அத்தியாயம் 12 ❤
❤️கூட்டை விட்டு வெளியேவர துடிக்கும் பட்டாம்பூச்சியவள்… “❤️
பன்னிரண்டாம் வகுப்பை முடித்து விட்டு பி. பி. ஏ படிப்பிற்கு விண்ணப்பித்துக் கல்லூரி திறப்பதற்காக காத்திருந்தாள்.
காலையில் படுக்கையை விட்டு எழும் நிலையில் இல்லை அவள்.ஏனென்றால் வெகு நாட்கள் கழித்து நன்றாக உறக்கம் வந்ததால் மஹிமா உறக்கத்தின் பிடியில் ஆட் கொண்டிருந்தாள்.
அவளது அருகில் வந்த சுவர்ணலதா நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்த தன் மகளையே சிறிது நேரம் அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றார்.
” இன்னைக்கு தான் நல்லா தூங்குறா ! “
ஒரு பெருமூச்சு விட்ட படி உறங்கட்டும் என்று அவளை எழுப்பாமல் சென்று விட்டார்.
கடிகார முள் பத்தைத் தொட அப்போது தான் மஹிமாவிற்கு முழிப்பு வந்தது.
மெத்தையில் இருந்து கொண்டே போர்வையை விலக்கி தன் செல்பேசியை எடுத்தாள். டேட்டா – வை ஆன் செய்து நண்பர்களிடம் இருந்து வந்த வழக்கமான
‘ குட்மார்னிங் ‘, ‘ ஹேவ் அ நைஸ் டே ‘
இவற்றைப் பார்த்து விட்டு பதிலளிக்காமல் செல்பேசியை தனக்கு அருகில் வைத்து, மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
சுவர்ணலதா ” இவளா எழுந்திரிச்சு வரட்டும்னு விட்டா நாள் பூராவும் தூங்கிட்டு இருப்பா போல ! “
என மஹிமாவை எழுப்ப அறைக்குள் நுழைந்தார்.
மஹிமா இப்போது போர்வையை தலை முதல் கால் வரை போர்த்தி படுத்திருக்க” மஹி ! எழுந்திரு “
அவரது அழைப்பைக் கேட்டாலும் எழ பிடிக்காமல் பிடிவாதமாக கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
“நடிக்குறியா ! “
அவளை எழுப்புவதற்கு, எளிதாக தன்னிடம் இருக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்தினார்.
” ஏய் ! அப்பா வர்றாராம்டி. ஒழுங்கா எழுந்தரு . “
” என்ன அப்பா வர்றாரா ! “
போர்வையை விலக்கி மெத்தையில் இருந்து இறங்கினாள்.
அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு” சீக்கிரம் எழுப்பி விட வேண்டியது தானம்மா… ! அவர் வர்றதுக்குள்ள நான் எப்படி குளிச்சு ரெடி ஆகுறது ? அய்யோ கடவுளே..! எப்போ கிளம்புனாரு ”
கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்க ,
சுவர்ணலதா கைகளால் வாயை மூடிக் கொண்டு சிரித்தார்.அவரது சிரிப்பில் தான் உணர்ந்தால் அம்மா அவளை ஏமாற்றி இருக்கிறார்.
அவரை முறைத்துக் கொண்டே,
” அம்மா ! இப்படி ஏமாத்துறீங்க ? “
சுவர்ணலதா ” அடி வாங்கப் போற ! பத்து மணி வரைக்கும் தூங்கிட்டு இருக்காளேனு, எழுப்ப வந்தா எழுந்திரிக்காம இருக்க.போ போய் பல்லு விலக்கிட்டு வா.
மஹிமா ” போங்கம்மா. எனக்கு தூக்கமா வருது ”
அவரின் தோளில் சாய்ந்து கொட்டாவி விட,
சுவர்ணலதா ” ஒழுங்கு மரியாதையா போறியா ! இல்லை உண்மையாவே அப்பாவுக்கு கால் பண்ணி வர சொல்லவா ? “
மஹிமா ” க்கும் “
என சினுங்கிக் கொண்டே குளியலறை சென்று பல் துலக்கி விட்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தாள்.
சமையல்காரர்களை மதிய உணவிற்கு தேவைப்படும் காய்களை வெட்டி வைக்குமாறு கூறி விட்டு மஹிமாவிற்காக காபியை கலந்து எடுத்து வந்தார் சுவர்ணலதா.
இரவு உடையுடன் கொட்டாவி விட்டுக் கொண்டே அமர்ந்து இருந்தவளின் கைகளில் காபி கோப்பையை திணித்து விட்டு,
“மஹி ! இன்னைக்கு ஈவ்னிங் கோயிலுக்குப் போய்ட்டு வரலாமா ? “
டிகாக்ஷனின் மணத்தை நாசியால் உள்ளிழுத்துக் கொண்டே,
மஹிமா ” திடிர்னு உங்களுக்க ஏன் கோயிலுக்குப் போகிற நினைப்பு வந்துருக்கு ? “
சுவர்ணலதா ” அது என்னமோ தெரிலடி ! மனசுக்கு கஷ்டமா இருக்கு எதையோ நினைச்சு கவலைப்பட்டுட்டே இருக்கேன் “
மஹிமா ” ஆமா ! இப்படி ஒரு புருஷன் இருந்தா உனக்கு ஜாலியாவா இருக்கும் “
சுவர்ணலதா ” அவர் அப்படித்தான்னு தெரிஞ்சு போச்சு. இப்போ என் கவலை உன்னப் பத்தித்தான் . ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் போகப் போற அதுவே எனக்கு வயித்துல புளியைக் கரைக்குது “
மஹிமா ” உங்களுக்கு டெய்லி எதையாவது நினைச்சு கவலைப்பட்றதே வேலையாப் போச்சு !
என சலித்துக் கொள்ள,
சுவர்ணம் ” அதை விடு. சாயந்தரம் கோயிலுக்கு வர்றியா ? வரலயா ?”
மஹிமா ” வர்றேம்மா. எனக்கும் வீட்ல இருந்து போர் அடிக்குது.அப்பா கிட்ட சொல்லிட்டிங்களா ? “
சுவர்ணலதா ” அவர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் உன்னையே கூப்பட்றேன் “
மஹிமா ” என்ன சுடிதார் போட்றதுனு எடுத்து வைங்க. நான் குளிச்சுட்டு வர்றேம்மா.அந்த ட்ரஸ்ஸை ஈவ்னிங் போட்டுக்குறேன்”
வீட்டில் அணியும் பனியன் மற்றும் பைஜாமாவுடன் குளியலறைக்குச் சென்றாள்.
அவள் வருவதற்குள் மஹிமாவிற்கு காலை உணவை தயார் நிலையில் இருக்கு வேண்டும் என்பதற்காக அனைத்தையும் எடுத்து வைக்கச் சென்றார் சுவர்ணலதா.
குளித்து முடித்து வந்து அமர்ந்தவள் காலை உணவை உண்ணத் தொடங்கினாள்.
பூரியும் , அதற்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு குருமாவும் சுவையாக இருக்க ரசித்து உண்டு முடித்தாள்.அப்போது செக்யூரிட்டி வாயிலில் இருந்து அழைப்பு விடுக்க அவனிடம் இருந்து வந்த செய்தியைக் கேட்டு சுவர்ணலதாவின் முகம் மலர்ந்தது.
சுவர்ணலதா ” மஹி… ! உனக்குக் காலேஜ் – ல கவுன்சிலிங் – கு கூப்புட்டு இருக்காங்க. இப்போ தான் நம்ம செக்யூரிட்டி கிட்ட அதுக்கான லெட்டரை போஸ்ட்மேன் குடுத்துட்டு போனாராம் “
என்று அவளிடம் கூற,
வேலையாளை அனுப்பி அந்தக் கடிதத்தை வாங்கி வர சொன்னார்.
அதைப் பார்த்ததும் மஹிமா ” ஹையா ! ஜாலி ! டேட் எப்போம்மா ? “
சுவர்ணலதா ” பத்தாம் தேதி. இன்னும் ஒரு வாரம் இருக்கு “
மஹிமா ” சூப்பர்மா.அந்த காலேஜ்ல சீட் கிடைச்சுட்டா நல்லா இருக்கும் “
சுவர்ணலதா ” உன் மார்க்குக்கு கண்டிப்பா கிடைக்கும் “
இவர்கள் கவுன்சிலிங் மற்றும் அதற்கு எடுத்துச் செல்லத் தேவையான சான்றிதழ்களைத் தேடி எடுத்து வைத்தனர்.
மாலை நேரம் ஆனதும் , கோவிலுக்கு கிளம்புவதற்காக தாய் எடுத்து வைத்திருந்த உடையை அணிந்து கொண்டு, அவருடன் கிளம்பிச் சென்றாள் மஹிமா.
– தொடரும்