- இனி எந்தன் உயிரும் உனதா…
காப்புரிமை © 2021 by VarunaAthrika
© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Copyright © 2021 by VarunaAthrika
© All rights reserved.
இந்த புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளராகிய என் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்யவோ, அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வடிவம் அல்லது வகையில் மின்னணு, இயந்திரம், புகைப்பட நகலிடல், பதிவு செய்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக அனுப்பவோக் கூடாது.
இந்த கதையில் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே. தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவரையோ, இறந்தவரையோ ஒத்திருந்தால் அது தற்செயலானதே ஆகும். குறிப்பிட்ட நோக்கத்துடன் எழுத்தாளரால் உருவாக்கப்பட்டது அல்ல.
பலதரப்பட்ட மக்களையும் தன்னகத்தேக் கொண்டிருக்கும் மதுரை மாநகரம். நகரின் மையத்தில் அன்னை மீனாட்சி அருள்பாலிக்க, ஆயிரங்கால் மண்டபம், திருமலைநாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம், மாரியம்மன் தெப்பக்குளம், கூடலழகர் திருக்கோயில் என மதுரையில் சுற்றிப் பார்க்கக்கூடிய இடங்கள் ஏராளம்.
மல்லிகைப் பூவிற்குப் பெயர் பெற்ற நகரில், மல்லிகைப் பூ போன்ற மெத்தெனும் இட்லியும் பிரபலம் தான். அதிகாலையாக இருந்தாலும் சரி, நள்ளிரவாக இருந்தாலும் சரி, எந்த நேரத்தில், எந்த உணவுக் கடைக்கு சென்றாலும், சுடசுட சுவையான உணவு கிடைப்பது மதுரை மாநகரில் தான்.
அதுலயும் அந்த பரோட்டாவும், சால்னாவும் இருக்கும் பாருங்க. அந்த மெல்லிசா, சூடா இருக்க பரோட்டாவ பிச்சுப்போட்டு, அந்த சின்ன சைஸ் கொட்றாலருந்து தளதளன்னு எண்ணெய் மிதக்குற சால்னாவ ஊத்தி அப்டியே எடுத்து சாப்டோம்னா, ப்பா, சொல்லும்போதே மனசு அங்க போகுது, சும்மா சொர்க்கம் தான் போங்க.
இரவிலேயே தூங்காமல் சுறுசுறுப்புடன் இயங்கும் தூங்காநகரம், காலை நேரத்தில் கேட்கவா வேண்டும்? வாகனங்களில் மக்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருக்க, பேருந்துகள் எல்லாம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரைத் தாங்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.
அந்நகரின் கொஞ்சம் அவுட்டர் ஏரியாவில் இருந்த, அந்த கலைக் கல்லூரியில், தன் R15 பைக்கை ஸ்டாண்டில் போட்டு, அதில் ஒருபுறமாக ஏறி அமர்ந்திருந்தான் ஆதித்ய ப்ரித்வி. எம்.பி.ஏ ஃபைனல் இயர் படிக்கிறான். அவன் அருகிலிருந்த ஸ்டோன் பென்ச்சில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான் அவன் நண்பன் சாய் யுவனேஷ். (கப்பல் ஏதும் கவுந்துடுச்சா ராசா?) இருவரும் ஒரே வகுப்பு தான். ஃபெவிக்விக் போட்ட மாதிரி எப்பவும் ஒண்ணா தான் திரியுவாய்ங்க… ஒருத்தன் இல்லாம இன்னொருத்தன பாக்க முடியாது. ரெட்டைக் கதிரேன்னு பாடாதது ஒண்ணு தான் கொற.
“ஃப்ரெஷர்ஸ் டேன்னு தான் பேரு… வர்றதெல்லாம் பாரு, ஔரங்கசிப்புக்கு அத்த பொண்ணு மாதிரி அரக் கெழவியா இருக்கு…” என சாய் புலம்ப,
வெறுப்பாக முறைத்த ப்ரித்வி, “அப்டி இல்லனா மாடர்ன் டிரஸ் போட்ட மங்காத்தாவா இருக்கு” என்றான்.
கொஞ்சம் கடுப்பாக சைட்டடித்துக் கொண்டிருக்கும்போதே, ‘வாவ்…’ என வாயைப் பிளந்தான் சாய்.
“யாரப் பாத்துடா வாயப் பொளக்குற?” என ப்ரித்வி கேட்க, அவன் தலையை ஒரு இடத்தை நோக்கித் திருப்பினான் சாய்.
அங்கே ஒரு பெண் முழுக்கை வைத்த லாங் சுடி அணிந்து, துப்பட்டாவை இருபுறமும் பின் குத்தி, ஒருபுறமாக ஸ்லிங் பேகைத் தொங்கவிட்டு, நீண்ட கூந்தலைத் தளரப் பின்னி, பூ வைத்து, கைகளில் வளையல் அணிந்து, காதில் ஜிமிக்கி அசைந்தாட, தலை குனிந்து வந்து கொண்டிருந்தாள். அருகில் அவளுக்கு அண்ணன் போல் ஒருவன், ஏதோ சொல்ல அதற்கு தலையாட்டியபடி இருந்தாள்.
”எவ்ளோ அடக்கமான பொண்ணு இல்ல…” என அவளைப் பார்த்தபடி சாய் கூற,
“ஹ ஹ ஹா… ஹி ஹி ஹீ… ஹு ஹு ஹூ… ஹெ ஹெ ஹே…” என கேவலமாக சிரித்தான் ப்ரித்வி.
“எதுக்குடா சிரிக்கிற?” என சாய் கேட்க,
“அபி தேக்கோ…” என்றான் ப்ரித்வி.
பேசிவிட்டு அவள் அண்ணன் கிளம்ப, அவன் போய்விட்டானா என நன்றாக தலையைத் திருப்பிப் பார்த்தவள், அவன் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு, காதிலிருந்த ஜிமிக்கியைக் கழற்றி பேகில் போட்டு விட்டு, பெரிய வளையத்தை மாட்டியவள், வளையலைக் கழட்டி விட்டு, ஒரு கையில் சில்வர் வாட்சும், மறுகையில் பியர்ல் ப்ரேஸ்லெட்டும் அணிந்தாள். பின்னலைப் பிரித்து தலையை போனிடெயிலாகப் போட்டாள். டாப்ஸின் இடைக்குக் கீழிருந்த ஃப்ரில்லை மொத்தமாகப் பிரித்து, மடித்து வைத்தாள். முழங்கை வரை டாப்பை மடித்து விட்டவள், அணிந்திருந்த ப்ளூ ஜீனுக்கு மேட்சாக, ஜீன் ப்ளேசரை அணிந்தாள். பேகைத் தோளுக்குக் குறுக்காகப் போட்டுக் கொண்டு நேராக அவர்களை நோக்கி வந்தாள் ஆருஷி அவனிகா.
‘ஆ’வென வாயைப் பிளந்தபடி, சாய் அமர்ந்திருக்க, அவன் முன்னே வந்தவள், சிகப்பு நெயில்பாலிஷ் அணிந்த விரல்களால் சொடக்கிட, பட்டென வாயை மூடியவன், ‘என்ன’ என்பது போல் அவளைப் பார்க்க, “நீ தான க்ளாஸ் ரெப்பு?” என அவள் கேட்டாள்.
“ஆமா…” எனத் தலையாட்டியவன் இன்னும் கூட ‘பே’வென தான் அமர்ந்திருந்தான்.
“இது என்னோட சர்ட்டிஃபிகேட் காப்பிஸ்… ஃபைல் பண்ணி ஹெச்.ஓ.டி அவரு கப்போர்டுல வைக்க சொன்னாரு…” எனக் கொடுக்க, அவளையும், அவற்றையும் குழப்பமாகப் பார்த்தான் சாய்.
“என்னாடா, உன் ஃப்ரெண்டு இப்டி பேய் முழி முழிக்கிறான்?” என அவள் கேட்க,
“உன் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் அப்டி… பையன் மெரண்டுட்டான்…” என்றான் ப்ரித்வி.
“ஓ அப்டியா, இங்க பாரு தம்பி, நீ இன்னும் பாக்க வேண்டியது நெறைய இருக்கு… ஒரே க்ளாஸ்ல வேற குப்ப கொட்டப் போறோம்…” என அவள் கூற,
“எதே… ஒரே க்ளாஸா?” என அரண்டு போனான் சாய்.
“அட ஆமா தோழா, நானும் எம்பி, எம்பி இப்ப தான், எம்.பி.ஏ ஃபைனல் இயர் வந்துருக்கேன். இனிமே நம்மல்லாம் ஒரே இனம்…” எனக் கண்ணடித்துக் கூறினாள்.
“வெளங்கிரும்…” என சாய் தலையில் அடித்துக் கொண்டு,
“ஆமா, உங்க ரெண்டு பேருக்கும் எப்டி பழக்கம்?” எனக் கேட்க,
“அதென்னடா அப்டி கேட்டுட்ட? எங்க ரெண்டு பேரு மம்மீஸும் திக் ஃப்ரெண்ட்ஸ்… ஆனா, நாங்க அந்த பாவத்தையெல்லாம் பண்ணுவோமா? நெவர், ஒருபோதும் நடக்காது. அதனால, இன்றைய செய்தி நிலவரத்தின்படி, நாங்க ரெண்டு பேரும் தான் இந்த மதுரை மாநகரத்தோட தி பெஸ்ட் எனிமீஸ் தெரிஞ்சுக்கோ…” என கெத்தாகக் கூறினாள்.
ஆருஷி கூறியது போல, ப்ரித்வியின் தாய் கௌசல்யாவும், ஆருஷியின் தாய் தாரணியும் சிறு வயதிலிருந்து உயிர்த் தோழிகள். திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் நட்பு, தாரணியின் கணவர் மாதவன், கௌசல்யாவின் கணவர் பாண்டியன் இடையேயும் நல்ல நட்பை ஏற்படுத்தியவாறு தொடர்ந்தது.
அடுத்தடுத்த தெருவில் தான் இருவரும் வசித்தனர். தாரணியின் முதல் மகன் அருண். அவன் பிறந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது பிறந்தவள் தான் ஆருஷி. கௌசல்யாவிற்கு திருமணமான ஆறு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன் தான் ப்ரித்வி.
ஆருஷி, ப்ரித்வி இருவருக்குமே அருணையும், அவன் மனைவி சௌந்தர்யாவையும் மிகவும் பிடிக்கும். இவர்கள் இருவரையும் அதட்டி வைக்கும் ஒரே ஆள் அருண் தான். தாரணி, கௌசல்யா இருவருக்கும் வெறும் மூன்று மாத இடைவெளியில் பிறந்த, அவர்கள் பெற்ற செல்வங்கள் இரண்டும், தங்களைப் போலவே நண்பர்களாக இருப்பர் என எதிர்பார்த்து, இருவருக்கும் பெயரில் கூட ஒரே அர்த்தம் வருமாறு வைக்க, அவர்களோ எப்போதும் கீரியும், பாம்புமாக சண்டையிட்டுத் திரிந்து கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் இவன் அவள் சைக்கிளில் காற்றைப் பிடுங்கி விடுவது, அவள் இவனது ரெக்கார்ட் நோட்டில் இன்கைக் கொட்டி வைப்பது என சிறுபிள்ளைத்தனமாகத் தொடங்கிய சண்டை, நாளாக நாளாக இவள் அவன் ஏ.டி.எம் கார்டை ப்ளாக் செய்வது, அவன் இவள் பெயரில் சி.ஓ.டியில் எக்கச்சக்கமாக எதையாவது ஆர்டர் செய்து விடுவது என காலத்திற்கேற்ப டெவலப் ஆகியபடி இருந்தது. அவர்களை சொல்லி சொல்லிப் பார்த்து, கடைசியில் ‘என்னமோ பண்ணித் தொலைங்க’ என விட்டு விட்டனர் அவர்களின் பெற்றோர்.
“ஏண்டா நீ என்னப் பத்தி இவன்கிட்ட சொன்னதே இல்லையா?” என ஆருஷி கேட்க,
அவள் கூறிய மாடுலேஷனைக் கேட்டு ஏற்கனவே கடுப்பாக இருந்த ப்ரித்வி, இன்னும் காண்டாகி, “சொல்ற அளவுக்கு நீ பெரிய ஆள் ஒண்ணும் இல்ல… ஏண்டி நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?” என கேட்க,
“அட, நா திருந்தணும்னு தான் நெனைச்சேன்… ஆனா, உன்னயெல்லாம் பாத்ததுக்கு அப்புறம், இவனே திருந்தல, நம்ம திருந்தி இமயமலையவா நகர்த்தப் போறோம்னு அந்த எண்ணத்தையே கை விட்டுட்டேன்…” என சிரித்தாள் ஆருஷி.
“எதையாவது பண்ணி வாழ்க்கைல உருப்பட்டுறலாம்னு நெனைச்சேன்… உன்ன மாதிரி இம்சையப் பக்கத்துல வச்சுக்கிட்டு அதுக்கு வாய்ப்பில்ல போலயே…” என சாய் தீவிரமாக சிந்திக்க,
“அதே தான் மச்சான் நானும் சொல்றேன்… இந்த அரலூச இப்டியே விட்டுட்டு ஓடிருவோம்… அதான் நமக்கு நல்லது…” என ப்ரித்வி கூற,
“நீ ஓடு மேன்… ஏன் இவனையும் இழுக்குற? வை?” என ஆருஷி கேட்டதில்,
“நீ சொல்லலைனாலும் நா ஓடிப் போய்டுறேன்… பை த வே இது அரலூசு இல்லடா, முழு லூசு…” என்றுவிட்டு ஓடினான் சாய்.
அவனை நோக்கி பழிப்பு காட்டியவள், ப்ரித்வியை நோக்கி, “நீ ஓடலையா எனிமி?” எனக் கேட்க,
“நா ஏன் ஓடணும்? இது என் காலேஜ், நீ ஓடு…” என்றான் அவன்.
“தோடா, இப்ப எங்களுக்கும் இது தான் காலேஜு…” என பதிலுக்கு சொன்னாள் ஆருஷி.
“ஆமா, நீ ஏன் திடீர்னு காலேஜ் மாறுன? உன் தொல்ல தாங்காம அங்கருந்து டி.சி குடுத்து தொரத்தி விட்டாங்களா?” என ப்ரித்வி ஆர்வமாகக் கேட்க,
“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ் மிஸ்டர் ஆதித்யா…” என அவள் சிரித்தபடி கூறியதில்,
அவன் விழிகள் தீயாய் சிவக்க, “அந்த நேம் சொல்லி கூப்புடாத…” என அடிக்குரலில் சீறினான்.
“நா உன்னத் தெரிஞ்ச நாள்ல இருந்து இப்டி தான கூப்டுறேன்… இப்ப மட்டும் என்ன வந்துச்சாம்?” என அவள் கேட்க,
“இனிமே கூப்டாத ஆருஷி…” என்றான் அவன்.
“நீ சொல்லி நா என்னிக்காவது கேட்டுருக்கேனா? இல்லைல… இதையும் கேக்கமாட்டேன் ஆதித்யா அவர்களே…” என மீண்டும் கூற,
“பேசாம போயிடு ஆருஷி, அவ்ளோ தான் உனக்கு மரியாத…” என கோபமாகக் கூறினான் ப்ரித்வி.
“நீ மரியாத குடுன்னு நா கேக்கவே இல்லயே… அப்டியே கேட்டாலும் நீ குடுக்கவாப் போற?” என ஆருஷி நக்கலாகக் கூற,
“ஷட் அப் ஆருஷி…” என்று அழுத்தமாகக் கூறியவன், அந்த இடத்தை விட்டு விறுவிறுவென சென்றுவிட்டான்.
அதில் எரிச்சலுற்றவள், “நீ என்ன வேணா சொல்லு, ஆனா, உன்ன கடுப்படிக்கிறது தான் இனிமே என் முழு நேர வேலை… ஸ்டுபிட் ஆதி, வந்த மொத நாளே இரிட்டேட் பண்றான்…” என்றவாறு அங்கிருந்து எழுந்து, தன் வகுப்பறையை நோக்கி சென்றாள்.
💝
அவள் மேல் கோபமாக இருந்தாலும், முதல் நாளே வகுப்பை இழக்க மனமில்லாதவனாக வகுப்பிற்குச் சென்றான் ப்ரித்வி.
அவன் வருவதற்குள்ளாகவே, ஆருஷி அனைவரிடமும் அறிமுகமாகி சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, “எப்டி தான் ஈஸியா எல்லாரோடயும் ஃப்ரெண்டாகிடுறாளோ தெரியல, பிசாசு…” என்றெண்ணியபடி தன் இடத்தில் சென்று அமர்ந்தான்.
அன்றைய வகுப்புகள் அமைதியாகச் செல்ல, மாலையில், ப்ளே கிரவுண்டில் அமர்ந்திருந்த ப்ரித்விக்கு, காலையில் அவள் ஆதித்யா என்று அழைத்தது ஏதேதோ நினைவுகளைக் கிளறிவிட, அவற்றை எண்ணி முகம் சுருங்க அமர்ந்திருந்தான்.
அப்போது அவனிடம் வந்த ஆருஷி, “எனிமி, நம்ம காலேஜ்ல பேஸ்கெட் பால் டீம்க்கு நீ தான் கேப்டனாமே… நானும் ஜாயின் பண்ணனும், என்ன பண்றது?” எனக் கேட்டாள்.
“அதான் ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் புடிச்சுட்டல்ல, அவங்க கிட்ட போய் கேளு…” என அவள் முகம் பாராமல் அவன் கூறியதில்,
“ஆயிரம் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும் ஒரு எனிமி ஆகிடாது… அதுனால நீயே சொல்லு…” என சிரிக்காமல் கூறினாள் அவள்.
அதில் கடுப்பானவன், “அது பாய்ஸ் டீம், உன்ன சேர்த்துக்க முடியாது…” என அவளை முறைத்தபடி கூற,
“ஆனா, ஸ்போர்ட்ஸ் எல்லாருக்கும் காமன்னு தான் இங்க ஜாயின் பண்ணும்போது சொன்னாங்க…” என அவள் யோசனையாகக் கூறினாள்.
“எல்லாத்தையும் சொல்லித் தொலைஞ்சுட்டாய்ங்களா? ஆனா, இவள டீம்ல கூட வச்செல்லாம் குப்ப கொட்ட முடியாதே… என்ன சொல்றது?” என அவன் மனதிற்குள்ளாக யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
அந்நேரம் கிரவுண்டிற்குள் நுழைந்த சாயிடம் சென்று ஆருஷி, ப்ரித்வி கூறியது குறித்து கேட்க, அவனோ, “அதெல்லாம் டேலண்ட மட்டும் வச்சு தான் டீம்ல எடுப்பாங்க. அவன் உனக்கு ராங் இன்ஃபர்மேஷன் குடுத்துருக்கான். நா டீம் செலக்ஷன் நடக்கும்போது உனக்கு சொல்றேன்” எனக் கூறிவிட்டான்.
அதில் ப்ரித்வியை காண்டாக முறைத்தவள், “எரும, உன்ன விட நல்லா வெளையாடி பேரு வாங்கிருவேன்னு தான பொய் சொன்ன?’ எனக் கேட்க,
“இப்டி நெனப்பெல்லாம் வேற உனக்கு இருக்கா? செலக்ஷன்ல பாப்போம், யாரு நல்லா வெளையாடி பேரு வாங்குறான்னு…” என ஏளனமாகக் கூறிய ப்ரித்வி, அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
-தொடரும்…
-அதி…💕
ஆதித்ய ப்ரித்வி – சூரியனால் வளம் பெற்ற பூமி.
ஆருஷி அவனிகா – பூமியில் விழுந்த முதல் சூரியக் கதிர்.
விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதைக்கரு. மனதிலிருக்கும் பாரம் இறங்குவது போன்றதொரு உணர்வை தரும் எழுத்தாளரின் எழுத்து நடையும், நகைச்சுவைத் திறனும் மிகவும் அசத்தல்.
Thanks loshi…