
அத்தியாயம் 22
ஐந்து படுக்கையறை கொண்ட டியூப்லெக்ஸ் பங்களா அது. பெசன்ட் நகரின் கடற்கரைச் சாலையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் மாடர்ன் வில்லாவாக உயர்ந்திருந்தது.
மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலே, நீல நிறக் கடலின் ஆர்ப்பரிப்பைக் காண இயலும்.
“டேய் அண்ணா, மெஹந்தி போட இன்னும் ஆள் வரலை. எப்ப தான் வருவாங்க?” வேணி ப்ரணீத்திடம் கேட்டுக் கொண்டிருக்க, “வந்திருவாங்க டெவில்… சொல்லிட்டேன்.” என்றபடி தாய் அமுதினி கொடுத்த காபியை உறிஞ்சினான்.
தந்தை குமரன், டீ- நகரில் சிறிய ஜவுளிக்கடை ஒன்றை வைத்திருந்தார். கீழ் நடுத்தரக் குடும்பமாகத் தான் இருந்தது. இரு பிள்ளைகளையும் வெகு கடினப்பட்டே படிக்க வைத்தார்.
பிரணீத் தொழிலில் காலூன்றிய பிறகு தான், மளமளவெனக் குடும்பத்தை மேலே உயர்த்தினான்.
ஐந்து வருட கடின உழைப்பின் பரிசு இந்த வீடு. தங்கைக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைக்க அனைத்தும் தயார் நிலையில் வைத்திருந்தான்.
அவனைத் திருமணம் செய்து கொள்ள அமுதினி வற்புறுத்த, அவனோ தங்கைக்குப் பிறகு திருமணம் செய்வதாகப் பிடிவாதம் பிடித்து விட்டான்.
அவனைப் பெற்றோரிடம் இருந்து காக்கவே வேணியும் உடனே திருமணத்திற்குச் சம்மதித்தாள். அவளுக்குப் பிடித்த மணவாளன் கிடைத்ததும் ஒரு காரணம்.
வங்கியில் அரசு வேலை பெற்றிருந்தாள். கடந்த ஆறு மாதங்களாகத் தான் வேலைக்குச் சென்று தனது சொந்தக் காலில் நிற்கத் தொடங்கி இருந்தாள்.
“உன் அண்ணன் தான் கை நிறையச் சம்பாரிக்கிறானே. நீ ஏன் இப்படி வேலை பார்க்குறேன்னு ஓடுற? கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளை வேலை பார்க்க வேணாம்னு சொன்னா என்ன செய்வ?” என அதட்டுவார் அமுதினி.
“அப்படிப்பட்ட மாப்பிள்ளையை எதுக்குப் பார்க்குறீங்க? யார் எவ்ளோ சம்பாரிச்சலும் அவளுக்குன்னு ஒரு சம்பாத்தியம் இருக்குறது தான் நல்லது.” என பிரணீத் அதட்டிய பிறகே அவர் வாயை மூடினார்.
அதற்குத் தோதாய் மணமகனும் அமைய, குமரன் உடனே பேசி முடித்து விட்டார்.
“அப்படியே உனக்கும் பார்க்கலாமேப்பா…” என்ற குமரனை முறைத்து வைத்தான். மகனின் கோபமும் புரிந்திட, அவனிடம் நேரடியாகத் திருமணம் பற்றிப் பேசுவதில்லை அவர்.
“ப்ரணீ, ஸ்டோர் ரூம்ல உன் பழைய பொருளை எல்லாம் போட்டு வச்சுருக்க. ப்ரீயா இருந்தா, வேணும் வேணான்றதைத் தூக்கிப் போடுப்பா. தூசி படிஞ்சு இருக்கு. க்ளீன் பண்ண ஆள் வர்றாங்கள்ல. அப்படியே அதையும் க்ளீன் பண்ணச் சொல்லிடலாம்… நீ வேலையா அலைய ஆரம்பிச்சுட்டா அப்புறம் உன் ரூம்ல என்ன இருக்குன்னே பார்க்க மாட்ட.” என்று சலித்துக் கொண்டார்.
அதில் சிரித்தவன், “சரிம்மா பார்க்குறேன்.” என்றபடி ஸ்டோர் ரூமிற்குச் சென்றான்.
அங்கு, அமுதினி சொன்னது போன்றே அனைத்தும் தூசி படிந்தே இருந்தது. அவன் மனத்தைப் போல.
எதைத் தொட்டு விடக் கூடாது என்று எண்ணினானோ அதே அட்டைப் பெட்டியைப் பிரித்தவன், அதில் மை லவ் என எழுதி இருந்த டப்பாவை எடுத்தான்.
அவனும் அனுவுமாக எடுத்த புகைப்படங்கள் பல கேட்பாரற்றுக் கிடந்தது.
“ஐ லவ் யூ அனு! இந்த வயசுல கேட்கக் கூடாது தான், ஆனாலும் கேட்காம இருக்க முடியல. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” எனக் கேள்விக்குறி போட்டு கிரீட்டிங் கார்டுகள் ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அதனைக் கைகள் நடுங்க ஆசையாக வருடினான். ‘இவ்வுணர்வுகள் மரத்தே போய் விடாதா? ஏன் இப்படிப் புத்தம் புதுக் காதலாகவே எப்போதும் நெஞ்சில் தங்கித் தன்னை வாட்டுகிறது.’ என்ற கேள்விக்கு இன்றளவும் அவனிடமே பதில் இல்லை.
கண்ணில் நீர் பெருகி இருந்தது. அதுவும் கேட்பாரற்றுப் புகைப்படத்தில் மின்னிய அவளின் பொன்முகத்தில் பொத்தென விழுந்தது. அவள் மீது தனது கண்ணீர் பட்டாலும் துடித்துப் போனவன், அதனை அவசரமாகத் துடைத்தான்.
இங்கோ, “ஹேய் கல்யாணப் பெண்குட்டி, எந்தா செய்யுந்தது?” என்ற குரலிலேயே நிமிர்ந்து பாராது யாரென்று கண்டு கொண்ட வேணியின் முகம் மலர்ந்து போனது.
“சேட்டா…” என ஓடிச்சென்று அர்ஜித் அகனைக் கட்டிக் கொண்டாள்.
“நீங்க நாளைக்குத் தான் வருவீங்கன்னு ஒருத்தன் ஒப்பாரி வச்சுட்டு இருந்தான் சேட்டா. அச்சோ… எனக்காகத் தான வந்தீங்க…” அவன் கையைப் பிடித்துத் துள்ளிக் குதித்தாள் வேணி.
மந்தகாசப் புன்னகை வீசியவன், “என்டெ செல்ல தங்கச்சிக்காக மட்டும் தான்.” என அவளது கன்னம் கிள்ளிட,
“அது, என் அண்ணன்…” என்று அவளும் அவனது கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்.
குமரனும் அமுதினியும் இன்முகத்துடன் அவனை வரவேற்க, அகமொழி தான் திருதிருவென விழித்தபடி நின்றாள்.
ப்ரணீத்தும் இத்தனைப் பணக்காரனாக இருப்பான் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் அவனைக் கிண்டல் செய்யும் போதெல்லாம், அவளுக்கு ஈடு கொடுத்து அவனும் கிண்டல் புரிந்ததில், அவனது உயரத்தை நினைக்கவில்லை.
“இது என் வைஃப், அகமொழி” என அவளை அறிமுகப்படுத்த, “ஹாய் அண்ணி…” என அவளையும் கட்டிக் கொண்டாள் வேணி.
“சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டீங்க பார்த்தீங்களா?”
“ஞான் பரஞ்சு. நீ தன்னே வரவே இல்ல…” பொய்க்கோபம் கொண்டான் அகன்.
“நீங்க நிச்சயம்னு சொன்னீங்க. திடீர்னு ரெண்டு நாள்ல கல்யாணம்னு சொன்னா, எனக்கு ஒண்ணுமே ஓடல சேட்டா. வேலைக்குச் சேர்ந்து ஆறு மாசம் தான் ஆகுது. லீவும் சட்டுன்னு எடுக்க முடியல.” என தன்னிலை விளக்கம் கொடுத்தவள், விடுமுறை கிடைத்திருந்தால் கூடச் சென்றிருக்க மாட்டாளென்று அவளுக்கு மட்டுமே தெரியும்.
“சரி, நினக்காய்ட்டு வேணம்னா இனியொரு தடவை கல்யாணம் செய்தோளாம்.(உனக்காக இன்னொரு தடவை கல்யாணம் செய்துடலாம்)” என்றதும் அகமொழி கண்ணை உருட்டி முறைத்தாள்.
“நின்னே தன்னே பின்னெயும் கல்யாணம் செய்யாம்னு பரஞ்சதானு மொழி(உன்னை தான் மறுபடியும் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னேன்)” நமுட்டு நகை புரிந்ததில், “அந்த பயம் இருக்கட்டும்.” என்று அழகு காட்டினாள்.
“ஹா ஹா… எங்க சேட்டாவயே மிரட்டுறீங்க அண்ணி. பெரிய ஆளு தான்.” வேணி சிரித்ததில்,
“ஆமா, அவள் ஒரு குட்டி ரவுடி, நோக்கி இருந்தோ…” எனக் கேலி செய்தான் அர்ஜித்.
குமரன், “முதல்ல உள்ள வாங்கப்பா… வாமா” என்று இருவரையும் அமர வைத்தார்.
அமுதினி நீரைக் கொணர்ந்து கொடுத்தவர், “வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா? கல்யாணி அம்மாட்ட சொன்னேன் எல்லாரையும் வரச் சொல்லி…” எனக் குறைப்பட்டார்.
“கல்யாணத்தினு எல்லாருமே வந்துடறோம்மா” என்றவனுக்கு அலைபேசி அழைப்பு வர, அதனை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.
பின் மூவரும் மொழியிடம் பேசத் தொடங்க, அவளுக்குப் பேசச் சொல்லியா தர வேண்டும். போடிநாயக்கனூரில் ஆரம்பித்து அடிமாலி வரைக்கும் கதையளக்கத் தொடங்கினாள்.
வேணிக்கு மெஹந்தி வைக்க பார்லரில் இருந்து ஆள்கள் வந்து விட, “நீ போ வேணி… ஆமா ப்ரோ எங்க? நாங்க வந்தது அவருக்குத் தெரியாது.” எனத் தேடினாள். “அவன் மாடில இருக்கான்மா…” என அமுதினி கூறியதும், “அப்போ அகனுக்கு முன்னாடி நான் போய் பர்ஸ்ட் சர்ப்ரைஸ் பண்ணிட்டு வரேன்…” எனக் குறும்பாகக் கூறி விட்டு மாடிக்கு ஏறினாள்.
“எந்தப் பக்கம் ஆண்ட்டி?” விவரமும் கேட்டுக்கொண்டு உரிமையாகப் பழகியவளை மூவருக்கும் பிடித்துப் போனது.
‘ப்ரோ ஷாக் ஆகுறதை வீடியோ எடுப்போம்.’ என வீடியோ கேமராவை ஆன் செய்தபடி அவனைத் தேடி வந்தவள், அமுதினி சொன்னது போன்றே ஸ்டோர் ரூமில் முதுகு காட்டி நிற்க, “பூம்…” எனக் கத்தினாள்.
அதற்கெல்லாம் பயப்படாத பிரணீத், “ஏய், டெவில் வேணி…” எனக் கண்ணைத் துடைத்தபடியே திரும்பியவன் சர்வ நிச்சயமாக அங்கு அகமொழியை எதிர்பார்க்கவில்லை.
அவளும் அவன் கண்ணீருடன் நிற்பதை எதிர்பார்க்கவிலை போலும். ஒரு கணம் திகைத்து விழித்தாள்.
பிரணீத் நன்றாக முகத்தைத் துடைத்துக் கொண்டு, “நீ எப்ப வந்த அகா?” எனத் தவிப்பாகக் கேட்டான்.
அவளோ, அவனையும் அவன் கையிலிருந்த கார்டுகளையும் பார்த்து விட்டாள்.
வெகு நிமிடங்களாக அதனை வெறித்திருந்தவள், “உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தா எனக்கு ஷாக் குடுக்குறீங்க ப்ரோ…” என்றாள் வலிய வரவழைத்த புன்னகையுடன்
அவனுக்கோ பரிதவிப்புத் தாள இயலவில்லை. இப்படியா இவளிடம் மாட்டுவது என்ற பயம் வேறு.
“அது… வந்து அகா…” என்றவனுக்கு வார்த்தையும் வரவில்லை.
வேகமாக அப்பொருள்களை அதே அட்டைப் பெட்டியில் போட்டு மூடியவன், “அகா… ப்ளீஸ் அர்ஜிட்ட…” சொல்ல இயலாமல் திணறினான்.
அவனை அமைதியாக அழுத்தமாகப் பார்த்தவள், “சொல்ல மாட்டேன்… ஆனா எனக்கு விளக்கம் வேணுமே?” என்றாள் கூர்மையாக.
“விளக்கம் சொல்லுற அளவு முக்கியமான விஷயம் இல்ல அகா?”
“ஓ… அப்போ கண்ணீர் கடல்ல தத்தளிக்கிற அளவு முக்கியமான விஷயமோ?” அவளோ நக்கலடித்ததில் பிரணீத் முறைத்தான்.
“ஒர்க் அவுட் ஆகலையா ப்ரோ?” அவள் மீண்டும் வினவியதில், “ஆகாது…” என்றான் விரக்தியாக.
“அதுசரி… த்ரிஷா இல்லைன்னா திவ்யானு போறதை விட்டுட்டு… ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டுன மாதிரி நீங்க என்னவோ இந்த ஸ்டோர் ரூமைக் கட்டி பீல் பண்ணிட்டு இருக்கீங்க.” என அட்டைப் பெட்டியினுள் தலையை நுழைத்தவள், அவனது முறைப்பைக் கண்டு கொள்ளாமல்,
“யோவ் ப்ரோ… எந்தக் காலத்துல வாங்குன டைரி மில்க்யா இது?” என முகத்தைச் சுளித்தபடி இரு விரலால் அந்த டைரி மில்க் கவரை எடுத்தாள்.
“குடு அகா…” அதனைப் பிடுங்கியவன், பத்திரமாக மீண்டும் பெட்டியில் வைக்க, “நானும் தான் ஒரு லவ் பண்ணேன். ஒரு கல்யாணம் பண்ணேன். எனக்கு ஒருத்தனும் ஒரு ஆசை சாக்லேட் கூட வாங்கிக் கொடுக்கல ப்ரோ… இதயம் முரளியை ஓவர் டேக் பண்றீங்களே, யார் சாமி நீங்க?” எனக் கலாய்த்தாள்.
அவளது கூற்றில் இறுக்கம் மறைந்து புன்னகை தோன்றியது. பொதுவாக அவனது காதலைப் பற்றி வேணியே பேசினாலும் முணுக்கெனக் கண்ணீர் தான் தோன்றும். ஆனால், அகமொழி முதன்முறை அவனைச் சிரிக்க வைத்திருந்தாள்.
அவன் ஏதோ பேசப் போக, “ஹான்… உயிர்க் காதல், மறக்க முடியாதுன்னு உருட்டுனீங்கன்னா, நான் அப்படியே அடுத்த பிளைட் பிடிச்சு ஊருக்கு ஓடிடுவேன்.” என அவள் ஓடத் தயாராக இருக்க, பிரணீத் நன்றாகவே சிரித்து விட்டான்.
“அவ்ளோ சீக்கிரம் எதையும் விட்டு என்னால வெளில வர முடியல அகா…” இயல்பாகவே கூறினான்.
“அதெல்லாம் உங்களுக்குன்னு ஒருத்தி வந்துட்டா ஈஸியா வந்துடலாம் ப்ரோ. முதல்ல இந்தக் கருமத்தை எல்லாம் குப்பைல போடுங்க. மூவ் ஆன் ஆகுங்க. இல்லனா பேஸ் பண்ணுங்க. ரெண்டுமே வேணாம்னா, ஒரே இடத்துல தேங்க வேண்டியது தான்.”
“முடியல சிஸ்டர்” என்றவனின் வதனம் மீண்டும் வாடிட,
“ப்ரோ… இந்த ப்ரெண்ட்ஸ் மட்டும் இல்ல… இந்த லவ்வர்ஸ் கூட எப்ப எப்படிக் கழற்றி விடுவாங்கன்னே தெரியாது… அனுபவத்துல சொல்றேன். தூக்கிப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பாருங்க!” என்றதும் அவனுக்கும் சிறு குற்ற உணர்ச்சி தாக்கியது.
“நீ ரிஷுவை லவ் பண்ணதை விட்டு மூவ் ஆன் ஆகிட்டியா? எப்படி?” தயக்கமாகக் கேட்டான்.
“ரிஷு எப்பவும் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட். அதுல எந்த மாற்றமும் இல்ல. ஆனா அவன் லவரா இருக்க லாயக்கு இல்ல ப்ரோ… நாளைக்கு ஒரு பிரச்சினை வந்தா, அப்பா சட்டையைப் பிடிச்சுட்டு நின்னுட்டு இருந்தா குடும்பம் எப்படி நடக்கும். என் விளக்கத்தைக் கேட்க மாட்டேன்னு போனது அவன் தான… போறவனை இழுத்துப் பிடிச்சா, பாடி பஞ்சர் ஆகுறது என்னவோ நமக்குத் தான்…” பேசியபடி இருவரும் வெளியில் வந்தனர்.
“ம்ம் கரெக்ட் தான். அதுனால தான் நானும் விட்டேன்.” என்றதில் அவளுக்கும் வருத்தம் தான்.
இருப்பினும் தான் வருத்தம் காட்டினால் சோக கீதம் வாசிப்பான் எனப் புரிய, “அப்படி விட்டுட்டா அடுத்த வேலையைப் பார்க்கப் போகணும் ப்ரோ. வேணும்னா ரூம் போட்டு ஒரு மணி நேரம் அழுங்க. அதோட சேர்ந்து லவ்வும் மறந்துடும்.” என அசட்டையாகத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
அவளைக் கனிவாகப் பார்த்தவனோ, “தினமும் அது தான் பண்றேன். ஆனா மறக்கலையே! ஏன்?” எனத் தொண்டை அடைக்கக் கேட்டதில், அவளுக்குக் கொஞ்சம் வலித்தது.
“ப்ச், உங்களுக்குப் பிஞ்சு ஹார்ட்டு போல ப்ரோ. அதான் ஓவர் எமோஷனல் ஆகுறீங்க. பேசாம யாரையாச்சும் பழி வாங்க இறங்கிடுங்க.” என்றதில், மீண்டும் வருத்தம் மறந்து அவளை முறைத்தான்.
“நிஜமா ப்ரோ. உங்க பிரெண்டை எப்படிப் பழி வாங்குறதுனு யோசிச்சு யோசிச்சே நான் மூவ் ஆன் ஆகிட்டேன்னா பார்த்துக்கோங்க.” வாயை மூடிச் சிரித்தவளைச் சுவாரஸ்யமாகப் பார்த்தவன்,
“ஒரு பேச்சுக்குக் கேக்குறேன். ஒருவேளை இதே மாதிரி ஒரு பிரச்சினை உனக்கும் அர்ஜிக்கும் வந்திருந்தாலும் நீ இதே மாறி ஈஸியா மூவ் ஆன் ஆகிடுவியா?” எனக் கேட்டான் அர்த்தமாக.
“ப்ரோ, ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க. எந்த ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் நம்மளோட செல்ப் ரெஸ்பெக்ட் ரொம்ப முக்கியம். இதுவரை, ஐ மீன் மேரேஜ்க்கு அப்புறம் அந்த செல்ப் ரெஸ்பெக்டுக்கு அகனால எந்தப் பிரச்சினையும் வரல. அவன் என்னை வைபா மதிக்கிறான். நான் அவனை ஹஸ்பண்டா மதிக்கிறேன். தட்ஸ் இட். அதை மீறி அவனையும் மூவ் ஆன் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தாலும் கண்டிப்பா ஆகிடுவேன்.
யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நம்மளோட லைஃப் ஓடிட்டே தான் இருக்கும். இருக்கணும். அவங்க இல்லாம வாழ முடியாது, இவங்க இல்லாம வாழ முடியாதுன்னு ஒரு வட்டத்துக்குள்ள எந்தத் தனி மனுஷனாலும் வாழ முடியாது. நாம நமக்காக, நம்மளோட கனவுக்காக வாழ்ந்தே ஆகனும். நீங்க அதே வட்டத்துக்குள்ள அடையாதீங்க. இந்த உலகம் பரந்து விரிஞ்சிருக்கு ப்ரோ. அடுத்த பிகரைப் பார்த்துட்டு கமிட் ஆகுங்க.” என அசட்டையாகக் கூறினாள். ஒரு காலத்தில் இதே வார்த்தைகள் தனக்கே திரும்பப் போவது அறியாமல்.
“ரொம்பப் பேசிட்டேன் போல… பசிக்குது. நான் போய் ஆண்ட்டி எனக்காக என்ன ஸ்பெஷலா வச்சிருக்காங்கன்னு பார்க்குறேன். நீங்க வாங்க.” என்று கீழே ஓடிச் சென்றாள்.
அவளது மனமுதிர்ச்சி கண்டு ப்ரணீத்திற்கு வியப்பு தான். ஆகினும் ‘இப்படிப் பட்டும் படாமல் இருந்தாலும் உறவு எப்படி வலுப்படும்? சில நேரத்தில் எமோஷனல் ப்ரீக்காக இருந்து தானே ஆக வேண்டும். அர்ஜி… இப்படி அதிரடியாகத் திருமணம் செய்திருக்க வேண்டாமோ?’ என இன்றும் நூறாவது முறையாக நினைத்து விட்டான்.
பின் தலையை உலுக்கியவன், நண்பனைப் பார்க்கச் சென்றான்.
அப்போது தான் அர்ஜித் அலைபேசியை அணைத்து விட்டு வீட்டிற்கு வர, அகமொழி கீழே வரவும் சரியாக இருந்தது.
அவள் பின்னேயே வந்த பிரணீத், “என்ன சேட்டா, செம்ம சர்ப்ரைஸ் குடுத்துட்டீங்க…” என நண்பனை அணைத்துக் கொண்டான்.
“நீ தன்னே கண்ணைக் கசக்கான் தொடங்கியில்லே” என அர்ஜித் கிண்டல் செய்ததில் அசடு வழிந்தான்.
அதன்பிறகே அவன் நெற்றியைக் கவனித்தவன், “என்னடா நெத்தில காயம்?” என வினவ, அர்ஜித் நடந்ததை விவரிக்கவும் “அச்சச்சோ… வேற எங்கயும் காயம் இல்லைல.” என குமரனும் பதறினார்.
“இல்ல அச்சா. ஒந்தும் பிரச்சினை இல்லா…” என்றவன் அகமொழியைப் பார்த்து “இவள் தன்னே ஏர்ஹோஸ்டஸ் எல்லார்கிட்டயும் சண்டை இடான் தொடங்கியது.” என்றான்.
“பின்ன, அடிபட்டது தெரிஞ்சும், ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த மாதிரி உங்களை ஜொள்ளு விட்டுட்டு இருக்கா…” எனக் கொந்தளித்ததன் பிறகே, அவளது கோபத்தின் வேர்க்காரணம் புரிந்தது அவனுக்கு.
அதில் சிறு நக்கல் புன்னகையும் மிளிர, அவளோ “மறுபடியும் வீங்கிருக்கு அகன்…” எனும்போதே இவர்களிடம் உரையாடலைக் கேட்டபடி கையில் ஐஸ் பேக்குடன் வந்தான் பிரணீத்.
நிச்சயத்திற்கு வந்த இடத்தில் இப்படி ஆகியதில் அவனுக்கும் வருத்தமாகி விட்டது.
ப்ரணீத்திடம் இருந்து ஐஸ் பேக்கைப் பிடுங்கி அவன் நெற்றியில் வைக்க, பிரணீத் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.
அவனுக்கு அர்ஜித்தின் வீட்டில் நிகழ்ந்த பிரச்சினைகள் எல்லாம் தெரியவில்லை.
“ஒரு பையன் ஹேண்ட்ஸமாய் இருந்தா நாலு பெண்குட்டிகள் நோக்குக தன்னே செய்வாங்க காந்தாரி. பொறாமை பெடான் பாடில்லா…” அர்ஜித்தின் கூற்றில், வீக்கத்தில் நன்றாக அழுத்திக் கோபத்தைக் காட்டினாள்.
“ஏய் வேதனிக்குந்தடி!”
“நல்லா வேதனைப்படு…” என உதட்டைச் சுளித்ததில், இவர்களின் சண்டையை பிரணீத்தின் குடும்பமே நமுட்டு நகையுடன் பார்த்தது.
பின் அவளுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டிய ப்ரணீத் மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்ல, அங்கோ தூரத்தில் தெரிந்த கடலைக் கண்டு விழி விரித்தாள்.
“வாவ் ப்ரோ, உங்க வீட்டுப்பக்கம் கடல் இருக்கா? செம்மயா இருக்கு வியூ…” என்றாள் ரசித்து.
“இங்கயும் ஒரு கிளாம்பிங் கட்டிடலாமா?” பிரணீத் குறும்பாகக் கேட்க, “இங்க கிளாம்பிங் எல்லாம் கட்டக் கூடாது ப்ரோ…” என்றபடி அந்தக் கடற்கரையை ஆராய்ந்தாள்.
“அப்போ ரிசார்ட்டா?” அவன் கிண்டலை நிறுத்தவில்லை.
“ப்ச்! ப்ச்!” மறுப்பாகத் தலையசைத்தவள், “வேற மாதிரி…” என்றவளைப் புரியாது பார்த்தான்.
கையில் காபி கோப்பையுடன் கடற்கரையை ரசித்திருந்த அர்ஜித் அகனும் திரும்பி அவளைப் பார்க்க,
“டைட் பாட்ஸ்” (tide pods) என்றாள் தீவிரமாக.
“என்னது?” பிரணீத் குழப்பமாகக் கேட்க,
“கடலை ஒட்டுன மாதிரி இருக்குற, சின்னச் சின்ன ஸ்டே பாட்ஸ். ஒவ்வொண்ணும் தனித் தனி யூனிட். சிங்கிள் பிரீமியம் பெட்ரூம். பிரைவேட் டெக், ரூஃப்டாப் வியூவிங் ஸ்பேஸ், சன்ரைஸ், சன்செட், ஸ்டார்கேசிங்னு ஒவ்வொரு பாட்’கும் தனி எக்ஸ்பீரியன்ஸ்னு பண்ணலாம்…” அவளோ கற்பனையிலேயே அங்கு ஒரு பிசினஸைத் தொடங்கி விட்டாள்.
பிரணீத் அவளை வியப்பாகப் பார்த்து விட்டு, “ஆனா கடல் மணல்ல எப்படிக் கட்டுவ? மணல் மூவ்மெண்ட், காத்தோட வேகம், ட்ரெயினேஜ் எல்லாம் இருக்கே.” என வேண்டுமென்றே அவளைத் துருவினான். ஒரு பார்வை நண்பனிடமும் சென்றது.
அவனோ காபியுடன் சேர்ந்து அவளையும் பருகிக் கொண்டிருந்தான் பார்வையாலேயே.
இதனைக் கவனியாத அகமொழி, முழு பிசினஸ் வுமனாகவே மாறி இருந்தாள்.
“இந்த மணல்லயே ஒரு பெரிய கான்க்ரீட் பில்டிங்கை (concrete building) உட்கார வைக்கப் போறதில்லை. இடத்தோட மண் நிலைமைக்கு ஏத்த மாதிரி ஆழத்துல உறுதியான அடித்தளம் ஆர் பைல் சிஸ்டம் யூஸ் பண்ணலாம். அதுக்கு மேல கட்டிடத்தைத் தூக்கி நிறுத்துற மாதிரி ஒரு ஸ்ட்ரக்சுரல் பிரேம்.
நாம ஒரு பெரிய கட்டிடத்தை ஒரே இடத்துல பரப்பி வைக்காம, சின்னச் சின்னத் தனித்தனி யூனிட்சா பிரிப்போம். ஒவ்வொரு pod-க்கும் தனி சப்போர்ட். கீழே மணல் இயற்கையா நகரவும், மழைநீர் ஓடவும் இடம் இருக்கும். அதனால கடற்கரையையே முழுசா கான்க்ரீட் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.”
“சரி… மணல் பிரச்சினை ஓகே. ஆனா கடல் காத்து?”
“அதுதான் கோஸ்டல் ஆர்கிடெக்சர்ல முக்கியமான விஷயம். கடலுக்குப் பக்கத்துல கட்டுற கட்டிடத்துக்கு வெறும் அழகு மட்டும் பார்த்தா போதாது. உப்புக்காற்று இரும்பை சீக்கிரம் அரிக்கும். காற்றோட வேகம் அதிகமா இருக்கும். மழைநீர் தேங்கக் கூடாது. புயல் வரும்போது கட்டிடம் எவ்வளவு காற்றழுத்தத்தைத் தாங்கணும்னு கணக்குப் போடணும்.”
அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு,
“அதனால ஸ்ட்ரக்ச்சர்-க்கு corrosion-ஐ தாங்கக் கூடிய மெட்டீரியல், சரியான ப்ரொடெக்டிவ் கோட்டிங், லைட்வெயிட் கன்ஸ்ட்ரக்ஷன்… எல்லாமே கோஸ்டல் கண்டிஷன்க்கு ஏத்த மாதிரி செலக்ட் பண்ணணும். மேற்கூரையையும் காத்து தூக்கிக்கிட்டுப் போகாத மாதிரி சரியான ஆங்கரிங் கொடுக்கணும்.”
“நமக்கு அம்பது ரூம் தேவையில்லை. முதல்ல பத்து pod போதும். பிரீமியம் ஸ்டே. லிமிடட் ரூம்’னா டிமான்டும் அதிகம்.
ரிசார்ட் கட்டி ரூமை விக்கத் தேவை இல்லை. எக்ஸ்பீரியன்சைத் தான் விக்கணும்…”
ஏனோ தானோவென ஒரு தொழில் யோசனையைக் கொடுக்காமல், அதிலிருந்த சின்ன நுணுக்கங்களையும் சரியாக அனுமானித்துக் கூறியவளை இரு ஆடவர்களும் புருவம் உயர்த்திப் பார்த்தனர்.
“என்ன படிச்சுருக்க நீ?” பிரணீத் ஒரு மாதிரியாகக் கேட்க,
“நான் ஆர்கிடெக் எஞ்சினியர்!” எனத் தோளைக் குலுக்கினாள்.
“நீயுமா?” என முணுமுணுத்த பிரணீத், அர்ஜித் அகனை நமுட்டுப் புன்னகையுடன் ஏறிட்டான்.
“நானுமான்னா?” என்ற கேள்வியில் அர்ஜித் அதனைத் தவிர்த்து, “அப்போ நின்டே கிளாம்பிங் டிசைன் நின்னுடேடது தன்னெயா?” எனக் கேட்டான்.
“ம்ம்… நானே தான் டிசைன் பண்ணிக் கட்டுனேன்.” எனத் தலையாட்டிட, “கிரேட் அகா…” எனப் பாராட்டிய பிரணீத், “ஆனா இது கவர்மெண்ட் ப்ராப்பர்டிமா… நீங்க கேரளாவைக் கண்டம் பண்ணது போதும். எங்க சென்னையை விட்டுடுங்க…” எனக் கேலி செய்ததில்,
“யோவ் ப்ரோ!” என அடிக்கத் துரத்தியதில், அவன் தப்பித்து ஓடினான்.
பின், அவளை அழைத்துக்கொண்டு அர்ஜித் அகன் கடற்கரைக்குச் செல்ல, அவள் ப்ரணீத்தையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள்.
“நீங்க கபிளா கடல்ல கால் நனைப்பீங்க. நான் எதுக்கு இடைஞ்சலா?” எனக் கேலி செய்தவனிடம்,
“நீங்க தான சென்னை ஆளு. அப்போ டூரிஸ்ட் கைட் வேணும்ல…” என்றவளை “அடிப்பாவி! நீ பாசத்துல கூப்பிடலையா?” என வாயில் கை வைத்தான்.
“ச்சே ச்சே!” மறுப்பாகத் தலையாட்டியதில் இப்போது அடிக்கத் துரத்தும் முறை அவனது ஆனது.
“டேய் மிஸ்டர் மலையாளி, என்னைக் காப்பாத்து!” என அர்ஜித்தின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
இருவரின் சேட்டையையும் அமைதியாக ரசித்திருந்தவன், அவளை அலைக்கு இழுத்தான்.
அவளோ சற்றே பயந்து, “ஹா வேணாம் வேணாம். நான் இங்கயே நின்னுக்குறேன்.” என மறுக்க,
“அவிடே நிந்தா (அங்கேயே நின்னா) எப்படிடி? உள்ள வா!” என்று அழைத்தான்.
“ம்ம்ஹும் ட்ரெஸ் நனைஞ்சுடும்.”
“அதொக்கே காய்ஞ்சுடும். வா…”
“ம்ம்ஹும்.”
“பேடியோ?”
“என்னது?”
“பயமான்னு கேட்டேன்”
“ஹய்ய பயமெல்லாம் இல்ல…”
“அப்போ வாடி!” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க, “டேய் விடுடா. இதுவரை நான் கடல்ல கால் எல்லாம் நனைச்சது இல்ல. என்னை உள்ள இழுத்துட்டுப் போற மாறி இருக்கு. நான் இப்படியே ஓரமா நின்னுக்குறேன்.” என்றதில்,
“இங்கனேயொக்கே பரஞ்சா நீ வரில்லா…(இப்படியெல்லாம் சொன்னா நீ வரமாட்ட)” என கையில் அள்ளி இருந்தான்.
அதில் தடுமாறியவள் அவன் கழுத்தை இறுக்கிப் பற்றிக் கொண்டு, “அகன் இறக்கி விடு.” என்றிட, அவனோ காதில் வாங்காமல் அவளை உள்ளே வரை தூக்கிச் சென்று இறக்கினான்.
“ஐயோ அம்மா, பயமா இருக்கு. என்னை விடுடா… ஆஆ குளிருது…” எனக் கரை நோக்கி ஓட முயன்றவளைக் கண்டு பிரணீத் கரையில் நின்றபடி வயிற்றைப் பிடித்துச் சிரிக்க, அர்ஜித்தும் சிரிப்பை அடக்கியபடி “எடி… ஒழுங்கா நில்க்கு. அலை வரும்போ நந்தாயிரிக்கும்.” என்றான்.
“டேய் விடுடா… அலை பெருசு பெருசா வருது. பாரு உன்னால ட்ரெஸ்ஸே நனைஞ்சுடுச்சு.” என உதட்டைப் பிதுக்கிட,
“என் கையைப் பிடிச்சோ. அலை வரும்போ அங்கனே அசையாதே நில்லு. யூ வில் என்ஜாய் இட் மொழி…” என்றதில் அவளும் அரை மனத்துடன் பயத்தை மறைத்துக் கொண்டு நின்றாள்.
அவன் கை மொத்தமும் அவள் கைக்குள் தான் இருந்தது.
அலை வரும்போதே அவள் முகத்தை அவன் தோளில் வைத்து அழுத்திட, அலை வந்து அவளை அலைபாயச் செய்து விட்டு வந்த வழியில் சென்றதில், சிறிது நேரத்திலேயே பயம் குறைந்து இடை வரை இருந்த கடல் நீரை ரசிக்கத் தொடங்கினாள்.
“அதோ பாரு அகன். பெரிய அலை… ஐயோ!” இம்முறை பரவசம் தாளாமல் அவனுடன் இன்னுமாக ஒன்றிட, மாலை நேரத்தின் மஞ்சள் ஒளியில் மனையாளை ரசித்துக் கிடந்தது ஆடவனின் விழிகள்.
ஓர் பெரிய அலை அடித்ததில் அவள் தடுமாறப் போக, அவளது இடையைப் பற்றித் தன்னுடன் இறுக்கிக் கொண்டவனின் மீது நேருக்கு நேராய் மோதினாள்.
நகரத் தோன்றாது அப்படியே நின்றவளை, அவன் விழிப்பார்வையும் நகர விடவில்லையே.
கண்களின் வழியே கடலளவு ரசனையை வெளியிட்டவனின் பார்வையில் மூச்சுத் திணறியது அவளுக்கு.
அவள் நெற்றியோடு நெற்றி நெருங்கியவனின் இதழ்களும் அவள் இதழ்களைக் கேட்டு அடம் பிடித்தது.
அலைகளினால் ஏற்பட்ட தள்ளாட்டம் ஒரு புறம். ஆடவனால் ஏற்பட்ட தள்ளாட்டம் ஒரு புறம் எனத் தவித்துப் போனவள் பிடிமானம் இன்றி அவன் சட்டையையே இறுக்கிப் பற்றிக் கொள்ள, மூக்கோடு மூக்குரசியவன் அவளின் இதழ்களின் வரிகளை ஆராய்ச்சி செய்தபடியே அதற்கு ஒரு மென்முத்தம் வைத்தான்.
அவன் கொடுத்த அழுத்த முத்தங்களை விட இது அதிகம் சிலிர்க்க வைத்தது.
‘ஏன் இப்படிப் பார்த்து வைக்கிறான்.’ என்ற படபடப்பு வேறு. அதில் தானாக அவள் கரங்கள் அவனது தோளைப் பற்றிக் கொள்ள, மீண்டும் மோகம் பொங்க முத்தமிட வந்ததில் நாணம் நிறைத்தது.
சட்டென முகத்தைப் பின்னால் இழுத்தவளின் கன்னங்களும், இளஞ்சிவப்பு சூரியனுக்கு எதிராய் பலமாய் போட்டி போட்டது.
“விடு அகன்…” என்றவளுக்கு “வெட்கமா இருக்கு” எனச் சொல்லவே வெட்கம் வந்து தொலைத்தது.
“ப்ளஷ் ஆகுறியா மொழி?” குறும்பு நகை மின்னக் கேட்டதில், அவளுக்கும் அவஸ்தையாகி விட, “போடா…” என நெஞ்சைப் பிடித்துத் தள்ளி விட்டு அவனிடம் இருந்து திரும்பி நின்று கொண்டவளுக்கும், நாணப்புன்னகை இதழ்களை அலங்கரித்தது.
இருவரும் மறுபுறம் திரும்பி மெல்லப் புன்னகைத்துக் கொள்ள, அர்ஜித் மெதுவாய் அவளைத் திரும்பிப் பார்த்ததில், அவளும் லேசாய் விழிகளை நிமிர்த்தி அவனைப் பார்க்க, பார்வைகள் பலவிதமாய் பேசிக்கொண்டது நேசத்தின் தொடக்கப் புள்ளியுடன்.
அகன் வசமாவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
101
+1
3
+1
4
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஹப்பா…ஒரு வழியா நேசத்தோட தொடக்கப்புள்ளிக்கு வந்துட்டாங்க…😉😉💛💜💞💕💖
ப்ரணீ நல்ல நண்பன். அகன் மொழி இரண்டு பேரும் சிவில் தானா சூப்பர். பிரிவு இருக்கோ