Loading

மதுரகவி – 03

 

“ஹே, அங்க பாரு நிலா” என்றவாறே கனிகா கைகாட்டிய திசையை நோக்கினாள் நிலா. 

 

வெள்ளை நிற கோட் வலது கரத்தில் தவழ, மறுகரத்தில் மருத்துவ அறிக்கையை பார்த்துக் கொண்டே, செவிலிய பெண் ஒருவருடன் ஏதோ தீவிரவாய் விவாதித்துக் கொண்டிருந்தான் அந்த மருத்துவன். 

 

“ம், சைட் அடிக்க ஆள் கிடைச்சாச்சு போல!” என்றவளை எல்லாம் கவனிக்கவில்லை கனிகா. “ஷார்ப் நோஸ், அளவா அதேநேரம் ஸ்டைலா ஒரு குட்டி மீசை, கிளீன் ஷேவ். ஆள் பார்க்க செமயா இருக்கார்ல! அந்த கண்ணு ப்பா!… பக்கா ஹீரோ மெட்டீரியல் டி” என அவனை அங்குல அங்குலமாய் வர்ணிக்க, தன் தோழியை முறைத்தாள் நிலானி. 

 

“ப்ச், இப்போ எதுக்கு டி என்னை முறைக்கிற?” என்றவளின் பார்வை இன்னும் அந்த மருத்துவனின் மேல்தான் படர்ந்திருந்தது. 

 

“இத மட்டும் சுரேஷ் கேட்ருக்கணும்” என்றவாறே இதழை வாயிற்குள் அடக்கி நமட்டு சிரிப்பு சிரிக்க, “நேரங்கெட்ட நேரத்துல அவன ஏன் டி ஞாபகப்படுத்துற” என சலித்துக் கொண்டாள் கனிகா. 

 

“அதான் ஆள் இருக்குல்ல, அப்புறம் எதுக்கு இந்த வேலை எல்லாம்” என்றவளிடம், “சைட் அடிச்சா என்ன தப்பு?” என கேள்வி எழுப்பினாள் அவள். 

 

“தப்பில்ல தாயே” என்றவளின் பார்வை தற்போது தான் அந்த மருத்துவனின் மேல் படர்ந்தது. “ம், நாட் பேட்” சிறு புன்னகையோடு கூற, “உனக்கு பிடிச்சிருக்கா, சொல்லு ஆளத் தூக்கிறலாம்” என்ற என் தோழியை ஏகத்துக்கும் முறைத்தாள் நிலானி. 

 

“சைட் அடிக்க ஓகே தான். பட்…” என அவள் இழுக்க, 

 

“ஏன் டி, நீயும் அப்பப்போ சைட் அடிக்கிற தான! ஆனா இதுவரைக்கும் யாரையும் பிக்கப் பண்ண மாட்டேங்கிறியே!” என சலிப்பாய் வந்தது வார்த்தைகள். 

 

“க்கும், சைட் அடிக்கிறவனலாம் பிக்கப் பண்ண நினைச்சா இந்நேரம் அந்த லிஸ்ட்ல இவர் ஆயிரத்து நூற்றி இருபத்தி ஒன்னாவது ஆளா இருப்பாரு” என அந்த மருத்துவனைச் சுட்டிக்காட்டியவள், “அழக ரசிக்கலாம் கனி, தப்பில்ல. ஆனா அதை அடைய நினைச்சா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்” என்றாள் தோளைக் குலுக்கியவாறே. 

 

அதேநேரம் கனிகாவின் அலைப்பேசி சிணுங்க, அழைப்பை ஏற்று பேசிவிட்டு வைத்தவள், “சாரி நிலா, சுரேஷ் தான். எனக்காக மால்ல காத்திருக்கானாம். சாரி டி உன்கூட இன்னிக்கு புல்லா ஊர் சுத்த போட்ட பிளான் பிளாப்” என அவள் மன்னிப்பு வேண்ட, 

 

“நான்தான் சொன்னேன்ல பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்னு” என்றவளின் குரலில் நக்கல் தொனித்தது. 

 

“நான் அவன பார்த்து பேசிட்டு உடனே வந்தறேன், நீ அதுக்குள்ள டாக்டர பார்த்துரு” என்க, தன் தோழியின் தோளை தன்பக்கமாய் இழுத்து அணைத்துக் கொண்டவள், 

 

“ப்ச், சும்மா விளையாண்டேன் கனி. நீ போய்ட்டு வா, நாம இன்னொரு நாள் பிளான் பண்ணிக்கலாம்” என்றாள். மனமே இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டாள் கனிகா. 

 

கனிகாவின் வர்ணிப்புக்கு சொந்தக்காரனோ, 

வழக்கம்போல் ரவுண்ட்ஸ் முடிந்து தன் அறைக்கு செல்லும் வழியில் அவனின் பார்வை வட்டத்தினுள் விழுந்தாள் நிலானி. 

 

நிலானியை பார்த்தவாறே தனது அறையை நோக்கி கால்களை எட்டி வைத்தான் மதுரகவி. இவை எதையும் அறியாமல் சற்றுமுன் செவிலியர் அவளிடம் கொடுத்த தன் தாயின் இரத்த பரிசோதனைகளை பார்வையிட்டு கொண்டிருந்தாள் அவள். 

 

அவர் உடன் வர மறுத்திருக்கவே தன் தோழி கனிகாவை துணைக்கு அழைத்து வந்திருந்தாள். தன் முறை வரும்வரை காத்திருந்தவள் தன் பெயரை அழைத்தவுடன் மருத்துவரின் அறை நோக்கிச் சென்றாள். 

 

“குட் மார்னிங் டாக்டர்” என்றவளை சிறு தலையாட்டலோடு அங்கிருந்த இருக்கையை நோக்கி கைகாட்ட அதில் அமர்ந்தவள் அவன்முன் இரத்த பரிசோதனை அடங்கிய கோப்பை நீட்டினாள். 

 

சில நொடிகள் கனத்த அமைதி நிலவியது. இரத்த பரிசோதனைகளை முழுதாய் பார்வையிட்டவன், பின் தன்முன் இருந்த மருந்துச் சீட்டில் எழுதிக் கொண்டே, “ஹெச்பி கவுண்ட் கம்மியா இருக்கு. அயர்ன் அண்ட் கால்சியம் டேப்லெட்ஸ் எழுதி இருக்கேன். மத்தப்படி வேறெந்த பிரச்சினையும் இல்ல. நல்ல சத்தான உணவா சாப்ட வைங்க” என்றவன் மருந்துச் சீட்டை அவள்முன் நீட்ட சரியென தலையாட்டியவாறே, அதனை வாங்கிக் கொண்டவள், “தேங்க் யூ டாக்டர்” என்றவாறே எழுந்தாள். 

 

அதுவரை ஏதோ சிந்தனையில் இருந்தவன் அவள் எழ முற்படவும், “ஒன் மினிட் நிலா” என்க, அவனை கேள்வியாய் நோக்கினாள் அவள். 

 

அடுத்து என்ன பேசுவது எனப் புரியாமல் சற்றே குழம்பியவன், “உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவனின் வார்த்தைகள் சற்று இடைவெளி விட்டே ஒலித்தது. 

 

அவளோ குழப்பமாய் புருவம் உயர்த்திட, “கொஞ்சம் ஸ்பெர்சனல்” என்றவன், அடுத்த நோயாளிக்கான கோப்பில் தலையை விட்டிருந்த செவிலியரிடம், தனக்கு வேண்டிய தகவல்களை கேட்டுப் பெற்றுக் கொண்டவன், 

 

“எனக்காக ஒரு டுவென்டி மினிட்ஸ் வெய்ட் பண்ண முடியுமாங்க நிலா, ப்ளீஸ்” என்றவன் கடைசியாய் ப்ளீஸை தொண்டைக்குள்ளே இறக்கிக் கொண்டான். 

 

ஓரிரு விநாடிகள் அவள் அமைதியாகிட, அவள் குழப்பமாய் இருப்பது புரிபட்டது. “தப்பா எடுத்துக்க வேண்டாம். ஒரு தகவல் தெரிஞ்சுக்கணும். அதான்…” என அவன் மேலும் விளக்க முற்பட, “ம், நான் வெயிட் பண்றேன் டாக்டர்” என்றாள் நிலானி. 

 

“நம்ம ஹாஸ்பிட்டல் கேன்டீன்ல வெய்ட் பண்ணுங்க” என்றவனின் முகம் சற்றே மலர்ந்திருந்தது. சரியென தலையாட்டிவிட்டு வெளியே வந்தவளுக்கு குழப்பமாய் இருந்தது. 

 

“இவரு எதுக்கு நம்மகிட்ட பேசணும்னு கேட்கிறாரு, முன்னபின்ன பார்த்தது கூட இல்லயே!” என தனக்குள்ளே புலம்பிக் கொண்டவள், பின் தோளைக் குலுக்கிக் கொண்டே, “என்னவா இருந்தா என்ன! இன்னும் கொஞ்ச நேரத்துல அவரே வந்து சொல்லிறப் போறாரு. அதுவரைக்கும் நம்ம வயித்த கவனிப்போம்” என்றவாறே கேன்டீனை நோக்கி நகர்ந்தாள். 

 

அதன்பின் வரும் நோயாளிகளின் மேல் கவனம் செலுத்தினாலும் மனதிரோம் நிலானியிடம் என்ன பேசுவது என ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான் மதுரகவி. 

 

இருபது நிமிடம் அரை மணி நேரமாக கடந்திருக்க, இனி கேன்டீனில் வாங்குவதற்கு வேற எந்த ஐட்டமும் இல்லை என்பதாய் அவளைப் பார்த்து சிரித்தது அவள் உண்டு முடித்து வைத்திருந்த மிச்சங்கள். 

 

“நம்ம வயிற ஓவரா கவனிச்சுட்டமோ!” என சற்று சப்தமாய் முணுமுணுத்தவள், மணியை பார்த்தவாறே வாயிற்புறம் எட்டிப் பார்த்தாள். 

 

அதேநேரம் மதுரகவியும் உள்ளே நுழைய அவளது பார்வை அவனை அளவிட்டது. 

 

வெள்ளையில் மேல்சட்டையும் கருப்பில் பேண்ட்ம் அணிந்திருந்தான். பணி முடிந்ததால் முழுக்கையை சற்றே மடித்துவிட்டுக் கொண்டே அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

 

அவனது முகத்தை அளவிட்டவளின் மனம் அவளது ஆதர்ஷ நாயகனான சூர்யாவின் முகத்தோடு ஒப்பிட, தன் எண்ணம் போகும் போக்கை கண்டிப்பதன் வண்ணமாய் மானசீகமாய் தலையில் மெலிதாய் கொட்டு வைத்துக் கொண்டவள் இன்னமும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தனது கருவிழிகளை வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து பிரித்தெடுத்து வேறுபுறம் பார்வையை செலுத்தினாள். அவசர அவசரமாய் கனிகாவிடம் தான் கூறிய, “நாட் பேட்”-ஐ வாபஸ் பெற்றுக் கொண்டது அவளின் மனம். 

 

அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தவனின் பார்வையும் அவளைத் தான் வருடிக் கொண்டிருந்தது. அவளைப் பற்றின தாயின் வார்த்தைகளும் உடன் சேர்ந்துக் கொண்டன. 

 

“பேரு நிலானி, கூட பொறந்தது ஒரு அண்ணன் மட்டும் தான். அப்பா டீச்சரா இருக்கிறாரு. இப்பதான் படிப்பு முடிஞ்சுருக்கும் போல. பொண்ணு பார்க்க லட்சணமா இருக்கா கண்ணா”

 

புகைப்படத்தில் அவளைப் பார்த்தவுடனே மனதில் ஒருவித படபடப்பு ஒட்டிக் கொண்டது. பெயருக்கேற்றார் போல் நிலவின் அழகை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருக்கிறாள் என மனம் கூவலிட்டது. இதுவரை பார்த்த பெண்களைத் தாண்டி அவள் அவனை ஏதோ ஓர் வகையில் ஈர்த்திருந்தாள். 

 

அதனால் அவளின் நிராகரிப்பு மனதினோரம் சிறு வலியை உண்டாக்கிவிட, அந்த வலியை நீக்கிட எண்ணியே அவளது நிராகரிப்பிற்கான காரணத்தை கேட்டுவிட முனைந்திருந்தான். நிலானியை நோக்கியவனின் கருவிழிகள் அவளை அளவிட்டது. 

 

அரக்கு வண்ண குர்தி அவளது நிறத்தை சற்றே கூட்டிக் காண்பித்தது. தோள் வரை வெட்டப்பட்ட முடிகள் இருப்பக்க தோள்பட்டையிலும் போட்டி போட்டு கொண்டு தவழ்ந்துக் கொண்டிருக்க அவளது கரங்கள் அடிக்கடி அதன் முயற்சிகளை தடைசெய்யும் வண்ணம் தோளின் பின்பக்கமாய் தள்ளிக்கொண்டிருந்தது. சற்றே பூசினார் போன்ற உடல்வாகு. ஆனால் அதுதான் அவளது அழகு என நினைத்தவாறே அவளருகில் வந்திருந்தான் மதுரகவி. 

 

“சாரிங்க, ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேன்ல. சாரிங்க” என மன்னிப்பு வேண்டியவனின் பார்வை அவள்முன் மேஜையில் இருந்த உணவு தட்டுக்களின் மேல் படர்ந்தது. 

 

‘இவ சாப்பிடவே நான் எக்ஸ்ட்ரா டியூட்டி பார்க்கணும் போலயே’ என சூழ்நிலையை உணராமல் கிண்டலடித்த மனதை கொட்டு வைத்து அடக்க, அவனது பார்வையின் பொருளை உணர்ந்தவளாய், “அது நீங்க வர லேட்டாகவும் சும்மாவே உட்கார முடியாம லைட்டா கொஞ்சம் வயித்த கவனிக்கலாம்னு” என்றாள். 

 

‘இது தான் லைட்டா கவனிக்கிறதா!’ என அவன் பார்வை அவளையும் அவள்முன் படர்ந்திருந்த தட்டுக்களையும் மாறிமாறி பார்த்திட, “க்கும்” என அவள் தொண்டையை செருமினாள். 

 

“சாரிங்க, வந்த விசயத்த மறந்துட்டேன்” என மீண்டும் மன்னிப்பு வேண்ட, அவனுடைய தொடர் மன்னிப்பு வேண்டலில் சற்றே சலித்தவளாய், “ப்ளீஸ்ங்க, இதுக்குமேல நான் இங்க உட்காந்து இருந்தனா பேங்க்ல கடன் வாங்கி தான் சாப்பிடணும். பேச வந்த விசயத்த சொல்லுங்களேன்” என்றவளின் குரல் ‘நேரிடையாய் விசயத்திற்கு வாயேன்’ என அழைப்பு விடுத்தது. 

 

மீண்டும் சாரி கேட்க வந்தவன் அவளின் முறைப்பில் அதனை கைவிட்டவனாய், “என் பேர் மதுரகவி, இந்த ஹாஸ்பிட்டல்ல தான் இரண்டு வருஷமா கைனக்காலஜிஸ்ட்டா வொர்க் பண்றேன்” என அவனை அறிமுகப்படுத்தியவனைக் குழப்பமாய் ஏறிட்டாள் அவள். 

 

“அது, வீட்ல எனக்கு அலைன்ஸ் பார்க்கிறாங்க” என சற்று இடைவெளி விட, ‘அதுக்கு’ என அவள் மனம் கூச்சலிட்டது. “உங்க போட்டாவ அம்மா காமிச்சாங்க” என்றவன் தற்போது அவளது முகத்தை ஏறிட்டான். 

 

அவளிற்கு இன்னமுமே அவன் கூற வருவது புரிபடாமலே இருந்தாலும், அவனது முகத்தை இதற்குமுன் பார்த்திருக்கிறோமோ என தன் மனதினுள் புகுந்து தேட ஆரம்பித்திருந்தாள். 

 

“உங்க வீட்டு சைட்ல இருந்து உங்களுக்கு இந்த வரன் பிடிக்கலனு சொன்னதா அம்மா சொன்னாங்க. அதான், நிராகரிப்புக்கான காரணம் தெரிஞ்சுக்கிட்டா கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவேன்” என ஒருவழியாய் கூறி முடித்திருந்தான். ஆனால் அதற்குள் அவனது நா உலர்ந்திருந்தது. 

 

பெண்களிடம் பேசாதவனே அல்ல. அவனது மேற்படிப்பில் உடன் பயின்றவர்கள் எல்லாம் மாணவிகளாய் இருக்க வகுப்பில் இவன் ஒருவன் மட்டுமே தான். ஆனால் நிலானியின் முன் மட்டும் அவனது நா தடம்பிரண்டது. 

 

அவனை இனங்கண்டுக் கொண்டதாய் அவளது விரிந்த விழிகள் காட்டிக் கொடுத்தது. “ஓ, சாரிங்க. உங்கள இதுக்கு முன்னாடி பார்த்தது இல்ல. அதான்…” என அவள் இழுக்க, அவளின் வார்த்தைகளில் அவன் முகம் சட்டென வாடியது. 

 

தன்னை பார்க்காமலே தான் அவள் நிராகரித்துள்ளாள் என்பதே ஏமாற்றமாய் இருந்தது அவனுக்கு. 

 

அவனின் வாடிய முகம் அவளை ஏதோ செய்ய, “தப்பா எடுத்துக்க வேண்டாங்க. அப்பா ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்காரு. அம்மா வீட்ல தான். வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கிற சாதாரண மிடில் கிளாஸ் பேக்ரவுண்ட். நீங்க, கொஞ்சம் வசதியான இடம். அதுவும் இல்லாம லட்சங்கள்ள சம்பளம் வாங்கிற டாக்டர்” என்றவளை அவனின் முறைப்பு இதழ்களில் புன்னகை பூக்கச் செய்தது. 

 

“சரி, ஓகே லட்சம்னு வச்சுக்கோங்களேன். அதுக்கு கம்மியா இருக்காது” என அவன் முகம் பார்த்திட, அவன் மறுத்திடாததால் மேற்கொண்டு தொடர்ந்தாள். 

 

“கண்டிப்பா உங்க சைட்ல இருந்து அட்லீஸ்ட் நூறு பவுனாச்சும் எதிர்பார்ப்பாங்க. அது இல்லாம கார், வீட்டு சாமான், சீர் வரிசைனு லிஸ்ட் கொஞ்சம் பெருசா போகும்” என்றவளை தடுத்திட வாய் முனைந்தாலும் மனமோ இன்று காலையில் தன் தாய் கூறியவைகளை நினைவுக் கூர்ந்தது. 

 

பணிக்கு தாமதமானதால் அவசர அவசரமாய் வயிற்றுக்குள் உணவைத் தள்ளிக் கொண்டிருந்தவனின் அருகே அமர்ந்தார் கல்யாணி. 

 

“என்ன மா விசயம்?” என்றவாறே உணவை தொண்டைக்குழிக்குள் இறக்க, “நேத்து அப்பா அனுப்புன பொண்ணு போட்டோவ இன்னும் நீ பார்க்கலயாமே கண்ணா, அப்பா சொன்னாரு” என்றார். 

 

அதை அவன் முற்றிலும் மறந்திருக்க, என்ன சொல்லி சமாளிப்பது எனப் புரியாமல் தன் தாயைப் பார்த்தான். ஆனால் அவரோ, “நல்ல வசதியான இடம் கண்ணா. ஒரே பொண்ணு போல. குறைஞ்சது நூறு பவுன் போடுவாங்களாம், அப்புறம் கார், சீர் வரிசைனு தடபுடலா பண்ணுவாங்கன்னு தரகர் சொல்லி இருக்காரு” என்றவரை, “என்னமா நூறு பவுன்னு சொன்னதும் கவுந்திட்டியா?” என நக்கலாய் வினவினாள் உமையாள். 

 

“அடப்போடி, என் புள்ளைக்கு இதே கம்மி. அவனுக்கு என்ன குறைச்சல்! இப்பவே லட்சத்துல சம்பளம் வாங்கிறான். நம்மள விட அவங்க கொஞ்சம் வசதி கொறஞ்சவங்க தான். இருந்தாலும் ஒத்தப் புள்ளைனு கொஞ்சம் நல்லா செய்ய நினைக்கிறாங்க போல” என தங்களை கீழே இறக்காமல் அதேசமயம் அவர்களையும் விட்டுக் கொடுக்காமல் பேசுபவரைப் பார்த்தவனுக்கு உள்ளம் கனன்றது. இருந்தும் தன் தாயின் மனதை நோகடிக்க மனமின்றி அமைதியாய் அங்கிருந்து கிளம்பி வந்திருந்தான். 

 

அதே வார்த்தைகளை இங்கு நிலானியும் கூறிட மறுத்துப் பேச நினைத்தும் வார்த்தைகள் வெளிவரவில்லை. 

 

அவனைப் புரிந்துக் கொண்டவள் போல் இருந்தது அடுத்து வந்த அவளின் வார்த்தைகள். 

 

“சின்னவங்க நம்மளுக்கு இந்த நகை, சீர்வரிசைங்கிறது பெரிசா தெரியாம இருக்கலாங்க சார். ஆனா பொண்ண பெத்தவங்களுக்கு பொண்ணுக்கு தங்களால முடிஞ்ச சீர் வரிசை செஞ்சு புகுந்தகத்துக்கு அனுப்பணுங்கிற ஆசை இருக்கும். அதேநேரம், மாப்பிள்ளை வீட்லயும் தன் வீட்டுக்கு வர்ற மருமக தங்களுக்கு இணையா சீர்வரிசையோட வரணும்னு எதிர்பார்ப்பு இருக்கும் இல்லயா! அத தப்பு சொல்ல முடியாதே. அவங்க அவங்க விருப்பம் அவரவர்களுக்கு.

 

மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் நமக்குள்ள. அதுனால தான் உங்க குடும்ப பிண்ணனி பார்த்தவுடனே வேண்டாம்னு அப்பாகிட்ட சொல்லிட்டேன். மத்தபடி உங்களை பிடிக்காமயோ இல்ல உங்கள்ட்ட குறை கண்டுபிடிச்சோ மறுக்கல” என்றவளின் வார்த்தைகளில் அத்தனை திடம். 

 

தன்னைப் பிடிக்காமல் அவள் மறுத்திடவில்லை என்பது அவளது வார்த்தையின் நிதர்சனம் உரைத்திட, சற்றே இலகுவானது அவனின் மனம். 

 

“அதுனால தான் என் போட்டோவ கூட நீ பார்க்கலயோ!” என பன்மையில் இருந்து ஒருமைக்குத் தாவி இருந்தான் மதுரகவி. ஆனால் அவள் அதனைக் கவனித்ததைப் போல் தெரியவில்லை. 

 

“ம். உண்மைய சொல்லணுமா மொதல்ல பேக்ரவுண்ட் செக் பண்ணிட்டு என் மனசுக்கு ஒத்து வரும்னு பட்டுச்சுனா மட்டும் தான் மாப்பிள்ளை போட்டோ பார்ப்பேன். ஒருவேளை மொதல்லயே மாப்பிள்ளை போட்டோ பார்த்து பிடிச்சுப் போய் அதுக்கு அப்புறம் அவங்க குடும்ப நிலை ஒத்து வரலனா ஒருவித ஏமாற்றமா இருக்கும். அந்த ஏமாற்றத்த தவிர்க்க தான் இந்த முன்னேற்பாடு” என்றாள் நிலானி. 

 

“ஆனா எங்க பேமிலிய பத்தி உங்க அப்பாவுக்கு நல்லா தெரிஞ்சு இருக்குமே. தங்களுக்கு தகுதி மீறியதுனு அவர் நினைக்காம இருந்திருக்கலாம். அதுனால கூட உன்கிட்ட கேட்ருக்கலாம் இல்லயா!” என்றான் அவளது பெற்றோருக்கு இதில் விருப்பமா என அறிந்திடும் நோக்கில். 

 

அவனது கேள்வியில் அவள் இதழ்களில் முறுவல் பூத்தது. “அவருக்கு தன் மக உலக அழகினு நினைப்பு” என கேலியாய் புன்னகைக்க, 

 

“அது உண்மையும் தான!” ரசனையாய் வெளிவந்த மதுரகவியின் வார்த்தைகளில் இதழ்களில் பூத்திருந்த முறுவல் சட்டென மட்டுப்பட்டது. 

 

அவனை முறைப்பாய் ஏறிட்டவளைப் பார்த்தப்பின் தான், தான் மனதினுள் உரைப்பதாய் நினைத்து சப்தமாய் கூறியது புரிபட, மீசைமுடிக்குள் சிக்கியிருந்த இதழ்கள் மந்தகாசமாய் புன்னகைத்தது. 

 

அவனின் புன்னகைக் கண்டு முறைப்பு இன்னும் தொடர்ந்திட, “ஹே, கூல். உண்மைய சொன்னா கூட இந்த பொண்ணுங்க முறைக்கிறாங்க பா” என்றான் உல்லாச குரலில். 

 

“ஏதோ பாவம் பார்த்து நம்மனால ஒரு ஆள் ஃபீல் ஆகி தேவதாஸா சுத்த வேண்டாமேனு உண்மைய சொன்னா ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குறீங்க டாக்டர்” என்றவளின் வார்த்தைகளில் சற்றே காரம் தூக்கலாய் இருந்தது. 

 

“ஹே, ஹே… ரிலாக்ஸ் நிலா” என அவசரமாய் அவளை மலை இறக்க, சற்றே தனிந்தவளாய், “அப்பாவுக்கு எனக்குப் பிடிச்ச அதேநேரம் நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறது தான் ஆசை, லட்சியம்னு கூட சொல்லலாம். ஆனா அதுக்காக, நான் சொகுசா வாழ அவங்கள பாழுங்கிணத்துல தள்ள முடியாதுங்க. 

 

இப்போ உங்கள பிடிச்சிருக்குனு நான் சொன்னாக் கூட அத மறுக்காம நிறைவேற்ற தான் நினைப்பாங்க. 

 

என் வாழ்க்கைய தூக்கிவிட நினைச்சு அவங்க வாழ்க்கைய அகல பாதாளத்துக்கு கொண்டு போய்விடறது எந்தவகையில சரியாப் படும்?” என்றவளின் முகத்தில் குறும்பு மறைந்து தீவிரமாயிருந்தது. 

 

நடுத்தர வர்க்கத்தின் நிலையை அவளது வார்த்தைகள் வெளிச்சம் போட்டுக் காட்டிட, அவனால் மேற்கொண்டு அவளிடம் பேச முடியவில்லை. 

 

“உங்க கேள்விக்கான விடை கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன். நான் கிளம்பலாமாங்க டாக்டர்” என்றிட, “இந்த டாக்டர் வேண்டாமே! நேம் சொல்லியே கூப்பிடலாம் நிலா” என்றவனை புருவங்கள் சுருங்கப் பார்த்தவள், 

 

“இந்த டாக்டர், அட்டெண்ட்டர்ங்கிற ரிலேஷன்ஷிப்பே போதும்னு நினைக்கிறேன் டாக்டர்” என்றவளின் வார்த்தைகள் இந்த உறவை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை என்பதாய் பறைசாற்றியது. “நான் ஏன் உங்களை நிராகரிச்சேன்னு தெரிஞ்சுக்க நீங்க காட்டின ஆர்வம் ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லைக் இட்” என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றாள் நிலானி. 

 

சற்று தளர்வாய் நாற்காலியில் அமர்ந்தவாறே அவளுருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் மதுரகவி. அவளது வார்த்தைகளை மீண்டும் மனதினுள் ஓட்டிப் பார்க்க அவனது கரங்களோ சிகைக்குள் நுழைந்து தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முனைந்தது. 

 

_தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்