Loading

வாழ்க்கை நாடகமா
என் பொறப்பு பொய் கணக்கா
தினந்தோறும் வெறும் கனவா
என் விதியை எழுதையிலே
அந்தச் சாமியும் உறங்கியதே!!!

சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் தனது சொகுசு காரை 140 கிமீ வேகத்தில் பறக்க விட்ட பெண்ணின் இனிமை நிறைந்த குரலில் எதிரொலித்த பாடலோ வெகு சலிப்பாய் வந்தது.

இலேசாய் சுருண்டிருந்த கூந்தல், தோள்களில் பரவி, அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்ததன் காரணமாக அவள் அசைவுக்கெல்லாம் அழகாய் சிணுங்கியது.

அலட்டலில்லாத அழகிதான். வாழ்க்கையும் கொஞ்சமே கொஞ்சம் அழகாய் இருந்திருக்கலாம் என்ற எப்போதுமிருக்கும் வருத்தத்தை எல்லாம், எப்போதும் போலவே கண்டும் காணாதது போல ஒதுக்கி விட்டு, பாடலைத் தொடர்ந்தாள். மௌனி ஆதிரா.

அதுவரையில் கார் டேஷ்போர்டில் காலை நீட்டி சரிந்து அமர்ந்திருந்த வினயன், அவள் பாடலைக் கேட்டதும் சடாரென எழுந்து, “சே, சே! சாமி எல்லாம் தூங்கியிருக்காது. நல்லா கொட்டக் கொட்ட முழிச்சுத்தான் உன் விதியை எழுதியிருக்கும். ஏன்னா, உன் விதியோட சேர்த்து எங்க விதியையும் சிறப்பா செதுக்கி இருக்காரே அந்தத் தெய்வம். தூங்குனா இவ்ளோ சிறப்பா எழுதி இருக்க முடியாது, என் தங்கத் தங்கையே!” எனச் சிலாகித்தான்.

மௌனியின் பெரியப்பா மகன். 27 வயது நிரம்பிய ஆண்மகன். ஆனால், விழிகளில் ஒரு மரண பயம் தாண்டவமாடியது. பயத்தை மறைக்க உறங்க முயன்றவனை அவளது பாடல் இன்னும் கொஞ்சம் கடுப்பேற்றியதில் கடுகடுவென அமர்ந்திருந்தான்.

“டேய், வினயம் பிடிச்சவனே… உன்னை வச்சுட்டு நிம்மதியா ஒரு பாட்டுக் கூட பாட முடியல…” அதே கடுப்புடன் மௌனி பற்களைக் கடிக்க,

“நீ உன் மனசாட்சியைக் கூட மௌனமா பாடி அது கழுத்தை அறு!” வினயன் கத்தும் போதே, பின் பக்க இருக்கையில் குட்டித் தலையணை வைத்து அசந்து உறங்கிக் கொண்டிருந்த அவர்களின் சித்தி மகள் ஜனனி, “என்னது கழுத்தை அறுக்கப் போறாங்களோ? யாரு யாரு!” என்று பயந்து எழுந்து அமர்ந்தாள்.

“ஹையோ…” வினயனும் மௌனியும் கோரஸாகக் கத்தித் தலையில் அடித்துக் கொள்ள, எஃப்.எம்-இல் அவள் பாடிய அதே பாடல் நிஜமாக ஒலித்தது.

கிழக்கு சிவக்கையிலே
கீரை அறுக்கையிலே…

என நெப்போலியன் முகம் கண் முன்னே வந்ததில் இம்முறை மூவரும் சிரித்தே விட்டனர்.

“டைமிங் சாங். அதோ பாருங்க, சன்ரைஸ் வரப்போகுது!” என வானத்தைக் கைகாட்டினாள் மௌனி ஆதிரா.

வினயன்தான், “ஜஸ்ட் மிஸ்ஸானா அந்த சன்னுக்கே நம்ம இரையாகிடுவோம் மௌனி. எங்களை விடு. இப்ப டார்கெட்டே நீ தான். ப்ளீஸ், இந்தச் சூழ்நிலைல இந்த ரிஸ்க் வேணாமே…” என்றவனின் முகத்தில் நிஜ வேதனையும் அன்பும்.

“வினய் சொல்றதும் சரிதான் மௌனி…” ஜனனியும் தன் பங்கிற்குப் பேச வர, சாலையைப் பார்த்தபடியே கையை நீட்டியவள், “ரிஸ்க்தான். ஆனா என்னோட நல்லதுக்கும் யோசிச்சுத்தான் செய்றேன். நீங்க இப்ப என் கூட வந்ததுதான் பெரிய ரிஸ்க். உங்களை யாரு வரச் சொன்னா? பெரியப்பனும் சித்தப்பனும் என் கூட உங்களைப் பார்த்தா, முதல் பலியாடு நீங்கதான்.” என இருவரையுமே தீப்பார்வை பார்த்தாள்.

வினயன் கொந்தளித்து விட்டான்.

“என்ன பேசுற நீ? உன் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் எப்படி அமைதியா இருக்குறது? அப்பனுங்கன்னா நிலாக்காட்டி சோறு ஊட்டணும். இவனுங்க துப்பாக்கியைக் காட்டித் தெறிக்க விடுறானுங்க. நீ பெங்களூர்ல பாதுகாப்பா இருந்துட்டன்னு தெரிஞ்சாதான் எங்களால நிம்மதியா இருக்க முடியும். நானும் ஜன்னியும் இந்தப் பிரச்சினை எல்லாம் முடியிற வரை ஃபாரின் ட்ரிப் போறோம்னு விசா, டிக்கெட்னு எல்லாம் வாங்கி வச்சோம். எங்க அப்பாக்களையும் நம்ப வச்சோம். அவங்களே நம்பிக்கை இல்லாம எங்களை பிளைட் ஏத்தி விட வந்தாங்க. நாங்க பிளைட் ஏறுற மாதிரி ஏறி ஏமாத்தி…” எனச் சொல்லி முடிக்கும் முன்னே, மௌனி ஆதிரா தொடர்ந்தாள்.

“ம்ம்க்கும், எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு என் கார்ல வந்து ஏறிட்டீங்க. அதான? ஏன்டா, நான் என்ன மைசூர் பேலஸைச் சுத்திப் பார்க்கவா போறேன்? உசுருக்குப் பயந்து ஓடிப்போய்ட்டு இருக்கேன்டா, அப்பரசண்டிகளா… சரி, இப்ப நீங்க வெளிநாட்டுல ரீச் ஆகலைன்னு டேடிஸ்க்குத் தெரிஞ்சா உங்களை ஃபாலோ பண்ணிட்டு வந்துட மாட்டாங்களா?”

“அதெல்லாம் எங்க சிம், போன் எல்லாமே மாத்திட்டோம். இப்போதைக்கு நாங்க இந்தியால இல்ல. அவ்ளோதான். அப்படி எல்லாம் உன்னை விட்டுப் போக முடியாது மௌனி. நீ பெங்களூர் போனா மட்டும் உன்னைக் கண்டுபிடிக்க மாட்டாங்களா? உனக்கு எப்ப என்ன பிரச்சினை வருமோன்னு பயந்துட்டே எங்கயோ போய் இருக்குறதுக்கு உன்கூடவே இருந்துடலாம்…” என்றவனின் அன்பு இனிப்பதற்குப் பதிலாகக் கசந்தது.

அவள் பதிலேதும் சொல்லவில்லை.

ஆனால் ஜனனிதான், “நீ மைசூர் பேலஸைச் சுத்திப் பார்க்கப் போகலைதான். ஆனா ஒரு வகைல ஒரு ஜலஜலா குளுகுளுக்குத்தான போற…” என நொடித்துக் கொண்டாள்.

“அதென்ன ஜலஜலா குளுகுளு…” வினயன் கேட்டதில், கண்ணாடி வழியே ஜனனியை முறைத்து வைத்தாள் மௌனி.

“உனக்குத் தெரியாதா? கொஞ்ச நாள் முன்னாடி, விஜய் தேவரகொண்டால ஆரம்பிச்சு ரிஷிகாந்த் வரை க்ரஷ் லிஸ்ட் வச்சுருந்தவ, அவங்களை எல்லாம் தூக்கித் தூர போட்டுட்டு, ஒருத்தனை க்ரஷ்ஷா நினைச்சு அவனுக்கு இன்ஸ்ட்டால ஃபேன் பேஜ் எல்லாம் ஆரம்பிச்சாளே…”

“ஃபேன் பேஜா? இதென்ன மௌனி புது ஹீரோ? எந்தப் படத்துல வருவான்? உன் ஃபேன் பேஜ் ஐடியை எனக்கு ஒரு ஷேர் கூட பண்ணலை…” எனக் குறை கூறிய வினயனின் தலையில் நங்கென அடித்த ஜனனி,

“டேய், அவன் ஹீரோலாம் இல்ல. பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் போட வந்தவன். பார்க்கப் படமா இருந்தான். இப்ப இவள் வேலைக்குப் போறேன்னு சொல்றது கூட அவன்கிட்டதான். அதுனாலதான் நம்மகிட்ட கூட சொல்லாம ஓடிப்போகத் திட்டம் போட்டா…” எனக் குமுறிட, “அடிப்பாவி…!” என வாயில் கை வைத்தான் வினயன்.

“ஏய் ஜன்னி… நீ சொல்ற கதையைக் கேட்டா என்னவோ நான் அவன் பின்னாடி காதலிச்சுச் சுத்துற மாதிரி இருக்கு. பார்க்க அழகா இருந்தான். ரொம்ப இன்னசன்ட். தன்னை அடிக்க வர்றவங்களைக் கூட அணைச்சு வழியனுப்பி வைக்கிற ரகம் போல. அன்னைக்கு பெட்ரோல் பங்க்ல என்ன நடந்துச்சுன்னு பார்த்த தான. ஹொவ் ஸ்வீட் பாய்!” என வெகுவாய் ரசித்துக் கூறியவளைத் தலையைச் சொரிந்து பார்த்தான் வினயன்.

“ஆமா, பெட்ரோல் பங்க்ல என்ன நடந்துச்சு?”

“இப்ப அதுவா முக்கியம்? ஆள் எப்படி இருந்தான்னு கேளுடா வினை…” மௌனி ஆர்வமாக,

“நீ என்னை கேவலமா கூட திட்டு. ஆனா இப்படி என் பேரைக் கொல்லாத!” எனக் கதறியவனைக் கண்டுகொள்ளாமல், “தட், கை கூலிங் கிளாஸைப் போட்டுட்டு தன்னை மிரட்டுனவனை கண்ணாலேயே ஒரு பார்வை பார்த்துட்டு அமைதியா கார்ல வந்து ஏறுனான் பாரு. அடடடா… பொறுமையில ஊறிப்போனவன் போலடா. இந்த மாதிரி கியூட் கைஸ எல்லாம் பாதுகாக்கிறது என்னை மாதிரி ஒரு ஸ்வீட் பொண்ணோட கடமைடா தமையா!” என்றதில் அவனோ அழுகாத குறைதான்.

“அதாவது நீ அவனைப் பாதுகாக்கப் போற…”

“யா!”

“அதாவது உன் கழுத்துல கத்தி தொங்குது. அதை எடுக்க வராத வேகம். அவன் கழுத்துல கத்தி தொங்குனா வந்துடும்.”

“என் கழுத்துல கத்தி தொங்குனா தான் வித்தை காட்டித் தூக்கிடுவேனே. ஸ்னைப்பர்லாம் வச்சுருக்கானுங்கடா என் எதிரிங்க. ஆனா அவன் எதிரிங்க இன்னும் கையில கத்தியை வச்சுத்தான் ஓட்டிட்டு இருக்கானுங்க. அவனோ சண்டைன்னாலே ரெண்டு ஸ்டெப் பின்னாடி போறான். அவனுக்காகத்தான் போறேன். பட் இதுல இன்னொரு விஷயமும் இருக்கு…” என விளக்கிட,

“நீ ஓடிப்போறப்பவே இந்த விளக்கத்தைக் குடுத்துருந்தா நாங்க வெளிநாட்டுக்கே போயிருப்போமே!” எனக் கதறிய வினயன், “அதுசரி… அவன்கிட்ட நீ என்ன வேலைக்குப் போகப் போற?” எனக் குழப்பமாகக் கேட்டான்.

“ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச்!” கூந்தலைப் பின்னால் தள்ளிக்கொண்டு இன்னும் வேகத்தை அதிகப்படுத்தியவளைச் சூரியக்கதிர்கள் பெங்களூரினுள் அழகாய் வரவேற்றது.

அவளை வரவேற்ற சூரியக்கதிர்களின் மூடிய திரைச்சீலை தாண்டியும் அவன் முகத்தில் படர்ந்து துயிலைக் கலைத்தது. கூடவே அலைபேசி அழைப்பும்.

சித்தாந்தன் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்-இன் ஃபவுண்டர். அவன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த சொகுசு காரை, ஷோரூமிற்கு கண்டெய்னரின் உதவியுடன் எடுத்து வரும்போதே, அந்தக் கண்டெய்னரை விபத்துக்குள்ளாக்கியது அறிந்து, “ஓ… ஃபைன். வாட் அபவுட் தி இன்டர்வியூ?” என வெகு இயல்பாகக் கேட்டான்.

எதிர்முனையில் பேசியவரோ, “இன்னைக்கு ஷெட்யூல் பண்ணியிருக்கேன்…” என்றதில், அழைப்பைத் துண்டித்து விட்டான்.

இது முதல் தடவை அல்ல. கடந்த மூன்று மாதங்களாக அவனுக்கு நேரும் நான்காவது குடைச்சல்.

முதல் மூன்று முறையும் எதிர்வினையாற்றாது பொறுத்துப் போய் விட்டான். ஆனால் இம்முறை?

அவன் அலைபேசியைத் துண்டித்து விட்டது தெரிந்து சந்திரசேகர் அலைபேசியை வெறிக்க,

“இந்தத் தடவையும் அமைதியா போகப் போறான் அதான? ஸ்டாப் திஸ் நான்சென்ஸ், டாட்!” பெங்களூருவில் மத்திய பகுதியில் அமைந்திருந்த இரண்டடுக்கு பங்களாவின் பால்கனியில் நின்று அவரிடம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தான் அர்னவ் தேவ்.

அவன் எதிரில் மௌனமாக நின்றிருந்த சந்திரசேகரை இன்னும் எரிச்சலுடன் ஏறிட்டவன்,

“ஏதோ ஒரு லோக்கல் பிசினஸ்மேன் நம்மளை ஈஸியா நினைச்சு அட்டாக் பண்ணிட்டே இருக்கான். அவனும் அமைதியா இருக்கான். எங்களையும் ரியாக்ட் பண்ண விட மாட்டுறான். முதல்ல அவன் எதுக்காக இங்க வந்தான்? இத்தனை வருஷம் கழிச்சு அவன் வந்ததும், உடனே அவன்கிட்ட எல்லாப் பொறுப்பையும் ஏன் குடுத்தீங்க? நானும் ருஹாவும் இந்த சித்தாந்தன் க்ரூப் ஆஃப் கம்பெனீஸுக்காக எங்க மொத்த உழைப்பைப் போட்டிருக்கோம், டேட். என்னதான், இது அவனோட பரம்பரைத் தொழிலா இருந்தாலும் என்னால அவனை இங்க முதலாளியா பார்க்க முடியாது. அண்ணனாவும் தான்!” என்றான் கர்ஜனையுடன்.

அவனால் ருஹாவென அழைக்கப்பட்ட ருஹானா ஜியா, விரலில் பூசியிருந்த நகப்பூச்சைச் சுரண்டினாள்.

கோபம் மட்டுப்பட மறுத்தது. யார் வீட்டு உழைப்பை யார் சூறையாடுவது? கடந்த சில மாதங்களாக அவன் வரவு, சித்தாந்த வம்ச வாரிசுகளுக்குக் கடும் சினத்தைக் கொடுத்தது.

அதிலும் கண்டவர்கள் எல்லாம் கை வைக்கும் அளவு, எதிரிகளுக்குத் தங்களின் மீதிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வருவது உணர்ந்து சினம் எல்லையை மீறியது.

“எனஃப் பெரியப்பா. இனி இந்த மேனேஜ்மெண்ட்ல இருக்க எனக்குப் பிடிக்கல. என் ஷேரைக் குடுத்துடுங்க. ஐ ஆம் லீவிங்!” எளிமையாக அவர்களிடமிருந்து விடுபட முயன்றாள்.

“என்ன பேசுற ருஹா?” அர்னவ் கண்டிக்க,

“வேற என்ன ப்ரோ பண்ணச் சொல்ற? அவனுக்கு கீழ நான் வேலை பார்க்கணுமா? எனக்கு என்ன தலையெழுத்தா? உனக்காவது அவன் உன் ஸ்டெப் பிரதர். எனக்கு… அவன் வெறும்…” எனக் கூந்தலைப் பிடுங்கிக் காட்டியதில்,

“அவன் எனக்குப் பிரதர் இல்ல!” எனப் பல்லைக் கடித்தான்.

“நீ இப்ப இப்படி சொல்லுவ. என்ன ஆனாலும் தொழில்ல உன்னோட பங்கு மாறப்போறது இல்ல. ஆனா, திடீர்னு அவன் கூட சேர்ந்து ரெண்டு பேரும் என்னை வெளில அனுப்ப வாய்ப்பு இருக்கே. என்ன இருந்தாலும் நான் உன் சித்தப்பா பொண்ணு தான? பட் உனக்கும் அவனுக்கும் இருக்குற உறவுமுறை அப்படி இல்ல ப்ரோ. எதுலயும் நான் ஏமாற தயாரா இல்ல. தொழில்லயும் சரி, உனக்கும் எனக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப்லையும் சரி… முன்னாடியே நான் டீசண்ட்டா விலகிடுறதுதான் எனக்கு சரின்னு தோணுது…” என்றவளை ஆற்றாமையுடன் பார்த்தான்.

“உனக்கு யார்மேலயும் நம்பிக்கை வராது சரி… என்மேலேயுமா?” அர்னவின் கேள்வியில் பெருமூச்சு விட்டவள், “யார் மேலயும் நம்பிக்கை இல்லாம இருக்குறது பெட்டர், ப்ரோ. மோர் ஓவர், உன் மேல இன்னுமே நம்பிக்கை இருக்கறதுனாலதான் தைரியமா என் பங்கை நான் கேக்குறேன்…” என்றவளின் பேச்சில் உருகுவதா, சலிப்படைவதா எனத் தெரியவில்லை.

தங்களின் இந்த மனநிலைக்கு யார் காரணம் அவன் தானே?

சுறுசுறுவென ஆத்திரம் சூழ்ந்தது அர்னவிற்கு.

இருவரையும் அதே அமைதியுடன் ஏறிட்ட சந்திரசேகர் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு, “ரெண்டு பேரும் பேசி முடிச்சாச்சா? இப்ப நான் பேசுறதைக் கேக்குறீங்களா?” என்றார் அழுத்தமாக.

“உங்களுக்கு இருக்குற அதே வெறுப்பு எனக்கு அவன் மேல இல்லாம இல்ல. இத்தனை வருஷமும் உங்களோட முடிவுல நான் தலையிட்டு இருக்கேனா? இல்லைல… அப்போ எனக்காக இந்த ஒரு தடவை கொஞ்ச நாள் நீங்க ரெண்டு பேரும் இந்த அசௌகரியத்தை ஏத்துக்கோங்க. நேரம் வரும்போது நான் எல்லாமே சொல்றேன். ருஹா, ப்ளீஸ்…” என இருவரிடமும் கோரிக்கை வைத்ததில், அரைமனத்துடனே தலையசைத்தனர்.

இவர்களின் கோபத்திற்கு சொந்தக்காரனோ, கண்டெய்னரைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாது, சூர்ய நமஸ்காரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்.

கூடவே, தனது கட்டுக்கோப்பான புஜங்கள் தெறிக்க, உடலை வளைத்து நெளித்து யோகாசனத்தில் மூழ்கினான்.

அவன் சொல்பேச்சுக்கெல்லாம் தலையாட்டி உடலும் மனமும் ரப்பர் போல வளைந்தது. யோகாசனத்திற்கு மட்டுமே வளைந்து கொடுக்கும் மனம்.

அன்பிற்கோ, பாசத்திற்கோ, தேவையற்ற உணர்வுகளுக்கோ சிறு துளி இடமும் அவனிடம் இல்லை.

சூர்ய சித்தாந்தன். அவன் எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. அவன் பார்வைக்கே பதுங்கி விடும் எதிரிகள் பலர் உண்டு. இன்னும் கொஞ்சம் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவே தன்னை முற்றுகையிட ஒரு நிலவுப்புயல் வருகிறதென்ற முன்னெச்சரிக்கை இன்றி கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தான்.

மனசுக்குள்
ஒரு புயல் மையம்
கொண்டதே அதன்
பெயர்தான் என்ன
புயலுக்கு காதல் என்று
பேர் சொல்கின்றாய்
அடுத்த நிலைதான் என்ன…

மௌனி ஆதிரா வாழ்க்கைத் தத்துவத்தில் இருந்து ரொமான்டிக் மோடிற்கு வந்திருக்க, குரலில் உருகல்களும் அதிகமாக இருந்தது.

தொப்பியை முகத்தில் போட்டு அப்போதாவது உறங்கலாம் என எத்தனித்த வினயன், “அடுத்த நிலைய பத்தி நீ யோசிக்க வேணாம் மௌனி. புதைக்கிறதா எரிக்கிறதான்னு கொலை பண்ண வர்றவன் முடிவு எடுத்துப்பான். நீ ஜஸ்ட் உயிரைக் குடுத்தா மட்டும் போதும்…” என்றதில், கடுப்பானவள் தொப்பி மூடிய முகத்திலேயே ஒரு குத்து விட்டதில், மயக்க மருந்தின்றியே மயங்கிப் போனான் பாவம்.

ரசித்திட வருவாள்(ன்)

மேகா

Click on a star to rate it!

Rating 4.1 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்