மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும் என்றுமே கொள்ளை அழகுதான். சற்றே இருண்ட வானிலை. அதில் மருண்ட மென் சாரல். ஆதவன் அழிக்குள் அமிழ்ந்ததால் அல்ல இந்த வானிலை. அவன் மேகக் கூட்டங்களுக்கு இடையில் தன்னை ஒளித்துக்கொண்டதால். வரிவடிவமாய் தெரிந்த மலையரசி கரும் பச்சை நிறத்தை குழைத்து அரிதாரம் பூசியிருந்தாள். மேகக் கூட்டத்தைக் கலைக்க முற்பட்ட காற்றின் சுழற்சி தோல்வியையே தழுவியது. அண்டத்தில் உள்ள தனிமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வினைபடுவதுதானே நியதி. வேதிவினை நிகழ்ந்து காற்றில் கலந்திருந்த மழைத்துளிகள், ஞாயிறின் ஒளியை விலக்கி வைக்க, வானவில் தோன்றியது. எப்பொழுதும் வானவில்லைக் கண்டால் ஆர்ப்பரிக்கும் உள்ளம், இன்று அமைதியின்றி தவித்தது அவனுக்கு. வானவில் அவனின் காதலின் அங்கம். அவனுக்கும் அவனவளுக்கும் பிடித்தமான ஒன்று இதுதான். நிகழ்வுகள் பின்நோக்கி சென்றது.
“நிரு.. மழை சட்டுன்னு கொட்டித் தீர்த்திடுச்சு..” என்றான் பரந்து விரிந்து கிடந்த வெளியைப் பார்த்து.
“இங்கேயும் மழைதான் கீதன்..”
“இப்போ எவ்ளோ அழகா இருக்குத் தெரியுமா.. நீ என் பக்கத்தில் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்..”
“சென்னையில் அழகா இருக்க என்ன இருக்கு. இங்க இப்போ வானவில் தெரியிது தெரியுமா?”
“வாவ்.. அப்படியா.. இங்கேயும் வானவில் தெரியிது. அது என்ன அப்படி சொல்லிட்ட.. மழை வந்தா எல்லா இடமும் அழகாகத்தான் இருக்கும்.”
“காதல் வந்தா எல்லாமே அழகா தெரியுமாம்..” என்று அவள் இழுக்க, அவன் சிரித்தான்.
“இது என்ன வம்பா இருக்கு. அழகா இருக்கது என்னைக்குமே அழகாத்தான் இருக்கும்..” என்றான் குறும்புடன். அவளின் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வழிந்தது. இது பேச்சை வளர்க்கும் உத்தி. கவிதைகள் பேசி, புகழாரம் சூட்டிக் காதலைத் தொகுத்து வழங்கும் ரகம் அவனல்ல. அவளை பேச வைப்பான். அவளின் பிடித்தங்கள் அறிந்து கொள்வான். அவளின் நாட்குறிப்பில் எழுதியிருக்கும் எழுத்துக்களைக் பிழையில்லாமல் படித்து முடிக்கும் ரகம். கொஞ்சம் எதார்த்தவாதி என்றும் கூறலாம்.
“இப்படிலாம் பேசுனா பொண்ணுங்களுக்குப் பிடிக்காது..”
“அப்போ எப்படி பேசணும்..”
“தெரியாது..” என்றாள் வேண்டுமென்றே.
“அதெப்படி தெரியாமப் போகும். இப்படி பேசுறது பிடிக்காதுன்னா எப்படி பேசுறது பிடிக்கும். கொஞ்சம் சொல்லு. முடிஞ்சா என்னை மாத்திக்கிறேன்” என்று அவன் பேச்சை வளர்க்க, “என்ன நூல் விடுறீங்களா” என்றாள் அவள் விளையாட்டாக.
“இல்லை. கயிறு திரிக்கிறேன்..” என்று வம்பு செய்தான்.
“சரி.. எனக்கு வேலையிருக்கு.. போனை வைக்கிறேன்” என்று முறுக்கிக் கொள்ள, “அட.. எதுக்கு இவ்ளோ வேகம்.. இரு..” என்றான் கீதன்.
“இதுக்கு மேல பேசுனா நீங்க என்னைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்ப்பீங்க..”
“மேடம் இப்போல்லாம் ரொம்பவே ஷார்ப்.. கண்டுபிடிச்சுட்டீங்க..”
“உங்களுக்கு மட்டும்தான் என் மனசை வரிவிடாம படிக்கத் தெரியுமா.. எனக்கும் தெரியும்..” என்றாள் பெருமையுடன்.
“ம்ம்ம்… குட் இம்ப்ரூவ்மெண்ட்.. சரி.. இன்னைக்கு நான் பேசுறேன். நீ ஆசை தீர கேளு..”
“சரி..சொல்லுங்க..”
“என்ன சொல்லணும்..”
“பொண்ணுங்களுக்கு எப்படி பேசுனா பிடிக்கும்னு..”
“உன் சாயல் கண்டு வானவில்லின் சாயம் கூட வெளுத்துப் போகுமே….
உன் எண்ணம் கண்டு வானவில்லின் வண்ணம் கூட மங்கிப் போகுமே..
இப்படி கவிதை சொன்னா பிடிக்குமா?”
“கொஞ்சம் சுமார் தான்… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..” என்றாள் குறும்புடன்.
“ஓ… சுமாரா இருக்கா.. நீ மட்டும் என் பக்கத்தில் இருந்து இப்படி சொல்லிப்பாரு.. ” என்று அந்தரங்கமாக அவன் சில விஷயங்கள் கூற, அவள் பதறிவிட்டாள். ஆண்களுக்கு இது எளிதான ஒன்று. இவள் எனக்கானவள் என்று முடிவாகிவிட்டால், பார்வையிலும் பேச்சிலும் துகிலுரித்துவிடுவார்கள்.
“கீதன்.. ஸ்டாப்பிட்.. என்னை சுத்தி ஆளுங்க இருக்காங்க.. நீங்க இப்படி பேசுனா நான் போனை வைக்கிறேன்..” என்று கூற, “ஏய்… வச்சுராத.. ” என்று அவன் பதறினான்.
“சரி.. வேற பேசலாம். இன்னும் எவ்ளோ நாள் இதை நீ அவாய்ட் பண்ணுவேன்னு பாக்குறேன்.”
அவள் பதிலேதும் கூறவில்லை. அமைதிக் காத்தாள். சில சமயம் அழகாகத் தோன்றும் மௌனம் சில சமயம் அமிலைத்தை ஊற்றிவிடும். இது வழமையான ஒன்றே. அவனே தொடர்ந்தான்.
“வட்டமாய் இருக்கும் வானவில்லின் விட்டம் என்னைத் தள்ளி வைத்தது அதன் புற எல்லையில்!!!
அதன் மையமாய் இருக்கும் உன்னை அடையும் வழியறியாது சுற்றி வருகிறேன் அதன் சுற்றளவில்!!!
வட்டம் சிறுத்து விட்டம் குறைந்திடுமோ?
உன் அருகினில் வருவேனா?
உன் மேனியில் இழைவேனா?
புள்ளியாய் தொலைவேனா?” என்று அவன் கூறி முடிக்க, அவளிடம் ஆழ்ந்த அமைதி.
“நீங்க இவ்ளோ அருமையா கவிதை எழுதுவீங்களா?” என்றாள் வியந்து.
“நல்லாருக்கா?”
“நல்லாருக்கு.. ஆனா புரியலை..”
“என்ன புரியலையா.. அப்புறம் எப்படி நல்லாருக்குன்னு சொன்ன?”
“அது தோணுச்சு..”
“ம்ம்ம்… உன்னையெல்லாம் என்ன செய்றது..”
“கவிஞன் உருவகப்படுத்தலாம்.. அதுக்காக வானவில் வட்டமா இருக்குன்னு கவிதை சொன்னா எப்படி புரியும்..”
“வானவில் வட்டம்தான். விண்ணில் தெரியும் வானவில் ஒரு முழு வட்டத்தின் பகுதிதான். விண்ணிலிருந்து பார்த்தால் முழு வட்டமும் தெரியும்..”
“இப்போ ரொம்ப புரியலை..”
“வானவில் வட்டத்தின் மையப்புள்ளி நீதான். நீ மையத்தில் இருக்கதால ஒரு பகுதிதான் உன் கண்ணுக்குத் தெரியும். இது கூட தெரியாம நீ என்ன படிச்ச?” என்று அவன் அவளை வம்பிழுக்க, அவள் கோபம் கொண்டாள்.
“மழை நிக்கும்போது காற்றில் எங்கும் மழைத்துளிகள் இருக்கும். அதில் விலகிப் பிரியும் சூரிய ஒளி எல்லாத் திசையிலும் செல்லும். அதனால் வானவில் தோன்றும். இதெல்லாம் நாங்களும் படிச்சிருக்கோம்.. ஆனா அது வட்டம், அதோட விட்டம் எல்லாம் எனக்கு ஞொல்லித்தரல” என்று முறுக்கிக்கொண்டாள்.
“உங்க சயின்ஸ் டீச்சர் ஒழுங்கா சொல்லித் தரலை. நம்மால் காண முடிந்தது ஒரு பகுதியைத்தான். நாம் காணும் வானவில் நமக்கான கோணத்தில் நமக்காக மட்டுமே தோன்றும் ஒரு தோற்றப்பொலிவு. தோற்றப் பிழைன்னும் சொல்லலாம். எனவேதான் அதன் மையம் நமது தலைக்கு நேர் மேலே இருக்கும்” என்று விளக்கினான்.
“உங்களைக் கவிதை சொல்ல சொன்னா, எனக்கு பாடம் எடுக்குறீங்க..” என்று சலித்துக் கொண்டாள் அவள்.
“நீதான் நல்லாருக்குன்னு சொன்ன..”
“தெரியாம சொல்லிட்டேன். ஆளை விடுங்க..” என்று அவள் தோல்வியை ஒத்துக் கொள்ள அவன் சிரித்துக்கொண்டான்.
எப்பொழுது வானவில் பார்த்தாலும் இந்த உரையாடல் நினைவில் வரும். நினைவில் மட்டுமல்ல. அது பின்னணியில் பண்ணிசைக்கும் என்றே கூறலாம்.
புகைகங்குகள் அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. ஆறாம் விரலாய் அவனின் விரலுக்கிடையில் எரிந்து கொண்டிருந்தது வெண்சுருட்டு. தீக்கங்குகள் அவன் விரலை தீண்டவும் “ஷ்ஷ்” என்று உதறினான் புகைச்சுருட்டை. எவ்வளவு நேரம் இப்படியே இருந்தானோ, அது அவனுக்குத்தான் வெளிச்சம். எதிலும் நாட்டமில்லை. அறைக்குள் உறங்கிக்
கொண்டிருந்த அவனது மனைவி நிரண்யாவைப் பார்த்தான். இவ்வளவு நேரம் அவள் எடுத்திருந்த அவதாரத்திற்கும், இப்பொழுது அவளின் அவதாரத்திற்கும் சிறிதும் பொருத்தமில்லை. மனதில் மூண்டிருந்த வெற்றிடத்தை “ஊஃப்” என்று காற்றாய் ஊதி வெளியே தள்ளினான். பலகணியில் இருந்து அறைக்குள் வந்தான். அறையே அலங்கோலமாய் இருந்தது. சற்று அலங்காரமாய் இருந்த அறை அது. கீதனும் நிரண்யாவும் புதுமனத் தம்பதிகள். திருமணம் முடிந்து பத்து நாட்கள் முடிந்த நிலை. ஆனால் அவளின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்றுதான் அவனுக்கு விளங்கவில்லை. அவளிடம் நெருங்க அவன் நினைக்க, அவளோ ருத்ர தாண்டவம் எடுத்துவிட்டாள். இது அவளுக்கு விருப்பமற்ற திருமணம் இல்லை. நான்கு மாதங்கள் அவனுடைய காதலியாகவே இருந்தாள் அவள்.
அவள் எழுந்தவுடன் அவளை உண்டு இல்லை என்று ஆக்கிட நினைத்திருந்தான். கடிகார முட்களின் ஒலி அவனைக் கூரு போட்டது. அவனின் கெஞ்சலும் கொஞ்சலும் அவளின் கூச்சத்தை முற்றுகையிட வேண்டிய அழகான தருணங்கள் தவறாய் போனது. அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள். அவள் சொன்ன அந்த ஒருவன் யார். தன்னைவிட முக்கியமான அந்த ஒருவன் யார் என்ற பல வினாக்கள், இனிப்பை மொய்க்கும் ஈக்களாய் மொய்த்தது மனதின் சுவரை.
அவளிடம் அரவம் உணர்ந்ததும், எங்கோ ஓடியிருந்த பொறுமையை மீண்டும் இழுத்துப் பிடித்தான்.
“கீதன்..” என்று அவனை அழைத்தாள் நடுக்கத்துடன்.
அவளைக் கேள்வியாய் பார்த்தான் கீதன். அதில் தெரிந்த உணர்வுகளை அவளால் மொழிபெயர்க்க இயலவில்லை. சற்றுமுன் காதல் வழிந்த விழிகள், கூர்மையுடன் அவளை ஆராய, அவனின் நெறித்த புருவத்தின் மத்தியில் மடிந்து விழுந்தாள் அவள். சொற்களை உதிர்க்காமல் வினாத் தொடுக்கும் வித்தையை எங்கு சென்று கற்றானோ அவன்…
திகையாதே மனமே!