நன்கு குளிரூட்டப்பட்ட அறை. அறை என்று விளிப்பது பொருத்தமில்லை. விசாலமாக இருந்தது. பெரும்கூடம் முழுக்க புகை மண்டலம். ஒரு பிணவறையின் சாயல் அதில். ஆனால் பணச்செழுமை அறையின் மூலையில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு சதுர அடியிலும் தெரிந்தது. மயான அமைதி நிலவியது அங்கே. இயந்திரங்களின் இயக்கம் தோற்றுவித்த நுண்ணிய ஒலி மட்டும் மெலிதாக கசிந்தது அறையெங்கும். பெரிய பெரிய இயந்திரங்கள். அதன் தொடர்பான மிண்ணனு சாதனங்கள்.
அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு ஒருவன் வந்தான். உடலில் ஒரு பாகமும் தெரியாத அளவு வெள்ளை அங்கி அணிந்திருந்தான். முகமும் மூடப்பட்டிருந்தது. விழிகள் மட்டுமே தெரிந்தது. அதுவும் நாம் பார்ப்பதற்காக அல்ல. அவன் பார்ப்பதற்காக.
உள்ளே வந்தவன் எதையோ திறந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்குச் சென்றான். அங்கு வெள்ளைப் படுக்கையில் ஒருவனைப் படுக்க வைத்திருந்தனர். முகம் வெளிறிப் போயிருந்தது.
“மிஸ்டர் மைக், டெட் பாடி ஈஸ் ரெடி. யூ கேன் டூ யுவர் வொர்க்” என்று கூற, எதிரில் இருந்த மைக் கொஞ்சம் கோபம் கொண்டான்.
“எத்தனை முறை சொல்றது அலைஸ். இது டெட் பாடி இல்ல. நம்மளோட க்ளையிண்ட்” என்று அவன் கூற மற்றவன் சிரித்தான்.
படுத்திருந்த பிரேதத்தில் மார்பு பகுதியில் ஒரு சிறு துளையிட்டான் மைக். அதில் ஒரு சிறிய குழாயைச் சொருகினான். பின் ஒரு கொள்கலனில் அந்த உடலில் உள்ள ரத்தத்தை சேகரித்தான். உடலில் உள்ள கடைசி சொட்டு ரத்தம் வரை உறுஞ்சி எடுத்துவிட்டது அந்த குழாய். பின் உடலை சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் ஒரு சிறிய குழாய் மூலம் ஒரு திரவத்தை உள்ளே செலுத்தினான். பின் மூளையில் சில கருவிகளைப் பொருத்தினான்.
“ஸ்விட்ச் ஆன் தி ஆக்சிஜன் சப்ளை” என்று கூற, அருகில் இருந்தவன் உயிர்வளி காற்று வரும் குழாயைத் திருகினான். உடல் முழுக்க அவன் செலுத்திய திரவம் ஓடி, ரத்தமில்லாமல் தொய்ந்திருந்த உடல் மீண்டும் சுருக்கங்கள் தளர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
“ஓகே… க்ளையிண்ட் ஈஸ் ரெடி நௌ. க்ரையோப்ரிசெர்வேஷன் பண்ணிடலாம்..” என்று கூற, அவன் அந்த உடலை வேகமாக இழுத்தான்.
“டேமிட்.. ஹேண்டில் வித் கேர்..”
“மைக்.. இது டெட் பாடி.. இதுக்கு ஏன் இவ்வளோ முக்கியத்துவம் குடுக்குறீங்க..” என்றான் அலைஸ்.
“திரும்பவும் சொல்றேன். இந்த ப்ரொசீஜர் செய்ய நாம் வாங்குன பணம் எவ்ளோ தெரியுமா? 2 மில்லியன் டாலர். நம்மளோட செர்விஸ்க்காக கொடுக்கப்பட்டது. அவர் உயிரோட இருக்கும்போதே அவ்ளோ பணம் நமக்கு நம்பிக்கையோட குடுத்திருக்காருன்னா, அவர் நம்ம மேல வச்ச நம்பிக்கையோடு அளவு எவ்ளோ இருக்கணும்” என்றான் கண்டிப்புடன்.
“ஓகே.. ஓகே..கூல்..” என்றான் அவன்.
Cryopreservation என்பது உடலை பதப்படுத்தும் முறை. குளிரீட்டப்படுதல் என்பது பொருள். இந்த முறையில் திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜனில் பதப்படுத்துவார்கள். அதன் குளிர்நிலை -196C. இந்த வெப்பநிலை மனிதன் கண்டுபிடித்ததிலே குளிர்ச்சியான நிலை. -196C குளிர்நிலையில் உடல் உறையாது. அதுதான் இந்த முறையின் தனித்துவம். உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இறக்கும்பொழுது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் இருக்கும். எப்பொழுதும். மனிதன் இறந்த பின்பும் மூளை சற்று நேரம் உயிருடன் இருக்கும். அதாவது மூளையின் நியூரான்கள் இறக்க சற்று நேரம் பிடிக்கும். அது இறப்பதற்குள் மூளைக்கு ஆக்ஸிஜன் செலுத்தினால், மூளையின் செல்கள் அழியாமல் பாதுகாக்கலாம். இதையெல்லாம் எதற்காக செய்கிறார்கள் என்று கதையின் போக்கில் அறிந்து கொள்ளலாம்.
மைக் கூறியது போல் அலைஸ் அந்த உடலை எடுத்துக்கொண்டு மற்றொரு அறைக்குச் சென்றான். அங்கு நான்கடி உயரமும் ஏழடி நீளமும் இருக்கும் ஒரு பெட்டிக்குள் அந்த உடலை வைத்து மூடினான். பெட்டியைத் திறக்கும்பொழுது உள்ளுக்குள் இருந்து ஒரே பனிப்புகை. அந்த பெட்டியில் வைத்து மூடியவன், மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குழாயை பெட்டியின் ஒருபுறம் இருக்கும் பாகத்துடன் பொருத்தினான். அந்த பாகத்திற்கு ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த பெட்டி.
“அலைஸ்… ரிப்போர்ட் அனுப்பிரு” என்று கூறிவிட்டு மைக் அந்த இடத்தை விட்டு அகன்றான்.
*******
நற்பவி நினைத்தது போல் அங்கிருந்த வாட்ச் மேன் அனைவரையும் விசாரிக்க, ஒருவன் மட்டும் சில நாட்களாக வரவில்லை என்று கூறினர். அடுத்து என்ன செய்வது என்று சிந்தனையில் இருக்கும்பொழுதே அழைப்பு வந்தது அவளின் எண்ணிற்கு. அவளுடன் வேலைப் பார்ப்பவர் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க கண்ணன்.. என்ன விஷயம்..”
“மேடம்.. காணாம போன பொண்ணோட வாட்ஸ் அப் மெஸ்ஸேஜ் எல்லாம் ரிட்ரைவ் பண்ணியாச்சு. கடைசியா அந்த பொண்ணு அவ காதலனோட இருந்திருக்கா.”
“அந்த பொண்ணு வீட்டில் அவ யாரையும் காதலிக்கலன்னு சொன்னாங்க..”
“அது பொய்யா இருக்கலாம். இல்ல அவுங்களுக்கு தெரியாம இருக்கலாம்” என்று கூற, அவள் சலித்துக் கொண்டாள். ஒரு வழக்கில் எத்தனை ஓட்டைதான் இருக்கலாம்.
“சரி.. அந்த பையனை விசாரிக்கலாமே.”
“அவன் தலைமறைவு மேம்.”
“எதிர்பார்த்தேன்” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.
*******
வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் கீதன். நிரண்யாவின் அன்னை பதறியடித்து ஓடி வந்தார்.
“என்ன ஆச்சு அத்தை?”
“நிரண்யாவைக் காணும் மாப்பிள்ளை..” என்று அவர் கூற, அவன் திடுக்கிட்டான்.
“என்ன சொல்றீங்க. இங்கதானே இருந்தா..”
“ஆமா மாப்பிள்ளை.. நான் குளிக்கப் பேயிருந்தேன். இங்கதான் இருந்தா. இப்போ காணும். எங்க போனானு தெரியல” என்று அழுதார்.
“ஒருவேளை எதிர் வீட்டுக்கு போயிருப்பாளோ” என்று அவசரமாக எழுந்து வெளியில் வந்தான். ஆனால் எதிர்வீட்டில் பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது.
அவன் உடனே நற்பவிக்கு அழைத்துக் கூற, அவள் துரிதமாக செயலாற்றினாள்.
அவளது புகைப்படத்தை சென்னையில் இருந்த காவல் நிலையங்கள் அனைத்திற்கும் அனுப்பி வைத்தாள். பேருந்து நிலையம், ரயில் நிலையம் என்று அனைத்திலும் தேடும்படி உத்தரவு பிறப்பித்தாள். அவர்களுக்கு சிரமம் வைக்காமல் அவளும் கிடைத்தாள். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தாள். அதுவும் கோவை போகும் பேருந்தில் ஏறியிருக்கிறாள். தகவல் அறிந்ததும் நற்பவி கீதனுக்கு அழைத்துக் கூறினாள். கீதன் வந்து அவளை அழைத்துச் சென்றான்.
வீட்டில் வந்து ருத்ர தாண்டவம் ஆடிவிட்டாள். தன்னைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவனுக்கு இல்லை என்று பிதற்றல் வேறு. கைக்குக் கிடைத்த பொருளையெல்லாம் போட்டு உடைத்தாள்.
“நிரு… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்..”
“யார் நிரு.. யார் நீ.. என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த. என்னை ஏன் தடுத்து நிறுத்தின. நான் இன்பனைப் பார்த்து நாக்கு பிடுங்குற மாதிரி கேள்வி கேக்கணும். ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகம் செஞ்சான்னு” என்று கத்தினாள்.
அவளுக்கு மருந்தைப் புகட்டுவதே பெரும் பாடாய் போனது.
“இன்பனை பார்க்கணுமா.. எங்கிட்ட சொல்லு நான் ஏற்பாடு செய்றேன். நீ தனியா போக வேண்டாம்.”
“முதல்ல யார் நீ இதெல்லாம் செய்ய?”
“நான்.. நான்… உன்னோட நண்பன்.. இன்பன்கிட்டேருந்து உன்னை நான் காப்பததுறேன். கொஞ்ச நாளாதான் என்னை உனக்குத் தெரியும். இப்போல்லாம் நிறைய மறந்து போற நீ” என்று வாயில் வந்ததையெல்லாம் உளறி வைத்தான்.
“சரி… ஏன் கோயம்புத்தூர் பஸ்ல ஏறி உக்காந்த?”
“அப்போதானே இன்பனைப் பார்க்க முடியும். அவன் கோயம்புத்தூர்தான். அங்கதான் இருப்பான். அவுங்க அம்மா அப்பாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது” என்று அலட்சியமாக கூறினாள்.
“சரி.. நீ உன் மனசில் உள்ள எல்லாத்தையும் சொல்லு. உன் மனசு பாரம் இறங்கட்டும்” என்று கூற, அவள் அவனை நம்பாமல் பார்த்தாள்.
“நீ என்னை நம்பலாம் நி… மொழி” என்றான் அவளுக்கு புரியும்படி.
“நீங்க ஏன் என்னை வேற பேர் சொல்லிக் கூப்பிடுறீங்க.”
“அது நிரண்யா எனக்கு ரொம்ப பிடிச்ச பேர்.. நீதான் சொன்ன.. எனக்கு எப்படி புடிக்குமோ அப்படி கூப்பிட சொல்லி.”
“நானா?”
“ஆமா.. நீதான்..”
“எனக்கு ஞாபகம் இல்லை.”
“இப்போலாம் உனக்கு நிறைய மறக்குது.”
“ஆமா.. ஆமா.. அது உண்மைதான். என்னோட முகம் கூட எனக்கு மறைந்திடுச்சு. கண்ணாடி முன்னாடி நின்னா இந்த முகம் தெரியிது. ஆனா மனசுக்குள்ள வேற ஒரு உருவம் இருக்கு. எனக்கு ரொம்பவே குழப்பமா இருக்கு” என்று அவள் கூற அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.
“ஆமா..நீ எதுக்கு இன்பனைப் பார்க்கணும்னு நினைக்கிற..”
“என்னோட குழந்தை அவன்கிட்ட இருக்கு. அது எனக்கு வேணும்” என்று அவள் கூற, அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.
திகையாதே மனமே!