Loading

அவளின் கண்ணீரை துடைத்தவனின் இமையோரம் சிந்திய இருதுளி கண்ணீரை துடைக்க அவளது கரம் அனிச்சையாக உயர்ந்தது. உயர்ந்த கரத்தினை பற்றியவன் அதில் முகம் புதைத்துக் கொண்டான். சில நிமிடங்கள் அவன் அப்படியே இருக்க, அவளது கையில் அவனது கண்ணீர் ஈரம் ஒட்டிக் கொண்டது.

அவனை அறிந்த இரு ஆண்டுகளில் அவன் கலங்கி ஏன் சோகமாக இருந்துக்கூட அவள் பார்த்ததில்லை. இப்பொழுது அவன் தன்முன் கலங்கி நிற்பது அவளது உள்ளத்தில் சுறுக்கென்று வலியை ஏற்படுத்த என்ன நினைத்தாளோ தெரியவில்லை கையில் முகம் புதைத்து கலங்கியவனை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு கண்ணீர் உகுத்தாள்.

அவள் அவனை அணைத்திருந்தாள் ஆனால் அவன் அவளை அணைக்கவில்லை. ஆனாலும் அவளது அணைப்பு அவனுக்கு மிகுந்த ஆறுதலை அளித்திருக்க, உள்ளத்தின் ஓர் ஓரமாய் சிறு மகிழ்வும் பிறந்திருக்க, இதழ்கடையோரம் மெல்லிய மென்னகையும் அரும்பியிருந்தது. அவன் அவளை விட்டு விலக முற்படும்பொழுது தான் அழகி தான் ஆற்றிய செயலை உணர்ந்தாள். உணர்ந்ததும் பட்டென்று அவனை விட்டு விலகியவள் பதற்றமாக கைப் பிசைந்த வண்ணம் அவனை நிமிர்ந்து நோக்க முடியாது நின்றாள்.

“அது…. நான்…. தெரியாம….” என அவள் பதற்றத்தில் பிதற்ற, அவனோ நிதானமாக அவளை நெருங்கி அவளது தாடை பற்றி முகத்தை நிமிர்த்தி அவளை தன்னை காண வைத்தான்.

அவன் நெருங்கியதும் இன்னும் பதற்றமான அழகி அவனது புன்னகை ததும்பும் முகத்தைக் கண்டதும் அமைதியாக அவனையே பார்த்திருந்தாள். அவளது பதற்றம் சில நொடிகளில் கரைந்து காணாமல் போயிருந்தது அவளுக்கே வியப்பாகத் தான் இருந்தது. அவனது விழிகளில் வழிந்த நேசம் அவளது உள்ளத்தில் எதையோ கரைத்து இலகுவாக்குவது போன்றதொரு மாயை அவளுள்!

“வா மா உட்கார்ந்து பேசலாம்.” என்று கனிவாய் கூறியவன் விலகி சென்று கூடத்தில் இருந்த இருக்கையில் அமர, அழகிக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.

அந்த ஏமாற்றம் ஏன் எதற்கென்று அவளுக்கு புரியவில்லை. நொடியில் முகத்தில் பிரதிபலித்த உள்ளத்தின் ஏமாற்றத்தினை சரி செய்துக் கொண்டவள் அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த கதிர் அவளின் முக மாறுதல்களை குறித்துக் கொண்டு தனக்குள் புன்னகை புரிந்துக் கொண்டான்.

அவள் அமர்ந்து நிமிடங்களாகியும் அவன் பேசாது அவளையே பார்த்திருக்க, அழகியே பேச்சைத் துவங்கினாள்.

“பேசலாம்னு சொல்லிட்டு முகத்தையே பார்த்துக்கிட்டுருக்க.”

“ஒரு வாரத்துக்கு முன்னாடி பார்த்ததுக்கும் இப்பவும் நிறைய வித்தியாசம் தெரியுது. அதான் என்னனு பார்க்கறேன்.”

கண்டுக்கொண்டானோ என திடுக்கிட்டவள், “என்ன… என்ன வித்தியாசம்? அதெல்லாம் ஒன்னுமில்ல.” என சமாளிக்க, அவனோ எதுவும் கூறாது புன்னகைப் பூக்க, அவளுக்கு தான் ஐயோவென்று ஆனது.

சில நிமிடங்கள் மௌனம். பின் அவனே வாய்த்திறந்தான்.

“அழகா இருக்க டி.” என்று அவன் கண்சிமிட்டிட, அவள் முகத்தில் மின்னலென வெட்கம் தோன்றி மறைந்தது.

அவளது வெட்கத்தைக் கண்டு கொண்டவனோ மெலிதாக சிரிக்க, அவளோ கோப முகமூடியை அணிந்துக் கொண்டு அவனை முறைத்தாள்.

“பேசணும்னு சொல்லிட்டு கண்டதையும் பேசிட்ருக்க.” என அவள் அழுத்தமாக சொற்களை உதிர்க்க, அவனோ அசராது அவளையே பார்த்தான்.

சில நொடிகள் விழிகளை அவள் முகத்தில் பதித்தவன் பின் தன் கையிலிருந்த பையிலிருந்து அடர் பச்சை நிற பட்டுப்புடவையை எடுத்தான். அழகிக்கு புடவை மிகவும் அழகாக இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் சற்றுமுன் தானே அனைவருக்கும் உடை தந்தான். இப்பொழுது இந்த புடவை எதற்காக? யாருக்காக? எனும் வினாவும் அவளுள் தோன்றி குழப்பத்தை விளைவித்தது.

குழம்பிய அவளின் முகம் கண்டவன் மென்னகையோடு அப்புடவையை அவளிடம் நீட்டினான். அழகியோ இன்னும் குழப்பமாய் அவனை நோக்கினாள்.

“இப்போ எதுக்கு இந்த புடவை? அதான் எல்லாருக்கும் ட்ரெஸ் கொடுக்கும்போது எனக்கும் அதிக்கும் கொடுத்துட்டியே.”

“அது வேற இது வேற. இது ஸ்பெஷல்.” என அவன் கண்சிமிட்ட, அவள் முறைத்தாள்.

“என்ன ஸ்பெஷலா? எனக்கு வேண்டாம்.”

“முதல்ல என்ன சொல்ல வரேன்னு தெரியாம இப்படி பட்டுபட்டுனு பேசறது நிறுத்து அழகி.” என்றவனின் குரலும் முகமும் தீவிரமாக, அழகி எதுவும் பேசாது அவனையே சொல் என்பது போல் பார்த்தாள்.

“இதை நீ வாங்கிக்கிட்டாலும் வாங்கலனாலும் இது உனக்கான புடவை. உனக்குனு நெய்ய சொல்லி வாங்கிட்டு வந்தது. எப்ப முழுசா என்னை நம்பறியோ, எப்ப என் நேசம் உனக்கு புரியுதோ, எப்ப உன் மனசுல முழுசா நான் இருக்கேன்னு தோனுதோ, எப்ப என்கூட சேர்ந்து வாழ உனக்கு நம்பிக்கை வருதோ, எப்ப உனக்கு என் மேல நேசம் இருக்குன்றத உணர்ந்து என்கிட்ட சொல்லணும்னு தோனுதோ அன்னைக்கு இந்த புடவைய கட்டிட்டு என் முன்னாடி வந்து நில்லு. நீ சொல்லாமலே எனக்கு எல்லாம் புரியும்.” என்றவன் அவளையே பார்த்தவாறு புடவையை அலளிடம் நீட்ட, இரு நிமிடம் தயங்கியவள் பின் அதனை வாங்கிக் கொண்டாள்‌.

அவள் புடவையை வாங்கியதும் கதிரின் இதழ்கள் மெலிதான புன்னகையை சிந்தின. அவளோ அவனை ஒருவித தவிப்போடு பார்த்திருந்தாள்.

“சரி டி. நான் கிளம்பறேன். புதன்கிழமை காலைல நிரஞ்சன் உங்களை கூப்பிட வருவான். அவனோட வந்துருங்க ரெண்டு பேரும்.” என்று கதிர் எழுந்து நிற்க, அழகியும் எழுந்து அந்த புடவையை தான் அமர்ந்திருந்த இருக்கையில் வைத்தாள்.

“நிரஞ்சா! வெல்லக்கட்டி!” என கதிர் அழைக்க, உள்ளிருந்து நிரஞ்சனும் அதிரனும் கூடத்திற்கு வந்தனர்.

“வெல்லக்கட்டி! நான் கிளம்பறேன். அழகியோட நீ புதன்கிழமை வரணும் ஓகே வா!” என்று கதிர் அதிரனை தூக்கி வைத்துக் கொண்டு கேட்டான்.

“கண்டிப்பா வருவேன் ஹீரோ! நாளைக்கே ஸ்கூல்ல மிஸ்கிட்ட லீவ் லெட்டர் குடுத்தர்றேன்‌.” என்று அதிரன் மாறாத மழலையில் உரைக்க, கதிர் அவன் கன்னத்தில் முத்தமிட்டு கீழே இறக்கி விட்டான்.

“லீவுனா போதும் அதி குஷியாடுவாரு!” என்ற அழகி இயல்பாக அதிரனை தன் பக்கம் இழுத்து நிறுத்தி தலை வருடிட, நிரஞ்சனும் கதிரும் மென்னகைத்த வண்ணம் அவளிடம் விடைபெற்றனர்.

அழகி வழியனுப்பிட வாசல் வரை வர, நிரஞ்சன் முன்னே மகிழுந்தை நோக்கி செல்ல, கதிர் சற்றே பின்னடைந்தான்.

அழகி அவனை புருவம் நெரித்து நோக்க, கதிர் அவளை நெருங்கி, “சீக்கிரம் நான் கொடுத்த புடவைய கட்டிக்கிட்டு என்னை பார்க்க வருவனு உன் கண்ணு சொல்லுது டி அழகி!” என்று அவள் காதில் அவன் கிசுகிசுத்து கண்சிமிட்ட, அழகிக்கு படபடப்பாக வந்தது.

அவளது முகத்தில் வெட்கம், தயக்கம் இயலாமை, தவிப்பு, ஏக்கம், சோகம் என பல உணர்வுகள் நொடியில் மாறி மாறி தோன்றிட, இறுதியாய் வழமைபோல் அவற்றை இறுக்கம் கொண்டு பூட்டி மறைத்தாள். அவளின் முக மாறுதல்களை கண்டவனோ கண்ணடித்து அழகாய் சிரித்துவிட்டு விசிலடித்தபடி அவளருகில் நின்றிருந்த அதிரனின் தலையை கலைத்து விளையாடி கையசைத்து விடைபெற்று மகிழுந்தை நோக்கிச் சென்றான். மகிழுந்து கிளம்பும் வரை இறுக்கமாக அங்கேயே நின்றவள் பெருமூச்சுவிட்டு அதிரனை அழைத்துக் கொண்டு உள்சென்று கதவடைத்தாள்.

அதன்பின் வந்த இரண்டு நாட்கள் விர்ரென்று கடந்திருக்க, புதன்கிழமை காலை எழுந்தவளின் மனம் காரணமின்றி மகிழ்ந்திருந்தது. அதிரனை எழுப்பி குளிக்க வைத்து தயார் செய்தவள் தானும் குளித்து வந்து அவன் அன்று அணிவதற்கென்று வாங்கி தந்திருந்த இளஊதா நிற புடவை எடுத்தாள். பின் அதனை வைத்துவிட்டு அவன் கொடுத்த அடர் பச்சை நிற பட்டுப்புடவை எடுத்து வருடி பார்த்து புன்னகைத்தவள் என்ன நினைத்தாளோ அதனை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு மீண்டும் இளஊதா நிற புடவையை எடுத்து உடுத்திக் கொண்டாள். அதிரனுக்கும் அவன் அதே நிறத்தில் உடை எடுத்துக் கொடுத்திருக்க, இருவரும் ஒரே நிற உடையில் மிக அழகாக தயாராகினர்.

நிரஞ்சன் வரவும் இருவரும் அவனோடு கிளம்பி கதிர் வரக்கூறிய இடத்திற்கு வந்து இறங்கினர். அவர்கள் இறங்கியது கதிர் புதிதாக தொடங்கியிருக்கும் பெரிய ஆடையகம். அதனின் திறப்பு விழாவிற்கே கதிர் அனைவரையும் அழைத்திருந்தான். அனைவருக்குமே கதிரின் ஆடையகம் எதிர்பாராத ஆச்சர்யம் தான். இத்தனை நாள் அவன் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணியவர்கள் அவன் இதற்காக தான் உழைத்திருக்கிறான் என்பதனை அன்று புரிந்துக் கொண்டனர். சக்கரவர்த்தி மட்டும் கதிரின் வேலைகளை முன்பே அறிந்திருந்ததால் அவருக்கு பெரும் வியப்பு ஏற்படவில்லை. மிருதுளாவோ பெரிய கடையை பார்த்ததும் கண் கலங்கி கதிரை அணைத்துக் கொண்டு வாழ்த்துகள் கூறினாள். ராம்குமார் புன்னகையோடு கதிரை தட்டிக் கொடுத்து வாழ்த்தினான். நிரஞ்சன் தான் திறப்பு விழாவிற்கான வேலைகளில் பரபரவென்று சுற்றிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது தான் அழகியை கண்ட கதிரவனோ அமைதியாக அவளை பார்த்து புன்னகைத்தபடி நின்றிருக்க, விழிகளால் கடையின் பிரம்மாண்டத்தை அளந்து ஆச்சர்யம் கொண்ட அழகி அவனது கைக்குலுக்கி தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தாள். அதிரனும் கவி பாப்பாவும் விளையாட பெரிய இடம் கிடைத்துவிட்டதென்ற மகிழ்வில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

கதிரவன் தனக்கும் அதிரனுக்கும் எடுத்துக் கொடுத்த உடையின் நிறத்திலேயே அவனும் உடை அணிந்திருப்பதை அழகி அப்பொழுது தான் கவனித்தாள். அவளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி தோன்றினாலும் ஒருபுறம் எதுவோ தடுக்க அவள் முகம் இறுக்கமானது. அதனை கவனித்து கதிரவன் அவளிடம் பேச வருகையில் வாசலில் வந்து நின்ற மகிழுந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மிருதுளா, “அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க.” என்றபடி மகிழ்வாக வாசல் நோக்கி ஓட, கதிரவன் ஒருகணம் தயங்கி பின் அவனும் வாசல் நோக்கி செல்ல, அழகி வேகமாக ஆடையகத்திற்குள் சென்று மறைந்தாள்.

கதிரவனின் அம்மாவிற்கு அழகியை கண்டாலே ஆகாது. ராம்குமாரிடமும் மிருதுளாவிடமும் அடிக்கடி அவர், “நம்மகிட்ட வேலை பார்க்கவறங்களுக்கு சம்பளம் கொடுத்தா போதும். வீடு வரைக்கும் கூப்பிட்டு அக்கறையும் அன்பும் காட்ட வேண்டியதில்ல. அவங்கவங்க இருக்குற இடத்தில இருந்தா தான் அழகு. நமக்கும் மரியாதை.” என்று அழகியிடம் அவர்கள் நெருங்கி பழகும் விதம் பிடிக்காது கூறுவதுண்டு. ஆனால் ராம்குமாரும் மிருதுளாவும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாது எப்பொழுதும் போல் அழகியை தங்கள் குடும்பத்தில் ஒருத்தி போன்றே நடத்த, கதிரவனின் அம்மா அழகி தனியாக சிக்கும் வேளைகளில் அவளை வார்த்தைகளால் கிழித்தெடுப்பதுண்டு.

அழகி அவருக்கு தக்க பதில் தந்திட ஒரு நொடி போதாது. ஆனால் ராம்குமாரின் குடும்பத்தாரின் முகங்களுக்காக அவரை சகித்துக் கொண்டு இயன்றவரை அவர் வரும் வேளைகளில் அவரின் கண்களில் படாது இருந்து விடுவாள். இன்றும் அப்படிதான் கடைக்குள் மறைந்துக் கொண்டாள்‌.

வாசலுக்கு சென்ற‌ கதிரவன் தன்னை பெற்றவர்களை வாய் வார்த்தைக்காக “வாங்க.” என்று அழைத்தவன் விறுவிறுவென உள்ளே வந்துவிட, அவனின் பெற்றோர் முகம் வாடிப் போயினர். மிருதுளா தான் “அவனை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே. வாங்க உள்ள போலாம்.” என்று சமாதானம் கூறி உள்ளே அழைத்து வந்தாள்.

கதிரவனின் தந்தை கோயம்புத்தூரில் கார்மென்ட் ஒன்று நடத்தி வருகிறார். கதிரவனின் தாய்மாமனுக்கு கார்மென்ட் மட்டுமல்லாது மென்பொருள் நிறுவனம், கட்டிடங்கள் கட்டித் தரும் நிறுவனம், தோட்டங்கள் என்று ஏகப்பட்ட சொத்துக்கள் உண்டு. அவருடைய ஒரே மகளை கதிரவன் திருமணம் செய்து கொண்டால் கதிரவன் பெரிய கோடீஸ்வரனாக வாழலாம் என்ற ஆசையில் மூன்றாண்டுகளாக கதிரவனின் பெற்றோர் அவனை தாய்மாமன் மகளை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அது பெரிய சண்டையாக வெடித்திட, அதில் கதிரவனின் தாய் அவன் தனது அண்ணன் மகளை திருமணம் செய்துக் கொள்ளாவிட்டால் தங்களது சொத்தில் அவனுக்கு எப்பங்குமில்லை என்று கூறிட, அதில் கோபம் கொண்டு வீட்டை விட்டு வந்தவன் அதன்பின் அதிகம் அவனது வீட்டிற்கு செல்வதுமில்லை பெற்றவர்களோடு அதிகம் பேசுவதுமில்லை. அவனது தாய்மாமன் மகள் கதிரவனோடு படித்த ஒருவனை விரும்புவது வேறு கதை. அதனை கதிரவனும் அறிவான் தான். ஆனால் அதனை தான் சொல்வதை விட, அவளே அவளது பெற்றோர்களிடம் கூறுவது தான் முறையாகும் என்பதினால் கதிரவன் அமைதியாக இருக்கிறான். அதுவே அவனது பெற்றோர்களின் மீது அதிக கோபம் வளராது இருப்பதற்கும் அவன் ஒன்றிரண்டு வார்த்தகைளாவது அவர்களோடு பேசுவதற்கு காரணமாக இருக்கிறது.

திறப்பு விழாவிற்கான நேரம் நெருங்கியபொழுது கதிரவனின் கண்கள் அழகியை தேட, அவன் அவள் கண்களில் படவேயில்லை. நிரஞ்சன் அவனது காதில், “அவள எதிர்பார்க்க வேண்டாம்னு சொன்னா. ஓப்பனிங்க நல்லபடியா முடிக்க சொன்னா.” என்று அழகி உரைத்தவைகளை முணுமுணுக்க, கதிரின் விழிகள் ஒருகணம் அவனது அன்னையை கோபக்கனலோடு தீண்டி திரும்பிட, பின் பெருமூச்சோடு சக்கரவர்த்தியை கடையை திறந்து வைக்க அழைத்தான். சக்கரவர்த்தி அவனை வாழ்த்தி கடையை திறந்து வைக்க, அனைவரும் அப்பெரிய கடையை சுற்றி வந்தனர். ராம்குமார் தனது குடும்பத்தினருக்கு உடைகள் வாங்கி முதல் வியாபாரத்தைத் தொடங்கி வைத்தான்.

கதிரவனின் அம்மா அது வேண்டும் இது வேண்டுமென பல புடவைகளை அள்ளிட, கதிரவன் மிருதுளாவிற்கு கண் காட்டவும் மிருதுளா புரிந்துக் கொண்டு அன்னை தேர்வு செய்த அனைத்து ஆடைகளுக்கும் பணம் செலுத்தி வாங்கியவள் வீட்டில் அவர்களுக்காக விருந்து ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி அன்னையையும் பெருமிதமாய் தன் மகனை பார்த்துக் கொண்டிருந்த தந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.

அவர்கள் சென்றபின் தான் அழகி கதிரவனின் கண்முன் வந்தாள். வந்தவள் தனக்கொரு பருத்தி புடவையும் அதிரனுக்கு வேட்டி சட்டையும் தேர்வு செய்து வந்திருந்தாள். அதற்கான தொகையை கதிரவனிடம் கொடுத்தவள் அவனை மனமாற வாழ்த்திவிட்டு விடைபெற, கதிரவன் அவளை இன்னும் சிறிது நேரம் இருந்துவிட்டு போகச் சொல்ல, அழகி இன்னொரு நாள் வருவதாகக் கூறி அதிரனை அழைத்துக் கொண்டு அங்கிருந்துக் கிளம்பிட, ஏமாற்றத்தோடு நின்றிருந்த கதிரை நிரஞ்சனும் சக்கரவரத்தியும் தோளில் தட்டிக் கொடுக்க, பெருமூச்சோடு கடைக்குள் இருக்கும் வேலைகளை கவனிக்கச் சென்றான்.

கடைத் திறப்புவிழா முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மாலை வேளையில் கொடைக்கானலில் மழைப் பொழிந்துக் கொண்டிருந்தது. அழகி ஒரு பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மழைக்காக ஒதுங்கியிருந்தாள். தொலைவில் கதிரவன் வண்டியில் நனைந்துக் கொண்டே வருவது தெரிய, அவளது அதரங்களில் அனிச்சையாக மென்னகை அரும்பியது. பேருந்து நிறுத்தத்தை நெருங்கியவன் அங்கே வண்டியை நிறுத்திட, அழகியின் மென்னகை புன்னகையாக விரிந்தது.

அவசர அவசரமாக வண்டியை பூட்டிவிட்டு பேருந்து நிழற்குடையில் ஒதுங்கியவன் அங்கு அழகி நிற்பதைக் கண்டு முகம் மலர்ந்து அவளருகில் வந்தான். அழகியும் அவனைக் கண்டு முகம் மலர்ந்தாள்.

“ரொம்ப பிஸியாகிட்ட போல. ரெண்டு நாளா ஆளே பார்க்க முடில.” என அழகியே பேச்சைத் தொடங்கினாள்.

“கடை இப்ப தானே திறந்துருக்கோம் அதான் வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு அழகி.” என கதிரும் புன்னகைத்தான்.

அழகியும் அதற்கு மென்னகைத்தாள். பின் இருவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் நின்றிருந்தனர். அங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருக்க, அழகிக்கு திடீரென ஒன்று தோன்றியது.

“கதிர் அப்படி உட்காரலாமா?” என அங்கிருந்த இருக்கைகளை காட்டிக் கேட்க, அவள் முகத்தில் இருந்த தீவிரம் அவள் தன்னிடம் பேச விழைவதை கதிருக்கு உணர்த்த அமைதியாக சென்று ஓர் இருக்கையில் அமர்ந்தான்.

அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்த அழகி, எப்படி தொடங்குவதென்று தெரியாது தடுமாறி அவனை பார்க்க, அவனோ அமைதியாக அவளையே பார்த்திருந்தான்.

வருவாள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்