Loading

ஜீவாவிடம் சொன்னபடியே, மறுநாள், அஸ்வின் பொருட்களுடன் ஜீவாவின் வீட்டிற்கு வந்து விட, அந்த சூழ்நிலையே அனைவர்க்கும் புது உலகத்தைக் கொடுத்தது.. கயலின் அன்பிலும் அரவணைப்பிலும், பூவரசியின் மிரட்டிலிலும், வெகுளித்தனத்திலும் ஆண்கள் மூவரும், புதிதாக பிறந்து வாழ்க்கையை அனுபவித்தனர்..

பூவரசி அவர்கள் குடும்பத்தில் ஒருவளாகவே ஆகி விட்டாள். இதில், அஸ்வின் தான் ‘அண்ணி அண்ணி’ என கயலின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தான். கார்த்திக்கும் அஸ்வினுக்கும் செல்லமாக அவளிடம் உரிமை சண்டை வேறு நடக்கும். கயல் தான் இருவரிடமும் மாட்டிக்கொண்டு திண்டாடுவாள். இதில் அதிகமாக சிக்கியது ஜீவாதான். மூவரும் எப்போதும் கயலுடனே இருப்பதில், அவளிடம் தனியாக பேசக்கூட முடியாமல் அவன் தவிக்க, தன்னை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறாளே! என முறைத்தபடி இருந்தான்.

மேலும், அவள் அவனை மடியில் போட்டு சீராட்டினாலும், பாசத்தையும் முத்தத்தையும் பகிர்ந்து கொண்டாலும், அவளின் கண்ணில் ஒரு அன்பு மட்டுமே இருந்ததே தவிர, காதல் இல்லையோ என அவனுக்குள் ஏதோதோ  கேள்விகள் எழுந்தது.

அவளிடம் அவன் காமத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் காதலாய் அவளிடம் இருந்து சிறு சிறு சீண்டலும் தீண்டலும் கொஞ்சலும் மிஞ்சலும் வேண்டும் என்று மனம் ஏங்கியது.

அவளிடம் கூறினால் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்று எண்ணியவனுக்கு, அவள் இப்படி இருப்பதே போதும் என்ற அளவுக்கு வந்திருந்தான். ஆனாலும் மனம் தான் கேட்கவில்லை. அதிலும், அவள் அவன் மேல் சிறு சிறு விஷயத்திற்கும் காட்டும் அன்பும் அக்கறையும் அவளிடமே மண்டியிட வைத்தது.

அவ்வப்பொழுது எந்த தயக்கமும் இல்லாமல் அவனைத் தொட்டு தொட்டு பேசும்போதோ, அவனுக்குத் தான் அவனை கட்டுப்படுத்துவது பெரும் பாடாக இருந்தது. இருந்தும் அவள் அனுமதி இல்லாமல், அவளை நெருங்கக் கூடாது என்ற முடிவோடு இருந்தவன் முத்தங்களையும் கூட குறைத்துக் கொண்டான்.

இப்படியே ஒரு வாரமும், அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் நகர, கார்த்தி பூவரசிக்கு  எப்போதும் போல் பாடம் சொல்லிக்கொடுத்து கொண்டு, அவளைப் படிக்க வைப்பதில் முனைப்பாய் இருந்தான்.

ஆனால் அவளுக்கு தான் முன்பு போல், கார்த்தியிடம் பழக முடியவில்லை. மனதில் ஏதோ ஒரு உணர்வு ஆட்டி படைக்க, படிக்காமல் அப்படியே வேடிக்கை பார்த்திருந்தாள்.

கார்த்தி அவளை நோட்டம் விட்டபடி, “நான் சொன்ன கேள்வியை படிச்சுட்டியா?” என்று கேட்க, அவள் பேந்த பேந்த முழித்து “இல்ல” என்று தலையாட்டினாள்.

அவன், கோபமாக, “புக்கை கைல வச்சுக்கிட்டு உன் நினைப்புலாம் எங்க இருக்கு. இப்படி பராக்கு பார்க்க தான் அங்க இருந்து இங்க வந்தியா. நீ நல்ல மார்க் எடுத்தா தான், மேற்கொண்டு படிக்க முடியும் இல்லைன்னா, மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு காட்டுக்கே போக வேண்டியது தான். ஒழுங்கா படிக்கிறதுல கான்சென்ட்ரேட் பண்ணு” என்று அதட்டுவது போல் சொல்ல, அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.

ஏன் என்றே தெரியாமல் அழுகை முட்டிக்கொண்டு வர, உதட்டைக் கடித்து தன்னை கட்டுப்படுத்தியவளை கண்டுகொள்ளாமல், “போய் “ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்து படி” என்று அமைதியாய் கூறி விட்டு அறைக்கு சென்றவனுக்கு ஆயாசமாக இருந்தது. ‘நீ கோபப்பட்டா பயமே வரல, காமெடியா தான் இருக்கு’ என்று விளையாட்டுத்தனமாக இருந்த பெண்ணை இப்படி சபலப்படுத்தி கலங்க வைத்து விட்டோமே என்று தன்னையே நொந்தான்.

குளியலறையில் இருந்து வெளியில் வந்த ஜீவா தலையை துவட்டிக் கொண்டிருக்க, அவனருகில் வந்த கயல்,  “ஜீவா. சாப்பிட வாங்க” என அழைக்க, அவன் “ம்ம்” என்றான்.

கயல், அவன் முன் சென்று நின்று, “என்ன ம்ம்…? வாயை திறந்து சொல்ல முடியாதா… ஹ்ம்ம்?” என்று மிரட்டுவது போல் அவன் தோளில் கையை மாலையாக்கி கேட்டிட,

அதில் புன்னகைத்தவன், “ஏய் ஸ்வீட் ஹார்ட். வர வர நீ ரொம்ப ரௌடித்தனம் பண்ற…” என்று கன்னத்தை கிள்ளினான். சற்றே சிவந்தவள், “என்மேல கோபமா ஜீவா?” என்று மெல்லிய குரலில் கேட்க, அவன் “ஏன் கோபம்?” என்று புரியாமல் பார்க்க, அவள் அமைதியாய் இருந்தாள்.

ஜீவா, அவளின் முகத்தை நிமிர்த்தி “இப்போலாம் நான் கோபமே படுறது இல்ல ஸ்வீட் ஹார்ட். உன் முகத்தை பார்த்தாலே மனசு அமைதி ஆகிடுது. அப்படியே உன் மேல கோபப்பட்டாலும் என் தம்பிங்க என்னை கொலையே பண்ணிடுவானுங்க” என்று கேலியாய் கூறி, அவளின் உதட்டினை வருட, அதில் மேலும் சிவந்தவள்,

“என்மேல கோபம் இல்லைன்னா ஏன் எனக்கு நீங்க முத்தமே கொடுக்குறது இல்ல…” என்று முகத்தை சுருக்கி கேட்டிட, அதில் ஒரு நொடி திகைத்தான்.

அவள் மேலும் “ஐ மிஸ் யு ஜீவா” என வருந்திய குரலில் சொன்னதில், தன் தவறை உணர்ந்து அடுத்த நொடி அவள் இதழை சிறை பிடித்திருந்தான் வன்மையாக. அவளின் இதழை தன் இதழால் மென்று கடித்தவனின் கரங்கள் அவள் மேனியில் ஊர்வலம் போக, அவள் நெளிந்து கொண்டு, மூச்சுக்காய் திணறிக்கொண்டிருந்தாள்.

அவன் வேகம் குறையாமல் மேலும் மேலும்  அதிகரிக்க அதில் கயல் தான், வலுக்கட்டாயமாக அவனைத் தள்ளி விட்டு, உதட்டைப் பிடித்து, “ஸ்ஸ்… வலிக்குது ஜீவா” என்று பாவமாக சொல்ல, அதில் முறுவலித்தவன்.. “வலிக்கிறதுக்கு தான கடிக்கிறதே” என்று மீண்டும் அவளை பிடித்து அருகில் இழுத்தவன், அவளின் வலியை போக்க, மென்மையாய் இதழை சுவைக்க, கயல் மயங்கி நின்றாள்.

சில நிமிடங்கள் கழித்து..”அண்ணி” என்ற அஸ்வினின் குரல் கேட்கவும் தான், கயல் ஜீவாவிடம் இருந்து விடுபட்டு, “அஸ்வின் கூப்பிட்றான் விடுங்க ஜீவா!” என்று வெளியில் செல்ல போக,

அவனோ, “ஏண்டி சும்மா இருந்தவனை முத்தம்  கொடுக்கலை கட்டி பிடிக்கலைன்னு கம்பளைண்ட் பண்ணிட்டு, இப்போ பாதில போற. ஒழுங்கா இன்னும்  கொஞ்சம் நேரம் இரு” என்று மிரட்டலாய் ஆரம்பித்தவன், “இப்போ நீ  போனா,  அவனுங்க உன்னை என் பக்கத்துலயே விட மாட்டானுங்கடி” என்று  பாவமாய்  முடிக்க, பொங்கிய சிரிப்புடன் அவனை பார்த்தாள்.

பின், என்ன நினைத்தாலோ “ஐ லவ் யு ஜீவா” என்று அவன் கண்ணை பார்த்து சொல்ல, ஜீவாவும் அவள் கண்ணில் என்ன உணர்ந்து கொண்டானோ, மனதில் இருந்த ஏதோ ஒரு பாரம் இறங்கியது போல் இருக்க, அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு “லவ் யு ஸ்வீட் ஹார்ட்!” என்றவன், அஸ்வின் மேலும் கத்தியது கேட்கவும், “நீ போ இல்லைன்னா இவனுங்க இங்கயே வந்துடுவானுங்க” என்று சிரிப்புடன் சொல்ல, கயலும் அவசரமாக கீழே சென்றாள்.

அங்கு அஸ்வின் “அண்ணி பசிக்குது!” என்று டைனிங் டேபிளை இரண்டாக்கினான்.

கயல், “வரேன் அஸ்வின்… கார்த்தி எங்க.” என்று கேட்க,

” தெரியல… செம்ம  பசி அண்ணி. உங்க மீன் குழம்பு வாசனை ஸ்டேஷன் வரைக்கும் அடிச்சுச்சு. உடனே அடிச்சு பிடிச்சு ஓடி வந்துட்டேன்.” என்று குறும்பாய் சொல்ல, அவனை செல்லமாக முறைத்தவள், அவனுக்கு சாப்பாடை எடுத்து கொடுத்து விட்டு, கார்த்தியையும் ஜீவாவையும் அழைத்தாள்.

இருவரும் வந்து சாப்பிடுகையில், ஜீவா, “அந்த சீனிவாசனை என்ன பண்ணுன அஸ்வின்…?” எனக் கேட்க, அவன் “நான் ஒன்னும் பண்ணல அண்ணா, அவன் தான் இழுத்துக்க பறிச்சுக்க இருக்கான்” என்று சொல்லி விட்டு, அவன் செய்ததை நினைத்தான்.

ஏற்கனவே ஜீவா அவரின் கை கால்களை உடைத்திட, அவன் பங்கிற்கு அவனை அடித்து துவைத்து, தர்மாஸ்பத்திரியில் சேர்த்து, வைத்தியத்திற்கும் பணம் தராமல், அநாதை போல் போட்டு விட்டு வந்துவிட்டான்.

இதனைக் கேட்டதும், கயல், “அவரை ஜெயில்ல போடாம நம்மளே தண்டனை கொடுக்குறது தப்பு அஸ்வின். அவருக்கு ட்ரீட்மெண்ட் குடுத்து, அப்பறம் ஜெயில்ல போடுங்க…” என்க,

அஸ்வின் தான், “அவன் அவ்ளோ பண்ணிருக்கான். எப்படி அண்ணி அப்படியே விட முடியும்” என்று கோபமாக கேட்க,

“ப்ச், மத்தவங்களுக்கு தண்டனை குடுக்க  நமக்கு எந்த உரிமையும் கிடையாது அஸ்வின். தப்பு பண்ணிட்டாங்கன்னு நம்ம அவங்களை துன்புறுத்துனா அப்பறம் அவங்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது…” என்றாள் அழுத்தத்துடன்.

ஜீவா தான் “அஸ்வின், அந்த ஆளை வேற ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் பாரு. அப்பறம் கேஸ் போட்டு உள்ள தூக்கி போட்டுடலாம் சாகுற வரை  வெளிய வரக்கூடாது.” என்று விட்டு கயலைப் பார்க்க, அவள், சிறிதாய் புன்னகைத்து கொண்டாள்.

கார்த்தி தான், “அண்ணா… இருந்தாலும் நீங்க அண்ணிக்கு ரொம்ப கூஜா தூக்குறீங்க” என்று கலாய்க்க,

“என் பொண்டாட்டிக்கு நான் கூஜா தூக்குறேன். இல்ல உன் அண்ணியவே தூக்குறேன். உனக்கு என்ன வந்துச்சு” என்று நக்கலாய் கேட்க, கயலுக்கு தான் வெட்கமாக போய் விட்டது.

கார்த்தியோ விடாமல், “கயலு அண்ணா உன்னை  தூக்குறதுக்கு அடி போடுறாரு போல” என்று நகைக்க,  அவனை முறைக்க முயன்றவள் முடியாமல், வெட்கத்துடன் தலையை குனிந்து, ஜீவாவைக் கிள்ளினாள். 
அஸ்வின் அவன் பங்கிற்கு ஏதோ பேசவர, அவனின் போன் அடித்தது. அதனை கட் செய்து விட்டு அவளை கிண்டலடித்தவனுக்கு மீண்டும் போன் வர, மறுபடியும் ‘கட்’ செய்தான்.

ஜீவா “போன் எடுத்து பேசு அஸ்வின்” என்று  சொல்லும்போதே, அவன் “அது… எதோ ராங் நம்பர் அண்ணா” என்று தயங்கி விட்டு தட்டில் புதைந்து சாப்பிட, மறுபடியும் போன் வந்ததில் அதை கட் செய்தான்.

கயல் “ஏதாவது முக்கியமா இருக்க போகுது அஸ்வின். எடுத்து பேசு” என்க,

“அது.. முக்கியமான போன்லாம் இல்ல அண்ணி” என்று  சமாளிக்கையிலேயே ,”ஏண்டா என் போன் உனக்கு முக்கியமான போன் இல்லையா” என்ற பெண்ணின் குரல் கேட்டிட, ‘ஐயோ’ என்று மிரண்டு திரும்பினான்.

அங்கு காளி அவதாரமாய் நின்றிருந்தாள் அஸ்வினின் ஆருயிர்  காதலியான அஞ்சலி. அவளைக் கண்டு திருதிருவென முழித்தவன் மற்றவர்களை பார்க்க, அவர்களோ இவளை யார் என்று புரியாமல் பார்த்தனர்.

அஞ்சலி அவனருகில் வந்து, “ஒரு போன் பண்ணுனா எடுக்க மாட்டேங்குற. இதுல என் போன் உனக்கு முக்கியமே இல்லையா. என்ன? என்னை கழட்டி விடலாம்னு பார்க்குறியா…” என்று விழிகளை உருட்டிக் கோபத்துடன் கேட்க, அவன் “அதுக்கு இன்னும் ஆப்ஷன் இருக்கா எலி.” என்றதில், அவள் தீயாய் முறைத்தாள்.

ஜீவா அவனை ஒரு மாதிரியாக பார்க்க, அஸ்வின் “அண்ணா இவள் என் பிரென்ட்” என்று சொல்லிட, அவள் “என்னது பிரெண்டா?” என்று மேலும் முறைக்க அதில் நொந்தவன், “அது…அது நான் லவ் பண்ற பொண்ணு அண்ணா” என்றான் நெளிந்தபடி. அவன் செய்கையில் ஜீவாவும் கயலும் சிரித்துக் கொண்டனர்.

கார்த்தி, “இது எப்போ இருந்து அண்ணா சொல்லவே இல்லை?” என்று நக்கலடிக்க, அஸ்வின் அவளிடம், “ஆமா நான் இங்க இருக்குறது உனக்கு எப்படி தெரியும்…” என்று கேட்க, அவள், “கயல் அக்கா தான் அட்ரஸ் சொன்னாங்க” என்று தோளை குலுக்கி அசட்டையாய் சொன்னதும், அஸ்வின் திகைத்து கயலைப்  பார்த்தான்.

ஜீவாவோ, “ஏண்டா எங்ககிட்ட சொல்லல?” என்று கேட்க, அவன் தயங்கி நிற்கவும்,

கயல்,” நேத்து உன் போன் அடிச்சிகிட்டே இருந்துச்சு அஸ்வின். நீ தூங்கிட்டு இருந்த, அதான் நான் எடுத்தேன். அப்போ தான் அஞ்சலி பேசுனாள். நீ அவளை லவ் பண்ணுனன்னு சொன்னா. ஆனால் அவள் அப்பாவுக்கும் உனக்கும் ஏதோ பிரச்சனை ஆனதுனால நீ அவளை அவாய்ட் பண்றதா சொன்னா. நான் தான் அவளை இங்க வரச்சொன்னேன்.” என்றதும்,

அஞ்சலி, “உனக்கும் அப்பாவுக்கும் பிரச்சனைன்னா என்னை ஏண்டா அவாய்ட் பண்ற. நான் என்ன பண்ணேன்…” என்றாள் முகத்தை சுருக்கி.

அதில் அவன், “சாரி அஞ்சலி…” என்று ஏதோ பேச வர, அவள் காட்டமாக “நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. ஒன்னு என் அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கு. இல்லைன்னா என்னை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோ, உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன். அப்படி ரெண்டுமே வேணாம்னா, நான் நேரா இங்க வந்து, உனக்கும் எனக்கும் சேர்த்து விஷத்தை வச்சு, நானும் செத்து உன்னையும் சாகடிச்சுருவேன்…” என்று மிரட்ட,

கார்த்தி, “ஹா ஹா அண்ணி, செம்ம மிரட்டல் போங்க. அந்த விஷத்தை எங்களுக்கு எதுவும் வச்சுட மாட்டிங்களே…” என்று சற்று மிரண்டு கேட்க,

அவள், “அது நீங்க நடந்துக்குறதை பொறுத்து…” என்று கீற்று புன்னகையுடன் சொல்லி விட்டு, அஸ்வின் கூப்பிட கூப்பிட சென்று விட்டாள்.

ஜீவா, அஸ்வினை அழுத்தமாய் பார்த்து, “என்ன பிரச்சனை அந்த பொண்ணோட அப்பாவுக்கும் உனக்கும்?” என்று கேட்டிட,

அவன் “அது, அவள் அப்பா ஆளுங்கட்சி எம் எல் ஏ. ஒரு தடவை நான் அந்த ஆளை அரெஸ்ட் பண்ணிட்டேன்” என்றதும்,

“ம்ம் பேப்பர்ல பார்த்தேன். ஏதோ ஊழல் பண்ணிட்டான்னு தான நீ அரெஸ்ட் பண்ணுன” என்று கேட்க, அவன் இதெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கீங்களா என்பது போல் வியப்பாய் பார்த்து விட்டு,

“ம்ம் ஆமா அண்ணா.. அப்போ இருந்து எனக்கும் அந்த ஆளுக்கும் ஆகாது. அப்போ தான், அஞ்சலியை பார்த்தேன். ஆனால் அந்த ஆளோட பொண்ணுன்னு எனக்கு தெரியாது. ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சதும் தான், அவள் எம் எல் ஏ பொண்ணுன்னே தெரியும். அப்பறமும் நான் போய் அந்த ஆள் கிட்ட பேசினேன்.

அவரு என்னன்னா, என்னை அரெஸ்ட் பண்ணி கொலை பண்ண பார்த்து, என்னையவே மிரட்ட ஆள் அனுப்புறன்னு ஏதேதோ சொன்னாரு… எனக்கு ஒண்ணுமே புரியல… அதோட” என்று நிறுத்தியவனை,

ஜீவா ‘மேல சொல்லு’ என்பது போல பார்க்க, அவன், “அதோட… உனக்கு குடும்பமே இல்ல நீயே அனா… அனாதைன்னு சொல்லி பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாரு.” என்றான் கமறிய குரலில்.

தம்பியின் கூற்றியில் இறுகியவன், “கயல் கிளம்பு. நம்ம இப்போ போய் பொண்ணு கேட்குறோம்…” என்றதும், அஸ்வின் தயங்க, அவனோ கடுங்கோபத்தில் இருப்பது அவனின் முகத்திலேயே தெரிந்தது.

கயலுக்கு தான் அவனின் கோபத்தின் அளவு தெரியுமே! அதனால் உடனே கிளம்பி வரவும் நால்வரும், எம் எல் ஏ வீட்டிற்கு சென்றனர்.. அப்போது தான், வீட்டினுள் வந்து, அஸ்வினைப் பற்றி யோசித்த அஞ்சலிக்கு அவனை முதன் முதலில் பார்த்தது நினைவு வந்தது.

அவனுக்குத் தான் அவள் எம்.எல்.ஏ வின் பெண் என்று தெரியாது. ஆனால் அவளின் அப்பாவை கைது செய்தது அவன் தான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

முதல் பார்வையிலேயே அவனின் கண்களில் விழுந்து விட்டவள், அவன் செல்லும் இடமெங்கும் அவனை பின்தொடர ஆரம்பித்தாள் .அப்படி அவனை பின் தொடரும் போது தான், அவனைப் பார்த்து கொண்டே, வண்டியை பள்ளத்தில் விட்டு வண்டியோடு கீழே விழுந்து விட்டாள்.

அப்போது தான் அவளை கவனித்த அஸ்வின் அவளை சென்று தூக்கி விட்டு, “ஹே ஆர் யூ ஓகே…? அடி எதுவும் படலைல” என்று அக்கறையாய் கேட்டிட, அவளுக்கு தான் அவன் வந்து பேசியதை நம்பவே முடியவில்லை.

அஸ்வின் அவளின் வண்டியை தூக்கி விட்டு, “பார்த்து வந்துருக்கலாம்ல.. இனிமே கவனமா ஓட்டு” என்றவன், வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்து அவளைக் கிளப்ப, அவள் தான் ஏதோ ஒரு பரவசத்தில் வானத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

அதன் பிறகு, அவளை அடிக்கடி அவன் வழியில் பார்த்தவன், ஒரு முறை, அவளை நிறுத்தி, “எதுக்கு என்னை பாஃலோ பண்ற?” என்று நேரடியாய் கேட்க,

அவள்,” நான்  ஒன்னும் உங்களை ஃபாலோ பண்ணல…” என்று முறைத்தப்படி சொன்னதும், ‘நம்ம தான் தப்பா நினைச்சுட்டோமோ’ என்று நினைத்தவன், “ஓ! ஓகே” என்று விட்டு நகர போக,

பெண்ணவள் தான், “ஹெலோ! நான் உங்களை ஃபாலோ மட்டும் பண்ணல. லவ் பண்றேன்” என்று குறும்புடன் போட்டு  உடைத்திட, அவன் தான் அதிர்ந்து விட்டான்.

மனதில் சாரல் அடித்தாலும் முதலில் அவளைத் தவிர்த்தவனுக்கு, ஒரு கட்டத்தில், அவளின் அரவணைப்பு தனக்கு வேண்டும் என்று மனம் கெஞ்சிட, அவளிடமே சரணடைந்தான். அவளுடன் இருக்கும் போது அவன் அனைத்தையும் மறந்து விடுவான். அதனாலே பழையதை  பேசாமல், அவளுடன் இருக்கும் தருணத்தில் புதிய உலகத்தில் வாழ்வான்.

அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த அஞ்சலி, அங்கு அனைவரும் வருவதை கண்டு, பேந்த பேந்த முழிக்க, ஜீவா, “உன் அப்பா எங்க?” என்று கேட்டான்.

அவள் தான், ‘என்ன உடனே வந்துட்டாங்க’ என்று புரியாமல் சதாசிவத்தை அழைக்க அவர், அஸ்வினை முறைத்து விட்டு, ஜீவாவைப் பார்த்தார். “வாங்க வாங்க தம்பி, நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்” என்று ஜீவாவை வரவேற்க, அவன் அவரை அமைதியாய் முறைத்தான்.

அவனுக்கும் சதாசிவத்தைத் தெரியும். அவருக்கும் அவனைப் பற்றி தெரியும்.. ஊரில் பாதி பேர் அவனிடம் தான் வேலை பார்க்கிறார்கள். அவன் சொன்னால் உடனே கேட்கும் மக்கள் செல்வாக்கு இருப்பதால், அவனை பணத்தால் விலைக்கு வாங்க முடியாததை உணர்ந்து, அவனிடம் நல்ல உறவுமுறையை வளர்த்து கொண்டார். அவனிடம் சண்டையிட்டால், தனக்கான ஓட்டு விழுகாது என்ற எண்ணத்தில்.

இப்போது, அஸ்வினை இழுத்து, “இவன் என் தம்பி!” என்றான் அழுத்தமாக..

சதாசிவம் தான் புரியாமல் முழித்து, “தம்பியா?” என்று பார்க்க,

ஜீவா, “ஆமா இவன் என் தம்பி. உங்க பொண்ணை லவ் பண்றான். உங்ககிட்ட பேசுனதுக்கு நீங்க இவனை அனாதைன்னு சொன்னீங்களாமே. எவ்ளோ தைரியம் இருந்தா என் தம்பியை அப்படி சொல்லிருப்பீங்க.. அவனுக்கு அண்ணன் அண்ணி, தம்பின்னு ஒரு குடும்பமே இருக்கு.” என்று பல்லைக்கடித்துக் கூற, அவருக்கு தான் பாவம் ஒன்றுமே புரியவில்லை.

அவர் சற்றே கோபமாக, “உங்க தம்பி என்னை அடிக்க ஆள் அனுப்புனாரு” என்று ஏதோ சொல்ல வர,

ஜீவா “அது அவன் அனுப்பல. நான் தான் அனுப்புனேன்” என்று அசட்டையாகக் கூறியதில், அனைவரும் திகைத்தனர். கயல் தான் ‘அதான வில்லத்தனமான வேலை எல்லாம் நீங்க தான பார்ப்பீங்க’ என்று மனதில் சிரித்து கொண்டாலும், வெளியில் அவனின் கெத்தை ரசித்திருந்தாள்.

“உங்களை அரெஸ்ட் பண்ணுனனால அஸ்வினை நீங்க கொலை பண்ண ஆள் அனுப்புனீங்கள்ல…” என்று அவனை ஆழமாய் பார்த்து கேட்க, அஞ்சலி பதறி விட்டாள் என்றால், அஸ்வின் அதிர்ந்தான்.

மேலும் அவன், “அதான், நான் உங்களை அடிக்க ஆள் அனுப்பி மிரட்டினேன். இப்போயும் நான் இவ்ளோ மரியாதையா பொறுமையா பேசுறது, உங்க குடும்பத்துல பொண்ணு எடுக்க போறோமேன்ற ஒரு மரியாதைல தான்…” என்று அழுத்தமாய் முடிவாய் சொல்லிட, சதாசிவத்துக்கு உள்ளே கோபம் வந்தாலும், வெளியில் அவரால் ஒன்றுமே பண்ணமுடியவில்லை.

ஏற்கனவே அவருக்கு அரசியலில் பின்னடைவு. இதில் அவனைப் பகைத்து கொண்டால், உள்ளதும் போய்விடும் என்று அஸ்வினிடம், “மாப்பிள்ளை நீங்க இவரோட தம்பின்னு முன்னாடியே சொல்லக்கூடாது”. என்று ஜகா வாங்கிட, அஸ்வின் அவரை முறைத்தான்.

அவனுக்கோ, தான் ஜீவாவுடன் இல்லை என்றாலும், தனக்கு எந்த பிரச்சனையும் வராமல் அரணாக இருந்திருக்கிறான் என்று நினைக்கும் போதே கண் கலங்கியது.

அஞ்சலியோ, ‘நம்ம டேடி பொசுக்குன்னு கட்சி மாறிட்டாரு. அது சரி அவருக்கு இதெல்லாம் புதுசா என்ன’ என்று அஸ்வினை பார்த்தவள், அவனின் கலங்கிய கண்கள் மனதை பிசைய, அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

பின் ஒரு மாதத்தில் கல்யாண தேதியையும் கையோடு குறித்து கொண்டு தான் அங்கிருந்து கிளம்பினர். அஞ்சலி அஸ்வினை தவிப்பாக பார்க்க, கயல், “அஸ்வின் நீ அஞ்சலிகிட்ட பேசிட்டு வா…” என்று விட்டு நகர்ந்தாள்.

அஞ்சலி அவனை காருக்குள் அழைத்துச் செல்ல, அவன் உள்ளே சென்றதும் அவளின் மடியில் புதைந்து அழுதான்.

அதில் பதறியவள் “அஸ்வின் என்ன ஆச்சு டா…? சாரிடா அப்பா உன்னை அப்படி சொன்னாருன்னு எனக்கு தெரியாது…” என்று வருந்த,

“நான் தான் தப்பு பண்ணிட்டேன் எலி. இவ்ளோ நாள் முட்டாளா இருந்துட்டேன்” என்று நடத்த அனைத்தையும் அவளிடம் கூறியவன், “நான் தப்பானவன் தான அஞ்சு. கூட பிறந்த அண்ணனையே கொலை பண்ண பார்த்தேன்.. ஆனால் அவரு என்னை இத்தனை வருஷமா பாதுகாத்துட்டு இருந்துருக்காரு” என்று தேம்ப,

அவள் தான், ஜீவாவை ஆச்சர்யத்துடன் நினைத்து விட்டு, அவன் முகத்தை கையில் தாங்கி, “அஸ்வின் இங்க பாரு. நீ தப்பு பண்ணனும்னு  நினைச்சுருந்தா, எப்போவோ பண்ணிருப்ப. அவங்களை அழிக்கணும்ன்னு நினைச்சுருந்தா, கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணி, உங்க அண்ணியை காப்பாத்தாம இருந்துருப்ப. ஆனால் நீ பண்ணலையே. எல்லாமே ஒரு மிஸ அண்டர்ஸ்ட்டாண்டிங் தான் அஸ்வின். அதான் இப்போ புருஞ்சுக்கிட்டியே. அதுவே பெரிய விஷயம் தான்.” என்று அவனை சமன்படுத்த, அவளிடம் அனைத்தயும் மனம் விட்டு பேசியதாலோ என்னவோ, மனதில் பாரம் இறங்கியது போல் இருந்தது.

“ஆனா… உன்னை பார்த்ததுக்கு அப்பறம் தான் எலி, நான் நானா இருக்கேன். உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்கும்.” என்று நெற்றியில் முட்டியவன், “லவ் யூ எலி!” என்றிட, அவள் தான் அவனை விழி விரித்து பார்த்தாள்.

இதுவரை அவன் ‘லவ் யூ’ சொன்னதே இல்லை. அவனின் செயல்களிலேயே தான் அவன் காதலை காட்டுவான். இப்போது, அவன் காதலை சொன்னதும் அவளுக்கு பெரும் சந்தோசத்தைக் கொடுக்க, அவன் நெஞ்சிலேயே சாய்ந்து கொண்டாள்.

வீட்டிற்கு வந்த மூவரும், கல்யாண வேலையை பற்றி பேசிட, அந்த வார சனிக்கிழமை கோயம்பத்தூர் சென்று திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்று ஜீவா சொன்னதும், கயலும் கார்த்தியும் திருதிருவென விழித்தனர்.

கார்த்தி கயலிடம் வேணாம்னு சொல்லு என்று கண்ணை காட்ட, கயல், “ஜீவா, நம்ம சண்டே போலாமே” என்று  கேட்டதும்,

அவன், “சண்டே எஸ்டேட்ல வேலை இருக்கு கயல். நாம சனிக்கிழமை போயிட்டு வந்துடலாம்…” என்றான்.

“அது அது… ஹான். சனிக்கிழமை நல்ல காரியத்துக்கு எதுவும் வாங்க கூடாது ஜீவா..” என்றிட,

ப்ச் எல்லா நாளும் நல்ல நாள் தான். நம்ம சனிக்கிழமை போறோம்” என்று  முடிவாய் சொல்லிவிட்டு அறைக்கு செல்லவும், கார்த்தி, “கயலு நம்ம பிளான்லாம் ஊத்திக்கிச்சு. ஒழுங்கா அண்ணாவை பிரைன் வாஷ் பண்ணு” என்க. அவள் “டேய், நான் ரொம்ப பேசுனா அவரு கண்டு பிடிச்சுடுவாருடா.” என்றதும்,

கார்த்தி, “அதெல்லாம் தெரியாது. நீதான் பேசுற” என்று அறைக்கு அனுப்பி விட, மெல்ல அறைக்கு வந்தவள், அவன் தலைவாரி கொண்டிருபப்தைக் கண்டதும், அந்த சீப்பை வாங்கி அவளே அவனுக்கு தலை வாரி விட்டாள்.

அதில் முறுவலித்தவன் அவளையே ரசிக்க, பின் கயல் அவனை நெருங்கி அவன் சட்டை பட்டனை திருகிக் கொண்டே, “ஜீவா…” என்று மெலிதாய் அழைக்க, “என்ன ஸ்வீட் ஹார்ட்…?” என்றான் கிசுகிசுப்பாக.

அவள், “நம்ம… நல்ல காரியம் பண்ண போறோம். அப்போ சனிக்கிழமை திங்ஸ் வாங்குனா சரியா வராது. அபசகுனமாகிடும். அதுவும் இல்லாம சனிக்கிழமைக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. நமக்கும் கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்ல என்ன பண்ணப்போறோம்னு” என்று ஒவ்வொரு வார்த்தையாய் பேச, அவன் எங்கே இங்கே இருந்தான்!

அவள் அருகில் வந்ததுமே தன்னிலை மறந்து, அவள் முதுகில் கோலம் போட ஆரம்பித்திருந்தான்.

அதில் அவள் நெளிந்து கொண்டே, “ஜீவா, நம்ம புதன்கிழமை போகலாம் ஓகே வா…” என்று கேட்டு, அவன் கன்னத்தில் ஒரு முத்திரையை பதிக்க, அவன் மொத்தமாய் தன்னை இழந்து, “ம்ம்” என்று மட்டும் சொல்லி அவள் கழுத்தில் முகத்தை புதைக்க,

கயல் அவனை தள்ளி விட்டு, “தேங்க்ஸ் ஜீவா…” என்று விட்டு வெளியில் ஓடிவிட, அவனுக்குத் தான் சில நொடிகளுக்கு முன் என்ன நடந்தது என்றே புரியவில்லை.

‘இப்படி நம்மளை டெம்ப்ட் பண்ணிட்டு போய்ட்டாளே! இவளை…’ என்று நினைத்து விட்டு, அவளை தேடி வர, அவள் அடுக்களையில் இருந்ததைக் கண்டதும்,

“ஏண்டி, என்னை ஏத்தி விட்டுட்டு இங்க என்னடி பண்ற?” என்று கடுப்பாக கேட்க, அவள் குறும்பாய் சிரித்து விட்டு, “நான் என்ன பண்ணேன் ஜீவா? நான் ரொம்ப நேரமா இங்க தான் இருக்கேன்” என்று வேலையை பார்க்க, ஜீவா குழம்பி விட்டான்.

அப்போ நம்ம கனவு எதுவும் கண்டோமா… என்று குழம்பியவன், அவளின் முகத்தில் இருந்த குறும்பை பார்த்து, “ஓ அப்படியா, சரி சனிக்கிழமை போறதுக்கு எல்லாம் எடுத்து வச்சுரு” என்றிட, அவள் பட்டென்று “நீங்க தான் புதன்கிழமை போகலாம்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்க” என்று வாயை விட்டாள்.

அவளை முரட்டுத்தனமாய் பிடித்து இழுத்தவன், “அப்படி வாடி வழிக்கு…! என்னையவே ஏமாத்துறியா. பொய் சொல்ற இந்த லிட்டில் லிப்ஸ்க்கு என்ன தண்டனை குடுக்கலாம் ம்ம்”? என்று அவளை நெருங்க, அவள் தான் மாட்டிக்கொண்டதில் நாக்கை கடித்து, “ஐயோ கார்த்தி!” என்று கத்த, அவன் சட்டென்று விலகியதும், அவனுக்கு அழகு காட்டி விட்டு, வெளியில் ஓடி விட்டாள்.

மனைவியின் குறும்பில் தன்னை தொலைத்தவன், இந்த கண்ணாமூச்சி விளையாட்டையும் ரசிக்க ஆரம்பித்து, அவளை பார்வையாலேயே சிவக்க வைத்தான்.

அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும்
அலையே என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படா்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே

தொலைவில் பாா்த்தால்
ஆமாம் என்கின்றாய் அருகில்
வந்தால் இல்லை என்றாய்
நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு

நேசம் தொடரும்.
– மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
54
+1
2
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்