Loading

     வெண்மேகமாய் கலைந்ததே

அத்தியாயம்-1

அகத்தை
களவுக் கொள்ளும்
கள்வனை
சிறைப்பிடிக்க முயன்று
தோற்றுப்போய்
கைதியாக மாறினேன்
காதலால்…

      இடம் : மைசூர் பிருந்தாவனம் பார்க்

      அக்காலம் முதல் இக்காலத்தின் நவீன சினிமா படங்கள் பலவும்,  சிரமம் இல்லாமல், எளிதான ‘சூட்டிங் ஸ்பாட்’ இடமென்று சில இடங்களை கூறலாம். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று மைசூரில் உள்ள ‘பிருந்தாவனம் பார்க்’.

    60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிருந்தாவனம் லேசர் விளக்குகளுடன் நீர் ஊற்றுகளும், மலர்படுக்கைகள், அழகுப்படுத்தப்படும் புற்கள், படகு சவாரி என்று காண்போரை ரசிக்க வைக்கும். மூன்று நான்கு மணி நேரம் சுற்றி பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். ஆனாலும் வண்ண மலர்களையோ, செயற்கை ஊற்றுகளையோ ரசிக்க திகட்டவே திகட்டாது.
  
   அத்தகைய இடத்தில் தான் கமலி விஷ்ணுவிற்காக சற்று சலிப்புடன் காத்திருந்தாள்.
  
    விஷ்ணு கமலியின் காதலன். பெரும்பாலும் அவர்கள் சந்திப்பு இங்கு தான். வசதியான இடம், இயற்கை சூழல், சுற்றுலா ஆட்களை தவிர்த்து தெரிந்தவர்கள் வருவார்களோ என்று அஞ்சிட வேண்டிய அவசியமேயில்லை.
  
   காரணம் கமலியின் அக்கா சுதா மற்றும் மாமா ரங்கநாதன் இருவருமே பூந்தமல்லியை தாண்டி அடியெடுத்து வைக்காதவர்கள்.
கமலியின் தாய் தந்தையர்கள் அக்கா சுதாவின் திருமணத்திற்கு பின் ஒருவர் மாற்றி ஒருவர் காலமாகிட மாமா ரங்கநாதன் தான் படிக்க வைக்கின்றார். ஓரளவு அம்மா வீட்டிற்கு தெரியாமல் மனைவிக்காக நல்லது செய்ய விருப்பப்படுவார்.

மருத்துவம் படிக்க ஆர்வமாக இருந்தவளுக்கு போதியளவு வசதியில்லை. அதனால் மனம் உடைந்திடாமல் வேறு ஏதேனும் மருத்துவம் சார்ந்த படிப்பை சிந்திக்க பற்களில் தான் ஆர்வம் வந்தது. கையிலிருந்த இருப்பை போட்டு பற்கள் சம்மந்தமான படிப்பை படிக்கின்றாள்.

  கமலிக்கு முத்து பல் வரிசை. பார்க்கும் யாவருமே அவளது சிரிப்பையும் பல் வரிசையையும் புகழாதவர்கள் இல்லை எனலாம்.
  
    அப்படி டென்டிஸ்டாக B.D.S படிக்கும் காலகட்டத்தில் பயிற்சி வகுப்பில் சந்தித்ததவனே விஷ்ணு.

    இப்பொழுது நினைத்தாலும் அந்த நிகழ்ச்சிகள் பசுமையாக தோன்றும். ஆனால் தற்போது எண்ணி பார்க்க கமலி விரும்பவில்லை. தற்போது காத்திருப்பதற்கான காரணம் காதலனை ஆசையாக காண தவிக்கவில்லை. மாறாக அவனை திட்டி தீர்க்கவே வந்துள்ளாள்.

   விஷ்ணு எப்படி மறுக்கலாம்? காதலிக்கின்றவர்கள் பெரும்பாலும் காதலை தாண்டி அடுத்த கட்டமாய் திருமணத்தை தானே நாடுவார்கள். அவளுமே அதற்கான ஆசையில் பேச வந்தது.   
 
“என்னப்பா இன்னமும் உன் ஆளை காணோம். எனக்கு நேரமாச்சு நான் கிளம்பட்டா?” என்று கார்த்திகா கலக்கமாய் கேட்டாள்.

கமலிகாக காத்திருக்க துணைக்கு வந்திருந்தாள். நேரமாகவும் அவளும் வீட்டிற்கு செல்ல வேண்டுமே.

கமலி பதில் கொடுக்க தயங்கி முகத்தை வருத்தமாய் வைத்திருக்க, “நீ வருத்தப்பட்டு நோ யூஸ் கமலி. என்னை விஷ்ணுவுக்கு சுத்தமா பிடிக்காது. நான் உன் கூட வந்திருக்கேன்னு தெரிந்து எங்கயாவது ஒளிந்து வேடிக்கை பார்ப்பான். நானா போன தானா வருவான்.” என்றதும் கமலி அந்த நிலையிலும் முறுவல் புரிந்தாள்.

“என்ன சிரிப்பு?” என்று இடையில் கை வைத்து கார்த்திகா முறைக்க, “நானா… போனா.. தானா… ரைமிங்கா இருக்கு” என்றவள் கூடுதலாக முகம் வெட்கம் வந்து சென்றது.

“அடிங்க… இங்க காதலே ஊஞ்சலாடுது. மேடமுக்கு சார் முதல் முதல்ல பேசின ரைமிங் வோர்ட்ஸ்ல நினைப்பு போகுது. உன்னை… உனக்கு போய் துணைக்கு காத்திருக்கேன் பாரு. இதுக்கு தான்டி காதலிக்கறவங்க கூடயிருக்கறவங்க ஹெல்ப் பண்ணறதில்லை.

நீ காதலிச்சு கல்யாணம் பண்ணுவியோ? இல்லை பிரேக்கப் பண்ணிட்டு உங்க அக்கா மாமா பார்க்கறவரனை கட்டிப்பியோ. எதுனாலும் போன் பண்ணி சொல்லு. நான் கிளம்பறேன்.” என்று தோள் பையை எடுத்து தோளில் போட்டு எழுந்தாள்.

“கார்த்தி.. ப்ளீஸ்… ப்ளீஸ் கார்த்தி. கூடயிருடி. நீயிருந்தா ஏதோவொரு கர்ட்டன்ஸிக்காவது டீசன்டா பேசுவான்.” என்று கமலி மீண்டும் கையை பிடிக்க, “நிஜமாவே டைம் ஆச்சு கமலி. ஏசி பஸ்ல டிக்கெட் எடுத்தாச்சு. எனக்காக அவன் வெயிட் பண்ண மாட்டான். புரிஞ்சுக்கோ கமலி.” என்றதும் கமலி கையை விடுவித்தாள்.

“அப்பறம் போன் பண்ணு. எத்தனை மணிக்கு விஷ்ணு வந்தாலும் பேசிட்டு தகவல் சொல்லு பை” என்று கட்டியணைத்திட கமலியும் பதிலுக்கு அணைத்து விடுவித்தாள்.

கண்ணை விட்டு மறையும் வரை கமலி கார்த்திகாவை பார்த்தாள்.

அவள் சென்றதும் தன் கையிலிருந்த லைப்பேசியை எடுத்து தொடுத்திரையை நகர்த்தி ‘Vicchu’ என்ற எண்ணிற்கு அழைத்தாள்.

‘என் காதல் உயிர் பிழைத்து
கொண்டது உன்னை பார்த்து
என் வானம் இங்கு விடியுதே…

என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
உன் விரல்கள் எனை தீண்டுமே

கூந்தலே என்னை நீ
தொட்டு போ தொட்டு போ
காதலே என்னை நீ
தொட்டு போ தொட்டு போ

நான் நானில்லை
அவள் என் உயிருக்குள்
ஒரு காதலெனும்
சொல்லுக்குள் வாழ்வேன்.’ என்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல் மிக அருகில் தன்பக்கம் கேட்க கூந்தல் அலைப்பாய திரும்பினாள்.

இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இரண்டு பக்கமும் வேண்டாமென்று யுவனின் இசைக்கு அடிமையானவன் இந்த விஷ்ணு.

‘என்னை நீ பார்க்க வர்றப்ப எப்பவும் ப்ரீ ஹேரோட தான் வரணும். அதுல ஏஞ்சல் மாதிரி இருக்க டி’ என்று கூறி கொஞ்சல் புரிந்து, காதல் செடிக்கு நீர் ஊற்றி வளர்த்த பனைமரம் நின்றிருந்தான்.

எத்தனை நாட்களுக்கு தான் ஆறடி உயரமென்று விளிக்க?

பனைமரம் என்று கூறினாலும் பொருந்தும் இந்த நாயகனுக்கு.

“இங்கயே இருந்துட்டு தான் என்னை காத்திருக்க வச்சியா விஷ்ணு. கார்த்திகா சொன்னது சரி தான்.” என்று பேசி கையை கட்டி திரும்பிக் கொண்டாள்.

“அந்த லூசு போயிடுச்சா… ஓ… மேடம் அவப்போன திசையை தான் கால்கடுக்க, கண் அலைப்பாய பார்த்திங்களோ?

நான் கூட என்னை தான் தேடினியோனு ரசிச்சு பார்த்துட்டு வந்தேன் மடையனாட்டும் உட்கார்” என்று இழுக்க, அவன் மீதே விழும் அளவிற்கு இருந்தாள்.

சுதாரித்து அக்கம் பக்கம் பார்த்து தள்ளி அமர, “எதுக்கு வெயிட் பண்ணற? நான் தான் என்னோட முடிவை அப்பவே சொல்லிட்டேனே. இவ்ளோ நேரம் இங்க இருக்கணுமா? நீயும் போயிருக்க வேண்டியது தானே” என்று எதிரே நீரூற்று பார்த்து பேசினான்.

இதுவொரு பழக்கம் விஷ்ணுவிற்கு. சண்டையில்லாமல் பேசுவதாக இருந்தால் கமலி வதனத்தை இமைக்காமல் பார்த்து பேசுவான். இதே சண்டை என்றால் எங்கயாவது பார்த்து பேசுவான். இதிலே கமலி அறிந்துக்கொள்ள வேண்டும் அவன் கோபத்தின் அளவை.

அடிக்கடி பார்த்து கோபமும் இருந்தால் அந்த சண்டை சமாதானத்திற்கு செல்லும் என்றும் அறிவாள். இன்று எப்படியோ?

“ஆக்சுவலி நீ பேசியதுக்கு நான் கோபமா இருக்கணும். ஆனா நீ கோபமா இருக்க.” என்றதும், பச் என்று சலிப்படைந்தான்.

“நான் இன்னிக்கு போனா இதோட எப்ப வருவேன்னு தெரியாது. இனி பேசறதா இருந்தா போன் காண்டெக் தான். கடைசியா நேர்ல பேச ஆசைப்பட்டேன்.” என்றதும் விஷ்ணு ‘ஹாஹா’ என்று சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” என்று அவன் புஜத்தை பிடித்து திருப்ப, “கடைசியா… முடிவே பண்ணிட்ட போல” என்று அவள் பிடித்த கையை உதறினான்.

“கடைசியா என்றால் நேர்ல பேசறதை தானே சொல்லறேன் விஷ்ணு. காலேஜ் முடியுது. நீ தப்பா நினைச்சா நான் பொறுப்பில்லை. எப்ப பாரு எது பேசினாலும் தப்பு கண்டுபிடிக்கிற” என்று போனை எடுத்து கார்த்திகாவுக்கு “vishnu vanthutar pesitu irukom. Nee bus eritiya?” என்று அனுப்பினாள்.

விஷ்ணு ‘டொக்டொக்டொக்’ என்று சத்தம் கேட்கவும் திரும்பியவன் அவள் கார்த்திகாவுக்கு குறுஞ்செய்தி அனுப்ப கண்டு, “இங்க பாரு… என்னோட பேச வந்தா எனக்கு இம்பார்டன்ஸ் கொடுக்கணும். என்னை வச்சிட்டு ‘டொக்டொக்டொக்’னு தட்டிட்டு இருந்த எந்திரிச்சு கிளம்பிடுவேன்.” என்று குரல் உயர்த்தினான் விஷ்ணு.

விஷ்ணுவிற்கு மெதுவாக பேசவே வராது. பேசினால் ‘கணீரெ’ன்று மேடை பேச்சு போல அழுத்தம் திருத்தமாய் துள்ளியமாய் கேட்கும். சாதாரணமாகவே அப்படியென்றால் சண்டையில் ‘ஹைபிச்’ ‘டிடிஎஸ்’ சத்தம் உண்டு.
காதல் மொழி பேசும் போது மட்டும் மெல்லிசை மன்னனாக கமுக்கமாய் பேசிக்கொள்வான்.

இன்று சண்டை என்பதால் சத்தம் கூடவும் பக்கத்திலிருந்த ஆட்கள் திரும்பி பார்த்தார்கள்.

“ஏன் மானத்தை வாங்கற? மெதுவா பேசு” என்று அடக்க முயன்றாள்.

“இங்கபாருடி… என்ன எதுக்கு கூப்பிட்ட? சொல்லு… உனக்கு என்ன பதில் வேண்டுமோ அதை சொல்லிட்டு கிளம்பிட்டே இருக்கேன்” என்று எரிந்து விழுந்தான். எதுக்கு கூப்பிட்டால்?77 என்ன பதில் வேண்டுமென்றே தெரிந்து கேட்பவனை கடித்து வைக்க தோன்றியது.

ஆனாலும் பொறுமையாக “எதுக்கு கூப்பிட்டேன்னு தெரியாதா விஷ்ணு?” என்று அவன் தாடைப்பிடித்து கேட்டாள்.

அவள் கையை எடுத்து விட்டு, “லுக் நான் இன்னமும் படிப்பை முடிக்கலை. தயவு செய்து இப்பவே கல்யாணம் பண்ணுனு டார்ச்சர் பண்ணாத.

ஏற்கனவே இரண்டு காலேஜ்ல டி.சி கொடுத்து இரண்டு வருஷம் வேஸ்ட் ஆகிடுச்சுனு அப்பா புலம்பறார்.

இந்த முறை இந்த வருஷத்தை கம்பீளிட் பண்ணிட்டு கல்யாணத்தை பத்தி பேசினா தான் வீட்ல பெட்டரா இருக்கும். படிப்பை முடிக்காம போய் நின்றேன். எங்கப்பா இளங்கோ என்னை வச்சி ஒரு சிலப்பதிகாரத்தையே எழுதிடுவார்.” என்று பேசவும், விம்மினாள்.

கண்ணீர் துளிகள் கன்னத்தில் இறங்க, “மாமா அக்காவுக்கு என்னை படிக்க வைக்க முடிஞ்சது. இப்ப கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா ஒரு கடமை முடியும். இப்ப சென்னைக்கு போனா, அடுத்த இரண்டு வாரத்துல பொண்ணு பார்க்க வர்றதா சொல்லிருக்காங்க.

நீ எனக்கு சப்போர்டா ஏதாவது பேசி நல்ல பதிலா சொன்னா தானே நான் அக்காவிடம் பேச முடியும். இப்படி காதலை பத்தி பேசாத. இப்ப கல்யாணம் பண்ணற ஐடியா எனக்கில்லைனு சொன்னா என்ன அர்த்தம். வெறும் டைம் பாஸ் பண்ண தான் என்னை இந்த இரண்டு வருடமா லவ் பண்ணினியா?” என்று கமலி கேட்டதும் விஷ்ணு கழுத்து நரம்புகள் புடைத்தது.

“ஆமாடி.. டைம் பாஸ் பண்ணி என்ன பண்ணிட்டேன். மிஞ்சி மிஞ்சி இந்த இரண்டு வருஷத்துல கிஸ்ஸாடிச்சிருக்கேன் கட்டிப்பிடிச்சிருக்கேன். என்னவோ…” என்றவன் பேச்சிற்கு தடையிட்டான்.

“சோ… என்னை தந்திருந்தா யோசித்திருப்ப அப்படி தானே?” என்று கூறும் போதே அழுதாள்.

“இந்த ம..ருக்கு தான் வரலைனு சொன்னேன்.” என்று எழுந்தான்.

“போன்ல தான் காலை கட் பண்ணிடறியே” என்று கோபித்து அவளும் எழுந்தாள்.

“நான் தெளிவா சொல்லிட்டேன். நீ பி.டி.எஸ் படிச்சிருக்க, நான் எம்பி.ஏ செகண்ட் இயர். இதுல பி.பி.ஏ படிக்கிறப்ப காலேஜ்ல பிராப்ளமாகி இரண்டு வருஷம் டி.சி வாங்கிட்டு வீட்லயிருந்தேன்.

இந்த காலேஜ்ல கூட அம்மாவுக்கு தெரிந்தவங்க என்றதால ஏதோ சேர்த்துக்கிட்டாங்க. இப்ப எம்.பி.ஏவும் பாதில வச்சிட்டு உங்க அக்கா மாமாவிடம் எந்த முகத்தை வச்சி வருவேன்.
இந்த வருஷம் வெயிட் பண்ணு. நான் படிப்பை முடிச்சி ஒரு வேலையில சேர்ந்துட்டு அப்பா அம்மாவிடம் சொல்லி பொண்ணு கேட்க வர்றேன்.

அப்படி முடியாதுனா நீ இரண்டு வாரத்துல பொண்ணு பார்க்க வர்றவனையே கட்டிக்கோ. ஆல் த பெஸ்ட்” என்று கைகுலுக்கி வாழ்த்தி விட்டு வேகமாய் நடந்தான்
அவன் தன் கைகளை பிடித்து வாழ்த்து குலுக்கி நடக்கவும் திகைத்தவள், “நீ என்னை அவ்வளவு தான் காதலிக்கறியா விஷ்ணு? நம்ம காதல் அவ்ளோ தானா?” என்று கேட்க திரும்பியவன்.

“நீ என்னை அவ்ளோ தான் நம்பற கமலி. அப்படின்னா அவ்ளோ தான்” என்று மீண்டும் வாசல் பக்கம் நடந்தான்.

பேசி பேசியே பிருந்தாவனம் வாசல் வரை வந்துவிட்டார்கள்.

“என் மனசை உடைச்சிட்டு போற விஷ்ணு” என்று உரைக்க, தன் பைக்கை உதைத்து, “நீ காதலையே பிரேக்கப் பண்ணி உடைச்சிட்ட” என்று வண்டியை முறுக்கி கொண்டு சென்றான்.

மின்னல் வேகத்தில் வண்டியில் சென்றவனை எண்ணி அழுதவள் ஒரு முடிவோடு இனி நானும் முறுக்கிட்டு போறேன் விஷ்ணு. நீ தேடி வரும் போது நான் ரொம்ப தொலைவுக்கு போயிருப்பேன்’ என்று மனதில் கூறி எதிர்திசையில் நடையிட்டாள்.

இரு துருவங்கள் வெவ்வேறு திசையில் தங்களை செலுத்திக்கொண்டது. ஆனால் எதிரெதிர் திசைகள் ஒன்றை ஒன்றை ஈர்க்கும் வல்லமை நிகழாமல் போகுமா?

-தொடரும்
மேக்னட் காதல் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
0
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்