்டி.புதைக்க பாக்குறாரே
   நங்கை அம்மா அதுக்கு மேல. தன் புருஷன் நல்லா இருக்கனும்னு பெத்த பொண்ணு வாழ்க்கையில விளையாடுறாங்க. இதுங்க எல்லாம் என்ன ஜென்மம். இதுங்க எல்லாம் நல்லா அனுபவிக்கும்ங்க.