Loading

உயிர் – 02

குந்தவையின் பார்வை நோட்டில் இருந்த இ. சிற்பிகா என்ற பெயரில் நிலைக்குத்தி நிற்க, “குந்தவி” என்ற இளவரசனின் அழைப்பில்தான் நிதானத்திற்கு வந்தாள்.

“இந்தாங்க…” என நோட்டை நீட்ட அதனை வாங்கி சிட்டுமாவின் பையில் வைத்தவன், “சரி, போயிட்டு வரோம் குந்தவி. இன்னொருநாள் ப்ரீயா இருக்கும்போது மீட் பண்ணலாம்” என்றவன் வண்டியை உயிர்பிக்க, “பாய்” என்ற சிட்டுமாவிற்கு கையசைத்தவளின் முகம் சற்றே வாடியிருந்தது.

அவர்கள் இருவரும் சென்றப் பின்பும் சில நிமிடங்களுக்கு அவள் அதே இடத்தில்தான் நின்றிருந்தாள். கண்களின் ஓரம் நீர்கோர்க்க, தன் மனதை சமன்படுத்திக் கொண்டவள் அங்கிருந்து கிளம்பினாள்.

வாடிய முகத்துடன் வீட்டினுள் நுழைந்த குந்தவையை கண்ட அவளின் அன்னை கலா, “என்னம்மா முகம் ரொம்ப வாட்டமா இருக்கு? இன்னிக்கு ரொம்ப வேலையா, புது ஆபிஸ் இன்னும் செட் ஆகலயா மா?” என்றார்.

“அம்மா உன் மடில கொஞ்சம் நேரம் படுத்துக்கவா?” என்றவள் அங்கிருந்த ஷோபாவில் தன் தாயை அமர்த்தி, அவர் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டாள்.

தன் மகளின் இந்தத் திடீர் செயல், அவர் மனதை வாட்ட, அவள் இருக்கும் மனநிலையைப் புரிந்துகொண்டு தலையை வருடிவிட்டார் கலா.

சில நொடிகளில் வயிற்றுப் பகுதியில் ஈரம் படர, அதனை உணர்ந்தவர், “குட்டிமா என்னாச்சு மா?” என அவள் தலையை வருட,

“என்னால முடியல ம்மா. என் இளா எனக்கு இல்லனு தெரிஞ்சதுக்கப்புறமும் என் மனசு அவரத் தான் தேடுது ம்மா. முடியல ம்மா” என்றவளின் வார்த்தைகளில் அவள் சொல்ல வருவது அவருக்குப் புரியாமல், “இளாவ பாத்தியா டா?” என்றார் கலா.

“ம்…” என அவள் தலையாட்ட, “எங்க, எப்போ பாத்த டா?” என்ற கலாவின் கேள்விக்கு, “இன்னிக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வரும்போது இங்க பக்கத்துல உள்ள ஸ்கூல் முன்னாடி மா” என்றாள் குந்தவை.

“ஸ்கூல் முன்னாடியா!” என அவர் புரியாமல் பார்க்க, “பக்கத்துல ஒரு கடைக்குப் போய்ருந்தேன் ம்மா. போய்ட்டுவந்து வண்டிய எடுக்கும்போது தான் இளாவ பாத்தேன். அவருக்கு ஒரு குழந்தை இருக்கு ம்மா” என்றவள், அவனிடம் பேசிய அத்தனையும் தாயிடம் ஒப்புவிக்க,

கலாவின் முகத்தில் தன் மகளின் எதிர்காலம்குறித்த கவலை எழும்பியது. தன் மகளின் காதலை நன்கு உணர்ந்தவராயிற்றே. கடந்த ஐந்து வருடங்களாக அவளின் தேடலுக்கு இன்று பதில் கிடைத்திருந்தாலும் அவை அவளுக்குச் சந்தோசத்திற்குப் பதில் துக்கத்தை அல்லவா கொடுத்துள்ளது.

“அந்த நோட்ல உள்ள பேர வச்சுதான் அது இளாவோட குழந்தைனு சொல்றியா குட்டிமா?” என்றார் கலா.

“அதுமட்டுமில்ல ம்மா, அவங்க ரெண்டு பேராட பாசம், அந்தக் குழந்தைய கண்டோனே இளா முகம் எப்படி பிரகாசமாச்சு தெரியுமா. இளா கண்ணுல தூசி விழுந்ததுக்கு சிட்டுமா துடிச்சுப் போய்ட்டா ம்மா. அப்பா, மகளுக்கான உறவ கூட என்னால புரிஞ்சுக்க முடியாதா! இளா எனக்குச் சொந்தமானவர் இல்ல ம்மா. அவரு அவரு…” என அவனிடம் அங்கு அப்படி கதைத்தவள் இங்கு அழுதுக் கொண்டிருந்தாள்.

கலாவிற்கு தன் மகளை எப்படி தேற்றுவது என்று புரியாமல் தவித்தார். குணசேகரன் – கலா தம்பதியினரின் ஒரே செல்வ புதல்வி தான் குந்தவை.

குணசேகரன் அரசு வங்கியொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். கலா இல்லத்தரசி. பெண் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் தாயைவிட தந்தையின் மேல் உள்ள பாசம் ஒருபடி மேல் தான். இது இயல்பான ஒன்றுதான். ஆனால் இங்கு குந்தவைக்கு எப்பொழுதும் அவள் அன்னை தான் முதலில். தந்தைக்கும் மகளுக்குமான பிணைப்பும் இருந்தாலும் அவள் ஏதாவது என்றால் உடனே தன் தாயை தான் தேடுவாள்.

இளவரசன் பயின்ற அதே கல்லூரியில் தான் குந்தவையும் படித்தாள். அவன் கடைசி வருட படிப்பில் இருக்க, இவள் முதலாமாண்டில் காலடி எடுத்து வைத்திருந்தாள்.

வழக்கமான கல்லூரி கலாட்டாகள் நிறைந்த வாழ்வு தான். அவள் இயல்பிலேயே துடுக்கான பெண் என்பதால், சீனியர் என்றும் பாராமல் அனைவரிடத்திலும் சரிக்குசமமாக வாதாடுவாள். அப்படி பழக்கமானவர்கள் தான் இளவரசனும் குந்தவையும்.

அப்பொழுதெல்லாம் இளவரசன் துடிப்பாக, இவளைவிட பத்துமடங்கு வாயடிப்பவனாகத் தான் அவள் கண்டதுண்டு. இருவருக்குமிடையே பலமுறை கருத்து வாதங்கள் நடைபெறும். இருவருக்குமிடையே இருந்த நட்பு குந்தவைக்கு காதலாக மாற, அதனை அவனிடத்தில் வெளிப்படுத்தவும் செய்தாள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு…

கல்லூரி வளாகத்தில், அப்பொழுது தான் கல்லூரி விடுதியிலிருந்து தங்களது வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த இளவரசனை இடையிலேயே மறித்து நின்றாள் குந்தவை.

“லேட் ஆகிருச்சு குந்தவி, கிளாஸ்க்கு போகணும். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசு” என அவள் பேசுவதற்கு முன்பே பதிலளித்தவன் அங்கிருந்து நகர, அவனைத் தடுத்தவள், “இது அதவிட முக்கியமான விசயம் இளா… ப்ளீஸ்” என்றாள்.

“சரி, சொல்லு” என்றவாறே தனது கைக்கடிகாரத்தைப் பார்க்க, “உங்க கிளாஸ் வெற்றி எனக்குப் பிரப்போஸ் பண்ணாங்க இளா” என்றவளின் பார்வை அவனது முகத்தில் எதையோ தேடியது.

“அத ஏன் என்கிட்ட சொல்ற குந்தவி, உனக்குப் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்லு. இல்லன்னா நாட் ஓ.கே னு சொல்லிரு” என்றான் தோளைக் குலுக்கியபடி.

“ப்ச், அதுவல்ல இப்போ பிரச்சினை. அவங்க என்கிட்ட பிரப்போஸ் பண்ணும்போது நான் ஆல்ரெடி கமிட்டடு சொன்னேன்” என்றவள் அவன் கண்களைச் சந்திக்க,

அவனோ, “இது எப்போ நடந்துச்சு? சரி அந்த அன்லக்கி பெல்லோ யாரு?” என்றான் புன்னகை முகமாய்.

“என்னைக் காதலிச்சா அன்லக்கி பெல்லோவா?” என அவனை முறைக்க, “அப்புறம். உன் வாயிக்கு அவன் தீனி போடறதுக்குள்ள காலி ஆகிடுவான்” என்றான் நக்கலாய்.

“ப்ச், இப்போ உங்கள திட்டக்கூட என்கிட்ட டைம் இல்ல. இத சொல்லவும் வெற்றி அந்தப் பையன் யாருனு கேட்கறாங்க?” என்றாள் முகத்தைச் சோகமாக வைத்தபடி.

“எனக்கும் அதே டவுட் தான். அந்தப் பையன் யாரு மா?” என்றான் ஆவலுடன். “என்னோட இளவரசன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றவள் அவன் முகத்தைப் பார்க்க,

“ஓ…” என்றவன், “என்ன சொன்ன, திருப்பிச் சொல்லு” என்றான் இளவரசன். “ம்… என்னோட செல்ல இளவரசன்னு சொன்னேன் டா மாங்கா மடையா” என்று கத்தியவாறே அவள் அங்கிருந்து ஓட,

அதனை அவன் உணர்வதற்கே சில நிமிடங்கள் பிடித்தன. “ஹேய் குந்தவி!” என்ற அவனின் அழைப்பில் திரும்பிப் பார்த்தவள், “ஐ லவ் யூ டா மாங்கா மடையா” என்று கத்தியவாறே அங்கிருந்து தனது வகுப்பிற்கு ஓட,

“லூசு. எது எதுல விளையாடறதுனு இல்லயா!” என்றவன், அவளின் காதலை விளையாட்டாய் எடுத்துக்கொண்டு தனது வகுப்பறைக்குச் சென்றான்.

அடுத்த ஒருவாரம் அவன் கண்ணில் படாமல் அவனுக்குப் போக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள் குந்தவை. “இவ விளையாட்டா சொல்றாளா இல்ல சீரியஸ்ஸா சொல்றாளானு கூடத் தெரிய மாட்டேங்கிது” என அவன் ஒருபக்கம் புலம்பிக் கொண்டிருக்க, அவனை மறைந்திருந்து தினமும் பார்ப்பவள்,

“நீங்க சரியான மாங்கா மடையன் தான் இளா” எனத் தலையில் அடித்துக் கொண்டவள், அடுத்து வந்த செமஸ்டர் தேர்வுக்குத் தயாராக, தேர்வின்போதும் இருவரும் சந்திக்க முடியாமல் போனது.

அந்த செமஸ்டர் தான் இளவரசனுக்கு கடைசி செமஸ்டர் என்பதால், அதன்பிறகு அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்றெண்ணி அவனது தொலைப்பேசிக்கு தொடர்புகொள்ள அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது.

அவள் எவ்வளவு முயன்றும் அவனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. பேரவல் பார்ட்டியில் அவனைப் பார்த்தவள், அவனிடம் பேச முயல அவனோ சில நிமிடங்களிலே அவள் கண்ணிலிருந்து மறைந்திருந்தான்.

அவன் நண்பர்களிடம் விசாரிக்க, அவர்களுக்கும் அவனைப் பற்றின தகவல்கள் கிடைக்காமல் போனது. அதன்பின் மூன்றாண்டுகள் உருண்டோடி தனது படிப்பையும் முடித்து வேலையிலும் சேர்ந்துவிட்டாள்.

அவளின் தேடல் நீண்டுகொண்டே தான் சென்றதே ஒழிய, அதற்குத் தீர்வு இன்றுதான் கிட்டியது.

தனது தந்தையின் பணியிட மாற்றத்தினாலேயே தான் கடந்த வாரம் கோயம்புத்தூருக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்திருந்தார்கள். கடந்த நான்கு நாட்களாகத் தான் அவளும் சரவணம்பட்டியில் அமைந்துள்ள தனியார் தொழில்நுட்ப அலுவலகமொன்றில் பணியில் இணைந்திருந்தாள்.

அவளின் காதலை இளவரசனுக்கு முன் அறிந்துக் கொண்டது அவளின் அன்னை கலா தான். தன் தாயிடம் கூறிவிட்டு தான் இளவரசனிடமே தன் மனதைக் கூறினாள்.

இளவரசனையும் ஏற்கெனவே கலாவிற்கு அறிமுகம் என்பதால் தனது மகளின் காதலுக்கு தடை சொல்லவில்லை. ஆனால், படிப்பு முடியும்வரை அதில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டுமென அவர் கூறியிருக்க,

அதற்கு குந்தவை, “ம்மா, உங்க மருமகன பத்தி இன்னும் உங்களுக்குச் சரியா தெரியல. அவரு சரியான பழம் ம்மா, இப்போ போய் லவ்வ சொன்னாலும் நான் விளையாட்டுக்குச் சொல்றேனு தான் நினைப்பாரு. அப்புறம், முதல்ல உன் படிப்ப முடினு அட்வைஸ் பண்ணி கழுத்தறுப்பாரு” என்றிருந்தாள்.

அவள் நினைத்தது போலவே அவன் அவளின் காதலை விளையாட்டாய் தான் எடுத்துக் கொண்டான். சமீபகாலத்தில் தான் தன் மகளின் காதலை தெரிந்துக் கொண்டார் குணசேகரன்.

அவருக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும் நான்கு வருடமாக இளவரசனை தேடியும் கிடைக்காமல் இருக்க, அவனையே நினைத்துத் தனது மகள் வாழ்வது ஒரு தந்தையாய் கவலைப்பட வைத்தது.

தன் மனைவியிடமும் அதனைக் கூறியிருந்தார். அதற்கு கலாவோ, “உங்க கவலை எனக்கும் புரியுதுங்க. சமீப காலமா இதே கவலைதான் எனக்கும் இருக்கு. ஆனா, இத குட்டிமாகிட்ட சொன்னா அத தாங்கிக்க மாட்டாங்க. அவ இன்னும் நம்பிக்கிட்டுதான் இருக்கா, கண்டிப்பா மாப்பிள்ளை கிடைப்பாருனு. அவருக்கு என்னாச்சு, ஏதாச்சுனே தெரியாம இவ கண்மூடித்தனமா காதல வளர்த்துக்கிட்டு இருக்கா. இது எங்க போய் முடியும்னே தெரியலங்க!” எனத் தன் கவலையை வெளிப்படுத்த,

“இன்னும் ஒரு வருஷம் பாக்கலாம் கலா. அப்பயும் அந்தப் பையன் கிடைக்கலனா வேற மாப்பிள்ளை பாத்துதான் ஆகணும். நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு, அதுனால தான் அவ வாழ்க்கைய அவளே தேர்ந்தெடுக்கும்போது அவ சந்தோசத்துக்காகச் சரினு சொன்னோம். இப்போ இப்படி இருக்கும்போது நம்ம அவ வாழ்க்கையவும் பாக்கணும்ல. அவக்கிட்ட சொல்லி வை கலா, ஒரு வருஷம் தான் டைம்னு” என்றிருந்தார் குணசேகரன்.

குந்தவையும் தன் நட்பு வட்டம், இளவரசனின் நட்பு வட்டம் எனத் தனக்குத் தெரிந்த அனைவரிடத்திலும் அவனைப் பற்றி விசாரித்துவிட்டாள். பயன் என்னவோ சுழியம்தான். சோசியல் மீடியாவிலும் அவனின் பெயரைச் சல்லடைப் போட்டுத் தேடியும் கிடைக்கவில்லை.

ஒருகட்டத்தில் அவள் சோர்ந்துப் போயிருக்க, அந்த நேரத்தில் தான் அவன் அவள் கண்ணில்பட்டான்.

முதலில் அவனுக்குத் தன்னை ஞாபகம் இல்லை எனும்போதே உயிர்பறிபோகும் வலியை உணர்ந்தவள், அவனின் இதழ்களில் தன் பெயர் உச்சரிக்கப்படும் போதுதான் சற்று உயிர்பெற்றாள்.

ஆனால், அந்தச் சந்தோசம் அவளிற்கு நீண்ட ஆயுளை கொடுக்கவில்லை. சிட்டுமாவின் மூலம் அந்தச் சந்தோசமும் தகிடுப் பொடியாக்கப்பட, இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அணைப் போல் வழிந்தோடியது.

உயிர் – 03

கலா எவ்வளவு சமாதானம் செய்தும் அவளிடத்தில் பலனில்லை. அழுதழுது அவள் கண்கள் சிவந்து வீங்கிப் போயிருக்க, அவளை அவளது அறையில் படுக்க வைத்தவர், “கொஞ்சம் நேரம் எல்லாத்தையும் மறந்துட்டு தூங்கு குட்டிமா. எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம்” என்றவர் அறையை விட்டு வெளியேற, அவளோ விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.

இங்கு இளவரசனும் சிட்டுமாவும் தங்களின் இல்லத்திற்கு சென்றுக் கெண்டிருக்க, வரும் வழியெங்கும் வளவளத்துக் கொண்டிருந்தாள் சிற்பிகா என்ற சிட்டுமா.

அவளின் அத்தனை பேச்சுக்கும், ‘ம்’ கொட்ட, அவனின் கவனம் தன் பேச்சில் இல்லாததைக் கண்டு, “போ சிட்டு, நான் பேசறத நீ கவனிக்கவே இல்ல. உன்கூட காய்” என விரல் நீட்டி காய் விட்டவள், அதற்குள் வீடுவந்திருக்க வண்டியிலிருந்து இறங்கி வீட்டினுள் அவள் ஓட, “சிட்டுமா மெதுவா போகணும்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்லி இருக்கேன்” என வார்த்தைகளில் கடினம் இருந்தாலும் குரலில் மென்மையைத் தாங்கியவண்ணம் அவன் கூறினான்.

அவளோ அதனை எல்லாம் காதில் வாங்காமல், வீட்டினுள் ஓடினாள். அவனது அலுவலக பையையும், சிட்டுமாவின் புத்தக பையையும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைய, அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சிவகாமி, “இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கெளம்பணும் தம்பி, பாப்பாக்கு இன்னிக்கு பொறந்தநாளு யா. அதுக்கு ஏதாவது செஞ்சு குடுக்கணும்” எனக் கூற,

“சரிங்க க்கா, மீதி வேலைய நான் பாத்துக்கறேன். நீங்கக் கிளம்புங்க” என்றவன், “ஒரு நிமிஷம் க்கா” என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று ஒரு ஜவுளி கவருடன் வெளியே வந்தான்.

“இத பாப்பாகிட்ட கொடுத்துருங்க க்கா” என்றவன், சில இருநூறு ரூபாய் நோட்டுக்களையும் நீட்ட, அதனை வாங்கத் தயங்கியவர், “சம்பளம் தான் ஏற்கனவே குடுத்துட்டீங்களே தம்பி. நீங்களே சமாளிக்க கஷ்டப்படுறீங்க, இப்போ எனக்கும் எதுக்கு தம்பி!” என்றார் சங்கடமாய்.

“பரவால்ல க்கா. இங்க நான் சமாளிச்சுக்கறேன், நீங்க பாப்பாவுக்கு ஏதாவது வாங்கி குடுங்க” என்கவும், அதற்குமேல் மறுப்பு தெரிவிக்காமல் வாங்கிக் கொண்டு அவர் கிளம்ப, “சிட்டுமா” என அழைத்தவாறே பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அங்கு அவனின் தந்தையின் மடியில் ஏறி ஒய்யாரமாய் அமர்ந்து தனது பள்ளியில் நடந்தவற்றை எல்லாம் அவள் ஒப்பித்துக் கொண்டிருக்க, அதனைக் கண்டவன், “சிட்டுமா உன்கிட்ட எத்தனை தடவ சொல்றது, ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்தோனே கைகால் கழுவிட்டு துணி மாத்திட்டுதான் இங்க வரணும்னு சொல்லிருக்கேன்ல. சொன்னப் பேச்ச கேட்கவே மாட்டியா?” என்க,

“நான் உன்கூட காய்விட்டு ரொம்ப நேரம் ஆச்சு” என முகத்தைச் சிலுப்பியவள், “நான் போய்க் கைகால் கழுவிட்டு வந்து கதை சொல்றேன் சின்னதம்பி” என்றவள், அவரின் மடியிலிருந்து இறங்கி ஓட, அவளையே பார்த்துக் கொண்டிருந்த தன் தந்தையைக் கண்டவன், “சிட்டுக்கு துணி மாத்திவுட்டுட்டு வரேன் ப்பா. அதுவரை எங்கயும் போய்றாதீங்க” என்றவன், சிட்டுவைத் தேடி தங்களது அறைக்குச் சென்றான்.

இரு படுக்கை அறைகள் கொண்ட நடுத்தரமான வீடு. அந்த அழகான கூட்டில் மூன்று ஜீவன்கள் உயிர்வாழ்கின்றன என்று சொல்வதைவிட, சிட்டுமா என்ற உயிர் மற்ற இரு உயிர்களையும் தாங்கிக்கொண்டு வாழ்கின்றது என்றுக் கூறலாம்.

இளவரசனுக்கும், சின்னதம்பிக்கும் உயிர் சிட்டுமா தான். அவளுக்கு உடைமாற்றி தானும் உடைமாற்றிக் கொண்டவன், தந்தையின் அறையில் சிட்டுமாவை விட்டுவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

இரவுக்கு மாவு ஆட்டி ஏற்கெனவே குளிர்சாதனப்பெட்டியில் எடுத்து வைத்திருந்தார் சிவகாமி. இரவு சட்னி மட்டும் அரைத்துக் கொண்டால் போதும் என நினைத்தவாறே ஹாலுக்கு வர, அங்குச் சுவரில் மாட்டப்பட்டிருந்த அன்னையின் புகைப்படத்தைக் கண்டு அவன் கால்கள் அங்கேயே நின்றன.

மாலை ஆறு மணியென கடிகாரம் காட்ட தனது அன்னையின் புகைப்படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்தவன், “நீ எங்களுக்காக எவ்ளோ தியாகம் பண்ணிருக்கனு இந்த அஞ்சு வருஷத்துல உணர்ந்துட்டேன் ம்மா. எங்களுக்காக வாழ்ந்துட்டு இப்படி எங்கள நடுவுலயே தத்தளிக்க வச்சுட்டு போய்ட்டியே ம்மா” என்றவனின் கண்களில் நீர்கோர்க்க, சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தான்.

கோயம்புத்தூர் வந்த புதிதில் வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு, சிட்டுமாவையும் பார்த்துக்கொண்டு தனது தந்தையையும் பார்த்துக் கொள்வது அவனுக்கு முடியாத காரியமானது. இதில், வேலைக்குச் சென்றாக வேண்டிய சூழல்.

தடுமாறி நின்றவன், பின் சிவகாமியை வீட்டு வேலைக்குப் பணித்திருந்தான். அவரும் துணிகளை வாஷிங் மிஷினில் போட்டுக் காய வைத்து எடுத்து வைப்பது, வீடு பெருக்கி துடைப்பது, பாத்திரம் கழுவி வைப்பது என மேற்படி வேலைகளைக் கவனித்துக் கொள்ள மாதம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் கொடுத்தான்.

அது குறைவுதான் என்றாலும் அவனின் நிலையை உணர்ந்து அவரும் சம்மதிக்க, கூடவே அவனின் தந்தையையும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்க, அதற்கும் சம்மதித்தார் சிவகாமி.

சின்னதம்பி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்பட்டு, தன்னைச் சுற்றி நடப்பவைகளை உணராமல் வெற்று ஜடமாய் உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் பேசுவதையே மறந்திருக்கிறார் என்றுகூட கூறலாம். அமைதியாய் இருப்பார், சில நேரங்களில் மனம் போன போக்கில் வீட்டைவிட்டு வெளியேறி விடுவார். அப்பொழுதெல்லாம் அவரைத் தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் ஒருவழி ஆகிவிடுவான் இளவரசன்.

அவனின் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடிக் கொண்டிருப்பதால், வேலையையும் பார்த்துக் கொண்டு வீட்டையும் பார்த்துக் கொள்வது அவனுக்கு மிகப்பெரிய சவாலாகத் தான் இருந்தது.

தனது தந்தையின் அறைக்குச் செல்ல, சிட்டுமா அவரின் மடியில் அமர்ந்து கதையளந்துக் கொண்டிருந்தாள். அவளின் பேச்சுகளில் தான் அவரின் உணர்வுகள் அவ்வபோது வெளிப்படும்.

அவள் சொல்வதை இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருப்பார். அவளின் அதட்டலுக்குத் தான் அவர் பயப்படவும் செய்வார்.

அவர் உணவுண்ணவில்லை என்றால், “சின்னதம்பி இப்போ சாப்டுறியா இல்லயா” என இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, மறு கையால் விரல் நீட்டி அவள் எச்சரித்தால் அவளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடுத்த நொடியே உணவுத் தட்டை எடுத்து உணவுண்ண ஆரம்பிப்பார்.

உணவுண்ணும்போது பருக்கைகள் கீழே சிந்தினால், “உனக்கு ஒன்னுமே தெரிய மாட்டேங்கிது சின்னதம்பி. சாப்பாட்ட இப்படி சிந்தாம சாப்டணும்” எனச் சில நேரங்களில் அவருக்கு அன்னையாகவும் மாறிடுவாள்.

இந்த உணர்வுப் போராட்டங்களை எல்லாம் பார்க்கும்போது இளவரசனுக்கு, அவர்கள் இருவரில் யார் குழந்தை என்ற குழப்பமே வந்துவிடும் அளவிற்கு இருக்கும் சிட்டுமாவின் அன்பும் அதிகாரமும்.

“சிட்டுமா அப்பாவ குளிக்க வைக்கணும். அவர பாத்ரூம்க்கு கூட்டிட்டு வா” என்றவாறே குளியலறைக்குச் செல்ல, சின்னதம்பியை குளியலறைக்கு அழைத்துச் சென்றவள் அவரை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் அறைக்குவந்து, துண்டு, உடை சகிதம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு செல்ல,

இளவரசன் தனது தந்தையை குளிப்பாட்டினான். அவரது வேலைகளை அவரே செய்தால் இளவரசனுக்கு மேற்படி வேலைகளையும் இழுத்து வைத்துவிடுவார் சின்னதம்பி.

அதனால் அவரையும் அவன் குழந்தைபோல் தான் கவனித்துக் கொள்வான். அவனைப் பொறுத்தவரை, சிட்டுமாவும் அவனின் தந்தையும் ஒன்றுதான். இருவருமே குழந்தைகள் தான்.

அவரைக் குளிக்க வைத்துவிட்டு, அவன் இரவு உணவுக்குத் தோசை வார்க்கச் செல்ல, அவருக்குத் தலை துவட்டி விட்டவள், தனக்கு இளவரசன் செய்வதுபோல் பவுடர் அடித்து விட்டுக் கொண்டிருக்க, அதனைக் கண்ட இளவரசன், புன்னகைத்தவாறே சமையலறைக்குள் மீண்டும் நுழைந்துக் கொண்டான்.

மூவருக்கும் தோசை ஊற்றியவன், சிட்டுமாவிற்கு ஊட்டிவிட்டவாறே தனது தந்தையையும் அருகிலேயே அமர வைத்துச் சாப்பிட வைத்தவன், பின் அவரை உறங்க வைத்துவிட்டு தானும் சாப்பிட அமர, அவன்முன் இடுப்பில் கை வைத்தவாறு முறைத்துக்கொண்டு நின்றாள் சிற்பிகா.

“என்ன சிட்டுமா வேணும்?” என்க, “உன்னை எத்தனைவாட்டி ஆறுன தோசைய சாப்பிடாதனு சொல்லி இருக்கேன் சிட்டு? சொல்ற பேச்ச கேட்கவே கேட்காத!” என முறைக்க,

“என்மேல உள்ள கோபம் போய்ருச்சா சிட்டுமா” என்றான் இளவரசன். “அது இன்னும் போகல. அப்படியே தான் இருக்கு” என்றவள், பக்கத்தில் இருந்த நாற்காலியை அடுப்பு பக்கத்தில் இழுத்துப் போட்டு அதில் ஏறியவள், “அடுப்ப பத்த வை சிட்டு” என அதிகார தொனியில் கூற,

அவளின் இந்த அலப்பறை தினமும் நடந்தேறுவதால், அமைதியாய் அடுப்பைப் பற்ற வைத்தான். அதில் தோசை கல்லை வைக்க, மாவு பாத்திரத்திலிருந்து தன்னால் முயன்றவரை அரை கரண்டி மாவை எடுத்துத் தோசை கல்லில் ஊற்றியவள், தன்னால் முடிந்த மட்டும் அது தோசைதான் எனச் சொல்லும் அளவிற்கு மாவை பரப்பிவிட்டாள்.

“நான் ஊத்திக்கறேன் சிட்டுமா, நீ முதல்ல கீழ இறங்கு. சூடு வச்சக்க போற” என அவன் தடுக்க, “ஷூ…” என வாயில் விரல் வைத்தவள், தோசையை பிரட்டிப் போட்டு அது வெந்தவுடன் அதனை எடுத்து இளவரசனின் தட்டில் வைத்தாள்.

பல மாதங்களாக இப்படி நடப்பதால் தற்போது ஓரளவு நன்றாகவே தோசை வார்க்கப் பழகி இருந்தாள் அந்தக் குட்டிதேவதை.

அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை அவன் கூடவே இருந்தவள், அதன்பின் தன் அறைக்குச் செல்ல, “இன்னிக்கு ஹோம்வொர்க்கே பண்ணலயா சிட்டு? வந்ததுல இருந்து நீ புக்கயே எடுக்கல” என்க,

“நான் ஸ்கூல்லயே முடிச்சுட்டேன்” என முறைத்தவள், போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுக்க,

“மேடமுக்கு இன்னும் கோபம் போகலயா?” என்றவன், விளக்கு எல்லாவற்றையும் அணைத்துவிட்டு தனது தந்தையின் அறையையும் எட்டிப் பார்த்துவிட்டு அவர் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டு அறைக்குள் வந்து சிற்பிகாவின் அருகே படுத்துக்கொள்ள, அவளோ அவனுக்கு முதுகுகாட்டி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

“என் சிட்டுமாவுக்கு என்மேல என்ன கோபமாம்?” என அவளைத் தன்பக்கம் திருப்ப, “நீ இன்னிக்கு என் பேச்ச கேட்கவே இல்ல. உன்கூட காய்” என முகத்தைத் திருப்ப,

“இப்போ சொல்லுவீங்களாம். அத நான் கேட்பனாம்” என அவளைத் தன் நெஞ்சில் போட்டுக் கொண்டவன், ஒருவாறு அவளைச் சமாதானப்படுத்தி, அவளை உறங்க வைத்தான்.

அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளைச் சற்று தள்ளிப் படுக்க வைத்தவன், அன்று வேலையில் பெண்டிங்கானதை முடித்துவிட்டு மணியைப் பார்க்க அதுவோ பாரபட்சம் இல்லாமல் பதினொன்றை காட்டியது.

முகத்தை அழுந்தத் துடைத்தவன், லேப்டாப்பை எடுத்துவைத்துவிட்டு தனது தந்தையின் அறையை மீண்டுமொரு முறை பார்த்துவிட்டு, தன் அறைக்கு வந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் சிற்பிகா புரண்டு படுத்தவாறே மெத்தையின் இறுதிக்கு வந்திருக்க அவளை நேராகப் படுக்க வைத்தவன், அருகில் தானும் படுக்கத் தூக்கம்வர மறுத்தது.

கண்களை மூட முயற்சித்தவனின் இமைகளுக்கிடையே புன்னகை முகமாய் குந்தவை வர, இவ்வளவு நேரம் அவளை வேலைகளுக்கிடையே மறந்திருந்தவனுக்கு, இன்று மாலை அவளைக் கண்டது நினைவிற்கு வந்தது.

“குந்தவி!” என அவன் இதழ்கள் முணுமுணுத்தது.

_தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.