
“ஹே பப்ளிமாஸ் எந்த கடையில அரிசி வாங்கற நீ? சுத்தமா என்னால உன்னை வச்சு மிதிக்க முடியல” என்று காட்டமாக கேட்டான்.
“என் பேர் பிங்கி. எதுக்கு இப்படி சொல்றீங்க? நான் அப்புறம் அம்மாகிட்ட சொல்லுவேன்” என்று அவனை மிரட்ட.,
“அடிங்க, நீ எந்த ஊர் மங்கியா வேணும்னா இருந்துட்டு போ. இப்போ நீ ஹிந்தி கிளாஸ் போகலைன்னு யார் அழுதா? எவ்ளோ வேலை இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு உனக்காக டிரைவர் வேலை பார்க்கனும்ன்னு என் தலையெழுத்து” என்று கடுகடுத்தான். அவனுக்குள் மட்டும், அவனுக்காக காத்திருக்கும் ஸ்வேதாவைச் சந்திக்கும் நொடிகள் இழையால் தள்ளி செல்கிறதே என்ற ஆதங்கம்.
“உங்களுக்கு முடியாதுன்னா அம்மாகிட்ட சொல்ல வேண்டியதுதானே, எதுக்கு என்னை டீஸ் பண்றீங்க” என்ற இழை. பார்கவியின் கவனிப்பில் சிறுவயது முதலே பூசணி போன்ற உடல்வாகு கொண்டவள். வகுப்பிலும் சிலர் அவளை குண்டூஸ், மோட்டி என்று பல பட்டப்பெயர்களில் அழைப்பார்கள். ஆனால் ஏனோ வசீ கேட்டதை மட்டும் தாங்க முடியாமல் அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ஏய், இப்போ என்ன சொல்லிட்டேன்னு அழற? அழுமூஞ்சி! முதல்ல கண்ணை துடை. இல்ல இங்கயே இறக்கி விட்டுட்டு போயிடுவேன் பார்த்துக்கோ” என்றதும் அவள் அழுகை இன்னுமே அதிகரித்தது.
“ப்ச், சொன்னா கேட்க மாட்டியா? வாயை மூடு” என்று வேகத்தை அதிகரித்தான். அவனுக்குள் சீக்கிரமாவது இவளை ஹிந்தி வகுப்பில் சேர்த்துவிட்டு ஸ்வேதாவைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம்.
“ஒழுங்கா என்னை பிடிச்சிட்டு உட்கார், இல்ல விழுந்துடுவ” என்ற அவன் எச்சரிக்கையை காதில் வாங்காமல், இழை தன் போக்கில் அமர்ந்திருந்தாள். மிதிவண்டி வேகமாக சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாடு துவண்டு, அவன் பின்னே இருந்த இழை கீழே விழுந்தாள்.
விழுந்த வேகத்தில் கூர்மையான கல் அவள் தாடையை பதம் பார்த்தது. மறுநொடி ரத்தம் வேகமாக வெளியேறியது. “சொன்னா கேட்டியா? இப்போ பார்” என்று வசீ தன் கர்சீப்பை எடுத்து தண்ணீரில் நனைத்து ரத்தம் வெளியேறாதபடி அழுத்திப் பிடித்தான்.
“இப்படியே பிடி. இங்க பக்கத்துல ஹாஸ்பிட்டல். போயிடலாம்” என்று சொல்லி, அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பார்கவிக்கும் திருவிற்கும் தகவல் அளித்தான்.
அபியும் நாயகியும் பெண்கள் கூட்டத்தில் இழையைத் தேடிக்கொண்டிருக்க, அவர் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது., “நீங்க… நீ.. நீ.. அம்மூ தானே?”
“ஆமா! நீங்க?” என்றதுமே பாய்ந்து அவரை இறுக அணைத்துக் கொண்ட பார்கவி, “அம்மூ நான் தான் கவி பார்கவிடி! எப்… எப்படிடி இருக்க?” என்றார்.
பல வருடங்கள் கழித்து தோழியை சந்திக்கும் மகிழ்ச்சியில் வார்த்தைகள் வாராமலே நின்றுவிட்டார்.
“ஏய் உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு… ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போதும் உன்னை தேடுவேன். ஏன்டி வேற ஊருக்கு போனவ எனக்கு எந்த தகவலும் சொல்லலை” என்று உரிமை மிகுந்த கோபத்துடன் கேட்டார்.
அருகே இருந்த அபியிடம், “நீயாவது தகவல் சொல்லமாட்டியாடி” என்று அதட்டினார்.
ஒரு நொடி திகைப்பில் நின்ற அகிலாண்டநாயகி, “ஹே கவி, நீயாடி இது? என்னடி இது, ஆளே டோட்டலா மாறிட்ட. என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியல”
“ஏன் அம்மூ எப்படி மாறிட்டேன்? என்னால உன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சது, உன்னால முடியலையா? அந்தளவுக்கு தான் நான் உன் மனசுல இருக்கேனா? அவ்ளோ சீக்கிரம் என்னை மறந்துட்டல நீ”
“ஹே அப்படி இல்லடி… உன்னை நினைக்காத நாள் இல்லை தெரியுமா. ஆனா முன்னத்துக்கு இப்போ நீ ரொம்ப மெலிஞ்சுட்ட கவி. அதான் மேடையில நின்னுட்டு இருந்த உன்னை பார்த்த பிறகும் என்னால டக்குன்னு கண்டுபிடிக்க முடியல”
“கவிக்கா எப்படி இருக்கீங்க. ஆனா உங்களை பார்த்தா சண்டை போடணும்னு அக்கா காத்துட்டு இருந்தாங்க தெரியுமா” என்று அபி எடுத்துக்கொடுத்தான்.
“சண்டையா? எதுக்கு அபி”
“பின்ன என்னக்கா நீங்க குவைத்ல இருந்தப்போ கொடுத்த நம்பர் மாத்தினதை எங்களுக்கு ஏன் சொல்லாம் விட்டீங்க”
“சரி சரி எவ்ளோ நேரம் இங்கயே நின்னுட்டு இருப்பீங்க, வாங்க உட்கார்ந்து பேசலாம்” என்று கவி அழைத்தாள்.
இழையை மறந்துவிட்டவர்களாய், இருவரும் தோழியோடு அமர்ந்தனர்.
“சொல்லு அம்மூ, என்ன கோபம் என்மேல”
“அண்ணாவோட குவைத் போன நீ எப்போ இந்தியா வந்த? நீ கொடுத்த நம்பர்ல கூப்ட்டா அதுல நீ இல்லன்னு சொல்லிட்டாங்க. ஏன் நம்பர் மாத்தினா எனக்கு சொல்லமாட்டியா? நானும் அபியும் எவ்ளோ நாள் ட்ரை பண்ணி கடைசில விட்டுட்டோம். அட்லீஸ்ட் இந்தியா வந்த பிறகாவது எனக்கு ஒரு தகவல் கொடுத்திருக்கலாமே, ஏன்டி கொடுக்கலை”
“அதை ஏன்டி கேட்கிற… அது ஒரு பெரிய கதை. உனக்கு தான் என் மாமியார் பத்தி தெரியுமே”
“தெரியும், அதனாலதானே அண்ணா உன்னை உங்கம்மா வீட்ல விட்டுட்டு போனார்”
“ஆமாடி… ஆனா குவைத் கூட்டிட்டு போன சில மாசத்துலயே அவங்களுக்கு ஸ்ட்ரோக் வந்துடுச்சு. யாருமே கண்டுக்கலை. அதனால நாங்க உடனே திரும்ப வேண்டியதா போச்சு”
“என்னடி சொல்ற… உன்னோட மச்சினன் யாருமே கண்டுக்கலையா”
“ஆமா அம்மூ… நாங்க தான் அவங்களோட கடைசி காலத்துல பார்த்துக்கிட்டோம். இதுக்கு இடையில பாகபிரிவினை, பூர்வீக சொத்து பிரச்சனை… ஒரு வருஷத்துக்கும் மேல மூச்சுவிட முடியாத அளவுக்கு பிரச்சனை நெருக்கிப்பிடிச்சிட்டு இருந்தது. குவைத்ல இருந்து கிளம்பிக்க வர அவசரத்துல உன்னோட போன் நம்பரை மிஸ் பண்ணிட்டேன். சரி நேர்ல வந்து பார்த்துக்கலாம்ன்னு இருந்தா அதுக்குள்ள இவ்ளோ நடந்துடுச்சு. எங்கயும் அசைய முடியல…”
“ஒருவழியா எல்லாம் தீர்ந்த பிறகு ஊருக்கு வந்து பார்த்தா அங்க நீங்க இல்லை. அக்கம்பக்கம் விசாரிச்சா யாருக்கும் சரியா விவரம் தெரியல. திரு அண்ணாவோட சொந்த ஊருக்கு போயிட்டதா சொன்னாங்க, வேற எந்த தகவலும் கிடைக்கல”
“நானும் ஒவ்வொரு வருஷம் ஊருக்கு வரும்போதும் உங்களை தேடுவேன் தெரியுமா”
“ஆமா கவி, நீ குவைத் கிளம்பின ஒரு வருடத்துக்குள்ள அப்பா தவறிட்டார். உனக்கே தெரியும் நாங்க அங்க இருந்ததே அப்பாக்காக தான். அவர் இல்லன்னு ஆன பிறகு, இனியும் அவரை அங்க இருக்க சொல்றது நியாயமில்லை இல்ல”
“கண்டிப்பா அம்மூ. திரு அண்ணா மாதிரி ஒரு மனுஷனை பார்க்க முடியாது. அவரோட வீட்டை விட்டு, ஊரை விட்டு உனக்காக உங்க வீட்ல வந்து இருக்கிறது என்ன சாதாரண விஷயமா. அதுவும் பசுபதி அண்ணாவும் உங்க அப்பா நிலையை புரிஞ்சிட்டு இவ்ளோ அனுசரணையா யார் இருப்பா”
நாயகியும் பார்கவியும் சிறுவயது முதலே இணைபிரியா தோழிகள் — பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள். நாயகி அபிராமியின் தந்தை நாற்பதுகளின் ஆரம்பத்தில்தான் திருமணம் செய்தவர். அவர் மனைவி அபிராமியை பிரசவத்தின் போது தவறிவிட்டார். இருப் பெண்பிள்ளைகளையும் தம் இரு கண்களாக வளர்த்து ஆளாக்கியவர்.
அவர்களுக்கு திருமணம் என்று வந்தபோது, திருவும் பசுபதியும் மாமனார் வீட்டின் மேல்போர்ஷனில் தங்கினர். ஆனால் திரு மாறலாகிக் கொண்டே இருந்ததில், பசுபதியும் அபிராமியும் முழுப் பொறுப்பையும் ஏற்றிருந்தனர்.
“ஆமா கவி, அதான் அப்பா தவறின பிறகு நாங்க அவரோட சொந்த ஊருக்கு போயிட்டோம். தருமபுரிக்கு வரதே ரொம்ப ரேர். ஆனா ஒவ்வொரு முறையும் அங்க போறப்போலம் உன்னை நினைக்காத நாளில்லை தெரியுமா”
அவர்கள் பேச்சு நீண்டுகொண்டே சென்றது.
திருமணத்தில் வசீயை எதிர்பாராத இழை, “ஒருவழியாக அவனிடமிருந்து தப்பித்தோம், பிழைத்தோம்” என்று ஓடிவந்தவள் ஆஷ்மியின் குரல் காதில் விழாததுபோல, சட்டென மணமகள் அறைக்குள் நுழைந்திருந்தாள்.
வேகமூச்சுக்களுடன் மெத்தையில் அமர்ந்தவளுக்கு இன்னுமே படபடப்பு அடங்கவில்லை. மேஜையில் இருந்த நீரை எடுத்து பருகி தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவள், மனதினுள் பயம் பந்து உருளத் தொடங்கியது.
அவசரமாக கைகளை கூப்பி கண்களை மூடி வேண்டுதல் கொண்டிருந்தவளுக்கு, அறையை விட்டு வெளியே வரும் எண்ணம் சுத்தமாக இல்லை.
“சாரதியும் தம்புவும் க்ளோஸ் பிரெண்ட்ஸ் கவி. அவன் எங்களை குடும்பத்தோடு வரசொல்லி சொல்லிட்டே இருந்தான். நாங்க வந்ததும் நல்லாதா போச்சு. இல்லைன்னா உன்னை இன்னைக்கு பார்த்திருக்கவே முடியாது. ஆனா நீங்க குவைத் போனபிறகு எங்க வீட்ல பிங்கியோட கொலுசு சத்தத்தை எவ்ளோ மிஸ் பண்ணினோம் தெரியுமா?”
“ஆமா பிங்கி எங்க ஆளையே காணோம் கூட்டிட்டு வரலையா. இத்தனை வருஷத்துல நல்லா வளர்ந்திருப்பால, படிப்பும் முடிச்சிருப்பா.”
“ஆமா அம்மூ, படிச்சு முடிச்சு இப்போ வேலை பார்த்துட்டு இருக்கா. இங்கதானே இருந்தா எங்க போனா தெரியல. இரு, நான் அவளை வர சொல்றேன்” என்றவர் மகளுக்கு அழைக்க, உடனே அழைப்பு ஏற்கப்படவில்லை.
“ஏதோ வேலையா இருக்கா போல, அவளே கூப்பிடுவா. எங்க அம்மூ தம்புவை காணோம். நான் கடைசியா பார்த்தப்போ டென்தோ லெவன்தோ படிச்சிட்டு இருந்தாங்கல்ல. இப்போ ஆளே அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டு இருப்பாங்க. காலம் எவ்ளோ வேகமா ஓடுதுல”
“டென்த் இல்ல கவி, லெவன்த்”
“ஓஹோ ஆமாமா. தம்பு லெவன்த்ல இருந்தப்போ தானே எங்கம்மா தவறினாங்க. ஆனா அப்பவும் படிப்பு, விளையாட்டு, எவ்ளோ வேலை இருந்தாலும் அதுக்கு நடுவுல அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக ஒருநாளும் தம்பு யோசிச்சதே இல்ல. மத்தவங்களுக்கு உதவறதுல அப்படியே திரு அண்ணா மாதிரி…”
“அம்மூ, நிஜமா சொல்றேன்டி அன்னைக்கு எங்கம்மாவோட கடைசி காலத்துல என்கூட தம்பு இல்லைன்னா ரொம்ப திண்டாடி போயிருப்பேன். திருண்ணா மாதிரியே தம்புக்கும் இளகின மனசு” என்று பேசிக்கொண்டிருந்த பார்கவியின் முன்,
“பெரிம்மா, உங்களை பெரிப்பா கூப்பிடுறாங்க” என்று வந்து நின்றான் சுஜித்.
“உன் பெரிப்பா எங்கப்பா இருக்காரு? அவரை வரசொல்லு.”
“பெரிப்பா ஸ்டேஜ்ல உங்களை பார்த்துட்டு இருக்காரு பாருங்க.”
“ஸ்ஸ் இதோ வந்துட்டேன்னு சொல்லு.”
“சாரிடி… அம்மூ, உன்னை பார்த்த சந்தோஷத்துல நிச்சயத்தை மறந்துட்டு வந்துட்டேன். ஒரு அரைமணி நேரம் வைட் பண்ணு. நான் நிச்சயம் முடிச்சிட்டு வந்துடுறேன். எங்கயும் போயிடாத. உன்கிட்ட பேசவேண்டியது நிறைய இருக்கு. திருண்ணா, பசுபதிண்ணா, தம்பு, ஜித்து… எல்லாரையும் பார்க்கணும். நான் சீக்கிரம் வந்துடுறேன். இரு.”
“சரி சரி, நீ போயிட்டு வா. நாங்க இங்கயே இருக்கோம்.”
திருவேங்கடத்திடம் இருந்து அழைப்பு…
“ஹலோ!”
“அம்மூ, எங்க இருக்கீங்க?”
“ஏங்க, உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீங்க எங்க இருக்கீங்க? அதை முதல்ல சொல்லுங்க.”
“என்ன சொல்ல சொல்ற? இப்போதான் கல்யாண மண்டப வாசல்ல இருந்து அப்படியே மண்டபத்துக்கு வெளியில முழுக்க ஒரு ரவுன்ட் போயிட்டு வரேன்.”
“என்னது? ரவுண்ட்ஸ்ல இருக்கீங்களா? என்னங்க பேசுறீங்க? எதுக்கு இந்த காத்துல வெளில சுத்திட்டு இருக்கீங்க? மழை வரமாதிரி இருக்கு. உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்காது. முதல்ல உள்ள வாங்க.”
“உன் பையன் கொடுத்திருக்க அடையாளத்தை வச்சு வேற என்ன செய்ய சொல்ற? ஜித்துவும் ப்ரணவும் டைனிங் ஹால்ல சாப்பாடு போடுற சாக்குல அந்த பெண்ணை தேடிட்டு இருக்காங்க. பசுபதி ஃப்ரூட் ஸ்டால் கிட்ட இருக்கான். இவ்ளோ நேரமாகியும் அந்த பொண்ணு எங்க யார்கண்ணுலயும் படல. உன் பையன் வேற அந்த பொண்ணு இல்லைன்னா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லிட்டான். அதான் தேடிட்டு இருக்கோம்.”
“என்னங்க, தேடினவரை போதும்… நீங்க உள்ள வாங்க. உங்களுக்கு ஒரு முக்கியமான ஆளை காட்டனும்.”
“இரு அம்மூ… இன்னும் ரெண்டு இடம் விட்டுபோச்சு. அங்கயும் பார்த்துட்டு வந்துடுறேன்.”
அவரின் தீவிரத்தை கண்ட நாயகி, “சரி… பார்த்துட்டு வாங்க.”
கைப்பேசியை அணைத்து விட்டு அவள் திரும்பினார்.
“அபி, பொண்ணு கிடைச்சதா?”
“இல்லக்கா… நானும் இந்த பக்கமெல்லாம் பார்த்துட்டேன். எங்கயும் கிடைக்கலை. இரு, அந்த சைட் பார்த்துட்டு வரேன்..” என்றதும் மெல்ல எழுந்த நாயகியும் விழிகளை கூட்டத்தில் ஓடவிட்டு இழையை தேட தொடங்கினார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இரு குடும்பங்களும் அக்கம் பக்கத்து வீட்டுகாரர்களா! நட்புடன் கூடிய இனிய உறவு இரு குடும்பத்தாருக்கும்.
இழையை தேடிய இனிய பயணம் 🤣🤣 பந்தியில் இரண்டு பேர், தாம்பூலம் கொடுக்கும் இடத்தில் ஒருவர் அட அட அட என்ன ஒரு அழகான குடும்பம்.
வசியின் வேண்டுதலை நிறைவேற்ற மொத்த குடும்பமும் மும்மரமாக செயல்படுகின்றனர். இவன் பாதம் பால் குடித்துவிட்டு எங்கே சென்றான்?
எல்லோரும் வலை வீசி தேடும் இழை வசியை கண்ட அதிர்வில் அறையினுள் பதுங்கிவிட்டாள்.