Loading

அத்தியாயம் 19

 

முதலில் அவனுடன் தொடர்ந்து அலைபேசியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவள் இப்பொழுது அன்றாடம் அவனைச் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

 

பெரும்பாலும் காலை அவன் அலுவலுக்குக் கிளம்புவதற்கு முன்பே தனது ஈருருளியில் அவனது வீட்டிற்குச் சென்று அவனுடன் அருகிலிருக்கும் உணவகத்தில் காலை உணவை உண்டுவிட்டு செல்வதை வழக்கமாக்கி இருந்தாள் அர்ச்சனா.

 

இவ்வாறாக இரு மாதங்கள் கடந்திருந்த நிலையில் வந்தது அவனின் பிறந்தநாள்.

 

பிறந்த நாளுக்கு முந்தைய நாள் அர்ச்சனா அவனைச் சந்தித்த போது கூட தனது பிறந்தநாளைப் பற்றி அவளிடம் எதுவும் கூறவில்லை அவன்.

 

அர்ச்சனாவிடம் கூறாத போதும் மறுநாள் காலை வழமைப்போல் அவளுடன் உணவகத்திற்குச் செல்லும் போது அவளிடம் கூறிவிட்டு அவளையும் கோவிலுக்கு அழைத்துச் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தான் அர்ஜூன்.

 

ஆனால் அவனின் பிறந்தநாள் அன்று காலை அவனுக்கு அழைத்த அர்ச்சனா, அன்று அவளுக்கு காலையிலேயே கச்சேரி வேலை இருப்பதாகக் கூறி அவனைச் சந்திக்க வர முடியாது என்று உரைத்து விட்டாள்.

 

பெருத்த ஏமாற்றத்தை உணர்ந்தான் அர்ஜூன். இந்தப் பிறந்தநாளை அவளுடன் மகிழ்வாய் கொண்டாட திட்டமிட்டிருந்தவனுக்கு ஏமாற்றமாகிப் போனது. அப்போதும் தனக்கு இன்று பிறந்தநாள் என்று அவளிடம் கூறவில்லை.

 

இயல்பாய் பேசிவிட்டு இருவரும் அவரவர் வேலையை அன்று பார்த்திருந்தினர்.

 

அவனது ஹோட்டலில் பணியாளர்களின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடும் வழக்கத்தை உண்டு செய்திருந்தான் அர்ஜூன். ஜீவா தான் அந்த வேலையைப் பொறுப்பேற்றுச் செய்திருந்தான். அதனால் அன்று மாலை அர்ஜூன் பிறந்தநாளுக்கு ஜீவா கேக் ஏற்பாடு செய்திருக்க, அந்த கேக் வெட்டும் கொண்டாட்டத்திற்கு சர்ப்ரைஸ்ஸாக அர்ச்சனா வருவாள் என்று எதிர்பார்த்தான் அர்ஜூன்.

 

அவளுக்குத் தனது பிறந்தநாள் பற்றித் தெரிந்திருக்கும், தனக்கு ஏதோ சர்ப்ரைஸ் செய்ய தான் காலை அவள் தன்னைச் சந்திக்க வரவில்லை என்று எண்ணினான் அர்ஜூன்.

 

ஆனால் அவனின் எண்ணத்தை எல்லாம் தவிடு பொடி ஆக்குவது போல் அந்த கேக் வெட்டும் நிகழ்விற்கும் வரவில்லை அவள். சோர்ந்து போனது அவன்‌ உள்ளம். அவளில்லாது அந்த கேக்கை வெட்டிக் கொண்டாடவே மனமில்லை அவனுக்கு.

 

பணியாளர்களின் வாழ்த்தைப் பெற்று கொண்டு கேக் வெட்டி முடித்து நன்றி உரைத்து விட்டு தன்னுடைய அலுவலக அறைக்கு வந்து அமர்ந்தவனின் மனம் மிகவும் சோர்வுற்றிருந்தது. ஒருவிதமான கவலையை உணர்ந்தான். சாதாரண விஷயத்திற்கு எதற்காக இத்தனை கவலைக் கொள்கிறது மனம் என்று கூடப் புரிபடவில்லை அவனுக்கு.

 

அவளின் பிறந்தநாளன்று தன்னுடைய வாழ்த்தை எந்தளவிற்கு அவள் எதிர்பார்த்து ஏமாந்திருப்பாள் என்று புரிந்தது அவனுக்கு. அதோடு எந்தளவிற்கு தன்னுடைய மனம் அவளைத் தேடுகிறது என்பதைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினான் அர்ஜூன்.

 

‘இந்தளவுக்கு அவளைத் தேடுறியே! அவளை வேறொருத்தனுக்கு உன்னால விட்டுக் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டது அவன் மனம்.

 

அதிர்ந்து போனான் அர்ஜூன்.

 

அப்படியே கண்களை மூடிக் கொண்டு தலையில் கை வைத்தவனாய் அமர்ந்து விட்டான் அர்ஜூன். மூடிய விழிகளுக்குள் அர்ச்சனா தான் உலா வந்தாள்.

 

‘லவ் யூ அஜூப்பா! ஐம் மேட்லி டீப்லி இன் லவ் வித் யூ அஜூப்பா’ அன்று அர்ச்சனா உரைத்தது இன்று செவிகளில் மறுபதிவாய் அவனுக்குக் கேட்டது.

 

‘நான் வேண்டாம் அச்சுமா உனக்கு! நீ வேற யாரையாவது கல்யாணம் செஞ்சிக்கோ’ என்று அவன் உதடுகள் உச்சரிக்க, மூடிய விழிகளுக்குள் அர்ச்சனா வேறொருவரை மணம் செய்து கொள்வது போன்ற காட்சி உலா வர, நெஞ்சை கத்தியால் கீறியது போன்ற வலியை உணர்ந்தவன் நெஞ்சைத் தடவியவனாய் சட்டெனக் கண்களைத் திறந்து விட்டான்.

 

கண்ணீர் சூழ்ந்திருக்க சிவந்திருந்தன அவன் விழிகள்.

 

குழம்பிய மனத்துடன் அன்றைய அலுவல்களைப் பார்த்தவன் இரவு ஏழு மணியளவில் வீட்டிற்குச் சென்ற போது வாசலில் நின்றிருந்தாள் அர்ச்சனா.

 

அவளைக் கண்டதும் இவனின் சோர்ந்த உள்ளம் குதூகலிக்க, “ஹே அச்சுமா நீ எங்கே இங்கே? எப்ப வந்த?” என்று இன்ப அதிர்ச்சியுடன் கேட்டவனாய் கதவைத் திறந்தவன் அவளை வீட்டிற்குள் அழைத்தான்.

 

தன்னைப் பார்த்ததும் அவன் கண்கள் காட்டிய பொலிவையும் மகிழ்வையும் பார்த்தவளுக்கு அவன் தன்னைத் தேடியிருக்கிறான் என்பது புரிய ஆர்ப்பரித்த மனத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவள் மறுநொடி அவனை லேசாய்‌ அணைத்தவளாய், “ஹேப்பி பர்த்டே அஜூப்பா” என்று கூறி விடுவித்தாள்.

 

அவள் அவனை அணைத்த நொடி திக்பிரமை பிடித்தவன் போல் ஆகி விட்டான் அர்ஜூன். எதிர்பாரா அவளின் செயலில் அவன் உடல் மொத்தமும் நடுங்கிப் போனது.

 

“நான் ரிப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றவனாய் கையில் துண்டை எடுத்தவன், எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகளை அவளின் மெல்லிய அணைப்பே தட்டி எழுப்பியது போன்று உணர்ந்தான் அர்ஜூன்.

 

தண்ணீரைத் திறந்து விட்டு ஷவரின் கீழே நின்று தன்னை சமன்படுத்த அவன் முயன்று கொண்டிருக்க,

 

‘என்னாச்சு இவருக்குத் திடீர்னு? கட்டிப் பிடிச்சா ஆம்பிளைங்க இப்படித் தான் ரியாக்ட் செய்வாங்களா? ஆனா லேசா தானே ஹக் செஞ்சேன். என்னமோ இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த மாதிரி பேய் அறைஞ்ச மாதிரி போறாரு’ என்று சிரிப்புடன் யோசித்தவாறு சமையலறைக்குள் சென்றாள் அர்ச்சனா.

 

அடுத்த பதினைந்து நிமிடங்களில் குளித்து முடித்து இடையில் துண்டுடன் குளியலறையில் இருந்து வெளியே வந்தவனின் நாசியைத் தீண்டிய வாசனையில் தானாய் அவனின் கால்கள் சமையலறை நோக்கிச் சென்றன.

 

அங்கு அடுப்பில் குழம்புக் கொதித்துக் கொண்டிருக்க, “என்ன செய்ற அச்சுமா?” என்று குழம்பைப் பார்த்துக் கேட்டவனாய் வாசம் பிடித்தவன்,

 

“ஹே வெண்டைக்காய் புளிக் கொழம்பா?” கண்கள் மின்னக் கேட்டான்.

 

அடுப்பை விட்டு பார்வையைத் திருப்பி அவனைப் பார்த்தவளின் கண்கள் அவன் மேனி முழுவதும் உலவவும் தான், தான் துண்டுடன் வந்து நிற்பது அவனுக்குப் புரிய, சங்கோஜத்துடன் தலையிலேயே அடித்துக் கொண்டவனாய், “டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்றவன் விறுவிறுவென தனது அறைக்குச் சென்றான்.

 

‘அறிவிருக்காடா உனக்கு? இப்படியா ஒரு பொண்ணு முன்னாடி போய் நிப்ப?’ என்று தன்னைத் தானே திட்டியவனாய் அர்ஜூன் உடை மாற்றிக் கொண்டிருக்க,

 

‘சும்மா சொல்லக் கூடாது! ஆளு செம்ம ஹேண்ட்சம் தான்’ என்று நாணத்துடன் தனக்குள்ளேயே கூறிக் கொண்டாள் அர்ச்சனா.

 

உடை மாற்றி விட்டு சமையலறைக்கு வந்தவனின் உள்ளங்கையைப் பிடித்து, லேசாய் கரண்டியில் குழம்பை எடுத்து ஊற்றி, “உப்பு காரம்லாம் பார்த்துச் சொல்லுங்கப்பா” என்றாள்.

 

ருசி பார்த்தவனின் சுவை நாளங்கள் இன்பமாய் இன்னிசை மீட்ட, “வாவ்” அனிச்சையாய் மொழிந்திருந்தன அவன் இதழ்கள்.

 

“எப்படி அச்சுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

 

“என்னது என்ன அச்சுமா?” புரியாமல் அவள் வினவ,

 

“நான் என்னிக்கோ சொன்னதை எப்படி இப்படி ஞாபகம் வச்சிருக்க?” என்று கேட்டான்.

 

“என்னிக்கோ சொன்னாலும் நீங்க பேச்சுக்குச் சொல்லலையே. டிவோர்ஸ்க்குப் பிறகு பிடிச்சதை கூட ரசிச்சு சாப்பிடுற மனசு இல்லாம விரக்தில பேருக்குச் சாப்பிட்டுட்டு இருந்தேனு ரொம்ப ஃபீல் செஞ்சு சொன்னீங்களா அதான் மனசுல நின்னுடுச்சு. பெங்களுருக்கு வந்த பிறகு உங்களுக்கு ரொம்ப பிடிச்ச இந்தக் குழம்ப மிஸ் செய்றதா வேற சொன்னீங்கல! அதான் உங்க பர்த்டே சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்னு அம்மாகிட்ட கேட்டு கத்துக்கிட்டு காய் எல்லாம் நறுக்கி எடுத்துட்டு வந்து செஞ்சேன்” என்றவாறு,

 

குக்கரில் வெந்திருந்த சாதத்தைத் தட்டில் போட்டு குழம்பை ஊற்றியவள், “ஹேப்பி பர்த்டே அஜூப்பா” என்றவளாய் அவன் கையில் கொடுத்தாள்.

 

“தேங்க் யூ அச்சுமா” என்றவனாய் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டவன் சமையலறையில் நின்றவாறே உணவைப் பிசைந்து முதல் வாயை அவளுக்கு ஊட்டப் போக, “இல்ல நீங்க சாப்பிடுங்க மொதல்ல” என்றாள்.

 

ஒரு வாய் சாப்பிட்டவனின் கண்கள் உணவின் ருசியில் லேசாய் கலங்கியே விட்டன.

 

“என்னாச்சு? காரமா இருக்கா? தண்ணி குடிங்க” என்றவளாய் தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அதை குடித்து தன்னை சமன்படுத்தியவன் அவளுக்கு ஊட்டி விட்டான்.

 

“அவ்ளோ ஒன்னும் காரம் இல்லையே! நீங்க காரம் சாப்பிட மாட்டீங்களா?” என்று கேட்டவாறு அவன் ஊட்டி விட்டதை அவள் சாப்பிட,

 

“அம்மா செய்ற அதே ருசில செஞ்சிருக்க அச்சுமா. அந்தச் சந்தோஷத்துல வந்த கண்ணீரு அது. காரத்துனால இல்ல” என்றவனாய் அவளுக்கும் ஊட்டி விட்டுக் கொண்டே உணவு முழுவதையும் உண்டு முடித்தான்.

 

அவன் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவ, அடுப்பு மேடையைத் துடைத்து விட்டாள் அவள்.

 

இருவரும் முகப்பறைக்கு வந்த பிறகு, வண்ணதாளால் சுற்றப்பட்ட பரிசு பொருளை அவனுக்கு அளித்தாள்.

 

சிறிய டப்பா போன்று இருந்த அந்தப் பரிசு பொருளை ஆவலுடன் பிரித்துப் பார்த்தவனின் கண்கள் அதிலிருந்த பரிசைப் பார்த்து விரிந்தன.

 

வளைவான வெள்ளிக் காப்பில் இரண்டு Aக்கள் ஒன்றன் மீது ஒன்று இருப்பது போல் பொறிக்கப்பட்டிருந்தன.

 

அதனை மென்மையாய் தடவிப் பார்த்தவன், “அதென்ன இரண்டு A?” அர்த்தம் தெரியாதவன் போல் சிரிப்புடன் கேட்டான்.

 

அதை வாங்கி அவன் கையில் அணிந்தவளாய், “இந்த அர்ஜூன் அர்ச்சனாக்கு மட்டும் தான் சொந்தம்னு அர்த்தம்” என்று கூறி கண் சிமிட்டியவள் அவனை தழுவியவளாய் மார்பில் தலை சாய்த்து, “லவ் யூ அஜூப்பா” என்றாள்.

 

நெகிழ்ந்திருந்த உள்ளத்தின் ஆர்ப்பரிப்பில் ஒரு நொடி தன்னை மீறி அவளை தன்னோடு இறுக அணைத்திருந்தான் அர்ஜூன்.

 

அவனின் இந்த அணைப்பை எதிர்பாரா அர்ச்சனாவின் உடல் அதிர்ந்தடங்க, சட்டென விலகினான் அர்ஜூன்.

 

அவளை விட்டு தள்ளி நின்றவனாய் முகத்தைத் திருப்பிப் பார்வையை எங்கோ பதித்தவாறு, “நீ கிளம்பு அச்சுமா” என்றான்.

 

‘அவன் மனசு இளகி இருக்கிற இந்த வாய்ப்பை விட்டுறாத அச்சு’ என்று அவளின் உள்ளம் கூக்குரலிட,

 

“நாளைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க” என்றாள்.

 

“என்ன?” பேரதிர்ச்சியுடன் கேட்டான்.

 

“நாளைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்கனு சொன்னேன்” என்று மீண்டும் அழுத்தமாய் உரைத்தாள்.

 

“வேறொருத்தனைக் கட்டிக்கப் போறவ எதுக்குடி இங்க வந்து என்னைக் கட்டிப் பிடிச்சிட்டு நின்ன? அர்ஜூன் அரச்சனாக்கு மட்டும் தான் சொந்தம்னு எதுக்குடி சொன்ன?” தன்னை மீறியே கோபத்தில் கத்தியிருந்தான் அர்ஜூன்.

 

அவனின் கோபம் அவளை உற்சாகமூட்ட, “ஒன் லாஸ்ட் டைம்னு நினைச்சு தான் கட்டிப் பிடிச்சேன். அப்புறமா இந்த கிஃப்ட் என்னிக்குமே என்னை உங்களுக்கு ஞாபகப்படுத்திட்டே இருக்கிறதுக்குத் தான் அண்ட் நீங்க எப்பவுமே எனக்கு மட்டும் தான் சொந்தம் அர்ஜூன். கண்டிப்பா உங்களால வேற யாரையும் கல்யாணம் செஞ்சிக்க முடியாது. ஆனா நான் தான் உங்களுக்கு வேண்டாமே. அதனால நான்‌ யாருக்கு வேணாலும் சொந்தம் ஆகலாம் இல்லையா” என்றவாறு எழுந்தவள்,

 

“சரி நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு சென்றிருந்தாள்.

 

பேய் அறைந்தது போல் அப்படியே அமர்ந்து விட்டான் அர்ஜூன். அவன் மனத்தை அவனுக்கே உணர்த்தியிருந்தது அன்றைய இரவு.

Click on a star to rate it!

Rating 1 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்