நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. சென்னி அடுத்த விண்கலம் செலுத்த தயாராய் இருந்தான். அதில் கணி, அதி மற்றும் கீர்த்தியும் பயணம் செய்வது உறுதியானது. அவர்களுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளின் முடிவும் வந்தபின்னர், அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தனர். கணி பல்லவியைப் பார்க்கப்போகும் ஆவலில் இருந்தான்.
தொலைகாட்சி ஊடகங்கள் செவ்வாய் கிரக்கிதினைப் பற்றி சுடச்சுட செய்திகள் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தது. செவ்வாயில் வாழும் மக்களின் வாழ்வியல் முறை, அவர்களின் பழக்கவழக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அங்கிருந்து கிடைத்த சில புகைப்படங்கள் அதற்கு தூபம் போட மக்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர் என்றும் கூறலாம். அது தன்னைச் சார்ந்தவர்கள் அங்கு வாழ்கிறார்கள் என்று பெருமையால் இருக்கலாம். சில தினங்கள் வரை நேர்மறை செய்திகள் மட்டுமே காட்டித்தீயாய் பரவ, திடீரென ஒருநாள் ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிட்டது.
செவ்வாயில் சென்று வாழ்பவர்களுக்கு, சில மாதங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதற்கான உணவுகளை அவர்களே அங்கு தயார் செய்யும் சூழலில் இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவ, அனைவரும் பதற்றமடைந்தனர். மீண்டும் விவாதங்கள் தொடர்ந்து நடந்தது. அங்கு தக்காளி, உருளைக் கிழங்கு, கீரைவகைகள் வளர்க்க முற்படுவதாகவும், அவைகள் செழித்து வளர்ந்தால் மட்டுமே அவர்களுக்கு வாழ்வாதாரம் இருக்கும் என்றும் ஊடகங்களில் செய்திகள் பரவ, மக்கள் கொந்தளித்தனர். எப்படி நிறுவனம் இப்படி மெத்தனமாக செயல்படலாம் என்று பலவாறு பலவினாக்கள் அவர்கள் முன் வைக்கப்பட்டது.இம்முறை சென்னியிடம் நிருபர்கள் வினா தொடுக்க, அவன் பொறுமையாக பதிலளித்தான்.
“யாரும் கவலைப் படவேண்டாம். இதுக்கு ரெண்டே வழிதான் இருக்கு. ஒண்ணு அங்கு உணவு தயாரிக்க வேண்டும். இல்லை இங்கிருந்து போக வேண்டும். முதல் திட்டத்திற்கு உங்கள் வேண்டுதலும் ஆசிர்வாதமும் வேண்டும். இரண்டாம் திட்டம் எங்கள் நிறுவனத்தின் கையில் இருக்கிறது. நிச்சயம் நாங்கள் தயாராக இருக்கிறோம். இனியும் தயாராய் இருப்போம்..” என்று அவன் கூறி விடைபெற, ஊடகங்கள் அதை ஒலிபரப்பு செய்தது.
அனைவரும் அங்கு செடிகள் முளைக்க வேண்டும், காய் காய்க்க வேண்டும் என்று மனதில் வேண்டுதல்கள் வைத்தனர். தினசரி செய்திகளில் இந்த தகவலை எதிர்பார்த்து ஏங்கித்தவித்தனர் மக்கள் அனைவரும்.கணி அமைதியாய் சென்னியை ஆராய்ச்சி செய்தான். அவன் ஊடகங்களிடம் கூறியதில் பெருமளவு பொய்யிருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு.
“சார்.. என்ன சார் இது.. இவ்வளோ பெரிய குண்டைத் தூக்கிப் போடுறான் இந்த சென்னி.. உண்மையா அவுங்களுக்கு சாப்பாடு இருக்காதா?” என்று அதியும் கீர்த்தியும் ஒன்றாக ஒலிக்க, கணி இல்லை அது பொய் என்று தலையசைத்தான்.
சென்னி வந்தவுடன் அவனிடம் வினவ, “உங்களுக்கு பதில் தெரியும்.. ஏன் சார் கேள்வி கேக்குறீங்க?” என்று எதிர் கேள்வி எழுப்பினான்.
“இல்ல… நீயே சொல்லு..” அதி.
“இன்னும் கொஞ்ச நாள் இவுங்க பேச்சு எல்லாம் செவ்வாயில் செடிகள் வளர்வதைப் பற்றியே இருக்கணும்..” சென்னி.
“இருந்தா..” கீர்த்தி.
“முதலில் இருக்கட்டும்.. அப்புறம் அடுத்த ட்விஸ்ட் வைக்கலாம்..” என்றான் உதட்டில் உறைந்த புன்னகையுடன்.
***************
அங்கு செவ்வாய் கிரகத்திலும் செடிகளைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் அனைவரும். மறுநாள் காலையில் எழுந்தவுடன் முதலில் செய்வது விதை விதைத்த பசுமைக் கூண்டிற்குள் சென்று பார்ப்பதுதான் வேலை. அனைவருக்கும் ஆர்வம் வந்துவிட்டது. மண்ணிற்குள் புதையுண்டு கிடக்கும் விதைகள் முளைத்து வர எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நன்கு அறிந்து கொண்டனர்.
அப்படி ஒருநாள் பார்க்கையில் அங்கு விதைத்த விதைகள் முளைத்து மண்ணிற்கு மேல் எட்டிப் பார்த்தது. அனைவரும் கொண்டாடிவிட்டனர். அந்த தகவல் பூமியையும் எட்ட பூமியிலும் கொண்டாடித் தீர்த்தனர். இனி செவ்வாயில் மனிதன் கால்பதிக்க நூற்றாண்டுகள் கடக்க வேண்டிய தேவையில்லை என்று ஊடகங்கள் செய்தி பரிமாற்றம் செய்தது.
மது தன் வயிற்றில் இருந்த குழந்தைத் தடவிப் பார்த்தாள். முதல் முறையாக அதன் அசைவை உணர்ந்தாள். பூமியைப் பொறுத்தளவு ஒரு விதை முளைப்பது மிக சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இங்கு அது ஒரு பிரசவம் தான். மண்ணுக்குள் புதையுண்ட விதை பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்தது. அது மிகவும் சிரமப்பட்டுப் பிரசவிப்பதைக் கண் கொண்டு கண்டனர் அனைவரும்.இனிப்புகள் பரிமாற்றம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த செடிகளுக்கு அருகில் அமர்ந்து, வைத்த கண் அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்த மதுவை இரட்டையர் இருவரும் தொட்டு நினைவுலகிற்கு கொணர்ந்தனர்.
“அக்கா… என்ன செடியையே பார்த்துட்டு இருக்கீங்க?”
“மண்ணுக்குள்ள புதைந்து போன விதை ஒரு நாலு செண்டிமீட்டர் முளைச்சு வெளிய வர எவ்ளோ போராட்டம் இல்ல. ஆனா நாம அதைப் பொருட்படுத்தாமல், பிடுங்கி வீசுறோம். நம்மளோட சுயநலத்திற்காக நாம பிடுங்குறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் யோசிச்சிருப்போமா?” மது.
“வாழ்க்கை சில பாடங்களை வலிக்க வலிக்க நமக்கு கத்துக்கொடுக்குமாம். அப்படி ஒரு பாடம்தான் இது. பூமில உள்ளவுங்களுக்கும் அது புரியணும். புரியும் கூடிய சீக்கிரம்..” என்று கூறிக்கொண்டிருக்க, காப்பியன் அனைவரையும் அழைத்து வந்தான்.
“ஏய்.. முட்டை போண்டா நம்பர் ஒன்.. நம்பர் டூ.. என்ன காலைல ஓட வராம பங்க் பண்ணிட்டீங்க..” தணிகை.
“கொழுப்பு அதகமா இருக்குவுங்கதான் ஓடணுமாம்..” நேரெழில்.
“அதான் நீங்க ரெண்டு பேரும் ஏன் வரலைன்னு கேக்குறேன்..” என்றவனை முறைந்தனர்.
“இங்க ஓட எவ்ளோ ஜாலியா இருக்குத் தெரியுமா.. சும்மா லைட்டா ஜம்ப் பண்ணா போதும். அப்படியே பரந்து போய் கொஞ்ச தூரத்தில் தரையிறங்குறோம். இங்க ஓட்டப் பந்தயம் வச்சா தங்கப்பதக்கமே ஜெயிக்கலாம்.”
“அட அறிவே..நீயே இவ்வளோ வேகமா ஓடுற.. அப்போ பூமியில கால் தரையில் படாம ஓடுறவன், இங்க ஓடுனா, நீ கடைசில கூட வர மாட்ட. நீ ரெடின்னு ஆரம்பிக்கும்போது அவன் ஃபினிஷ் லைனை டச் பண்ணிடுவான்” ஆரெழில்.
சித்திரன் புத்துணர்ச்சியுடன் ஆர்வமாக இருந்தான். திருநல்லன் அவர் வயதிற்கு பொறுந்தா இளமையுடன் காட்சியளித்தார்.
“என்னமா மது.. காலைலையே வேண்டுதலா..” திருநல்லன்.
“ஆமாப்பா… எப்போ வெளில வரும்னு பார்த்துட்டு இருந்தோம். இப்போ எப்போ பூப்பூத்து, காய் காய்க்கும்னு கேட்டுட்டு இருந்தேன். என்னோட பிள்ளைக்கு காய் தருவியான்னு கேட்டேன். அது தலையாட்டுச்சுப்பா” என்று புன்னகையுடன் உரைத்தாள்.
“செடிக்கு உணர்வுகள் உண்டும்மா.. நம்ம கூட அது பேசும்..” என்று கூறியவர் அங்கிருந்த நீரை எடுத்து அந்த செடிகளுக்கு தேவையான அளவு நீரை வார்த்தார்.
வேதன் எதுவும் பேசாமல் அமர்ந்து விட்டான். அவனுக்கு இந்த காலை ஓட்டம் பழக்கமில்லாத ஒன்று. நாட்கள் இப்படியே நகர, செடிகள் நன்றாகவே வளர்ந்திருந்தது. பூமியில் அடுத்த ஷட்டில் கிளம்ப தயார் நிலையில் இருந்தது.
தணிகையும் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து ஊற்ற ஆரம்பித்தான். அங்கு செடிகளுக்கு நீருற்ற ஒரு கொள்கலன் இருந்தது. அதன் விலையே பல ஆயிரங்கள் இருக்கும்போல. அதில் எவ்வளவு நீர் ஊற்ற வேண்டும் என்ற அளவீடுகள் முதற்கொண்டு இருந்தது. அதில் நாம் பதிந்து வைத்தால் போதும். நீர் அளவாக சீராக ஊற்றிவிடும். என்னதான் அந்த உபகரணங்கள் உபயோகத்தாலும் திருநல்லனுக்கு திருப்தி இல்லை. தன் கைப்பட்ட நீரை அதற்கு ஊற்றுவதால் தன் உணர்வுகளையும் அந்த செடிக்கு கடத்துவது போல் எண்ணம் அவருக்கு. அதனால் அவர் என்றுமே அந்த உபகரணங்கள் பயன்படுத்தியதில்லை.தணிகையும் இன்று அவரை பின்பற்ற, அவர் அவனின் தோளில் தட்டினார். அவனும் சிரித்துக் கொண்டே நீரை ஊற்ற, திடிரென அவன் கைகளில் இருந்த குவளையைப் பறித்தார்.
“அறிவிருக்காடா உனக்கு?” திருநல்லன்.
“அதுக்கு என்ன..? நல்லாவே இருக்கு. உங்களுக்கு இல்லையா? வேணுமா?” என்றான் நக்கலுடன்.
“புதுசா பரிச்ச கொத்தமல்லி தழை மாதிரிதானே. அதை எதுக்கு அவருக்கு வேணுமான்னு கேக்குற” என்று கிண்டலடித்தனர் இரட்டையர்கள்.
“அப்பா.. என்ன ஆச்சு?” பல்லவி.
“பிஞ்சு செடிமா.. இதுக்கு இவ்ளோ தண்ணீ ஊத்துனா என்ன ஆகும்?”
“என்ன ஆகும்.. நல்லா வளரும்..”
“விவசாயம் பத்தி அடிப்படை அறிவு இல்லாதவன் உணவை உண்ண தகுதியற்றவன்” என்றார் சற்றே கோபமாக.
“தணிகை, சும்மா இரேன்.. விதை அழுகிடும்டா.. அப்புறம் எப்படி முளைச்சு வரும்” பல்லவி..
“ஓ.. அப்படியா அக்கா. அதை பொறுமையா சொன்னா புரிஞ்சுப்போமே. எதுக்கு இப்படி வெடுக்குன்னு விழணும். அவர் தோளில் தட்டிக் கொடுக்கும்போதே நினைச்சேன். ஏதோ சரியில்லையேன்னு..” தணிகை.
“ஆமா.. எத்தனை வருஷமா சாப்பிடுற. அதே மாதிரி இதையும் கத்து வச்சிருக்கணும்” என்றார் அதே கோபத்துடன்.
“இப்போ என்ன கெட்டுப் போச்சு. ஒரு விதை அழுகிப் போனா இப்போ என்ன?”
“இந்த மெத்தனம் நம்மகிட்ட இருக்கதாலதான் நாம இப்படி அழிஞ்சிட்டு வரோம். இந்த ஒரு செடி வளர எத்தனை விவசாயி வானத்தைப் பாத்துட்டு இருக்கான் தெரியுமா? ஒரு செடி செத்தா அழணும். குறைந்த பட்சம் மனசாவது வருத்தப்படணும். அப்போதான் இந்த மனித இனம் பிழைக்கும்” என்று கோபத்துடன் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அவர் சென்ற பின் அங்கு அசாத்திய அமைதி நிலவியது. மதுபல்லவியைத் தவிற அனைவருக்கும் அவரின் இந்த போக்கு புதிராக இருந்தது. ஒரு செடி தவறுதலாக இறந்தால் என்ன வந்துவிடப் போகிறது என்றுதான் நினைத்தனர்.அப்பொழுது திடீரென காப்பியன் ஓடி வந்தான்.அனைவரையும் உள்ளே செல்லுமாறு கட்டளையிட, அனைவரும் அவனை யோசனையாக பார்த்தனர்.
“எல்லாரும் கொஞ்சம் கவனமா கேளுங்க. ஒரு மணற்புயல் வரப்போகுது. அது நம்ம சைட்டை கடந்து போறதா தகவல் வந்திருக்கு. நாம எல்லாரும் கொஞ்சம் தைரியமா இந்த புயலை எதிர் கொள்ள வேண்டும்” என்று கூற, அனைவருக்கும் குழப்பம்.
“மணற்புயலா..? அப்படின்னா?” வேதன்.
“அதை விளக்கவெல்லாம் இப்போ நேரம் இல்லை. நம்ம டோம்க்குள்ள இருக்கதுதான் நல்லது. சீக்கிரம் எல்லாரும் உள்ள வாங்க. அப்புறம் இந்த செடி எல்லாத்தையும் உள்ள எடுத்து வைக்கணும். வேகமா செய்ங்க” என்று கட்டளைப் பிறப்பித்தவன், மதுபல்லவியிடம் திரும்பி, “நீங்க இங்க இருக்கது நல்லது இல்ல.. வாங்க உள்ள போகலாம்” என்று அவளை மட்டும் அழைத்துச் சென்றான்.
விஷயம் அறிந்த திருநல்லனும் ஓடி வந்தார். அனைவரும் சேர்ந்து அங்கிருந்த செடிகளை அப்புறப்படுத்தினர். டோம்.. அனைத்து பக்கமும் மூடப்பட்டது. யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை என்று முழங்கி கொண்டேயிருந்தது ஒரு குரல். அதுவரை சாதாரணமாக இருந்த அனைவரும் சற்றே கலங்கி நின்றனர். அங்கிருந்த கண்ணாடி சாரளத்தின் வழியே வெளியில் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.
பூமியில் புயல் வருகிறது என்றால் நிமிடத்திற்கு ஒருமுறை அதைப் பற்றிய பரபரப்பு செய்திகள் ஒலிபரப்பாகுமே. அது எங்கு மையம் கொண்டிருக்கிறது. எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. எப்பொழுது கரையைக் கடக்கும். எவ்வளவு மழை பெய்யும். எங்கெல்லாம் பெய்யும் என்ற உடனடி தகவல்களை ஊடகங்கள் உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து பரிமாறும். அதேப்போல பூமியில் இருந்து செவ்வாய்க்கு தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.
செல்வாய் முழுக்க ஆராய அவர்களிடம் போதுமான வசதி இல்லாததால், புயல் உருவானது தெரியாமல் போனது. அவர்களின் இடத்திற்கு அருகில் வரவும் தான் அவர்களால் கணிக்க முடிந்தது. அதனால் அடுத்த எட்டு மணி நேரத்திற்குள் மணற்புயல் அந்த இடத்தைக் கடக்கும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.
செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல்கள் பொதுவானவை. அவை எந்த நேரத்திலும் நிகழலாம், ஆனால் தெற்கு வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் செவ்வாய் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் போது மற்றும் மேற்பரப்பு வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் போது அடிக்கடி ஏற்படும் . பெரும்பாலான புயல்கள் பிராந்திய அளவில் உள்ளன மற்றும் சில வாரங்கள் நீடிக்கும். இருப்பினும், ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது வருடமும், புழுதிப் புயல்கள் உலகளாவியதாக மாறும். அவற்றின் உச்சத்தில், வளிமண்டலத்தில் தூசி மிகவும் அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது.
செவ்வாயில் மழை பெய்யாது என்று ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் இது மாதிரி புழுதிப் புயல்கள் மிக அதிகம்.
வெளியில் நிலவிய அமைதி உள்ளுக்குள் இல்லை. உள்ளே இருந்தவர்களின் பதற்றம் ஏதோ தவறாக நிகழப்போவதை உணர்த்தியது. காற்று வெளியில் இருக்கிறதா என்பதை உள்ளே இருந்து உணர முடியாதே. மரம் அசைந்தால் காற்று அடிக்கிறது என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால் பொட்டல் செந்நிலமாய் காட்சியளிங்கும் செவ்வாய் இப்பொழுது பாலைவனம் போல் காட்சியளித்தது.
திடிரென புழுதிகள் திரண்டு வருவது கண்களுக்குப் புலப்பட்டது. அப்பப்பா.. என்ன ஒரு திடம். புழுதிகள் சுனாமியாய் மேலெழும்பி நகர்ந்து வந்தது. அதன் கனம் அதிகமாய் இருந்ததோ. கொஞ்சம் மெதுவாக வருவது போல் இருந்தது. அதன் தொடக்கமும் கண்களுக்குப் புலப்படவில்லை. முடிவும் புலப்படவில்லை. விழிகளில் பிரமிப்பு மட்டுமே மிச்சம். அதுவரை மெதுவாக நகர்ந்து வந்ததுபோல் இருந்த புழுதிக் திரல் கடலின் பேராழியாய் வேகமெடுத்தது. முன்பு பார்த்த வேகம் கற்பனை என்றெண்ணும் அளவு வேகம். அது கடந்து போவதற்குள் இந்த கட்டிடம் உடையாமல் இருக்குமா. போர் களத்தில் சோழனின் சேனையைப் போல் இருந்தது அதன் வேகமும் ஆக்ரோஷமும்.அனைவரையும் ஓரிடத்தில் கூடும்படி ஏற்கனவே அறிவுறுத்தியிருக்க, பிரமிப்புடன் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அரல் தொடரும்…