

மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் காலை ஒன்பது மணியளவில் பெங்களூர் ராதிகா பேலஸ் ஹோட்டலுக்கு தன்னுடைய இசைக் குழுவினருடன் வந்திருந்தாள் அர்ச்சனா.
அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் அன்று பன்னாட்டுச் சுழற் சங்கத்தின் (Rotary Club) சார்பாக நிகழ்ச்சியொன்று ஏற்பாடாகியிருந்தது.
அந்நிகழ்ச்சியில் பாடுவதற்கு இந்த இசைக் குழுவினரை அந்தச் சங்கத்தின் உறுப்பினர்களே ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் அர்ச்சனாவின் வருகையை அறியாதிருந்த அர்ஜூன் இவளைப் பார்த்ததும் இன்ப அதிர்வுக்குள்ளானான்.
அன்று சண்டையிட்டுப் பேசி அர்ச்சனா அவனின் எண்ணை பிளாக் செய்த பிறகு இருவரும் இந்த மூன்று மாதங்களில் பேசிக் கொள்ளவேயில்லை.
அன்று காலை அவள் அவ்வாறு பேசி ப்ளாக் செய்த பிறகு அவளிடம் எப்படியேனும் தனது மனத்திலுள்ளதை கூறிவிட வேண்டுமென எண்ணிய அர்ஜூன், மாலையில் புதியதாக ஓர் அலைபேசி எண்ணை வாங்கி அதிலிருந்து அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான்.
“அச்சுமா நீ நல்லா இருக்கனும். சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுற நண்பனா தான் உன் வாழ்க்கைல நான் இருக்க விரும்புறேன். உனக்கு என்ன குறைச்சல்? இது வரைக்கும் கல்யாணத்தையே உன் வாழ்க்கைல பார்க்காத நீ எதுக்கு எனக்கு இரண்டாம் தாரமா வாக்கப்படனும்? உன்னை மாதிரியே இது வரைக்கும் யாரையும் கல்யாணம் செஞ்சிக்காதவனா உன்னை நல்லா பார்த்துக்கிற நல்லவனா பார்த்து கட்டிக்கோடா. அது தான் என்னோட ஆசை! நான் வேண்டாம் உனக்கு” என்று அனுப்பியிருந்தான் அர்ஜூன்.
அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அத்தனை கோபம் வந்தது அவளுக்கு.
‘இவரைக் கட்டிக்கச் சொல்லிக் கேட்டா எவனையாவது கட்டிக்கோனு எப்படி மெசெஜ் செஞ்சிருக்காரு. இனியும் இவர்கிட்ட பேசிப் புரிய வைக்க முடியாது. இதுக்கு வேற ஏதாவது வழியைத் தான் கண்டுபிடிக்கனும். அது வரைக்கும் இவர்கிட்டப் பேசவே கூடாது. பேசாம இருந்தா தான் அவர் மனசுல நான் இருக்கிறதைப் புரிஞ்சிப்பாரு’ என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டவள் அடுத்து வந்த நாள்களில் வேண்டுமென்றே அவனிடம் பேசுவதை முற்றிலுமாய் நிறுத்தியிருந்தாள்.
அர்ச்சனாவிடம் பேசாமல் அர்ஜூனின் மனம் தவித்துப் போனது. நண்பர்களாய் தொடர்ந்து வாழ்வில் பயணிப்போம் என்று அவன் அன்றாடம் அவளுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி வலியுறுத்த, ஒரு வாரம் பொறுத்திருந்து பார்த்தவள் அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்த புதிய எண்ணையும் பிளாக் செய்து விட்டாள்.
அதன் பிறகு அவளைத் தொடர்பு கொள்ள அவன் முயலவில்லை ஆனால் முற்றிலுமாய் சோர்ந்து போனான். இத்தனை நாள்களாய் அவன் வாழ்வின் உயிர்ப்பாய் இருந்தவள் அவனை விட்டு ஒதுங்கிப் போனதில் பெரும் வேதனைக் கொண்டான்.
இந்த மூன்று மாதங்களில் வாழ்வின் மீது பிடிப்பற்று அனைத்தின் மீதும் வெறுப்புற்று வாழ்வதையே பாரமாய் உணரும் நிலைக்கு அவன் மனம் சென்றிருந்தது.
ஏதோ வேலை செய்கிறோம், ஏதோ சாப்பிடுகிறோம், ஏதோ வாழ்கிறோம் என்ற விரக்தி நிலையில் இருந்தான்.
அவளை நேரில் சந்தித்துப் பேசி சமாதானம் செய்ய நினைத்தவன் பலமுறை ஜீவா மூலம் அவள் பணிபுரியும் ராகா இசைக் குழுவினரின் இசைக் கச்சேரியை தங்களது ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யச் சொன்னான்.
இரண்டு முறை இவர்கள் ஹோட்டலில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு இந்த இசைக்குழுவினர் வந்த போதிலும் அவர்களுடன் அர்ச்சனா வரவில்லை. அர்ச்சனாவுக்குப் பதிலாக வேறொரு பாடகி தான் வந்திருந்தாள். வேண்டுமென்றே இவனைத் தவிக்க விடுவதற்காகவே வராது தவிர்த்தாள் அர்ச்சனா.
இப்படியே நாள்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று அவள் வருவாள் என்று முற்றிலும் எதிர்பாராத நேரத்தில், தனது அறையிலிருந்த வரவேற்பறைக் காணொளியின் மூலம் அவள் வந்திருப்பதைப் பார்த்தவனின் நெஞ்சம் பூரித்து அகமும் முகமும் மலர்ந்து போக, “அச்சுமா” என்றவனாய் காணொளியில் இருந்த அவளின் முகத்தையே ஆசையுடன் விழியகலாது பார்த்திருந்தான் அர்ஜூன்.
அவளை நேரில் காண மனம் உந்தித் தள்ள, படபடத்த மனத்துடன் இருக்கையில் இருந்து எழுந்தவன் விறுவிறுவென வரவேற்பறைக்கு ஓடோடிச் சென்றான்.
தன்னைக் கண்டதும் முகம் மலர்ந்து போவாள் என்றெண்ணியவனாய் ஆவலுடன் வரவேற்பறைக்குச் சென்று அவன் நிற்க, அவன் வந்ததை உணர்ந்தும் அவனை நிமிர்ந்தும் பாராமல் அந்த வரவேற்பறையில் இருந்த வேறொரு புதிய மேலாளரிடம் சென்றவள் அவனிடம் சிரித்த முகமாய் பேசி இவனை வெறுப்பேற்றினாள்.
அந்தப் புதிய மேலாளரிடம் பேசினாலும் குளிர்க்கண்ணாடி அணிந்திருந்த அர்ச்சனாவின் பார்வை அர்ஜூனைத் தான் அளவிட்டிருந்தது.
‘ஏன் இப்படி இளைச்சிப் போய் இருக்காரு? ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா? நான் மொத தடவைப் பார்க்கும் போது அவர் கண்ணுல வலி தான் தெரிஞ்சிது. ஆனா இப்போ அந்தக் கண்ணுல உயிரே இல்லையே’ என்று யோசித்தவாறு பேசிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அவள் தன்னைக் கண்டு கொள்ளாததைக் கூட பெரியதாகப் பொருட்படுத்தவில்லை அர்ஜூன். ஆனால் அவள் ஏன் அந்தப் புதிய மேலாளரிடம் சென்று பேசுகிறாள் என்று நெற்றிச் சுருங்க அவர்களையே பார்த்திருந்த அர்ஜூன், “ஜீவா” என்று அந்த இடமே அதிரச் சத்தமாய் அழைத்தான்.
அவளின் கவனத்தைத் தன்னை நோக்கித் திருப்புவதற்காகவே அவ்வாறு கத்தினான்.
ஒரு நொடி அங்கிருந்த அனைவரும் அவனின் சத்தத்தில் திடுக்கிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தனர்.
அப்போதும் அர்ச்சனா அவனைப் பார்க்காது தலையைச் சுழற்றியவளாய் நின்றிருப்பதைப் பார்த்து முகம் கோபத்தில் சிவக்க நின்றிருந்த அர்ஜூனிடம் வந்த ஜீவா, “யெஸ் சார்! கூப்பிட்டீங்களா?” எனக் கேட்டான்.
“நம்ம புக் செஞ்ச கெஸ்ட் வந்தா நாம தானே கவனிச்சிக்கனும் ஜீவா. எங்கே போனீங்க? மொதல்ல ஆர்க்கெஸ்ட்ரா ஆள்கள் எல்லாருக்கும் குடிக்க ஏதாவது கொடுத்து அவங்க இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்க” அதட்டலாய் உரைத்தான்.
“சரிங்க சார்” பணிவுடன் உரைத்த ஜீவா, அந்தக் குழுவின் தலைவன் சுபாஷிடம் சென்று பேசி அனைவரையும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
அர்ச்சனா அந்தப் புதிய மேலாளரிடம் சிரித்த முகமாய் விடைப்பெற்று ஜீவாவுடன் செல்வதை இடுங்கிய கண்களுடன் பார்த்திருந்தவன், ‘எதுக்கு இவ கண்ட கேடுக்கெட்ட பயகிட்டலாம் சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருக்கா’ உள்ளுக்குள் பொருமியிருந்தான்.
தனது அறைக்குச் சென்றவனாய் இருக்கையில் அமர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நடப்பதை இங்குக் காணொளி வாயிலாக பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனின் பார்வை அர்ச்சனாவையே வட்டமிட்டது.
சில நொடிகளில் அந்தப் புதிய மேலாளர் அர்ச்சனாவைத் தேடி அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கே சென்று பேசிக் கொண்டிருப்பதை இங்கு அமர்ந்து பார்த்திருந்தவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேற, ஜீவாவின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்தான்.
“என்ன ஜீவா நடக்குது அங்கே? அந்த ரஞ்சித் ராஸ்கல் எதுக்கு அர்ச்சனாவைத் தேடித் தேடிப் போய் பேசிக்கிட்டு இருக்கான். அவனைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியும்ல. நம்மளை நம்பி வர்ற பொண்ணுங்களோட சேப்டியை பார்த்துக்க வேண்டியது நம்மளோட பொறுப்பு தானே ஜீவா. மொதல்ல அவனை அங்கிருந்து டிஸ்போஸ் செய்யுங்க” என்று கடுங் கோபத்துடன் கூறினான்.
பெரிய ஐந்து நட்சத்திர உணவகத்தில் பல்வேறு நிலைகளில் நிறைய மேலாளர்கள் இருப்பார்கள். அவ்வாறு அங்கிருக்கும் தங்கும் விடுதியின் மேலாளராக ரஞ்சித் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் நியமிக்கப்பட்டிருந்தான். சென்னையைச் சேர்ந்த அவனுக்கு பெங்களூரில் உடனே தங்குவதற்கு வீடு கிடைக்காது போக, ரஞ்சித் இரண்டு நாள்கள் அர்ஜூனுடன் அவனது வீட்டில் தான் தங்கியிருந்தான்.
ரஞ்சித் அர்ஜூனுடன் தங்கியிருந்த இரண்டு நாள்களிலேயே, “இங்கே கால் கேர்ள்ஸ் வேணும்னா எப்டி? பப்புக்குத் தான் போகனுமா?” என்று நேரடியாகவே அர்ஜூனிடம் கேட்டு அவனது முறைப்பையும் அருவருப்பான பார்வையையும் கண்டு வாயை மூடிக் கொண்டான்.
அந்த இரண்டு நாள்களிலேயே ரஞ்சித்திற்கு பல பெண்களுடன் நட்பைத் தாண்டிய உறவு இருப்பதை தெரிந்து கொண்டான் அர்ஜூன். அதை ரஞ்சித் வெளிப்படையாகவே கூறியும் இருந்தான்.
“சார் அர்ச்சனா தான் ரஞ்சித்தை அவங்கப் பாடுறதைக் கேட்க வரச் சொன்னாங்க சார். நானே பார்த்தேன். அவங்க இரண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் போல சார். நான் எப்டி போய் ரஞ்சித் சார்கிட்ட இங்கே வராதீங்கனு சொல்ல முடியும் சார்” என்றான் ஜீவா.
“சரி ஜீவா! நான் அங்கே வரேன்” என்றவனாய் இணைப்பைத் துண்டித்தவனுக்குக் குழப்பமாக இருந்தது.
“என்னது அர்ச்சனா கூப்பிட்டு பேசினாளா? இவன் இங்கே ஜாயின் செஞ்சே இரண்டு மாசம் தானே ஆகுது. அதுக்கு முன்னாடியே இவன் அர்ச்சனாக்கு பழக்கமா? இப்படிப் பொறுக்கிக் கூடலாமா ஃப்ரண்ட்ஷிப் வச்சிப்பா இவ” என்று கோபமாய் சிந்தித்தவாறு அர்ஜூன் அங்குப் போன போது இசைக் கச்சேரி தொடங்கி இருந்தது.
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு
இன்னும் தெளியல
அந்த ரஞ்சித்தைப் பார்த்து மயக்கும் குரலில் இவள் இப்பாடலைப் பாடுவதைக் கேட்டு நெருப்பின் மேல் நிற்பது போன்று உடம்பெல்லாம் எரிவதைப் போன்று உணர்ந்தான் அர்ஜூன்.
‘எனக்காகப் பாடின பாட்டைக் கண்டவனுக்குப் போய் இவ எப்படி பாடலாம்’ அவள் கையிலிருக்கும் மைக்கை பிடுங்கி எரியுமளவுக்கு ஆத்திரம் வந்தது அவனுக்கு.
அர்ஜூனைத் துளியும் கண்டு கொள்ளாது ரஞ்சித்தை மட்டுமே பார்த்தவளாய் முழுப் பாடலையும் பாடி முடித்திருந்தாள் அர்ச்சனா.
அர்ஜூனின் நெஞ்சில் கத்தியால் குத்தியது போன்ற வலியை உணர்ந்தவன் அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல், விறுவிறுவென தனது அறைக்கு வந்து தலையைப் பிடித்தவாறு அமர்ந்து விட்டான்.
அதன் பிறகு முழு நிகழ்வையும் காணொளியில் பார்த்திருந்த அர்ஜூனுக்கு நெஞ்சம் கொதித்துப் போனது.
அந்த இசைக் கச்சேரி முடிந்து அர்ச்சனா ரஞ்சித்திடம் பேசி விடைப்பெற்று செல்வது வரை காணொளியில் பார்த்திருந்தவன் உடலெல்லாம் கோபத்தில் கனென்றிருந்தது.
அந்த கோபத்துடனேயே அன்று வேறொரு புதிய கைப்பேசி எண்ணை வாங்கிய அர்ஜூன், இரவு ஒன்பதரை மணிக்கு அர்ச்சனாவின் எண்ணிற்கு அழைத்தான்.
அர்ச்சனா அழைப்பை எடுத்ததும், “அச்சுமா நான் அர்ஜூன் பேசுறேன்?” அழுத்தமான குரலில் உரைத்தான்.
“எந்த அர்ஜூன்?” என்று கேள்வியாய் கேட்டவள்,
“எனக்கு அர்ஜூனு யாரையும் தெரியாது” என்றவளாய் இணைப்பைத் துண்டித்தாள் அர்ச்சனா.
மீண்டுமாய் அவளுக்கு அழைத்தவன் அவள் பேச இடமளிக்காது, “அச்சுமா நீ என் மேல கோபமா இருக்கிறது புரியுது. ஆனா நான் சொல்றதை கேளு. அந்த ரஞ்சித் நல்லவன் இல்ல. அவனை நம்பாத! உனக்கு ஃப்ரண்ட்டு பிடிக்க ஆளே கிடைக்கலையா? அவன் தான் கிடைச்சானா?” எரிச்சல் குரலில் கேட்டான் அர்ஜூன்.
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல. நீங்க தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டீங்கல. அப்புறம் நான் யாரை ஃப்ரண்டு பிடிச்சா உங்களுக்கு என்ன? இல்ல கல்யாணம் செஞ்சிக்கிட்டா தான் உங்களுக்கு என்ன? நான் ரஞ்சித்தை கல்யாணம் செஞ்சிக்கப் போறேன். நீங்க தானே மொத தாரமா பார்த்து கல்யாணம் செஞ்சிக்க சொன்னீங்க. ரஞ்சித் இன்னும் சிங்கிள்லா தான் இருக்காரு. உங்களை மாதிரி அவருக்கு ஒன்னும் கல்யாணம் ஆகி டிவோர்ஸ்லாம் ஆகலை. அதனால ரஞ்சித்தை கல்யாணம் செய்யலாம்னு நான் முடிவு செஞ்சிட்டேன். இனி இப்படி கால் செஞ்சி டிஸ்டர்ப் செய்யாதீங்க” என்றவளாய் இணைப்பைத் துண்டித்திருந்தாள் அர்ச்சனா.
அர்ச்சனாவின் பேச்சில், ‘என்னது ரஞ்சித்தைக் கல்யாணம் செய்யப் போறாளா?’ என்று அதிர்ந்து போய் நின்று விட்டான் அர்ஜூன்.

