Loading

உயிர் – 01

 

கதிரவனின் வெட்பம் சற்றுத் தணிந்திருக்க, ஆடிமாதக் காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்தது. கோயம்பத்தூர் மாநகரத்தையே வாயுதேவன் பலமாய் ஆண்டு கொண்டிருக்க, சரவணம்பட்டி – துடியலூர் சாலையின் இடையே அமைந்திருந்த அந்தத் தனியார் பள்ளி வாசல்முன், தனது இருசக்கர வாகனத்தில் காத்துக்கொண்டிருந்தான் இளவரசன்.

 

சுழன்றடித்துக் கொண்டிருந்த காற்று, ஆங்காங்கே மணல்மழையையும் தூவிக் கொண்டிருந்தது. தூசி தன் முகத்தில் படாமல் இருக்க கைக்குட்டையால் முகத்தை மூடியிருந்தான். அவனது வண்டியைப் பின்னிருந்து யாரோ இடிக்க, கோபமாகப் பின்னால் திரும்பிப் பார்த்தான்.

 

“சாரிங்க, சாரிங்க… சாரி” என சாரி’யை ஏலம் விட்டுக்கொண்டிருந்தாள் அவனின் வண்டியை இடித்தவள்.

 

அவளின் மன்னிப்பு வேண்டலால், வாய்வரை வந்த வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, “இட்ஸ் ஓ. கே!” என்றவாறே தனது முகத்தை மூடியிருந்த கைக்குட்டையை விலக்க, புன்னகை முகமாய் அவன் முகம் நோக்கியவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

 

“இளா!” என அவளின் கனகாம்பர நிற இதழ்கள் விரிய, தனது ஸ்கூட்டரை ஒழுங்காக நிறுத்திவிட்டு அவன் அருகில் வந்தாள் அவள்.

 

அவனின் முகத்திலும் சிறு ஆச்சரியம் உண்டானதோ! ஆனால், அதனை எல்லாம் அவன் வெளிப்படுத்தாமல் அவளைப் பார்த்தான்.

 

“இளா, நீங்களா! வாட் அ சர்ப்ரைஸ்! சத்தியமா உங்கள நான் எதிர்ப்பார்க்கவே இல்ல, அதுவும் இங்க! வாவ்” என்றவாறே சந்தோசத்தில் லேசாகக் குதித்தாள் என்றுகூட கூறலாம்.

 

ஆனால் அதே அளவு சந்தோசம் அவன் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. “நீங்க!” என அவன் யோசிப்பதுப்போல் கண்களைச் சுருக்கி ஆட்காட்டிவிரலை நெற்றியில் அழுத்த,

 

“என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லயா! கலாய்க்காதீங்க இளா, உண்மைலயே நான் யாருனு தெரியலயா?” என அவளின் பூமுகம் சட்டென வாடியது.

 

அவளின் முகம் வாடல் அவனை ஏதோ செய்ய, “குந்தவை!” என அவளைக் கைநீட்டினான் சற்று யோசனை பாவனையுடன். 

 

“வாவ், என்னை ஞாபகம் இருக்குல்ல!” எனச் சந்தோச மிகுதியில் கரத்தைத் தட்ட, அதனால் உண்டான சப்தத்தால் அங்கு நின்றிருந்த சிலர் அவர்களை ஒருமாதிரியாகப் பார்த்தனர்.

 

ஆனால், அதனை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை நமது குந்தவை. ஒரு குழந்தைக்கு அதற்குப் பிடித்தமான ஒன்றைக் கொடுத்தால் அது எப்படி குதித்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்துமோ அதே நிலையில் தான் அவளும் இருந்தாள்.

 

இடுப்பில் ஒற்றை கையை வைத்துக் கொண்டு, மற்றொரு கையைத் தாடையில் வைத்துச் சற்று சாய்வாக நின்று அவனைப் பார்வையால் எடைப் போட்டாள் குந்தவை.

 

ட்ரிம் செய்த தாடி, அளவான மீசை, சிற்பியால் அழகாய் வடிக்கப்பட்டதுபோல் கூரான நாசி, அதனைக் கண்டவளின் கரங்கள் அதனைப் பிடித்து ஆட்டிக் கொஞ்ச வேண்டும் என்று துடிக்க, அதனைக் கட்டுப்படுத்தியவாறே அவனை ஆராய்ந்தாள்.

 

‘ப்பா! என்ன கண்ணு டா சாமி!, இந்தக் கண்ணாலயே என்னைக் கட்டிப் போட்டுட்ட டா, இல்லனா உனக்காக அஞ்சு வருஷம் தவம் கெடப்பனா!’ என அவள் மனம் அதனை ரகசியமாய் கொஞ்சிக் கொண்டிருக்க, முன்நெற்றியில் புரண்ட அலைஅலையான கேசங்களுக்குள் அவளின் விரல் விளையாடத் துடிக்க, அவளின் பார்வையால் அவன் தான் நாணம்கொள்ள வேண்டுமோ எனச் சிந்திக்குமளவு ரசித்துக்கொண்டிருந்தாள்.

 

அவனுக்கோ சற்று தயக்கம் ஏற்பட்டது அவளின் பார்வையில். “செம ஹேண்ட்சம் சீனியர்! பட், ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்” என உதட்டைப் பிதுக்கியவள், “காலேஜ் படிக்கும்போது உங்க கன்னம் நல்லா பால் பன் மாதிரி கொழுகொழுனு இருக்கும். அத அப்படியே கிள்ளணும் போலத் தோணும். அது மிஸ்ஸிங்” என்றவாறே அவளது கரங்கள் அவனது கன்னத்தைப் பிடிக்க உயர்ந்திருக்க, அவனோ சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

 

தனது கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், “ஃபேரவல் பார்ட்டில கடைசியா பார்த்தது, அதுக்கப்புறம் ஆள் அட்ரஸ்ஸையே காணோம்! பட், ஸ்வீட் ஆக்ஸிடன்ட்டலா இன்னிக்கு மீட் பண்ணியாச்சு சீனியர்” என்றவள், அப்பொழுது தான் உணர்ந்தாள் வந்ததிலிருந்து தான் மட்டுமே பேசுகிறோம், அவனிடத்திலிருந்து ஒருவார்த்தைக் கூட வரவில்லை என்று.

 

‘கொஞ்சம் ஓவரா போய்ட்டமோ!’ என எண்ணியவள், ‘ச்சே, ச்சே! நமக்கு இதுலாம் ரொம்ப கம்மியாச்சே!’ எனத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, “என்ன சீனியர், வாய்ல ஏதும் கொழுக்கட்டை வச்சுருக்கீங்களா?” என்றாள்.

 

அவளின் கேள்வியில் அவன் திருதிருவென முழிக்க, “இல்ல, வந்ததுல இருந்து நானே பேசிட்டு இருக்கேன், நீங்க ஏதும் பேச மாட்டேன்ங்கிறீங்களே!” என்றவள்,

 

“உங்கக்கிட்ட ஒரு ரகசியம் சொல்லவா!” எனக் கிசுகிசுத்தவள், அவன் பதில் அளிக்கும்முன், அவன் அருகில் நெருங்கி அவன் காதில் மெதுவாக, “அந்த ரைட் சைட்ல ரெண்டு பசங்க நிக்கறாங்க பாருங்க சீனியர்” என்க, அவளின் அருகாமை அவனை ஒருபக்கம் படுத்தியெடுக்க, அவளின் கிசுகிசுப்பால் அவனுக்குத் தான் ஒருமாதிரி ஆனது.

 

‘எல்லாம் இங்க தலைகீழா நடக்குதே ஆண்டவா!’ மனதினுள் புலம்பியவாறே அவள் காட்டிய திசையைப் பார்க்க, அங்கு நின்றிருந்த இரு இளைஞர்களின் பார்வையும் குந்தவையைத் தான் மொய்த்துக் கொண்டிருந்தது.

 

அதனைக் கண்டு அவனுக்குச் சுர்ரென கோபம்வர, அவளோ “தள்ளி நிக்கிற அவனுங்களே இப்படி பச்சையா என்னை சைட் அடிக்கறாங்க, ஆனா கூடவே இருந்துட்டு அதுவும் உங்கள நான் சைட் அடிக்கிறது தெரிஞ்சும் இப்படி உம்முனு மூஞ்ச வச்சுருக்கீங்களே! உங்களுக்கு ரசனையே இல்ல சீனியர்!” என உதட்டைப் பிதுக்கினாள்.

 

‘அடிப்பாவி’ என்றிருந்தது இளவரசனுக்கு. “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ அப்படியே தான் இன்னும் பழமாவே இருக்கீங்க சீனியர், டூ ஃபேட்” என மூக்கை உறுஞ்ச, 

 

“இன்னும் உனக்கு இந்தக் குசும்பு போகல பாரு!” என்றான் வாய்திறந்து. “ஹப்பாடா, இன்னிக்கு காலைல நியூஸ்ல கூட எதுவும் சொல்லலயே. பரவால்ல, நம்ம சொல்லிருவோம். கோயம்பத்தூர் மக்களுக்குக் குந்தவையின் அழகிய மாலை வணக்கம், இன்று இளவரசன் என்ற ஆழ்கடலில் சற்றே சீற்றம் காணப்படுவதால் புயலுடன் கூடிய மழைவர அதிகபட்ச வாய்ப்புக்கள் உள்ளன. அதனால், தாங்கள் தங்கள் இல்லத்தைவிட்டு வெளிவர வேண்டாம் என்றும், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருப்பதாகவும் குந்தவை வானிலை அறிக்கையிலிருந்து தகவல் வந்துள்ளது. மக்களைப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது” கையை மைக்காக மாற்றி அவள் வானிலை அறிக்கை வாசிக்க, இதுவரை சிரிப்பைத் தொலைத்திருந்தவனின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.

 

“உன்னைலாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா டி!” என அவன் சிரிக்க, சிரிக்கும் அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டே, “அந்த டவுட்ட எங்கம்மாகிட்டல்ல கேட்கணும் சீனியர்! வேணும்னா நாளைக்கு கேட்டுட்டு வந்து சொல்லவா?” என்றாள் குந்தவை.

 

“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா!” என்றவன், “ஆமா, நீ என்ன இந்தப் பக்கம்?” என்றான் இளவரசன்.

 

“அப்பாக்கு டிரான்ஸ்பர் ஆகிருக்கு சீனியர், அதான் நானும் வேலைய இங்க மாத்திக்கிட்டேன்” என்றவள், ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் பெயரைக் கூறி அங்குதான் தான் வேலை செய்வதாகக் கூறியவள்,

 

“ஆமா, நீங்க இங்க என்ன பண்றீங்க சீனியர்? ஸ்கூல் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க?” என எதிர்கேள்வி கேட்க, அவன் பதில் அளிக்கும்முன், “சிட்டு!” என்ற அழைப்பு அருகே ஒலிக்க இருவரும் அங்குப் பார்த்தனர்.

 

பள்ளி சீருடையில், அழகான பேபி கட் செய்து, கொழுகொழு கன்னங்களுடன் தனது பள்ளி பேக்கை முதுகில் சுமந்துகொண்டு கையில் லன்ச் பேக்குடன் ஒரு குட்டி தேவதை இளவரசனை நோக்கி ஓடி வந்தது.

 

“சிட்டுமா!” என அவன் முகம் மலர, அதனைக் கண்ட குந்தவைக்குத் தான் ஆச்சர்யமாக இருந்தது. ‘என்ன ஒரு சந்தோசம் அந்தக் குழந்தைய பார்த்தோனே!’ என்றது மனம்.

 

“ரொம்ப காக்க வச்சுட்டனா சிட்டு?” என மழலையில் குட்டி தேவதை மொழிய, “இல்லடா சிட்டுமா!” என்றவாறே அவன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்ததால் அவளைத் தூக்கி வண்டியின் முன்புறம் அவனைப் பார்த்து உட்கார வைத்தான்.

 

“இங்கிலி மிஸ் தான் லேட் பண்ணிட்டாங்க!” என ஆங்கில ஆசிரியையை ‘இங்கிலி’ ஆக்கி, தான் தாமதமாய் வந்தக் காரணத்தை ஒப்புவித்தவாறே தனது முதுகில் மாட்டியிருந்த பேக்கை கழட்ட அவள் முற்பட, அங்கு நின்றிருந்த குந்தவை அவளுக்கு உதவி செய்தாள்.

 

ஆனால், சிட்டுமாவின் கவனம் முழுக்க அவளின் சிட்டுவின் மேல்தான் இருந்தது. அப்பொழுது காற்று சுழன்றடிக்க, சிட்டுமாவை தன்னோடு அவன் அணைத்துக்கொண்டான்.

 

குந்தவையின் கையில் இருந்த பை கீழே விழுந்துவிட, அதனை அவள் குனிந்து எடுத்து நிமிர, இளவரசனோ தனது கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தான். அதனைக் கண்டு பதற, அதற்குள், 

 

“என்னாச்சு சிட்டு?” எனப் பதறினாள் சிட்டுமா. “கண்ல தூசி சிட்டுமா!” என அவன் தன் கண்களைத் தேய்க்க, “இரு, உனக்கு நான் வைத்தியம் பண்றேன்!” என்ற சிட்டுமா, 

 

அவனது கையில் இருந்த கைக்குட்டையை வாங்கி பந்துபோல் உருட்டி, தனது வாயில் வைத்து மூன்று நான்குமுறை மூச்சை இழுத்துப்பிடித்து, அதில் வெப்பத்தை நிரப்பி எக்கி அவன் கண்களில் ஒத்தடம் வைத்தாள்.

 

அவர்களின் அன்பு பரிமாற்றத்திற்கிடையே குந்தவை சாட்சியாக நின்றிருக்க, அவர்கள் இருவரும் அவளைக் கண்டு கொள்ளாமல் தங்கள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

 

அவன் கண்ணில் அந்தத் தேவதையின் மூச்சுக்காற்று சூடாய் பரவி இதமளிக்க, “சீக்கிரம் சரியாகிரும்” என அவன் முகத்தைத் தன் பிஞ்சுக்கரத்தால் தன்பக்கம் இழுத்து அவனின் கண்களில் தனது பட்டு இதழை ஒற்றி வைத்தியம் பார்த்தாள் அந்த தேவதை.

 

“சிட்டுமா!” என்றவனின் கண்களின் ஓரம் நீர் படர, அவள் கன்னத்தில் முத்தமொன்றை வைத்தான்.

 

அப்பொழுது தான் தங்கள் அருகில் நின்ற குந்தவையை கவனித்த இளவரசன், “அச்சோ, உன்ன மறந்துட்டேன் குந்தவை, சாரி” என்றவன்,

 

குழந்தையிடம், “சிட்டுமா இவங்க நம்ம ஃப்ரண்ட், ஃப்ரண்ட்க்கு கைக்கொடுங்க பார்க்கலாம்!” என அவளை அறிமுகப்படுத்த,

 

அவளோ, “ஹாய், ஐ ஆம் சிட்டுமா!” எனத் தனது பிஞ்சுக் கைகளை நீட்டினாள். “ஹாய் சிட்டுமா, ஐ ஆம் குந்தவை!” என அவள் கரம்பற்றிக் குலுக்கியவள், அவளின் கன்னத்தில் முத்தமிடச் சென்றவள், சற்றுமுன் இளவரசன் முத்தமிட்ட அதே கன்னத்தைக் காட்டியவண்ணம் சிட்டுமா திரும்ப அங்கு முத்தமிட சென்று பின் அவளின் மறு கன்னத்தில் முத்தமிட்டாள் குந்தவை. “ஓ. கே சீனியர், நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என்றவள், “நம்பர் ப்ளீஸ்!” என அவள் வினவ,

 

மறுக்க நினைத்தவன் அவள் முகம் பார்த்து என்ன நினைத்தானோ தனது எண்ணைக் கூறினான் இளவரசன். “தேங்க்ஸ் சீனியர்” என்றவள், தனது கையில் இருந்த சிட்டுமா’வின் பள்ளி பையைக் கொடுக்கப்போக அதை ஒழுங்காக மூடாமல் விட்டிருந்ததால் அதிலிருந்து ஒரு நோட் கீழே விழுந்தது.

 

அதனைக் குனிந்து எடுத்தவளின் கண்கள் அதன் முதல் பக்கத்தில் இருந்த பெயரைக் கண்டு, சரியாக கூற வேண்டுமென்றால் அதில் உள்ள பெயரை அல்ல, அதன் இன்ஷியலைக் கண்டு அதிர்ச்சியை அடைந்தாள்.

 

அதில், ‘இ. சிற்பிகா’ என அழகு தமிழில் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது.

 

_தொடரும்

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.