Loading

புழுதிப்புயல் வரும் செய்தி கணி பயணம் செய்த விண்கலத்தில் இருந்தவர்களுக்குத் தெரியாது. அதை அவர்களிடம் இருந்து மறைத்துவிட்டனர்.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் இருந்த புழுதித் திரள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அருகில் வந்தது. அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் கூண்டின் அருகில் வந்துவிட்டது. ஆங்காங்கே கட்டிடம் உடையும் சத்தம். அப்படி ஒரு அதிர்வு. ஹரிக்கேன் போன்ற புயல் வகையில் சுழலும் காற்றைவிட, அதில் சிக்கியிருக்கும் பொருட்களே பெரும் சேதத்தை விளைவிக்குமாம். அந்த அளவு சுழல் அங்கிருக்கும் பொருளையல்லாம் வாரிச் சுருட்டிக் கொள்ளுமாம். ஆனால் இங்கு மணலே சற்று கடினமான ஒன்று. அது கிடைக்கும் கற்கள் மற்றும் பொருளையல்லாம் சுழலுக்குள் ஏற்று சுற்றினால் என்ன செய்வது. அந்த கட்டிடத்தில் விரிசல் விழும் பொழுதே, அவர்கள் அமர்ந்திருந்த பகுதி மட்டும் மண்ணிற்குள் சென்றது. அப்படி பிரத்யேகமான அமைப்பு அது. ஏதேனும் ஆபத்து வந்தால் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு வந்துவிட்டால் போதும். கட்டிடத்தில் ஏற்படும் பழுதைக் கணக்கிட்டு, அது உள்ளே இறங்குவது போல் வடிவமைக்கப்பட்டிருந்து.

இப்பொழுது கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் விழ, அந்த பாகம் தானாகவே உள்ளே சென்றது. அனைவரும் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தனர்.  அந்த பாகத்தில் சற்று நேரம் இருக்கலாம். அதில் உயிர் வாயு இருக்கும் வரை உயிர் வாழலாம். அரை மணி நேரம் தாக்குப் பிடிக்கலாம்.

ஆனால் இந்த புயல் கடந்து செல்லவே அரை மணி நேரம் ஆனது. உள்ளுக்குள் சென்றபின் புயலின் கோரம் செவிகளுக்கு எட்டவில்லை தான்.. அந்தளவு வலுவாக அமைக்கப்பட்டிருந்தது அந்த பாகம். இறுதி நொடியில் அதன் உட்புறச் சுவரிலும் விரிசல் விழ அனைவரும் பயந்துவிட்டனர். உள்ளே இடமும் குறைவு வேறு. எங்கும் ஓட முடியாது. பூகம்பம் வந்தது‌போல் ஒரு உலுக்கு உலுக்கியது. அனைவரும் ஓரத்தில் ஒடுங்கியிருந்தனர்.

மேற்புற சுவர் கீழே வந்து விழுந்ததில் இதயம் நின்று போனது அனைவருக்கும். இப்பொழுது தான் ஒரு போராட்டம் முடிந்தது. இது என்ன அடுத்தப் போராட்டம். இதிலிருந்து தப்பிப் பிழைக்க முடியுமா என்று அனைவரும் தவிக்க, புயலுக்கு செவியில் விழுந்ததோ என்னவோ, மேலும் சேதம் ஏற்படுத்தாமல் சென்றுவிட்டது. புயல் கடந்து சென்றபின் அசாத்திய அமைதி. இரவு வேளை நெருங்கும் நேரம் குளிர் அதிகமாக எடுக்க ஆரம்பித்தது. புயல் கடந்து சென்றுவிட்டது என்று அனைவரும் பெருமூச்சு விட, தணிகையின் மேல் மேற்கூரை விழுந்தது. பின் பொலபொலவென்று சில பாகம் உதிர ஆரம்பித்தது. அனைவருக்கும் ஆங்காங்கே அடிகள் பல.

காப்பியன் மற்றும் சிலர் சுய உணர்வு பெற்றனர். வெளியில் என்ன நிலை இருக்கும் என்று நினைத்தாலே மனம் புயலாய் கனத்தது. ஏனெனில் இந்த செவ்வாய் கிரகத்தில் அவர்கள் வாழ வேண்டும் என்றால் அந்த கட்டிடம் மிகவும் அவசியம். சூரியனில் இருந்து வரும் கதிர்களை தாங்க முடியாது. மேலும் உயிர் வாயு இல்லையே. எப்படி இந்த சூழலை கடந்து வரப்போகிறோம் என்று நினைத்தாலே காப்பியனுக்கு கலக்கம் மட்டுமே சூழ்ந்தது.  எனினும் அமைதியாக இருக்க முடியாதே. தன்னை நம்பி வந்த உயிர்கள் தவியாய் தவிக்கையில் அவனால் ஆன காரியம் செய்ய வேண்டுமே. அதனால் துரிதமாக செயல்பட்டான். ஆனாலும் மனதில் ஒரு வினா எழும்பி அவனை அச்சுறுத்தாமல் இல்லை. ஒருவேளை மொத்த கட்டிடத்தையும் புயல் வாரி சுருட்டி எடுத்துச் சென்றிருந்தால் என்ன செய்வது என்று தோன்ற, ஒரு நிமிடம் திக்கென்றிருந்தது. மீளமுடியாத நொடி அது. ஆனால் மீண்டாக வேண்டும். வெளியில் தங்களுக்கான உலகம் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது, தவிக்கும் நொடி மிகவும் கொடுரமானது.

அந்த அறையின் உட்புறச் சுவர் உடையாமல் இருந்திருந்தால் இந்நேரம் அனைவரும் மேலே சென்றிருக்கலாம். அதற்கு மேலே கனமான‌ ஏதோ ஒன்று விழுந்திருக்க வேண்டும் என்று அனுமானித்தவன், அனைவருக்கும் கட்டளைகளைப் பிறப்பித்தான்.

“எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரம் தைரியமா இருங்க.. இப்போ எல்லாரும் இருக்கீங்களா.. யாருக்கும் எதுவும் இல்லையே” என்று காப்பியன் வினவ, அனைவரும் திரும்பி திரும்பி பார்த்தனர்.

“சார்.. தணிகையைக் காணும்” என்று‌ ஆரெழில் கூற, திடுக்கிட்டான் காப்பியன்.

“வாட்..?” என்று திரும்பி அனைவரையும் பார்த்தான்.

“சார்.. இதுக்குள்ள மாட்டிருக்கான்” என்று வேதன் கூற, அனைவரும் திடுக்கிட்டு அங்கு பார்த்தனர்.

அதற்குள் மதுபல்லவிக்கு உயிர் வாயு பற்றாக்குறையால் மயக்கம் வந்தது. அவளும் மயங்கி சரிந்தாள்.

“கார்ட்ஸ்… கொஞ்சம் இதை திறங்க சீக்கிரம்.. எல்லாரும் வெளில போகணும்..” என்று அவர்களுக்கு கட்டளைப் பிறப்பித்தவன், தணிகையின் அருகே ஓடினான். இரட்டையர்கள் மதுவைப் பார்த்துக் கொண்டனர்.

தணிகையின் நிலையைக் கண்ட காப்பியன் திடுக்கிட்டு விட்டான். ஒரு பக்கம் அங்கிருந்த வல்லுநர்கள் அனைவரும் அடைத்த பாதையை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

காப்பியனின் பயந்த முகம் கண்ட, சித்திரன் “சார்.. இந்த சுவரை நான் தூக்கிடுவேன். ஒரு நாலு செகண்ட் என்னால் தம் கட்ட முடியும். அதுக்குள்ள அவனை அங்கிருந்து நகத்திடனும். முடியுமா..” என்று வினவ, அனைவரும் தயாராக இருந்தனர். அவர்கள் நினைத்தது போல் சித்திரன் அந்த இடிந்த சுவரை முழு வலுவுடன் தூக்கினான். உள்ளே இருந்த தணிகையை அனைவரும் தூக்கினர். மயங்கியிருந்தான் தணிகை. அவன் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருந்தது.

இன்னொரு பக்கம் வெளியில் செல்ல வழியை உருவாக்கினர். ஒருவர் செல்லும் அளவு இடிந்து விழுந்த பாகங்களை அப்புறப்படுத்தியிருந்தனர்.

ஒவ்வொருவராக வெளியில் சென்றனர். வெளியில் சென்று பார்த்த காப்பியனுக்கு மனதில் கொஞ்சம் நிம்மதி பரவியது. அவன் நினைத்ததுபோல் அந்த கட்டிடத்தில் அனைத்து பாகமும் உடைந்து சேதமாகவில்லை. ஆனாலும் பாதி அழிந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதிர்ஷ்டவசமாக மருத்துவ கூடம் பத்திரமாக இருந்தது.

மிகத் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் சேதமற்ற அந்த பாகத்திற்கு அழைத்துச் சென்றான். மயான அமைதி. தணிகைக்கும் மதுபல்லவிக்கும் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. மதுபல்லவி சற்று நேரத்தில் கண் விழித்தாள். ஆனாலும் அதீத அயர்வு அவளது முகத்தில் இருந்தது.
தணிகை கண் விழிக்கவே இல்லை.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

திருநல்லன் அங்கு சேகரித்து வைத்திருந்த சில மூலிகைகளைக் கொண்டு அவனின் மயக்கம் தெளிவிக்க முயற்சி செய்ய அதுவும் தோல்வியைத் தழுவியது.

அங்கிருந்த மருத்துவ வல்லுனர், திருநல்லன் மற்றும் இரட்டையர்கள் ஏதேதோ முயற்சிகள் மேற்கொண்டனர்.
அது எதுவும் பலனளிக்காமல், அவன் அசைவில்லாமல் கிடந்தான்.

“டேய்.. தணிகை.. எந்திருச்சு வாடா.. என்னை நீ சின்சான்னு கூப்பிட்டாலும் நான் உன்னைத் திட்ட மாட்டேன். வாடா” என்று அவனை உலுக்கினான். அவனிடம் அசைவே இல்லாமல் போக அனைவரும் அழத் தொடங்கினர்.

“காப்பியன் சார்.. யாருக்கும் எதுவும் ஆகாதுன்னு சொல்லிதானே கூட்டிட்டு வந்தீங்க. இப்போ என்ன சார் இப்படிலாம் நடக்குது” வேதன்.

காப்பியனால் பதிலேதும் கூற முடியவில்லை. சற்று நேர மயான அமைதி.

“அங்கங்கே எலும்பு முறிவு இருக்கு. ஆனால் அதிர்ச்சியில் அவன் இப்படி இருக்கான். என்ன செய்றதுன்னு தெரியலை. நம்ம தொடர்ந்து சிகிச்சை கொடுக்கலாம். பலன் இனி கடவுள்தான் தரணும்” என்று மருத்துவர் கூற, அனைவரும் அவனுக்காக பிரார்த்தனைகள் மட்டுமே செய்ய முடிந்தது.

உண்மையில் தணிகைக்காக அழுவதா இல்லை தங்கள் நிலையை நினைத்து அழுவதா என்று அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. அனைவரின் மனதிலும் ஒரு விதமான உணர்வு. இதுவரை அனுபவித்திராத உணர்வு.

அதன்பின் கட்டிடத்தை புணரமைக்கும் பணி நடைபெற்றது. அவர்கள் வளர்த்தச் செடிகள் அனைத்தும் கந்தலாக அங்கேக் கிடந்தது. இப்பொழுது அதைப் பார்க்கையில் மனதை யாரோ உலுக்குவதுபோல் இருந்தது. எத்தனை நாள் உழைப்பு அது. ஒரு தளிர் இலை மேலே எட்டிப் பார்க்க, எத்தனை நாட்கள் காத்திருந்தனர். திருநல்லனின் கோபத்தின் பொருள் இப்பொழுது நன்றாகவே விளங்கியது அனைவருக்கும். அனைவருமே கட்டிடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடைந்த பாகங்களை நகர்த்தி, உள்ளே ஏதேனும் தேவையான பொருட்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்து அதை சேகரித்தனர். இதை விண்கல உடை அணிந்தே செய்தனர்.

இரவு வந்தது. அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். இப்படி ஓர் இரவை இதுவரை அவர்கள் செவ்வாயில் அனுபவித்ததில்லை. அப்படி ஒரு வலி. உடலும் மனதும் நைந்து போயிருந்தது. புயலின் கோரதாண்டவம் அவர்கள் மனதில் கிலியைத் தோற்றுவித்தது.

இந்த செய்தி மிகத் தாமதமாகவே பூமியை எட்டியது. இதை மறைத்துவிடலாம் என்று நிறுவணம் நினைக்க, சென்னி அதை விரும்பவில்லை. ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தட்டும் என்று கூறினான்.

கணி, அதி மற்றும் கீர்த்தி சென்ற விண்கலம் இன்னும் சற்று நேரத்தில் செவ்வாயில் தரையிறங்க தயாராய் இருந்தது.

கணயின் மனம் இப்பொழுது மனைவியைக் காணப் போகும்‌ ஆவலில் ஆர்பரித்தது. ஏனோ அப்படி ஒரு தவிப்பு. இதுவரை இல்லாத தவிப்பு. இதுதான் கடைசி விண்கலம் இந்த வருடத்தில். இனி செவ்வாயில் இருந்து இப்பொழுது திரும்ப முடியாது. ஏனெனில் பூமியும் செவ்வாயும் நேர்கோட்டில் இருந்து விலகிச் செல்கிறது. மீண்டும் நேர்கோட்டில் சந்திக்க இன்னும் ஒரு வருடம் பிடிக்கலாம். காப்பியன் வந்த விண்கலம்தான் மிகவும் குறைந்த தூரத்தில் செலுத்தப் பட்டது. அப்பொழுது பூமியும் செவ்வாயும் மிக அருகில் இருந்தமையால். கணி வந்த விண்கலம் சற்று அதிக தினங்கள் எடுத்துக் கொண்டது செவ்வாய் வந்தடைய.

செவ்வாயில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. உண்டு முடித்து உறங்க முடியாது தவித்தனர். அதன்பிறகு என்ன நிகழப்போகின்றது என்று வினவும் தைரியம் அங்கு யாருக்கும் இல்லை.

திருநல்லன் இறந்த செடிகளைப் பார்த்தே கரைந்து விட்டார். துவண்டு போனால் இனி ஆகப் போவது ஒன்றுமில்லை என்று உணர்ந்து, மீண்டும் விதை விதைக்க ஆயத்தங்கள் செய்திருந்தார்.

“சார்.. இப்போ இதை எப்படி சரி செய்யப் போறோம்” ஆரெழில்.

“இது எல்லாமே ரீயூசபில் ப்ளாக்ஸ் மா.. புயல் சுருட்டிட்டு போன பாகம் தவிற இங்க உடைஞ்சு கிடக்குறதை கொஞ்சம் சரி செய்யலாம். நமக்கு சாப்பாடு கொஞ்ச நாளைக்கு இருக்கு. நாம வந்த விண்கலத்தில் கொஞ்சம் எப்பவுமே தேக்கி வச்சிருப்போம். அதை இப்போ எடுத்துக்கலாம். ஆனா இன்னும் கொஞ்ச நாளில் நாம இங்க விளைய வச்சே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கிருந்து நாம் போகவும் முடியாது. அடுத்து ஒரு வருஷத்திற்கு தேவையான காய்களை நாம விளைய வைக்கணும். ஆனா எப்படி அதை சாத்தியப்படுத்தப் போறோம்னு தெரியலை” என்றான் சலித்துக் கொண்டே.

அனைவரும் அமைதி காத்தனர். எதிர்காலம் அவர்களை அச்சுறுத்தியது.

“விவசாயம் ஒரு கலை சார்.. அதை நாம் நினைச்சா நிச்சயம் செய்ய முடியும்” என்று அந்த நிலையிலும் ஊக்கம் கொடுத்தது திருநல்லன் மட்டுமே.

ஆரல் தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்