Loading

      எத்துணை நேரம் கதிரை கட்டிப்பிடித்து அழகி அழுதாளோ? அவளே அறியாள். கதிர் தான் அவளின் கண்ணீரை காணவியலாது தானும் கலங்கினான். ஓரளவு அழுகை ஓய்ந்த அழகி அப்பொழுது தான், தான் கதிரை கட்டிப்பிடித்திருப்பதை உணர்ந்தாள். சட்டென்று அவள் அவனை விட்டு விலக, அவனோ அவளை விடாது தன் அணைப்பிலேயே வைத்துக் கொண்டான்.

 

      “ஏதோ எமோஷன்ல… சாரி கதிர். விடு.”

 

     “முடியாது டி.”

 

     “கதிர்.” என அவள் அவனை பார்த்தாள்.

 

    “முடியாது டி. ஏன்டி நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்துற? உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியுது. ஆனா அதை ஏன் ஒத்துக்க மாட்டேங்குற? எது டி உன்னை தடுக்குது? எதுக்கு உன்னை நீயே கட்டுப்படுத்த முயற்சி பண்ணி கஷ்டப்பட்ற? என்னால இப்படி நீ எனக்கு பதில் சொல்ல முடியாம தவிக்குறத பார்க்க முடியலடி. நீயே தெளிவாகிடுவனு இவ்வளோ நாள் பொறுமையா இருந்தேன். ஆனா எல்லா விஷயத்துலயும் தெளிவா இருக்குற நீ இந்த விஷயத்துல மட்டும் ஏன் எந்த முடிவுக்கும் வராம தடுமாறுற? எது உன்னை என்கிட்ட வரவிடாம தடுக்குது? இத்தனை நாள் நீயே சொல்லுவனு விட்ட மாதிரி இன்னைக்கு விட முடியாது டி. எனக்கு இன்னைக்கு உன் மனசுல என்ன இருக்கு, ஏன் இந்த தவிப்பு, தடுமாற்றம்னு தெரிஞ்சே ஆகணும். சொல்லு டி.”

 

    அவளோ வாய் திறக்காது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

   “இதபார் இப்படித்தான். இப்படி இறுக்கமா பார்க்காத. இப்படி பார்த்தாலே நீ எதுவும் சொல்ல மாட்ட. இன்னைக்கு எனக்கு நீ மனசு விட்டு பேசணும். அதியோட மனசுல என்ன இருக்கு அவன் ஆசை என்னனு தெரிஞ்சதுக்கு அப்புறமும் எதுக்கு தயங்குற? சொல்லு டி‌.” என சற்றே குரல் உயர்த்தினான்.

 

   “உனக்கு என்ன இப்ப, நான் ஏன் தயங்குறேன்னு எது என்னை தடுக்குதுனு தெரியணும் அவ்வளோ தானே.” என கோபமாக வினவி அவனது செயலுக்கு சரியாக எதிர்வினை ஆற்றினாள்.

 

    “ஆமா சொல்லு.”

 

    “எனக்கு நான் தான் தடை.” என அவள் சற்றே கோபத்தில் குரல் உயர்த்தி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்.

 

    அவனோ எதுவும் கூறாமல் அவள் முழுதாய் பேசட்டுமென அவளையே பார்த்திருந்தான்.

 

    “என்னோட கடந்த கால வாழ்க்கை அனுபவம் தான் தடை.” என்றவள் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

 

    “நீ நல்லவன் தான். என்னை நல்லா பார்த்துப்ப அதிய நல்லா பார்த்துப்பனு நல்லா தெரியும். ஆனா என்னோட முதல் கல்யாணம் தந்த அனுபவம் இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசிக்க விட மாட்டேங்குது. எங்க மறுபடியும் அழகான ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு திடீர்னு அது காணாம போய்டுமோனு பயமாயிருக்கு.” 

 

   “அது தேவையில்லாத பயம் டி.” என அவன் கமறும் குரலில் அழுத்தமாகக் கூறினான்.

 

   “அது எனக்கு புரியுது. ஆனா என்னால முடியல. உன்னை வேணாம்னு விட்டு போகவும் முடியல வேணும்னு நெருங்கவும் முடியல. என்னால முடியல டா.” என கத்தி அழுதாள்.

 

    அவன் சட்டென்று அவளை அணைத்து ஆறுதலாக தலைக்கோதினான்.

 

    “அழாத டி. எனக்கும் அழுகை வருது.” என அவன் கண் கலங்க, அவளோ அவனை தள்ளி விட்டாள்.

 

     அவன் மீண்டும் அவளை அணைக்க எத்தனிக்க, அவள் கை நீட்டி தடுத்து, “நீ வராத. நீ கிட்ட வந்தா பேச வந்தத பேசாம விட்ருவேன். இன்னைக்கு எல்லாத்தையும் பேசணும் நான். என் மனச அழுத்திக்கிட்டு இருக்குற எல்லாத்தையும் பேசணும் ப்ளீஸ்.” என்றாள்.

 

    அவன் அவளை அணைக்க கூறிய மனதை அடக்கவியலாது தவித்து அமைதியாக கலங்கி நின்றான்.

     

    “என்ன தான் என் கடந்த காலத்தை கடந்து வந்துருந்தாலும் அவன்கூட வாழ்ந்த காலத்துல அவன நான் உண்மையா நேசிச்சுருக்கேன். அந்த வலி இன்னும் எனக்குள்ள ஓரமா இருந்துக்கிட்டே இருக்கு. அது மாறவும் இல்லை ஆறவும் இல்லை. அதி என் வாழ்க்கைல வந்து ஆறுதல் தந்தான். அதி தான் இனி வாழ்க்கைனு முடிவு பண்ணப்ப நீ வந்து உன் விருப்பத்தை சொன்ன. அப்போ உன் மேல கோவம் வந்தது உண்மை. ஆனா நாள் போக போக உன்னை எனக்கு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. அதை என்னால ஏத்துக்க முடியாம தான் என்கிட்ட இருந்தே நான் தப்பிக்க அதே கோவத்தோட உன்கிட்ட நடந்துக்கிட்டேன். என் மேல உள்ள கோவத்த நான் உன்மேல காட்டுனேன். ஆனா நீ விலகி போகாம இன்னும் என்னை நெருங்கி வந்த. நான் எதுக்காக என்கிட்டயிருந்தே தப்பிக்க பார்த்தேனோ அது நடக்கல. என்கிட்டயே நான் வசமா மாட்டிக்கிட்டேன். இப்போ எனக்குள்ள, நீ நான் அதி மூனு பேரும் ஒரே வீட்ல ஒரே குடும்பமா வாழணும்முன்ற ஆசை அளவில்லாம பொங்கிக்கிட்ருக்கு. அது தான் பயமாயிருக்கு. எந்த முடிவும் எடுக்க முடியாம குழப்புது. உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னும் முடிவு எடுக்க முடியல நீ வேண்டாம்னு விலகி போகவும் முடியல. பட் யூ ஹேவ் பர்மெனன்ட் ப்ளேஸ் இன் மை ஹார்ட். ஐ லவ் யூ ஹோல் ஹார்ட்டட்லி. நான் உன்னை காதலிக்கிறேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு டா. உன்கூட சேர்ந்து வாழணும் அதிக்கு தங்கச்சி பாப்பாவோ தம்பி பாப்பாவோ பெத்துக்கிட்டு நாம நாலு பேரும் சந்தோஷமா வாழணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா இது நடக்குமா நடந்தா சரியா இருக்குமானு பயமாயிருக்கு.” என்று அவள் மடிந்து அமர்ந்து உடைந்து அழ, அவன் மெதுவாக அவளை நெருங்கி அவள் முன் மண்டியிட்டான்.

 

     அவளும் தன்னை விரும்புகிறாள் என்று அவன் அறிந்திருந்தாலும் அவளது வாயால் கேட்ட பின்பு அவனுள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்று பெருகியது. இத்துணை நாட்கள் அவளை தடுக்கும் காரணமறியாது ஒன்றும் செய்ய முடியாது இருந்தவன் இப்பொழுது அவள் வாயாலேயே காரணம் அறிந்தபின் அதற்கு தான் என்ன செய்ய வேண்டுமென தெளிவான முடிவிற்கு வந்திருந்தான். அவளது இந்த பயம் வீணென்று இனி தனது செயலில் புரிய வைப்பதென முடிவெடுத்திருந்தான். அவனுக்கு மகிழ்ச்சியில் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது. அதரங்களில் மெல்லிய வளைவோடு அவளது முகத்தை நிமிர்த்த, அவனது முகத்தை பார்த்தவள் அழுகையினூடே தாவி அவனை அணைத்துக் கொண்டாள்.

 

      

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்