Loading

நிரண்யா மயக்கத்தில் இருந்தாள். நற்பவியும் சிவாவும் விடைபெற்றுக் கிளம்பினர்.

 

கதவுவரை சென்ற நற்பவி மீண்டும் கீதனிடம் திரும்பி வந்தாள். 

 

“கீதன், இது எல்லாம் சரி. ஆனா நடந்த விஷயத்தில் ஒரே ஒரு ஓட்டை இருக்கு. பூட்டியிருந்த வீடு எப்படி திறந்தது. அந்த வீட்டோட ஓனர்கிட்ட பேசுங்க. கேட்டுட்டு அந்த தகவலை எனக்கு கொஞ்சம் சொல்லுங்க. அதுல ஏதோ பெரிய மர்மம் இருக்கு. நிரண்யாகிட்ட லிஃப்ட்ல யாரோ பேசினாங்களே. அவுங்களையும் விசாரிக்கணும்” என்று கூறிவிட்டு சென்றாள். 

 

அதைக் கேட்டதும் அவனுக்கு திக்கென்றிருந்தது. இது என்ன அடுத்த குழப்பம் என்று. 

 

நான்காவது மாடியில் நிரண்யா உரையாடிய பெண்மணியை சென்று சந்தித்தான் கீதன். அவனுடன் நிரண்யாவின் தாயார் சுந்தரியும் வந்திருந்தார்‌. அந்த பெண்மணி அவர்கள் இருவரையும் வீட்டிற்குள் அழைத்து உரையாடினார்.

 

“உங்களை தொந்தரவு செய்ய மன்னிக்கணும். ஆனா எனக்கு உங்க உதவி ரொம்பவே தேவை” என்று கூறி நடந்த அனைத்தையும் விளக்கினான் அந்த பெண்மணிக்கு.

 

“நிரண்யா ஏன் உங்களைப் பார்க்க வந்தா?” என்று கீதன் வினவ, “காய் வாங்கும்போது அவுங்களைப் பார்த்தேன். புதுசா இருந்தாங்க. சின்னதா பரஸ்பர அறிமுகம். என்னோட வீட்டுக்குக் கூப்பிட்டேன். அவுங்களும் வந்தாங்க” என்று கூறினார்.

 

“செத்துப் போன அந்த பெண்ணைப் பத்தி ஏதாவது சொன்னீங்களா?”

 

“ஆமா.. அவுங்க எங்கிட்ட கேட்டாங்க. ஏன் ஆறாவது மாடில நிறைய வீடு காலியா இருக்குன்னு. அதான் நடந்த விவரத்தைச்‌ சொன்னேன். அது ஒரு வாரம் இருக்கும். அதுக்கு அப்புறம் ஒருநாள் போன் பண்ணி நண்டு எப்படி செய்யணும்னு கேட்டாங்க” என்று‌ கூற, உண்மையில் கீதனும், நிரண்யாவின் அன்னை சுந்தரியும் திடுக்கிட்டனர்.

 

அவரிடம் விடைபெற்று வீடு வந்தனர். கீதன் மருத்துவர் கூறியதைக் தீவிரமாக நம்பினான். ஆனால் சுந்தரிக்கு அதில் நம்பிக்கை இல்லை. தன் மகளைப் பேய் பிடித்துவிட்டதாகவே நம்பினார். அவள்‌ நண்டெல்லாம் ஒருநாளும் உண்டதில்லை. அது பிடிக்காது என்றும் கூறலாம். 

 

“தம்பி.. எனக்கென்னவோ நிரண்யாவுக்கு ஏதாவது மந்திரிச்சு விடலாம். இவுங்க சொல்ற வைத்தியம்லாம் எதுவும் கேட்காது” என்று கூறினார்.

 

“இல்ல அத்தை.. அதெல்லாம் வேண்டாம். பேய்ங்கிற ஒண்ணு இல்ல. அதுவே ஒரு கண்துடைப்பு.”

 

“ஐயோ… அப்படிலாம் சொல்லாதீங்க மாப்பிள்ளை. இங்க என்னோட பொண்ணு இருக்கக் கூடாது. நீங்க வேற வீடு பாருங்க. நான் அதுவரைக்கும் அவளை என்னோட கூட்டிட்டுப் போறேன்” என்று பிடிவாதம் பிடித்தார்‌ நிரண்யாவின் தாய் சுந்தரி.

 

கீதனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிவாவும் அவளை அங்கு அனுப்பி கைக்கும்படி கூற, அரை மனதாக சம்மதித்தான். இருவரும் நிரண்யாவிடம் கூறி, அவளைக் கிளம்பச் சொல்லலாம் என்று உள்ளே செல்ல அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

 

நிரண்யா இருந்த அறையின் கதவைப் பாதி திறக்க, உள்ளேயிருந்து அவள் பேசுவது கேட்டது.

 

“பொண்ணாவே பொறக்கக் கூடாது. இந்த கல்யாணம் எதுக்கு. பெண்களை எல்லாருமே போகப் பொருளா பாக்குறாங்க. அழிக்கணும்… அந்த‌ மாதிரி உள்ள எல்லாரையும் அழிக்கணும். செத்துப் போங்கடா… எல்லாரும் செத்துப் போங்க. நான் வருவேன்.. உங்க எல்லாரையும் கொல்ல நான் வருவேன்” என்று எங்கோ பார்த்து கோபமாக உரையாடினாள். 

 

தலைமுடியை பிய்த்து எரிந்தாள். வலி தாளாமல் அழுதாள். நெற்றியில் அடித்துக்கொண்டு அழுதாள். கீதன் அவசரமாக அவள் அருகில் சென்றான்.

 

“நிரண்யா..” என்று‌ அவள் கைகளைப் பிடித்துத் தடுக்க, அவள் அவனை உதறித் தள்ளினாள். 

 

“யாருடா நீ.. என் பக்கத்தில் வர வேலை வச்சுக்கிட்ட நான் மனுசியா இருக்க மாட்டேன். பொம்மைக்கு சேலைக் கட்டிவிட்டாலும் அலையிற கும்பல்தானே நீங்க எல்லாம்” என்று அருகில் இருந்த பொருளை எடுத்து அவனைத் தாக்க முயல, அவளின் அன்னை வந்து அவளைத் தடுத்தார். கீதன் எழுந்து நிற்கவும் உதவி செய்தார். 

 

“அம்மா.. நீ வா இந்த பக்கம்.. அவன் பக்கத்தில் போகாத. இந்த உலகத்தில் ஆண் இனமே இருக்கக் கூடாது.‌ மொத்தமா அழிக்கணும். என் மனசோட அடி ஆழத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிச்சிருக்கேன். நிறைவேத்தியே தீருவேன். இனிமே என்னை பயமுறுத்துற வேலையெல்லாம் வேண்டாம். எங்கிட்ட பேசிப்பேசி கொன்னுடலாம்னு நினைக்கிறியா. எனக்கு என்னோட தீபன் இருக்காரு. நீ‌ வேண்டாம்” என்று கூறி அருகில் இருந்த பொருளையெல்லாம் அவன் மீது தூக்கி எறிந்தாள். 

 

திகைத்து நின்றிருந்தான் கீதன். சற்று நேரம்தான். பின் மருத்துவர் கூறியது மனதில் வந்து போனது.

 

“நிரண்யா..” என்று அவன் மீண்டும் அருகில் செல்ல, அவனை அடித்தாள் அவள். 

 

“ஐயோ… இப்படி புரியாம செய்றாளே.. மாப்பிள்ளை.. நீங்க வெளில போங்க. இவளைக் கொஞ்ச நேரம் அடைச்சு வச்சாதான் சரியா வரும். நான் கட்டாயம் கூட்டிட்டுப் போறேன். நீங்க பாக்குற வைத்தியம் எல்லாம் சரியா வராது. தீபன்னு யாரோ ஒருத்தன் பேரை சொல்றாளே.. நான் என்ன செய்வேன்” என்று அழுதார் அவர்.

 

“அத்தை.. நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவளை நான் பார்த்துக்கிறேன்” என்று கூறியவன், “நிரண்யா.. ஏன் தீபனை மட்டும் உன்னோட கூட்டுச் சேர்த்துக்கிற. நானும் உங்கூட இருப்பேன். உனக்கு என்ன இப்போ.. இந்த உலகத்தில் இருக்க ஆண்கள் எல்லாரையும் அழிக்கணும். அவ்ளோதானே. அதை என்னால செய்ய முடியும்.. நீ என்னையும் உன்கூட சேர்த்துக்கோ” என்று கீதன் கூற, அவனைத் திகைப்புடன் நோக்கினார் சுந்தரி.

 

“இல்ல.. நான் உன்னை நம்பமாட்டேன்..”

 

“இங்க பாரு.. உன் தலையில் காயம்.. உன்னை நீயே காயப்படுத்திக்கிற. அப்புறம் எப்படி நீ‌ நினைச்சதை சாதிக்க முடியும்” என்று கீதன் வினவ, அவள் திகைப்புடன் அவைனப் பார்த்தாள்.

 

“நான் என்ன நினைச்சேன்..”

 

“போச்சு.. போ.. அதுவே உனக்கு மறந்து போச்சா? அப்போ அதை ஞாபகப்படுத்த ஒருத்தர் வேண்டாமா.. ” என்று அவன் வினவ, அவள் திருதிருவென விழித்தாள்.

 

“பாத்தியா.. உனக்கு ஞாபகம் வரலை.. அப்போ என்னையும் உன்னோட ஃப்ரெண்டா ஏத்துக்கோ. நான் உனக்கு எல்லாம் சொல்றேன்..” என்றவனை முறைத்தாள் அவள்.

 

“அதெல்லாம் முடியாது. தீபன் சொன்னது சரிதான். இப்படி பேசி யாராவது உன்னை ஏமாத்துவாங்க‌. நீ ஏமாறக் கூடாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டான். நான் யாரையும் நம்ப மாட்டேன்.”

 

“யார் அந்த தீபன். நான் அவன்கிட்ட கேட்கவா.. அப்போ என்னை நம்புவியா?”

 

“அவன் உங்கிட்ட பேசமாட்டான். என்னோட மட்டும் தான் பேசுவான்” என்றாள் அழுத்தமாக.

 

அவ்வளவு நேரம் கத்தி, தன்னைக் காயப்படுத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்த நிரண்யா அவனுடன் உரையாடியதே அவனுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. ஆனால் அவள் அவனை நம்பவில்லை என்பதே மனதின் சுவரில் அமிலம் உற்றியதுபோல் வலியும் எரிச்சலும் உண்டானது. அவளுடன் பேசியது அனைத்தையும் தன்னுடைய அலேபேசியில் பதிவு செய்தான்.

 

அவள் அவளுடைய சேலையின் முந்தியைப் பிடித்து முறுக்கிக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாக குளிக்கவில்லை. உணவு உண்ணவில்லை. பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை.

 

“சரி.. நிரண்யா.. குளிச்சிட்டு வா.. சாப்பிட்டு தீபனைப் பார்க்கப் போகலாம்..” என்று கீதன் கூற, “இல்ல நான் குளிக்க மாட்டேன்” என்று அடம் பிடித்தாள். 

 

இந்த வகையான மனநோய் தாக்கியிருக்கும் சமயத்தில் நோயாளி சுயசுத்தம் பேணமாட்டார். மூளையில் பலதரப்பட்ட கருத்துக்கள் உலா வர, அதை அப்படியே தனியே உரையாடுவார்கள். அவர்களிடம் நம்பிக்கை வர வைப்பதும் கடினம். அவர்களுக்குள் கேட்கும் குரல் என்ன கட்டளையிடுகிறதோ அதை மட்டுமே செய்வார்கள் என்று இணையத்தில் படித்த ஞாபகம்.

 

அவளுக்கு எவ்வளோ புரிய வைக்க முனைந்தும் கீதனால் எதுவும் செய்ய இயலவில்லை. நிரண்யாவின் தாய் சுந்தரி மகளின் நிலைகண்டு தவித்துப் போனார். பைத்தியக்காரி போல் மாறிவிட்டாளே. இனி என்ன செய்து அவளை மீட்டெடுப்பது என்று புரியாமல் அழுதார்.

 

“நிரண்யா.. நான் உண்மையைதான் சொல்றேன். உங்கூட தீபன் பேசுற மாதிரி என் கூடவும் பேசுவாரு. அவரை நீ பாத்திருக்கியா?”

 

“இல்லை.. ஆனா சீக்கிரம் பார்ப்பேன்.”

 

“அதான் நான் கூட்டிட்டு போறேன்னு சொல்றேன். கேட்காம அடம் பிடிச்சா என்ன செய்றது.”

 

“நீ பொய் சொல்ற.”

 

“இப்போ என்ன செஞ்சா நீ நம்புவ சொல்லு..”

 

“செத்துப் போ.. நான் நம்புறேன்..” என்று கூற, கீதனும் சுந்தரியும் அதிர்ந்தனர்.

 

“பாத்தியா.. நீ‌ யோசிக்கிற.. நான் உன்னை நம்ப மாட்டேன்” என்று முறுக்கிக் கொண்டாள். 

 

“இப்போ என்ன..‌ நான் சாகணும்.. அவ்ளோ தானே.. நான் செத்தா நீ‌ என்னை நம்புவியா?” என்றே அவன் வினவ, அவள் தலையாட்டினாள். 

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்