Loading

ஆட்சியர் கனவு – 5

என்னைக் கொல்லும்

உந்தன் நினைவுகள்!

அறியாமல் நீயும்

புரியாமல் நானும்..!

அறிந்து நீ வருவாயா?

புரிந்து என் கரம் சேர்வாயா.?

தவிக்கிறேன் கொல்லும்

உந்தன்

நினைவுகளால்..!!

திடீரென்று ஆதி, “யது யது, என்ன விட்டு போகாத” என்று கத்திக்கொண்டே எழுந்தான். அப்போது ஆறு வருடங்கள் முன் நடந்த நிகழ்வுகள் அவன் முன் தோன்றியது. அன்று நடந்த நிகழ்வுக்குள் தன்னையும் ஈடுபடுத்தினான். அவன் நினைக்கட்டும் நாமும் அப்டி என்ன நடந்துச்சுனு பாத்துட்டு வருவோம்.

ஆறு வருடங்களுக்கு முன்பு…

மழைக்காலம்…

எங்கும் சில்லென தென்றல் வீசிடும் காற்று. மழைத் தூறல் போட்டுக்கொண்டிருந்தது.  ஒரு அரசுப்பள்ளியில் அனைவரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர். மாவட்ட அளவிலான திறன் சார்ந்த போட்டிகள்  என்று பள்ளியின் வாயிலில் பெரிய போஸ்டர் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

ஆதி, தன் தம்பி கோகுலுடன் அப்பள்ளிக்கு சென்றான்.

ஆதி, “கோகுல், இந்த ஸ்கூல் தான.? இங்க தான காம்பட்டிஷன் நடக்குது?”

கோகுல் “ம்ம் ஆமா அண்ணா, இங்க தான்!”

ஆதி “டேய் இது கேர்ள்ஸ் ஸ்கூலாடா?”

 

கோகுல் “ம்ம் ஆமாண்ணா. வாங்க போலாம்.” என்று விட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

 

அங்கு வந்திருக்கும் அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் என்.எஸ்.எஸ். மற்றும் சாரணர் இயக்கம் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவள் தான் வரவேற்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருந்தாள். அப்போது ஒரு மாணவி கீழே விழப் போக, கோகுல் மற்றும் ஆதியும் அந்த மாணவியை பிடிக்க சென்றனர். அதே சமயம் வரவேற்பு பொறுப்பு ஏற்று இருந்த அந்த மாணவியும் ஓடி வந்தாள். மூவரும் ஒன்றாக வந்து அந்த மாணவியை பிடித்தனர். அப்போது பிடிப்பு இன்றி அந்த மாணவி கோகுலின் மேல் விழ கோகுல் ஆதி மேல் விழ ஆதி வரவேற்பு பொறுப்பு அளிக்கப்பட்ட மாணவி மேல் விழ போக அவள் சுதாரித்து நகர்ந்துக் கொண்டாள்.

அப்போது ஆதி மேல் இருவரும் விழ அதை பார்த்த அந்த மாணவி விழுந்து விழுந்து சிரித்தாள். அதில் கடுப்பான ஆதி வேகமாக எழுந்து அவளைத் திட்ட போக, அதற்குள் ஆசிரியர் அவளைக் கூப்பிட்டதாக ஓடி விட்டாள். ஏனோ அவளின் கண்களை மட்டும் பார்த்தவன் அவளின் செய்கையில் ஏதோ ஒன்று அவனை அவள்பால் ஈர்த்தது.

கோகுல் மேல் இருந்த அந்த மாணவி எழுந்து “சாரி அண்ணா. நான் கவனிக்காதனால இப்டி நடந்துடுச்சு. சாரி அண்ணா.!”

ஆதி “பரவால பாப்பா. போட்டிக்குலாம் எங்க போய் பதிவு பண்ணனும்?”

கோகுல் “எத்தனை மணிக்கு ஸ்டார்ட் ஆகும்?”

அந்த மாணவி “அண்ணா பாப்பானுலாம் சொல்லாதீங்க. என் பேர் மீனா. இங்க ஒருத்தி இருந்தாளே அவ எங்க? என்று சுற்றிமுற்றி தேடினாள். அவள் இல்லாமல் போக,

அவளுக்கு தான் எல்லாம் தெரியும். அவ தான் எல்லாத்துக்கும் இன்சார்ஜ். இருங்க அண்ணா! அவ எங்க இருக்கான்னு கேட்டுட்டு உங்கள கூட்டிட்டு போறேன்.”

ஆதி “ம்ம் ஓகே மா!” என்று கூறி விட்டு ஆதி மற்றும் கோகுல் இருவரும் நின்றுக் கொண்டு இருந்தனர்.

மீனா விசாரித்து வந்து அவர்களை அழைக்க, கோகுல் “அவங்க பேர் என்ன?”

மீனா “அவ பேர் யது. தோ, அங்க தான் இருக்கா” என்று விட்டு இருவரையும் அழைத்தாள்.

ஆதி தன் பழைய நண்பனை பார்த்ததால், “கோகுல், நீ போய் டீடெயில்ஸ் கேளு நான் வரேன்” என்று விட்டு நகர்ந்தான்.

 

மீனா, கோகுல் இருவரும் யதுவிடம் சென்று தகவல்களைக் கேட்டு அறிந்து கொண்டனர்.

 

ஆதி “என்னடா கேட்டியா? என்ன சொன்னாங்க?”

கோகுல் “ம்ம்ம் கேட்டாச்சுண்ணா. ரூம் நம்பர் சொல்லி இருக்காங்க. அங்க போலாம்ண்ணா. அப்புறம் இன்னொன்னும் சொன்னாங்க” என்று தயங்க,

ஆதி “என்னடா சொன்னா?”

கோகுல் “நீங்களும் ஏதோ ஒரு போட்டி ல சேந்துக்கணுமா, கண்டிப்பா.” என்று விட்டு ஆதியின் முகத்தை ஆராய,

ஆதி “யார் சொன்னது, சிரிசிக்கிட்டு போனளே அவளா?”

கோகுல் “ம்ம் ஆமாண்ணா!”

 

ஆதி “என்னடா, கருமம்? நான் எதுவுமே ப்ரீபெர் பண்ணவே இல்ல.” என்று தலையில் அடித்து கொள்ள,

 

யது “என்னடி அவன்.? ஆள பாரு உம்முனா மூஞ்சு. கொஞ்சம் சிரிச்சா என்னவாம்?”

மீனா “ஏய்! அவங்க உன்ன விட பெரியவங்கடி. 11த் தெரியும்ல?” 

யது “இருந்தா என்னடி சைட் அடிக்க கூடாதா?” என்று கூறிக்கொண்டே இருக்கும் போது அவளின் காதை திருகி, “ஏன் டி 8த் தான படிக்குற? அதுக்குள்ள சைட் அடிக்கிறத பத்தி பேசுற?” என்று சீனியர் மாணவி கேட்க,

யது “ஆஆஆஆ…அக்கா! 8த் படிச்சா சைட் அடிக்க கூடாதா.? ஓகே ஓகே..விடுங்க அக்கா. வாங்க நாம வேலைய பாப்போம்!” என்று  அனைவரும் அவர் அவர் வேலையை பார்க்க சென்றனர்.

 

போட்டிகள் தொடங்கிய பிறகு யது அனைவரிடமும் ஒரு பேட்சை அணிந்து கொள்ளுமாறு கொடுக்க, ஆதியிடமும் கொடுத்தாள். அப்போதும் அவளின் முகத்தை அவன் காணவில்லை. ஆனால் அவளோ அவனை அணுஅணுவாக ரசித்திருந்தாள்.

மதிய வேளையில் பள்ளியிலேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து இருந்தனர்.  அனைவருக்கும் அதை வழங்கும் பொறுப்பும் என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கே கொடுக்கப்பட்டது.

சீனியர் அக்காவிடம் யது “அக்கா, நீங்க இன்னும் சாப்பிடலல.? நீங்க போய் சாப்டுங்க. இந்த வேலையை நான் பாத்துக்குறேன்” என்று அவரை அனுப்பி வைக்க, அந்த நேரம் கோகுல் அங்கு வந்து “ரெண்டு  சாப்பாடு” என்று கேட்டான்.

யது “என்னது ரெண்டா.? ஒருத்தருக்கு ஒன்னு தான் குடுக்க சொல்லி இருக்காங்க. உனக்கே ரெண்டு தர முடியாது. அப்ரோம் லாஸ்ட்டா இருக்கவங்களுக்கு பத்தலான என்ன பண்றது.?” என்றாள்.

கோகுல் “ஹலோ, ரெண்டுமே எனக்குன்னு உன்கிட்ட சொன்னனா? அப்டி ஒன்னும் நான் தீனிப்பண்டராம் கிடையாது, ஓகே. அப்டியே ரெண்டு குடுத்தாலும் என்ன ஆகிடுவ.? உன் அப்பா வீட்டு சொத்தா போகுது.?”

யது “ஏய்… தேவ இல்லாம என் அப்பாவாலாம் இதுல இழுக்காதே, சொல்லிட்டேன்.  ஒருத்தருக்கு ஒன்னு தான் தரணும்னு சொல்லி இருக்காங்க. யாருக்கு வேணுமோ அவங்க நேர்ல தான் வரணும்” என்று கூறினாள்.

உணவு வாங்க சென்ற கோகுலை காணவில்லை’ என அவனை ஆதி தேடிக்கொண்டு வர, அங்கு நடந்த ரகளைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

சில நேரங்களில் நம் கண் முன் இருக்கும் காட்சிகளை ரசிக்க முடியாமல் கடந்த கால நிகழ்வுகள் நம்மைக் கட்டிப் போட்டு விடுகின்றன. அந்த நிலைமையில் தான் இப்போது ஆதியும் கட்டுண்டு இருக்கின்றான்.

சிறு வயதில் இருந்தே யார் மீதும் அன்பையும், அன்பான வார்த்தைகளையும் கேட்டுக் கூட பழகாதவன் இன்று யது செய்யும் செயல்கள் அவனுக்கு திமிராகவே தெரிந்தது.

அங்கு சென்ற ஆதி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் யதுவிடம் இருந்து உணவை பிடுங்கி கொண்டு கோகுலையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

யது “ப்பா.. என்னா கோவம்? செம சூடு பார்ட்டி போல” என்று நினைத்துக்கொண்டு தன் மற்ற வேலைகளை பார்க்கச் சென்றாள்.

போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் அனைவருக்கும் ஜூஸ் கொடுக்கப்பட்டது. அப்போது ஆதிக்கு கொடுக்கப்பட்ட ஜூஸில் யாரோ மயக்க மருந்து கலந்து விட்டிருக்க அதனை அறியாமல் ஆதியும் அதனை குடித்தான். அதை குடித்த பிறகு அங்கேயே மயங்கி விழுந்தான். அவனை இரண்டு நபர்கள் பெண்கள் உடை மாற்றும் அறையில் தள்ளிவிட்டு கதவை அடைத்தனர்.

போட்டிகள் முடிந்த வேளையில் மாணவிகள் அனைவரும் அவ்வறைக்கு செல்ல, அங்கு ஆதியை கண்டு அனைவரும் திகைத்து போயினர். மற்ற மாணவர்கள் அவனின் நிலையை கண்டு அதிர, கோகுல் “ஆதிண்ணா. என்ன பாருங்கண்ணா!” என்று கதறினான்.

விரைந்து அவ்விடம் வந்த யது “மிஸ்! இவங்களுக்கு கால்ல அடி பட்டுடுச்சு மிஸ். நான் தான இன்சார்ஜ், அதனால நான் தான் இவங்களுக்கு பர்ஸ்ட் எயிட் பண்ண வர சொன்னேன். கொஞ்ச நேரம் முன்னாடி நான் வந்தப்போ இந்த ரூம் மூடி தான் இருந்துச்சு. அதான் நான் போய்ட்டேன். இவங்களுக்கு கிலோஸ்ட்ரோஃபோபியா அதான் மயங்கி விழுந்துட்டாங்க” என்றாள்.

 

கோகுல் “இவ என்ன அண்ணாக்கு இல்லாததுலாம் சொல்ற?” என்ற ரீதியில் அவளைப் பார்தான்.

யது “ஆதி எந்திரிங்க.” என்று கண்ணீருடன் அவனின் கன்னத்தை தட்டி அவனை எழுப்ப முயற்சி செய்துக் கொண்டு இருந்தாள். இவளின் இச்செயலை கண்டு அனைவரும் ஒவ்வொரு மாதிரியாக பேச, மீனாவும் கோகுலும் அவளை சமாதானப்படுத்த, யதுவோ ஆதியை தன் மடியில் கிடத்தி அழுதுகொண்டு இருந்தாள்.

கோகுல் “மீனா இதுக்கு முன்னாடி இவ அண்ணாவை பாத்து இருக்காளா.?”

 

மீனா மறுப்பாக தலையசைத்து “யது அவங்கள ஹாஸ்பிடல் கூட்டி போலாம் வா” என்று அழைத்தாள்.

யது தலையசைத்து, “இங்க பாருங்க. ஒன்னுமில்ல, எல்லாம் சரி ஆகிடும்!”  என்று அவனின் கன்னத்தைத் தட்டி கை, கால்களை தேய்த்து விட்டாள்.

அவன் கண் விழித்து அவளின் முகத்தை பார்க்க, கண்கள் அவனின் மனதில் ஆழப் பதிந்தது. மீண்டும் மயக்கநிலைக்கு சென்று விட்டான்.

 

இரண்டு நாட்கள் கழித்து கண் விழித்த போது அவன் இருந்தது மருத்துவமனையில்.  அவளின் முகம் அவனுக்கு எவ்வளவு முயற்சி செய்தும் நியாபகம் வர வில்லை.

அவளின் கண்களும் அவள் கூறிய வார்த்தைகளும் மட்டுமே அவனுக்கு இன்றளவும் நியாபகம் இருக்கிறது… யதுவின் வார்த்தைகளே ஆதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தது. 

இறுதியாக  அவள் கூறிய வார்த்தைகளையும் கண்களையும் நினைவு கூர்ந்தவன், ஒரு வெற்று புன்னகையை சிந்தினான். மேலும் அவனது தூக்கமும் தொலைந்தது. அவனது தூக்கம் தொலைந்து ஆறு வருடங்கள் ஆகி விட்டதே!.

அடுத்த நாள் ஆதவன் தன் செம்மைகதிர்களை படர விட்டு, தன் வரவை தெரியப்படுத்தினான். வெள்ளிக்கிழமை என்பதால் கல்லூரிக்கு வெளியே இருக்கும் விநாயகர் கோவிலில் திவி தன் ப்ரார்த்தனையை முணுமுணுத்தவாறு விநாயகரிடம் முறையிட்டுக் கொண்டு இருந்தாள்.

அப்போது அங்கு தன் வண்டியில் வந்த ஆதியின் கண்களில் திவி பட, இமைக்க மறந்து அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஆணை முகனை வணங்கிவிட்டு திரும்பியவளின் கண்களிலோ ராயல் என்ஃபீல்டு வண்டியில் ஒரு காலை மடக்கி நின்றுக் கொண்டிருந்த ஆதியை பார்த்தாள். அவனை இவளும் ஒரு நொடி ரசிக்கத்தான் செய்தாள். தன்னை சமன்படுத்திக்கொண்டவள், அவன் அருகில் சென்றாள்.

பெண்ணவள் அருகில் வருவதை உணர்ந்தவன் அவள் அருகே வந்ததும் “ஹாய் திவ்யா!” என்றான் தன் மாறா புன்னகையுடன். 

திவி “ஹாய் ஆதி!”

ஆதி “உடம்பு பரவாயில்லையா? சரியாகிடுச்சு தான.?” என்று கூறிக்கொண்டே அவளின் கன்னத்தை ஆராய்ந்தான். வீக்கம் முழுவதுமாக வற்றி விட, அவள் கன்னத்தில் இருந்த அடுத்தடுத்த இரண்டு மச்சங்கள் இவனை ஏதோ செய்தது.

திவி “ம்ம்ம்… பரவாயில்ல.! அப்புறம் நாலு நாள் ஆச்சு, காலேஜ்லாம் ஓகே வா?. க்ளாஸ்லாம் எப்டி போகுது.?”

ஆதி ‘நீ இல்லாம நல்லாவே இல்லயே. இன்னைக்கு தான வந்து இருக்க இனிமே நல்லா போகும்.’ என்று நினைத்துவிட்டு “ம்ம்ம்ம். உன் பிரண்ட்ஸ் எல்லாரும் இப்போ என்கிட்டேயும் பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க. நீ ஓகே சொன்னா தான் கேங்ல சேத்துப்பாங்களாம். எப்போ ஓகே சொல்லுவீங்க?” என்று ஓற்றை புருவத்தைத் தூக்கிக் குறும்புடன் கேட்டான்.

 

திவி புன்னகைத்து “பாக்கலாம், பாக்கலாம்! ஆமா, இது உங்க வண்டியா.? என்க.

ஆதி “ம்ம்ம்…? இல்ல, ரோட்ல நின்னுகிட்டு இருந்துச்சு திருடிட்டு வந்துட்டேன். வாங்க போலீஸ் வரத்துக்குள்ள க்ளாஸ்க்கு போவோம்.” என்றான் கேலியுடன்.

திவி “ஐய் காமெடி, சிரிப்பே வரல.” என்றாள்.

ஆதி “ஓய், நான் சீரியஸ்ஸா சொல்றேன்”

திவி “போங்க ஆதி, பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். இந்த மூஞ்சியாவது திருடுறதாவது. நீங்களாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க” என்று சிரிப்பை அடக்கி கொண்டு கூறி “ப்ச்! சொல்லுங்க இது உங்க வண்டியா.?” என்றாள்.

ஆதி “ம்ம்ம், என் வண்டி தான். ஏன் இவ்ளோ ஆர்வம்.?” என்றிட,

 

திவி “வித் யூவர் பர்மிஷன், நான் இதத் தொட்டுப் பாக்கலாமா.?” என்று ஆர்வமாக கேட்டாள்.

ஆதி சிரித்துவிட்டு “என்னமோ ஓட்ட கேட்குற மாதிரியே ரியாக்சன் தரீங்க? ம்ம்ம்.. தொட்டுப் பாருங்க.” என்றான்.

திவி புன்னகைத்துவிட்டு, அதனை ஒரு வித ரசனையுடன் தொட்டுப் பார்த்தாள்.

ஆதி அவளின் செய்கையில் தன்னை மறந்து ரசித்து கொண்டிருந்தான். “இந்த வண்டினா ரொம்ப பிடிக்குமோ?” என்றான் யோசனையுடன்.

திவி “ம்ம்ம்! ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று இரு கைகளையும் விரித்துக் காட்டிக்  கூறினாள். ஆனா ஓட்ட தான் தெரியாது!” என்று கீழுதட்டை பிதுக்கி தலை குனிந்துக் கூறினாள்.

ஆதி ‘அச்சோ, ஏன்டி இப்டி பண்ற? நீ தான் அவளா இருக்கணும்டி. என்ன ஏமாத்திடாதடி’ என்று நினைத்து கொண்டு இருந்தான். ‘நீ பண்றது சரியில்லடா ஆதி. பாத்துக்கோ.’ என்று எங்கிருந்தோ வந்தது ஒரு குரல்.

ஆதி ‘யாரது.? ஓ நீயா? என்ன டா இன்னும் காணோமேன்னு பாத்தேன். நீ அமைதியா இருந்தா போதும் நான் பாத்துக்குறேன்’ என்று மனசாட்சியிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

திவி அவன் முன் கை அசைத்து “ஹலோ, இந்த உலகத்துல தான இருக்கீங்க.? ” என்று கேட்க,

ஆதி புன்னகைத்து, “ம்ம், போலாமா?” என்றான். திவியும் சரி என்பது போல் தலையாட்ட, ஆதி “இருங்க வண்டிய பார்க் பண்ணிட்டு வரேன்” என்று பார்க் செய்து விட்டு வண்டியை ஒரு முறை பார்த்துவிட்டு வந்தான்.

திவி “இப்போ எதுக்கு வண்டி மேல இவ்ளோ கரிசனம்?” என்று கேட்க,

ஆதி “கரிசனம்லாம் இல்ல, என் வண்டிக்கு வலிக்குதான்னு பாத்துட்டு இருந்தேன்.”

திவி புரியாமல் பார்க்க,

ஆதி “ஹான்… நீ தான் மா, வண்டிய தொட்டு பாக்குறேன்னு என்னமோ பண்ண. அதான் வலிக்கும்ல” என்றான் பொய் சலிப்புடன்.

திவி பொய்யாய் முரத்துவிட்டு,”ம்ம்ம், சாரி! இனிமே உங்க வண்டிய தொட மாட்டேன்” என்றாள்.

ஆதி “அட இவ்ளோ கோவமா? சும்மா தான் சொன்னேன்.” என்று விட்டு சாரி என்று தான் இரு கைகளையும் காது அருகே கொண்டு சென்று கூறினான்.

திவி “ஓகே ஓகே!” என்று விட்டு இருவரும் வகுப்பிற்கு சென்றனர்.

அப்போது திடீரென்று ஒரு மாணவன் திவியின் முன் வந்தான்.

கனவு தொடரும்…🌺🌺

கதை எப்படி போகுது நல்லா போகுதான்னு எனக்கு தெரியல…

படிச்சு உங்க கருத்துக்களை சொல்லுங்க… நிறை குறை எதுவா இருந்தாலும் சொன்னா கண்டிப்பா நான் அதை சரி செஞ்சிப்பேன்..

நன்றி…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்