370 views

மதுரகவி – 01

கோவை சரவணம்பட்டி சாலையில் அமைந்திருந்த தனியார் மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது. 

ஆதவன் தன்னை முழுவதுமாய் நிலமகளின் மீது படரவிட்டிருந்ததால் வெட்பம் தகித்துக் கொண்டிருந்தது. மருத்துவமனை வளாகத்திற்குள் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் நுழைந்தாள் நிலானி. 

“இங்கயே என்னை இறக்கி விட்டுட்டு வண்டிய பார்க் பண்ணிட்டு வா நிலா” என்ற தன் தாயின் வார்த்தைகளுக்கிணங்கி, அவரை வளாகத்தினுள் இறக்கி விட்டுவிட்டு இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை நோக்கி நகர்ந்தவள் தனது வண்டியை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டிலிருந்து தனது தலையை உருவிக் கொண்டாள். கொளுத்தும் வெயிலை அண்ணாந்துப் பார்த்தவள் ஆதவனை மனதினுள் சகட்டுமேனிக்கு கறுவிக் கொண்டே தனது தாயை நோக்கிச் சென்றாள். 

“கொஞ்சம் முன்னாடியே கிளம்புனு சொன்னா கேட்கிறியா மா? கொளுத்துற வெயில்ல உச்சி மண்டை பொழந்துரும் போல” என தன் தாயை முறைத்தவள், “போகலாம் வாங்க” என அவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தாள். 

“நான் என்னமோ சும்மா உக்காந்துட்டு இருந்த மாதிரி பேசற… எல்லா வேலையும் முடிச்சுட்டு வர வேண்டாமா? நான் ஒருநாள் இல்லனா தான் தெரியும் உங்களுக்கு, சீப்பட்டு போய்ருவீங்க” என இதான் சமயமென தன் ஆதங்கத்தை தன் மகளின் மீது கொட்டினார் மணிமேகலை. 

மேற்கொண்டு எதுவும் பேசினால் தன் தாய் தன்னை வார்த்தைகளாலே குதறி எடுத்துவிடுவார் என எண்ணியவள் அமைதியானாள். 

வரவேற்பறையில் ஏற்கெனவே நாலைந்து பேர் நின்றுக் கொண்டிருக்க, “ம்மா, நீ போய் உள்ள உக்காரு. நான் ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தறேன்” என தன் தாயை உள்ளே அனுப்பிவிட்டு தனது முறைக்காக காத்திருந்தாள். 

தன்முன் இருந்த கணினியை பார்த்தவாறே  “சொல்லுங்க மேம், என்ன பிராப்ளம்?” என்றார் வரவேற்பறையில் இருந்த பெண். “அம்மாவுக்கு மெனோபாஸ் டைம் மேம். அதான் டாக்டர்ட்ட ஒன்ஸ் செக் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தோம். இப்போ டாக்டர் இருக்காங்களா மேம்?” என்றாள் நிலானி. 

“ஒரு நிமிஷம் மேம்” என்றவர் கணினியில் ஆராய்ந்துவிட்டு, “பீமேல் கைனகாலஜிஸ்ட் யாரும் இப்போ டியூட்டில இல்ல மேம். மேல் கைனகாலஜிஸ்ட் ஒருத்தர் இருக்காரு. அவர பார்க்குறீங்களா? அவரும் இப்போ ரவுண்ட்ஸ் போய்ருக்காரு. ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணனும்” என்கவும், சிறிது யோசித்தவள், “பீமேல் டாக்டர் எப்போ வருவாங்க மேம்” என எதிர்கேள்வி கேட்டாள். 

“ஈவ்னிங் தான் மேம் வருவாங்க” என பதில் வரவும், “ஓகே மேம். மேல் டாக்டரட்டயே பார்த்துக்கிறோம்” என்றவள் தனது தாயின் பெயர், வயது என அவர் கேட்ட விபரங்களை அளித்தவள் அதற்கான பணத்தையும் கட்டிவிட்டு தன் தாயை நோக்கிச் சென்றாள். 

“இதெல்லாம் இந்த வயசுல வர்றது சகஜம் டி. இதுக்கெல்லாமா டாக்டர பார்க்க போவாங்க? அவங்க மட்டும் என்னத்த சொல்ல போறாங்க. நாலு சத்து மாத்திரைய கொடுத்து ஆயிரக்கணக்குல பில்ல தீட்டிருவாங்க. ஒரு டீய குடிச்சுட்டு பத்து நிமிஷம் உக்காந்தா போதும். மொத்தவலியும் குறைஞ்சுரும்” என அவரே அதற்கான தற்காலிக தீர்வையும் கூறி மருத்துவமனைக்கு வரவே அடம்பிடித்தவரை ஒருவழியாய் இன்றுதான் சமாளித்து அழைத்து வந்திருந்தாள் நிலானி. 

“டாக்டர் இருக்காங்களா நிலா?” என்ற தாயிடம், “ம், இருக்காங்க மா. ரவுண்ட்ஸ் போய்ருக்காங்களாம். வந்துருவாங்க” என்றவள், தனது அலைப்பேசியில் மூழ்கிவிட, மணிமேகலையோ சுற்றிமுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். 

காத்திருப்பிலே பதினைந்து நிமிடங்கள் கரைய தங்கள் முறை வந்தவுடன் தனது தாயுடன் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள். 

“எக்ஸ்கியூஸ்மி சார்” என அவள் கதவைத் தட்ட, பைலில் மூழ்கி இருந்தவன், “எஸ்” என்றவாறே நிமிர்ந்தான். 

அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் விரிந்த கண்கள் காட்டிக் கொடுத்தன. ஆனால் எதிர்புறமோ அவனை கண்டுகொண்டதாக தெரியவில்லை. 

அறைக்குள் நுழைந்த மணிமேகலை ஆண் மருத்துவர் அதுவும் இளம்வயதினனை அங்கு எதிர்பார்க்கவில்லை போலும். “நிலா, நம்ம டாக்டர் ரூம் எதுவும் மாத்தி வந்துட்டமா” என ரகசிய குரலில் தனது மகளை சுரண்டினார். 

அவளோ அவஸ்தையாய், “சரியா தான் வந்துருக்கோம் மா. கொஞ்சம் அமைதியா வந்து உக்காரு” என்றவாறே மருத்துவரைப் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தவள் அங்கிருந்த நாற்காலியில் தன் அன்னையை அமர வைத்தாள். 

“நீங்களும் உட்காருங்க” என்றவனுக்கு “தேங்க்ஸ்” என்றவள் தன் தாயின் கரத்தைப் பற்றிக் கொண்டே அமர்ந்தாள். 

அவன்முன் இருந்த மேஜையில் Dr. மதுரகவி M. B. B. S., M. S., மகப்பேறு மற்றும் பெண்கள்நல சிறப்பு மருத்துவர் என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது. 

“எப்படி இருக்கீங்க மா? நெர்வஸ்ஸா ஃபீல் ஆகுறீங்களா” என மென்மையாய் வந்தது கேள்விகள். மனதில் சிறு சஞ்சலம் இருந்தாலும் இல்லை என அவர் தலை ஆடவும், “மூட்டு வலி, முதுகு வலி எதுவும் இருக்குங்களா?” என்றான். 

“மூட்டு மூட்டுக்கு கொஞ்சம் வலிக்குது. ராத்திரி நேரம் திடீர்னு அப்பத்தான் குளிச்ச மாதிரி வேர்த்துக் கொட்டுது. இதுக்கு இவதான் பயந்துடறா தம்பி” என்றவர் தன் மகளையும் முறைக்கத் தவறவில்லை. 

“ம்மா…” என பல்லைக் கடித்தாள் நிலானி. “இதெல்லாம் மெனோபாஸ் டைம்ல வர்றது சகஜம் மா. எந்த நேரமும் குடும்பத்த பத்தி மட்டுமே யோசிக்காம கொஞ்சம் உங்க உடம்பையும் பார்த்துக்கோங்க” என்றவன் அவர் அருகே தனது நாற்காலியை சுழற்றியவன், அவரது இதயத்துடிப்பை கணக்கிட்டான் மதுரகவி. 

“ஒரு பிளட் டெஸ்ட் மட்டும் எடுத்துக்கலாம். இப்போதிக்க பயப்படற அளவு எதுவும் இல்லங்க மா. டீ, காஃபி குடிக்கிறத கம்மி பண்ணிக்கோங்க. தினமும் கொஞ்ச நேரம் வாக்கிங் போறது ரொம்ப நல்லது. நம்ம உணவு பழக்கமும் உடற்பயிற்சியும் தான் சிறந்த மருந்து” என்றவனை மேலும் பேசவிடாமல் இடையூறு செய்தது அவனது அலைப்பேசி அழைப்பு. 

“ஒன் மினிட், சாரி” என்றவாறே அழைப்பை ஏற்று, “சொல்லுங்க மா, சாப்டீங்களா” என்றான் மதுரகவி. “சாப்டேன் பா. நீ சாப்பிட்டியா, டியூட்டில இருக்கியா? டிஸ்டர்ப் பண்ணிட்டனோ?” என்ற தன் அன்னையிடம், 

“இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு தான் சாப்டணும். சொல்லுங்க” என்றவன், தன் எதிரே அமர்ந்தவர்களைப் பார்க்க, அவர்கள் இருவருமே அந்த அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

தன் அன்னை அழைக்கிறார் என்றாலே ஏதோ முக்கியமான விசயமாக இருக்கும் என்றெண்ணி தான் அழைப்பை ஏற்றிருந்தான். பொதுவாக அவனது பணியின்போது அவனை தொந்தரவு செய்ய விரும்பமாட்டார் கல்யாணி. 

“அதுவந்து கண்ணா, அப்பா மேட்ரிமோனில ஒரு வரன் பார்த்துருக்கிறாரு. அந்த பொண்ணு போட்டோவ உனக்கு வாட்ஸ்அப் பண்ணதா சொன்னாரு. அதான் நீ பார்த்தியா என்னனு தெரிஞ்சுக்கலாம்னு கூப்ட்டேன். வேல நேரத்துல தொந்தரவு பண்ணிட்டனோ” என்கவும் அவனது கண்கள் அவனது அனுமதியின்றி நிலானியின் மேல் படிந்து மீண்டது. 

ஆனால் அவளோ அப்போது அவளது அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். அவனின் அன்னையிடம் பேசுகிறான் போல என்றெண்ணியவள் தனது அலைப்பேசியில் மூழ்கத் தொடங்க, மணிமேகலை தான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

“இன்னும் பார்க்கல மா. பார்த்துட்டு சொல்றேன்” என அழைப்பைத் துண்டித்தவன், “சாரிங்க” என பொதுவாக மன்னிப்பு வேண்டியவன் மணிமேகலையிடம், “உங்களுக்கு கடைசியா எப்போ ஃபீரியட்ஸ் ஆச்சு மா?” என்றான் மதுரகவி. 

உள்ளே நுழைந்த போதிருந்த மனநிலையில் இதனைக் கேட்டிருந்தால் அவருக்கு சங்கடத்தை உண்டுபண்ணும் என்றெண்ணியே முதலில் சாதாரணமாக விசாரித்துவிட்டு இப்போது வினவ, அவரும் ஓரளவு அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொண்டததன் அடையாளமாய் பதிலளிக்கத் தொடங்கினார். 

“இந்த மாதிரியான நேரத்துல மூட் ஸ்விங் வர்றது ரொம்ப இயல்பான ஒன்று மா. ஹார்மோன் மாற்றங்களால உண்டாகிறது. சுற்றி உள்ளவங்க இத புரிஞ்சுக்கிட்டு அவங்கள பேலன்ஸ் பண்ணிட்டா இந்த மெனோபாஸ் காலத்த ஈசியா கடந்து வந்தற்லாம். அவங்கள நேரத்துக்கு சாப்பிட வைக்கிறது உங்க பொறுப்பு” என மணிமேகலையிடம் ஆரம்பித்து நிலானியிடம் முடித்தான் மதுரகவி. 

“சரிங்க சார்” என தலையாட்டினாள் அவள். அதன்பின் இருவரும் இரத்த பரிசோதனையை மேற்கொள்ள சென்றனர். “ஏன் டி உனக்கு வேற டாக்டரே கிடைக்கலயா? இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் ஆம்பள டாக்டரயா பார்க்க வர்றது?” என முணுமுணுத்தார் மணிமேகலை. 

“ம்மா, இதுல ஆம்பள என்ன பொம்பள என்ன! டாக்டர் டாக்டர் தான. இதே கேள்விய தான லேடி டாக்டரும் கேட்ருப்பாங்க” என்ற மகளை முறைத்தவர், “அங்க முகத்த காட்டக்கூடாதுனு தான் அமைதியா இருந்தேன். இன்னொரு தடவ என்னை ஆஸ்பத்திரிக்கு கூப்டு, அப்புறம் இருக்கு” என முறுக்கிக் கொண்டு சென்றவரை என்ன சொல்லி புரிய வைப்பது என தெரியாமல் தவிப்போடு நின்றாள் நிலானி. 

தர்மராஜ் – மணிமேகலை தம்பதிக்கு இரு பிள்ளைகள். தர்மராஜ் தனியார் பள்ளி ஆசிரியர். மணிமேகலை இல்லத்தரசி. 

மூத்தவன் சிவா. ரோகிணியுடன் மணமாகி தர்ஷன் என்ற இரண்டு வயது மகனுண்டு. தனியார் நிறுவனமொன்றில் அலுவலக மேலாளராக பணிபுரிகிறான். ரோகிணியும் அதே நிறுவனத்தில் தான் பணிபுரிகிறாள். 

இளையவள் நிலானி. தற்போது தான் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளாள். படிப்பு முடிந்த கையோடு வரன் தேடுகின்றனர் வீட்டினர். அதனால் 24 மணி நேரமும் அலைப்பேசியிலேயே நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் யுவதி. 

“பிளட் டெஸ்ட் எடுத்தாச்சுங்களா?” என்ற குரலில் விலுக்கென விதிர்த்து வேகமாய் திரும்பிப் பார்த்தாள் நிலானி. அவள் பின்னே மதுரகவி தான் நின்றிருந்தான். 

இவர் எப்போது இங்கு வந்தார், தன் அன்னை பேசியதைக் கேட்டுவிட்டாரோ என்ற தயக்கத்தோடு அவனைப் பார்க்க, “பிளட் டெஸ்ட் கொடுத்துச்சுங்களா?” என்றான் மீண்டும். 

“ம்…” என அவள் தலை ஆட, அதற்குள் அவன் அருகே ஓடிவந்த செவிலியர் ஒருவர், “டாக்டர் ஒரு அர்ஜெண்ட் டெலிவரி கேஸ் அட்மிட் ஆகிருக்காங்க. கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்கவும், அவளிடம் சிறு தலையாட்டலோடு விடைபெற்றவன் வேகமாய் பிரசவ வார்டை நோக்கி நடைபோட்டான். 

‘அம்மா சொன்னத கேட்ருப்பாரோ! ச்ச, இந்த அம்மாவுக்கு அறிவே இல்ல. இன்னும் எந்த காலத்துல இருக்காங்க. டாக்டர்ல கூட பாகுபாடு பார்க்கணுமா’ என நினைத்தவள், “ஏற்கெனவே அம்மா இங்க வரவே மாட்டேனு அடம்பிடிச்சாங்க. இனி ஏதாவது ஒன்னுன்னா அவங்கள ஆஸ்பத்திரி கூட்டிட்டு வர்றதுக்கு தலகீழா நின்னு தண்ணி குடிக்கணும் போலயே. இதுக்குத் தான் ரிசப்ஷன்ல சொன்னப்பவே யோசிச்சேன். ஆனா பீமேல் டாக்டர் இல்லாததுக்கு நான் என்ன பண்றது” என தனியாய் புலம்பிக் கொண்டிருந்தவளை தோளில் தட்டினார் மணிமேகலை. 

“என்ன டி தனியா நின்னு புலம்பிட்டு இருக்க?” என்றவரிடம், “ம், வேண்டுதல்” என்றவள், “பிளட் கொடுத்தாச்சா. போகலாமா?” என்றாள் நிலானி. “ம். நாளைக்கு வந்து ரிப்போர்ட் வாங்கிக்க சொன்னாங்க. போகலாமா” என்றார். 

இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வரும் தருணம், “மதுரகவி சார்” என்றவாறே ஒரு செவிலிய பெண் வேகமாய் அவர்களை கடந்து செல்ல, தன்னியல்பாய் திரும்பிப் பார்த்தாள் நிலானி. 

அவன் தன்னருகே இருந்த செவிலியரிடம் ஏதோ தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தவன், “சொன்னத சீக்கிரம் ஏற்பாடு பண்ணிருங்க” என்றவாறே அறுவைச்சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தான். 

எவ்வளவு அவசரமாய் இருந்தாலும் அவனது முகத்தில் எவ்வித பரபரப்பையும் காட்டாமல் நிதானமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தவனை வருடிச் சென்றது நிலானியின் விழிகள். 

_தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்