Loading

01

இந்திர நீலமொத்து இருண்ட குஞ்சியும்..
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும் சுந்தர மணிவரைத் தோளுமே அலமுந்தி அம்முறுவல் என்னை உண்டதே…

ஶ்ரீராம பிரானை கன்னிமாடத்திலிருந்த சீதா பிராட்டி கண்டு மையல் கொண்ட தருணத்தை அழகாய் கவி வடிவினில் கொண்ட கம்பரின் பாடலை இனிய கீதமொன்று தன் மெல்லிசையால் பாடிக் கொண்டிருந்தது.

“ம்மா…” என வீடே அதிரும் அளவு கத்திக் கொண்டிருந்தாள் நறுமுகை.

“இப்போ எதுக்கு டி வீடே இடிஞ்சு விழற அளவு கத்திக்கிட்டு கெடக்க” என்றவாறே கையில் ஒரு கரண்டியுடன்  அவர்களின் அறைக்கு வந்தார் பூங்கோதை.

கத்தியவளோ போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கோழி குஞ்சாய் உள்ளே சுருண்டு கிடந்தாள்.

வந்தவர் அவள் போர்வையை இழுத்து, “ஏன் டி, என்ன நேரமாகுது? இன்னும் பொட்டப் புள்ள தூங்கி கிட்டு இருக்க, காலைலயே இப்படி கத்துனா பக்கத்து பிளாட்ல இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க?” என கடிந்து கொள்ள,

“எல்லாம் உன் சீமந்த புத்திரியால தான், காலைல சுப்ரபாதம் மாதிரி தினமும் இவ ராமாயணம் பாடுனா கடுப்பா வருது மா. ச்சே இன்னிக்கு என் கனவுல என் ராஜகுமாரன் வந்தான், அதுக்குள்ள இவளோட ராமன பத்தி பாடி என் கனவ கலைச்சுட்டா குட்டச்சி” என ஏகத்துக்கும் தன் அக்காளை வறுத்தெடுத்தாள்.

“அடியேய் குண்டச்சி, ஏதாவது இன்னும் பேசுன வாய தச்சு வச்சுருவேன் பார்த்துக்க. ராஜகுமாரன் வரானாம் கனவுல, ஒழுங்கா போய் குளி டி. காலேஜ்க்கு லேட் ஆச்சு” என அப்பொழுது தான் குளித்து விட்டு தன் இடை வரை நீண்ட கூந்தலை காய வைத்து கொண்டிருந்தாள் மிதிலா.

“ப்பே… உன்னை மாதிரியா யாருனே தெரியாத ராமனுக்கு தினந்தினம் உருகிட்டு கிடக்கிறது, ஒன்னுமே தெரியாத லூசு கேர்ள். இவ எல்லாம் எப்படி தான் எனக்கு அக்காவா வந்து பொறந்து தொலைச்சாளோ!” என அவள் வாய் ஒருபக்கம் அவளின் தமக்கையை அரைத்துக் கொண்டிருந்தாலும் அவளின் கைகள் தன் அலமாரியில் தன் உடைகளை தேடி எடுத்துக் கொண்டிருந்தது.

“உதை வாங்குவ டி குண்டச்சி, ஒழுங்கா போய் கிளம்புற வழிய பாரு, இல்ல முதல் நாளே காலேஜ்க்கு லேட்டா தான் போவ. நேரத்துக்கு நீ ரெடியாகல உன்னை விட்டுட்டு நான் மட்டும் போய்ருவேன்” என மிரட்டல் விடுத்தாள் மிதிலா.

“ச்சே, ஒரு ஆள நிம்மதியா கனவு காண விடுறாங்களா. நிஜத்துல தான் என் ராஜகுமாரன் வர மாட்டேங்கிறான், அட்லீஸ்ட் கனவுலயாவது வரானே, அதுலயும் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு” என தன்னை குளியல் அறைக்குள் அடைத்துக் கொண்டாள்.

தன் தங்கையின் செயல்களில் இதழ்களின் புன்னகை உறைய நின்றவளைக் கண்ட பூங்கோதை, “இங்க வா மிது, நான் தலைய உலர்த்தி விடறேன்” என தன் மகளின் தலையை நன்கு துவட்டி விட்டார்.

“சீக்கிரம் ரெடி ஆகு மா, அப்புறம் அவ குளிச்சுட்டு வந்தா தலைய சீவி விடு, மேக்கப் பண்ணி விடுனு உன்னைய கிளம்ப விட மாட்டா” என்றவாறே தன் வேலையைக் கவனிக்க போனார்.

உலர்த்திய முடியை சிக்கெடுத்து தளர பின்னியவள் தான் அணிந்திருந்த புடவைக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்தாள்.

அப்பொழுது குளித்து விட்டு வெளியே வந்தவள் தன் அக்காளைக் கண்டு அப்படியே நின்று விட,

“என்ன டி, அதுக்குள்ள குளிச்சுட்டியா? காக்கா குளியல்” என கிண்டல் பண்ண, அவளோ தன் அக்காவை விட்டு பார்வையை நகர்த்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

ஆகாய நீல வண்ணத்தில் ஆங்காங்கு வெள்ளை நிற ப்ளோரல் டிஷைனில் புடவையும், இடை வரை நீண்ட கூந்தல் அவள் அழகை மேலும் மெரு கூட்ட எந்த வித ஒப்பனையும் இல்லாமல் வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கு மத்தியில் சேலை வண்ணத்திலே ஒரு வட்ட பொட்டு இட்டு காதில் நீல வண்ண கல் வைத்த ஜிமிக்கி கம்மலை அணிந்து கொண்டிருந்தாள் மிதிலா.

‘பொய்யோ என்னும் இடையாள்’ தன் அக்காவிற்கு பொருத்தமான வரிகள் என நினைத்தாள் நறுமுகை. எங்கேயோ படித்த வரிகள் அவளுக்கு ஞாபகம் வந்தது, ‘கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்’, இதன் அர்த்தம் என்னவோ!. ஆனால் அவள் ஓர் அர்த்தம் கொண்டாள். கண்டிப்பாக தன் தமக்கையின் இடை தாண்டி நீண்டிருக்கும் அந்த கூந்தலைக் கண்டால் எந்த ஆணும் அந்த கூந்தலில் கள்ளுண்ட போதையை உணர்வார்கள் என நினைத்த வண்ணம்,

எழிலோவியமாய் கண்ணாடி முன் நின்றிருந்தவளை இவள் இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருக்க, “என்ன டி பேச்சு மூச்சயே காணோம்?” என்றவாறே திரும்பினாள் மிதிலா.

அவளோ தன்னையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தவள், “லேட் ஆச்சுனு கத்திக்கிட்டு இருக்கேன், நீ என்னடான்னா வேடிக்கைப் பார்த்துக் கிட்டு நிக்கிற, சீக்கிரம் கிளம்பு டி குண்டச்சி” என்றாள் மிதிலா.

“எப்படி டி எனக்கு அக்காவா வந்து பொறந்த? ப்ப்பா… நம்ம தல விஸ்வாசம் படத்துல நயன்தாராவ பார்த்து சொல்லுவாரு பாரு, ‘அழகே பொறாமைப் படும் பேரழகு நீங்க’னு அப்படி இருக்க டி. இப்படியே நீ காலேஜ் போனா அப்புறம் எங்க நிலைமைலாம் என்னாகிறது டி, எல்லாரும் ஸ்டூடண்ட்ஸ்ஸ விட்டுட்டு டீச்சர சைட் அடிச்சா நாங்க எங்க டி போவோம்” என்றாள் அவள் கவலையுடன்.

“அடிங்க… ஒழுங்கா கிளம்பு” என வாய் கூறினாலும் தன் தங்கையின் வார்த்தையில் அவள் கன்னங்கள் வெட்க கதுப்புக்களை பூசி நின்றது.

“நல்ல நாள்ளயே உன்னை பார்க்க ஒரு கூட்டம் இருக்கும், இதுல நீ எப்படி போய் பசங்களுக்கு விலங்கியல் பாடம் எடுப்ப? போன வருஷம் எங்க கிளாஸ் பசங்க எந்த பாடத்தை கவனிச்சானுங்களோ இல்லையோ, கரெக்ட்டா மென்சஸ் பத்தி எடுக்கும் போது ஆர்வமா கவனிச்சது மட்டும் இல்லாம டவுட் வேற கேட்டானுங்க. காலேஜ் லெவல்னா ரொம்ப இருக்குமே, அதுவும் நீ பாடம் நடத்தும் போது உன்னை பார்ப்பாங்களா? இல்ல பாடத்தை கவனிப்பானுங்களா?. டஃப் காம்படீஷன் தான் போல” என அவள் வம்பிழுக்க,

“இன்னும் ஏதாவது பேசுன வாய்லயே நாலு போடு போட்ருவேன்” என்றாள் மிதிலா.

“சரி அத விடு, அது உன் கவலை
எனக்கெதுக்கு? இப்போ நீ என்ன பண்றனா, உன் அளவுக்கு நான் இல்லைனாலும் உன்னை விட அழகா மேக்கப் பண்ணி என்னை அழகாக்கற” என மிதிலாவின் முன் நறுமுகை அமர,

“லூசு, உனக்கென்ன டி குறைச்சல். என்னை மாதிரியே தான் இருக்க, என்ன கொஞ்சம் சதை போட்ருக்கு, இருந்தாலும் நீ தான் பார்பி டால் மாதிரி அழகா இருக்க” என அவள் கன்னம் கிள்ளியவள் தன் தங்கைக்கு தலைவாரி விட்டாள்.

சுந்தரேசன் – பூங்கோதையின் சீமந்த புத்திரிகள் தான் மிதிலாவும் நறுமுகையும். தற்பொழுது தான் எம்.பில் முடித்த மிதிலா கொங்கு மண்டலமான கோயம்புத்தூரில் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிக்கு சேர்ந்துள்ளாள்.

இருபத்தி நான்கு வயதான அந்த ஓவியப் பாவை, இதுவரை பல காளையர் அடக்க முற்பட்டு யாருக்கும் அடங்காத பாவையவளாக வலம் வருகிறவள். பேதை பருவத்தில் தன் ராமனின் மேல் குறும்பு பார்வைப் பார்த்து, வெதும்பை பருவத்தில் மையல் கொண்டு இன்று மங்கைப் பருவத்தில் கடைந்தெடுத்த சிற்பி ஒருவனின் உளியின் வலி கொண்டு செதுக்கப்பட்டவள் காதல் ததும்ப நிற்கிறாள்.

நறுமுகை பண்ணிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, இன்று தான் தன் கல்லூரி வாழ்க்கையைத் தொடக்க இருக்கிறாள்.

சுந்தரேசன் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர், பூங்கோதை இல்லத்தரசி. அழகான பூஞ்சோலையில் அன்பென்னும் கூட்டினுள் வாழும் நான்கு ஜீவன்கள்.

இருவரும் கிளம்பி ஹாலிற்கு வர, அதுவரை சாகவாசமாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அன்றைய செய்தித் தாளை புரட்டிய வண்ணம் இருந்த சுந்தரேசன் தன் இரு மக்களையும் பார்த்து, “காலேஜ்க்கு கிளம்பியாச்சா மா?” என்றார்.

“கிளம்பிட்டோம் ப்பா” என்றவாறே தன் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் மிதிலா.

“நல்லா இருப்பம்மா” என்று ஆசீர்வதித்தவர் தன் சின்ன மகளைப் பார்க்க, “என்ன இங்க பார்வை? அவள மாதிரிலாம் என்னால ஆசிர்வாதம் வாங்க முடியாது, நீங்க வேணும்னா என்கிட்ட தாராளமா ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்” என்க,

“என்ன பேச்சு பேசறா பாருங்க, எல்லாம் உங்க செல்லம். ஒழுங்கா அப்பாகிட்ட ஆசீர்வாதம் வாங்கு டி” என்று பூங்கோதை கடுகடுத்தார்.

அவளோ பதிலுக்கு முறைத்தாள். சுந்தரேசன் ஆசிர்வதித்து தன் மூத்த மகளுக்கு ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்ட,

அதனைக் கண்ட நறுமுகையோ, “இத முன்னாடியே சொல்லி இருந்தா ஒரு தடவ என்ன ஆயிரம் தடவ உங்க கால்ல விழுந்துருப்பனே ப்பா” என்றவாறே அவள் தரையில் தன் முழு உடலையும் நீட்டி படுத்து ஆசீர்வாதம் வாங்க, அவரோ ஆசீர்வதித்து நூறு ரூபாய் தாளை நீட்டினார்.

“எனக்கு மட்டும் நூறு தானா?” என முகத்தைத் திருப்ப, “அக்கா கூட தான வண்டில போற ம்மா, அப்புறம் என்ன செலவு உனக்கு?. அவ வேலைக்கு போறவ, அவளுக்கு ஏதாவது செலவு இருக்கும்” என்க,

“ரெண்டு பேரும் ஒரே காலேஜ் தான் போறோம், என்ன நான் ஸ்டூடண்ட், அவ பிரபஸர். அவ்ளோ தான் வித்தியாசம், ஆனா நீங்க நானூறு வித்தியாசம் கொடுக்குறீங்க” என்க, தன் மகளின் பதிலில் புன்னகைத்தவர் அவளுக்கு ஐந்நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டினார்.

“குட் அப்பா” என அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் தன் அன்னையின் கைப் பக்குவத்தின் வாசனையை நுகர்ந்தவாறே உணவுண்ண ஓடினாள்.

“நீங்க ரெஸ்ட் எடுங்கப்பா, நாங்க சாப்பிட்டு கிளம்புறோம்” என்ற மிதிலா உணவருந்த சென்றாள்.

இருவரும் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு விரைந்தனர். அவர்கள் இருப்பது கணபதியில். அவர்கள் கல்லூரியோ பீளமேடு. இடைப்பட்ட தூரத்தை கடக்க குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது ஆகும்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் நறுமுகையின் வார்த்தைகள் தான் அந்த காற்றில் பறந்து கொண்டிருந்தது.

இருவரும் அந்த கல்லூரி வளாகத்தினுள் நுழைந்து வண்டியை பார்க் செய்து விட்டு, “குண்டச்சி ஒழுங்கா உன் சுட்டித்தனத்த எல்லாம் அடக்கி வச்சுக்கிட்டு கிளாஸ்ல இருக்கணும், சரியா… உங்க தங்கச்சி அத பண்ணா, இத பண்ணானு கம்ப்ளைண்ட் வந்துச்சு அவ்ளோ தான், தேர்ட் ப்ளோர்ல தான் உங்க கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட் இருக்கு, ஒழுங்கா கிளாஸ்க்கு போ. நான் ஆபிஸ் ரூம் போய் என் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர குடுத்துட்டு என் டிபார்ட்மெண்ட் போறேன். மறந்துறாத டி, உன் டிபார்ட்மெண்ட்க்கு ஆப்போசிட் தான் என் டிபார்ட்மெண்ட்ம்” எனக் கூறியவள் கல்லூரி அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

நறுமுகையோ அவள் சென்றவுடன், “நீ சொன்னதுலாம் விரலுக்கிறைத்த நீர் டி குட்டச்சி” என்றவாறே தன் வகுப்பறையைத் தேடிச் சென்றாள்.

மிதிலா தன் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைக் காண்பித்து விட்டு தன் முதல் நாள் பணியை இனிதே ஆரம்பித்தாள்.

அவள் டிபார்ட்மெண்டிற்கு செல்லும் வழியில் நறுமுகை அவளுக்காக காத்திருக்க,

“இங்க ஏன் டி நிக்கிற?” என்க,

“ம்… என் டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டிய சைட் அடிக்க தான்” என கண்ணடிக்க,

“ப்ச்… ஏன் டி, ரொம்ப வயசானவரா இருக்க போறாரு” என நக்கலாக மிதிலா கூற,

“ஹலோ, ஹலோ உன் கற்பனை குதிரைய அடக்கி வை. இங்க வந்ததுல இருந்தே எல்லார் வாய்லயும் நந்தன் சார், நந்தன் சார்னு தான் ஒலிச்சுக்கிட்டு இருக்கு, அதுவும் செம ஹேண்ட்சம் பாயாம். அதான் அந்த ரோமியோவ சைட் அடிக்க வெய்ட் பண்றேன், சரி சரி. அதவிடு, ஆல் த பெஸ்ட் உன் முதல் நாள் பணிக்கு” என்க,

“உன் டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டியவே சைட் அடிக்கிறீங்களா! பார்த்து பிரம்மடி வாங்கீறாத. எனக்கு டைம் ஆச்சு, பர்ஸ்ட் ஹவரே கிளாஸ் இருக்கு” என வேகவேகமாக தன் துறைக்குள் நுழைந்தாள் மிதிலா.

 

02

மிதிலா தன் டிபார்ட்மெண்டில் நுழைந்து தன் துறையின் ஹெச்.ஓ.டியை பார்த்து பேசினாள். அவரும் அவளிற்கு வாழ்த்து தெரிவித்து, “அது தான் உங்க பிளேஸ் மேம், உங்களோட கிளாஸ்க்கான டைம் டேபிள் உங்களுக்கு இப்போ கொடுத்துருவாங்க, உங்களுக்கு எந்த கிளாஸ்னு பார்த்துட்டு நீங்க உங்க கிளாஸ்ஸ இன்னிக்கே ஆரம்பிக்கலாம்” என்றார்.

“தேங்க் யூ சார்” என்றவள் தனக்கான இருக்கையில் அமர்ந்து தனக்கான அட்டவணையில் தன்னுடைய வகுப்பு எது என பார்த்துக் கொண்டிருந்தாள்.

இங்கு நறுமுகையோ, “என்னடா இது இந்த நறுமுகைக்கு வந்த சோதனை! ஹேண்ட்சம் பாய்னு எல்லாரும் பேசிக்கிறாங்களே, அவர பார்த்து நம்மளும் ஒரு லுக் விடுவோம்னு பார்த்தா இன்னும் அவர காணோம். ச்சே, ஒரு ஹெச்.ஓ.டியா அவருக்கு பொறுப்பிங்கிற பருப்பே இல்ல, நேரத்துக்கு வர தெரியாது” என தன் மனதினுள் நந்தனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆங்காங்கு மாணவ, மாணவிகள் நின்று கொண்டிருந்தவர்கள் திடீரென்று புயலுக்கு பின் அமைதி போல் அலை ஓய்ந்து அமைதியாக இருக்க, அதனைக் கண்டவள், “என்னாச்சு, எல்லாரும் இங்க தான இருந்தாங்க. அதுக்குள்ள கிளாஸ்க்கு போய்ட்டாங்களா என்ன? இன்னும் டைம் இருக்கே” என்றவாறே தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு திரும்பியவளின் கண்கள் விழி விரித்து நின்றது.

அவள் இதுவரை மனதினுள் வறுத்தெடுத்து கொண்டிருந்த அவள் துறையின் தலைவர் தான் நடு வராண்டாவில் கைகளை கட்டிய வண்ணம் நின்றிருந்தான்.

இது தான் ரகுநந்தன். ஒற்றை வார்த்தை கூட அதிர்ந்து பேச மாட்டான். ஆனால் ஒற்றை பார்வைதனில் அடக்கி ஆள்பவன். அவன் வந்து அங்கு இப்படி நின்றாலே போதும், மாணவ, மாணவிகள் தங்கள் வகுப்பறைக்குள் தங்களை அடைத்துக் கொள்வர்.

“இவரு தான் அந்த ஹேண்ட்சம் பாயா!” என அவள் நினைப்பதற்குள், அவளை நோக்கி சொடக்கிட்டு, ‘இங்கே வா’ என அவன் சைகை செய்ய,

“அய்யோ ஹேண்ட்சம் பாய்னு நினைச்சா இவரு என்ன இப்படி டெரர் லுக் குடுக்கிறாரு, நறுமுகை இன்னிக்கு முதல் நாளே உன் ஹெச்.ஓ.டி கிட்ட வாங்கி கட்டிக்க போற” எனப் புலம்பி கொண்டே அவன் அருகில் சென்றாள்.

“உன் கிளாஸ்க்கு போகாம இங்க என்ன வேடிக்கைப் பார்த்துக் கிட்டு இருக்க?” என கண்ணில் கடுமையை ஏற்றி நாவில் கோபத்துடன் வினவ,

“அதுவந்து சார்…” என அவள் தயங்க, “எங்க உன் ஐடி கார்ட்?” என்றான் ரகுநந்தன்.

“அதுவந்து… சார், நான்… நான் நறுமுகை…” என அவள் தடுமாற அவள் தடுமாற்றம் அவனுக்கு ஏனோ புன்னகையை தத்தெடுத்தாலும் அதனை அடக்கிக் கொண்டு,

“பர்ஸ்ட் இயர்ரா…!” என்றான் ரகுநந்தன்.

“எஸ் சார்” என்க, “ஓ.கே, என் கூட வா” என அவன் முன்னே நடக்க,

“அய்யோ இப்போ இவரு எதுக்கு என்னை கூப்பிடராரு, ஒருவேளை நம்ம அவர சைட் அடிச்சது தெரிஞ்சு போச்சா…” என நினைத்தவளுக்கு அடிவயிற்றில் பயபந்து உருண்டது.

ஆனால் மனமோ, “நீ எங்க டி அவர சைட் அடிச்ச, சைட் அடிக்க தான் நினைச்ச. ஆனா அத தான் அவரே வந்து தடுத்துட்டாரே” என எடுத்துக் கொடுக்க,

“ச்சீ, வாய மூடு. நீ என் அக்காவ விட மோசமா இருக்க, என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம். என்ன அவரு அப்படியே பிரின்சி கிட்ட கூட்டிட்டு போனாலும் வந்த முதல் நாளே பிரின்சிய பார்க்கிற பெருமை என்னையே சாரும். சோ நறுமுகை ஹேப்பி” என்றாள் நறுமுகை.

“நீ எல்லாம் உறுப்பட மாட்ட” என அவளின் மனசாட்சி அடித்துக் கொள்ள அதற்குள் ரகுநந்தனின் நடை தடைப்பட்டது.

இவளோ தன் மனசாட்சியுடன் சண்டை போட்டுக் கொண்டே போனதால் அவனின் நடை தடைப்பட்டதை கவனிக்காமல் நடக்க, அவனோ “இது தான் உன் கிளாஸ்” என அவளின் வகுப்பைக் காட்டினான்.

அவனின் வார்த்தைகளில் தான் அவள் நடப்பதை உணர்ந்தவள், சட்டென்று “தேங்க் யூ சார்” என்றவாறே தன் வகுப்பிற்குள் நுழைந்தாள்.

“பாவம், எனக்கு கிளாஸ் தெரியாம முழிச்சுக்கிட்டு நின்னேனு நினைச்சுட்டாரு போல. நம்ம சைட் அடிக்க நின்னது தெரியல” என தன்னை சமன்படுத்திக் கொண்டவள்,

தன் வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்தாள். அவள் அருகில் ஒருத்தி வந்து அமர, “ஹாய்… என் பேரு நறுமுகை” என இவள் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள, அந்த பெண்ணும், “என் நேம் உமையாள்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

இருவரும் சிறிது நேரத்திலே தோழிகளாகி விட வகுப்பும் தொடங்கியது.

மிதிலா தன் முதல் வகுப்பிற்கு செல்ல தன் டிபார்ட்மெண்ட்டில் இருந்து கிளம்பினாள்.

அவள் வெளியே வரவும் ரகுநந்தன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

இவளோ அவனைக் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. முதல் வகுப்பு என்பதால் மனதினுள் தனக்கு பிடித்த ராமனை மனதினுள் வேண்டிக் கொண்டே வகுப்பிற்கு சென்றாள்.

அவளைக் கண்ட ரகுநந்தனின் கண்களில் ஓர் ஆச்சரியபடலம் தோன்றியதோ எனக் கணிக்கும் முன் அவன் தன் வேலையைப் பார்க்க சென்றான்.

விலங்கியல் துறைத் தலைவரிடம் பேச சென்றவன் பேசிவிட்டு கிளம்பும் போது, “நந்தன் மிதிலானு ஒருத்தவங்க புதுசா ஜாய்ன் பண்ணிருக்காங்க. உங்களுக்கு அவங்கள இன்ட்ரோ கொடுக்கிறேன்” என அவர் மிதிலாவின் இருக்கையில் அவளைத் தேட,

ரகுநந்தனே பதிலைத் தொடர்ந்தான். “அவங்களுக்கு முதல் வகுப்பு போல, கிளம்பிட்டாங்க சார். ஆப்போசிட் தான எங்க டிப்பார்ட்மெண்ட், பொறுமையா இன்ட்ரோ குடுத்துக்கலாம்” என்றான் ரகுநந்தன்.

“தட்ஸ் மை பாய்…” என அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர், “இந்த சின்ன வயசுலயே ஹெச்.ஓ.டி ஆகிட்டனு சிலர் ஏன் பொறாமை படறாங்கனு இப்போ புரியுது, எல்லாப் பக்கமும் கண்ணு இருக்கும் போல உனக்கு” என்றார் ரவிக்குமார்.

தன் தந்தையின் வயதையொத்த அவரை ரகுநந்தனுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் அந்த கல்லூரியிலே மூத்த பேராசிரியர் அவர். இன்றும் இளமையின் துடிப்புடன் வலம் வருபவர்.

“தேங்க் யூ சார்” என்றவன், “எனக்கு நெக்ஸ்ட் ஹவர் கிளாஸ் இருக்கு சார், அதுக்குள்ள பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ்ஸ போய் பார்த்துட்டு வந்தறேன்” என்றவன் இளங்கலை முதலாமாண்டு வேதியியல் வகுப்பிற்கு சென்றான்.

அவன் வகுப்பினுள் நுழைய, “குட் மார்னிங் சார்” என மாணவர்கள் எழுந்து நின்றனர்.

“ஹேப்பி மார்னிங் ஸ்டூடண்ட்ஸ்” என்றவன், “உட்காருங்க” என்றான்.

அனைவரும் அமர, “உங்களப் பத்தி கேட்கிறது முன்னாடி நான் என்னைப் பத்தி சொல்லிறேன். மே பி சிலருக்கு என்னைப் பத்தி தெரியும்னு நினைக்கிறேன்” என்றவனின் பார்வை நறுமுகையை தீண்டிச் செல்ல,

அவளோ, “இவரு ஏன் நம்மள பார்க்கிறாரு” என்ற ஐயத்துடன் அமர்ந்திருந்தாள்.

“ஐ ஆம் ரகுநந்தன், நான் தான் நம்ம டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி, உங்களுக்கு நம்ம காலேஜ்ல எல்லா விதமான வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்துருக்காங்க, பாடங்கள்ள சந்தேகம்னா அந்த வகுப்பிலே அந்த ஆசிரியர்கிட்ட கேட்கலாம். இல்லைனா டிபார்ட்மெண்ட் போய் அவங்ககிட்ட டவுட் கிளியர் பண்ணிக்கலாம், உங்களுக்கு ஏதாவது அன்கம்பர்ட்டபிளா ஐ மீன் பாடம் சம்பந்தப்பட்ட விசயங்கள்ள உங்களுக்கு அப்படி பீல் ஆச்சுனா துறை தலைவரான என்னை சந்திக்கலாம், அதுக்காக உப்பு சப்பில்லாத விசயங்களுக்காக தினமும் வந்து நிக்கக் கூடாது”

“அண்ட் தேவையில்லாம வெரண்டாவில நிக்கக் கூடாது, இன்னிக்கு பர்ஸ்ட் டே அதுனால உங்கள ஒன்னும் சொல்லல. நாளைல இருந்து நம்ம காலேஜ் ரூல்ஸ் அண்ட் ரெகுலஷேன ஃபாலோ பண்ணனும்” என்றவன் இப்போதும் நறுமுகையை பார்க்க அவன் கூறுவது தனக்கு தான் என்பதை புரிந்து கொண்டவள் போல் அவள் தலை தானாக ஆடியது ‘சரியென’.

“மாதா, பிதா, குரு, தெய்வம். உங்களுக்கு தெரிஞ்சது தான். மாதா, பிதாக்கு அடுத்த இடம் குருவுக்கு தான். சோ குருவுக்கான மரியாதை உங்க மனசுல இருக்கணும்” என்றவன்,

“இன்னிக்கே உங்க நேம் எல்லாம் என்னால தெரிஞ்சுக்க முடியாது, நீங்களே இன்ட்ரோ பண்ணாலும் எனக்கு மைண்ட்ல இருக்காது. ஸோ, போக போக தெரிஞ்சுக்கறேன், எந்த டவுட்ஸ்னாலும் என்கிட்ட வந்து கேட்கலாம்” எனும் போதே,

உள்ளே ஒருவன் வந்து, “சாரி நந்தா. பிரின்சிபல் கூப்பிட்டாங்க, அவங்கள பார்க்க போய்ட்டேன்” என மன்னிப்பு வேண்டினான்.

“ம்…” என்றவன், “இவரு தான் உங்க கிளாஸ் மென்டார்(Mentor) சிரஞ்சீவி, எனக்கு நெக்ஸ்ட் கிளாஸ் இருக்கு, நீங்க கிளாஸ் கண்டினியூ பண்ணுங்க” என்றவாறே வெளியேறினான் ரகுநந்தன்.

“குட் மார்னிங் ஸ்டூடண்ட்ஸ்” என்ற சிரஞ்சீவி, “என்னைப் பத்தி தான் ஹெச்.ஓ.டி சாரே சொல்லிட்டாரு, இப்போ உங்கள பத்தி சொல்லுங்க” என்றவன் ஒவ்வொருத்தரின் பெயரையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

நறுமுகையின் முறை வந்தவுடன், “நறுமுகை சார்” என்றாள் எழுந்து. “உங்களோட ஆம்பிஷன் என்ன?” என்க,

“இப்போதிக்க நான் நல்லா சாப்பிடணும், ஊர் சுத்தணும். அப்புறம் என் அக்கா கூட நிறைய சண்டை போடணும், இது தான் சார் என்னோட ஆம்பிஷன்” என்க, வகுப்பில் சிரிப்பலை எழுந்தது.

“ஸ்டாப் நான்சஸ். சாப்பிடணும் தூங்கணும், இத எல்லாரும் பண்றது தான். உன்னோட ஆம்பிஷன் என்னனு கேட்டா ஒழுங்கா பதில் சொல்லணும்” என்றான் சிரஞ்சீவி சற்று கண்டிப்புடன்.

“சார் நீங்க தான் ஆம்பிஷன் என்னனு கேட்டீங்க, எனக்கு பொய் சொல்ல வராது. சோ என்னோட உண்மையான ஆம்பிஷன சொன்னேன், அப்போ நான் சொன்ன பதில் தப்புனா நீங்க கேட்ட கேள்வியும் தப்பு” என்க,

ஏனோ அவள் அவனுக்கு சுவாரசியமாக தோன்றினாள்.

‘என்ன மாதிரியான பொண்ணு இவ, ஆம்பிஷன் இருக்கோ இல்லையோ வாய்க்கு வந்தத சொல்லிட்டு உட்காருவோம்னு இல்லாம என்னோடயே மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கா!. இதுல நான் கேட்ட கேள்வி தப்பாம்!’ என நினைக்கும் போதே இதழ்கள் புன்னகையில் விரிய அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

கடுமையை ஏற்றி “திங்கணும், தூங்கணும்னா அத வீட்டுலயே பண்ணலாம்ல, இங்க வந்து ஏதுக்கு தேவையில்லாம மூணு வருஷம் பீஸ் கட்டி படிக்கணும்” என்றான் சிரஞ்சீவி.

“நீங்க கேட்கிறது கரெக்ட் தான், இத தான் நானும் என் அப்பாக்கிட்ட சொல்றேன். அந்த மனுஷன் தான் புரிஞ்சுக்க மாட்டேன்கிறாரு, எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுங்க சார். என் அப்பாகிட்ட நீங்களே இதப் பத்தி பேசுறீங்களா!” என்க,

அவனோ அதிர்ந்து விளித்தான். “இவக்கிட்ட எவன் மாட்டி சின்னாபின்னமாக போறானோ” எனப் புலம்பியவன், “அம்மா, தாயே. நீ தின்னு, தூங்கு என்னமோ பண்ணு. இப்போ நீ உட்காரலாம்” என்க,

அவனை கடுப்பேற்றிய திருப்தியுடன் இதழ்கள் புன்னகையை சுமக்க உட்கார்ந்தாள் நறுமுகை.

வழக்கம் போல் கல்லூரி முடிய தன் அக்காவிற்காக காத்திருந்தாள் நறுமுகை.

அப்பொழுது தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த ரகுநந்தன், “நறுமுகை இங்க என்ன பண்ற? வீட்டுக்கு கிளம்புல?” என்றான்.

“அக்காக்காக வெய்ட் பண்றேன் சார்” என்க,

“ஓ… உன் அக்காவும் இந்த காலேஜ்ல தான் படிக்கிறாங்களா?” என்றான் ரகுநந்தன்.

“இல்ல சார், வொர்க் பண்றாங்க” என்க, “வொர்க் பண்றாங்களா!. யாரு?” என்றான் ஆவலுடன்.

அப்பொழுது மிதிலா தூரத்தில் வருவதைக் கண்ட நறுமுகை, “மிதிலா, ஷூவாலஜி டிபார்ட்மெண்ட்” என தன் அக்காவை கை காட்ட, “ஓ…” என்றவன்,

“சரி, பார்த்து போங்க” என்றவாறே தன் வாகனத்தை ஸ்டார்ட் செய்தான்.

அவள் அருகில் வந்த மிதிலா, “சாரி டி குண்டச்சி, கொஞ்சம் லேட் ஆகிருச்சு” என்றவாறே தன் வண்டியில் சாவியை திணிக்க,

“சரி சரி, இன்னிக்கு ஒரு நாள் தான் உனக்கு எக்ஸ்கியூஸ். நாளைக்கு கரெக்ட்டான டைம்க்கு வரல, ஸ்பேர் கீ போட்டு உன்னை விட்டுட்டு போய்ருவேன்” என தன் அக்காளை மிரட்ட,

“குண்டச்சி” என அவள் தலையில் கொட்டு வைத்தவள், “வண்டில ஏறு” என்றாள் மிதிலா.

“குட்டச்சி, குட்டச்சி” என அவள் பின்னே ஏறி அமர, அக்கா, தங்கை சம்பாஷணைகளைக் கேட்டு கொண்டிருந்த ரகுநந்தன்,

“குட்டச்சியா! அவ்ளோ ஒன்னும் மிதிலா குட்டையா தெரியலயே. அப்பறம் ஏன் இந்த வாண்டு குட்டச்சினு சொல்றா” என ஆராய,

அதற்குள் அவன் ஆய்விற்கு முற்றுப்புள்ளி வைத்தான் அவனின் நண்பன் சிரஞ்சீவி.

“டே வண்டிய எடு டா, நான் பின்னாடி ஏறி உட்கார்ந்து அரை மணி நேரம் ஆச்சு” என முதுகில் தட்ட, “நீ எப்படா வந்த?” என்றான் ரகுநந்தன்.

“ம்… நீ கனவு கண்டுக்கிட்டு இருக்கும் போதே வந்துட்டேன், பேசாம வண்டிய எடு” என்றான் சிரஞ்சீவி.

இருவரும் கிளம்ப, நறுமுகையும் மிதிலாவும் தங்கள் வீட்டை அடைந்திருந்தனர் சிறிது நேரத்தில்.

அன்றைய வகுப்புகளை பற்றி பேசியே நேரம் நொடிகளாய் கடக்க, “ஆமா, ஏன் டி அந்த சிரஞ்சீவி சார்கிட்ட அப்படி பேசுன. பாவம் அந்த மனுஷன், உனக்கு போய் மென்டாரா வந்துருக்காரு பாரு” என்றாள் மிதிலா.

“தெரியல டி, எனக்கு அவர பார்த்தோனே வம்பிழுக்கணும்னு தோணுச்சு. வம்பிழுத்தாச்சு” என்க,

“இன்டர்னல் மார்க்ல கை வச்சற போறாரு டி, பாத்து வாய அடக்கி வை” என்க,

“அதெல்லாம் அவரு தலைல ஒரு கூடை ஐஸ்ஸ கொட்ற மாதிரி பேசுனா போதும்” என்றவள், “சரி, சரி நேத்து விட்ட கனவ இன்னிக்கு தொடரணும். நான் தூங்கறேன்” என போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ள,

“இவ வாய அடைக்க எந்த புண்ணியவான் பொறந்திருக்கானோ” என எண்ணியவளை அவளின் ராமன் வந்து நினைவை கலைத்தான்.

எப்பவும் போல் தன் ராமனின் நினைவில் தலையணையை அணைத்தாள் மிதிலா.

 

03

எப்பொழுதும் போல் தன் ராமனை நினைத்தவாறே தலையணையை அணைத்து படுத்தவளுக்கோ தூக்கம் வர மறுத்தது.

எழுந்து அமர்ந்தவள் தன் அருகே படுத்திருந்த தன் தங்கையை பார்த்தாள். அவளோ ஆழ்ந்த நித்திரையில் தன்னவனை காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்க அவளை எழுப்ப மனமில்லாமல், மெதுவாக எழுந்து பால்கனிக்கு சென்றாள்.

அன்று பௌர்ணமி நாள் என்பதால் நிலவு தன் ஒளிவீச்சை நிலமகளின் மீது பரப்பிக் கொண்டிருக்க அதனை ரசிக்க கூட மனமில்லாமல் பால்கனியில் இருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.

தன் இமைகளை மூட, அவள் இமைகளுக்கிடையே அவன் தோன்றினான்.

மீண்டும் அவள் அந்த கனவை கலைப்பது போல் கண்களை திறக்க முயன்று அதில் தோற்றுப் போனாள் மிதிலா.

2005

இன்றைய பரபரப்பான கோயம்பத்தூர் மாநகரத்தில் தான் அன்றும் மிதிலாவின் குடும்பத்தினர் இருந்தனர்.

சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சுந்தரேசன் தமிழாசிரியராக பணியாற்ற, பூங்கோதை இன்று போல் அன்றும் இல்லத்தரசி தான்.

ஒன்பது வயது சுட்டித்தனம் மாறாத மிதிலா அந்த தெருவையே ரணகளம் ஆக்குவாள்.

தினம் ஒரு புகார் பட்டியல் வந்து சேரும் சுந்தரேசனுக்கு.

அன்றும் அப்படி தான். பக்கத்து வீட்டு மாலா மாமி காலையிலேயே புகார் பட்டியல் வாசித்துக் கொண்டிருக்க, ஒன்றுமே செய்யாத நல்ல பிள்ளை போல் தன் தந்தை முன்னே கைக்கட்டி நின்றிருந்தாள் மிதிலா.

நறுமுகைக்கு அப்பொழுது தான் நான்கு வயது. அவள் தன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு அங்கு வர, தன் அக்காளைக் கண்டவள், “ஹே என்னாச்சு மிது? காலைலயே வாத்தி கோபமா இருப்பாரு போல” என சைகையிலேயே கிசுகிசுத்தாள்.

“சும்மா இரு டி, உன்னால இப்போ அந்த மாலா மாமிகிட்ட நான் மாட்டிக்கிட்டேன். கொஞ்சம் அமைதியா இரு” என தன் தங்கையை கடிந்து கொண்டே பாவமாக முகத்தை வைத்து கொள்ள,

அந்த மாமியோ, “இங்க பாருங்க வாத்தியார் சார், உங்க மக பக்கத்துல இருக்கிற கொடிக்காப்புளி அடிக்க போட்ட கல்லு என் நெத்திய பதம் பார்த்துருக்கு. நம்ம தெரு பசங்க கூட இப்படி பண்றது இல்ல, ஆனா இவ எல்லா வேலைத் தனமும் பண்றா” என தன் நெற்றிப் பொட்டை காண்பிக்க,

அவள் எறிந்த கல்லின் உபாயத்தால் பெரிய பொட்டு போல் கன்றி போய் சிவந்திருந்தது.

“மாமி இனிமே நீங்க பொட்டே வைக்க வேண்டாம். உங்க வேலைய நானே மிச்சப்படுத்திட்டேன் பாருங்க” என்றாள் குட்டி மிதிலா.

சுந்தரேசன் ஒரு பார்வை பார்க்க பொட்டி பாம்பாய் அடக்கிப் போனாள் மிதிலா.

“கல்ல விட்டு எறிஞ்சியா?” என கேள்வி வர,

“அதுவந்து ப்பா, கொடிக்காப்புளி அடிக்க தான் கல்லு போட்டேன். ஆனா அதுக்குள்ள மாமி குறுக்கா வந்துட்டா” என்றாள் மிதிலா கண்ணை தேய்த்துக் கொண்டே.

“இப்ப என்ன கேட்டேனு கண்ணை கசக்கிற” எனக் கடிந்தவர், “மன்னிச்சுகோங்க மாமி, இனி அவ இப்படி பண்ண மாட்டா. நான் அவக்கிட்ட சொல்லி வைக்கிறேன்” என தன் மகளுக்காய் பரிந்து பேசினார் சுந்தரேசன்.

“இதோட நீங்க இப்படி சொல்றது பத்தாவது தடவ வாத்தியார் சார், ஏதோ உங்க முகத்துக்காக தான் ஒன்னும் சொல்லாம போறேன். இந்த குட்டி எறிஞ்ச கல்லு எல்லாம் என் முகத்தை தான் பதம் பார்த்திருக்கு. போன வருஷம் இவ எறிஞ்ச கல்லு என் கண்ணு மேல் பகுதில பட்டு, பாருங்க இன்னும் அது சரியாகவே இல்ல, அதுக்குள்ள நெத்திப் பொட்டுல அடிச்சுட்டா” என்று தான் நொந்த கதையை கூறிக் கொண்டே அங்கிருந்து சென்றார்.

அவர் சென்ற அடுத்த நொடி சுந்தரேசன் பார்வை மிதிலாவைப் பார்க்க, “ப்பா நான் கொடிக்காப்புளி தான் அடிச்சேன்” என உதட்டைப் பிதுக்கி கொண்டு கண்களை கசக்கியவளைக் கண்டு மேலும் எதுவும் சொல்லத் தோன்றாமல்,

“இனி அந்த பக்கம் போகாத” என்றவர் தன் வேலையை பார்க்க சென்றார் சுந்தரேசன்.

“இந்த மாமிக்கு நாளைக்கு இருக்கு, பெரிய கல்லா பாத்து தூக்கி போடணும்” என அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்க, அவளை சுரண்டினாள் நான்கு வயதான நறுமுகை.

“உனக்கு என்ன டி?” என அவள் முறைக்க,

“கொடிக்காப்புளி” என்றாள். “உத வாங்குவ டி, உனக்காக தான் கல்லு எறிஞ்சு அந்த மாமி மண்டைல பட்டுருச்சு. ஒழுங்கா ஓடிப் போய்டு” என்றவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது தான் அவன் அவள் கண்ணில் பட்டான். பக்கத்து வீட்டிற்கு அப்பொழுது தான் புதுசாக யாரோ குடித்தனம் வந்திருக்க அவர்களின் வீட்டு சாமான்கள் அனைத்தையும் வாசலில் இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

தங்கள் கைகளில் இரு பைகளை தூக்கி கொண்டு மூவர் வந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட மிதிலா பார்வையை அவர்கள் மேல் செலுத்தினாள்.

முன்னால் வந்தவனும் இடையில் இருப்பவனும் ஒத்த வயதுடையவர்கள் போல. அவன் பின்னால் ஒரு குட்டி பையன் வந்தான். அவனுக்கு மிதிலாவின் வயது தான் இருக்கும்.

இடையில் இருந்தவனின் மேல் பார்வை சென்றது மிதிலாவிற்கு.

பதினான்கு வயதில் அப்பொழுது ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றத்தால் மீசை முளைவிட ஆரம்பித்திருந்தது.

அவளுக்கு அவனைக் கண்டவுடன் பால் கொழுக்கட்டை தான் நியாபகத்திற்கு வந்தது. அவனை பால் கொழுக்கட்டையுடன் ஒப்பிட்ட தன் மனதை நினைத்து இதழ்களில் புன்னகை பூக்க நின்றவளை அவனும் பார்த்தான்.

இரட்டை ஜடை, பாவாடை சட்டையில் தன் இரண்டு ஜடைகளையும் இரு கைகளால் பிடித்த வண்ணம் தங்களைத் தான் அவள் வேடிக்கைப் பார்க்கிறாள் என்பதை உணர்ந்தவன் ஒரு புன்னகையை சிதறவிட,

அந்த புன்னகையில் அந்த குட்டி மிதிலா தன் ராமனைத் தான் கண்டாள். அவள் ஒரு ராமர் பைத்தியம். சிறு வயதிலே தமிழை தன் மகளுக்கு போதிக்கிறேன் என்று கம்பராமாயணத்தையே கரைத்து குடிக்க வைத்திருந்தார் அவளின் தந்தை சுந்தரேசன்.

அந்த வயதிலே கம்பராமாயணத்தில் அத்தனை பாட்டுக்களும் அத்துப்படி. ஒவ்வொரு பாடலுக்கும் அவள் கொடுக்கும் விளக்கத்தை கேட்க அந்த தெரு மக்களே ஆர்வமாக வருவர்.

அப்பொழுது தான் ஒரு பாட்டி, “உனக்கேத்த அந்த ராமன் சீக்கிரம் உனக்கு கிடைப்பாரு தாயி” என வாழ்த்தி ஆசீர்வதித்தார்.

அவளோ அப்பொழுது தான் ஆறாவது வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தாள்.

அவனைக் கண்ட நொடி அவளுக்கு கம்பராமாயணத்தில் வரும் கன்னிமாடம் காட்சி தான் மனதில் வந்து சென்றது.

ஆனால் அடுத்த நொடியே அந்த கனவை சிதைத்தது அவனை அழைத்த அவனின் பாட்டியின் வார்த்தைகள்.

“கிருஷ்ணா, சீக்கிரம் வாயேன் டா…” என அவனை அழைத்துக் கொண்டிருந்தார்.

“இதோ வரேன் பாட்டி மா” என்றவாறே இவளை நோக்கி ஒரு புன்னகையை சிந்திவிட்டு அவன் தன் பாட்டியை நோக்கி சென்றான்.

அவள் ராமனை எதிர்ப்பார்த்திருக்க ஆனால் வந்தது என்னவோ கிருஷ்ணன் என்றவுடன் அவளின் மொத்த கனவும் கானல் நீராகி போகின.

காதல் என்றால் என்ன? என்று கூட அர்த்தம் தெரியாமல் இருக்கும் அந்த பருவத்தில் அவனைக் கண்ட நொடி அவள் மனதினுள் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க அது அடுத்த நொடியே சிதையவும் அவள் மனம் நொறுங்கி போனது.

அப்பொழுது முடிவெடித்தாள் அந்த குட்டிப் பெண். இனி அவனை தன் வாழ்வில் பார்க்கவே கூடாதென்று. ஆனால் விதியோ அவனையே முக்காலமும் நினைக்க வைக்கப் போகின்றது என்று அறியாமல்!

அவனை முதல் முறை பார்த்த காட்சிகள் அவள் மனத்திரையில் ஓட, கஷ்டப்பட்டு தன் நினைவுகளை மீட்டெடுத்தாள்.

குளுமையை வீசும் நிலவின் கதிரோ அவளுக்கு மாறாக தணலை கக்கியது. தளிர்மேனி தணலில் தகிக்க அதனை தடுக்க இயலாமல் அந்த நிலவை வெறுத்தாள்.

மற்றவர்களுக்கு குளிரூட்டும் வட்டநிலவு அவளுக்கு ‘நெருப்பு வட்டமான நிலா’வாக காட்சி அளித்தது.

இங்கு ரகுநந்தனோ அறையில் தன் நண்பனைக் காணாமல், “எங்கடா போய் தொலைஞ்ச?” என்றவாறே சிரஞ்சீவியைத் தேடினான்.

அவனோ மொட்டை மாடியில் நிலவை ரசித்துக் கொண்டிருந்தான். அவர்கள் இருந்த பிளாட்டில் ஏழாவது மாடியில் இருந்தனர் ரகுநந்தனும் சிரஞ்சீவியும்.

பால்ய வயதிலிருந்தே தோஸ்துகள் இருவரும். அந்த பிளாட் மொத்தம் பதிமூன்று அடுக்குகளைக் கொண்டிருந்தது.

தன் நண்பனை அறை, கிட்சன், பால்கனி என அனைத்திலும் தேடியவன் இறுதியில் அவன் அலைப்பேசிக்கு தொடர்பு கொள்ள, அதனை ஏற்று மறுமுனையில்,

“ஏன் டா…” என்றான். “எங்க டா போன, குளிச்சுட்டு வர்றதுக்குள்ள ஆளக் காணோம்” என்றான் ரகுநந்தன்.

“மேல மொட்டை மாடில தான் இருக்கேன்” என்க, “சரி அங்கயே இரு, நானும் வரேன்” என்றவாறே பனியன் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு தங்கள் வீட்டினை பூட்டி விட்டு மின்தூக்கியின் உதவியால் மொட்டை மாடிக்கு சென்றான் ரகுநந்தன்.

“என்ன டா, நிலாவ இப்படி ரசிச்சுக்கிட்டு இருக்க?” என்றவாறே தன் நண்பனின் தோளில் கை வைக்க,

“சும்மா தான் டா, காத்து வாங்கலாம்னு மேல வந்தேன்” என்றான் சிரஞ்சீவி.

“காத்து வாங்க வந்த மாதிரி தெரியலயே, காதல் வந்த மாதிரில இருக்கு. தனியா நிலாவ அல்லவா ரசிக்கிற!” என்றான் ரகுநந்தன்.

“உன்கூட இருந்துக்கிட்டு அதுக்கெல்லாம் ஆசைப்படலாமா டா ரகு” என்றான் சிரஞ்சீவி.

“இல்ல பொதுவா காதல் வந்தோனே தான் இப்படி நிலாவ பார்த்து ரசிப்பாங்கனு கேள்வி பட்ருக்கேன். அப்புறம் நம்ம காதலிக்கிறவங்க முகம் கூட அதுல தெரியுமாமே, அப்படியா டா!” என்க,

அவனோ ஏகத்துக்கும் முறைத்தான். “இப்போ ஏன் டா என்னை முறைக்கிற, தப்பா ஏதும் கேட்டுடலயே நான்” என்றான் ரகுநந்தன்.

“கடுப்ப கிளப்பாத டா, உன் கூட இருக்கிற வரை எனக்கு அனுமன் வேஷம் தான் போல. என்ன நேரத்துல எனக்கு சிரஞ்சீவினு பேரு வச்சாங்களோ! கடைசில என்னைய சிங்கிளாவே சாவடிச்சுருவாங்க போல!” எனப் புலம்ப,

“நான் இருக்கேன் மச்சி” என அவன் தோளில் கை போட,

“வேண்டாம் டா நண்பா, உன் சகவாசமே வேண்டாம்” என கையெடுத்து கும்பிட்டான்.

“சரி, சரி. ஏன் இங்க வந்து நிக்கிற, அத சொல்லு முதல்ல” என்றான் ரகுநந்தன்.

“சும்மா தான் டா, ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடக்கிற மாதிரி இருந்துச்சு. அதான் மேல வந்தேன்” என்க,

“பௌணர்மி வெளிச்சத்துல ரம்மியமா தான் இருக்கு” என இயற்கையை ரகுநந்தன் ரசிக்க,

“சரி என்னைய கேட்டீயே, இதுல யார் முகம் தெரியுதுனு. உனக்கு யார் முகம் டா தெரியுது?” என்றான் சிரஞ்சீவி.

“சொன்னா நீ அடிப்பியே!” என்க,

“சொல்லும். சொல்லித் தொலையும்” என்றான் சிரஞ்சீவி.

“எனக்கு இப்போ நா.பார்த்தசாரதி தான் நியாபகத்துக்கு வர்றாரு” என்க,

“அது எந்த பிகரு டா மச்சான், எனக்கு தெரியாம!” என அவன் வாயைப் பிளக்க,

“அடிங்க… அவரு ஒரு எழுத்தாளர் டா” என்றான் ரகுநந்தன்.

“ஓ… அது நமக்கு தேவையில்லாத விசயம், சரி மேல சொல்லு” என்றான் சிரஞ்சீவி.

“அவரோட ‘குறிஞ்சி மலர்’ நாவல்ல ஒரு கவிதை எழுதி இருப்பார், அதான் நிலவ பார்த்தோனே எனக்கு தோணுச்சு” என்றவன் அந்த கவிதையை கூறலானான்.

“நிலவைப் பிடித்துச்

சிறுகறைகள் துடைத்துக் – குறு

முறுவல் பதித்த முகம் ,

நினைவைப் பதித்து – மன

அலைகள் நிறைத்து – சிறு

நளினம் தெளித்த விழி “

“என்ன மாதிரியான வரிகள் இது, காதலிய நிலவோட ஒப்பிடாமல் நிலவை காதலியோட ஒப்பிட்டு அதுவும் அதன் கறைகளை துடைத்து விட்டு அதில் சிறு முறுவல் சேர்த்த முகம்” என அவன் சிலாகித்துச் சொல்ல,

“இப்போ நீ என்ன தான் சொல்ல வர்ற?” என்றான் சிரஞ்சீவி. அவனை முறைத்தவன் மேலும் தொடர்ந்தான்.

“இதே நிலவ புரட்சிக்கவி பாடி இருக்கிறத கேளு” என்றவன், அந்த கவிதை கூறத் தொடங்கினான்.

“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்தே
நிலவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோலமுழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாவுமோ?”

“டே நீ தமிழ கறைச்சு குடிச்சது போதும், அவங்க சொல்றத விடு. நீ என்ன சொல்ற?” என்றான் சிரஞ்சீவி.

“என்னால நிலவோட ஒப்பிட முடியாது டா. தன் ஒளிய அது தேய்ந்தும், வளர்ந்தும் ஒளி வீசச் செய்யும்.

ஆனா எப்பவும் ஒளி வீசக் கூடிய முகத்தோட என்னால எப்படி இந்த நிலவோட ஒப்பிட முடியும்!” என்றான் ரகுநந்தன்.

“ரசனை தான்… உன்கூட தான் இருக்கேன், எனக்கு இப்படிலாம் தோண மாட்டேங்கிதே!” என அவன் கவலை கொள்ள,

“எனக்கும் முதல்ல உன்னை மாதிரி தான், அப்புறம் தான்” என இடைவெளி விட்டவன்,

“நமக்கு பிடிச்சவங்களுக்கு பிடிச்சது நமக்கும் பிடிச்சது தான!” என்றவன்,

“அதான் எனக்கும் பிடிக்கும்” என்றான் ரகுநந்தன்.

அவன் ஏதோ கூற வர, அவன் வாயை பொத்தியவன், “நீ என்ன சொல்ல வர்றனு தெரியும். அதுனால உன் வாய மூடிக்கிட்டு கீழ வா, நான் எப்பவும் சொல்ற அதே பதில் தான் இன்னிக்கும்” என்றவன் முன்னே நடக்க,

“இவன திருத்த முடியாது டா சாமி” எனப் புலம்பியவாறே அவன் பின்னால் சென்றான் சிரஞ்சீவி.

 

04

மறுநாள் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மிதிலா. “மிது…” என அழைத்தவாறே நறுமுகை அவள் அருகில் வர,

“வா டி குண்டச்சி, என்ன காரியம் ஆகணும் என்னால!” என்றாள் மிதிலா.

“என் அக்காக்கு கற்பூர புத்தி” என நெட்டி முறிக்க, “ஐஸ் வச்சதெல்லாம் போதும், வந்த விசயத்த சொல்லு” என்றவாறே கண்ணாடியில் பார்த்துக் கொண்டு பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.

“அது… புடவை கட்டி விடணும்” என தலையை குனிந்து கொள்ள,

“என்ன!” என ஏகத்துக்கும் அதிர்ச்சியானாள் மிதிலா.

“ஏய்… உண்மையா தான் கேட்கிறியா? நைட் கேட்டதுக்கு என்னமோ பெரிய இவளாட்டம் புடவைலாம் கட்ட மாட்டேனு சொன்ன?” என்க,

“அது, எல்லாரும் புடவை கட்டிட்டு வரேனு சொன்னாங்க. நான் மட்டும் சுடிதார்ல இருந்தா நல்லா இருக்காதுல்ல. அதுவும் இல்லாம இன்னிக்கு எங்களுக்கான விழா, பிரஸ்ஷர்ஸ் பார்ட்டில நாங்க கெத்தா இருக்கணும்ல” என இல்லாத காலரை தூக்கி விட,

“சரி, சரி. உனக்கு பிடிச்ச புடவைய எடு, கட்டி விடறேன்” என்க,

“செல்ல அக்கா” என அவள் கன்னத்தில் இவள் முத்தமிட, “போ டி குண்டச்சி, கன்னத்துல எச்சில் படுத்தாத” என கன்னத்தை துடைத்தாள் மிதிலா.

“ஏன், அங்க ராமனுக்கு மட்டும் தான் முத்தம் கொடுக்க உரிமை இருக்கா? எனக்கும் உரிமை இருக்கு” என அவள் முறைக்க,

“ஆமா… என் ராமனுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு, நீ உன்னோட ராமனுக்கு கொடுத்துக்கோ. அத யாரும் தடுக்க மாட்டாங்க, என் முகத்துல எச்சி பண்ணாத” என்றவள் அவள் எடுத்துக் கொடுத்த புடவையை அவளுக்கு கட்டிவிட ஆரம்பித்தாள் மிதிலா.

“ஏன் டி குட்டச்சி, உன் ராமன் வருவான்னு நீ நினைக்கிற?” என்க,

பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள், “காதல்ங்கிறது எதிர்பார்ப்போட வர்றது இல்ல முகி. அது ஒரு ஆத்மார்த்தமான உணர்வு, நமக்கு பிடிச்சவங்க கிட்ட மட்டும் தான் தோணும். அவங்க எப்பவும் நம்ம கூடவே இருக்கணும்னு அவசியம் இல்ல, கண்காணாத இடத்துல இருந்தாலும் அந்த காதல் குறையாது” என்றவள்,

“அள்ள அள்ள குறையாது அட்சய பாத்திரம்னு சொல்லுவாங்க, அது மாதிரி இருக்கணும் நான், என் ராமன் மேல வச்ச காதல். அது எந்த சூழ்நிலைலயும் குறையாது” என்க,

நறுமுகைக்கு என்னவோ தோன்ற தன் அக்காளை இறுக அணைத்துக் கொண்டாள்.

“ஏய், கட்டிப்பிடிச்சு புடவை மடிப்பை கலைச்சு விடாத டி” என அவள் அதையும் கிண்டலாக எடுத்துக் கொண்டு தன் புடவையை சரிசெய்ய,

“என் மாமன் ரொம்ப பாவம். இவ காதல்ல மூழ்கி எப்படி வெளிய வர போறாரோ, ராமன் மாமாவே உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் கூற,

“குண்டச்சி அடி வாங்க போற டி” என்றாலும் தன்னவனை நினைத்ததில் அவள் கன்னங்கள் வெட்க கதுப்புக்களைப் பூசி நின்றது.

அக்கா, தங்கையாக இருவரும் அடித்துக் கொண்டாலும் அவர்களுக்குள் எந்தவித ஒளிவு மறைவும் இருக்காது. சில நேரங்களில் தோழிகள். சில நேரங்களில் குடுமி சண்டை பிடிக்கும் குழாய் அடி பெண்கள்.

சில நேரம் இருவரும் ஓவராக கொஞ்சிக் கொண்டு தன் அம்மாவை வம்பிழுப்பார்கள். சில நேரமோ இருவருக்குள்ளும் சண்டை நடந்து அதற்கு தீர்வு தேடி செல்வது அவர்களின் அன்னையிடம் தான்.

இவர்கள் இருவருக்குமிடையே மாட்டிக் கொண்டு முழிப்பது பூங்கோதையின் வேலை. பெரும்பாலும் சுந்தரேசன் இவர்களின் தில்லுமுல்லுகளைக் கவனிக்க மாட்டார்.

அவருக்கு எந்நேரமும் புத்தகம் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஓய்வு நேரங்களில் கூட அவர் கரங்களில் ஏதாவது ஒரு புத்தகம் தவளும். மிதிலாவிற்கு தமிழில் அதிக நாட்டம் வர காரணம் அவளின் தந்தை சுந்தரேசன் தான்.

அவளை திருவள்ளுவரில் இருந்து இன்றைய மரபு கவிஞர்களான சுரதா, வாணிதாசன், கண்ணதாசன் வரை அனைவரின் எழுத்துக்களையும் படிக்க வைத்தவர்.

அதனால் தானோ என்னவோ அவள் காதல் என்ற சொல்லின் அர்த்தத்தை உணர்ந்தது தமிழின் உபாயத்தால் தான்.

அர்த்தத்தை தமிழில் உணர்ந்தாலும் அதன் உணர்வுகளை உணர்ந்தது அவளின் ராமனிடத்தில். ஆம், அவளின் ராமனே தான் அவன்.

ஆனால் இன்று அவன் யார்? என்ற கேள்விக்கு அவளுக்கே விடை தெரியாது.

காதலில் பல வகை உண்டாம்! பார்த்து காதல், பார்க்காமல் காதல், தொலைப்பேசி காதல். இன்னும், இந்த நவீன யுகத்தில் முகநூல் காதல், வாட்ஸ்அப் காதல், இன்ஸ்டாகிராம் காதல் என வகைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

ஆனால் இவளின் காதல் தனி ரகம். ஆம்! கம்பராமாயண காதல். அவளின் ராமனை அதன்மூலம் தான் கண்டறிந்தாள். அவள் எதிர்ப்பார்த்திருந்த ராமன் வந்தான். ஆனால் அது காதல் எனும் அறியும் முன்பே காலம் அவர்களுக்கு பிரிவை அளித்தது.

இன்னும் சில மாதங்களில் பதினான்கு வருடங்கள். ஆம்! அவனை அவள் பிரிந்து பதினான்கு ஆண்டுகள் நிறைவடைய போகின்றன.

நறுமுகைக்கு தன் அக்காவை நினைத்து ஒருபுறம் கவலை உண்டானாலும், ‘எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவள் தன் ராமனுக்காக காத்திருக்கிறாள்’ என்பது மட்டும் பிடிபடாமல் இருந்தது.

“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ஏதோ அறியாத வயசுல பப்பி லவ் வந்துச்சு, சரி. ஆனா அதுக்காக நீ இத்தனை வருஷம் காத்திருக்கணுமா? எனக்கு உன் ராமன் வருவார்னு நம்பிக்கையே இல்ல. இந்நேரம் அவருக்கு கல்யாணம் கூட ஆகி இருக்கலாம். உனக்காக அவரும் காத்திருப்பார்னு நினைக்கிறது சுத்த மடத்தனம், இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியல. கதைகள்ளயும், படங்கள்ளயும் வேணும்னா சாத்தியமா இருக்கலாம். ஆனா நிஜத்துல அதுக்கு வாய்ப்பே இல்ல” என்று கூட கூறிப் பார்த்து விட்டாள் நறுமுகை.

ஆனால் அதற்கு பதில் என்னவோ சிறு புன்னகை மட்டும் தான் மிதிலாவிடமிருந்து.

இதே கேள்வியை அவள் பல நூறு தடவை வினவினாலும் அந்த பல நூறு தடவையும் அவளின் பதில் என்னவோ சிறு முறுவல் மட்டுமே.

“உன்னை சீக்கிரம் கீழ்பாக்கத்துல தான் கொண்டு போய் சேர்க்கணும் போல, ராமன் பைத்தியம் முத்திப் போச்சு” என இவள் கிண்டலடிக்கும் போதெல்லாம் அதனை எல்லாம் அவள் கண்டு கொள்ளாமல்,

“கூட நீயும் வந்துரு டி குண்டச்சி, உனக்கும் பக்கத்து பெட் புக் பண்ணி வச்சறேன்” என்பாள்.

இவளோ தலையில் அடித்துக் கொள்வாள். அதனால் தானோ என்னவோ அவளுக்கும் தமிழுக்கும் அவ்வளவு பிடித்தம் இல்லை. தமிழ் என்றாலே காத தூரம் ஓடுவாள்.

“தமிழ் பாடத்துல மார்க் குறையாது, அதுக்கு மேல என்னை அத படிக்கச் சொல்லாதீங்க” என தலைதெறிக்க ஓடுவாள்.

அவளுக்கு இன்றும் ஒரு சந்தேகம். தன் அக்கா, அகநானூறு, கம்பராமாயணம், நளன் தமயந்தி, சத்தியவான் – சாவித்திரி போன்ற கதைகளை எல்லாம் படித்து தானோ என்னவோ காதலில் இப்படி மூழ்கி கிடக்கிறாள் என்று!

ஆனால் அவள் அறியாள்! இந்த புத்தகங்களை விட அவளுக்கு காதலை, அறியா வயதிலே பயிற்று வித்தவன் அவளின் ராமன் என்று!

தன் அக்காவை நினைத்து நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட, அதனைக் கண்ட மிதிலா,

“என்ன டி, இன்னிக்கும் அதே பிளாஷ்பேக்கா! ஆமா இன்னிக்கு எந்த மெண்டல் ஆஸ்பத்திரில உன் அக்கா இருக்கிற மாதிரி நினைச்ச?” என கிண்டல் செய்பவளைப் பார்த்து,

“உன் காதலுக்காகவாவது என் மாமா வருவாரு க்கா!” என அவள் உதடுகள் முணுமுணுத்தாள்.

“பாரு டா, நான் அக்காவாம், அவரு மாமாவாம். என்ன இந்த திடீர் ஞானோதயம்?” என்றாள் மிதிலா.

“ப்ச்… நீ புடவைய ஒழுங்கா கட்டி விடு” என அவள் பேச்சை மாற்ற,

“நீ மொதல்ல ஒழுங்கா நில்லு” என்றவள் சிறிது நேரத்திலே அவளை அழகான பார்பி டால் போல் மாற்றி விட்டாள்.

இளஞ்சிவப்பு வண்ண புடவை அவள் தேகத்தில் பாந்தமாய் பொருந்தி இருந்தது. அவளின் சந்தன நிறத்திற்கு அது எடுப்பாய் இருக்க அடர்த்தியான கருந்கூந்தல் இளந்தென்றலில் அசைந்தாட அழகோவியமாய் நின்றிருந்தாள் நறுமுகை.

அவளை பார்த்து நெட்டி முறித்த மிதிலா கண்மையினால் அவளின் காதோரம் திருஷ்டி பொட்டு வைத்தாள்.

இருவரும் கிளம்பி வர, அவர்கள் இருவரையும் கண்ட பூங்கோதை, “தேவதை மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும்” என அவரும் தன் பங்கிற்கு நெட்டி முறிக்க,

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுனு ஒரு பழமொழி இருக்கே. அது உண்மை தான் போல” என்ற நறுமுகையை முறைத்தார் பூங்கோதை.

“அப்பறம் என்ன ம்மா, நீ பண்றது உனக்கே ஓவரா தெரியல” என்றாள் நறுமுகை.

“சரி, சரி. ரொம்ப பேசாத, சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பணும்” என்ற மிதிலா சாப்பிட அமர, இதனை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சுந்தரேசனுக்கு அப்பொழுது தான் புத்தியில் ஆணியாய் ஒன்று பதிந்தது.

“நமக்கு தான் அவங்க இன்னும் குழந்தை, ஆனா பெரியவ கல்யாண வயசுல நிக்கிறா. இன்னும் ரெண்டு வருஷத்துல சின்னவளுக்கும் கல்யாணம் பண்ணனும்ல” என்ற நினைப்பை உந்தி தள்ளியது.

“பெரியவ இப்போ தான் வேலைக்கு சேர்ந்திருக்கா, இன்னும் கொஞ்சம் நாள்ள மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்” என நினைத்தவாறே அமர்ந்திருந்தார்.

பூங்கோதையும் தன் கணவனின் யோசனையைக் கண்டவர், தன் மகள்கள் சென்றபின் அதனைப் பற்றி கேட்டு கொள்ளலாம் என தன் மகள்களை கவனிக்கலானார்.

காலையில் அடுப்படியில் வாணலியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான் சிரஞ்சீவி.

“டேய், என்ன டா பண்ற. இன்னுமா அந்த உப்புமாவ கிளற, உன்னைய கிட்சனுக்குள்ள விட்டதுக்கு நானே என்னை அடிச்சுக்கணும்” என்றவாறே ரகுநந்தன் வர,

“எல்லாம் உன்னால தான் டா, அம்மா கையால மணக்க மணக்க தின்னுக்கிட்டு இருந்தவன இப்படி ரெண்டு வருஷமா உப்புமா கிளற விடுறியே!” என அவன் புலம்ப,

“ஆமா. நீ செஞ்ச உப்புமாவோட லட்சணத்த பாரு” என தலையில் அடித்துக் கொண்டவன் வாணலியைப் பார்க்க அதுவோ, அடிப்பிடித்து போய் இருந்தது.

“ஏன் டா, உனக்கு எத்தனை தடவ தான் சொல்லி குடுக்கிறது. டெய்லியும் நான் செய்ற சமையல பார்த்துக்கிட்டு தான இருக்க, அப்புறம் ஏன் இப்படி நீ பண்ணும் போது மட்டும் சொதப்பி வைக்கிற” என்றவன்,

ப்ரிட்ஜில் ஏதாவது உண்ண இருக்கிறதா என ஆராய அதுவோ தன் அகண்ட வாயை திறந்துக் கொண்டு ஒன்றுமில்லை எனக் காட்டியது.

“ப்ரிட்ஜிலயும் ஒன்னுமில்ல, நேத்தே மளிகை சாமான் வாங்கணும்னு சொன்னேன், உன்னால தான் போக முடியாம போய்ருச்சு. இப்போ பாரு, சாப்பிட ஒன்னும் இல்ல” எனப் புலம்பி கொண்டே,

“சரி வா. காலேஜ் கேன்டீன்ல சாப்பிட்டுக்கலாம்” என்றவாறே கதவைத் திறக்க செல்ல அழைப்பு மணி ஒலித்தது.

“இந்நேரத்துல யாரு டா?” என்றவாறே கதவைத் திறந்த ரகுநந்தனோ எதிரில் நின்றவளைக் கண்டு தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக, “என்ன?” என்றான்.

“ரெண்டு பேருக்கும் ப்ரேக்பாஸ்ட்” என அவள் தான் கொண்டு வந்திருந்த ஹாட் பாக்ஸை கொடுக்க,

“நான் கேட்டனா?” என எங்கோ பார்த்துக் கொண்டு இவன் வினவ,

“நேத்து உங்கனால மளிகை கடை போக முடியலனு உங்க ப்ரண்ட் கிட்ட பேசுனத கேட்டேன், அதான் நானே செஞ்சு எடுத்துட்டு வந்தேன்” என்றாள் அவன் எதிரில் நின்றவள்.

“ப்ச். எனக்கு இதெல்லாம் பிடிக்காதுனு தெரியும்ல” எனக் கூற அதற்குள் அங்கு வந்த சிரஞ்சீவி, “டே அன்னத்த வேண்டாம்னு சொல்லக் கூடாது டா, நீ குடும்மா. நான் சாப்பிட்டுக்கிறேன்” என அவளிடமிருந்து ஹாட் பாக்ஸை வாங்கியவன் கூடவே ரகுநந்தனின் முறைப்பையும் வாங்கி கட்டிக் கொண்டான்.

“டே, பசி வயித்த கிள்ளுது டா” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. தன் பணியை செவ்வனே செய்ய சென்றிருந்தான் சிரஞ்சீவி.

இங்கு ரகுநந்தனோ கோபத்துடன் அறை கதவை சாத்த, எதிரில் நின்றவளோ சாற்றிய கதவை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் எதிரே இருந்த பிளாட்டிற்குள் தன்னை புகுத்திக் கொண்டாள் அவள்.

இங்கு ரகுநந்தனோ அதே கோபத்துடன், “நான் கிளம்புறேன்” என்றபடியே கிளம்ப, “டே, ஒரு அஞ்சு நிமிஷம் டா. மணக்க மணக்க வெண் பொங்கல் டா, ப்ளீஸ் சாப்படறேன்” என்க,

“கொட்டிக்கிட்டு நீ மெதுவா வா, நான் கிளம்பணும்” என்றவாறே, ரகுநந்தன் கிளம்ப, “சோறா, காலேஜ்ஜா” என்ற போட்டியில் இறுதியில் சோறே வென்றது.

 

05

ரகுநந்தன் கல்லூரிக்கு கிளம்பி சென்றிருக்க இங்கு சிரஞ்சீவி தன் வேலையை முடித்து விட்டு தான் கல்லூரிக்கு கிளம்பினான்.

மிதிலாவும், நறுமுகையும் கல்லூரியை அடைந்திருக்க, “இன்னிக்கு ஒழுங்கா அமைதியா போனமா, வந்தமானு இருக்கணும் முகி. உன் வாலுத்தனத்த இங்க காட்டாத, சரியா” என தன் தங்கைக்கு அட்வைஸ் மழை பொழிய,

அவளோ எப்பொழுதும் போல் நமட்டு சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.

“ஆடிட்டோரியத்துல தான் உங்களுக்கு பிரஷர்ஸ் பார்ட்டி நடக்கும், அதுனால நான் மதியம் லன்ச் அவர்ல வந்து பார்க்கிறேன், எனக்கு இப்போ கிளாஸ் இருக்கு. நீ பார்த்துப் போ” என்றவாறே மிதிலா கிளம்ப,

“அதெல்லாம் நான் பார்த்துகிறேன், நீ போய் ஒழுங்கா கிளாஸ் எடு டி குட்டச்சி” என்றவள் தன் தோழிகளைக் கண்டு,

“சரி சரி, என் பிரண்ட்ஸ் வந்துட்டாங்க. நான் போய்ட்டு வரேன்” என சிட்டாய் பறந்தாள்.

“ராமா, இவ வாலுத் தனத்த இங்க காட்டிறக் கூடாது” என ராமனிடத்தில் வேண்டிக் கொண்டவள் தன் வகுப்பிற்கு சென்றாள்.

தன் தோழிகளிடம் வந்த நறுமுகை, “வாங்க, எல்லாரும் நம்ம காலேஜ்ஜ ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு அப்புறம் ஆடிட்டோரியம் போகலாம்” என தன் தோழியர் படைகளோடு அந்த கல்லூரியையே வலம் வந்தாள் நறுமுகை.

இடைஇடையே, “எப்படி டி, இத டெய்லி கட்றாங்க. ஷப்பா முடியல, இத ஒரு கையால பிடிச்சுக்கிட்டே நடக்க வேண்டியதா இருக்கு” என தன் புடவையை சரி செய்தவாறே, தோழிகளிடம் குறைப்பட்டு கொண்டிருக்க அவளின் குரல் கேட்டு அவர்கள் இருந்த திசையைப் பார்த்தான் சிரஞ்சீவி.

அப்பொழுது தான் அவன் கல்லூரியில் நுழைந்திருக்க, நறுமுகையின் புலம்பல் குரல் தான் அவனுக்கு முதலில் கேட்டது.

“இது அந்த வாயாடி குரல் மாதிரியே இருக்கே” என திரும்பியவன், ஷாக் அடித்தது போல் நின்றான்.

இளஞ்சிவப்பு வண்ணப் புடவை அவளுக்கு பாந்தமாய் பொருந்தி இருக்க, அவளோ வாயை கோணிக் கொண்டு புடவை மடிப்பை ஒரு கையில் பிடித்துக் கொண்டும் தன் தோழியரிடம் வளவளத்துக் கொண்டிருந்தாள்.

யாரையோ இமிடேட் செய்திருப்பாள் போலும்! “அவன் இப்படி தான் டி லுக் விட்டான்” என கண்ணை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு ஒரு பார்வை பார்த்து வைக்க அந்த பார்வையில் அவன் விழுந்து விட்டான். அழகில் அல்ல, பயத்தில்.

“அவன் எப்படி பார்த்தானோ, ஆனா இவ அத நல்லாவே செய்றா” என முழி பிதுங்கி நிற்க,

அவனைக் கண்ட ரகுநந்தனோ, “டேய், இங்க என்னடா பண்ற? வந்ததே லேட், இதுல இங்க நின்னு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்க. போய் ரெஜிஸ்டர்ல சைன் பண்ணிட்டு வா. நான் ஆடிட்டோரியம் வரைக்கும் போய்ட்டு வரேன், நம்ம போனா தான் கொஞ்சமாவது பசங்க அடங்குவாங்க” என்றவாறே அவன் கிளம்ப,

பேயறைந்தார் போல் இங்கு அவன் கால்கள் தன்னாலே கல்லூரி அலுவலகத்தை நோக்கி எட்டு வைத்தது.

முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா இனிதே தொடங்க, முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று பேசினர்.

அதன்பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற, ரகுநந்தன் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு மீண்டும் தங்களின் டிபார்ட்மெண்ட்டிற்கு வந்தான்.

“சிரஞ்சீவி, நீ ஆடிட்டோரியம் போ டா. எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு, அத முடிச்சிட்டு வரேன்” என்க,

“சரி டா…” என கிளம்பியவன் அதே வேகத்தில் நிற்க, “ஏன்டா?” என்றான் ரகுநந்தன்.

“ஒன்னுமில்ல டா” என்றவன், “டே சிரஞ்சீவி, நீ ரொம்ப தைரியமானவன்ல. அந்த போண்டாகோழிய பார்த்து பயப்படக் கூடாது” என தன் மனதை தானே தேற்றிக் கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு சென்றான்.

போகும் வழியில், “சண்டைக்கோழி படத்துல வர்ற மீரா ஜாஸ்மினயே தூக்கி அடிச்சு சாப்பிட்டுருவா போல! என்ன ரியாக்ஷன் டா அது” என அவன் எண்ணிக் கொண்டே செல்ல மீண்டும் அவளின் குரல் அருகில் ஒலித்தது.

“சாத்தான நினைச்சவுடனே அதுவே வந்து நிக்குது பாரு” என புலம்பிக் கொண்டே திரும்ப, அங்கோ அவளுடன் சேர்ந்து மூன்று மாணவிகள் உடன் நிற்க சீனியர் மாணவர்களிடம் இவள் பேசிக் கொண்டிருந்தாள்.

தன் தோழி உமையாளின் தோளில் கைகளை தாங்கி சற்று தலையை சாய்த்து, “நாங்க உள்ள வந்ததுல இருந்து நீங்க தான என்னை சைட் அடிச்சது?” என்றாள் நறுமுகை அந்த சீனியர் மாணவனிடம்.

“இதென்ன புதுப் பழக்கமா இருக்கு, இவ சீனியர கலாயக்கிறா!” என்றவாறே சிரஞ்சீவி சுவாரசியமாக கவனிக்கத் தொடங்கினான்.

அந்த பையனோ, “அது வந்து…” என அவன் தன் நண்பனின் கைகளை சொரண்ட,

“என்ன பாஸ் நீங்க… என்னை சைட் அடிச்சீங்களானு தான் கேட்டேன், எதுக்கு உங்க பிரண்ட் கைய சொரண்டுறீங்க” என்றவள்,

“நானும் காலைல வந்ததுல இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன். நான் இங்க நின்னா நீங்க அங்க நின்னு பார்க்கிறது, தண்ணி குடிக்கப் போனா பின்னாடியே வர்றது. நான் எங்க போறேன், என்ன பண்றேனு இன்ச் பை இன்ச்சா வாட்ச் பண்றீங்க. என்ன, கண்டதும் காதலா!” என அசால்ட்டாய் அவள் வினவ,

பாவம் அந்த பையனின் நிலை தான் அந்தோ பரிதாபம்.

அவன் மேலும் கீழும் முழிக்க, “சரி ப்ரப்போஸ் பண்ணு, நான் ரெடி” என அவள் தன் தோழியின் மீதிருந்த கைகளை எடுத்த வண்ணம் சொல்ல,

“அடிப்பாவி” என்ற ரீதியில் அவளின் தோழிகள் பார்க்க, சிரஞ்சீவிக்கோ “என்ன மாதிரியான பொண்ணு இவ!” என்றிருந்தது.

“அட ப்ரப்போஸ் பண்ணுங்க சீனியர். நான் எவ்ளோ ஆவலா இருக்கேன் தெரியுமா” என வெட்கப்படுவது போல் அவள் நடிக்க,

அவனோ, “சாரி சிஸ்டர், உங்கள தெரியாம பார்த்துட்டேன்” என்க,

உடனிருந்த தோழிகள் “ஹே முகி உன்னை தங்கச்சி ஆக்கிட்டாங்க டி நம்ம சீனியர்” என்றனர் கோரஸாக.

“சிஸ்டர்னு சொல்லி என் சின்ன ஹார்ட்ட உடைச்சுட்டீங்களே சீனியர்” என அழுகுவது போல் அவள் நடிக்க,

“இனிமே உங்க பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன் மா தங்கச்சி, இந்த ஒரு தடவை எங்களை மன்னிச்சு விட்ரு” என அவன் கையெடுத்து கும்பிட,

“ரொம்ப கெஞ்சுறீங்க, அதுனால விட்டுறேன். ஆனா ஒன்னு!” என அவள் நிறுத்த,

“சொல்லு மா தங்கச்சி, நீ என்ன சொன்னாலும் நான் செஞ்சறேன்” என அவன் பணிய,

‘வான்ட்டடா ஒரு ஆளு சிக்குது. நம்ம யூஸ் பண்ணிக்க வேண்டியது தான்’ என நினைத்தவள்,

“சரி எனக்கு ஃபலூடா ஒன்னு” என்றவள், “உங்களுக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்கோங்க டி, வெய்ட்டர ரொம்ப நேரமா நிக்க வைக்கக் கூடாது” என்க,

அவர்களும் ஆளுக்கொன்றாய் கூற, “ஒரு அஞ்சே நிமிஷத்துல இதெல்லாம் வாங்கிட்டு வந்தறேன் மா தங்கச்சி” என அவன் தலைதெறிக்க ஓட,

“செம முகி, பாவம் சீனியரயே ஓட விட்டுட்ட” என தோழிகள் கூறவும்,

“அப்புறம் இந்த நறுமுகைக்கிட்டயே வாலாட்டுனா அப்படி தான்” என்றவாறே அவள் திரும்ப திறந்த வாய் மூடாமல் அப்படியே அதிர்ச்சியில் இருந்தது.

எதிரே சிரஞ்சீவி கைகளை தன் மார்பின் குறுக்கே கட்டிய வண்ணம் நின்றிருந்தான்.

“என்னாச்சு டி” என்றவாறே அவள் தோழியர் கூட்டமும் திரும்ப சிரஞ்சீவியைக் கண்டு,

“அய்யோ மாட்டிக்கிட்டமே!” என அதிர்ந்தனர்.

“ஃபலூடா மட்டும் போதுமா மேடம், இல்ல இன்னும் வேற ஏதாவது வேணுமா? சொல்லு, நான் வேணும்னா உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்க,

அவளோ, “உங்களுக்கு தாராள மனசு சார். இது போதும், நாங்க கிளம்புறோம்” என்றவாறே, “எஸ்கேப் ஆகுங்க டி” என முணுமுணுத்தவள்,

மெதுவாக நகரத் தொடங்க, “எங்க மேடம் போறீங்க. கொஞ்சம் நில்லுங்க” என்றான் சிரஞ்சீவி.

“அய்யோ, இவரு வேற திரும்ப நிக்க சொல்றாறே, இப்போ என்ன பண்றது” என அவள் தோழிகள் பயத்தில் நறுமுகையிடம் முணுமுணுக்க, அவளோ “ஹேய் இருங்க டி, அவரா நம்மளானு ஒரு கை பார்த்துருவோம்” என்றாள்.

“நீ பார்ப்பம்மா. நாங்க?” என அவள் தோழிகளோ பிடிபட்ட கோழிகளாய் திருட்டு முழி முழிக்க, அந்நேரம் பார்த்து அவர்கள் ஆர்டர் செய்ததை வாங்கி கொண்டு அங்கு வந்திருந்தனர் அந்த சீனியர் மாணவர்கள்.

அந்த மாணவர்கள் சிரஞ்சீவியைக் கண்டு தயங்கியபடி நிற்க, “என்ன?” என்ற பார்வையில் அவன் பார்க்க,

“அதுவந்து சார், இத இவங்க கிட்ட கொடுக்க வந்தேன்” என்றான் அவர்களின் ஒருவன்.

“இவங்க கேட்டாங்களா?” என்க, இங்கு நறுமுகையோ “போட்டு கொடுத்த, உன்னை தினமும் ஃபலூடா வாங்க வச்சுருவேன்” என முறைக்க,

அதனைக் கண்டு மேலும் அதிர்ந்தவர்கள், “இல்ல சார். இது என் தங்கச்சி” என நறுமுகையை காட்டி கூறியவன், “அவங்களுக்கு ஃபலூடா ரொம்ப பிடிக்கும், அதான் வாங்கிட்டு வந்தேன். கொடுத்துட்டு போய்ட்றேன் சார்” என்க,

“ம்…” என்றவன், ‘சைட் அடிச்சவன் வாயாலயே தங்கச்சினு சொல்ல வச்சுட்டா இந்த போண்டா கோழி’ என நினைத்தான் சிரஞ்சீவி.

அதே நேரம் மிதிலாவும் அங்கு வர, “என்ன டி பண்ணித் தொலச்ச? நீ நிக்கிற தோரணையே சரியில்லயே” என்றவள், சிரஞ்சீவியைப் பார்த்து,

“ஏதாவது ப்ராப்ளமா சார்” என்றாள் மிதிலா.

அவன் கூறுவதற்குள், “அதெல்லாம் ஒன்னும் இல்ல க்கா, என் கிளாஸ் மென்டார் சார் தான் இவரு. சும்மா கிளாஸ் பத்தி கேட்டுக்கிட்டு இருந்தாரு, அப்படி தான சார்…” என அவள் இழுக்க,

‘அடிப்பாவி, இப்போ ‘ஆமானு சொல்லுங்கிற’ மாதிரி டோன்லல சொல்றா இவ!’ என நினைத்தவன்,

“உங்க தங்கச்சியா மேடம் இவங்க” என்றான் சிரஞ்சீவி.

“ஆமா சார்” என்றவள், “அவ ஏதோ பண்ணிருக்கானு தெரியுது சார். அவளுக்கு பதிலா நான் சாரி கேட்டுகிறேன்” என்க,

“இட்ஸ், ஓ.கே மேம். நான் பார்த்த மாதிரி வேற எந்த ஸ்டாப்பாவது பார்த்திருந்தா இந்நேரம் சீனியர ஜீனியர் ரேக்கிங் பண்ண கேஸ்ல தூக்கி உள்ள வச்சுருப்பாங்க” என்றான்.

“அப்படி உள்ள வச்சா நாங்க ஜாமீன் வாங்கிட்டு வெளிய வருவோம்” என முணுமுணுத்தாள் நறுமுகை.

அது அவன் காதிலும் விழத் தான் செய்தது.

“சாரி சார், அவ சின்னப்பொண்ணு. இன்னும் ஸ்கூல் பொண்ணு மாதிரியே பிகேவ் பண்றா, சாரி” என்றாள் மிதிலா.

“ஓ.கே மேம்” என்றவன், நறுமுகையை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

“ஹேய், சீக்கிரம் வா டி, நான் ஃபலூடா சாப்பிடணும்” என்றவள், அருகில் இருந்த கேன்டீனுக்கு செல்ல உடன் இருந்த தோழிகளோ, மிதிலாவை பார்த்து, “நாங்க ஆடிட்டோரியம் கிளம்பறோம் மேம்” என்க,

“சரி, கிளம்புங்க” என்றவள், தன் தங்கையுடன் கேன்டீனில் அமர்ந்தாள்.

காலை உணவு உண்ணாமல் இருந்ததால் பசி வேறு வயிற்றை கிள்ள ரகுநந்தன் சிரஞ்சீவியுடன் கேன்டீன் வந்திருந்தான்.

மிதிலாவும் நறுமுகையும் அமர்ந்திருந்த டேபிளுக்கு அருகிலே அவர்கள் அமர, இவர்களை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை மிதிலா.

“அறிவிருக்கா டி குண்டச்சி, என்ன பண்ணித் தொலச்ச. இப்படி சார்கிட்ட மாட்டிக்கிற மாதிரியா பண்ணி தொலைப்ப?” என அவள் கடுகடுக்க,

“அட போடி குட்டச்சி. ஃபலூடா செம டேஸ்ட் தெரியுமா” என அவள் சப்பு கொட்டி சாப்பிட, அவளோ தலையில் அடித்துக் கொண்டாள்.

‘குட்டச்சி’ என்ற அழைப்பில் ரகுநந்தன் அவர்களைப் பார்க்க, நறுமுகையோ ரசித்து உண்டு கொண்டிருக்க, மிதிலாவோ கோபத்துடன் அமர்ந்திருந்தாள்.

“இப்போ நான் என்ன பண்ணிட்டேனு நீ இப்போ விசுவாமித்திரர் ரேன்ஜ்க்கு அக்னி தீயில மூழ்கி கிட்டு இருக்க?” என அவளோ கூலாக வினவ,

“என்ன பண்ண, அத முதல்ல சொல்லு” என்றாள் மிதிலா.

நறுமுகையும் அவளை பாலோ பண்ண சீனியர் பையன்களை அவள் அழைத்து பேசியதைக் கூறினாள்.

“அடங்கவே மாட்டியா டி குண்டச்சி” என அவள் சலிப்புடன் கூற,

“நான் என்ன டி தப்பு பண்ணேன். எல்லாம் உன்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன்” என்க,

“நான் என்ன டி பண்ணேன்” என அவள் முறைக்க,

“ஆமா, நீ தான ஒரு தடவ ஸ்கூல்ல உன் பின்னாடி சுத்துன பையன அவன் வாயாலயே உன்னை தங்கச்சினு சொல்ல வச்ச. அத தான் நானும் பண்ணேன், என்ன நான் காலேஜ்ல பண்ணிட்டேன். என்னையும் ஸ்கூல்ல எவனும் பார்த்திருந்தா இத தான் பண்ணிருப்பேன்” என அசால்ட்டாய் கூற,

இதனையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரகுந்தனுக்கோ சிரிப்பு வந்தது. அவனோ குட்டி மிதிலா ஒரு பையனை நறுமுகை போலவே வம்பிழுப்பதாக நினைக்க அவன் இதழ்கள் தன்னால் புன்னகையில் மலர்ந்தது.

அதனைக் கண்ட சிரஞ்சீவி, “என்ன டா தனியா சிரிக்கிற? சாப்பிடல” என்றான்.

அவனோ, “ஸ்…” என வாயில் கை வைத்து அமைதியாக இருக்க சொல்லியவன், மேலும் அக்கா, தங்கை சம்பாஷணைகளை கேட்கத் தொடங்கினான்.

“என்னிக்காவது ஒரு நாள் நீ செமத்தயா அடி வாங்க போற” என்க,

“அத அப்போ பார்த்துக்கலாம். இந்தா மீதி இருக்கிறத நீ சாப்பிடு” என அவள் புறம் ஃபலூடாவை தள்ள அவளோ அதனைக் கண்டு முறைத்தாள்.

“வழிச்சு தின்னுட்டு என்னை என்ன கிளாஸ்ஸ சாப்பிட சொல்றியா டி குண்டச்சி” என்க,

“சரி, சரி. கோபப்படாத, ஈவ்னிங் ரெண்டு பேரும் வீட்டுக்கு போகும் போது சாப்பிடலாம் அக்கா. டாடா” என சிட்டாய் அவள் பறக்க, மிதிலாவோ போகும் நறுமுகையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரகுநந்தனுக்கோ அவளை வம்பிழுக்க தோன்ற, தன் நண்பனிடம் “மச்சான், வினை, எதிர்வினை இதெல்லாம் கேள்வி பட்டுருக்கியா?” என சத்தமாக வினவ அவன் கேட்டது மிதிலாவின் காதிலும் விழுந்தது.

“வினை, எதிர்வினையா! டேய் நான் இது தெரியாம எப்படி டா கெமிஸ்ட்ரில கோல்ட் மெடல் வாங்க முடியும்?” என பாவமாய் அவன் பார்க்க,

“அதுவந்து மச்சான், நம்ம என்ன பண்றமோ அதுவே ஒருநாள் நமக்கு எதிர்வினையா வந்து அமையுமாம்!” என அவனே பதிலும் அளிக்க, பாவம் சிரஞ்சீவி தான் ஒன்றும் புரியாமல் குழம்பி போனான்.

ஆனால் புரிய வேண்டியவளுக்கோ நன்றாக புரிந்தது என்பதை அவளின் முறைப்பே பதில் சொன்னது.

அவள் வேகமாக கோபத்துடன் வெளியேற, இங்கு சிரஞ்சீவியோ “என்னடா ஆச்சு உனக்கு?” என்றான்.

“ஒன்னும் இல்லயே. நீ சாப்பிடு” என்க, “அப்புறம் எதுக்கு டா வினை, எதிர்வினை பத்தி பேசுன?” என்றான் சிரஞ்சீவி.

“வினை, எதிர்வினையா! நான் ஏன் மச்சான் அதப் பத்தி கேட்க போறேன்” என இவன் அந்தர் பல்டி அடிக்க,

அவனோ “ஙே…” என முழித்தான்.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்