Loading

வானம் – 11

பிரஷாந்தின் நகலின் மீது பார்வையை நகர்த்தாமல் இருந்தவளை கலைத்தது சரயுவின் அழைப்பு. அழைப்பை ஏற்றவள், “சொல்லு சரயு” என்றாள் ரேவதி.

“என்ன அண்ணியாரே ஒரே ரொமான்ஸ்ஸா!” என்றாள் கிண்டலாக.

“ஏன் டி, உனக்கு மட்டும் எப்படி இப்படி மூக்கு வேர்க்குது. உங்க அண்ணன் கூட அப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டாலும்!” என்றாலும் அவனின் அணைப்பை நினைத்தவளுக்கு கன்னக் கதுப்புகள் இளஞ்சிவப்பு நிறமேற, “அப்போ அங்க எதும் நடக்கலயா… வாய்ப்பில்லயே” என இவள் கன்னத்தில் கைவைத்து யோசிப்பதுபோல் பாவனை செய்ய, “எல்லாம் உனக்கு தெரிஞ்சும் ஏன் டி ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல?” என அன்று பிரஷாந்த் கேட்ட கேள்வியை இன்று ரேவதியும் கேட்டாள் சரயுவிடம்.

“அண்ணாகிட்ட சொன்னது தான் உனக்கும் அண்ணியாரே! என்னிக்கா இருந்தாலும் எனக்கு அண்ணி நீ தான். அத என் அம்மா இல்ல அந்த ஆண்டவனால கூட மாத்த முடியாதுனு நான் நம்பிக்கையோட இருக்கேன். ஆனா அந்த நம்பிக்கை இருக்க வேண்டிய உனக்குத் தான் அடிக்கடி காணாம போய்ருது. என்ன பண்றது, என் அண்ணி இவ்ளோ மக்கா இருப்பானு நான் கனவா கண்டேன்” என்றாள் சரயு.

சிறிது நேரம் மறுமுனையில் அமைதி நிலவ, “என்ன அண்ணியாரே, நாத்துனார்கிட்ட பேச கூச்சமா இருக்கா?” என அதற்கும் அவளை கிண்டல் செய்ய, “இல்ல சரயு, அத்தை அந்த ரம்யாவ பத்தி என்கிட்டயே விசாரிக்கும்போது…” என்றவள் அதற்குமேல் பேச முடியாமல் திணற,

“உன் நிலைமை எனக்கு புரியுது ரேவ். இந்த கிக்கு கூட இல்லாம கல்யாணம் நடந்தா நாளபின்ன என் மருமகப்புள்ளைக்கு என்ன கதைய சொல்றது! இதெல்லாம் ஒரு அட்வென்ச்சரா நினைச்சுக்கோ” என்றவள், “ஆமா அந்த ரம்யா யாரு ரேவ்?” என்ற கேள்வியில் பக்கென சிரித்து விட்டாள் ரேவதி.

“நீ சீரியஸ்ஸா கேட்கிறியா, இல்ல காமெடி பண்றியா டி… உண்மையாலுமே ரம்யாவ தெரியாதா?” என்றாள் ரேவதி.

“அட நான் மெய்யாலுமே தான் கேட்கிறேன். நம்ம கிளாஸ்ஸா அந்த பொண்ணு? அம்மா சொல்லும்போது ஆமா ஆமானு மண்டைய ஆட்டிட்டேன். அப்புறம் யோசிச்சு பாத்தா அந்த பொண்ணு முகமே ஞாபகம் வரல” என பரிதாபமாக கூற, “டென்த் படிக்கும்போது அவ நம்ம பக்கத்து கிளாஸ் தான் டி. அதான் உனக்கு ஞாபகம் இல்ல போல” என்றாள் ரேவதி.

“ஓ…” என்றவள், “சரி, அவங்கள பத்தி எதுக்கு இப்போ பேசணும். அதெல்லாம் பிரஷாந்த் பாத்துக்குவான்” என்றவள் சிறிது நேரம் தன் தோழியிடம் கதைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் சரயு.

“என்ன மேடம் உன் அண்ணிட்ட பேசுன போல” என்ற சம்யுக்தாவை பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது. ஏனோ சம்யுக்தாவிற்கு சரயு வேறு எந்த நண்பர்களிடம் நெருங்கிப் பழகினாலும் பிடிக்காது போக, அவளுடன் அடிக்கடி சண்டையிடுவாள்.

ரேவதியுடன் பேசினாலும் இப்படி தான். “மேடமுக்கு மூக்கு வேர்க்குது போல!” என புன்னகைத்தவளை முறைத்தவள், “அவ உன் அண்ணி… நாங்க யாரு, ஜஸ்ட் பிரண்ட். அவ்ளோ தான!” என சிறுபிள்ளைத் தனமாய் வினவியவளைக் கண்டு மேலும் புன்னகை மலர்ந்தது.

“அட லூசு. மத்த விசயங்கள்ள எவ்ளோ தெளிவா எனக்கு பாடம் எடுக்கிற. இதுல மட்டும் மேடமுக்கு மூக்கு வேர்த்துருது” என்றாலும் தன் தோழியின் பொறாமையை கண்டு புன்னகை மட்டும் மறைய மறுத்தது.

தோழியாய் இருக்கும் தன்னிடத்திலே இவள் இந்தளவு உரிமை எடுத்து கொள்ளும்போது, பிரஷாந்தை கட்டிக்கப் போகும் பெண் என ரம்யாவை பற்றி ரேவதியிடமே விசாரித்தது எந்தளவு அவளிற்கு காயத்தை உண்டு பண்ணிருக்கும் என யோசித்தவளுக்கு தன் தாயின் மேல் கோபம் எழுந்தது.

தன் அன்னையை பற்றி நன்கு அறிந்தவள் தான். அவருக்கு பிரஷாந்த்ம், சரயுவும் தான் உலகமே. எந்தவிதத்திலும் அவர் இவர்களுக்கு குறை வைத்ததில்லை. முத்துச்சாமி பெரும்பாலும் வேலை வேலை என சென்றுவிடுவதால் தங்கம்மாள் தான் இருவருக்கும் அன்னை, தந்தையாய் இருந்தது, இருப்பது. ஆனால் திருமண விசயத்தில் மட்டும் அவர் இப்படி செய்வது அவளுக்கு கோபத்தை உண்டாக்கினாலும் படக்கென அவர்மேல் கோபப்பட முடியவில்லை அவளால். அவளால் மட்டுமில்லை பிரஷாந்த்தால் கூட தனது அன்னையை மறுத்து பேச முடியவில்லை. ஆனால் அவரோ தனது எண்ணத்தில் மாற்றுக்கருத்து இல்லை என்பது போல் அடுத்தடுத்து செயல்படத் துவங்கி இருந்தார். ஆனால் காலம் இன்னும் இரண்டு மாதத்திற்கு அவரது செயல்களை தடைசெய்யும் வண்ணம் செய்தது பெண்வீட்டாரின் பதில் மூலம்.

மறுநாள் வீட்டிற்கு வந்த தரகரை முகமலர வரவேற்றார் தங்கம்மாள். “வாங்கண்ணா… என்ன சாப்டுறீங்க?” என வரவேற்பு பலமாக அமைய, அவரோ எதுவும் வேண்டாம் என மறுத்தவர் தான் கூற வந்த விசயத்தை எவ்வாறு ஆரம்பிப்பது என புரிபடாமல் அமர்ந்தார்.

“என்னண்ணா, பொண்ணு வீட்ல ஜாதகம் பாக்கிறதா சொன்னாங்களே பாத்தாங்களா… நேத்து கூட நாட்டாமை அண்ணன பாத்தேன். உங்க மூலமா பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கும்போது நானா போய் டக்குனு கேட்டா நல்லா இருக்காதேனு எதுவும் கேட்கல. என்ன சொன்னாங்க ண்ணா அவங்க” என எதிர்பார்ப்போடு வினவினார் தங்கம்மாள்.

“அவங்க ஜாதகம் பாத்தாங்களாம் தங்கம். ஜாதகம் பொருந்தி வந்துருக்காம். ஆனா பொண்ணுக்கு ஏதோ தோஷம் இருக்காம். அதுக்கு பரிகாரம் பண்ணிட்டு கல்யாண பேச்ச ஆரம்பிங்கனு அவங்க ஜோசியர் சொல்லிருப்பாரு போல” என்றவர் தயக்கத்தோடு தங்கம்மாளின் முகத்தை நோக்கினார்.

“அதுனால என்ன ண்ணா. தாராளமா அவங்க பண்ண வேண்டிய பரிகாரத்த பண்ணட்டுமே” என்றார் தங்கம்மாள்.

“அதுக்கு தான் மா அவங்க ரெண்டு மாசம் டைம் கேட்கிறாங்க. இந்த சம்பந்தம் அவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு. நம்ம பக்கத்தூரு, தெரிஞ்சவங்க, அதவிட நம்ம குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க அவங்களுக்கு ரொம்ப விருப்பம் தான். ஆனா அந்த பரிகாரத்த ஒரு மண்டலத்துக்கு பண்ணனும்னு சொல்லிருப்பாரு போல அவங்க ஜோசியர். அதுக்கு அப்புறம் கல்யாண பேச்ச எடுத்தா அந்த பொண்ணோட வாழ்க்கை அமோகமா இருக்கும்னு சொன்னாராம். ஒரு ரெண்டு மாசத்துக்கு உங்கனால காத்திருக்க முடியுமானு கேட்கிறாங்க. அவங்களே உங்கக்கிட்ட நேரடியா பேசறேனு சொன்னாங்க. நான்தான் முதல்ல உங்க அபிப்பிராயத்த கேட்டுட்டு சொல்றேனு சொல்லி இருக்கேன்” என்றார் தயக்கத்தோடு.

“ரெண்டு மாசமா!” என தங்கம்மாள் தயங்க, “ரெண்டு மாசம் தான மா. தெரிஞ்ச குடும்பம் வேற. வாக்கு சுத்தம், நம்மள மீறி எதுவும் நடந்துறாது. எதுக்கும் முத்தன் வந்தா அவன்கிட்டயும் கலந்து பேசிட்டு ஒரு முடிவா சொல்லுங்க” எனும்போதே முத்துச்சாமியும் அங்குவர அவரிடமும் இதனைப் பற்றி கூறினார் தரகர்.

“நமக்கு தெரிஞ்ச இடம். இதுல யோசிக்க என்ன இருக்கு தங்கம், சரினு சொல்லு. இல்ல தம்பிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கிடலாமா?” என்க அவரோ பதறிப் போய், “அவன்கிட்ட எதுக்குங்க இதப்பத்தி கேட்டுக்கிட்டு. நம்ம என்ன சொல்றமோ அத அவன் மறுக்காம கேட்கப் போறான்” என்றவர் தரகரிடம், “அவங்ககிட்ட சரினு சொல்லிருங்கண்ணா. நான் நாளைக்கு அவங்க வீட்டுக்கே போய் இதப்பத்தி பேசிடறேன்” என்றார் தங்கம்மாள்.

தரகரும் தான் வந்த வேலை முடிந்ததால் அங்கிருந்து கிளம்ப, “ஏன் தங்கம், இந்த விசயமா தம்பிகிட்ட பேசறேனு சொன்னியே பேசுனியா? ஏன்னா நாளபின்ன வாழப் போறவங்க அவங்க, அவங்களுக்கு சம்மதம் வேணும்ல” என்றார் முத்துச்சாமி.

“அவன்கிட்ட பேசாமலா நான் முடிவு எடுக்கப் போறேன்” என்றார் தங்கம்மாள். “இல்ல, என்னதான் நம்ம உன் அண்ணன் வீட்ல பொண்ணு எடுக்க முடியாதுனாலும் சின்னஞ்சிறுங்க அதுங்க மனசுல எதும் அந்த ஆச இருந்துச்சுனா… எதுவா இருந்தாலும் பொறுமையா பேசி புரிய வச்சுட்டு நம்ம மேல பேசலாம்ல. அதான் கேட்டேன்” என்றார் முத்துச்சாமி. அவருக்கு பிரஷாந்த் – ரேவதியின் காதல் விவகாரம் தெரியாததால் இவ்வாறு வினவ,

“அத்தை மவன், மாமன் புள்ளனு அவங்க சகஜமா பழகுறாங்க. அதப் போய் பெருசா எடுத்துக்கிட முடியுமாங்க. அண்ணனுக்கே புரிஞ்சனால தான இதப்பத்தி எதும் பேசாம பொண்ணு வீட்ல பேசலாம்னு சொன்னாரு. மதனி கூட சம்மதம் சொல்லிட்டாங்க. அப்புறம் என்னங்க உங்களுக்கு இம்புட்டு சந்தேகம்!” என்றார் தங்கம்மாள்.

“அதெல்லாம் சரிதான் தங்கம். இந்த காலத்து புள்ளைங்க மனசு தான் யாருக்கும் புரிய மாட்டேங்கிதே. அந்த காலம் மாதிரி இருந்தா பரவால்ல. சரி, உன்னோட தான மவனும், மவளும் கொஞ்சிக்கிட்டு கெடக்கறாங்க. அதான் கேட்டுப்புட்டேன். வேற ஒன்னும் இல்ல” என்றார் முத்துச்சாமி. என்னதான் அவர் பெற்ற புள்ளைகளோடு அதிகம் ஒட்டி உறவாடாவிட்டாலும் அவர்களின் மனதையும் அறிய முற்பட்டார். அவர்களோடு அவரும் நேரம் செலவழிக்க நினைத்தாலும் தந்தை என்ற ஸ்தானம் இருப்பதால் அவர்களுக்கு தேவையானதை சம்பாதிக்க ஓடவே நேரம் சரியாக இருந்ததால் சிறுவயதில் இருந்தே ஒரு விலகல் இயல்பாகவே விழுந்துவிட்டது.

அவர்கள் வளர்ந்தபின் அவர்மீதுள்ள மரியாதையால் மேலும் விலகல் அதிகரிக்கத் தான் செய்தது.

இரண்டு மாதம் தற்காலிகமாக திருமண பேச்சு தடைபட, பிரஷாந்திற்கு நிம்மதியாக இருந்தது. சரயுவோ, “அம்மாவோட மௌனம் ஆபத்தானது ண்ணா. எதுக்கும் நம்ம கவனமா இருக்கிறது நல்லது” என்றிருக்க தற்போதெல்லாம் தன் அன்னையின் செயல்பாடுகளை கவனிக்கத் தொடங்கி இருந்தான் பிரஷாந்த்.

பிரஷாந்த் – ரேவதியின் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு எட்டியிருக்க இங்கு சித்தார்த்தின் நிலையோ மிகவும் மோசமாக சென்றுக் கொண்டிருந்தது.

இதழிகா வழக்கம்போல் கடைக்கு வந்துவிட சரயுவிற்கும் அவளிற்குமான உறவு இன்னும் பலமாக ஆரம்பித்தது. எதற்கெடுத்தாலும், “சரயு இத சொன்னா ப்பா, சரயு அத சொன்னா ப்பா” என தன் தந்தையிடமும் சரயு புராணமே பாடினாள் இதழிகா.

இவர்களின் உறவை மேலும் தொடரவிடக்கூடாது என எண்ணியவனுக்கு தற்போது உள்ள சூழ்நிலையைக் கண்டு அதற்கு வாய்ப்பே இல்லை எனத் தோன்றியது.

அன்றும் வழக்கம்போல் கடைக்கு வந்திருந்தாள் இதழிகா. “இதழி மா உங்களுக்கு பிடிச்ச சாக்கோ பார் ஐஸ்கிரீம் எடுத்து வச்சுருக்கேன் அப்பா. இந்தாங்க” என அவன் ஆசையாய் நீட்ட அவளோ வேகமாய் வேண்டாம் என மறுத்தாள்.

“ஏன் இதழி மா வேண்டாம்?” என்றான் சித்தார்த். அவளோ, “ஒன் வீக்க்கு ஒன் டைம் தான் ஐஸ்கிரீம் சாப்பிடணும்னு சரயு சொல்லிருக்கா ப்பா. இந்த வீக் கோட்டா ஆல்ரெடி முடிஞ்சுருச்சு. நேத்து தாத்தா வாங்கி கொடுத்தாரு, அதுனால இத இப்போ என்னால சாப்ட முடியாதே” என்றாள் உதட்டை பிதுக்கிய வண்ணம்.

அவனே எத்தனையோ முறை அவள் அதிகமாக ஐஸ்கிரீம் உண்பதை வேண்டாம் என கூறியும் நிறுத்தாதவள் இன்று சரயு கூறியதை கேட்டு வேண்டாம் என மறுப்பதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தாலும் ஒருபக்கம் தன் மகள் தன்னை விட சரயுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏனோ சற்று பொறாமையை ஏற்படுத்தியது.

சரயு எப்படி இதற்கு சம்மதிக்க வைத்தாள் என தெரிந்துகொள்ளும் ஆவலில், “ஆமா அது என்ன கோட்டா… ஏன் வாரத்துக்கு ஒரு தடவ மட்டும் சாப்பிடணும் இதழி மா?” என்றான் அவளது கன்னத்தை தன் கைகளால் மென்மையாக வருடியவாறு.

“தினமும் ஐஸ்கிரீம் சாப்ட்டா போலீஸ் ஆக முடியாதாமே ப்பா. சரயு தான் சொன்னா, அதான் இனி வாரத்துக்கு ஒரு தடவ மட்டும்னு பெர்மிசன் கேட்டேன். அதுவும் நான் ஸ்கூல் போற வரைக்கும் தானாம். அப்புறம் மாசத்துக்கு ஒன்னு தான்னு சொல்லிட்டா. இல்லனா என்னால போலீஸ் ஆக முடியாதாம்” என அவள் உதட்டைப் பிதுக்க, தன் மகளின் போலிஸ் கனவை அறிந்து அதனை வைத்து சாமர்த்தியமாய் காய் நகர்த்தியவளை மனதிற்குள் பாராட்டிக் கொண்டவன் ஏனோ அவளிடம் இதுவரை நேரில் பேச முற்படவில்லை.

கடை சம்பந்தப்பட்ட விசயமாக இருந்தாலும் கூட அதனை சம்யுக்தாவிடம் கூறுவானே தவிர தப்பித்தவறி கூட சரயுவின் பக்கம் பார்வை நகர்ந்தது இல்லை. அது ஏன் என அவனுக்கும் புரிபடவில்லை. அவளும் ஆராய முற்படவில்லை. தனக்கும் இதழிகாவிற்கும் உள்ள உறவு சுமூகமாக சென்றததால் மற்றவை எதனையும் யோசிக்க கூட நேரமில்லாதது போல் கடந்து சென்றாள் சரயு.

இவர்கள் இருவரின் இடையே மாட்டிக்கொண்ட பாவப்பட்ட ஜீவன் சம்யுக்தா தான்.

அப்பொழுது கேட்ட “கியூட்டி” என்ற அழைப்பில் அப்பாவும் மகளும் ஒருசேர ஒலி வந்த திசையை நோக்கினர்.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
17
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்