Loading

வானம் 06

னதினுள் ‘அய்யோ டெரர் லுக்கு விடறாரே! அவரு புள்ளய வேற அழ விட்டுட்டேன். திட்டப் போறாரோ!’ என்ற பதபதைப்புடன் விழித்தவளைக் கண்டு எதுவும் பேசாமல், “இதழி மா, நீங்க சமத்து பொண்ணு தான! தாத்தா கூட வீட்டுக்கு கிளம்புங்க” என்றான் தன் மகளிடம்.

“நான் சரயு கூட போறேன் ப்பா” என்றவளின் வார்த்தைகளோடு கண்களும் இறைஞ்ச, கண்களை இறுக மூடி திறந்தவன், “அப்பா சொன்னா கேட்பீங்கள்ள, சமத்துப் பொண்ணா தாத்தாகூட இப்போ கிளம்புங்க. உங்க பிரண்ட் உங்கள பாக்க வருவாங்க” என்றவனிடம், “ம்… சரிங்க ப்பா” என்றவள் அரைமனதோடு சரயுவின் கைகளை விட மனமில்லாமல் விட்டவள் தன் தாத்தாவோடு கிளம்பினாள் இதழிகா.

அவள் சென்றவுடன், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவன் முன்னே செல்ல, தன் தோழியை திரும்பிப் பார்த்தவாறே அவன் பின்னால் சென்றாள் சரயு. திடீரென அவன் நிற்கவும் இவளோ அதனைக் கவனிக்காமல் சென்றததால் அவன்மீது மோதப் போகும் தருணத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றாள். இருவருக்கும் நூலிழையில் இடைவெளி இருக்க, “சாரி” என்றவாறே அவன்தான் சற்று தள்ளி நிற்க வேண்டியதாயிற்று.

அசடு வழிந்தவள், “சாரிங்க, நான்தான் கவனிக்காம…” என தடுமாற, “இட்ஸ் ஓகே” என்றவன், “இப்படி சொல்றேனு தப்பா எடுத்துக்க வேண்டாம். இனி நீங்க இதழிகாவ பார்க்கிறதோ, பேசறதோ வேண்டாம். என் பொண்ணு என் பொண்ணாவே இருக்கணும்னு விரும்பறேன்” என்றவனின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அவளை அவன் முகம் நோக்க வைத்தது.

‘வாட் யூ மீன்?’ என அவள் மனம் எழுப்பிய கேள்வியை அவள் கண்ணின் வழியே கடத்த, அதனை அவன் புரிந்துக் கொண்டதை போல் இருந்தது அடுத்து வந்த வார்த்தைகளில்.

“இதுவரைக்கும் இதழி மா யார் கூடவும் இவ்ளோ அட்டாச் ஆனது இல்ல. இங்க கடைல வொர்க் பண்றவங்க கூட அவக்கூட லிமிட்டா தான் பழகுவாங்க. நீங்க இங்க படிக்க வந்துருக்கீங்க. இன்னும் சில மாசத்துல படிப்பு முடிஞ்சோனே உங்க ஊருக்குப் போய்ருவீங்க. அப்போ இதழி மா தான் ரொம்ப ஏங்கிப் போய்ருவா. ரெண்டு, மூணு நாள் பாக்கலைனதும் அவ எவ்ளோ ஏங்கிப் போய்ட்டானு பார்த்துருப்பீங்கனு நினைக்கிறேன்” என அத்தோடு நிறுத்தியவன், “புரிஞ்சுக்குவீங்கனு நம்புறேன்” என்றவன் அடுத்த நொடியே தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான் சித்தார்த்.

ஆனால் அவனது வார்த்தைகளில் “ஙே” என முழித்து நின்றவளை உலுக்கிய சம்யுக்தா, “இதத்தான் நானும் அன்னிக்கு சொன்னேன் சரயு. இப்போ அவங்க அப்பாவே சொல்லிட்டாரு. கஷ்டம் தான், இல்லனு சொல்லல. ஆனா, நாளைக்கு இது இன்னும் கஷ்டமா போகிறக் கூடாது” என்றாள்.

ஆனால் சரயுவோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “சரி, வா நம்ம ஹாஸ்டலுக்கு போகலாம்” என அழைத்துச் செல்ல இதனை தன் இருப்பிடத்தில் அமர்ந்தவாறே கவனித்துக் கொண்டு தான் இருந்தான் சித்தார்த்.

அவனுமே இப்படி பட்டென பேசுபவன் அல்ல. ஆனால் தன் மகளுக்கும் தனக்குமான உறவிற்கிடையே சரயு வருவது போல் உணர்ந்தவனுக்கு இதனைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது.

விடுதிக்குள் நுழைந்ததுமே எதிரே வந்தாள் வானதி. “சரயு உன்னைத் தேடி அவங்க வந்துட்டுப் போனாங்க, என்ன சங்கதி?” என்றவளின் கண்களில் தெரிந்த கேலிப் புன்னகையை கண்டவள், “யாரு வானதி கா, என்ன சொல்றீங்க… ஒன்னும் புரியல” என்றாள் சரயு.

“இப்படி மொட்டையா வாலும் இல்லாம தலையும் இல்லாம சொன்னா எப்படி புரியும் சரயு” என நக்கலாக சம்யுக்தா வினவ, அவளில் நக்கலைக் கண்டு உள்ளுக்குள் குமைந்தவள், “ஏதோ உன்னை தேடி வந்தாங்களேனு கேட்டுப்புட்டேன். போங்க, போய் வார்டன பாத்துக் கேட்டுக்கோங்க” என சிலுப்பிக் கொண்டவள் சம்யுக்தாவை முறைக்கவும் தவறவில்லை.

“போடி சிலுப்பி” என முணுமுணுத்தாள் சம்யுக்தா. “அதப்பத்தி தான் தெரியும்ல, நீ வா சம்யு. நம்ம வார்டனயே கேட்போம்” என்றவள் வார்டனின் அறைவரை சென்றிருந்தாள் சரயு.

தன் அறையை விட்டு அப்பொழுது தான் வார்டனும் வெளியே வர, சரயுவைக் கண்டவர் “அம்மாடி சரயு, உன்னைத் தேடி பக்கத்துல உள்ள கற்பகம்மா வந்துட்டுப் போனாங்க. உனக்குத் தெரிஞ்சவங்களா மா” என்று விசாரித்தார் அவர்.

‘அவங்க எதுக்கு இங்க வந்துட்டுப் போனாங்க’ என தன் மனதினுள் கேள்வியை கேட்டுக் கொண்டவள் வெளியே, “பழக்கம் மேம். நான் அவங்கள பார்த்து என்னனு கேட்டுக்கிறேன்” என்றாள் சரயு.

“ம்… சரி மா” என்றவர் அவர்களின் படிப்பு சம்மந்தமாக பேசியவர் பின், “சொல்றேனு தப்பா எடுத்துக்க வேண்டாம் சரயு. அந்த கற்பகம்மாவ தப்பு சொல்லல. ஆனா, மத்தவங்களும் அப்படி இருக்க மாட்டாங்க. ஏற்கெனவே அவங்கள பத்தி இங்க பலர் பலவிதமா பேசுறாங்க. கொஞ்சம் கவனமா இருந்துக்கோ” என்றவர் அத்தோடு தன் பேச்சு முடிந்ததாய் அங்கே வந்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்து ஏதோ கேட்டுக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

வானதி நக்கலாய் வினவியதன் பொருள் தற்போது தான் அவளுக்கு புரிபடத் துவங்க, அவள் மனமோ, ‘நான் அப்படி என்னடா தப்பு பண்ணேன், கியூட்டிகிட்ட பேசி பழகுனது தப்பா! சம்யு என்னடானா அங்க போகவே கூடாதுனு சொல்றா… கியூட்டியோட அப்பா என்னடானா எனக்கும் என் இதழி மா’வுக்கும் நடுவுல வராதன்னு சொல்றாரு. இந்த வானதி நக்கலா சிரிக்கிறா. நான் எந்த லோகத்துல இருக்கேன்! ச்சே’ என நொந்துக் கொண்டிருக்க,

அதனை உணராமல், “இதுக்கு தான் நான் அவ்ளோ சொன்னேன் டி. கேட்டியா, இன்னிக்கு எனக்குத் தெரியாமலே அந்த குட்டிப் பொண்ண பார்க்க அவங்க கடை வரைக்கும் போற அளவுக்கு வந்துட்ட. அவங்க அப்பா என்னடானா என்னமோ நீ அவங்க ரெண்டு பேருக்கிடைல இந்தியா, பாகிஸ்தான் உறவ பிரிச்ச மாதிரி பேசறாரு” என பேசிக் கொண்டே செல்ல, சரயுவின் வார்த்தைகள் அதனை தடை செய்தது. “என்னை கொஞ்சம் தனியா விடறியா சம்யு” என்றிருந்தாள்.

“என்னமோ பண்ணு போ. ஆனா ஒன்னு டி, இப்போ வானதி பேசற மாதிரி நாளைக்கு எல்லாரும் பேசற மாதிரி பண்ணிறாத. அவ்ளோ தான் சொல்லிட்டேன்” என்றவள் தன் வேலையை பார்க்க செல்ல, தன் அறைக்கு வந்தவள் கைகளை தலையைத் தாங்கிய வண்ணம் அமர்ந்தாள் சரயு.

ஒரு சிறிய விஷயம். ஆனால் தன்னை சுற்றி உள்ள அனைவரும் ஏன் இத்தனை விதமாய் எதிர்வினையாற்றுகிறார்கள் என்ற குழப்பம் அவளை சூழ்ந்துக் கொள்ள அந்நேரம் பார்த்து அவளது அலைப்பேசி சிணுங்கியது.

யார் அழைத்தது என்றுகூட பார்க்காமல் அழைப்பை ஏற்று அலைப்பேசியை காதில் ஒற்றினாள் சரயு.

“சரயு கண்ணு” என எடுத்தவுடனே தன் அன்னையின் குரலில் தெரிந்த அதீத பாசம் அவளை யோசிக்க வைத்தது. ‘இன்னிக்கு என்ன வேலத்தனம் பண்ணப் போகுதோ!’ என்றவாறே, “சொல்லு மா” என்றாள் சரயு.

“நம்ம பக்கத்தூரு நாட்டாமை இருக்காருல்ல. அவரு பொண்ணு, அட அதான் உன்கூட படிச்சுதுல்ல ரம்யா…” என அவறே விளக்கம் கொடுக்க, “ப்ச், இப்போ அந்த ரம்யாவுக்கு என்னவாம்?” என கடுப்பாய் வினவினாள் சரயு.

அவள் இருக்கும் சூழ்நிலை புரியாமல் அவளிடம் அன்று வாங்கிக் கட்டிக் கொள்ள தயாரானார் அவளது அன்னை. “ஏன் டி இத்தன சடஞ்சுக்கிற. அந்த புள்ளையோட ஜாதகமும் நம்ம பிரஷாந்த்தோட ஜாதகமும் ஒத்துப் போகுதாம். நம்ம தரகர் தான் பார்த்துட்டு வந்து சொன்னாரு. நானும் அப்பாவும் இன்னிக்கு நம்ம குடும்ப ஜோசியர்கிட்ட போய் ரெண்டு பேர் ஜாகத்தையும் மறுக்கா ஒருதடவ பார்த்தறலாம்னு இருக்கோம்” என்றவரின் குரலில் தெரிந்த சந்தோஷம் அவளை சந்தோஷப்பட வைக்காமல் கோபமூட்டின.

“அதான் அவன பாழுங்கிணத்துல தள்ளி விடறதா முடிவு பண்ணியாச்சுல்ல. அது வத்துன கிணறா இருந்தா என்ன வத்தாத கிணறா இருந்தா என்ன!” என வார்த்தைகளில் தன் கோபத்தைக் காட்ட, “நல்ல காரியம் பேசும்போது ஏன் டி இப்படி அபசகுணமா பேசற! ஒழுங்கா உன் அண்ணன் காதுல இந்த விசயத்தை போட்டு வை. நம்ம ஜோசியரும் நல்லவிதமா பண்ணலாம்னு சொன்னா வர்ற ஐப்பசில கண்ணாலத்த முடிச்சுப்புடணும்” என்றார் தங்கம்மாள்.

‘என்னது ஐப்பசிலயா! ஐப்பசிக்கு இன்னும் சில மாதங்களே இடைவெளி இருக்க ஏனிந்த அவசரம்?’ என மனம் கேள்வி கேட்க அதனை வாயும் மொழிந்திருந்தது.

“பொறவு அப்படியே வச்சுக்கிட்டேவா இருக்க முடியும். எல்லாம் காலாகாலத்துல பண்ணுனா தான அடுத்து உன் படிப்பு முடிஞ்சோனே உனக்கும் பண்ண முடியும். சரி சரி, அப்பா வந்துட்டாரு. நான் அப்புறம் நல்ல செய்தியோடு ஃபோன் பண்றேன்” என்றவர் அழைப்பைத் துண்டிக்க, சரயுவிற்கு தன் அன்னையின் தயவால் தலைவலி தான் இன்னும் அதிகமானது.

ன் தந்தை வேலை நிமித்தமாய் வெளியே செல்வதாக கூறி இருந்ததால் தோட்டத்தில் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டாள் அவள். தென்னை மரத்தின் கீழே இருந்த கரையோரம் தன் கால்களைக் கட்டிக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்தாள் ரேவதி.

அவள் அருகில் வந்தவன் தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து உதறியவாறே அவளருகே அமர்ந்தான் பிரஷாந்த்.

ஆனால் அவளோ அவனது வருகையை உணர்ந்திருந்திருந்தாலும் நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருக்க, “என்னாச்சு புள்ள?” என்றான் பிரஷாந்த்.

அதற்கும் பதிலில்லாமல் போக, அவளது தோளை நிமிர்த்தியவன் அவளது முகத்தைக் கண்டு அதிர்ந்துப் போனான்.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்