கீதன் எழுந்து அந்த அறையின் பலகணிக்குச் சென்றான். சுந்தரி அலறியடித்து வந்தார்.
“மாப்பிள்ளை.. என்ன செய்யப் போறீங்க. அவதான் கிறுக்கி மாதிரி ஏதோ பேசுறா.. நீங்க செத்துப் போறேன்னு சொல்றீங்க” என்று பதற, “பதறாதீங்க அத்தை. அவ என்னை நம்பணும்.. அதுதான் முக்கியம் இப்போ. ஒரு சின்ன நாடகம்.. அவ அப்பாவும் நம்பலைனா, வேற விதமா பேசிப் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு பலகணியின் திட்டுமேல் ஏறி அமர்ந்தான்.
“நிரண்யா.. இப்படியே கீழ குதிக்கவா?”
“குதி.. அப்போதான் நம்புவேன்” என்று அவனை அதிர வைத்தாள். அவனுக்கு சற்று பயமாக இருந்தது. அவளைத் தவறாக கையாள்கிறோமோ என்று.
“ஆமா.. நான் குதிச்சுட்டா செத்துறுவேன். அப்போ யாரை நம்புவ. நான் இருக்க மாட்டேனே” என்று அவன் வினவ, அவள் சிந்திக்கலானாள்.
“எனக்கு நீ வேண்டாம். தீபன் போதும். எனக்கு அவர் நல்லது மட்டும்தான் நினைப்பார். நீ செத்துப் போ” என்று அவனைப் பிடித்து தள்ள முயற்சி செய்ய, அவளைத் தடுத்து நிறுத்தினார் சுந்தரி. மிகத் துரிதமாக செயல்பட்டு அவளை கட்டிலிலும் கட்டினார். அவரையும் அடித்து விட்டாள் அவள்.
“என்னைக் கட்டி வச்சு கொல்லப் பாக்குறீங்களா ரெண்டு பேரும். சும்மா விடமாட்டேன்” என்று கயிற்றை இழுத்தாள்.
கீதன் வேகமாக சென்று அவளுக்கான மாத்திரையை எடுத்து வந்தான். பின் அந்த மாத்திரையை அவளுக்கு புகட்டி அவளை உறங்க வைப்பதற்குள் ஒரு வழியாகிவிட்டனர். அவள் களைத்து உறங்கிவிட்டாள்.
இம்மாதிரி நிலையில் அவர்களின் மூளையில் சுரக்கும் டோப்பமின் அதிகமாக சுரக்கும். அதனால் அவர்களுக்கு அதீத ஆற்றல் பிறக்கும். அதன் விளைவே இப்படி நடந்துகொள்வது என்பது மருத்துவம். ஆனால் விஞ்ஞானம் அறியாத அஞ்ஞானமும் இருக்கிறதே. பேய் பிசாசு என்று உலகை பிரிந்து சென்ற ஆத்மாவிற்கு ஏகப்பட்ட பெயர்கள்.
சுந்தரி தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டார். இனி அவளை இங்கு விட்டு வைப்பது நல்லதல்ல என்று அவர்களுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.
“மாப்பிள்ளை.. அவ தூங்கும்போதே நான் கூட்டிட்டுப் போறேன்” என்று கூற, அவன் மறுத்துவிட்டான்.
“ஒரு நிமிஷம் இருங்கத்தை.. நான் டாக்டர்கிட்ட கேட்கணும்..” என்று கூறி நடந்தவைகளை மனநலமருத்துவரிடம் கூறினான்.
“நீங்க அவுங்களை கூட்டிட்டு எங்கையாச்சும் போயிட்டு வாங்க.. அது நல்லதுதான். சூழ்நிலை மாற்றம் நல்லாவே உதவும் அவுங்க மனநிலையில் மாற்றம் கொண்டு வர” என்று அவரும் கூற, நிரண்யாவை வேறு இடம் அழைத்துப் போவது என்று முடிவு செய்தான் கீதன்.
“அத்தை.. நான் அவளை கொடைக்கானல் அழைச்சுட்டுப் போறேன். ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு கூட்டிட்டு வர்றேன்” என்றான்.
பொள்ளாச்சி நிரண்யாவின் ஊர் என்பதால் கொடைக்கானல் அருகில் தான் இருக்கிறது. அதனால் நிரண்யாவின் தாயும் சரியென்று கூறினார்.
இருவரும் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்ய, நற்பவி வந்து நின்றாள்.
“என்ன மேடம்.. ஏதாவது தெரியனுமா..” கீதன்.
“உங்களைத் தொந்தரவு செய்ய மன்னிக்கணும். ஆனா எதிர் வீட்டை நிரண்யா எப்படி திறந்தாங்கன்னு நாம நிச்சயம் தெரிஞ்சுக்கணும்” என்று கூற, வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கூறினான் கீதன்.
“அதுக்கு அவசியம் இல்லை. ஹவுஸ் ஓனர் பூட்டிட்டு தான் போனதா சொல்றாங்க. எப்போ யார் திறந்தா. எதுக்காக திறந்தாங்க. இதெல்லாம் தெரியணும். யாராவது தப்பான காரியத்துக்கு பயன்படுத்திட்டா ரொம்ப ரிஸ்க்” என்று கூற, அவன் அவளை யோசனையாகப் பார்த்தான்.
“நீங்க சொல்றது சரி மேடம். ஆனா அதுக்கு நான் என்ன செய்யணும்?”
“உங்க மனைவிகிட்ட விசாரிக்கணும். ஏனா அவுங்க தான் இங்க தனியா இருந்திருக்காங்க. சி. சி. டீவி ஃபூட்டேஜ் செக் பண்ணதுல, குழப்பம் மட்டுமே மிச்சம். உங்க மனைவியின் இந்த நிலைக்கு ஒரு வகையில் அந்த வீடு காரணம். அதனால் அங்க ஏதோ நடந்திருக்குன்னு நான் கெஸ் பண்றேன். சம்திங் ஈஸ் ஃபிஷ்ஷி. என்னால இந்த விஷயத்தை ஏத்துக்க முடியலை. அந்த வீட்டில் ஏதோ தப்பா இருக்கு.”
“சாரி டு ஸே திஸ் மிஸ் நற்பவி. அவளை இப்போ நீங்க விசாரணை செய்ய முடியாது. உங்க விசாரணைக்கு பதில் சொல்ற நிலையில் அவளும் இல்லை” என்று கூற, நற்பவி சற்று கோபமுற்றாள்.
“இப்போ ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க. உங்க மனைவியோட லிஃப்டில் வந்த பொண்ணு இந்த அப்பார்ட்மெண்ட் வாசி இல்லை. உள்ள வந்தவுங்க திரும்பி போன அடையாளமும் சீ.சீ.டீவி ஃபூட்டேஜ்ல இல்லை” என்று அடுத்த இடியை அலுங்காமல் தலையில் இறக்கினாள்.
அவன் அதிர்ந்து நின்றான்.
“இப்பவும் உங்க பதிலில் மாற்றம் இல்லையா?”
“இல்லை” என்று வெட்டிவிட்டான் கீதன்.
“எல்லாரும் இப்படி விலகிப் போனா என்ன அர்த்தம் மிஸ்டர் கீதன்.”
“இல்ல மேடம்.. நான் விலகி போக நினைக்கல. நீங்க குற்றவாளியைக் தேடிக் கண்டுபிடிக்கிறது உங்களுக்கு முக்கியமா இருந்தா எனக்கு என்னோட மனைவி ரொம்பவே முக்கியம்.”
“உங்களை எப்படி இருக்க வைக்கிறதுன்னு எனக்குத் தெரியும். உங்ககிட்ட இதை ரிக்வெஸ்ட் பண்ணல. இதை நீங்க செய்ங்கன்னு சொல்லிட்டுப் போக வந்தேன். உங்களுக்கு அதிகாரபூர்வமா நோட்டீஸ் அனுப்பிட்டு, அப்புறம் வந்து பார்க்குறேன்” என்று கூற, அதிர்ந்தான் கீதன்.
அதுவரை அவளை வெளியே நிறுத்தி வைத்துப் பேசிக்கொண்டிருந்தவன், உள்ளே அழைத்தான். அவனை சிந்தனையுடன் பார்த்தவள், உள்ளே சென்று அமர்ந்தாள்.
“நிரண்யா எங்க?” என்று சுற்றி சுற்றிப் பார்த்தாள்.
“அவ தூங்குறா..” என்று கூற உள்ளறையில் எட்டிப் பார்த்தாள் நற்பவி.
“இப்போ சொல்லுங்க..”
“மேடம்.. அவ இருக்க நிலைமை உங்களுக்கு தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்க” என்று கூற, புருவம் நெறித்து அவனைப் பார்த்தாள்.
“என்ன நிலைமை.. அவுங்க மனநிலை பாதிக்கப்பட்டிருக்காங்கன்னா?”
“இப்போ ரொம்பவே மோசமா இருக்கா. பாதி நேரம் அவ அவளாகவே இல்லை” என்று சற்று முன் அவளுடன் உரையாடும் பொழுது பதிவு செய்ததை அவளுக்கு ஓடவிட்டு காண்பிக்க, நற்பவி அதை உன்னிப்பாக கேட்டாள்.
“இந்த நிலையில் உள்ள ஒரு நோயாளியை நீங்க எப்படி விசாரணை செய்ய முடியும்.”
“இந்த நிலை உண்மைதானா..? நடிப்பாக் கூட இருக்கலாம்” என்று அவனை அசர வைத்தாள் நற்பவி.
“அவ ஏன் மேடம் நடிக்கணும். இரக்கமே இல்லாம பேசாதீங்க” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினான் கீதன்.
“ஒருவேளை அந்த வீட்டில் நடந்த தவறில் உங்க மனைவிக்கும் பங்கு இருக்கலாம். இல்லை அதை வெளியே சொல்லாமல் தப்பிக்க இப்படி நாடகமாடலாம் இல்லையா?” என்று அவள் வினவ, கீதன் அதிர்ந்து விட்டான்.
“மேடம்.. அவ அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது. நீங்க ஏன் அவளைக் குற்றவாளியா பார்க்குறீங்க? அப்படி என்னதான் தப்பு அந்த வீட்டில் நடந்திருக்கு. அதுக்கும் என் மனைவிக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்.”
“ஒரு பொண்ணைக் காணும். அந்த பொண்ணோட போன்ல கடைசியா பதிவான சிக்னல் எதிர்வீட்டிலிருந்துதான். பத்து நாள் ஆகுது காணாம போய்” என்று அடுத்த அதிர்ச்சியைக் கடைப்பரப்ப, கீதனுக்கு செத்துவிடலாம் என்று தோன்றியது.
“அதுக்கும் என் மனைவிக்கும் நிச்சயம் எந்தவித தொடர்பும் இருக்காது” என்றான் உறுதியாக.
“சட்டத்திற்கு முன்னாடி அனைவரும் ஒன்றுதான் கீதன். அவுங்க குற்றவாளியா இல்லாம இருக்குட்டும். அதைத்தான் நானும் விரும்புறேன். அவுங்க உண்மையா மனநலம் சரியில்லாதவுங்கன்னு மெடிக்கல் செர்டிஃபிக்கேட் வாங்கிக்கோங்க. நாளைக்கு ஏதாவது பிரச்சினை வந்தாலும் அது அவுங்களைப் பாதிக்காது. ஐ அம் ஹெல்ப்பிங் யூ அவுட். புரிஞ்சிக்க முயற்சி செய்ங்க. அதே சமயம் அவுங்க ஏதாவது தகவல் சொன்னா இந்த வழக்கை அணுக எங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று கூற, அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.
எதனுள்ளோ சென்று சிக்கிய உணர்வு. ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று சிந்தனை செய்யவும் வலு இல்லை.
“அவளை எப்படி விசாரிப்பீங்க?”
“ம்ம்ம்.. நீங்க சொல்றது உண்மைதான். இப்போதான் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன். அவுங்களை ஹிப்னாஸிஸ் பண்ணிக் கேட்டுப் பார்க்கலாம். அவுங்க ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் எல்லாம் தெரிஞ்சுக்கலாம்னு டாக்டர் சொன்னாங்க” என்று கூறவும், அவள் தயாராய் வந்திருப்பது தெரிய வந்தது.
என்ன பாவம் செய்தானோ, இப்படி அடுக்கடுக்காக பிரச்சினைகள் வருகிறது என்று நினைத்தவன், நற்பவியிடம் ஹிப்னாஸிஸ் செய்ய எந்த மருத்துவமனை வர வேண்டும் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டான்.
நிரண்யாவின் தாயிடம் நிகழ்ந்தவைகளை விளக்கி, இன்னும் சில தினங்கள் கழித்து ஊருக்குச் செல்லலாம் என்று கூற, அவர் தயங்கி தயங்கி ஒப்புக் கொண்டார். அவருக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எதிர் வீட்டில் ஏதோ தீய சக்தி இருக்கிறது. அது தன் மகளை ஆட்டுவிக்கிறது என்று தீர்க்கமாக நம்பினார்.
பின் கட்டிய கனவனை விடுத்து வேறு ஒருவனின் பெயரை அவள் ஜபித்துக் கொண்டிருக்கிறாளே. ஒருவகையில் மாப்பிள்ளையை நினைத்து பெருமிதமாகவும் இருந்தது. தன் மகளுக்கு உறுதுணையாக இருந்து, அவளுக்காக இவ்வளவும் செய்கிறாரே என்று. இந்நேரம் அவனுடைய நிலையில் வேறு எவரேனும் இருந்தால் நிரண்யாவை வேண்டாம் என்று உதறித் தள்ளியிருப்பார்கள்.
இந்த அன்பினை தன் மகளுக்கு அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே என்ற ஆதங்கம் வேறு. அதனால் எவ்வுளவு சீக்கிரம் அவளை ஊருக்கு அழைத்துச் சென்று குணப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குணப்படுத்த வேண்டும் என்று முடிவுகட்டினார்.
அவளின் நிலைக்கு, இங்கு அளிக்கும் சிகிச்சைகள் போதாது என்பதே அவர் எண்ணம்.
திகையாதே மனமே!