Loading

அத்தியாயம் 22

யாஷ் பிரஜிதனைக் கண்ணிமைக்காது பார்த்திருந்த மகேந்திரனின் இதயம் சுக்கு நூறாய் உடையும் நிலையில் இருந்தது.

அவர் வெறுத்த நிறம். அவர் வெறுக்கும் தோற்றம். எப்போதும் ஏற்றுக்கொள்ள இயலாத திமிர் பிடித்த நடத்தை. அதை எல்லாம் தாண்டி அவனுக்குள் தனது ஆண்டாளின் செயலைக் கண்டவருக்குக் கண்களில் நீர் தேங்கி நின்றது.

மற்றவர்கள் மகேந்திரனைக் கவனிக்கவில்லை. ஆனால், நிதர்ஷனா அவரையே தானே பார்த்திருந்தாள்.

அவரது கண்ணீர் கண்டு சிறு கேலிச் சிரிப்பு அவளிடம். அவளைப் பார்த்த யாஷ், “தனியா சிரிச்சுட்டு இருக்க?” எனப் புரியாது கேட்க, “இந்தச் சுதந்திர நாட்டுல சிரிக்கிறது கூடத் தப்பா யாஷ்?” எனப் பாவமாக வினவியதில், “மெண்டல்!” எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

மகேந்திரனால் அதற்கு மேல் அங்கு அமர இயலவில்லை. நடுங்கிய கால்களுடன் தனதறைக்குச் சென்று விட்டார்.

ஆனால், அதன்பிறகு அவன் உணவு உண்ண வரும் நேரமெல்லாம் அவரும் தவறாது, வரவேற்பறையில் ஈஸி சேரில் சாய்ந்து அமர்ந்து கொள்வார். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால், மற்றவர்களுக்கு அவரது செயல் வித்தியாசமாகத் தோன்றவில்லை. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டதால், புழுக்கம் தாளாது வெளியில் வந்து அமர்ந்திருப்பார் என எண்ணிக் கொண்டனர்.

மகேந்திரன், யாஷைக் கவனித்துப் பார்ப்பதில் நிதர்ஷனாவிற்குப் பரம சந்தோஷமாக இருக்கும். அதற்குக் காரணமெல்லாம் யோசித்து அவள் நேரத்தை வீண் செய்யவில்லை. தன்னைக் கடத்திக் கொண்டு வந்தவனுக்காக, எதற்குப் பரிந்து பேச வேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றவில்லை.

யாஷும், மகேந்திரனின் பார்வையைக் கண்டு கொண்டான் என்றாலும் எதுவும் புரியவில்லை.

‘இந்த ஓல்ட் மேன் எதுக்காக என்னைப் பார்த்துட்டே இருக்காரு.’ என்ற சந்தேகம் எழுந்திட, அதை எல்லாம் விட அவனது வேலை நிமித்தமான எண்ணங்களே அவனை அதிகம் ஆக்கிரமித்திருந்தது.

அடுத்த இரு தினங்களில் மழை மெல்ல மெல்லக் குறைந்து முற்றிலும் நின்றிருந்தது. சில மணி நேரங்களில், மின்சாரமும் சீரமைக்கப்படும் என்ற தகவல் கிட்ட அனைவரையும் விட நிதர்ஷனாவிற்கும், யாஷ் பிரஜிதனுக்கும் தான் நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.

இங்கிருந்து இவர்களுக்காக நடிக்கத் தேவை இல்லை. அந்த வீட்டிற்குச் சென்றாலாவது ஆளுக்கொரு மூலையில் இருந்து கொள்ளலாம் என்ற எண்ணமாம்!

கண்மணிக்கும், ஆதிசக்திக்கும் தான் மழை நின்றதும் பெரும் வருத்தம். யாஷை இனிப் பிடித்து வைக்க இயலாதே!

நிதர்ஷனாவிற்கும் கால் வலி சற்று மட்டுப்பட்டிருக்க, கண்மணி மற்றும் சிந்தாமணியிடம் வளவளத்துக் கொண்டே இருந்தாள்.

கண்மணியோ, “அண்ணி, தாத்தாவோட அலமாரில இருந்து நிறையப் பொருள் கீழ விழுந்துச்சுல… அதுல போட்டோஸ் நிறைய இருக்கு. பார்க்குறீங்களா?” என ஆரம்பித்தாள்.

“யார் போட்டோஸ் இருக்கு கண்மணி?”

“யாஷ் அண்ணாவோட போட்டோஸும் இருக்கும்…”

“அஞ்சு வயசு வரைக்கும் இருக்குற போட்டோஸ் தான? அதுவும் இத்தாலில இருந்தது தான இருந்துருக்கும்.” நிதர்ஷனா கணித்துக் கேட்க, மடிக்கணினியில் வேலையாக இருந்த யாஷ் பிரஜிதனின் காதிலும் இந்த உரையாடல்கள் விழுந்தது.

கண்மணி இருண்ட முகத்துடன், “ஆமா அண்ணி, ஆனா அம்மா அண்ணாவோட இப்ப இருக்குற போட்டோஸ் வரைக்கும் வச்சுருக்காங்க.” என மெலிதாய் கூற, ஒரு கணம் ஆடவனின் விரல்கள் வேலை நிறுத்தம் செய்தது.

“எப்படி?” நிதர்ஷனா குழப்பமாகக் கேட்க, “அ…” ஏதோ பேச ஆரம்பித்தவள்,

“தெரியல அண்ணி!” என்றாள்.

தேவையில்லாமல் இந்தப் பேச்சை எடுத்து விட்டோமோ எனத் தயக்கம் கொண்டு கண்மணி பேச்சை மாற்ற முற்பட, சிந்தாமணியோ வேகமாக எழுந்து “இருங்க. முதல்ல தாத்தாட்ட இருக்குற போட்டோவை எல்லாம் எடுத்துட்டு வரேன்.” என்று ஓடினாள்.

‘இவள் வேற ராங் டைம்ல பெர்பார்ம் பண்றா’ கண்மணி கடுப்பானாள்.

தனது அறைக்குள் வந்து பழைய புகைப்படங்களை எல்லாம் அள்ளிக் கொண்டு போன சிந்தாமணியிடம் மகேந்திரன் வினவ, “ரித்தி அக்காக்குக் காட்ட தாத்தா…” என்றாள்.

அதில் வீட்டினரின் பழைய புகைப்படங்களும், யாஷின் குழந்தைப் பருவங்களும் இருந்தது.

அந்தக் குடும்பத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலத் தனித்துத் தெரிந்தான்.

‘சப்பி’யாகக் குழந்தையிலேயே கண்களில் அழுத்தம் கொண்டு இருந்தவனைப் பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை நிதர்ஷனாவிற்கு.

“யாஷ் இங்க பாருங்க… குட்டிப் பாப்பால நீங்க கொழுகொழுன்னு இருக்கீங்க. இப்பதான் கன்னமெல்லாம் ஒட்டிப்போய் நோஞ்சானாகிட்டீங்க” என்றதில் அவன் முறைத்தான்.

பெண்களிருவரும் கமுக்கமாகச் சிரிக்க, மகேந்திரனும் மெல்ல அங்கு வந்து விட்டார்.

அவரது வரவில் விழி உயர்த்திய யாஷ் பிரஜிதன், அவரது புறம் திரும்பாது மடிக்கணினியிலேயே புதைந்து கொள்ள, மகேந்திரன் தேடிப்பிடித்துத் தனது பெற்றோர், அண்ணன் குடும்பம், குழந்தைகள் மற்றும் மனையாளுடன் இணைந்து எடுத்த குடும்பப் புகைப்படத்தை எடுத்தார்.

அதில் அமுதவல்லியும், இளவேந்தனும் சிறுவர் சிறுமியராய் ஆதிசக்தியுடனும், அழகேசனுடனும் நின்று கொண்டிருந்தனர்.

அதிலும் ஆண்டாள், மகேந்திரனுக்குப் பின்னால் வெட்கம் கலந்த புன்னகையுடன் நின்றிருக்க அதனை யாஷிடம் காட்டியவர், “ஏப்பா… உன் கம்ப்யூட்டர்ல குடுத்து இந்த போட்டால இருக்குற ஆண்டாளைத் தனியாக் காட்ட முடியாதா?” எனக் கேட்டிருந்தார்.

அவரது கேள்வியில் அவனை எதிர்கொள்ளத் தயக்கமும், தனது மனையாளின் புகைப்படத்தை எடுக்க வேண்டுமென்ற சிறுபிள்ளைத் தனமும் நிறைந்திருக்க, சிறுவனாய் அவனிடம் வினவினார்.

மகேந்திரன் தன்னிடம் பேசுவாரென அவனும் எதிர்பார்க்கவில்லை. தடுமாற்றம் அவருக்குத் தானே, அவனுக்கு இல்லையே!

அந்தப் புகைப்படத்தைக் கையில் கூட வாங்காதவனாக ஒரு நொடி பார்த்து விட்டுப் பின், “முடியாது!” என்று விட, மகேந்திரன் ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு, “சரி பரவாயில்ல…” என்று அப்புகைப்படம் கசங்காதவாறு மீண்டும் ஆல்பத்தினுள் சொருகினார்.

கண்மணிக்கும், சிந்தாமணிக்கும் வாயில் ஈ போவது கூடத் தெரியவில்லை. ‘நம்ம தாத்தாவா இது?’ என அதிசயித்துப் போயிருந்தனர்.

மகேந்திரன் அதன்பிறகு அங்கு நிற்கவில்லை. அவனிடம் என்ன பேசுவது? தான் அனுப்பவில்லை என்றாலும், அலெஸ்சாண்ட்ரோ அவனை இங்கு விட்டு வைத்திருக்க மாட்டான் எனப் புரிய வைப்பதா? அல்லது துளியும் அன்பை அவன் மீது காட்டி, அவனுக்கு உரிமை தர மறுத்ததற்கு மன்னிப்பு வேண்டுவதா? ஆண்டாளின் உணவு உண்ணும் செயல்முறை அவனுக்கு எப்படி வந்தது எனக் கேட்கும் ஆர்வம் அதிகரித்தாலும், அவனிடமிருந்து பறித்து வைத்த உரிமையும், உறவும் வார்த்தைகளை வீச விடவில்லை.

அமைதியாய் தனதறைக்குச் சென்று விட்டார்.

சிந்தாமணியோ, “அத்தை வேற நிறைய போட்டோஸ் வச்சுருந்தாங்க மாமாவோடது… நான் வாங்கிட்டு வரேன்.” என்று வேகமாக ஓட, கண்மணிக்கு இந்த விஷயத்தை மற்றவர்களிடம் சொல்ல ஆசை எழுந்ததில் இளவேந்தனைப் பார்க்கச் சென்றாள்.

புகைப்படங்கள் எல்லாம் இன்னுமே கட்டிலில் வீற்றிருக்க, யாஷ் பிரஜிதனின் பார்வை ஒரு புகைப்படத்தில் நிலைத்து நின்றது.

“இருந்தாலும், நீங்க இப்படிலாம் பண்ணக் கூடாது யாஷ்!” நிதர்ஷனாவின் பேச்சுக் கூட அவனைத் திசை திருப்பவில்லை.

“யோவ் அரக்கா!” சற்றே சத்தமாக அழைத்ததும் தான் அவள் புறம் திரும்பி முறைத்தான்.

“என்னடி கடன்காரி?”

“நான் பேசிட்டே இருக்கேன். நீ யார் முகமும் தெரியாத போட்டோவை எடுத்து வச்சு என்ன பார்த்துட்டு இருக்க?” எனக் கேட்டதில் “நத்திங், சொல்லு.” என்றவனின் விழிகள் இன்னுமே அப்புகைப்படத்தில் நிலைத்து இருந்தது.

“ஏன், தாத்தாட்ட மூஞ்சில அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொன்ன?” அவள் குற்றமாகப் பார்க்க,

“முடியாதுன்னா முடியாதுன்னு தான் சொல்ல முடியும். நான் என்ன இங்க ஆல்பம் எடிட்டிங் ஒர்க் பார்க்கவா வந்துருக்கேன். இடியட்ஸ்!” என அவளையும் சேர்த்தே திட்டினான்.

“அந்தப் பெரிய மனுஷன் உங்கிட்டப் பேசுறார் தான… அந்த முடியாதுன்ற வார்த்தையை பொலைட்டா சொல்லிருக்கலாம் அரக்கா”

“இவ்ளோ வருஷம் கழிச்சு, அவர் பேசணும்னு நான் தவம் இருக்கல. ஐ டோன்ட் நீட்!” என அசட்டையாகத் தோளைக் குலுக்கினான் யாஷ் பிரஜிதன்.

“இப்படிப் பண்ணாத யாஷ். நீ ஏ.ஐல பிரிச்சு மேயுறதுனால தான அவரு உங்கிட்டக் கேட்டாரு. ஏன் இதை அத்தைகிட்டயும், வேற யார்கிட்டயும் கேட்டிருக்கலாம்ல. உங்கிட்டக் கேட்டு இருக்காருன்னா என்ன அர்த்தம்?”

“என்ன அர்த்தம்?” பல்லைக் கடித்து நிதானித்தான்.

“உன்னை அவாய்ட் பண்ணதுக்கு, உங்கிட்ட எப்படிப் பேசி உன்னை ஃபேஸ் பண்றதுன்னு தெரியாமல் கூட இதை அவர் உன்கிட்ட உரிமையா கேட்டு இருக்கலாம் யாஷ்!” நிதர்ஷனா நிதானமாக விளக்கினாள்.

“உனக்கு அவ்ளோ தான் லிமிட்! எல்லார் மனசுலயும் புகுந்து அவங்க என்ன நினைக்கிறாங்கனு பார்க்குற அளவு உனக்கு அறிவு ஒன்னும் வழிஞ்சு தள்ளல. என் பெர்சனல் ஸ்பேஸ்ல அளவுக்கு மீறித் தலையிடாத. புரிஞ்சுதா?” விழிகளில் நெருப்பைக் கக்கிச் சாடினான் யாஷ் பிரஜிதன்.

“சரிதான் போயா…” முகம் கறுக்கச் சிலுப்பியவள், ‘உனக்கு இதெல்லாம் தேவையா நிதா…’ எனத் தன்னைத் தானே மனத்தினுள் திட்டிக்கொண்டு வெளியில் சென்று விட்டாள்.

மாலைவேளை தாண்டிய நேரம் மின்சாரமும் வந்து விட, யாஷ் நிதர்ஷனாவைத் தங்களது இருப்பிடத்திற்கு அழைத்து வந்து விட்டான்.

வந்ததுமே “ஆலம்பனா…” என அழைத்துச் செயற்கை நுண்ணறிவை நலம் விசாரித்துக் கொண்டாள் நிதர்ஷனா.

“நல்லாருக்கியா ஆலம்பனா… ஐ மிஸ் யூ சோ மச்!” என மனமுவந்து கூற,

“ஹாய் கடன்காரி, நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுனேன்.” என அதுவும் வருந்தியது.

“ச்சே… ஆலம்பனா இஸ் கிரேட்! மனுஷங்களுக்குத் தான் ஒரு உணர்வும் இருக்க மாட்டேங்குது…” எனக் குத்தினாள்.

இவர்களது நல விசாரிப்பைக் கேட்டுக் கொண்டே அலைபேசியை உபயோகித்துக் கொண்டிருந்த யாஷிற்கு, அவளது கோபமுகம் சிரிப்பையே தந்தது.

மெத்தையில் டொம்மெனப் படுத்தவள், “ஆலம்பனா, ஒரு பாட்டுப் போடு. உன்கூடச் சேர்ந்து பாடி ரொம்ப நாள் ஆச்சு.” எனச் சிலாகிக்க, “என்ன சாங் வேணும்?” எனக் கேட்டது ஆலம்பனா.

இதனைக் கண்டுகொள்ளாது அலைபேசியை எடுத்துத் தனியே சென்றவன், அடுத்த அரை மணி நேரத்திற்கு ஆஹில்யனிடம் பல உத்தரவுகளைக் கொடுத்தான்.

ஆஹில்யன் குழம்பி, “ஆனா சார்… இப்ப நம்ம வேலையே நிறைய இருக்கு. உங்க ரிசர்ச் ஒர்க் சம்பந்தமாவே ஏகப்பட்ட…” என ஆரம்பிக்க, “உன்னால முடியலைன்னா ஜஸ்ட் ரிசைன் தி ஜாப்!” ஒரே வார்த்தையில் அவனைப் பதற வைக்க, “சார் சார், அதெல்லாம் பண்ணிடலாம் சார்…” எனச் சரணடைந்து விட்டான்.

மீண்டும் அறைக்குள் நுழையும் போது ஆலம்பனா ஏதோ ஒரு தமிழ் பாடலை ஒலித்துக் கொண்டிருக்க, நிதர்ஷனா கண்ணயர்ந்திருந்தாள்.

அதனை நிறுத்தி விட்டவனுக்கு, ஏனோ இத்தனை நாள் அவன் உருவாக்கிய எலிசாவை மிஸ் செய்யும் எண்ணமே இல்லை. அதான், கூடவே ஒரு ஆலம்பனாவை வைத்திருக்கிறானே… தானாகப் புன்னகையும் மலர்ந்தது.

மறுநாள் காலையில், யாஷ் பிரஜிதன் மாடியில் இருந்து இறங்கி வரும்போது அவனுக்குப் பிடித்த பாஸ்தா டேபிளின் மீது இருந்தது.

‘மாஸ்டர் செஃப்பான சமைக்கும் இயந்திரம் தான் இப்போது வேலை செய்யுமே, பிறகெதற்கு இவள் இந்தக் காரத்தை அள்ளிப் போடும் ரிஸ்க்கை எடுத்துக் கொண்டிருக்கிறாள்.’ எனப் பார்த்தபடியே அவன் அருகில் வர, அவனது பார்வையிலேயே “பாஸ்தா தான். காரம் எல்லாம் இல்ல… மறுபடியும் கரண்ட் போயிடுச்சு. கொஞ்ச நேரத்துல வந்துடும்னு நினைக்கிறேன்…” எனப் பதில் அளித்துக் கொண்டாள்.

‘இவளோட…’ எனக் கடுப்படித்தபடியே பாஸ்தாவை வாயில் வைத்தவனுக்கு உணவின் சுவையில் விழி உயர்ந்தது.

“நைஸ் ஒன்!” என்று அவன் உண்ண, அவளோ பாஸ்தாவை வாயில் வைத்து விட்டு முகத்தைச் சுளித்தாள்.

“வாயிலேயே வைக்க முடியல. மண்ணு மாதிரி இருக்கு. ஒரு மனுஷனுக்கு நான் வெஜ் தான் கிடைக்கல. காரசாரமா கூட சாப்பிட முடியாதா?” எனப் புலம்பிட, “ஏய், நானா உன்னைச் செய்யச் சொன்னேன்…” எனக் கடிந்தான்.

“அப்புறம்… உனக்குப் பிடிச்ச மாதிரி இல்லைன்னா நீ அஸ்ஸு புஸ்ஸுன்னு காரத்துல, கூடக் கொஞ்சம் சிவந்து போயிடுற. அன்னைக்குல்லாம் பொங்கலைச் செஞ்சு ரெண்டு வேளைக்கும் நான் தான் சாப்பிட்டேன். எனக்கு மட்டும் என்னத்தச் சமைக்க நானு!” எனச் சிலுப்பிக் கொண்டே பாஸ்தாவைக் காலி செய்தாள்.

“போடி அரை மெண்டல்…” எனத் திட்டிக் கொண்டேவாகினும் அவள் செய்ததை அவனும் உண்டு கொண்டான்.

‘ம்ம்க்கும்! இவரு ரொம்பத் தெளிவுதான்…’ மனத்தினுள் தான் திட்டினாள். வெளியில் சொல்லி அவனது கலப்படக் கண்கள் வழியாக வரும் நெருப்பைத் தாங்கவெல்லாம் சக்தி இல்லை.

பிறகு சந்தேகம் வந்தவளாக, “எனக்கு ஒரு டவுட்டு அரக்கா… அப்போ உனக்கு இத்தாலில பேச்சுத் துணைக்குக் கூட யாருமே இல்லையா?” எனக் கேட்க,

“என் ஆண்ட்டி இருந்தாங்க. அப்போ அப்போ வந்து பார்த்துட்டுப் போவாங்க, வெரி சுவீட் பெர்சன்! என் பப்பாவோட சிஸ்டர்.” என்றான்.

“ரைட்டு! அப்போ அத்தைக்குப் பொண்ணு எதுவும் இல்லையா?”

“இருக்கா. மோனா!”

“ஓஹோ, அப்போ அத்தை பொண்ணைக் கட்டிக்கலாமே.”

“ம்ம், பண்ணிருக்கலாம். ஆனா நான் ஜெயிலுக்குப் போயிருக்கணுமே!” உதட்டைப் பிதுக்கி மெலிதாய் முறுவலித்தவனைப் புரியாது பார்த்தாள்.

“அவளுக்கு 12 வயசு தான் ஆகுது கடன்காரி!” என்றதும் அவளும் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.

“ரித்தியைச் சின்ன வயசுல இருந்தே தெரியுமா உங்களுக்கு?”

“ரொம்பச் சின்னதுல இருந்து இல்ல. நான் பிஸினஸ்ல ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் தான்”

“எப்ப ஜாயின் பண்ணுனீங்க?”

“அரௌண்ட் 17 ஏஜ். அதுக்கு முன்னாடி இருந்தே ரிசர்ச் பண்ணிட்டு இருந்தேன். ப்ராப்பரா பிஸினசுக்குள்ள வந்தது அப்போ தான்…” என்றவனைத் திகைத்துப் பார்த்தாள்.

“அவ்ளோ சின்ன வயசுலயேவா… அப்போ இருந்தே ரித்தியை லவ் பண்றீங்களா?” எனக் கேட்டதும் உண்பதை நிறுத்தி விட்டுப் புருவம் சுருக்கினான்.

“லவ்? நோப்…” என எளிதாகக் கூறியதில் தலையைச் சொறிந்தாள்.

“அவளைத் தான கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க? அப்போ லவ் பண்ணலைன்னு சொல்றீங்க…”

“மேரேஜ் பண்ணிக்க எதுக்காக லவ் பண்ணனும்? நாட் நெசசரி! நான் அவளை மேரேஜ் பண்ணிட்டா, எலைட் கம்பெனியோட மொத்தப் பொறுப்பும் எனக்கும் ரித்திக்கும் வந்துடும். அதுல நான், எனக்குத் தேவையான சேஞ்சஸ் செய்யறதுக்கு, அந்தக் கம்பெனியோட சேர்மன் போஸ்ட்ல கண்டிப்பா இருக்கணும். இல்லன்னா, என்னோட இத்தனை ரிசர்ச்சும் அர்த்தம் இல்லாமல் போயிடும். வரதராஜன் அங்கிள், ஐ மீன் ரித்தியோட அப்பாவுக்கு ஹெட் வெய்ட் கொஞ்சம் ஜாஸ்தி. வேணும்னே நான் அப்ரூவ் கேக்குறதை ரிஜெக்ட் பண்ணுவாரு. சேர்மன் போஸ்ட் குடுத்தா இங்க கன்டினியூ பண்ணுவேன்னு நான் டீல் பேசுனேன். அவர், அவரோட பொண்ண மேரேஜ் பண்ணிக்கச் சொன்னாரு. தட்ஸ் இட்!” எனப் பேசி முடித்தவனைக் கன்னத்தில் கை வைத்துப் பார்த்தாள் நிதர்ஷனா.

“யோவ்… என்னமோ கல்யாணம் பண்றதைக் காயலான் கடைல பழைய பொருளை விக்கிற மாதிரி அசால்ட்டா சொல்லிட்டு இருக்க… உங்களுக்குலாம் கல்யாணம் ஜஸ்ட் லைக் தட் தான் போல. குடும்பத்துக்காகத் தொழில் பார்க்குறவங்களைத் தான் பார்த்துருக்கேன். தொழிலுக்காகக் குடும்பத்தை உருவாக்க நினைக்கிறவனை இப்பத்தான் பார்க்குறேன். நல்லாருக்குயா உங்க டீலிங்கு…” எனச் சலித்தபடியே பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சிங்கில் போட்டாள்.

அவளது கூற்றைக் குழப்பமாக யோசித்தவனுக்குத் திருமண உறவின் மீதெல்லாம் பெரிய நாட்டமில்லை.

தான் உண்ட தட்டுடன் அடுக்களைக்கு வந்தவனிடம் இருந்து தட்டை வாங்கியவள், “எனக்கு இன்னொரு டவுட்டு!” என்றாள்.

விழி உயர்த்தி என்னவெனப் பார்த்தவனிடம், “உன் அப்பா மாதிரி கேர்ள் ப்ரெண்ட்ஸ் பழக்கமெல்லாம் இல்லையா உனக்கு?” எனக் கேட்க,

“ஆக்சுவலி அந்த லைஃப் எனக்குப் பிடிச்சுது. நினைச்ச நேரத்துல நினைச்ச பொண்ணோட இருக்குறது நல்லாத்தான் இருக்கும். பட் அன்ஃபார்ச்சுனேட்லி, எனக்கு அதுக்குலாம் டைம் இல்ல.” எனக் கேலி நகையுடன் கூறியதில் அவனைப் பார்வையால் சுட்டெரித்தவள், தட்டை நங்கென வைத்தாள்.

“பிடிக்குமாம் அந்த லைஃப்பு…” எனப் பற்களை நறநறவெனக் கடித்தவள்,

“இதோ பாருயா… கல்யாணம் பண்ணிக்க லவ் தேவை இல்ல தான். ஆனா, அதுல நேர்மை இருக்கணும். பிடிச்சுப் பண்றியோ, பிடிக்காமல் பண்றியோ அந்தப் பொண்ணை உன் அப்பா மாதிரி ஏமாத்துற வேலை எல்லாம் வச்சுக்காத. உனக்கு எல்லாரும் சேர்ந்து குடுத்த தனிமையை உன் குழந்தைக்கும் குடுத்து வைக்காத. கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம், தெரியாமல் பண்ணிக்கிட்டோமோன்னு யோசிச்சுட்டா, அவ்ளோ நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போயிடும். இந்த ரிசர்ச், பிசினஸ் எல்லாம் உனக்கு நரம்புத் தளர்ச்சி வர்ற வரை தான். அதுக்கு அப்புறம் உன் பொண்டாட்டி தான் பார்க்கணும்.” எனக் கழுத்தை வெட்டி நொடித்துக் கொண்டாள்.

எந்தப் பெண்ணையும் ஏமாற்றி விடக்கூடாது என்ற கண்டிப்பும் அவளது குரலில் தெறித்தது.

அவளை அடுப்பு மேடையில் சாய்ந்து கையைக் கட்டியபடி சுவாரஸ்யமாகப் பார்த்திருந்தவன், “என்னடி மிரட்டுறியா? எனக்கே ஆர்டரா?” எனத் தனது லேசர் விழிகளால் அவளை ஊடுருவ,

“ஆமா மிரட்டுவேன். நீ மட்டும் ஏமாத்திப் பாரு… தேடி வந்து கடிச்சு வைப்பேன்!” என மூக்கைச் சுருக்கி முறைத்தாள்.

யாரோ ஒரு பெண்ணின் வாழ்வு கெடக் கூடாது என்ற அக்கறையா? அல்லது அவன் சிறிதாகக் கூடத் தவறிவிடக் கூடாது என்ற ஆதங்கமா எனத் தெரியாது பாத்திரத்தை அவளே கழுவத் தொடங்க, அதனைத் தடுத்தவன், “மெஷின்ல போடு!” என்றான் மெதுவாக.

“மறுபடியும் கரண்ட் போயிடுச்சுல. எப்ப வருமோ? இன்வெர்ட்டர வேஸ்ட் பண்ண வேணாம்…” எனக் கழுவ, “ஓகே மூவ். ஐ வில் வாஷ் மை ப்ளேட்ஸ்.” என்றிட, “பரவாயில்ல, கம்மியா தான இருக்கு.” என்றாள்.

“ப்ச்! ஐ செட் மூவ்…” இம்முறை அழுத்தமும், கடுமையும் கலந்து கூறிட, அதில் பயந்து வேகமாக நகர்ந்தவள், “என் கை பட்டு உன் தட்டு ஒன்னும் கலர் மாறிடாது.” என்றாள் மூச்சிரைக்க.

அவளது கூற்றுப் புரியாதவனாக, “உன்னை நான் ஆக்ட் பண்ணத்தான் கூட்டிட்டு வந்துருக்கேன். என் சர்வன்ட்டா இல்ல.” ஒரே வார்த்தையில் அவள் அவனது தட்டைக் கழுவுவது அவளுக்குக் கவுரவக் குறைச்சல் எனக் கூறி விட்டவனை விழி விரியப் பார்த்தாள். கூடவே அவளது முகத்தில் சிறிய வேதனை.

“நான் உன் ஆலம்பனா தான?”

“எஸ்… ஆலம்பனா தான், ஆனா அடிமை இல்ல!” என்றவன் அவளது தட்டையும் சேர்த்துத் தானே கழுவிட, அவள் ஒன்றும் சொல்லாமல் அறைக்குச் சென்று விட்டாள்.

சில நிமிடங்களில் அவளது அமைதி உறுத்திட, அலுவல் அறைக்குச் செல்லப் போனவன் அதனைத் தவிர்த்து விட்டு அவளைத் தேடித் சென்றான்.

பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த ஒற்றை ஊஞ்சலில், காலை மடக்கி அமர்ந்திருந்தாள் சோகமே உருவாய்.

“ஓய்!” மேலுதட்டை ஈரம் செய்தபடி அவளருகில் வந்து நின்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இன்னாயா, இந்நேரத்துக்கு உன் கூண்டுக்குள்ள போய் அடைஞ்சுடுவியே. இன்னும் போகல?” எனக் கேட்க,

அவளது வாடிய வதனத்தைத் தாண்டி அவன் எங்கே சென்று வேலை செய்வது?

“ஆர் யூ ஓகே நிதா?” இதுவரை வெளிக்காட்டாத மென்மையுடன் அவன் கேட்டதும், தானாகக் கண்கள் கலங்கிப் போயிற்று.

“ம்ம், ஓகே தான்.” என உர்ரெனக் கூறிட, “பார்த்தா அப்படித் தெரியலையே” என்றான் தாடையைத் தடவி.

“ஒன்னும் இல்ல. நிவே ஞாபகம் வந்துடுச்சு. அவனும் இப்படித்தான்… என்னை வீட்டு வேலை செய்யவே விட மாட்டான். கடிவாளம் கட்டுன குதிரையாட்டம் படி படின்னு உசுர வாங்குவான். எனக்கு மொதவே அவன் எந்திரிச்சு சமைச்சு வச்சுடுவான். அதுக்கு அப்புறம் துணிக்கடைல போய் கால் கடுக்க நிக்கணும், நைட்டு 12 மணி வரை. எனக்கு நெனவு தெரிஞ்சதுல இருந்தே துணிக்கடைல தான் வேலை பார்த்தான். ரொம்பக் கஷ்டப்படுறானேன்னு, அக்கம் பக்கத்துல வீட்டு வேலைக்குப் போறேன்னு அடம் பிடிச்சேன். என்கூட ரெண்டு நாளாப் பேசவே இல்ல. அடுத்த வீட்டுக்கு வேலைக்கு அனுப்புறதுக்கு நான் ஏன் உசுரோட இருக்கணும்னு சொல்லுவான்…

அதுக்கு அப்புறம் ரொம்ப அடம் பிடிச்சு கிரைண்டர் வாங்கி, இட்லி மாவு அரைச்சுக் கொடுத்துட்டு இருந்தேன். அதுக்கும், அவன் தான் கிரைண்டரைத் தூக்கிக் கழுவுவான். என்னைக் கழுவ விட மாட்டான். அவன் இல்லாத நேரத்துல கதிரு வந்து கழுவிக் குடுப்பான். பெரிய கல்லுல்ல… அதுனால வெயிட் தூக்கவே விட மாட்டானுங்க.

பெரிய பங்களால இல்ல, வீட்ல லைட்டு பேன் தவிர வேற எந்த வசதியும் இல்ல. ஆனா, என் அண்ணன் கூட நான் ராணி மாதிரிதான் இருந்தேன். அவன் போனதுக்கு அப்புறம் தான் எல்லாமே போச்சு. இப்ப நீயும் என்னைக் கழுவ விடலையா, அதான் அவன் ஞாபகம் வந்துடுச்சு.” எனச் சிறுமியாய் தலையாட்டிக் கதை கூறியவள் எப்போதும் போல இப்போதும் வித்தியாசமாகவே தெரிந்தாள்.

தான் செய்யும் சிறு செயலையும், அவளுக்குக் கிரீடமாக வைத்துக் கொள்கிறாள். அதுவே அவளுக்காக இன்னும் பெரியதாகச் செய்யத் தூண்டியது.

நிவேதனைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் முழுதாக இறங்கி இருக்கிறான் தான். அதையும் தாண்டிய பரிசளிக்க விரும்பினான். இங்கிருந்து செல்லும் முன் நிச்சயம் அதனைச் செய்து விட முற்பட்டான்.

அதையே தான் அவளும் எண்ணி இருந்தாள். ரித்தியாகத் தன்னை நடத்தினாலும், தனக்கென அவன் கொடுக்கும் சிறு சுயமரியாதை அவளைப் பாதித்தது.

இங்கிருந்து செல்லும் முன், அவனது குடும்பத்துடன் அவனைச் சேர்த்து வைத்து விட்டே செல்ல வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள்.

அதற்கும் தோதாய் அடுத்ததடுத்த நிகழ்வுகள் நடந்தது.

இப்போதெல்லாம், அவளை வீட்டினுள் பூட்டி வைப்பதில்லை அவன். அதனால், நினைத்த நேரத்திற்குப் பக்கத்து வீட்டிற்குச் செல்வதும் வருவதுமாக இருந்தாள்.

ஆதிசக்தியிடம் பேசும்போது மட்டும் குத்தல் பேச்சு இருக்கும். மகேந்திரன், நிதர்ஷனாவிடம் அவ்வப்பொழுது நன்றாகப் பேசிக் கொண்டாலும் யாஷைப் பற்றிப் பேசத் தவிப்பார். அவரது தவிப்புப் புரிந்து நாசூக்காகத் தவிர்த்து விடுவாள்.

ஓரிரண்டு நாள்கள் கடக்க, அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது. கண்மணியும், சிந்தாமணியும் கல்லூரிக்குச் சென்றனர்.

மாலை வரும் வழியில், கண்மணியுடன் படிக்கும் மாணவன் அவளைப் பின் தொடர்ந்தான். எப்போதும் வகுப்பில் கண்ணெடுக்காமல் பார்த்து வைப்பான். அதுவே அவளை எரிச்சலூட்டும். இப்போதோ பின்தொடர்ந்து வந்ததில் கிலி பிடித்தது.

“எதுக்கு என் பின்னாடி வர்ற முருகா?” கண்மணி அவன் முன் சென்று கேட்டு விட, “இவ்ளோ நாளா காலேஜ் இல்லாம உன்னைப் பார்க்க முடியல கண்மணி. ரொம்பக் கஷ்டமாப் போச்சு தெரியுமா?” என்றதில்,

“இங்க பாரு முருகா, உன்மேல எனக்கு எந்த எண்ணமும் இல்ல. இதை ஏற்கெனவே உனக்குத் தெளிவாய் சொல்லிட்டேன். என் பின்னாடி வர்றது சரி இல்ல, ஒழுங்கா உன் வீட்டப் பார்த்துப் போயிடு” என்றாள் கண்டிப்பாக.

“அப்படியெல்லாம் போக முடியாது கண்மணி. எனக்கு உன்னைப் பிடிச்சுருக்கு. நீ சரின்னு சொல்லு… உன் வீட்ல வந்து பேசுறேன் என் குடும்பத்தோட. இல்லைன்னு சொன்னாலும் நான் வருவேன். என் அப்பா பஞ்சாயத்து யூனியன் தலைவரு, நான் சொல்றது தான் அவருக்கு வேதவாக்கு!” எனத் தன் பவரைக் காட்டினான்.

சிந்தாமணியோ, “வேதவாக்கு, வேகாத பாக்குன்னு உருட்டுறதை விட்டுட்டு வேலை வெட்டியப் பாருடா வெண்ண… கண்மணி, நீ வாடி. இந்தப் பைத்தியம் இப்படியே உளறிட்டு இருக்கட்டும்…” என அவளை இழுத்துச் செல்ல முருகன் விடவில்லை.

“கண்மணி, ப்ளீஸ் நில்லு. என்னைப் பார்க்காம உன்னால இருக்க முடியல தான? உண்மையைச் சொல்லு.” எனக் கேட்க,

“நீ என் ஞாபகத்துலயே இல்ல முருகா, ஒழுங்காப் போயிடு.” எனக் கண்டித்தாள்.

“இல்ல, நீ பொய் சொல்ற.” முருகன் விடாது கேட்க, கண்மணி அவனைக் கண்டுகொள்ளாது நடந்து கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில் அவளது கையைப் பிடித்து விட்டவன், “நில்லுன்னு சொல்றேன்ல. அதெப்படி உனக்கு என் ஞாபகம் வராமல் இருக்கும்டி… ரொம்பத் திமிரு காட்டாத. ஏதோ உன்னை லவ் பண்றதுனால தான் உன் பின்னாடி இப்படி நாய் மாதிரிக் கெஞ்சிட்டு வரேன்.” என்று கத்தி விட்டான்.

அதில் மற்றவர்களும் திரும்பிப் பார்க்க, கண்மணிக்குக் கண் கலங்கி விட்டது.

“கையை விடு முருகா, உனக்கு அவ்ளோ தான் மரியாதை!” எனக் கமறலுடன் கூற, “நீ என்னை விரும்புறேன்னு சொல்லு, விடுறேன்.” என்றான் பிடிவாதமாக.

சிந்தாமணி, “டேய் அறிவில்லை, விடுடா அவள் கையை.” என்று அவனை அடிக்கப் போக, அவளைப் பிடித்து ஒரே தள்ளாகத் தள்ளியதில் அவள் சாலையில் சென்று விழுகப் போக, வேகமாக வந்த கார் ஒன்று அவள் சட்டென இடையில் விழுந்ததும் சடாரென பிரேக் போட்டது.

“சிந்தா…” கண்மணி பயத்தில் அலறி விட, சிந்தாமணியும் அரண்டு விட்டாள்.

வேகமாகக் காரில் இருந்து இறங்கிய யாஷ் பிரஜிதன், “ஏய் ஸ்டுப்பிட்!” என ஆரம்பித்ததும் தான் காரில் வந்து விழுந்தது சிந்தாமணி என்றே தெரிய, “நீ என்ன செய்யற இங்க?” என்றபடி கீழே விழுந்தவளைத் தூக்கி விட்டான். நிதர்ஷனாவும் வேகமாகக் காரில் இருந்து இறங்கி இருந்தாள். அவளது காயத்தைச் சோதிக்கத்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

கையில் சிறு சிராய்ப்பு இருக்க, “நல்லவேளை! நீங்க பிரேக் போடலைன்னா, இந்நேரம் நான் பிரேக் ஆகிருப்பேன் மாமா…” என்றிட,

“கார்ல வந்து விழுந்துட்டு ரைமிங் வேற…” என்று அவள் தலையிலேயே நங்கெனக் கொட்டினான்.

“நானா விழுகல மாமா, இவன்தான் தள்ளி விட்டான்…” என முருகனைக் கை காட்ட, அவனோ இன்னும் கண்மணியின் கையை விட்ட பாடில்லை.

அவனையும், அவன் பிடித்திருந்த கையையும் ஒரு கணம் ஏறிட்ட யாஷ் பிரஜிதன், கண்மணியின் கண்ணீர் வழிந்த முகத்தையும் பார்த்தான்.

“என்ன ஆச்சு?” என்றதும் முருகன், “ஓ… நீ தான் இவள் வீட்டுக்கு வந்தவனா? இவள் அம்மாக்காரி வெளிநாட்டுல ஆட்டம் போட்டுட்டு வந்து இங்க ஒழுங்கு மாதிரி நடிச்சுக்குறா… அவளுக்குப் பிறந்துட்டு இவள் என்னமோ பெரிய இவள் மாதிரி, காதலிச்சா முகத்தைத் திருப்பிட்டுப் போறா… உன்னை எல்லாம் காதலிக்கிறதே பெருசுடி!” என்றிடக் கண்மணி கோபத்தில் சிவந்தாள்.

“என் அம்மாவைப் பத்திப் பேசுற வேலை வச்சுக்காத. கையை விடுடா…” என்று மூச்சிரைக்க,

“என்னடி துள்ளுற? உன் வீட்ல சம்பந்தம் வச்சுக்க என் அப்பா தான் யோசிக்கணும். அஞ்சு வயசுப் பையனோட டைவர்ஸ் பண்ணிட்டு வந்த அடுத்த மாசமே இன்னொரு கல்யாணம், அடுத்த எட்டு மாசத்துல நீ எப்படிடி பிறந்த? இதெல்லாம் ஊருக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா? எல்லாரும் மூஞ்சியைச் சுளிச்சாலும், உன்னை நான் காதலிச்சேன். கும்பிடு போட்டு நீயும் என் பின்னாடி வந்துருக்கணுமா இல்லையா?” என அருவருப்பாய் பேசியதில் நிதர்ஷனா எகிறினாள்.

“டேய் விளங்காதவனே… அடுத்த குடும்பத்துல என்ன நடக்குதுன்னு பார்க்குறது தான் உங்களோட வேலையா? பெரிய உலக அழகன் இவரு… இவர் லவ் பண்றேன்னு சொன்னா, அவளும் பண்ணனுமா? யாஷ் என்ன பார்த்துட்டு இருக்கீங்க, அவனை நாலு போடு போடுங்க!” என்றாள்.

யாஷ் பிரஜிதனோ அமைதியாய் நிற்க, அது கண்மணியை இன்னுமாக வருத்தியது.

“ஏய்… வெளிநாட்டுல வளர்ந்தவனுக்கு எங்கூரு அடியெல்லாம் தெரியாது. தேவை இல்லாம மூக்கை நுழைக்காம கிளம்பிட்டே இருங்க…”

“அதான் சொல்லிட்டாரே, வா போகலாம்!” நிதர்ஷனாவிடம் அசட்டையாய் கூறினான் யாஷ்.

“என்ன யாஷ்?” நிதர்ஷனாவும் வருத்தப்பட,

முருகனோ, “அப்படிக் கிளம்பிட்டே இரு. வந்துட்டான் வியாக்கியானம் பேச…” என்றிட, கண்மணியோ “மரியாதையாப் பேசு, அவர் என் அண்ணன்…” என்றாள், அவனைப் பற்றிச் சிறு சொல்லும் தாங்காதவளாக.

“உன் கூடவா பொறந்தான்? எவனுக்கோ பொறந்தவன் தான…”

“என் கூட தான் பொறந்தாரு. என் சொந்த அண்ணன்! உங்கூரு அடியைத் தான பார்த்திருக்க, அவர் ஊரு அடியைப் பார்த்தா நீ உசுரோடவே இருக்க மாட்ட. ஒழுங்கா கையை எடுத்துரு.” மீண்டும் ஒரு முறை எச்சரித்தாள்.

யாஷ் அப்போதும் அமைதி காக்க, நிதர்ஷனாவே “சொந்த அண்ணன்?” எனக் குழம்பினாள்.

“ஆமா, சொந்த அண்ணன் தான்! அவரோட அப்பா தான் எனக்கும் அப்பா… கண்மணி அலெஸ்சாண்டரோ!” என்ற கண்மணியைக் கண்டு,

“ஆத்தாடி! இன்னாயா இந்தப் புள்ள வேற தனியா உருட்டிட்டு இருக்கு…” என்று நிதர்ஷனா வாயில் கை வைக்க, இங்கு வந்த சில நாள்களிலேயே அதனைப் புரிந்து கொண்ட யாஷ் பிரஜிதன், கண்மணியை அழுத்தமாகப் பார்த்திருந்தான் சிறு வெற்றிப் புன்னகையுடன்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
148
+1
9
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. Wow, kanmani and Yash own brothers and sisters… Super twist…

    2. சூப்பர் சூப்பர் கதை ரொம்ப அருமையா போகுது.