Loading

வானம் – 15

“என்ன டி சொல்ற, கேஸ்ட் தான் பிரச்சினையா? ரேவதி உன் மாமா பொண்ணு தான!” என புரியாமல் சிறு அதிர்வோடு சரயுவை நோக்கினாள் சம்யுக்தா.

“என் சொந்த தாய்மாமா பொண்ணு தான் சம்யு” என்றவளை குழப்பத்தோடு பார்த்தாள் சம்யுக்தா. “என்னடா இவ சொந்த மாமா பொண்ணுனு சொல்றா, அப்புறம் கேஸ்ட் தான் பிராப்ளம்னு சொல்றானு குழப்பமா இருக்கா சம்யு?” என்றவளின் கேள்விக்கு சம்யுக்தாவின் தலை வேகமாக ஆமாம் என ஆடியது.

“மாமாவோட வொய்ப், என் அத்தை வேற கேஸ்ட் சம்யு. வேற கேஸ்ட்னா… அத எப்படி சொல்றது” என சிறிது இடைவெளி விட்டவள், “அவங்களும் எங்க கேஸ்ட் தான். ஆனா இன்னொரு பிரிவுனு சொல்லலாம். எங்க குலதெய்வம் கோவில்ல ஒரு கட்டுப்பாடு இருக்கு.

எங்க ஜாதிக்குள்ள கட்டுப்பட்டு வர்றவங்கள மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கணும். வெளிய இருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க குலதெய்வ கோவில்ல வரி கட்ட முடியாது, அவங்க தலக்கட்டு அத்தோட முடிஞ்சிரும்” என்றவளை பார்த்தவளுக்கு பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தது.

சம்யுக்தாவின் முகமே அவளது எண்ண அலைகளைப் பிரதிபலிக்க அவள்முன் அமர்ந்தவள் கூறத் தொடங்கினாள்.

“குலதெய்வம் கோவில்ல சாமி கும்பிடும்போது வரி கொடுப்போம்ல!” என சம்யுக்தாவை பார்க்க, “ம், ஆமாம். எங்க வீட்ல அப்பா கூட வரி குடுப்பாரு. ஆனா பெருசா நான் இதப்பத்தி தெரிஞ்சுக்கிட்டது இல்ல டி” என்றாள் அவள்.

“அந்த வரி தான் இப்போ பிரச்சினை சம்யு. நாங்க கும்பிடுற குலதெய்வம் கோவில்ல ஒரு கட்டுப்பாடு. கலப்படம் இல்லாத எங்க கேஸ்ட் ஆளுங்களுக்குள்ள தான் பொண்ணெடுக்கணும். வெளிய கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்ககிட்ட வரி வாங்க மாட்டாங்க. இனி அவங்களோட வருங்கால தலைமுறையினரும் அந்த கோவில்ல வரி கட்டி பொங்கப்பானை வாங்க முடியாது.

என் மாமா வீட்டு குலதெய்வம் கோவில்ல அப்படி ஒரு கட்டுப்பாடு இல்ல. அதுனால அப்போ அத்தைய மாமாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுனு சொல்லி தாத்தா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரு. ஆனா இப்போ அதுதான் பிரஷாந்த் வாழ்க்கைல பெரிய பிரச்சினையா வந்து நிக்குது.

ரேவதிய அண்ணா கல்யாணம் பண்ணா எங்க குலதெய்வம் கோவில்ல இனி வரி வாங்க மாட்டாங்க. இனிமேல் அப்பாவுக்கு அடுத்த எந்த தலைமுறையும் கோவில்ல வரி கொடுக்க முடியாது. அதுனால தான் அம்மா இப்போ இவ்ளோ தீவிரமா அவங்க காதல எதிர்க்கிறாங்க.

எனக்கு இருக்கிறது ஒரே மகன், அவனோட எங்க தலைக்கட்டு முடிஞ்சறக்கூடாதுனு ஒரே முடிவோட இருக்காங்க. என்னதான் நம்ம இருபத்தோராம் நூற்றாண்டுல இருந்தாலும் இந்த மாதிரி ஜாதி விசயத்துல நம்மனால வீட்டு ஆளுங்கள எதிர்க்க முடியல சம்யு. நான் அம்மாட்ட எவ்ளவோ சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணேன். ஆனா, அவங்க அவங்களோட முடிவுல உறுதியா இருக்காங்க. இதப்பத்தி அப்பாட்ட பேசற அளவுக்கு எனக்கோ அண்ணனுக்கோ தைரியம் இல்லனு தான் சொல்லணும்.

லவ்வ வீட்ல சொல்ல தைரியம் இல்லாதவன்லாம் காதலிக்கவே கூடாதுன்னு எல்லாரும் ஈசியா சொல்லிறாங்க. ஆனா, எதார்த்தம் யாருக்கும் புரிபடாது சம்யு அந்த வலி தனக்கு வர்ற வரைக்கும். எமோஷனல் பிளாக்மெயில், ஜாதி, பணம் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா அடுக்கிக்கிட்டே போகலாம். இதெல்லாம் தாண்டி வீட்ல தன்னோட லவ்வ பத்தி பேசறது ஒரு பெரிய மலையவே தலைகீழா புரட்டி போடற மாதிரி. அவ்ளோ ஈசியா பேசிட முடியறது இல்ல” என்றவளின் வார்த்தைகளில் இருந்த வலி சம்யுக்தாவை வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது.

‘அவ அண்ணாவுக்கே இவ்ளோ பார்க்கிற அவ அம்மா இவ சித்தார்த் சார்ர லவ் பண்றது தெரிஞ்சா’ நினைக்கவே மனம் பதறியது. இவ்வளவு தெரிந்தும் எப்படி இவள் அப்படி ஒரு முடிவு எடுத்தாள் என்பது இன்னும் புலப்படாத விசயமாகவே பட்டது அவளுக்கு. என்னதான் தான் அதற்கு தூண்டுகோலாக இருந்திருந்தாலும் அதற்காக சரயு உடனே முடிவெடுப்பவள் அல்ல. அதுவும் அவள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விசயமாயிற்றே இது. சற்று தன் சிந்தனைகளை ஓரம் கட்டியவள், “இப்போ இதுக்கு என்னதான் பண்றது டி?” என்றாள் புரியாமல்.

“ப்ச், தெரியல டி. பார்ப்போம் இதுக்குமேல இறைவன் விட்ட வழி” என தோளைக் குலுக்கியவள், “சரி சம்யு, நீ கீழப் போ. கொஞ்சம் நேரம் நான் இங்க இருந்திட்டு வரேன்” என மாடியின் கைப்பிடி சுவரில் சாய்ந்தவாறே வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களையும் நிலவையும் வெறிக்கத் தொடங்கினாள் சரயு.

தோழியின் கூற்றுக்கு சம்மதமாய் அவள் தங்கள் அறைக்கு செல்ல மடி இறங்க ஆரம்பித்தாள் சம்யுக்தா.

இதழிகாவை உறங்க வைத்துவிட்டு அவளுக்கு அணைப்பாக இருபுறமும் தலையணைகளை வைத்தவன் சிறிது நேரம் மாடியில் உலாவி விட்டு வரலாம் என்றெண்ணி மாடிக்கு வந்திருந்தான் சித்தார்த்.

என்னதான் சரயுவை அவன் நினைக்கக்கூடாது என நினைத்தாலும் அவளே அவன் மனதில் உலா வர, உறக்கம் பிடிபடாமல் இருக்கவும் தான் சற்று தனிமை வேண்டி அவன் மாடிக்கு வந்திருக்க அவன் கண்களோ அவனது அனுமதியின்றி எதிரே தெரிந்த மகளிர் விடுதியை தான் பார்வையிட்டது.

கண்களை இறுக மூடி திறந்தவன் வானத்தை அண்ணாந்து பார்க்க முற்பட, விடுதியின் மாடியில் தெரிந்த உருவம் அவன் மனதை மீண்டும் கலைக்கத் தொடங்கியது.

மாடியில் ஒளிர்ந்த குண்டு பல்ப்பின் உதவியால் நிலவை வெறித்துக் கொண்டிருந்த சரயுவின் முகம் அவன் கண்களுக்குப் புலப்பட, ‘இன்னும் தூங்காம இவ மாடில என்ன பண்றா’ என மனம் கேள்வி எழுப்ப, ‘அவள நினைக்கக்கூடாதுனு இங்க வந்தாலும் இங்கயும் அவளே தான் தெரியுறா’ என தலையை உலுக்கியவன், முதலில் அவளின் ஞாபகத்தில் இருந்ததால் அவள் உருவம் தெரிவதாக நினைத்து தலையை அழுந்த கோதிவிட்டு மீண்டும் அதே இடத்தைக் காண அவன் எண்ணங்களின் நாயகியோ அங்கேயே அதே நிலையில் தான் இருந்தாள்.

அவள் முகத்தில் தெரிந்த சோர்வு அவனை ஏதோ செய்தது. எப்பொழுதும் சிரித்த முகத்தோடு வளைய வருபவளின் முகத்தில் ஏன் இத்தனை சோகம் என மனம் கேள்வி எழுப்ப, அவளின் சோகத்தை நீக்க மனம் பாடுபட அதனை அடக்க பெரும்பாடுபட்டான்.

‘ஏற்கெனவே பட்ட அடிகள் பத்தாது போல் இந்த மானங்கெட்ட மனதிற்கு’ அதையும் தாண்டி இவனின் கரிசனம் அவளது வாழ்விற்கல்லவா மேலும் சிக்கலை உண்டாக்கும் என நினைத்தவன் மனதை கடிவாளம் கட்டி தரதரவென இழுத்துக்கொண்டு வேகமாக தன் அறையை நோக்கிச் சென்றான்.

தன்னை அவன் கண்டதையோ வேகமாக செல்வதையோ உணராதவள் சிறிது நேரம் மாடியில் இருந்துவிட்டு பின் தங்கள் அறைக்குச் சென்றாள் சரயு.

காலையில் எப்பொழுதும் போல் விரைவாக எழுந்து எழுத்து வேலைகளை முடித்தவள், கல்லூரிக்கு கிளம்பத் தயாராக, அப்பொழுது தான் எழுந்த சம்யுக்தா, “என்ன டி, எப்போ வந்து படுத்த… இவ்ளோ சீக்கிரமா எந்திரிச்சு காலேஜ்க்கு வேற கெளம்பிட்ட” என கொட்டாவி விட்டவாறே வினவினாள்.

“ஹேப்பி மார்னிங் சம்யு, பிராஜெக்ட் பத்தி மேம்கிட்ட டிஸ்கஷன் பண்ணனும்னு நேத்தே சொன்னேன்ல. மேம் மார்னிங் சீக்கிரமே வந்துருனு சொன்னாங்க. அதான் கிளம்பிட்டு இருக்கேன். சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பி வா, நான் முன்னாடி போறேன்” என்றவாறே நோட்டுபுத்தகங்களை தனது கல்லூரி பையினுள் அடைத்துக்கொண்டுக் கிளம்பினாள் சரயு.

“ம்… பாய் டி” என்றவாறே மீண்டும் ஒரு கொட்டாவியை வெளியிட்டவள் தனது அலைப்பேசியில் மணியை பார்க்க அதுவோ 7.45 எனக் காட்டியது. ஒன்பது மணிக்கு தானே கல்லூரி, இன்னும் நேரமிருக்கிறது என நினைத்தவள் மீண்டும் போர்வைக்குள் தன்னை அடக்கிக் கொண்டாள் சம்யுக்தா.

பிராஜெக்ட் வேலைகள் இருப்பதால் இன்று மாலை பகுதிநேர வேலைக்கு வர இயலாது என்பதை இதழிகாவிடம் கூறிவிட்டு கல்லூரி கிளம்பலாம் என்றெண்ணியவள் சித்தார்த்தின் வீட்டை அடைந்தாள்.

இப்பொழுதெல்லாம் இதழிகாவை கடையிலேயே சந்தித்துக் கொள்வதால் அவர்களின் வீட்டுப்பக்கம் செல்லாமல் இருந்தாள். இன்று கற்பகம்மாளையும் பார்த்துவிட்டே போகலாம் என்றெண்ணி அவள் உள்ளே நுழைய இரவு உறங்க தாமதம் ஆனதால் அப்பொழுது தான் எழுந்த சித்தார்த் சோம்பல் முறித்தவாறே வெளியே வராண்டாவிற்கு வந்துக் கொண்டிருந்தான்.

சரயு காம்பவுண்ட் கதவைத் திறந்து உள்ளே வருவதைக் கண்டவன், நேற்றிரவு அவளின் சோக முகம் மனக்கண்ணில் மின்னிமறைய, அவளது முகத்தை நோக்கினான்.

அவனைக் கடந்துசெல்ல முற்பட்டவளை அவனின் வார்த்தைகள் தடைபோட்டது.

“எதும் பிராப்ளமா சரயு?”

வார்த்தைகளில் அத்தனை கனிவு. அவனையும் மீறி அந்த வார்த்தைகள் வெளிவந்திருந்தன. புரியாமல் அவனைப் பார்த்தவளைக் கண்டு, “அது…” என சற்றுத் தடுமாறியவன், “நேத்து நைட் ரொம்ப டல்லா இருந்த மாதிரி இருந்துச்சு. அதான் எதுவும் பிராப்ளமானு கேட்டேன்” என வேகமாக வார்த்தைகள் வந்து விழுந்தன. அவனது முகத்தில் லேசான பதட்டம் கூடியது உளறிவிட்டோமே என்று.

“அதெல்லாம் எதுவும் இல்ல சித் சார்” என்றவளை மேற்கொண்டு சிந்திக்கவிடாமல் தடைசெய்தது இதழிகாவின் அழைப்பு.

“ஹாய் கியூட்டி” என்றவாறே வீட்டினுள் சென்றவளைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான் சித்தார்த். ‘உங்களுக்கு எப்படி தெரியும்’ என அவள் எதிர்கேள்வி கேட்டுவிடுவாளோ என்ற எண்ணம் ஓடியது தான் அந்த பதட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. எப்படி என்ற கேள்வி எழுந்தால் நேற்றிரவு அவளை மொட்டை மாடியில் பார்த்தேன் என்றாக வேண்டும். அது இன்னும் அவர்களின் உறவை மேலும் சிக்கலாக்க காரணமாகிவிடுமோ என்ற எண்ணத்தால் அவன் கேட்கக்கூடாது என தவிர்த்திருந்தாலும் அவளைக் கண்டவுடன் அனைத்தும் முறியடிக்கப்பட்டு தானாகவே வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டன.

இதழிகாவோடு சற்று அளவளாவிவிட்டு இன்று மாலை தன்னால் வேலைக்கு வர இயலாது என்பதை இதழிகாவிடம் கூறியவளின் பார்வை சித்தார்த்தின் மேல் தான் இருந்தது. அது தனக்கும் சேர்த்துதான் சொல்கிறாள் என்பதை உணர்ந்தவனின் தலை தானாக சம்மதமாக ஆடியது.

“காலேஜ்க்கு டைமாச்சு கியூட்டி, நான் கிளம்புறேன்” என அவள் கல்லூரி பையை எடுக்க சமையலறையில் இருந்து வேகமாக கற்பகம்மாள் எட்டிப் பார்த்தார்.

“சாப்பிட்டியா மா சரயு?” என்ற அவரின் கேள்விக்கு, “இல்ல ஆன்ட்டி, காலேஜ்க்கு டைமாச்சு. சாப்பிட்டா லேட் ஆகிரும். அதான்” என்றவள், “இங்கயே டைமாச்சு ஆன்ட்டி, போய்ட்டு வரேன்” என்றவளை கையில் தட்டோடு வந்த கற்பகம்மாள் தடுத்து நிறுத்தினார்.

“என்ன பொண்ணு மா நீ, காலாங்காத்தால வயித்த காயப் போடாலாமா… இந்தா ரெண்டு இட்லிய சாப்பிட்டு போ. இப்போ தான் இட்லி குண்டான்ல இருந்து சுடச்சுட எடுத்தேன்” என அவர் இட்லி தட்டை நீட்ட, சங்கடமாக உணர்ந்தவள், “இல்ல ஆன்ட்டி. லேட்டாகிரும், அதான் ஹாஸ்டல்ல கூட சாப்பிடல. இங்க இருந்து நடந்து போகவே டென் மினிட்ஸ் ஆகிரும். மேம் வேற சீக்கிரம் வர சொல்லிருக்காங்க” என்றவள் கிளம்ப எத்தனிக்க, அவளின் கரம் பிடித்து தடுத்தாள் இதழிகா.

“நான் சொன்னா கேட்பீல சரயு, நீ சாப்ட்டு தான் போகணும்” என அவள் கரத்தை பற்றி இழுக்க, “இல்ல கியூட்…” என மறுக்கும்முன், “இட்ஸ் மை ஆர்டர், இல்லனா உன்னை அரெஸ்ட் பண்ணிருவேன் சரயு” என அவள் இடுப்பில் கைவைத்து மிரட்ட, அதற்குமேல் அவளிடம் மல்லுக்கட்ட முடியாது என்பதால் அவளது கன்னத்தை பிடித்து ஆட்டியவள், “சரிங்க மேடம்” என்றவள் சற்று சங்கடத்தோடே கற்பகம்மாளிடம், “ஒரு இட்லி மட்டும் போதும் ஆன்ட்டி” என்றாள்.

அவளை முறைத்தவர், “வயசுப்புள்ள ஒத்த இட்லி சாப்பிட்டா அந்த வயிறு என்னத்துக்கு ஆகும். வயித்துக்கு சாப்பிடணும் கண்ணு” என்றவர் வேகமாக சமையலறைக்குள் சென்று சட்னி, சாம்பாருடன் வர, சங்கடத்தோடே கீழே அமர்ந்தாள்.

ஹாலில் நடப்பனவற்றை அமைதியாக கைக்கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தைக் கண்டவளுக்கு இன்னும் சங்கடமானது. ‘ச்ச, சாப்ட்டேனு பொய்யாச்சும் சொல்லிருக்கலாம். பெரிய உண்மைவிளம்பி இவ’ என நெளிந்தவளைக் கண்டு, “ஒழுங்கா சாப்பிடு சரயு” என்ற இதழிகாவின் அதட்டல் இட்லி விள்ளலை எடுத்து வாயில் போட வைத்தது.

இதழிகாவும் கற்பகம்மாளும் அதட்டி உருட்டி அவளை சாப்பிட வைத்தனர். வேகமாக கை கழுவியவள், “நேரமாச்சு ஆன்ட்டி, கிளம்புறேன்” என வேகமாக கிளம்ப எத்தனித்தவளை, “ஒரு நிமிஷம் மா” என்றவர், “கண்ணா, சரயுவ காலேஜ்ல கொண்டு போய் விட்டுட்டு வந்துருப்பா. ஏற்கெனவே லேட்டாச்சுனு சாப்ட்டாம கிளம்பி இருக்கா. இப்ப இன்னும் லேட்டானதுனால வேகமா ஓடுவா. ஒரு எட்டு அவள கொண்டு போய் விட்டுட்டு வந்துரு கண்ணா” என்றவரைக் கண்டு ஜெர்க்கானது இரு உள்ளங்கள்.

“இல்ல மா…” என பாதி வார்த்தைகள் வெளிவரும் முன், “அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி, அவருக்கு எதுக்கு சிரமம். பக்கம் தான… நானே போய்க்கிறேன்” என வேகமாக மறுதலித்தாள் சரயு.

“இதுல என்ன மா இருக்கு. போ கண்ணா, வண்டில கொண்டு போய் விட்டுட்டு வா” என சரயுவில் ஆரம்பித்து சித்தார்த்திடம் முடிக்க, இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

தன் தாயிடம் அதற்குமேல் மறுக்க முடியாது என்பதால் தன் அறைக்குச் சென்று வண்டி சாவியை எடுத்து வந்தவன், சரயுவை பார்க்க, அவர்கள் இருவருக்கும் பொதுவாய் ஒரு டாடாவை உதிர்த்தவள் சித்தார்த்தின் பின்னே சென்றாள்.

வண்டியை உயிர்பித்தவன் அவளைப் பார்க்க, மெதுவாக ஏறி அமர்ந்தவளின் மனம் படபடத்தது. இதுவரை அப்பா, அண்ணனை தவிர வேறு எந்த ஆணோடும் வண்டியில் பயணித்திராததவளுக்கு முதல் பயணம், அதுவும் சித்தார்த்தோடு என்பது ஒருபக்கம் மனம் சந்தோசப்பட்டாலும் மறுபக்கம் உண்டான பதட்டத்தையும் குறைக்க முடியவில்லை.

அவனுடன் பயணித்த அந்த ஐந்து நிமிடங்களும் ஒரு யுகமாய் கடக்க, ஒருவழியாய் கல்லூரி வாயிலை அடைந்தனர். வண்டியில் இருந்து இறங்கிக் கொண்டவள், அவன்முகம் பார்த்து “தேங்க்ஸ்” என்க, அவனோ “இனி இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பம் அமையவிடாம பார்த்துக்கோ சரயு” என்றவன் வேகமாக வண்டியைத் திருப்ப, இதுவரை இருந்த சந்தோச மனநிலை சட்டென வாடியது.

அவன் கண்பார்வையில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தாள் சரயு.

 

வானம் – 16

 

“நான் என்னமோ ரொம்ப ஆசையா வண்டில ஏறுன மாதிரி என்கிட்ட முறுக்கிட்டு போறாரு” என முகம் கோணிக் கொண்டாலும் அவளது மனமோ ‘அப்போ உனக்கு சந்தோசமா இல்ல’ என கேள்வி எழுப்ப, “அது… இல்லனு சொல்ல முடியாது தான். என்ன எதிர்பாராம நடந்ததால கொஞ்சம் அதிர்ச்சி. ஆனாலும் இது ரொம்ப ஓவர் தான…” என தனக்குத்தானே சமாதான வார்த்தைகளை கூறியவள், “வரவர நம்மளோட போக்கு நமக்கே புரிய மாட்டேங்குது. மனசு வேற அவரக் கண்டா எஜமான கண்ட நாய்குட்டி மாதிரி பின்னாடியே ஓடுது. இந்த கேடுகெட்ட மனச என்ன பண்றது” என வாய்விட்டுப் புலம்பினாள் சரயு. 

 

“ஹே, என்னாச்சு டி? தனியா நின்னு ஏதோ புலம்பிட்டு இருக்க” என அவளின் வகுப்புத் தோழி அவளது தோளைத் தட்டவும் தான், தான் கல்லூரி வாயிலில் நிற்பது புரிபட, “ஆன், ஒன்னுமில்ல. சும்மாதான்” என்றவள், “கிளாஸ்க்கு போகலாம், வா” என்றவாறே நடக்கத் துவங்கினாள். 

 

அவளது தோழி உமாவோ ஏதேஏதோ பேசிக்கொண்டே வர, தலையாட்டிக்கொண்டே வந்தாலும் மனம் முழுவதும் சித்தார்த்தே வலம் வந்துக் கொண்டிருந்தான். 

 

தனது செயலின் விபரீதம் மூளைக்குப் புரிந்தாலும் மனமோ சண்டித்தனம் செய்தது அவனிடம் நெருங்கச் சொல்லி. அப்பொழுது தான் அவன் காலையில் கேட்ட கேள்வி ஞாபகத்திற்கு வர, ‘நான் நேத்து நைட் டல்லா இருந்தது அவருக்கு எப்படி தெரியும்?’ என யோசிக்க ஆரம்பித்தவள் அதன் விடையை அறிந்தவள், “எஸ்” என கையை மடக்கிக் கொண்டு குதித்துவிட்டாள். 

 

அவளின் திடீர் செயலில் அதிர்ந்தது உமா தான். “என்னடி ஆச்சு உனக்கு, திடீர்னு ஏன் குதிக்கிற?” என அவள் விநோதமாய் பார்க்க, அசடு வழிந்தவாறே தலையை சொறிந்தாள் சரயு. 

 

“என்ன டி லவ்வா?” என அவள் படக்கென்று வினவ தற்போது அதிர்வது சரயுவின் முறையாயிற்று. 

 

அவளைக் கண்டு புன்னகைத்த உமா, “நம்ம வயசுல ஒருத்தி தனியா சிரிச்சு, பேசுனா அது லவ்வு தான! வேற என்ன இருந்திறப் போகுது” என அவளே பதிலும் அளிக்க, உடனே ஒத்துக்கொள்ள மனம் மறுக்க, “ச்ச, ச்ச. அப்படிலாம் இல்ல உமா. காலைல இருந்து ஒரு கேள்வி ஓடிட்டே இருந்துச்சு மனசுல. திடீர்னு அதுக்கான பதில் கிடைக்கவும் ஒரு ஆர்வத்துல அப்படி பண்ணிட்டேன்” என்றாள் சமாளிப்பாய். 

 

“நம்பிட்டேன்” என உமா அழுத்தமாய் உச்சரிக்க, “சீரியஸ்லி உமா. லவ்வா இருந்தா உன்கிட்ட சொல்லாம இருப்பனா!” என்றவள் பேச்சை வேறுதிசைக்குத் திருப்ப முயன்றாள் சரயு. 

 

“பார்க்கலாம் எத்தனநாள் தான் இப்படி சமாளிக்கிறனு” என்றவளை, “வா வா… பார்த்துக்கலாம்” என தன் தோழியின்மேல் கைப்போட்டு வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றாள் சரயு. 

 

அன்று முழுவதும் அவளது எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தான் சித்தார்த். ‘உங்களுக்கு பயமா இருக்கு சித்? அதான் வண்டில கொண்டு வந்து விட்டுட்டு அவ்ளோ காட்டமா பேசிட்டு போனீங்களா! நேத்து நைட் நான் மாடில இருக்கிறத பார்த்துருக்கீங்க. நான் டல்லா இருந்ததக்கூட நோட் பண்ணதும் இல்லாம அவ்ளோ அக்கறையா காலைல விசாரிக்கிறீங்க. அப்புறம் ஏன் இவ்ளோ வீராப்பு உங்களுக்கு. இதுநாள்வரை இது செட் ஆகுமா அப்படினு சின்னதா ஒரு டவுட் இருந்துச்சு. இனி அதுவும் இல்ல. உங்கள என் வழிக்கு கொண்டு வராம விடமாட்டேன். உங்ககூட போனஸா கியூட்டியும் கிடைக்கும்போது அவ்ளோ சீக்கிரம் என்கிட்ட இருந்து நீங்க தப்பிச்சுருவீங்க! இல்ல நான்தான் உங்கள தப்பிக்க விட்ருவனா’ என மனதினுள்ளே அவனோடு உரையாடிக் கொண்டிருந்தவளின் இதழ்கள் புன்னகையை தத்தெடுத்தது. 

 

“ஏய், சரயு…”, ” சரயு…” என அவளை இடித்தாள் சம்யுக்தா. நாலைந்து அழைப்புகளுக்குப் பின்னே தான் “என்ன சம்யு” என்றாள் சரயு. 

 

“என்ன டி தன்னந்தனியா சிரிக்கிற? டோப்பாலஜி மேம் கிளாஸ் எடுத்துட்டு இருக்காங்க. நீ தனியா சிரிச்சுட்டு இருக்க?” என விநோதமாய் பார்த்தாள் சம்யுக்தா. 

 

“ங்… ஒன்னுமில்லயே” என அவள் சமாளிக்க, “காலைல இருந்தே சரியில்ல நீ. என்னவோ நடந்துருக்கு” என்றவள், “கண்டுபிடிக்கிறேன்” என்கவும், “அதெல்லாம் அப்புறம் கண்டுபிடிக்கலாம். வா, பெல் அடிச்சுருச்சு. கேண்டீன் போகலாம்” என அவளை அதற்குமேல் பேசவிடாமல் கேண்டீனை நோக்கி அழைத்துச் சென்றாள் சரயு. 

 

கடையில் தன் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மனம் ஏனோ சலனப்பட்டு கிடந்தது. ‘எவ்ளோ தான் சரயுகிட்ட இருந்து விலக நினைச்சாலும் திரும்பத் திரும்ப அங்கேயே போகுதே. கேட்கக்கூடாதுனு நினைச்சுட்டு இருந்தும் அவளப் பார்த்தோனே நம்ம வாய் சும்மா இல்லாம கேட்டுருச்சு. எப்படியோ தப்பிச்சோம். நான் டல்லா இருந்தது எப்படி தெரியும்னு கேட்காம விட்டுட்டா. இல்லனா அது அவ மனசுல தேவ இல்லாத ஆசைகள வளர்த்துவிட்ரும். ஏற்கெனவே சமீப காலமா அவ பார்வையே மாறி இருக்கு. இதழிமா வேற எப்ப பார்த்தாலும் சரயு, சரயுனு அவ புராணமே பாடுறா. இதுக்கு என்னதான் பண்றது’ என தலையை தாங்கியவனுக்கு தலை விண்விண்னென வலித்தது. 

 

“அண்ணா காஃபி குடிக்கிறீங்களா” என பாண்டியன் வினவவும், தற்போது தனக்கு காஃபி மிகவும் தேவை என நினைத்தவன், “ம்” என்றான் சித்தார்த். 

 

“ஏண்ணா தல எதுவும் வலிக்குதா? அடிக்கடி டல்லாகிறீங்க, அன்னிக்கு சரயு கூட சொன்னாங்க. சாருக்கு அடிக்கடி தலவலி வரும்போலனு. எதுவும் பிராப்ளமா ண்ணா?” என்றவனை “நீங்க போய் வேலைய பாருங்க பாண்டியா” என்றவனின் வார்த்தைகள் சற்று கோபமாய் வந்தன. 

 

சித்தார்த் எப்பொழுதும் தன்னிடம் பணிபுரிபவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது இல்லை என்பதால் அவனின் கோப வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை பாண்டியன். 

 

“சாரி ண்ணா” என அவன் மன்னிப்பு வேண்ட, தலையை இறுக அழுத்திப் பிடித்தவன், “சாரி பாண்டியா. நான் வேற ஒரு டென்ஷன்ல இருந்தனா அதான். சாரி” என இவனும் மன்னிப்பு வேண்டினான். 

 

“பரவால்ல ண்ணா. அதுக்கு எதுக்கு சாரிலாம்” என்றவனிடம் பொருட்களின் ஸ்டாக் விவரங்களை கேட்டுக்கொண்டவன், “திரும்பவும் நல்லா செக் பண்ணிக்கோ பாண்டியா. எதுவும் ஸ்டாக் இல்லனா உடனே வாங்கறதுக்கு ஏற்பாடு பண்ணிரு. கஸ்டமர்ஸ்கிட்ட அவங்க கேட்கிற எதுவும் இல்லனு சொல்ற மாதிரியான சூழ்நிலை வந்தறக்கூடாது” என்றவன், கணக்குவழக்கு நோட்டை எடுத்து அதில் கடினப்பட்டு மனதை திசைதிருப்பினான். 

 

ரம்யாவின் தந்தை அலைப்பேசியில் தொடர்புகொண்ட அரைமணி நேரத்தில் அவர்களது வீட்டை அடைந்திருந்தார் தங்கம்மாள். 

 

ரம்யாவின் பெற்றோர் சங்கடமாய் அவரை வரவேற்க, “என்னாச்சுண்ணா. திடீர்னு இந்த கல்யாண பேச்சு வேண்டாம்னு சொல்றீங்க? எங்கப்பக்கம் எதுவும் குறை வச்சுட்டோமா?” என்றார் பதட்டத்துடன். 

 

“அப்படிலாம் இல்ல மா, பாப்பா தான் இனி இதப்பத்தி பேச வேண்டாம்னு முடிவா சொல்லிருச்சு. நாங்களும் நேத்துல இருந்து பேசிப் பார்த்துட்டோம். எனக்கு விருப்பம் இல்லப்பானு சொல்லும்போது மேற்கொண்டு கட்டாயப்படுத்த மனசு வரல மா. அதான் இன்னிக்கு உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.இந்த சம்மந்தம் தட்டிப்போகுதேனு எங்களுக்கும் வருத்தம் தான். ஆனா பசங்களோட விருப்பம் முக்கியம்ல. அதான் என்ன பண்றதுனு தெரியல” என்றார் ரம்யாவின் தந்தை சற்று சங்கடத்தோடே. 

 

“அது சின்னப்புள்ள ண்ணா. ஏதாச்சும் நினைச்சுட்டு அப்படி சொல்லிருக்கும். அதுக்காக உடனே இனி இதப்பத்தி பேச வேண்டாம்னு சொல்லாதீங்கண்ணா. என் மருமககிட்ட நான் வேணும்னா பேசிப் பார்க்கவா ண்ணா?” என்றார் தங்கம்மாள். 

 

மறுப்புக் கூற தயக்கம் காட்ட, “சின்னஞ்சிறுசுக இப்படி பேசறதுலாம் பெருசா எடுத்துக்கிட்டா எப்படி ண்ணா. நம்ம தான அவங்களுக்கு புரிய வைக்கணும். நான் பேசிப் பார்க்கிறனே” என்கவும், தன் மனையாளை பார்த்தார் அவர். 

 

ரம்யாவின் அன்னை சரியென தலையாட்டவும், “பாப்பா ரூம்குள்ள தான் இருக்கா மா. போங்க” என அவர் அறையை காட்ட தங்கம்மாள் ரம்யாவின் அறைக்குச் சென்றார். 

 

அவளோ முழங்காலிட்டு அமர்ந்தவாறே கைகளைக் கட்டிக் கொண்டு தலை குனிந்திருந்தாள். அழுததன் அடையாளமாய் அவளது கன்னங்களில் நீர்தடங்கள் வற்றிப் போயிருந்தன. 

 

“என்ன கண்ணு, ஏன் இப்படி ஒரு முடிவ எடுத்த மா?” என்றவாறே அவள் அருகில் அமர்ந்தார் தங்கம்மாள். 

 

அவரை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதன் அடையாளமாய் அவளது விழிகள் விரிந்தன. “அண்ணா ஃபோன் பண்ணாரு மா. கல்யாண பேச்ச ஆரம்பிச்சப்போ உன் முகத்துல அவ்ளோ சந்தோசத்த பார்த்தேன். இப்போ என்னடான்னா நீ தான் இந்த கண்ணாலத்த வேண்டாம்னு சொன்னதா அண்ணா சொல்றாரு. பிரஷாந்த் உன்கிட்ட எதுவும் பேசுனானா?” என அவர் நேரடியாக விசயத்திற்கு வந்தார். 

 

அவளோ சிறு அதிர்வோடு அவரைப் பார்க்க, “நினைச்சேன், அவன்தான் ஏதாவது சொல்லி இப்படி உன்னை சொல்ல வச்சுருப்பான்னு” என்றவர், “உன்கிட்ட என்ன சொன்னான் என் மவன்?” என்கவும் அவளும் கோவிலில் நடந்ததைக் கூறி முடித்தாள். 

 

‘இவ்வளவு தூரம் வந்துட்டானா’ என நினைத்தவர், “அவன் தான் ஏதோ கிறுக்குத்தனமா சொன்னான்னா அதுக்காக நீ இப்படி ஒரு முடிவு எடுக்கலாமா கண்ணு” என்கவும் அவள் அவரை புரியாமல் பார்த்தாள். 

 

“சின்னஞ்சிறுசுல இருந்து ஒன்னா வளர்ந்த புள்ளைங்க, மாமன் மவ வேற. அதுனால அப்படி சொல்லிருப்பான் கண்ணு. நாங்க பெரியவங்க ஒரு முடிவு எடுத்தா அது அவன் நல்லதுக்குத் தான! அத புரிஞ்சுக்காம உன்கிட்ட வந்து அப்படி பேசி இருக்கிறான். ஒன்னாமுன்ன பழகுன புள்ளைங்க, விட்டுக்கொடுக்க மனசு வரல என் மவனுக்கு. வேற ஒன்னுமில்ல கண்ணு. உன் கழுத்துல தாலிய கட்டுடானு நாங்க சொன்னா அத மீறிருவனா என்ன! 

 

இதெல்லாம் பெருசா எடுத்துக்காத கண்ணு. உன் கழுத்துல தாலிய கட்டிட்டா அப்புறம் உன் முந்தானைய பிடிச்சுட்டே சுத்தப் போறான். இங்க பாரு, கண்ணத் தொடச்சுக்க. எங்க வீட்டு மருமவ நீ தான். அதுனால கண்டதையும் யோசிக்காம தினமும் கோவிலுக்குப் போய் வெளக்கேத்து. உனக்கு இன்னும் சந்தேகமா இருந்தா சொல்லு இந்த வாரத்துலயே நிச்சயதாம்பூலம் மாத்தி உறுதி பண்ணிக்கலாம். என் மவனே இந்த கண்ணாலத்துக்கு சரினு சொல்லுவான் பாரு” என்க, அவள் இன்னும் தெளியாமல் தான் இருந்தாள். 

 

“என்னை நம்பு கண்ணு. நான் இருக்கேன்ல பார்த்துக்கிறேன்” என அவள் கைகளில் அழுத்தம் கொடுத்தவாறே நம்பிக்கையூட்ட, அரைகுறையாய் அவள் தலை சம்மதம் என ஆடியது. 

 

“அவ்ளோ தான். இதுக்குப் போய் எதுக்கு மா இவ்வளவு வருத்தப்படற, வா புதுப் பொண்ணு இப்படி இருக்கலாமா” என்றவர் அவளை கையோடு அறையை விட்டு வெளியே அழைத்து வந்தார். 

 

ரம்யாவின் பெற்றோர் உள்ளே நடப்பது தெரியாததால் குழப்பத்தோடு அமர்ந்திருக்க மகள் சற்று தெளிவோடு தங்கம்மாளுடன் வருவதைக் கண்டவுடன் மனம் நிம்மதியானது. 

 

“நம்ம பேசுனபடியே கண்ணாலத்த வச்சுக்கலாம் ண்ணா, உங்க மவ தான் எங்க வூட்டு மருமவ” என அவர் ரம்யாவின் தலையை ஆதரவாய் கோதிவிட, அவர்கள் புரியாமல் பார்த்தனர். 

 

“புள்ள கொஞ்சம் பயந்துருச்சு ண்ணா எங்க பிரஷாந்த்க்கு இதுல விருப்பம் இல்லயோனு. அதான் உங்ககிட்ட அப்படி சொல்லிருக்கு. நான் எடுத்து சொல்லவும் புரிஞ்சுக்கிட்டா” என்றவரின் முகத்தில் சந்தோஷம் மின்னி மறைந்தது. அத்தோடு தன் மகனோடு, ‘நீ என்ன தகிடதத்தம் பண்ணாலும் இந்த கண்ணாலத்த நிறுத்த முடியாது டா மவனே’ என மனதினுள் சூளுரைத்துக் கொண்டார். 

 

ரம்யாவின் பெற்றோருக்கு சற்று குழப்பமான மனநிலை இருந்தாலும் மகளின் முகத்தில் சற்று தெளிவு ஏற்பட்டிருப்பதைக் கண்டவர்கள் மறுப்பேதும் கூறவில்லை. 

 

“நான் போய்ட்டு வரேன் ண்ணா, போய்ட்டு வரேன் அண்ணி” என்றவர், “கவலப்படாத கண்ணு” என ரம்யாவிடம் கூறியவாறே தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டவரின் மனதில் தன் மகனை எவ்வாறு இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது எனத் திட்டமிட ஆரம்பித்தார் தங்கம்மாள். 

 

கடினப்பட்டு தனது மனதை திசைத்திருப்பி வேலையில் மூழ்கி இருந்தவனை இடையூறு செய்தது அலைப்பேசி அழைப்பு. திரையில் தெரிந்த பெயரைக் கண்டவன் அழைப்பை ஏற்று, “சொல்லுங்க லாயர் சார்” என்றான் சித்தார்த். 

 

“நம்மளோட கேஸ் நாளைக்கு கோர்ட்க்கு வருது சித்தார்த், அதான் உங்களுக்கு ஞாபகப்படுத்த கூப்ட்டேன்” என்றார் எதிர்முனையில். 

 

“ம், ஞாபகம் இருக்கு சார். நாளைக்கு மார்னிங் உங்க ஆபிஸ்க்கு வந்தறேன்” என்றவனிடம், “நீங்க நேரா கோர்ட்க்கு வந்துருங்க சித்தார்த். நம்ம அங்கயே மீட் பண்ணிக்கலாம்” என்றார் அவனின் வழக்கறிஞர். 

 

“ஓ. கே சார். நாளைக்கு மீட் பண்ணுவோம்” என்றவன் அலைப்பேசியை வைத்தான். காலையில் இருந்த அதே மனநிலை மீண்டும் குடியேறியது அவனது மனதில். 

 

வானம் – 17

மணி பத்துதான் ஆகிருந்தாலும் உச்சி வெயிலைப் போல் ஆதவன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். புழுக்கம் தாளாமல் வகுப்பறையில் இருந்த ஐந்து மின்விசிறிகளின் இணைப்பையும் தட்டிவிட்டாள் சரயு.

வகுப்பறையே காலியாக கிடக்க ஓரிரண்டு பேர் உள்ளே வருபதும் போவதுமாக இருந்தனர். கையில் பைலோடு வந்த சம்யுக்தா, “நீ என்ன பண்ணப் போற டி, பேசாம எங்ககூட வந்து இண்டர்வியூவாச்சும் அட்டெண்ட் பண்ணலாம்ல?” என்றாள். அன்று கல்லூரி வளாகத்தினுள் ஒரு தனியார் நிறுவனத்தினர் நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

“நான் தான் பிளேஸ்மெண்ட்க்கு நேம் கொடுக்கலயே சம்யு. இன்னும் கொஞ்ச நேரத்துல டவுனுக்கு கிளம்ப போறேன். அதுவரைக்கும் தான! எழுதற வேல கொஞ்சம் இருக்கு. முடிச்சுட்டு கிளம்பணும்” என்க, “டவுனுக்கா! நீ மட்டும் தனியா கிளம்புறியா என்ன? நாம தான் ஒன்னா போகலாம்னு பிளான் போட்ருக்கமே. அப்புறம் என்ன டி திடீர்னு இப்ப போறதா சொல்ற?” என்றாள் குழப்பத்துடன்.

“நீ இந்த வீக் ஊருக்குப் போறதா சொன்னல்ல, அதான் இன்னிக்கு போய்ட்டு வரலாம்னு நினைச்சேன் சம்யு. எனக்கு கொஞ்சம் டிரெஸ் எடுக்கணும். நம்ம திவியோட வண்டி சாவிய வாங்கி வச்சுருக்கிறேன். நீங்க இண்டர்வியூ முடிக்கிறதுக்குள்ள வந்துருவேன்” என்றவளிடம், மேலும் பேச நேரமில்லாததால்,

“சரி டி. பார்த்து போய்ட்டு வா. டிராபிக் அதிகமா இருக்கும், வண்டிய கவனமா ஓட்டிட்டு போ” என்றவள், தன்னை நீண்ட நேரமாய் அழைத்துக் கொண்டிருந்த தோழியை நோக்கி கைக்காட்டியவாறே கிளம்பினாள் சம்யுக்தா.

தன் வேலைகளை முடித்த சரயுவும் தன் தோழியின் வண்டியை எடுத்துக்கொண்டு காந்திபுரத்தை நோக்கிப் பயணித்தாள்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினுள் அமைந்திருந்த குடும்பநல நீதிமன்றத்தின் முன் நின்றிருந்தான் சித்தார்த்.

கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்தவாறே தனது வழக்கறிஞருக்காக காத்திருந்தான். அவனை பத்து நிமிடங்கள் காத்திருக்க வைத்துவிட்டே அங்கு வந்து சேர்த்தார் ரமணன். அவரைக் கண்டு மெல்லிய புன்னகையை உதிர்த்தவன், “குட் மார்னிங் சார்” என்றான்.

“குட் மார்னிங் சித்தார்த், சாரி. ரொம்ப நேரம் காக்க வச்சுட்டனோ” என அவரும் தனது கைக்கடிகாரத்தை பார்க்க, “அதெல்லாம் எதுரும் இல்ல சார். இத்தன வருஷம் காத்திருந்துட்டனே. ஒரு பத்து நிமிஷம் காத்திருக்கிறதுல தப்பில்ல” என்றவனின் புன்னகையில் வலி மிகுந்திருந்தது.

அதனைக் கண்ட ரமணனுக்கும் முகம் சற்று வாடியது. எத்தனையோ விவாகரத்து வழக்குகளை கையாண்டிருக்கிறார். ஆனால் சித்தார்த்தின் விவகாரத்து முற்றிலும் அவருக்கு புது அனுபவமாக இருந்தது.

பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவர், “அவங்க சைடுல இருந்து யாரும் வருவாங்களா சித்தார்த்?” என்றார் ரமணன். “நீங்க எதிர்பார்க்கிறீங்களா சார்?” என அவன் எதிர்கேள்வி கேட்க, அவனது முதுகில் ஆதரவாய் தட்டிக் கொடுத்தவர், “சரி, வா உள்ள போகலாம். இன்னும் பத்து நிமிஷத்துல நம்மளோட கேஸ் வந்துரும்” என்றவாறே நடக்க அவருடன் இணைந்து நடந்தான்.

“இந்த கேஸ்ல ஜட்ஜ் நமக்கு சாதகமா தீர்ப்பு வழங்குவாருன்னு எதிர்பார்க்கலாம் சித்தார்த். ரெண்டு போலிஸ் எப் ஐ ஆரையும் நான் சப்மிட் பண்ணிருக்கேன். இந்த மாதிரி கேஸ்க்குலாம் ஒன்றரை மாசத்துலயே டிவோர்ஸ் கிடைச்சுரும். சப்போஸ் தள்ளிப் போனா கூட மூணு மாசத்துக்குள்ள டிவோர்ஸ் வாங்கிறலாம்” என்றார்.

“ம்” என்றவன் அதன்பின் எதுவும் பேசாமல் வந்தான். அவர்களது முறை வந்தவுடன், தன்முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கோப்புக்களை ஆராய்ந்தவாறே சித்தார்த்தை நோக்கினார் நீதிபதி.

அதன்பின் ரமணனை பார்த்தவர், “சித்தார்த்தோட மனைவி தேவிகாவும் வந்திருக்காங்களா?” என வினவவும், ‘சித்தார்த்தோட மனைவி தேவிகா’ என்ற வார்த்தைகளில் அவனது தேகம் கூசிப்போய் சிலிர்த்தது.

எத்தனை எத்தனை கனவுகளோடு அவளோடு தன் வாழ்க்கையை பகிர்ந்துக் கொண்டான். ஆனால் இன்று அந்த உறவை முறித்துக் கொள்ள நீதிமன்றத்தை நாட வேண்டியதாயிற்றே. கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்ததோ!

“அவங்க பக்கம் இருந்து யாரும் வரல மேம்” என்றவரிடம், “இன்னிக்கு கேஸ் கோர்ட்க்கு வருதுனு தெரியுமா அவங்களுக்கு?” என்றார் நீதிபதி.

“தெரியும் மேம். அவங்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறோம்” என்றார். அதன்பின் சித்தார்த்திடம் சில கேள்விகளைக் கேட்கவும் அதற்கு பதிலளித்தவனுக்கு மனம் முழுவதும் விரக்தியே சூழ்ந்திருந்தது.

எப்போதடா இந்த இடத்தை விட்டு அகலுவோம் என கெஞ்சிக் கொண்டிருந்தது அவனது மனம். சில நிமிடங்களில் வெளியே வந்தவனுக்கு மூச்சடைப்பது போல் இருந்தது. “சித்தார்த், ஆர் யூ ஆல்ரைட்?” என அவனது முதுகை ஆதரவாய் தடவிக் கொடுத்தவாறே வினவினார் ரமணன்.

சில விநாடிகளில் தன்னை சமன்படுத்திக் கொண்டவன், “எஸ் சார், ஐ ஆம் ஃபைன்” என்றவன் சற்றே நடுங்கிய தன் கரங்களை பேன்ட் பாக்கெட்டில் புதைத்துக் கொண்டான்.

அவனின் நிலை உணர்ந்து, “ஒரு டீ குடிப்போமா?” என்றார் ரமணன். “ம்” என தலையாட்ட நீதிமன்ற வளாகத்தினுள் இருந்த டீக்கடையை நோக்கி அவர் செல்ல முயல, “சார், ப்ளீஸ் கொஞ்சம் வெளிய போவோமா?” என வினவவும் மறுப்பேதும் கூறாமல் அவனோடு நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியே வந்தார் ரமணன்.

இருவரும் பக்கத்தில் இருந்த பேக்கரி ஒன்றில் டீ குடித்தவாறே தங்கள் முன் சாலையில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களின் மேல் பார்வையை பதித்திருந்தனர்.

தன் தோழி ஒருவள், “கோர்ட்க்கு பக்கத்துல ஒரு துணிக்கடைல கலெக்ஷன் நல்லா இருக்கு சரயு, ஒரு தடவ போய் பாரேன்” என்றிருக்க, நேராக அந்த துணிக்கடையை நோக்கித் தான் சென்றுக் கொண்டிருந்தாள் சரயு.

சாலையில் நேராக கண்களை பதித்திருந்தவளுக்கு மனதின் உந்துதலின் பேரில் சாலையின் இடபக்கம் திரும்பிப் பார்க்க அவளது பார்வை வட்டத்திற்குள் விழுந்தான் சித்தார்த்.

கையில் டீயோடு சாலையை வெறித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வழக்கறிஞர் உடையணிந்து ஒருவர் நிற்கவும், குழப்பத்தோடு அவனைப் பார்த்தவாறே வண்டியை செலுத்தியவள் தன்னை முந்திச் செல்ல முயன்ற வாகனத்தை கவனிக்காமல் விட்டுவிட்டாள்.

‘சித்தார்த் இங்க என்ன பண்றாரு’ என்ற குழப்பத்தோடு பார்த்தவள் அடுத்த சில விநாடிகளில் வண்டியோடு சாலையில் சரிந்திருந்தாள். இமைப்பொழுதில் நடந்த சறுக்கலை அவளால் சமாளிக்க முடியாமல், “அம்மா…” என்ற கூவலோடு விழவும் அருகில் இருந்தவர்கள் வேகமாக அவளருகே ஓடி வந்தனர்.

சிலர் அவளைக் கடந்து வேகமாக சென்ற வண்டியை திட்டிக்கொண்டிருக்க, அவள் மீது விழுந்திருந்த வண்டியை எடுத்து அவளையும் எழுந்து நிற்க உதவி செய்தனர் சிலர்.

திடீரென சாலையில் கும்பலாய் நிற்பதைக் கண்ட சித்தார்த், “என்னாச்சு அங்க? ஏன், இவ்ளோ பேர் நிக்கிறாங்க” என பக்கத்தில் இருந்தவரிடம் விசாரிக்க, “ஒரு பைக்காரன் ஸ்கூட்டில வந்த பொண்ண இடிச்சுட்டு வேகமா போய்ட்டான் தம்பி” என்கவும், வேகமாக தாங்கள் அருந்திய டீ’க்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கு சென்றான். அவனோடு ரமணனும் வேகமாய் வர, கூட்டத்தை விலக்கியவாறே உள்ளே சென்றவன் கால்களை மடக்கி அமர்ந்தவாறே தனது கைமுட்டியில் ஏற்பட்டிருந்த சிராய்ப்பில் ஒட்டியிருந்த மண்துகள்களை கண்களில் நீரோடு ஊதிக் கொண்டிருந்த சரயுவைக் கண்டவன் அதிர்ச்சியில் விழி விரித்தான்.

“ரொம்ப அடியா மா. கொஞ்சம் கவனமா வந்துருக்கலாம்ல”

“புள்ளய தள்ளி விட்டுவிட்டு என்னமா வேகமா பறந்து போறான் பாரு, கொள்ளில போறவன்”

“ரோட்டுல போற மத்ததவங்கள கவனிக்காம தான் அப்பன் போட்ட ரோட்டுன்னு மிதப்புல வண்டிய ஓட்டிட்டுப் போறானுங்க”

இப்படி பலபல வசனங்களை உதிர்த்தனர் கூட்டத்தில் இருந்தவர்கள். “சரயு” என்ற அழைப்பில் வலியோடு நிமிர்ந்தாள் அவள்.

அவனைக் கண்டு தானே தான் சுற்றத்தை மறந்து இப்படி விழுந்திருந்தாள். அவளது நிலைக் கண்டவன், வேகமாய் அருகில் வந்து, “கவனமா வண்டிய ஓட்றதில்ல” என கடிந்தவாறே அவள் எழுந்து நிற்க உதவ, எழ முயற்சித்தவளுக்கு காலில் வலி ஏற்பட சற்று தடுமாறவும் அவளது தோள் பற்றி தன்மேல் சற்று சாய்த்தவாறே எழுந்து கொள்ள உதவினான்.

வண்டி அவள்மேல் விழுந்திருந்ததால் அதனால் ஏற்பட்ட பாரம் காலில் வலியை உண்டாக்கி இருந்தது. தன்னருகே தெரிந்த அவனின் முகத்தைப் பார்த்தவளுக்கோ வலி குறைந்தது போல் இருந்தது.

“உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா தம்பி?” என கூட்டத்தில் இருந்த ஒருவரின் கேள்விக்கு, “ஆமாம்” என பதிலளித்தவன், “மெதுவா சரயு” என அவளை சாலையிலிருந்து ஓரமாய் அழைத்து வந்தான்.

கூட்டத்தில் இருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அவர்களது வேலைகளைப் பார்க்கச் செல்ல, தற்போது சரயுவோடு சித்தார்த்ம், ரமணனும் மட்டுமே உடன் இருந்தனர்.

“தெரிஞ்ச பொண்ணா சித்தார்த்” என்ற ரமணனின் கேள்விக்கு “ஆமா சார்” என பதிலளித்தவன் சரயுவை பார்க்க, “வண்டி… பிரண்…டோ…டது” என வலியில் முனகியவாறே வண்டியை நோக்கி கை நீட்டினாள்.

கூட்டத்தில் இருந்தவர்கள் வண்டியை சாலையோரம் நிறுத்தி இருந்தனர். அப்பொழுது தான் அவளது நெற்றியை கவனித்திருந்தான் அவன்.

வண்டியின் ஹேண்ட் பார் நெற்றியை பதம் பார்த்திருந்தது. இரத்தத் துளிகள் படர்ந்திருக்க, “வண்டிய அப்புறம் பார்க்கலாம், இங்க பாரு நெத்தில இரத்தம் வருது” என்றவாறே தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து இரத்தம் வந்த இடத்தில் அழுத்திப் பிடிக்க, “அவங்கள முதல்ல ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் பர்ஸ்ட் எய்ட் பண்ணுங்க சித்தார்த். கைல வேற சிராய்ப்பு இருக்கு” என்றார் ரமணன்.

அவள் அப்பொழுதும், “வ…ண்டி” என முணுமுணுக்க, “மொதல்ல உன் காயத்த பாரு, வண்டிய அப்புறம் பார்க்கலாம்” என்றான் சற்று கோபத்தோடு.

“இல்ல… அது பிரண்ட் வண்டி” என தயங்கியவாறே பதிலளிக்க, “நீங்க மொதல்ல ஹாஸ்பிட்டல் போங்க சித்தார்த், எனக்கு தெரிஞ்ச மெக்கானிக் ஒருத்தன வர சொல்லி வண்டிய சரி பண்ணி வைக்க சொல்றேன்” என ரமணன் கூறவும் அவரை நன்றியோடு நோக்கினாள் சரயு.

ஆட்டோ ஒன்றை அழைத்து இருவரையும் அதில் அனுப்பியவர் தனக்கு தெரிந்த மெக்கானிக் ஒருவரை அழைத்து வண்டியை சரிபார்க்க சொல்லிவிட்டே அந்த இடத்தை விட்டு அகன்றார் ரமணன்.

ஆட்டோவில் மருத்துவமனையை அடைந்தவர்கள் மருத்துவரைக் காண சென்றனர். சிராய்ப்புகளுக்கும் காயத்திற்கும் மருந்து அளிக்கப்பட்டதோடு ஊசியும் போடப்பட்டதால் சிறிது நேரம் அங்கேயே அவளை இருக்கச் சொல்ல, அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள் சரயு.

அதுவரை அவளுக்கு உதவியாய் அவளின் தோள் பற்றி உடன் இருந்தவன் தற்போது சற்று தள்ளி நின்றுக் கொண்டான். “ரோட்ட பார்த்து வண்டி ஓட்டாம பராக்கு பார்த்துட்டு வண்டி ஓட்டுனா இப்படி தான் விழுந்து வாறிக்கணும்” என சூடாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

“அது… உங்கள கோர்ட் முன்னாடி வக்கீலோட பார்க்கவும் என்னை ஓவர்டேக் பண்ணவன கவனிக்காம விட்டுட்டேன்” என உண்மையை உரைத்தாள் சரயு.

“என்ன!” என அதிர்ந்தான் சித்தார்த். அவள் தலைகுனிந்துக் கொள்ளவும், அவனோ செய்வதறியாது தனது தலைமுடியை அழுந்தக் கோதிக் கொண்டான்.

அவளது வார்த்தைகளை ஜீரணிக்க சில நிமிடங்கள் பிடித்தது அவனுக்கு. அவளே மீண்டும் தொடர்ந்தாள். “கோர்ட்ல எதுவும் முக்கியமான வேலையா?” என அவன் ஏன் வழக்கறிஞரோடு நின்றான் என அறிந்துகொள்ளும் ஆவலோடு வினவ, எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டவன்,

“டிவோர்ஸ் கேஸ் இன்னிக்கு கோர்ட்க்கு வந்துச்சு. அதான்” என்றவாறே அவளுக்கு அருகே இருந்த இருக்கையை விட்டுட்டு அதற்கடுத்த இருக்கையில் அமர்ந்தான் சித்தார்த்.

சரயுவை கண்டபின் மறந்திருந்த விசயங்கள் மீண்டும் மனதில் குடியேற இறுக்கமாய் அமர்ந்திருந்தான் சித்தார்த்.

‘ஓ…’ என மனதினுள் நினைத்தவள், அவனின் இறுக்கத்தைக் கண்டு, ‘ஒருவேள அவரு வொய்ப் அங்க வந்திருப்பாங்களோ’ என நினைத்தவாறே அவனை பார்வையால் வருடினாள்.

அவளது பார்வையை உணர்ந்தவனுக்கு அதற்குமேல் அங்கு அமர முடியாமல், “உனக்கு குடிக்க ஜூஸ் வாங்கிட்டு வரேன்” என்றவாறே வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.

தன்னைவிட்டு வேகமாய் ஓடுபவனைக் கண்டவளின் மனம் வாடினாலும் அவனின் மனநிலை உணர்ந்து அமைதியானாள். அவளது கையில் இருந்த அவனது கைக்குட்டையை அழுத்திப் பிடித்துக் கொண்டவளுக்கு அவனது தோள் சாய்ந்து ஒட்டியவாறே இருந்த தருணங்கள் நினைவிற்கு வர, அவனது வாசம் அவள்மேல் வீசுவதாகத் தோன்ற கைகளை நெஞ்சோடு இறுகக் கட்டிக் கொண்டவளின் இதழ்கள் குறுநகையை தவழவிட்டது.

 

வானம் – 18

கையில் பழச்சாறோடு வந்தவனின் கண்களில் பட்டது நெஞ்சோடு கரங்களை இறுகக் கட்டிக்கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளைத் தான். தான் அவளிடமிருந்து விலக நினைத்தாலும் மீண்டும் மீண்டும் அவளிடமே கொண்டு சேர்க்கும் விதியை நினைத்து நொந்துப் போனான்.

அவள் அருகில் வந்தவனைக் கூட கவனிக்கும் நிலையில் இல்லை அவள். இதழ்களில் புன்னகை ஒட்டியிருந்தது. “க்கும்” என அவன் தொண்டையை சிறும, அதில் தான் படக்கென திரும்பினாள்.

“ஜூஸ்” என அவன் பழச்சாறை நீட்ட, அமைதியாய் வாங்கிக் கொண்டவள், “தேங்க்ஸ்” என்றாள் சரயு.

அவள் அதைக் குடித்து முடிக்கும்வரை அமைதி காத்தவன், “கிளம்பலாமா, இப்போ பெட்டரா இருக்கா?” என கேள்வியெழுப்ப, அவள் தலை சம்மதமாய் ஆடியது.

மீண்டும் ஆட்டோ ஒன்றை பிடித்து, “நீ பத்திரமா ஹாஸ்டல் போ சரயு. நான் கோர்ட்க்கு போய்ட்டு உன் வண்டி சரியானதும் எடுத்துட்டு வரேன். அதுவரைக்கும் நீ காலேஜ் போக வேண்டாம். உன் பிரண்ட் காலேஜ் முடிஞ்சு வர்றதுக்குள்ள வண்டிய கொண்டு வந்து விடறது என் பொறுப்பு” என்கவும் அவனும் தன்னோடு வருவான் என எதிர்பார்த்திருந்தவளின் முகம் அவனின் வார்த்தைகளைக் கேட்டு வாடியது.

முகவாட்டமே அவளது எண்ணவோட்டத்தை பறைசாற்ற, மேற்கொண்டு எதுவும் பேசாமல் நேராக ஆட்டோ ஓட்டுநரிடம் விலாசத்தைக் கூறி அவரது கையில் பணத்தையும் கொடுத்தான் சித்தார்த்.

வண்டி அவனது கண்பார்வையில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்றவன் அதன்பின் நீதிமன்றத்தை நோக்கிப் புறப்பட்டான்.

விடுதிக்குள் நுழையும்போதே, “என்னமா ஆச்சு சரயு? நெத்தில பேன்டேஜ் போட்ருக்க. எப்படி அடிபட்டுச்சு?” என்ற கேள்வியோடு எதிர்கொண்டார் விடுதி வார்டன்.

“வண்டில போகும்போது கீழ விழுந்துட்டேன் மேம். சின்ன காயம் தான். ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு வந்தேன்” என பதிலளிக்க, “கவனமா போறது இல்லயா மா?” என்றவர் மேலும் ஓரிரு கேள்விகளைக் கேட்டு பதிலையும் பெற்றுக் கொண்டவர், “சரி, நீ போய் ரூம்ல ரெஸ்ட் எடு மா” என அறைக்கு அனுப்பி வைத்தார்.

அறைக்கு வந்தவள் படுக்கையில் விழ உடலெங்கும் வலி ஏற்பட்டது. திடீரென கீழே விழுந்ததுமில்லாமல் வண்டியும் அவள் மீதல்லவா விழுந்திருந்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை தொந்தரவு செய்தது அவளின் அலைப்பேசி. உறக்கத்தினூடே, அழைப்பது யாரென கூட பார்க்காமல் அழைப்பை ஏற்று, “ஹலோ” என்றாள் சரயு.

“வண்டி ரெடி ஆகிருச்சு சரயு. நம்ம கடைல தான் இருக்கேன் இப்போ. உன் பிரண்ட் சம்யுக்தாவ வந்து எடுத்துக்க சொல்றியா?” என்றவன், “நானே கொண்டு வந்து விடறது தேவை இல்லாத பிரச்சினைகள ஏற்படுத்தும்” என தானே விளக்கமும் கொடுக்க, அவனது குரலைக் கேட்டு அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள்.

முதன்முறையாக அவளை அலைப்பேசியில் அழைத்திருக்கிறானே. ‘அதுக்குள்ள ரெடியாகிருச்சா!’ என்ற யோசனையில் மணியை பார்க்க அதுவோ நான்கு என காட்டியது.

மதிய உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் தன்னை மறந்து உறங்கி இருந்தாள். ஊசி மற்றும் மருந்தின் வேலை என நினைத்துக் கொண்டவள், “உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன். சாரி” என மன்னிப்பு வேண்ட, “இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு, வலி இன்னும் இருக்கா?” என்றான் சித்தார்த்.

“இப்போ பரவாயில்ல. கொஞ்சம் வலி மட்டும் இருக்கு” என்றவள், “இன்னும் கொஞ்ச நேரத்துல நானே வந்து வண்டிய எடுத்துக்கிறேன்” என்றாள் சரயு.

எதிர்புறம் கோபத்தில் பல் அரைபடுவது அவளது காதில் விழ, “அது… சம்யுக்கு ஃபோன் பண்ணா பதறிருவா. அதுவும் இல்லாம பிரண்ட்கிட்ட சாரி கேட்டுட்டு வண்டிய ஒப்படைக்கணும். அதான்” என தயங்கியவாறே தன்பக்க கருத்தைக் கூற, அவன் “ம், உன் விருப்பம்” என்றதோடு முடித்து விட்டான்.

அவளது நேரம் இன்னும் நேர்காணல் முடியாததால் அனைவரும் கல்லூரியிலேயே இருக்க, உடனே சூப்பர் மார்கெட்டிற்கு புறப்பட்டாள் சரயு.

நடந்துசெல்லும் தொலைவு தான் என்றாலும் உடல் ஒத்துழைக்காததால் ஆட்டோ ஒன்றை பிடித்து அதில் கடைக்கு வந்து சேர்ந்தாள். கடையின் முன் வண்டி நிற்பதைக் கண்டவள் வேகமாய் அதனருகே சென்று வண்டியை ஆராய்ந்தாள்.

அவளது வண்டியாய் இருந்தால் கூட இவ்வளவு பயம் இருந்திருக்காது. தோழியின் வண்டியாயிற்றே. அவள் பெருந்தன்மையாய் தன்னை எதுவும் கூறாமல் இருந்தாலும் அவளது பெற்றோருக்கு அவள் பதில் சொல்லி ஆக வேண்டுமே அதனாலே அவளது கவனம் முழுக்க வண்டியில் இருந்தது.

அவள் அருகே வந்த பாண்டியன், “இப்போ எப்படி மா இருக்கு, பார்த்து கவனமா வண்டி ஓட்றது இல்லயா?” என நலம் விசாரிக்க அவள் சங்கடமாக அவனைப் பார்த்தாள்.

“அண்ணா சொன்னாரு கீழ விழுந்தீட்டீங்கனு. இனி கவனமா ஓட்டுங்க” என்றவன், “சாவிய கொடுக்க சொன்னாரு” என அவன் வண்டி சாவியை நீட்ட, தன்னைப் பார்க்க கூட விரும்பாமல் பாண்டியனிடம் சாவியை கொடுத்தனுப்பி இருக்கிறான் என நினைத்தவள், “சார் இல்லயா ண்ணா?” என்றாள் கடையை பார்த்தவாறே.

“இல்ல மா, ஏதோ அவசர வேலையா வெளிய போறேனு சொல்லிட்டு நீ வந்தா இந்த சாவிய கொடுக்க சொன்னாரு” என்றவன், “ஒரு நிமிஷம் மா” என்றவாறே வேகமாய் கடைக்குள் சென்றான் பாண்டியன்.

அவன் தன்னை தவிர்க்கத் தான் வெளிவேலை என்ற காரணத்தைக் கூறி சென்றுள்ளான் என்பது அவளது புத்திக்கு புரிபட்டாலும் மனமோ அவனை எதிர்பார்த்து ஏங்கியது.

சில விநாடிகளில் திரும்பியவனின் கைகளில் இருந்த கவரில் உணவுப் பொட்டலம் ஒன்று இருக்க கேள்வியாய் நோக்கினாள் சரயு.

“இதுல சாப்பாடு இருக்கு மா. இத சாப்ட்டு இந்த மாத்திரைய போட்டுக்க சொன்னாரு அண்ணா” என மருந்து கவரையும் கூட எடுத்துக் கொண்டான் பாண்டியன். “தேங்க்ஸ் ண்ணா” என்றவள், வண்டியை எடுக்க முற்பட முகம் வலியால் சுருங்கியது.

தன்னை சமன்படுத்திக் கொண்டு ஒருவாறு வண்டியில் கிளம்பினாள் சரயு. கல்லூரிக்குப் போகும் வழியெங்கும் அவளின் நினைவுகளை சித்தார்த் தான் ஆக்கிரமித்திருந்தான்.

‘நான் சாப்பிடலனு உங்களுக்கு எப்படி தெரியும்? ஃபோன் பண்ணும்போது கூட சாப்பிட்டியானு ஒரு வார்த்தை கூட கேட்கலயே… மனசுக்குள்ள இவ்ளோ அக்கறைய வச்சுக்கிட்டு அத என்கிட்ட காட்ட கூடாதுனு ஓடி ஒளிஞ்சுக்கிறீங்களா! பார்க்கலாம் இப்படி எத்தனநாள் என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிருவீங்கன்னு’ என அவனோடு பேசிக்கொண்டே கல்லூரியை வந்தடைந்தாள்.

தன் தோழிக்காக சிறிதுநேரம் காத்திருந்தவள், அவளிடம் பலமுறை மன்னிப்பு வேண்டி வண்டியை ஒப்படைத்தாள். சம்யுக்தா தான் அவளைத் திட்டித் தீர்த்து விட்டாள்.

“இதுக்கு தான் நான் கவனமா போடினு சொன்னேன். பராக்கு பார்த்துட்டே வண்டி ஓட்டுனா விழுந்து வாறிக்க வேண்டியது தான்” என வாய் திட்டினாலும் அவளது கை சரயுவின் காயங்களை ஆராய்ந்தது.

“ஹாஸ்பிட்டல் போனியா? தனியா எப்படி டி சமாளிச்ச” என வினவியவளிடம் உண்மையை உரைக்க தயங்கியவள், “சின்ன காயம் தான டி. அதெல்லாம் சமாளிச்சுட்டேன். சரி, வா ஹாஸ்டல் கிளம்புவோம்” என்றாள் சரயு.

“சரி, வா… ஆமா இதென்ன பார்சல் டி?” என அவள் கைகளில் இருந்த உணவு பொட்டலத்தைக் காட்டி வினவ, “அது மதியம் சாப்டல டி. அசதில தூங்கிட்டேன். மாத்திரை வேற போடணும். அதான் வரும்போது சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்” என பொய்மேல் பொய்யாய் அடுக்கியவளுக்கு குற்றவுணர்வாய் இருந்தது.

உண்மையை அவளிடம் கூறுவதில் அவளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றாலும் ஏற்கெனவே தனது காதலுக்கே எதிர்ப்பு தெரிவிப்பவள் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வாள் என்ற சிறு தயக்கத்தின் காரணமாக உண்மையை கூறாமல் மறைத்தாள் சரயு. அதன்பின் இருவரும் விடுதியை நோக்கிப் புறப்பட்டனர்.

தன் மகனின் திருமணம் எந்தவித தடையுமில்லாமல் நடந்தேற வேண்டுமென்றால் அது ஒருவளாள் மட்டுமே முடியும் என நினைத்தவர் அவளிடம் தக்க நேரம் பார்த்து பேசக் காத்திருந்தார் தங்கம்மாள்.

அதற்கு சந்தர்ப்பமும் கூடி வந்தது. வாணியின் உறவுக்காரர் ஒருவரின் வீட்டுத் திருமணம் சென்னையில் நடக்க இருந்ததால் நல்லசுந்தரமும் வாணியும் சென்னைக்குப் புறப்பட்டு சென்றிருந்தனர்.

ரேவதி மட்டுமே வீட்டில் தனியாக இருக்க, அவர்கள் செல்லும்முன் தங்கம்மாளிடம் அவளைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றதால் அவளுக்கான இரவு உணவை எடுத்துக் கொண்டுச் சென்றார்.

நடுக்கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்தவள் தங்கம்மாளின் வருகையை கண்டு, “அங்க இருந்து ஒத்த வார்த்த கூப்பிட்ருந்தா அங்கயே வந்துருப்பேன்ல அத்த. உங்களுக்கு எதுக்கு சிரமம்” என்றவாறே அவரது கையில் இருந்த உணவுத் தட்டை வாங்கி வைத்தாள் ரேவதி.

“அதுனால என்ன கண்ணு. அங்கயும் நான் ஒத்த ஆளா சும்மாதான் உக்காந்திருந்தேன். அதான் உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன். கையோட சாப்பாட்டையும் எடுத்துட்டு வந்தா நீயும் சாப்பிட்டுக்குவல்ல” என்றார் தங்கம்மாள்.

“மாமா எங்க அத்த, வெளிய போய்ருக்காரா?” என வினவியவளுக்கு, “ஏதோ சோலியா வெளிய போறேனு போனாரு கண்ணு. இந்த பிரஷாந்த் பயல வேற இன்னும் காணோம். எந்த சோலியா இருந்தாலும் ராத்திரிக்கு நேரத்துக்கு வீட்டுக்கு வாடானு சொன்னா கேட்கறானா!” என்றவர், “ஏங் கண்ணு, அவன் எதும் உனக்கு ஃபோன் பண்ணானா? எங்கயும் சோலியா போறதா சொன்னானா?” என தனது பேச்சிற்கு ஆரம்பப் புள்ளியை எடுத்து வைத்தார்.

அவரது கேள்வியில் தயங்கியவள், “தெரியல அத்த, எதுவும் அத்தான் சொல்லல” என்றவளின் வார்த்தைகள் மெதுவாய் ஒலித்தன.

“இவன் இப்படி பண்ணா எப்படி கண்ணு. நாளைக்கு கல்யாணம் ஆனப்பின்ன பொண்டாட்டினு ஒருத்தி வந்ததுக்கு அப்புறமும் இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கிட்டா நல்லாவா இருக்கும்! ம்… இந்த காலத்து பசங்க எங்க நம்ம பேச்ச கேட்றானுங்க” என சலித்துக் கொண்டவர் கால்களை நன்றாக நீட்டி அமர்ந்தார்.

“எனக்கும் வயசாகிட்டே போகுது. காலாகாலத்துல புள்ளைகளுக்கு ஒரு கல்யாணம் காட்சிய நடத்திப்புட்டா இந்த கட்ட சீக்கிரமா போய் சேர்ந்துரும். ஆனா இந்த பய இன்னும் முரண்டு புடிக்கிறானே. நீயாவது ஒரு வார்த்தை சொல்லலாம்ல கண்ணு?” என்றார்.

அவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டன. “அந்த புள்ள ரம்யாவுக்கு என்ன கொறச்சல் கண்ணு, உன்கூட படிச்சப் புள்ள தான! ஆனா இவன் இன்னும் சம்மதம் சொல்ல மாட்டேங்கிறான்” என்றவர்,

“சின்னஞ்சிறுல இருந்து ஒன்னாமுன்ன வளர்ந்த பசங்க நீங்க. ஆனா அதுவே வாழ்க்கைனு வரும்போது நாலையும் யோசிச்சு முடிவு எடுக்கணும்ல. அவனுக்கு நீ தான் சொல்லி புரிய வைக்கணும் கண்ணு.

இந்த கல்யாணம் மட்டும் நடக்கலனா அப்புறம் நான் இருந்தா என்ன போனா என்ன!” என கண்களைக் கசக்கினார்.

அதில் பதறியவள், “என்ன அத்த பேச்சு இது? மொத கண்ண தொடைங்க” என்றவள், அதற்குமேல் பேச முடியாமல் மௌனமானாள் ரேவதி.

“இல்ல கண்ணு, அவன் ஒத்த வாரிசு எங்களுக்கு. உனக்கு சொல்லி புரிய வைக்கணுமா என்ன! உன்னையும் சரயுவையும் நான் வேறவேறயாவா நினைச்சுருக்கேன்? ஆனா நல்லது, கெட்டது பார்த்து தான அம்மா முடிவு எடுப்பானு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேங்கிறான். இதுக்கும்மேலயும் நான் இருந்தென்ன பிரயோஜனம். பேசாம போய் சேர்ந்துட்டா அவன் நிம்மதியா இருப்பான்ல” என்றவரின் வார்த்தைகள் ரேவதியின் மனதை அசைக்க ஆரம்பித்தது.

“அத்த, என்ன அத்த நீங்க? அத்தானுக்கு உங்கமேல எம்புட்டு பாசம்னு நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன! நீங்க மொத கண்ண தொடைங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். இனி இப்படி பேசாதீங்க அத்த” என அவருக்கு ஆறுதல் கூற,

“பாரு, உன்னை சாப்ட விடாம எதஎதையோ பேசிட்டு இருக்கேன். நீ மொத சாப்பிடு கண்ணு” என்றவரிடம் அவள் என்ன பதிலுரைப்பாள்.

அவரது வார்த்தைகளிலே அவளது உள்ளமும் வயிறும் நிறைந்துவிட்டதென. “கொஞ்சநேரம் கழிச்சு சாப்பிட்டுக்கிறேன் அத்த, இப்போ பசியில்ல” என்றாள் சமாளிப்பாய்.

“ரொம்ப லேட்டாக்கிறாத கண்ணு. சாப்ட்டு சீக்கிரம் படுத்துக்கோ. பயமா இருந்தா அங்க வந்து என்கூட கூட படுத்துக்கோ” என்றவரிடம், “இல்ல அத்த, அம்மாவும் அப்பாவும் மிட்நைட்ல வந்துருவாங்க. அதுனால நான் இங்கயே படுத்துக்கிறேன்” என்றாள் அவள்.

“கதவ நல்லா சாத்திக்கோ கண்ணு” என்றவர் தன் வேலை முடிந்ததாய் அங்கிருந்து கிளம்ப, ரேவதியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

அவர் மறைமுகமாய் கூறிவிட்டு சென்ற விதம் அவளை நிலைகுலைய செய்தது. அதுவும் இந்த திருமணம் நடக்கவில்லை என்றால் தன்னுடைய வாழ்வை முடித்துக் கொள்வேன் என்ற மறைமுக மிரட்டலை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர் கொண்டு வந்து வைத்த உணவு அனாதையாய் கிடக்க, அவளது கண்களோ எங்கோ வெறித்தவண்ணமிருந்தது.

_தொடரும்.

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்