Loading

தன் கணவனின் வருகை இவ்வளவு சீக்கிரமாக நிகழும் என்பதை அறிந்திருக்கவில்லை ஆதலால், என்ன சொல்வது? கேட்பது? என்று ஒன்றும் புரியாமல் ஆடாமல், அசையாமல் நின்றிருந்தாள் யக்ஷித்ரா.

 

மனைவியின் முகத்தைப் பார்த்ததும் தான், தனது எதிர்பாராத வருகை அவளுக்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தைக் கொடுத்திருப்பதை உணர்ந்து,”நான் உள்ளே வரலாமா? இல்லை, வெளியே போயிட்டு எப்பவும் போல என் ஆஃபீஸ் முடியிற டைமுக்கு வரவா ம்மா?” என்று அவளிடம் கேட்டு விட்டுப் புன்னகை செய்தான் அற்புதன்.

 

அதைக் கேட்டவுடன், தனது அதிர்வை நீக்கிக் கொண்டு,”சாரி. உள்ளே வாங்க” என்று அவனுக்காக வழி விட்டு நின்றாள்.

 

“யார் வந்திருக்கா ம்மா?” என்று தன் மருமகளிடம் வினவினார் கீரவாஹினி.

 

“அவர் தான் வந்திருக்கார் அத்தை” என்றதும்,

 

“அவனுக்கு வேலை முடிய இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே!” என்ற ஆச்சரிய பாவனையுடன் வீட்டிற்குள் வந்த மகனிடம்,”என்னடா இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட?” என்று கேட்டார் அவனது அன்னை.

 

“சும்மா தான் ம்மா. ரொம்ப வேலையாக இருந்துச்சு. அதை நாளைக்குப் பண்ணிக்கலாம்ன்னு விட்டுட்டு வந்துட்டேன். முடியலை!” என்று அவருக்குப் பதிலளித்து விட்டான் அற்புதன்.

 

ஆனால், அது பொய்யென்று, அவனது புன்னகையே கூறிற்று.

 

அதை யக்ஷித்ராவும் கண்டு கொண்டாள் தான்!

 

இதை அறியாத அகத்தியனும் கூட,”ஓஹோ. சரிடா. உட்கார்” என்றார்.

 

அவனுக்காக காஃபி கொண்டு வந்து கொடுத்து விட்டு,”நீ சீக்கிரம் வீட்டுக்கு வந்ததும் ஒரு விதத்தில் நல்லதுக்குத் தான்டா. உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு இருந்தோம்” என்று பேச்சைத் தொடங்கினார் கீரவாஹினி.

 

தன் அன்னையின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கோ, மனைவி மட்டும் தானே தனது வருகைக்காக காத்திருக்கிறாள் என்று எண்ணி விரைவாக கிளம்பி வீட்டிற்கு வந்தோம். ஆனால் இப்போதோ, தன்னுடைய அன்னை மற்றும் தந்தையும் தனக்காக காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பது அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கியது.

 

அதை அப்படியே தன் முகத்தில் பிரதிபலித்து விட்டான் அற்புதன்.

 

“டேய்! உங்கிட்ட தான், உங்கம்மா பேசிட்டு இருக்காங்க” என்று அவனுக்கு அறிவுறுத்தினார் அகத்தினியன்.

 

“ஹாங்! சொல்லுங்க ம்மா” என்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு தாயிடம் திரும்பினான் மகன்.

 

அவனுடைய ஒவ்வொரு அசைவுகளையும், தடுமாற்றங்களையும் கண்டு பதற்றம் அடைந்தாள் யக்ஷித்ரா.

 

இதற்குக் காரணம் தான் தானோ? என்ற எண்ணமும் அவளுக்குள் தொற்றி விட்டது.

 

அதனால் கலக்கத்துடன் தன் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்,

 

கீரவாஹினி,“என்னம்மா நீ சொல்றியா? நானே சொல்லிடவா?” என்று தன்னிடம் கேட்கவும் தான், யக்ஷித்ராவிற்குத் தான் கணவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பற்றி நினைவு வந்தது.

 

உடனே,”இவர்கிட்ட நானே சொல்லவா அத்தை?” என்று அவரிடம் கெஞ்சலுடன் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“சரிம்மா” என்று அவளிடம் சொல்லி விட்டுத் தன் மகனிடம்,”ஃப்ரெஷ் ஆகி வந்துட்டு, அவகிட்ட கேட்டுக்கோ” எனக் கூறி விட்டார் அவனது தாய்.

 

தாயின் வார்த்தைகளுக்கு இணங்கித், தங்கள் அறைக்குப் போனான் அற்புதன்.

 

அவனைத் தொடர்ந்து தானும் சென்றவளோ,”ஏங்க!” என்று கணவனைப் பதட்டத்துடன் அழைத்தாள் யக்ஷித்ரா.

 

“என்னம்மா?” எனச் சாதாரணமாகத் தன்னிடம் வினவியவனைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.

 

“நான் அனுப்பிய மெசேஜ்ஜால் தானே நீங்க வீட்டுக்குச் சீக்கிரம் வந்துட்டீங்க?” 

 

அவளது கேள்வியைக் கேட்டதும், வெறுமையான புன்னகையை உதிர்த்தான் அற்புதன்.

 

அதில் அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. 

 

“அப்போ உண்மையிலேயே அது தான் காரணமா?” என்று அவனிடம் வேதனையுடன் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“ஆமாம் மா” என்றவனோ, குளியலறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொள்ளவும்,

 

அவனது ஒப்புதல் வார்த்தையைக் கேட்டவுடன், அவளுக்கோ இன்னும் சங்கடமாகிப் போய் விட்டது.

 

அவன் வெளியே வரும் வரை காத்திருந்தாள் யக்ஷித்ரா.

 

சில மணித்துளிகள் கடந்து, குளியலறையின் கதவைத் திறந்து கொண்டு வந்த அற்புதனோ, அங்கேயே உடை மாற்றி விட்டிருந்தான் போலும்.

 

அதனால்,”ம்ம். என்ன விஷயம்? இப்போ சொல்லு” என்று கேட்டு விட்டு மனைவிக்கு அருகில் அமர்ந்து கொண்டான். 

 

அவனது இந்தச் செயலைப் பார்த்து மென்மேலும் வியப்பு தான் அடைந்து கொண்டிருந்தாள் யக்ஷித்ரா.

 

அவள் எந்தப் பதிலையும் சொல்லாமல் இருந்ததால்,”என்னம்மா?” என்று அவளிடம் மிருதுவாக வினவினான் அற்புதன்.

 

“உங்களுக்கு என் மேல் கோபம் இல்லையா?” 

 

“எனக்கு ஏன் கோபம் வரப் போகுது? அதுவும் உன் மேல்?” என்று கேட்டுச் சிரித்தவனிடம்,

 

“நான் உங்களுக்கு அனுப்பிய மெசேஜ் தானே எல்லாத்துக்கும் காரணம்?” எனக் கணவனிடம் எதிர்க் கேள்விக் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“ஆமாம். அந்த மெசேஜ்ஜைப் பார்த்துத் தான் நான் வீட்டுக்குச் சீக்கிரமாக வந்தேன். அது உண்மை தான்” என்று ஒப்புக் கொண்டான் அற்புதன்.

 

“நான் வேற ஒரு விஷயத்துக்காக உங்களுக்கு அனுப்பிய மெசேஜ், உங்க மனசில் வேற ஒரு உணர்வை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு ங்க. அது என்னால் தானே?” 

 

“எனக்கு எதிர்பார்ப்பு இருந்தது தான் யக்ஷூ. ஆனால் நீ சொல்ல வர்றது என்னன்னுத் தெரியாமல் நானே எதையோ நினைச்சு ஆசைப்பட்டு வந்தது என் தப்பும் தான?” 

 

“இதில் உங்கத் தப்பு எதுவும் இல்லைங்க” என்று அவனிடம் சொன்னாள் மனைவி.

 

அற்புதன்,“சரி. என்கிட்ட என்ன விஷயத்தைச் சொல்ல காத்திருந்தீங்க? நீ அதைப் பத்தி இப்போ வரைக்கும் எதுவும் பேசலையே?” 

 

“ஆமால்ல. நாம ரொம்ப நாளாக எதிர்பார்த்துட்டு இருந்த விஷயம் நடக்கப் போகுதுங்க” என்று குறுநகையுடன் கூறவும்,

 

“என்னது?” என்று கேட்டதும், 

 

“அம்மாவும், யாதுவும் இங்கே வரப் போறாங்க” என அவனிடம் விஷயத்தை உரைத்தாள் யக்ஷித்ரா.

 

“அப்படியா?” என்று சந்தோஷக் குரலில் கேட்டான் அற்புதன்.

 

“ம்ஹ்ம்”

 

“எப்போ வர்றாங்களாம்?” 

 

“நம்ம ரெண்டு பேருக்கும் லீவ் இருக்கிறப்போ வர்றோம்ன்னு சொன்னாங்க. அப்போ அவங்க ஞாயிற்றுக்கிழமை தானே வர முடியும்? அதனால், அன்னைக்கு வருவாங்க” என்றாள் அவனுடைய மனைவி.

 

“சூப்பர்! அப்போ தான், எல்லாரும் நிதானமாக உட்கார்ந்து பேச முடியும்” என்று அவனும் கூறி விட,

 

அதற்குப் பிறகு, முதலில் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மீண்டும் ஆரம்பித்தவளோ,

 

“நான் உங்களை ரொம்ப எதிர்பார்க்க வச்சு ஏமாற்றத்தைத் தான் தந்துட்டு இருக்கேன்ல ங்க?” என்று அவனிடம் தொய்வுடன் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“எனக்கு இப்போ என்ன ஏமாற்றம் கிடைச்சது? நீ அதைக் கொடுத்துட்டு இருக்கேன்னு வேற சொல்ற?” என்று தன் மனைவியிடம் விசாரித்தான் அற்புதன்.

 

“அதான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்தை வச்சுக் கேட்கிறேன் ங்க” 

 

“நீ அந்த மெசேஜ்ஜை என்ன எண்ணத்தில் அனுப்பி இருந்தன்னுத் தெரியாமல், நான் வேற ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்கிட்டு அவசரப்பட்டு வந்திருக்கக் கூடாது யக்ஷூ. அது தான் எனக்கு ஏமாற்றம் ஆகிடுச்சு” 

 

“நான் திடீர்னு உங்களுக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்பினால், உங்களால் அப்படித் தானே யோசிக்கத் தோனும். அது நியாயம் தான் ங்க” என்று அவனுக்குப் பதிலளித்தாள் யக்ஷித்ரா.

 

“நமக்குள்ளே எல்லாம் இயல்பாக இல்லையே ம்மா. அப்போ என்னோட எதிர்பார்ப்பு தானே தப்பு?” என்று அவளிடம் அழுத்தமாக வினவினான் அற்புதன்.

 

அதைக் கேட்டதும், அவளுக்கு அதீதமாக குற்ற உணர்வு எழுந்தது.

 

“சாரிங்க” என்று தன்னுடைய கணவனிடம் கலங்கிய விழிகளுடன் மன்னிப்புக் கேட்டாள் அவனது மனைவி.

 

“ப்ச். நான் வெளிப்படையாக ஒன்னு சொல்லவா?” 

 

“ம்ம்” என்று அதற்குச் சம்மதமாகத் தலையை அசைத்தாள் யக்ஷித்ரா.

 

“நமக்கு இடையில் இப்படி ஏதாவது நடக்கிறதும், அதில் நான் ஹர்ட் ஆகிட்டேன்னு நினைச்சு அந்த விஷயத்தில் நீ மட்டும் தான் தப்புப் பண்ண மாதிரி இப்படி குற்ற உணர்வோட வந்து அடிக்கடி பேசுறது எனக்குப் பிடிக்கவே இல்லை ம்மா” என்று தனது அதிருப்தியை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி விட்டான் அற்புதன்.

 

“அது தானே நிஜம் ங்க?” என்று மெலிதான குரலில் சொன்னவளிடம்,

 

“யக்ஷூ! இதெல்லாம் ரொம்ப அதிகமாக தெரியுது. நான் உன்னைக் கன்ட்ரோல் பண்ணிட்டு, நீ ஒவ்வொரு விஷயத்தையும் எனக்குப் பயந்துட்டு செய்யிறா மாதிரியும் இருக்கு!” என்றவனுடைய பேச்சில் கோபம் தென்பட்டது.

 

“அப்படியெல்லாம் இல்லை ங்க” என அதை மறுத்துப் பேசினாள் யக்ஷித்ரா.

 

“அப்பறம் ஏன் என்னைப் பார்த்து இப்படி பயப்பட்ற?” என்று அவளிடம் தன்னுடைய ஆற்றாமையைப் பகிர்ந்து கொண்டான் அவளது கணவன்.

 

அதற்கு அவள் பதில் பேசாமல் நின்றிருக்கவும்,

 

“நமக்குக் கல்யாணம் ஆன நாளில் இருந்து இப்போ வரைக்கும் உன்னை எந்த விஷயத்துக்காகவும் நான் வற்புறுத்துனது கிடையாது தானே?” என்று தன் மனைவியிடம் வினவினான் அற்புதன்.

 

யக்ஷித்ரா,“ம்ஹ்ம்”

 

“இதை நான் உன்னை வற்புறுத்த எனக்கு உரிமை இருந்தும் பண்ணலைன்னு சொல்ல வரலை. ஆனால், உன்னோட இந்த சுபாவத்தால் என்னை ரொம்பவே காயப்படுத்துற!” என்று ஆதங்கத்துடன் உரைத்தவனை, அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் அவனது மனைவி.

 

“என்ன? எனக்குள்ளேயும் சில கசப்பான உணர்வுகள் மறைஞ்சு தான் இருக்கு ம்மா! நான் உன்னைக் கஷ்டப்படுத்திடுவேனோன்னுப் பார்த்துப் பார்த்துப் பேசிட்டும், நடந்துக்கிட்டும் இருக்கேன். ஆனால், உனக்கு அதெல்லாம் தெரியுதா? இல்லையா?” 

 

 “எனக்கு எல்லாமே தெரிஞ்சது ங்க. ப்ளீஸ்! நீங்க கொஞ்சம் பொறுமையாகப் பேசுங்க” என்றவுடன்,

 

“இப்போ கூட நான் கோபப்பட்டு இதையெல்லாம் பேசலை, கேட்கலை யக்ஷூ. என்னோட மனசில் இருக்கிற ஆதங்கத்தை உங்கிட்ட சொல்லிட்டு இருக்கேன். அதுவும் மத்தவங்க எங்கிட்ட நடந்துக்கிட்டதைப் பத்திப் பேசலை.நீ எங்கிட்ட பிஹேவ் பண்றதைப் பத்தி சொல்றேன். அதாவது உனக்குப் புரியுதா?” எனக் கேட்டான் அற்புதன்.

 

“நல்லாவே புரியுது ங்க” என்றாள் யக்ஷித்ரா.

 

“சரி. நான் இது வரைக்கும் பேசியதில் ஏதாவது தப்பு இருக்கா?” 

 

“ஊஹூம்” 

 

“உன்னோட கடந்த காலத்தைப் பத்தி தெரிஞ்சுக்கனும், அப்போ தான், உன் மனசில் அழுத்திட்டு இருக்கிறதையெல்லாம் உன்னை மறக்க வைக்க முடியும். அதுவும் உன் சம்மதத்தோட தான் எல்லாத்தையும் கேட்கனும்னு தானே இவ்வளவு நாளும் உன்கிட்ட கதைக் கேட்டேன்? அதில், உனக்கு ஏதாவது பிரச்சினை இருக்குதா?” 

 

“ஐயோ! இல்லைங்க” என்று அவள் பதறவும்,

 

“நீ முதல்ல பதறாமல் ரிலாக்ஸாக இரு” என்று அவளிடம் அறிவுறுத்தி விட்டுக் குடிக்கத் தண்ணீரும் கொடுத்தான் அற்புதன்.

 

அதை வாங்கிப் பருகியவளுக்கு, இப்போது தான், பதட்டத்தில் ஆடிய உடல் அமைதியடைந்தைப் போல் இருந்தது.

 

அதனால்,”நான் எப்படி என்னோட கடந்த காலக் கதையைச் சொல்லி உங்ககிட்ட என்னைப் பத்தியும், என்னோட சுபாவத்தைப் பத்தியும் ஷேர் செய்துட்டு இருக்கேனோ! அதே மாதிரி, நீங்களும் உங்களோட மனசில் இருக்கிறதை எங்கிட்ட சொல்லுங்க! அதை நான் கேட்கத் தயாராக இருக்கேன்!” என்று தனக்கு முன்னால் சம்மணமிட்டு அமர்ந்தவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்து விட்டு,

 

“ஓஹ்ஹோ! அப்போ நான் எல்லாத்தையும் சொல்லலாம்ன்ற! அப்படித் தானே?” என்றான் அவளது கணவன்.

 

“ஆமாம் ங்க” என அவனிடம் உறுதியாக கூறினாள் யக்ஷித்ரா.

 

“அப்போ சொல்லிட வேண்டியது தான்” என்றவனைக் கூர்மையாகப் பார்த்தவளிடம்,

 

“நமக்குக் கல்யாணம் ஆன நாளில் இருந்து இப்போ வரைக்கும் உன்னோட ஒதுக்கம் எதுக்குன்னுத் தெரியாமல், அரேன்ட்ஜ் மேரேஜ்ஜால் தான் இப்படி இருக்கிறா போலன்னு நினைச்சுத் தள்ளி இருந்தேன். ஆனால், அதையும் தாண்டி உனக்குக் கடந்த காலத்தில் நடந்ததை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக கேட்டதுக்கு அப்பறம் தான், எனக்கு எல்லாமே புரிஞ்சது!” எனவும்,

 

“என்னப் புரிஞ்சது ங்க?” என்று அவனிடம் வினவினாள் மனைவி.

 

அற்புதன்,“உனக்கு இந்தக் கல்யாணத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏன் எங்கிட்டேயும் எந்தப் பிராப்ளமும் கிடையாது. ஆனால், உன்னோட கடந்த கால வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களையும் மனசிலேயே போட்டுப் புழுங்கிக்கிட்டு இருக்கிறதால் தான், என் கூட உன்னால் சாதாரணமாகப் பேசிப், பழக முடியலைன்றதைப் புரிஞ்சுக்கிட்டேன்” 

 

அவன் கூறியது சத்தியமான வார்த்தைகள் தானே?

 

தங்கள் திருமணத்தை அவள் இன்னும் மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லையே? 

 

அதைப் பற்றி அவன் குறை கூறினால் அவளுக்குத் தாங்குமா? 

 

இதையெல்லாம் யோசித்தவாறே அமர்ந்திருந்தாள் யக்ஷித்ரா.

 

“என்ன யோசிக்கிற?” எனக் கேட்டு அவளது சிந்தனையைக் கலைத்தான் அற்புதன்.

 

“நான் இப்போ வரைக்கும் என்னோட கடந்த காலத்திலேயே வாழ்ந்துட்டு இருக்கேன்ல ங்க?” என்கவும்,

 

“உண்மையைச் சொல்லனும்ன்னா, ‘ஆமாம்’ யக்ஷூ! நீயே அதை இப்போ தான் உணர்ந்து இருக்கிற!” என்றான் அவளுடைய கணவன்.

 

“அப்பறம் ஏன் அதை எனக்கு நேரடியாகச் சொல்லிப் புரிய வைக்காமல், எங்கிட்ட கதையைக் கேட்டுட்டு இருந்தீங்க?” என்று கண்களில் வலியைத் தேக்கி வைத்துக் கொண்டு அவனிடம் வினவினாள் யக்ஷித்ரா.

 

உடனே அவளை மென்மையாக அணைத்து,”ஏன்னா, நான் உன்னோட எல்லா வலியையும் கேட்டு, அந்த அழுத்தங்களை என்னோட காதலால் சரி பண்ணனும்னும், உன்னோட வலியைக் குறைக்கனும்னும் நினைச்சேன்!” என்று அவளிடம் உறுதியாக உரைத்திருந்தான் அற்புதன்.

 

அதைக் கேட்டதும், அவனைப் பிரம்மிப்புடன் பார்த்தாள் அவனது மனைவி.

       

                 -தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்