Loading

அத்தியாயம் – 3

“அன்புள்ள என்னவனுக்கு…

உன் இதழ் எழுதுவது…

இதுவும் சற்று சுகமாகத்தான் இருக்கிறது. உன் முகம் அறிந்ததில்லை, உன் பெயர் தெரிந்ததில்லை, உன் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை. ஆனால், அறியாத தெரியாத உணராத உந்தன் மீது அனுதினமும் மாறாமல் ஊற்றெடுக்கிறது காதல் எனும் அருவி. திருமணக் கனவு தோன்றவில்லை, திருமணத்திற்கு பிறகான உந்தன் உறவு எப்படி இருக்குமெனத்தான் கனவுக் காண தோன்றுகிறது. என்னை ஏனடா இப்படி இம்சிக்கிறாய், நேரில் வராமல்.? காத்துக்கொண்டிருக்கிறேன் உன் இதழ் மோதும் நேரத்திற்காக. உந்தன் இதழ்.”

எழுதி முடித்ததும் வெட்கப் புன்னகை இதழின் ஓரத்தில் இதழிற்கு. கண்ணை மூடி இந்த நொடியை ஆழ்ந்து உணர்ந்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளின் அறைக் கதவு தட்டப்பட, “ப்ச், நிம்மதியா ரொமான்ஸ் மூட்-அ என்ஜாய் பண்ணக் கூட விட மாட்டிக்குறாங்க.” என்று புலம்பியவாறே கதவைத் திறந்தாள். கதவைத் திறந்தவுடன், “சர்ப்ரைஸ்” என்று இதழினியின் தந்தையும் தாயும் வந்து நின்றனர்.

ஒரு நிமிடம் அதிர்ச்சிதான் என்றாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாதவள், “என்ன, ரெண்டு பேரும் நாளைக்கு வரேன்னுதான சொன்னீங்க? திடீர்னு வந்து நிக்குறீங்க?” என்று சலிப்புடன் கேட்டாலும் உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி.

“நான்தான் அப்போவே சொன்னேன். சொன்ன மாதிரி போலாம்ங்க. முன்னாடியே போனா உங்க பொண்ணு ஏன் வந்தீங்கன்னு கேட்காம கேட்பான்னு. கேட்டாளா? பதில் சொல்லுங்க.” என்று தன் முகவாயை தோளில் இடித்துவிட்டு சென்றார் இதழின் அன்னை இளம்பிறை.

“ஏன் இதழ்.?” என்று அவளின் தந்தை இளமாறன் கேட்க, “பின்ன என்னப்பா, ஜாதகம் பாத்துட்டு என் கூட வாங்கன்னு சொன்னா, ரெண்டு பேரும் இதுதான் சாக்குன்னு என்னை கழட்டிவிட்டுட்டு பாட்டி வீட்டுக்கு போய் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க. இப்போ சர்ப்ரைஸ்ன்னு சொன்னா கடுப்பாகுமா ஆகாதா?” என்று கேட்டாலும் அவளின் உலகமே அவளின் அன்னை தந்தைதான். அவர்களின் சண்டைகளும் சரி, அதற்கு பிறகான சமாதானங்களும் சரி, அவளுக்கு பிடித்தமான ஒன்று.

சரியாக அந்நேரம் விஜயம் செய்தான் பிரவீன். “எரும…” என்று அழைத்தபடியே உள்ளே வந்தவன் ஆணி அடித்தாற்போல் நின்றுவிட்டான்.

‘ஆத்தாடி இந்த முறுக்கு மீசக்காரரு எப்போ வந்தாரு.’ என்று நினைத்தவன், “அப்பா, எப்போ வந்தீங்க? பிறைம்மா எங்க?” என்று கேட்டவனின் உள்ளுக்குள் பயபந்து ஒன்று உருண்டது.

“இதழ்… இவன வீட்டுக்கு வரக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல?” என்று பல்லைக் கடித்தார் இளமாறன்.

என்ன சொல்வதென்று தெரியாமல் இதழ் விழித்துக் கொண்டிருக்க, “அடடே, வாடா பிரவீனு. நாங்க வந்தத அதுக்குள்ள இதழ் சொல்லிட்டாளா?” என்று கையில் குழம்பியோடு வந்தார் இளம்பிறை.

“இல்லம்மா, இன்னைக்கு ஆஃபீஸ் லீவ். அதான் இதழ் கூட வெளில போலாம்னு வந்தேன். நீங்க வந்து இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது. நான் அப்ரோம் வரேன்மா.” என்றபடி அவன் வெளியே செல்ல,

“இப்போதான வந்த? அதுக்குள்ள எங்க போற?” என்றவர், இளமாறனிற்கு கொடுக்க வேண்டிய குழம்பியை பிரவீனிடம் கொடுத்தார். ‘ஆஹா, இப்போ இத குடிச்சா மீசக்காரரு கத்துவாரு. குடிக்கலன்னா அம்மா சங்கடப்படுவாங்க என்ன பன்றது?’ என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, “காஃபிய வச்சிட்டு என்ன யோசிச்சிட்டு இருக்க குடிடா. அப்ரோம் பிரவீனு, இதழுக்கு மாப்பிள்ள பாத்து இருக்கோம்.” என்றிட, குடித்த குழம்பியைத் துப்பி விட்டான் அவன்.

பாவம், அவனும் என்ன செய்வான் திடீரென்று இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டால்?

இதில் பல்லைக் கடித்தது இரண்டு ஜீவன்கள், வேறு யார் இதழும் இதழின் தந்தை இளமாறனும் தான்.

“ம்மா, எனக்கு மாப்பிள்ள பாத்தா அத என்கிட்ட தான் முதல்ல சொல்லணும். இந்த எரும கிட்ட முதல்ல சொல்றீங்க? அதுவும் வந்த உடனே அவனுக்கு என்ன இப்டி ஒரு உபசரிப்பு?” என்று பல்லைக் கடித்திட,

அதற்கு தகுந்தாற்போல் இளமாறனும், “இளா நீ செய்றது கொஞ்சம்கூட சரி இல்ல. இந்த பயல வீட்டுக்குள்ளயே விடக் கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடான்னா அவனுக்கு காஃபி குடுத்து அவன்கிட்ட மாப்பிள்ளயப் பத்தி சொல்லிட்டு இருக்க.?”

“இப்போ ஏன் எண்ணைல போட்ட கடுகு மாதிரி ரெண்டு பேரும் இப்டி வெடிக்குறீங்க? ஏன்ங்க, நமக்கு இதழ் ஒரே பொண்ணு. ஆனா இது வரைக்கும் அவ நம்ம கூட இருந்தத விட இவன் கூட இருந்தது தான் அதிகம். சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் ஃபிரண்டுன்னு தெரிஞ்சும் அந்த ஒரு சின்ன விசயத்துக்காக பிரவீன நீங்க ஒதுக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல.”

பிரவீன்தான் கொடுத்த காஃபியை என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தான். பின் ஒரு முடிவு எடுத்தவனாக, குழம்பியைக் குடித்துக் கொண்டே “விடுங்கமா. மாப்பிள்ள என்ன பன்றாரு?” என்றுக் கேட்டவனின் மனமோ ‘இந்த சாத்தான்கிட்ட எந்த அப்பாவி சிக்கி இருக்கானோ?’ என்று காணாத அந்த ஒருவனுக்கு பாவப்பட்டது.

“இப்போ இது ரொம்ப முக்கியம்? ம்மா, எனக்கு இப்போ பசிக்குது. முதல்ல எனக்கு சாப்பாட்ட போட்டுட்டு நீங்களும் உங்க பையனும் என்னமோ பேசுங்க.” என்று கத்தினாள்.

“அதான், நீ காலைலயே சமச்சி வச்சிட்டல இதழ். போ, நீயும் அப்பாவும் போட்டு சாப்டுங்க. நான் பிரவீன்கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்.” என்றதில் ஏகத்திற்கும் கடுப்பாகினாள் இதழ்.

‘மவனே தனியா சிக்குவதான? உனக்கு இருக்குடி’ என்று மனதில் கறுவியவள், “ப்பா, வாப்பா நாம போலாம். இந்த வீட்ல நமக்கு மரியாதையே இல்ல.” என்று மாறனையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டாள்.

தனது அறையில் சேகுவாராவின் புத்தகத்தை தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தான் இளையா.

அவன் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்த வேளையது. புத்தகத்தில் மூழ்கியிருந்தவனை தேன்மொழியின் அழைப்பு நிகழ்விற்கு கொண்டு வந்தது.

“இளையா, அகிலன் வந்து இருக்கான் பாரு.” என்றிட, ஜெட் வேகத்தில் தன் அறையை விட்டு வெளியே வந்து இருந்தான் இளையபாரதி.

“அம்மா, மழ வருதா பாருங்க.” என்று தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் திகழ்.

“ஏன்டி” என்று தான் தயாரித்த குழம்பியை அகிலனிற்கும் இளையாவிற்கும் கொண்டு வந்தவர் கேட்க,

“இல்ல, இவன் வந்து ரெண்டு நாள் ஆகுது. ஆனா, இவனோட தோஸ்து ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகுது. ஆனா பாருங்களேன், பக்கத்து வீட்டுக்கு வழி கூட இப்போ தான் தெரியுது.” என்று உச் கொட்டினாள் திகழ்.

அவளின் கூற்றில் மனம் வலித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாதவன் “எப்டிடா இருக்க? உன் போட்டோகிராஃபி வொர்க்லாம் எப்டி போகுது?” என்று பேச்சை மாற்றினான்.

தன் நண்பனின் மனநிலையை உணர்ந்தாலும் வெளியே சிரிப்புடனேயே பதிலளித்தான் இளையா. “நல்லா இருக்கேன்டா. நீ எப்டி இருக்க? இந்த டைம் ஒரு இடத்துக்கு போலாம்னு ப்ளான்ல இருக்கேன். என்ன பன்றதுன்னு தெரியல.”

“ஏன் என்ன ஆச்சு? என்னைக்கும் நீ இப்டி இருக்க மாட்டியே?”

“அதுவா… என்ற அண்ணாவுக்கு பொண்ணு பாக்கலாம்னு ஐயனும் அம்மாவும் முடிவு செஞ்சிப்போட்டாக அகிலு.” என்று வாரினாள் திகழ்.

“ஏய் கிழவி போ அந்தப்பக்கம்” என்று திகழைத் துரத்தியவன், “அகிலா உன்கிட்ட பேசணும் வாடா” என்று அவனை இழுத்துக் கொண்டு அகிலனின் வீட்டிற்கு சென்றான் இளையா.

“என்னடா சொல்றா அவ? உனக்கு கல்யாணமா? சொல்லவே இல்ல?”

“எனக்கே நேத்து தான் சொன்னாங்க. போவீயா.” என்று சலித்தபடி அமர்ந்தான். அவன் வந்த உடனேயே ஜாக்கி வந்துவிட்டது.

அன்பாக அவனின் காலை சுற்றியவன் தன் நண்பன் நல்ல மனநிலையில் என்பதை உணர்ந்ததால் என்னவோ அவன் காலருகே அமர்ந்து விட்டான்.

“யாரையாவது லவ் பன்றியாடா?”

“ஆமா இப்போ அதுக்கு ஒன்னு தான் கொறச்சல். ஏன்டா.?”

“அப்போ ஏன் கல்யாணத்துல இஷ்டம் இல்ல உனக்கு?”

“இஷ்டம் இல்ல மீன்ஸ்? இப்போ ஏன்னு தான். வீட்ல திகழ் இருக்கா. அவளுக்கு முடிச்சிட்டு எனக்கு பண்ணலாம்னு சொன்னேன். அதுக்கும் ஜோசியக்காரன் வேட்டு வச்சிட்டான். எனக்கு சடன்னா இந்த ரிலேசன்சிப்குள்ள போக முடியலடா. என்ன முடிவு எடுக்குறதுன்னு தெரியல.” என்று புலம்பினான்.

உண்மைதான். பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிறகு வீட்டில் கேட்கும் பல வார்த்தைகள் அவளின் எதிர்காலத்தைப் பற்றியும் நீ இன்னொரு வீட்டிற்கு செல்லப் போகிறவள் என்பதை மறைமுகமாக உணர்த்தியபடியுமே இருக்கும். ‘பாத்திரம் சரியா வெளக்கு, இல்லன்னா நீ போற இடத்துல என்னைதான் சொல்லுவாங்க.’ என்பதில் ஆரம்பித்து ‘போற இடத்துல பொறந்த வீட்டு மானத்த காப்பாத்து’ என்பது வரையிலும் அவளின் மனதில் ‘எப்டியும் நாம இன்னொரு வீட்டுக்குதான் போகப் போறோம்’ என்ற மனநிலையை பதிய வைத்து விடுகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு?

திருமணம் பேசி முடிவாகிய பின்னரே அந்த பெண்ணைப் பற்றியும் அவனின் எதிர்காலம் பற்றியும் பேச்சுக்கள் காதில் விழுகும். அதுவும், ‘என்கிட்ட காட்டுற வேலையெல்லாம் உனக்குன்னு பொண்டாட்டி வருவா பாரு அவக்கிட்ட காட்ட முடியாது.’ ‘பேசிதான் முடிச்சு இருக்கோம், அதுக்குள்ள அவளுக்கு சப்போர்ட்ட பாரேன்.’ ‘கல்யாணம் ஆகுறதுக்குள்ளயே உன்ன அவ கைக்குள்ள போட்டுக்கிட்டாளா?’ என்ற வரிகள் இல்லாமல் அந்த திருமணம் நடந்தால் ஆச்சர்யம்தான். படிப்பு, படிப்பு முடித்தவுடன் வேலை, வீட்டின் பொறுப்பு இவ்வாறே உருவாகும் ஆண்களுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது, உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதை வசந்தமாக்க ஒருவள் வருவாள் என்று.

“சரிடா, வீட்ல டைம் கேக்கலாம்தானே?”

“கேட்டா லவ்வான்னு ஒரே வார்த்தை கேட்பாங்கடா. இல்லன்னு சொன்னா அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கோன்னு முடிவா சொல்லிடுவாங்க.”

“இப்போ நீ என்னதான் செய்யப்போற.?”

“மச்சி, அதுக்குதான் உன்கிட்ட பொலம்பிக்கிட்டு இருக்கேன். இப்போ நான் என்ன செய்றது.?”

“இளையா, கல்யாணம்லாம் காலாகாலத்துக்கு செய்யணும்டா. எது நடக்குதோ அத அது போக்குல விட்டுடு.”

“காலத்த சரியா பயன்படுத்தாத நீ காலாகாலம்னு பேசாத.” என்று ஒரே வரியில் அவனின் வாயை அடக்கி விட்டான்.

“இன்னும் எத்தன நாளைக்கு நீ அவக்கிட்ட சொல்லாம இருக்கப் போற? பாவம்டா அவ.”

“எத, எப்ப, யார் கிட்ட சொல்லணும்னு எனக்கு தெரியும். நீ அமைதியா இரு. இப்போ உனக்கு பொண்ணு பாத்துட்டாங்களா?”

“ஐ திங்க் பாத்து வச்சி இருப்பாங்க. இல்லன்னா அம்மா இவ்ளோ ஸ்ட்ராங்கா பேச மாட்டாங்க.” என்றான் யோசனையுடன்.

“ஓகே சில் மாப்ள”

இளையாவும் புன்னகையுடனே ஜாக்கியுடன் விளையாட ஆரம்பித்தான்.

“பிரவீனு, நீதான் மாப்பிள்ளைய பத்தி ஃபுல் டீடையில் கலெக்ட் பண்ணிட்டு வந்து சொல்லணும். அப்போ தான் நான் இதழ்கிட்ட தெளிவா பேச முடியும்.” என்று பெரிய இடியைத் தூக்கி அவனின் தலையில் வைத்தார் இளம்பிறை.

“ம்மா, நான் ஐ.டி கம்பெனில வொர்க் பன்றேன். டிடெக்டிவ் கம்பெனில இல்ல” என்றான் அதிர்ச்சியைத் தாங்கியபடி.

“அது எனக்கும் தெரியும். நல்ல டிடெக்டிவ் ஏஜென்ட்டா பாத்து இவங்கள பத்தி டீடையில் வாங்கிட்டு வா. நீயும் கூட இருந்து எல்லாம் பாரு. உன் இதழ்காக செய்யணும்னு நினச்சா செய். அப்ரோம் உன் இஷ்டம்” என்றபடி எழுந்து சென்றுவிட்டார் இளம்பிறை.

வெளியே சென்ற இளமாறனும் இதழினியும் நன்றாக உணவருந்திவிட்டு ஒரு பூங்காவினுள் அமர்ந்து இருந்தனர்.

“மாறாப்பா, பிறை என்னமோ சொல்லுது? என்ன விசயம்?”

“இதழ்மா, அப்பா உனக்கு தெரியாம எதுவும் செய்ய மாட்டேன்னு உனக்கு நல்லா தெரியும்தானே? உன் அம்மா தான் ஏதோ பன்றா. ஆனா சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது.” என்று அவளின் நாடியைப் பிடித்து கொஞ்சினார்.

“சரி பொழச்சிப் போங்க. இன்னும் பிரவீன் மேல ஏன் இந்த கோபம். சின்ன வயசுல ஏதோ தெரியாம பண்ணிட்டான். பாவம், இப்போ அவன் உங்க செல்ல பொண்ணோட பெஸ்ட் பிரண்டு வேற. மன்னிச்சிடலாமே.!”

“எல்லாத்துக்கும் ஒரு காலம் வரும் இதழ்மா. அந்த பயல பத்தி என்கிட்ட பேசாத. அப்ரோம் அப்பாக்கு மைன்ட் அப்சட் ஆகிடும். எல்லாம் அவன் அப்பன சொல்லணும்.” என்று கடைசி வார்த்தையை முணுமுணுப்பாக முடித்தார் இளமாறன்.

“அவன் அப்பா உங்க பிரெண்ட்டுன்னு கேள்விப்பட்டதா நியாபகம்”

“ஏய், வாலு! உனக்கு பாம்பு காது.”

“பாம்புக்கு காது இல்ல மிஸ்டர் இளமாறன்.” என்று அவள் சிரிக்காமல் சொல்ல,

“இத மட்டும் மிஸ்ஸஸ் இளமாறன் கேட்டா உங்க ரெண்டு பேர் கதியும் அவ்ளோ தான்” என்றபடி அங்கு வந்த மனிதரைக் கண்டு இளமாறன் மட்டுமல்ல இதழும் அதிர்ச்சி அடைந்தாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்