
சின்னதாகக் கோலமிட்டு, அதில் மண் அடுப்பை நிறுத்தி, குச்சிகளை உள்ளே திணித்துப் பற்றவைத்து, அதன் மேலே பால் சட்டியை ஏற்றிப் பாலை ஊற்றித் தீயை நன்கு எரியவிட்டு, பால் நல்லபடியாகப் பொங்கி வரக் காத்துக்கொண்டிருந்தாள் ஜனனி.
இன்றுதான் இளநந்தன் தான் வாங்கிய வீட்டிற்குப் கிரகப்பிரவேசம் வைத்திருந்தான். நீலகண்டனை அழைத்துக் கொண்டு பதிவு அலுவலகம் சென்றவன், மீதிப் பணத்தைக் கொடுத்து அந்த வீட்டை முழுதாகத் தன்னுடையதாக்கிக் கொண்டான். அன்றிரவே அதைக் கொண்டாட அவனே அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றான். விபு, ஜோவியையும் கூட அழைத்திருக்க, அவர்களும் வந்துவிட்டார்கள்.
பெரியவர்கள் இருவர், ஜனனி, சச்சின், நந்தன், ஜோவிகா, விபு என ஒரு குடும்பமாக உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சச்சினுக்கு அது புதிதாக இருந்தது. இதுபோன்று அவன் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டதில்லை. அதுவும் அங்கே கார், கப்பல், ரயில் போல வடிவமைக்கப்பட்ட இடங்களில் குடும்பமாக அமர்ந்து சாப்பிடுவது அவனுக்குப் பிடித்திருந்தது. ஓடி விளையாடிய அவனோடு நந்தனும் சேர்ந்து விளையாடினான்.
அதை வெறித்தவண்ணம் பார்த்திருந்தாள் ஜனனி. உணவு வரத் தாமதமானதால், காத்திருக்கும் நேரத்தில் சச்சின் விளையாடச் செல்ல, அவனைப் பார்த்துக்கொள்ளப் பின்னே சென்றான் நந்து. அதைப் பார்த்தவாறு ஜனனியின் அருகே வந்த விபு, “அவனோட ஒட்டிக்கிட்டான் போல! இப்பதான் புரியுது, அவனோட கஷ்டமான டாஸ்க் நீ மட்டும்தான். சித்தப்பா சித்தியெல்லாம் மேட்டரே இல்லை, டீல் பண்ணிடுவான்… இதோ சச்சின் கூடவும் ஜெல்லாகிட்டான். இனி யாரு இருக்கா?” என்றான்.
“அந்தக் கஷ்டமான டாஸ்க் நான் இருக்கேனே! எந்தத் தைரியத்துல இவன் இருக்கான்னு தெரியல! ஆனா அவன் எண்ணம் நடக்காது! முடிஞ்சா அவனுக்குப் புரிய வை,” என்றாள் ஜனனி.
“ஏன் நடக்காது? அவன் இன்டென்ஷன் கெட்டதா இல்லாதபோது, நடந்தா தப்பில்லை ஜானு.”
“அப்போ எனக்கெல்லாம் இன்டென்ஷன் இருக்காதா? அதெல்லாம் நடக்கக்கூடாதா? அவனோட எண்ணம் மட்டும்தான் நடக்கணுமா?” என அவள் கொந்தளிக்க, “ஏய் ரிலாக்ஸ் ஜானு! ஏன் பொங்குற? உன் எண்ணம் தவறில்லை… ஆனா அர்த்தமற்றது. சச்சினுக்காக மட்டும் வாழ்வேன்னு சொல்ல நீ ஒன்றும் கிழவி இல்லை. எனக்குத் தெரியும், சச்சினை நினைச்சுதான் நீ இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிற! ஆனா சச்சினை மகனா ஏத்துக்கிறேன்னு அவன் சொல்லும்போது உனக்கு என்ன பிரச்சனை?”
“அப்படி ஒன்றும் பெருமிதமா என் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டாம் அவன்… அவனுக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி, அவன் பிள்ளைக்கு அப்பனா இருக்கச் சொல்லு. என் பிள்ளைக்கு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை…” என்று தன் முடிவில் தீவிரமாக இருந்தாள்.
“உன் வீம்பால அவனோட வாழ்க்கையையும் சேர்த்து அழிக்கிற நீ,” என்று விபு சொல்லிவிட, அவளுக்கு முணுக்கெனக் கோபத்துடன் கண்ணீர் வந்துவிட்டது. “என்ன… நான் அவன் வாழ்க்கையை அழிக்கிறேனா? நானா என்னையே நினைச்சுட்டு இருக்கச் சொன்னேன்? ஏன் ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டியதுதானே? நான் பிடிச்சு வச்சிருக்கிறது போலப் பேசுற!”
“அப்படி இல்லை… ஏதோ ஒரு பொண்ணைக் கட்டி வாழ்றது இல்லை வாழ்க்கை. பிடிச்சவளைப் போராடி கல்யாணம் பண்ணிக்கிறதுதான் வாழ்க்கை.”
“சரி, இந்த உலகத்துல வேற பொண்ணே இல்லையா? நான் மட்டும்தான் இருக்கேனா?”
“என்ன சொல்ல! ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கும், பிடித்ததை எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குல்ல ஜானு!”
“இப்போ என்ன… மறுபடியும் நான் மணவறையில் உட்கார்ந்து மூணாவதா ஒரு தாலி வாங்கிக்கணுமா! முதல்ல என் அப்பா, இப்போ நீ! என் மனசைப் புரிஞ்சுக்க நீ ஒருத்தனாவது இருக்கன்னு நினைச்சேன். ஆனா நீ கூட உன் தோழனுக்கு மட்டும்தான் யோசிக்கிற! அவன் வாழ்க்கை அழியுதேன்ற எண்ணம் மட்டும்தான் இருக்கு. எனக்கு யாரு இருக்கா? மத்தவங்களுக்காக என்னைக் கட்டாயப்படுத்துற சூழ்நிலை மட்டும் மாறவே மாறாதுல்ல!” என விபுவைப் பார்த்துக் கேட்டாள். அவனோ பதில் பேசாமல் வாயை மூடிக்கொண்டான்.
அதற்குள் உணவு வந்துவிட்டதாக ஜோவி அழைக்க, அவள் கண்ணைத் துடைத்துக்கொண்டு செல்ல, இவனும் பின்தொடர்ந்தான். பெண்கள் ஒரு பக்கமும் ஆண்கள் ஒரு பக்கமும் அமர்ந்து சாப்பிட்டனர். சச்சினைத் தன்னோடு அழைக்க, அவனோ நந்துவோடு நின்றுகொள்வதாகச் சொல்லி அவனோடு இருக்க, இவளுக்கு நந்துவின் மீதும் விபுவின் மீதும் கோபமாக வந்தது. அவர்களை முறைத்துவிட்டுப் பேருக்குக் கொறித்தாள். உணவுப் பருக்கை அவளுக்குள் ஊசியாய் இறங்க, அதை விழுங்குவது சிரமமாக இருந்தது.
அதனைக் கண்டுகொண்டாலும் அவனால் கேட்க முடியவில்லை. இவளும் சச்சினைப் பார்ப்பது போல நந்துவைத் தான் கண்டாள். அவனும் சரியாகச் சாப்பிடவில்லை… பேருக்குத்தான் சாப்பிட்டான். ஆனால் சச்சினை நன்றாகக் கவனித்துக்கொண்டான். மனம் உள்ளுக்குள் பிசைந்தது. ஒருவனின் வாழ்க்கையைச் சீராக்கத் துபாயிலிருந்து அவனை வரவழைத்து, இப்படிச் சீரழிக்கப்படுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முரண்டு பிடிக்கும் மூளையும், குழப்பத்தின் பிடியிலிருக்கும் மனதும் அவளை ஒரு முடிவெடுக்க விடாமல் சோதித்துக்கொண்டிருந்தன.
அவள் எதிர்பார்த்த வாழ்க்கை நந்துவின் மூலமாகக் நிச்சயம் கிடைக்கும். அவனோடு இதுவரை கிடைக்காத அன்பு, அரவணைப்பு, காதல் என மொத்தமாக வாரி இறைக்க அவனால் முடியும். ஆனால் அவளது மூளை முரணாக யோசிக்கிறது; மற்றவர்களின் வாய் பேச்சை எண்ணிப் பின்வாங்கியது. மாமனார், மாமியார் குறித்தும் பயம்தான். ஆனால் அவர்கள் அவளது திருமணத்திற்குத் தடையாக இருக்கப்போவதில்லை. அவர்களது எண்ணம் கூட அவள் ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். தெளிவாகச் சொன்னால், அவளுக்கே அவள் எதிரியாகத்தான் இருக்கிறாள்.
அழகான மலைமுகடுகளை மேகக்கூட்டங்கள் மறைத்து அதன் அழகைக் காண விடாமல் செய்வது போலத்தான், நந்துவோடு ஒரு அழகான எதிர்காலத்தை மறைத்தபடி இருக்கிறது அவளது குழப்பங்கள்! அதை அவளைத் தவிர யார் தீர்க்க நினைத்தாலும் அவள் மனது ஏற்க மறுக்கிறது. அதற்கு நந்து மட்டுமே விதிவிலக்காக இருப்பானா? என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
விபு, ஜோவி கிளம்பிவிட, இவர்கள் கார் பிடித்து வீட்டிற்கு வந்துவிட்டார்கள். சச்சின் வரும் வழியிலேயே நந்துவின் தோளில் தூங்கிவிட்டான். அறை வாயிலில் அவனை வாங்க முற்பட, அவனோ வீம்பாக உள்ளே சென்று சச்சினைப் படுக்க வைத்துவிட்டு, அவளைப் பாராமல் வெளியே சென்றுவிட்டான்.
அவன் ஒழுங்காகச் சாப்பிடாத குற்றவுணர்வு தூங்க விடாமல் செய்ய, அவனுக்குப் பாலாவது காய்ச்சிக் கொடுக்கலாம் என்று ஜனனி வெளியே வந்தாள். அதே நேரம் அவனும் வெளியே வந்தான். இருவரும் ஏறிட்டுப் பார்த்தனர். சற்றுத் தயங்கிவிட்டுச் சமையலறை நோக்கி நடந்தனர். உள்ளே இருவரும் சேர்ந்து செல்ல முடியாததால், ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளத் தயங்கி விலகி நின்றனர். அந்த விலகல் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், கையைப் பிடித்ததற்கே அவளது பதற்றமும் எச்சரிக்கையும் நினைவில் வர, தன்னைத் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றான்.
அவன் விலகி அவளுக்கு வழியை விட்டுவிட்டுப் போய் அமர்ந்துகொண்டான். அவன் விலகல் சுருக்கென இதயத்தில் வலிக்க, இதேபோலத் தானே அன்று அவனுக்கும் இருந்திருக்கும் என உணர்ந்தாளோ என்னவோ! உள்ளே சென்று பால் காய்ச்சி எடுத்து வந்து அவன் முன்னே இருந்த மேஜையில் வைத்தாள். அவன் விழிகளை நிமிர்த்திப் பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்தாள்.
வேகமாக எழுந்தவன் மீண்டும் சமையலறைக்குள் சென்றான். ‘என்ன ரொம்பப் பண்றான்… இவனுக்காக நான் பால் காய்ச்சி எடுத்து வந்தா குடிக்க மாட்டானாமாம்… பெரிய ரோசக்காரன் தான்’ என்று முணுமுணுத்துவிட்டு அவள் அறை நோக்கிச் செல்ல, கையில் கொண்டு வந்த பால் குடுவையை மேஜையில் வைத்துவிட்டு, அவள் வைத்த பாலை எடுத்து அவன் குடிக்க, இப்போது அவள் இதழ்களில் சிறு புன்னகை. அவள் அவனுக்காக வைத்த பாலை எடுத்துப் பருகினாள்.
பாதம், முந்திரி, நாட்டுச் சர்க்கரை போட்டுத் தித்திப்பாக இருந்தது அவன் காய்ச்சி வைத்த பால். அவளுக்குத் தெரியாமல் அவனும் அவளுக்காகப் பால் காய்ச்சியிருந்தான். இருவரும் குடித்து முடித்திருந்தனர். அவளது குடுவையை வாங்கிக்கொண்டு அவனே கழுவி வைத்துவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டான். இவளும் மனச் சஞ்சலத்தோடு கண்களை மூடினாள்.
மறுநாள் வழக்கம் போல விடிந்தது. கிரகப்பிரவேசத்திற்கு ஐயர் எழுதிக் கொடுத்த சாமான்களை வாங்கி வைத்தான் நந்து. விபுவை அழைத்துக்கொண்டு குடும்பத்தார் அனைவருக்கும் உடை எடுத்துக் கொடுத்தான்.
“எதுக்குடா இதெல்லாம்?” என நீலகண்டன் கேட்டதற்கு, “இதுவரைக்கும் எனக்குன்னு குடும்பம் இல்லை பெரியப்பா! இப்போதான் எனக்குக் குடும்பம் இருக்கே! எனக்குச் செய்யணும்னு ஆசை, தடுக்காதீங்க,” என்றான்.
சச்சினுக்கும் தனக்கும் ஒன்றாக உடை எடுத்தவன், யாரும் சந்தேகிக்கக் கூடாது என்று அதில் விபுவையும் சேர்த்துக்கொண்டான். ஜோவிகாவுக்கும் ஜனனிக்கும் ஒன்றாக எடுத்திருந்தான். ஜனனி தயக்கத்துடன் வாங்கிக்கொண்டாள்.
கிரகப்பிரவேச நாள் வர, கணபதி ஹோமம் வளர்க்க, அதன் முன் தம்பதியாக வள்ளி – நீலகண்டனை அமரச் சொல்ல, அவர்களது கண்கள் கலங்கிப் போயின. அவர்களுடன் நந்து அமர்ந்தான். சச்சின் அவனது மடியில் அமர்ந்தான். இருவருக்கும் சேர்த்து மாலை போட்டுக்கொண்டான் நந்து. ஜனனி சச்சினை அழைக்க, நந்து பார்த்த பார்வையில் அடங்கிப் போனாள்.
ஐயர் மந்திரங்களைச் சொல்லி ஹோமம் வளர்க்க, சச்சினைப் புகை பாதிக்காதபடி பார்த்துக்கொண்டான் நந்து. அங்கிருந்த பெரியவர்கள் இதைப் ஆச்சரியமாகப் பார்த்தனர். அனைத்தும் முடிய, ஐயரிடம் அனைவரும் ஆசி வாங்கினார்கள். பின் பாலைக் காய்ச்சச் சொல்ல, முதலில் தயங்கிய ஜனனியை விழிகளால் மிரட்டிச் செய்ய வைத்தான் நந்து. கிழக்குப் பக்கம் பொங்கி வழிந்தது பால்.
பூஜை அறையில் தீப ஆராதனை காட்டி முடித்த பின், அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். “ஜனனி அக்கா தான் பெஸ்ட் குக்னு நினைச்சேன், நீங்க அதுக்கும் மேல இருக்கீங்க நந்து மாமா! என்ன கைப்பக்குவம்! பேசாம குக்கிங் கிளாஸ் ஆரம்பிங்க,” என்று ஜோவி சொல்ல, “ஆமா ஆமா… அவன் செஞ்சு காட்டுறதைச் சாப்பிடத்தான் நீ கிளாஸ் ஆரம்பிக்கச் சொல்ற,” என விபு அவளை வாரினான்.
“தேவையாடா உனக்கு இது! ஜோவிம்மா, உனக்கு என்ன வேணும்னு போன் பண்ணிச் சொல்லு, மாமா அடுத்த நிமிஷமே செஞ்சு அனுப்பி வைக்கிறேன்,” என்றான் நந்து.
“கடைசி வரைக்கும் இவளைச் சமையல்கட்டுப் பக்கம் அனுப்பறதா இல்லை… அப்படித்தானே?” என்று விபு கேட்க, “ஏன், நீதான் தைரியமான ஆளாச்சே! அனுப்பித்தான் பாரேன்,” என ஜனனி சொல்ல, “உசுரு முக்கியம் பிகிலு,” என விபு கலாய்க்க, அங்கே சிரிப்பொலி நிறைந்திருந்தது.
அந்த வேளை மகிழ்ச்சியாக இருந்தது… அவர் வரும் வரையில்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
+1

