மதுரகவி – 02
தனது பணி முடிந்து வீடு திரும்பியவனை ஆர்பாட்டமாய் வரவேற்றது அவனது சகோதரியின் குரல். “உனக்காக தான் டா இன்னவரைக்கும் காத்துட்டு இருக்கேன். கிளம்பு, கிளம்பு. உன் மாமன வந்து என்னன்னு கேளு, எனக்கு ஒன்னுனா அவர கேட்க ஆளு இல்லனு தான அந்த ஆளு இத்தன ஆட்டம் ஆடறாரு. என் தம்பி இருக்கான்னு சொல்லிட்டு வந்துருக்கேன். நீ வந்து என்னன்னு கேளு டா” என அவசர அவசரமாய் அவனை அழைத்துச் செல்ல எத்தனித்தாள் உமையாள்.
“அவனே இப்போதான் வேல முடிஞ்சு களைப்பா வந்துருக்கான். அவன ஏன் டி இந்த பாடு படுத்துற. நாளைக்கு போய் கேட்டுக்கிட்டா போச்சு. நீ போய் ரெபிரஷ் ஆகு கண்ணா. உனக்கு டின்னர் ரெடி பண்றேன்” என தன் மகளிடம் ஆரம்பித்து மகனிடம் முடித்தார் கல்யாணி.
“அப்போ என் வாழ்க்கை எப்படி போனா என்ன? உங்களுக்கு அதப்பத்தின கவல இல்ல தான!” என கண்ணைக் கசக்க ஆரம்பிக்க, மதுரகவிக்கோ ஆயாசமாக இருந்தது. இது இன்று நேற்றல்ல சில வருடங்களாய் நடந்தேறும் வழக்கமான ஒன்று தான்.
“மாமாவ கேளு கேளுனு சொல்றியே, அப்போ நீ எதும் பண்ணல அப்படி தான க்கா?” என்றான் மதுரகவி.
“ஓ… இம்புட்டு நேரம் அமைதியா இருந்ததுக்கு காரணம் என்னை குத்தம் சொல்லத் தானா! அந்த மனுஷன் போன் பண்ணி விம்பார் போட்டு விளக்கிட்டாரோ” என எடக்குமுடக்காய் கேள்வி வந்தது உமையாளிடமிருந்து.
“அவரு எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணனும் கா? நீ இங்க வந்ததே இப்பத்தான் எனக்கு தெரியும். நீ ஏதாவது சொல்லி இருந்திருப்ப. அதான் அந்த மனுஷன் கோபப்பட்ருப்பாரு. அவரா இருக்கவும் இவ்ளோ பொறுமையா இருக்காரே அத நினைச்சு சந்தோஷப்படு” என்றவன், “ம்மா… ரொம்ப பசிக்குது, சீக்கிரம் டின்னர் ரெடி பண்ணுங்க. நான் ரெபிரஷ் ஆகிட்டு வந்தறேன்” என தன் அறையை நோக்கிச் செல்ல, அவனையே பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள் உமையாள்.
சிறிது நேரத்தில் உணவு மேஜையில் அமர்ந்தவன், “அப்பா இன்னும் வரலயா மா?” என்றவாறே தனது தட்டில் பரிமாறப்பட்டதை உண்ணத் தொடங்கினான்.
“இன்னிக்கு லோடு ஏத்தணும். அதுனால வர லேட்டாகும்னு சொன்னாரு கண்ணா” என்றவர், “உமா, நீயும் வந்து சூடா இருக்கும் போதே சாப்பிடு” என அழைக்க, அவளோ “அத உன் அருமை புள்ளைக்கே கொட்டு. எனக்கு வேண்டாம்” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“விடு மா, பசிச்சா தானா வந்து சாப்பிடுவா” என்றவனிடம், “பொண்ணு போட்டோவ பார்த்தியா கண்ணா?” என்கவும் தான் அந்த விசயமே ஞாபகத்திற்கு வர அதனோடு நிலானியும் அவனது நினைவடுக்கில் மின்னி மறைந்தாள்.
“இன்னும் இல்ல ம்மா” என்றவன், “இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு போட்டோ காட்டுனியே மா. அது என்னாச்சு?” என்றவனின் கண்களில் ஆர்வம் தென்பட, அதனைக் கவனித்தும் கவனிக்காதது போல், “அந்த இடம் செட்டாகாது போல கண்ணா. அதான் அப்பா வேற வரன் பார்த்தாரு” என்றவர், “இந்த பொண்ணு போட்டோவ பாரு கண்ணா. உனக்கு நிச்சயம் பிடிக்கும். அழகா, மூக்குமுழியுமா லட்சணமா இருக்கா” என இலவச இணைப்பாக அந்த பெண்ணை கொஞ்சம் வர்ணித்தார்.
“அவங்க சைடு வேண்டாம்னு சொல்லிட்டாங்களா மா?” என்றவனை குழப்பமாய் பார்த்தார் கல்யாணி. “இல்ல, செட்டாகாதுனு சொன்னீங்கள்ள அதான் கேட்டேன் மா” என சமாளிக்கவும், “அவங்க பொண்ணுக்கு விருப்பம் இல்லனு சொன்னாங்க கண்ணா. அத விடு கண்ணா, மனசுல பெரிய ரதினு நெனப்பு போல. அந்த இடம் இல்லனா உனக்கு வேற பொண்ணே கிடைக்காதா என்ன!” என தன் மகனை நிராகரித்து விட்டாளே என்ற ஆதங்கத்தில் அந்த தாயுள்ளம் பொங்கியது.
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக உண்ணத் தொடங்கினான். ‘நிலா நம்மள நோட்டம் விட தான் வந்துருப்பாங்களோனு நினைச்சா அதுவும் இல்ல போல! ஆனா, என்னை இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி கூட ஃபீல் பண்ணலயே! ஆனா அம்மா அவங்க விருப்பம் இல்லனு சொல்றதா சொல்றாங்க’ என குழப்பம் சூழ, பாதியோடு கைக்கழுவி எழ முயன்றவனைத் தடுத்தார் கல்யாணி.
“என்ன கண்ணா இது, பசினு சொல்லிட்டு பாதியோடு கைக்கழுவுற?” என்றவரிடம், “போதும் மா” என்றவன், தன் அறைக்கு செல்ல தன் மகனையே பார்வையால் பின்தொடர்ந்தார் கல்யாணி.
வயது முப்பதை தாண்டி இன்னும் சில மாதங்களில் ஒரு வருடம் ஆகப்போகின்றது. ஆனால் அவனது வாழ்வில் இன்னும் அவனுக்கான ஒருத்தி இணையவில்லையே என்ற வருத்தம் கல்யாணிக்கு இருந்தது.
படிப்பு படிப்பு என படிப்பின் பின்னே ஓடியவன் கடந்த இரண்டு வருடங்களாக தான் பணியில் இருக்கிறான். இருபத்தேழு வயதில் இருந்தே நச்சரித்து வந்தவருக்கு சில மாதங்களுக்கு முன்தான் கல்யாணத்திற்கு பச்சைக்கொடி காட்டவும் அதிவேகமாக பெண் பார்க்கும்படலம் ஆரம்பித்தது.
தெரிந்தவர்கள், தரகர், மேட்ரிமோனி என அனைத்திலும் தனக்கான மருமகளைத் தேடத் தொடங்கி இருந்தார். ஓரிரண்டு இடங்கள் தட்டிப் போக, இதோ இப்போது வந்திருக்கும் வரனின் பெண் வீட்டினர் சம்மதம் தெரிவித்தப் பின்பே மகனிடம் சம்மதம் கேட்டார் கல்யாணி. ஆனால் அவனோ இன்னும் அந்த பெண்ணின் முகத்தைப் பார்க்க கூட ஆர்வம் காட்டாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
இதற்கு முன் அவர் பார்த்த வரன் தான் நிலானி. பார்த்தவுடனே பிடித்திருப்பதாக கூறிவிட்டான் மதுரகவி. ஆனால் பெண் வீட்டார் மறுக்கவே ஏனோ அவர்களின் மேல் சிறுகோபம் எழுந்தது அவருக்கு. இதில் மகன் வேறு அந்த வரனைப் பற்றியே மீண்டும் மீண்டும் கேள்விகளால் துருவ, தன் மகனை வேண்டாம் என்று மறுத்த நிலானியின் மேல் அர்த்தமற்ற கோபம் முளைத்துக் கொண்டது.
மருதமுத்து மோட்டார் உதிரி பாகங்களை தயாரிக்கும் சிறு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கல்யாணியும் அவ்வப்போது அவருடன் உதவிக் கொண்டே வீட்டையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
மூத்தவள் உமையாள். மதுரகவியை விட ஒரு வருடம் தான் மூத்தவள். அரவிந்தோடு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐந்து வயதில் பெண்குழந்தை, மகிழினி. அரவிந்த் காவல்துறையில் பணியாற்றுகிறான். உமையாள் மென்பொருள் பொறியாளர். அடிக்கடி தனது கணவனோடு சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிடுவதும் பின் அவளே சமாதானமாகி செல்வதும் வாடிக்கையான ஒன்று தான்.
படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் வர மறுத்தது. அவன் மனம் நிலானியை சுற்றியே வலம் வந்தது.
அன்னையிடம் வழக்கமான அர்ச்சனைகளை வாங்கிக் கொண்டே தனது உணவில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள் நிலானி.
“ஹே வாண்டு, அம்மா உன்னை திட்டிட்டு இருக்கு” என அவள் தலையில் தட்டினான் சிவா. அதையும் கண்டுகொள்ளாமல் உணவிலே கவனமாயிருக்க, ‘உங்களுக்கு இது தேவ தான்!’ என்ற ரீதியில் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் ரோகிணி.
தனது அன்னை இன்னும் தன் அர்ச்சனைகளைத் தொடர்ந்துக் கொண்டே இருக்க, “ம்மா, அவ தான் நீ சொல்றத கேட்கலனு தெரியுதுல. அப்புறம் ஏன் உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க” என தன் அன்னையிடம் கூற, அவரோ தோசையை கல்லில் வார்த்தவாறே, “போற இடத்துல உன் மாமியா கையால அடிபட்டு உதபட்டு வருவல்ல. அப்போ பார்த்துக்கிறேன்” என்றார் மணிமேகலை.
“என்ன மேகல இது… இன்னும் கொஞ்ச நாள்ள கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போற புள்ளய போய் ஏன் இத்தன திட்டு திட்ற. கொஞ்ச நாள் அவ ஆசப்படி இருந்துக்கட்டுமே” என தன் மகளுக்குப் பரிந்துப் பேசினார் தர்மராஜ்.
“லவ் யூ ப்பா” என பறக்கும் முத்தமொன்றை தன் தந்தைக்கு பறக்கவிட்டவள், தன் அன்னையை பார்த்து பழிப்புக் காட்டினாள் நிலானி.
“நீங்க கொடுக்கிற செல்லத்துனால தான் உச்சாணி கொம்புல உக்காந்து ஆடறா. இப்ப பார்த்த வரனையும் தட்டிக் கழிச்சாச்சு. ஆயிரம் நொட்ட சொல்றா வர்ற வரனை எல்லாம்.
மாப்பிள்ளை நெட்டையா இருக்கான், குட்டையா இருக்கான், கட்டையா இருக்கான்னு உப்புசப்பில்லாத காரணத்த சொல்லி அவ வேண்டாம்னு சொன்னா பூம்பூம் மாடு கணக்கா நீங்களும் தலைய ஆட்டுறீங்க. அப்பனுக்கு மவ உலகஅழகினு நெனப்பு வேற” என நொடித்துக் கொண்டார்.
சிவாவும் ரோகிணியும் பார்வையாளராக மாற தர்ஷனோ தனது அத்தையிடம் ஒட்டிக் கொண்டான். “என் தங்கம், பட்டு நீ சொல்லு டா. அத்தை உலக அழகி தான!” என அவன் தாடையை பிடித்து வினவ, அவனுக்கு என்னப் புரிந்ததோ வேகமாக தலையாட்டினான்.
“பார்த்தியா மா. குழந்தைப்புள்ள பொய் சொல்லாது. எனக்கென்ன கொறைச்சல். அப்படியே ராஜகுமாரன் மாதிரி ஒருத்தன் வந்து என்னை அள்ளிட்டுப் போகப் போறான். அப்போ வாய பொளந்து பார்க்கப் போற!” என்றாள் நிலானி.
“கனவு கண்டுட்டே இரு” என அவள் தலையில் தோசை கரண்டியை தட்டியவர், “இப்ப வந்த வரன என்ன சொல்லி தட்டிக் கழிச்சீங்க அப்பனும் மவளும்?” என்றார் கோபமாய்.
“ம்மா அதான் அவ பிடிக்கலனு சொல்லிட்டாள்ள. விடு வேற மாப்பிள்ளை பார்க்கலாம்” என சிவா தனது தங்கைக்கு ஆதரவாக பேச ஆரம்பிக்கும்போதே மணிமேகலை அவனை முறைக்க ஆரம்பிக்க,
“அத்த, விடுங்க அவ தான் சின்னப்புள்ள. நீங்களும் இப்படி அவக்கூட வாதம் பண்ணா எப்படி! அவளுக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை வந்தா அவளே சம்மதம் சொல்லிருவா. மனசுக்கு பிடிக்கலனா அவ என்ன பண்ணுவா அத்த” என ரோகிணி தனது மாமியாரை சமாதானப்படுத்த முயன்றாள்.
“எல்லாரும் அவளுக்கு சப்போர்ட் பண்றதால தான் இவ இந்த ஆட்டம் ஆடறா” என முனகிக்கொண்டே தன் வேலையை பார்க்க செல்ல, இதற்கு காரணகர்த்தாவோ தோசையை வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள்.
விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனை கலைத்தது அலைப்பேசி ஒலி. அழைப்பது யாரென பார்த்தவன், அழைப்பை ஏற்று, “என்ன மாம்ஸ் ஒரே குஜாலாவா இருக்கீங்களா!” என்றான் சிறு கேலியோடு.
“உனக்கு நக்கலா இருக்கா டா?” என எதிர்முனையில் கடுப்பானான் அரவிந்த். “என்ன மாம்ஸ் நீங்க, பொழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க. பொண்டாட்டி ஊர்ல இல்லனா என்ஜாய் பண்ண வேண்டாமா” என்றான் மதுரகவி.
“இது மட்டும் உன் அக்கா காதுக்கு போச்சு அப்புறம் பேயாட்டம் ஆடிருவா டா. அது சரி, அங்க வந்தோனே என்னென்ன ஆர்பாட்டம் பண்ணா?” என்றான் அரவிந்த். நடந்ததைக் கூறியவன், “ரெண்டு நாள்ள அவளே சமாதானமாகி அங்க வந்துருவா மாம்ஸ், கவலப்படாதீங்க” என்றான்.
“எப்பவும் போல இல்ல டா கவி. இந்த டைம் ரொம்ப கோபப்பட்டுட்டா. அவ ஷாப்பிங் கூப்பிடுற நேரமா பார்த்து எனக்கு டியூட்டி வந்துருது. அதுக்கு கோபப்பட்டவ ஏதேஏதோ பேசப் போய் என் வாயும் சும்மா இருக்காம வம்ப விலைக்கு வாங்கி கட்டிக்கிட்டேன். நான் என்னடா பண்றது!” எனப் புலம்பினான் அவன்.
“அவ கோபம் என்னவோ உண்ம தான். ஆனா, உங்கள விட்டுட்டு இங்க இருக்க மாட்டா மாம்ஸ். மகிய காரணமா வச்சு ரெண்டே நாள்ள உங்க வீட்டு வாசல்ல வந்து நிப்பா பாருங்க” என்றவன், “மகிய அங்கயே விட்டுட்டு வந்ததுக்கு அப்புறமுமா அவளோட கோபம் எவ்ளோனு புரிஞ்சுக்கல மாம்ஸ் நீங்க” என்றான் மதுரகவி.
“நீ சொல்றதும் சரி தான். இருந்தாலும் ரொம்ப கோபமா இருப்பா டா. நீயும் அவள எதுவும் சொல்லி வெறுப்பேத்திறாத” என தன் மனைவிக்காக பரிந்துப் பேசினான் அரவிந்த்.
“இந்த லவ் பேர்ட்ஸ் தொல்லை தாங்க முடியல ஆண்டவா. அவ சண்ட போட்டுட்டு புள்ளைய அங்கயே விட்டுட்டு வந்துருவாளாம். அப்புறம் புள்ளைய சாக்கு வச்சு திரும்ப அங்கயே போவாங்களாம். உங்கள விட்டுட்டு பிரிஞ்சு இருக்க முடியாதுல்ல. அப்புறம் எதுக்கு உங்க பெண்டாட்டிக்கு இந்த வெட்டி வீராப்பு எல்லாம்” என்றான் மதுரகவி.
“நீயும் கல்யாணத்த பண்ணி பாரு டா. அப்போ புரியும்” என்றான் அரவிந்த். ஏனோ அவனுக்கு திருமணம் என்றவுடனே தற்போதெல்லாம் நிலானியின் முகம் தான் கண்முன் வந்து சென்றது.
எதிர்முனையில், “டேய்… டேய் லைன்ல இருக்கியா டா?” என அரவிந்த் கத்துவதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. அவனின் எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தாள் நிலானி.
_தொடரும்.
Story nalla iruku . Next update podunga
Thank u so much
Next update podunga sis.