
ரஞ்சித்தை அவள் திருமணம் செய்து கொள்ளப் போவதைக் கேட்டு அதிர்ந்து போனான் அர்ஜூன்.
அவளுக்குத் திருமணம் செய்து கொள்ள இந்தக் கேடு கெட்டவன் தான் கிடைத்தானா என்று மனம் குமுறிக் கொண்டு வர, மீண்டுமாய் அவளுக்கு அழைத்தான் அர்ஜூன்.
அவள் அழைப்பை ஏற்றதும், “அச்சுமா! ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளுடா அச்சுமா” என்றவன் தொடங்க,
“என்ன வேணும் உங்களுக்கு? எதுக்காக என்னை இப்படி டார்ச்சர் செஞ்சிட்டு இருக்கீங்க?” என்று கோபத்துடன் கத்தினாள் அர்ச்சனா.
‘என்னது நான் டார்ச்சர் பண்றேனா?’ திகைத்துப்போய் வாய்க்குள் முனகியவன்,
அவளின் டார்ச்சர் என்ற வார்த்தையில் சினம் கொண்டவனாய், “யாரைப் பார்த்துடி டார்ச்சர் செய்றேன்னு சொன்ன? நானா உன்கிட்ட வந்து பேசினேன். நீ தானே என்னைத் தேடித் தேடி வந்து பேசின! இப்பவும் உனக்காகத் தானே பேச முயற்சி செஞ்சேன். என்னமோ பொண்ணுங்க பின்னாடி சுத்துற பொறுக்கிப் பையன் மாதிரி டார்ச்சர் செய்றேன்னு சொல்ற! நீ எக்கேடும் கெட்டுப் போ! எனக்கென்ன வந்துச்சு! இனி நானா உன்கிட்ட வந்து பேசவே மாட்டேன். போடி” என்றவனாய் அழைப்பைத் துண்டித்தான் அர்ஜூன்.
நெஞ்சமெல்லாம் காந்தியது அவனுக்கு.
‘என்ன வார்த்தைச் சொல்லி விட்டாள்! அவளின் வாழ்க்கைக் கெட்டுப் போய் விடக் கூடாதே! என்னைப் போல் அவளும் வாழ்வற்று தனி மரமாகி விடக் கூடாதே என்று பதறிக் கொண்டு நான் பேசுவது அவளுக்கு டார்ச்சர் போல் தோன்றுகிறதா? இனி நானாகச் சென்று அவளிடம் பேசவே மாட்டேன்’ தனக்குள்ளேயே புலம்பியவனாய் படுத்துக் கொண்டான் அர்ஜூன்.
அர்ஜூன் இணைப்பைத் துண்டித்ததும் பதறித் தான் போனாள் அர்ச்சனா.
‘அய்யய்யோ இனி பேசாம போய்டுவாரோ’ பதைப்பதைத்தது அவளின் நெஞ்சம்.
‘போன் செய்வோமா?’ என்று யோசனையுடன் கைப்பேசியையே பார்த்தவாறு அமந்தவளின் மூளையோ, இப்பொழுது நீயாகச் சென்று பேசினால், அவன் இறங்கி வந்து உன்னை மணம் புரிந்து கொள்ள மாட்டான் என்று அறிவுறுத்த, ‘இல்ல பேசாம இருக்கிறது தான் நல்லது’ என்று எண்ணியவளாய் கவலையுடன் படுத்துக் கொண்டாள்.
அலைப்புற்றுக் கிடந்த இருவரின் கண்களும் வெகு நேரம் கழித்தே உறக்கத்தில் ஆழ்ந்தன.
மறுநாள் காலை ஏழே முக்கால் அளவில் கண் விழித்த அர்ச்சனா, ‘அய்யோ இவ்வளோ நேரமாவா தூங்கிட்டோம்’ என்று அலறியடித்து எழும்பிய போது, அறைக்கு வெளியே வரவேற்பறையில் கேட்டப் பேச்சுக் குரலில் அறைக்கு வெளியே சென்று பார்த்தாள்.
அறையின் வாசலுக்குச் சென்றவள் வரவேற்பறையில் அவளின் தந்தையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவனைக் கண்டு திகைத்தவளாய், ‘அய்யோ அர்ஜூன் இங்கே என்ன செய்றாரு? இவரு எதுக்கு வந்திருக்காரு?’ மனத்தினுள் நினைத்தவாறு அதிர்ந்து நின்றாள்.
ஆனால் அவளின் மறு மனமோ தன்னிடம் பேச மாட்டேன் எனக் கூறி விட்டு மறுநாளே தன்னைத் தேடி வந்து விட்டானே என்று நினைத்துக் குதூகலித்தது.
மகளின் அரவத்தில் அவள் அறையின் வாசலைப் பார்த்த கோவிந்தராஜன், “எழுந்துட்டியாமா? இங்கே வா மா” என்று அழைத்தார்.
அர்ஜூனின் பார்வை அவள் மீது படர்ந்தது.
கலைந்த தலையும், உறங்கிக் கலைந்த முகமும் வீங்கிய கண்களுமாய் இரவு உடையான காட்டன் பேண்ட்டும் சட்டையும் அணிந்திருந்தவளின் உறக்கம் கலைந்த நலுங்கிய தோற்றத்தைக் கண்டவன் அவளின் மீதான கோபத்தையும் மறந்தவனாய் புன்னகைத்தான்.
அவனின் முன்பு இப்படிச் சென்று நிற்கிறோமே என்ற எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை மாறாக அவளின் உள்ளம் மத்தளமாய்ப் படபடத்திருக்க சோஃபாவில் அமர்ந்திருந்த தந்தையின் அருகே சென்று அமர்ந்தாள் அர்ச்சனா.
மகளின் கலைந்த கூந்தலைச் சீர் செய்து ஒதுக்கி விட்டவராய், ‘யாருமா அது ரஞ்சித்?’ என்று கேட்டார் கோவிந்தராஜன்.
இதைக் கேட்டதும் இவளின் நெஞ்சம் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் துடிக்க, ‘அய்யய்யோ இந்த அறிவுக்கெட்ட அஜூ எல்லாத்தையும் அப்பாகிட்ட சொல்லிட்டாரா? இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது?’ படபடத்துப் போனாள் அர்ச்சனா.
“சொல்லு அச்சுமா! ரஞ்சித்னு யாரையோ நீ கல்யாணம் செஞ்சிக்கப் போறியாம்? அவன் நல்ல பையன் இல்லையாம்! அதை சொல்லி உன் கல்யாணத்தை நிறுத்த தான் அர்ஜூன் இங்கே வந்திருக்காரு” என்றார் கோவிந்தராஜன்.
இவளுக்கு அர்ஜூனின் மண்டையிலேயே நறுக் நறுக்கென கொட்ட வேண்டும் போல் ஆத்திரம் வந்தது.
அர்ஜூனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
‘அடிப்பாவி பொய்யா சொன்ன! நான் வேற இதை நம்பி காலைலயே இங்கே வந்து நிக்கிறேனே. என்னை என்னனு நினைச்சிருப்பாங்க அவளோட அப்பாவும் அம்மாவும்’ என்று மனத்தோடு நினைத்தவனாய் சங்கோஜத்துடன் கோவிந்தராஜனைப் பார்த்தான்.
அச்சமயம் சமையலறையிலிருந்து வெளியே வந்த மல்லிகா, “யாருடி அது ரஞ்சித்து? எதுவும் புது லவ்வா? இந்த அர்ஜூனை தானே லவ் பண்றதா சொல்லிட்டு இருந்த? இந்தப் பையன் உன் லவ்வை ரிஜக்ட் பண்ணதும் வேற ஆளைத் தேடிப் போய்ட்டியாடி? அப்புறம் என்னடி அது ட்ரூ லவ்வு? அந்தக் காலத்துல லவ் பண்றவரைத் தான் கட்டிப்பேன்னு அப்பா அம்மா சொந்தக்காரங்ககிட்ட அடி மிதி வாங்கிட்டு பொண்ணுங்க போராடி செஞ்ச கல்யாணம்லாம் நான் பார்த்திருக்கேன்டி. ஆனா இந்தக் காலத்துல வீட்டுல வேண்டாம்னு சொல்லிட்டா, எப்படித் தான் குரங்கு மரத்துக்கு மரம் தாவுற மாதிரி உடனே லவ் பண்ற ஆளை மாத்துறீங்களோ! எனக்கு மண்டையே வலிக்குது! இந்தக் காலத்துப் பொண்ணுங்க மாதிரி இல்லாம லவ் பண்றவனைத் தான் கட்டிப்பேன்னு என் பொண்ணு அடமா இருப்பானு நினைச்சேனே! நீயெல்லாம் என்னடி பொண்ணு” ஆத்திரமும் ஆங்காரமுமாய் அர்ச்சனாவைத் திட்டினார்.
தாயின் திட்டல் மொழியில் கண்களில் மின்னல் வெட்ட, “ம்மாஅஅஅ” என்று பூரிப்புடன் அழைத்தவளாய் தாயின் அருகே சென்றவள், “அப்ப நான் அர்ஜூனையே இன்னும் ட்ரூவா லவ் பண்றேன்னு சொன்னா என்னைக் கட்டி வச்சிடுவியாமா” என்று ஆவலுடன் கேட்டாள்.
‘என்னடா நடக்குது இங்கே?’ என்பது போல் தாயையும் மகளையும் பார்த்திருந்தான் அர்ஜூன்.
அர்ச்சனாவை முறைத்த மல்லிகா, “மொதல்ல அந்த ரஞ்சித் யாருனு சொல்லுடி” என்றார்.
தாயின் கேள்வியில் அர்ச்சனா சிரித்தவளாய், “ரஞ்சித் என்னோட கான்சர்ட் ஒன்னுல தான் என்னை மீட் பண்ணாருமா. எனக்கு பிரபோஸ் செஞ்சாரு. நான் வேற ஒருத்தரை லவ் பண்றதா சொல்லி அவர் பிரபோசலை ரிஜக்ட் செஞ்சிட்டேன். சரி ஃப்ரண்ட்ஸ்ஸா இருப்போம்னு சொன்னாரு. ஃப்ரண்ட்டா தான்மா அவர்கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்றாள் அர்ச்சனா.
‘ப்ளடி ராஸ்கல்! எவ்ளோ தைரியம் இருந்தா என் அச்சுமாகிட்ட போய் பிரபோஸ் செஞ்சிருப்பான். அவனை’ என்று பல்லைக் கடித்தவனாய் மனத்தோடு ரஞ்சித்தைக் திட்டிக் கொண்ட அர்ஜூன்,
கோபத்துடன் அர்ச்சனாவைப் பார்த்து, “நீ ஃப்ரண்ட்டாவும் அவன்கிட்ட ஒன்னும் பேசத் தேவையில்ல அச்சுமா. அவன் நல்லவன் கிடையாது. அவனுக்கு நிறைய தப்பான பொண்ணுங்க பழக்கம்லாம் இருக்கு. ஜஸ்ட் கீப் ஹிம் அவே ஃப்ரம் யுவர் லைஃப்” என்றான்.
அர்ஜூனைக் கோபமாய் பார்த்த அர்ச்சனா, “அதை நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்லை. நான் யார்க் கிட்ட பேசனும் பேசக் கூடாதுனு எனக்குத் தெரியும்” என்றவளாய் உதட்டைச் சுழித்தவள் தந்தையின் அருகே சென்று,
“அப்பா நான் அர்ஜூனை மேரேஜ் செஞ்சிக்கச் சொல்லிக் கேட்டேன்ப்பா. ரெண்டாந்தாரமா நீ ஏன் எனக்கு வாழ்க்கைப்படனும். மொத தாரமாவே யாரையாவது கல்யாணம் செஞ்சிக்கோனு சொன்னாருப்பா. அதான் ரஞ்சித் மாதிரி கெட்டவனை மொத தாரமா கட்டிக்கிறதுக்கு அவரைப் போல நல்லவரை இரண்டாம் தாரமா கட்டிக்கிறது பெட்டர்னு அவருக்கு புரிய வைக்க தான் இப்படிப் பொய் சொன்னேன்ப்பா” என்றாள்.
‘ஓ இந்த அர்ஜூன் பையன் என் பொண்ணோட லவ்வை ரிஜக்ட் செஞ்சதுக்கு இது தான் காரணமா?’ அர்ஜூனை மெச்சுதலுடன் பார்த்திருந்தார் மல்லிகா.
மகளின் கூற்றில் வாய் விட்டுச் சிரித்த கோவிந்தராஜன், “பாவம்மா அர்ஜூன்! உன் வாழ்க்கை பாழாகிடக் கூடாதுனு காலைலயே தூங்காம கொள்ளாம வந்திருக்காரு” என்றவராய் அர்ஜூனைப் பார்த்தவர்,
“என் பொண்ணு சொன்ன பொய்க்காக நான் சாரி கேட்டுக்கிறேன் அர்ஜூன்” என்றார்.
“அய்யோ சார் நீங்க ஏன் சாரிலாம் கேட்டுக்கிட்டு” என்று பதறி அவன் கூறவும்,
அவனைக் கனிவுடன் பார்த்த மல்லிகா, “இவ்வளோ நல்ல பிள்ளையா இருக்கியேப்பா! அப்புறம் ஏன் உனக்கு டிவோர்ஸ் ஆச்சு?” எனக் கேட்டார்.
மெல்ல தயங்கியவனாய் அவரின் முகம் பார்த்தவன்,
“சாரிமா. அதை நான் வெளிப்படையா வெளியே சொல்ல முடியாது. அதுல என்னோட பர்சனல் மட்டும் இல்லாம இன்னொரு பொண்ணோட பர்சனலும் அடங்கி இருக்குமா” என்றான்.
இந்தப் பதிலில் மல்லிகாவின் மனத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தான் அர்ஜூன்.
“ஆனா அர்ஜூன், உங்களோட முதல் வாழ்க்கையைப் பத்தி தெரியாம நாங்க எப்படி எங்க பொண்ணை உங்களுக்கு கட்டி வைக்க முடியும் சொல்லுங்க” என்று கேட்டார் கோவிந்தராஜன்.
‘என்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கப் பார்த்தியா?’ என்பது போல் அர்ச்சனாவை முறைத்துப் பார்த்த அர்ஜூன்,
“எனக்கு எப்பவுமே அர்ச்சனாவைக் கல்யாணம் செஞ்சிக்கிற எண்ணம் இருந்ததே இல்லை சார். வாழ்நாள் முழுமைக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட்டா அவளுக்கு நான் இருக்கனும்னு தான் ஆசைப்படுறேன். உங்கப் பொண்ணுக்கு வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்க” என்றவனாய் எழுந்தவன் அனைவரிடமும் தலையசைப்புடன் விடைப்பெற்றான்.
மீண்டும் எதிர்பார்த்து ஏமாந்து போன மனத்தின் வலியில் கண்ணீர் கண்களுடன் செல்லும் அவனையே பார்த்திருந்தாள் அர்ச்சனா.
பெருமூச்சுடன் கண்களைத் துடைத்தவளாய் தந்தையின் புறம் திரும்பியவள், “அப்பா இந்த ஜென்மத்துல எனக்கு புருஷன்னா அது அர்ஜூன் மட்டும் தான். அவரோட அப்பா அம்மாகிட்ட நீங்க பேசுங்கப்பா. அவரை ஒத்துக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்புப்பா” என்றவளாய் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் அர்ச்சனா.
“எப்படிப் பேசிட்டுப் போறா பாருங்க! நம்மளோட சம்மதம் பத்திலாம் அவளுக்குக் கவலையே இல்ல! எல்லாம் உங்களைச் சொல்லனும். செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கீங்க” ஆதங்கத்துடன் உரைத்தார் மல்லிகா.
மனைவியின் பேச்சில் சிரித்தவராய், “அவளோட வாழ்க்கையை அவ தீர்மானிக்கிறதுல தப்பில்லையே மல்லி! அவளே அவளுக்காக இன்டிபென்டென்ட்டா முடிவு எடுக்கிற தெளிவோட தானே அவளை நாம வளர்த்திருக்கோம். அவளோட செலக்ஷன் தவறா இருந்தா நாம எடுத்துச் சொல்லலாம். ஆனா எனக்கு சரியா தான் தோணுது. அர்ஜூனைப் பார்த்த பிறகு உனக்கு என்ன தோணுது மல்லி?” எனக் கேட்டார்.
“நல்ல குணமான பையனா தான் தோணுதுங்க. டிவோர்ஸ் செஞ்சப் பிறகும் அந்தப் பொண்ணைப் பத்தி தவறா சொல்லக் கூடாதுனு நினைக்கிற பையனைப் பார்க்கிறதே இந்தக் காலத்துல அபூர்வம் தானே! அச்சுமா சொல்ற மாதிரி ரஞ்சித் மாதிரி கெட்ட பையனை மொத தாரமா பார்க்கிறதுக்கு ரெண்டாம் தாரம்னாலும் அர்ஜூன் மாதிரி நல்லவனைக் கட்டி வைக்கலாம். இருந்தாலும் பையனோட ஒரிஜினல் கேரக்டரே இது தானா! இல்ல நம்மகிட்ட நல்லவன் மாதிரி நடிக்கிறானானு சந்தேகம் வருது. அவனோட வீட்டு பக்கம் நல்லா விசாரிங்க. அவனோட மொத கல்யாணம் பத்தி முழுசா விசாரிச்சு சொல்லுங்க. அதுல சின்னதா நெருடல் இருந்தாலும் இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்றார் மல்லிகா.
“கண்டிப்பா மல்லி. முழுசா விசாரிச்சிட்டு தான் புரோசீட் பண்ணுவேன்” என்றவர் சொன்னதும்,
“சீக்கிரம் விசாரிங்க. விட்டா உங்க பொண்ணு அதுக்குள்ள பிள்ளைய பெத்துட்டு வந்து நிப்பா போல இருக்கு. என்ன சொன்னாலும் கேட்காம அவன் பின்னாடியே சுத்திட்டு இருக்கா” என்று புலம்பியவராய் சமையலறைக்குள் புகுந்தார் மல்லிகா.
தீவிரச் சிந்தனையுடன் அடுத்து செய்ய வேண்டியவைகளைத் திட்டமிட்டவராய் வேலைக்குக் கிளம்பிச் சென்றார் கோவிந்தராஜன்.
அறைக்குள் சென்ற அர்ச்சனாவோ அடுத்து அர்ஜூனை எப்படி தன் பக்கம் திருப்பலாம் என்று திட்டம் தீட்டியவள் அன்று இரவு பெங்களூரில் அர்ஜூன் தங்கி இருக்கும் அவனது சிறிய வீட்டிற்குச் சென்று நின்றாள்.

