Loading

அத்தியாயம் – 4 : தீயூறும் பனியே!

அவள் காளிஷேத்ராவுக்கு அருகில் இருக்கும் அந்த கிராமத்துக்கு வந்த ஒரு மாதம் கடந்து விட்டது.

 

போட்ட வேஷத்துக்கு ஏற்றபடி ராமின் மனைவி தாமினியுடன் நெருங்கிய நட்பும், பாசப்பிணைப்பும் கூட உண்டாகிவிட்டது.

 

ஆனால்.. இன்னமும் காளிஷேத்ராவில் வேலை தான் கிடைக்கவில்லை.

 

இரண்டு, மூன்று முறை அந்த முதல் நாள் வந்தவனை அக்னி பார்த்தாள் தான். அவன் தான் கோஸ்ட்டாக இருக்குமோ என்று அவள் ராமிடம் கேட்க, ராமோ..

 

“மேடம்.. இவன் கோவில்ல இருக்கற பூசாரிக்கு அசிஸ்டன்ட் மாதிரி.. இவனுக்கு மேல பூசாரி.. கோவிலோட காவல் தெய்வங்கள்.. உப தெய்வங்கள்.. உற்சவர்னு நிறைய பேர் இருக்காங்க.. இவங்க எல்லாரையும் தாண்டித் தான் நாம மூலவரையே பார்க்க முடியும்.

 

இந்த கிராமத்துலயே பிறந்து வளர்ந்தவன் நான். அந்த கோஸ்ட்டோட அட்டூழியங்கள் மட்டும் தான் காளிஷேத்ராவோட எல்லலைய தாண்டி வருமே தவிர.. அவன பத்தின எந்தவொரு தகவலும் இதுவரைக்கும் அந்த எல்லைய தாண்டினது இல்ல..

 

காத்துக்கும் கூட தெரியாம ஒரு காட்டு ராஜா மாதிரி அந்த ஊர கட்டி ஆண்டுட்டு இருக்கான்..” என்று மிரண்ட குரலில் கூற, அக்னியோ.. அலட்சியமாக சிரித்தாள்.

 

“அத்தனை கம்பீரமா இருக்கற சிங்கத்து கூட இவன கம்பேர் பண்ணி அந்த சிங்கத்தை அசிங்கப்படுத்தாதீங்க ராம்.

 

உலகத்துக்கு தன்னோட முகத்தை கூட காண்பிக்க பயந்துட்டு, இருட்டுல இருக்கற இவனும்.. ஒரே கர்ஜனைல காட்டையே அடக்கி ஆளற சிங்கமும் ஒன்னா?” என்று அவள் இன்னமும் ஏளனமாகக் கேட்க, ராமோ..

 

“என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க? சிங்கம் என்ன ஒவ்வொருத்தர்கிட்டயும் போய் நான் தான் காட்டுக்கு ராஜா.. நான் தான் காட்டுக்கு ராஜான்னு சொல்லிட்டு இருக்கா?

 

எங்கயோ ஒரு இடத்துல அது கர்ஜிக்கறது.. அந்தக் காட்டுல எவ்வளவு தூரம் எதிரொலிக்குதோ, அந்த இடம் வரைக்கும் அந்த ஒத்த சிங்கம் தான் ராஜா..

 

யார் கண்ணுலயும் படாம, நீங்க சொன்ன மாதிரி ஒத்த கர்ஜனைல மொத்த காட்டையும் தன் கண்ட்ரோல்ல சிங்கம் வச்சுருக்கு.

 

அதே மாதிரி தான் கோஸ்ட்டும்.. அவனோட ஒவ்வொரு செயலுக்கும் இந்த இந்தியாவே அதிர்ந்துட்டு இருக்கு.. அந்த அதிர்வலை பரவற இடமெல்லாம் அவன் கண்ட்ரோலுக்கு கொஞ்சம் கொஞ்சமா வந்துட்டு இருக்கு..” என்று பயக்குரலில் கூறினான்.

 

ராம் கூறியதில் இருந்த உண்மை, அக்னிக்கு மனதுக்குள் பய நடுக்கத்தை உண்டாக்கியது.

 

இப்படி அவனைப் பற்றிய ஒற்றை வார்த்தைக்கே தனக்குள் உதறல் எடுப்பதை நினைத்து ஆத்திரம் கொண்டவளோ.. ‘அக்னி.. உலகத்த அழிச்சு, அதோட சாம்பல தின்னு உயிர் வாழணும்னு நினைக்கற அவன் தான் பயப்படணும்.. அந்த அரக்கன்கிட்ட இருந்து இந்த உலகத்த காப்பாத்த நினைக்கற நீ.. பயப்படக் கூடாது..’ என்று அவள் தனக்குத் தானே தைரியமூட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களது வீட்டுக் கதவு தட தடவென தட்டப்பட.. திடுக்கிட்டு விதிர்விதிர்த்துப் போனாள் அக்னி.

 

‘ச்சே.. வெறும் கதவு தானா?’ என்று அவள் ஆசுவாசமடைவதற்குள், தாமினியோ..

 

“அக்னி.. நீ எழுந்து சமையல் ரூமுக்கு போ.. இந்த அர்த்த ராத்திரில இப்படி கதவு தட்டறாங்க.. எனக்கு என்னமோ பயமா இருக்கு..” என்று கூற, அக்னியோ வேறு வழியின்றி எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.

 

வாசலில் அந்த முதல் நாள் வந்தவன் நின்றிருந்தான்.

 

கதவைத் திறந்த ராம்.. 

 

“சாப்..” என்று ஒரு நொடி அதிர்ந்துவிட்டு.. சட்டென சுதாரித்தபடி..

 

“என்ன சாப் இந்த நேரத்துல?” என்று சாதாரணமாக கேட்பது போலக் கேட்டான்.

 

அவனை ஒரு கணம் கூர்ந்து நோக்கிய மற்றவனோ..

 

“உன் மச்சினி எங்க?” என்றான் அதிகாரமாக.

 

ஒரு கணம் மிடறு விழுங்கிக் கொண்ட ராமோ..

 

“உள்ள தூங்கிட்டு இருக்கா சாப்..” என்றான் தடதடக்கும் இதயத்தோடு.

 

“போய் கூட்டிட்டு வா..” என்று வந்தவன், தன் அதிகாரத் தொணி மாறாமலேயே கூற, வெளிப்படையாகவே நடுங்கினான் ராம்!

 

“சாப்.. அது வந்து.. இந்த நேரத்துல..” என்று அவன் தயங்க, வந்தவனோ..

 

“டேய்.. வேலை வேணும்னு கேட்டல்ல? போய் கூட்டிட்டு வாடா..” என்று ஓர் அதட்டல் போட்டது தான் தாமதம்.. பின்னங்கால் பிடரியில் பட வீட்டுக்குள் ஓடியவன், சமையலறையில் இருந்தவளிடம் சென்று..

 

“மேடம்.. அந்த அர்ஜுன் வந்திருக்கான்.. அதான் நீங்க வந்தப்போ முதல் நாள் பார்த்தோமே.. அவன்!

 

இப்போ உங்கள கூப்பிடறான்.. எதுக்குன்னு தெரியல.. கொஞ்சம் பயமா இருக்கு..” என்று மூச்சிறைக்கக் கூற, ஒரு கணம் தலை குனிந்து யோசித்த அக்னியோ..

 

“சரி.. நீங்க போங்க.. நான் வரேன்..” என்றுவிட்டு ஆழ்ந்த மூச்சொன்றினை வெளியிட்டபடி ராமை பின் தொடர்ந்தாள்.

 

அந்த வீட்டில் மங்கலான விடிவிளக்கின் வெளிச்சத்தில் நடந்துவருபவளையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனோ, தன் முன்பாக அவள் வந்து நிற்கவும், அவளைத் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன்..

 

“உனக்கு இன்னும் பத்து நிமிஷம் டைம்.. அதுக்குள்ள உன்னோட மூட்ட முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு என் கூட வர..” என்று உத்தரவிட, மறு பேச்சு பேசாமல் உள்ளே சென்றாள் அவள்.

 

ஆனால் ராம் தான், “என்ன சாப் இந்த நேரத்துக்கு எங்க கூட்டிட்டு போறீங்க?” என்று சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க, அர்ஜுனோ..

 

“ஏய்.. நீ தான அந்தப் பொண்ணுக்கு வேலை போட்டு கொடுக்க சொன்ன? அதான்.. வேலைக்குக் கூட்டிட்டுப் போறேன்..” என்று அலட்சியமாகக் கூறினான்.

 

அந்தக் குரலில் சற்று குளிர் பிறந்தது ராமுக்கு!

 

“அதில்ல சாப்.. ராத்திரி நேரமா இருக்கு.. வேணும்னா நாளைக்கு பகல்ல அனுப்பி வைக்கட்டுமா?” என்று கேட்க, அர்ஜுனோ..

 

“ஏன்?! வேலைக்குன்னு வந்துட்டா.. வேலை முடியற வரைக்கும் ராத்திரி, பகலுன்னு பார்க்காம அங்க தான தங்கியிருக்கணும்?” என்று கேட்க, அவனது இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை ராமுக்கு.

 

அவன் தயக்கத்துடனே நின்றிருக்க.. தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வந்த அக்னியோ..

 

“இல்ல மாமா.. இந்த வேலை இப்போ எனக்கு கிடைக்கறது தான முக்கியம்?

 

எந்த நேரத்துல நான் வேலைக்காக கிளம்பினா என்ன? ஏதோ.. இதுல வர காச வச்சு என்னோட அக்காவோட டவுரி பணத்த நான் அடைச்சா போதும்..” என்று ராமை ஓர் அர்த்தம் பார்வையுடன் கூறிவிட்டு, அவனைத் தாண்டிக் கொண்டு சென்றாள்.

 

அந்த நேரத்தில்.. “ஏய்.. பொண்ணு..” என்று அர்ஜுன் அழைக்க, தலையில் முக்காடாய் போட்டிருந்த தனது துப்பட்டாவை பிடித்தபடி திரும்பிப் பார்த்தாள் அக்னி.

 

“அப்போ உன்னோட சம்பளப் பணத்த உன் மாமன்கிட்டயே கொடுத்துடலாமா?” என்று கேட்க.. அவனை ஒரு கணம் ஊன்றிப் பார்த்து தனது மனதில் அவன் முகத்தை நன்றாகப் பதிய வைத்துக் கொண்டவளோ..

 

“ஹான் ஜி..” என்று மட்டும் பதிலுரைத்தாள்.

 

அவனது ஜீப்பில் ஏறப் போனவளை, தாமினி ஓடி வந்து அணைத்து விடுவிக்க, மென்மையாக சிரித்து அவளுக்கு ஆறுதல் தந்தாள் அக்னி.

 

அதற்கு மேல் யாரிடமும் எதுவும் பேசாது அமைதியாக ஜீப்பில் ஏறிக் கொண்டவளை, அழுத்தமாகப் பார்த்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஜீப்பை எடுத்தான்.

 

அங்கிருந்து ஒரு மணிநேர பயணத்தின் பிறகு, ஒரு காட்டுப் பாதை ஆரம்பித்தது. அந்த இடத்தில் போலீஸ் செக் போஸ்ட் போல தடுப்பு போடப்பட்டு, சில ஆட்கள் காவலில் இருந்தனர்.

 

ஜீப்பில் இருந்தவர்கள் முகத்தின் மீது அவர்கள் டார்ச் லைட் அடிக்க, அர்ஜுனோ, அசையாது அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனது முகத்தைப் பார்த்ததும், மரியாதையுடன் டார்ச்சை கீழிறக்கி, அந்த தடுப்பை நீக்கிவிட, அவனது ஜீப், கரடுமுரடான அந்தக் காட்டுப் பாதைக்குள் சென்றது.

 

ஏற்கனவே குத்திக் கிழிக்கும் கும்மிருட்டு.. அந்த கும்மிருட்டுக்கு மை தீட்டியது போல இன்னும் இன்னும் இருளின் அடர்வு அதிகமாகிக் கொண்டே போக.. எவ்வளவு தான் தடுத்தும் உள்ளுக்குள் சிறு பயம் பிறக்கத் தான் செய்தது அக்னிக்கு.

 

ஒரு வழியாக இன்னுமொரு அரை மணிநேர பயணத்தின் பிறகு, சில குடிசைகள் இருந்த பகுதியில் ஜீப்பை நிறுத்தினான்.

 

அந்த இருளிலும் சுற்றிலும் துளாவியபடியே அக்னி இறங்க, அவள் விழிகளில் இருந்த தேடலைக் கவனித்தபடியே.. 

 

“இங்க தான் உனக்கு வேலை.. அதோ அந்தக் குடிசைல போய் தங்கிக்க..” என்றவன்,

 

“ராதாம்மா..” என்று சற்று உரத்த குரலில் அழைத்தான்.

 

அவன் சுட்டிக் காண்பித்த குடிசைக்குள் இருந்து மத்திம வயதில் இருந்த பெண்மணி ஒருவர் வெளியே வந்தார்.

 

“இது தான் நான் சொன்ன பொண்ணு.. இங்கயே தங்க வச்சுக்கோங்க.. காலைல எழுந்ததும் என்ன வேலை, எப்படி இருக்கணும்னு எல்லாம் சொல்லிக் கொடுங்க..” என்று எந்திரம் போல ஒப்புவித்துவிட்டு, திரும்பியும் பார்க்காது ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

 

அர்ஜுன் செல்வதையே பார்த்தபடி அக்னி நின்றுகொண்டிருக்க, 

 

“ஏய்.. என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க? நேரமாச்சுல்ல? வந்து தூங்கு..” என்று அதிகாரமாய் கூற, பணிவு காட்டி குடிசைக்குள் சென்றாள் அவள்.

 

பூவின் இதழூறும் பனித்துளி.. இதோ..! இப்பொழுது தீயூறும் வெய்யோனின் இடத்தை வந்தடைந்தது!!

 

இரவு ஒரு மணிக்கு மேலே தான் அவள் அந்த இடத்திற்கு வந்திருப்பாள். ஆனால் விடியற்காலை நாலரைக்கெல்லாம் அவளை எழுப்பிவிட்டாள் அந்த ராதாம்மா.

 

“ஏய்.. எழுந்திரு.. போ.. இங்க நம்ம குடிசைக்கு பின்னாடி வலது பக்கம் போனா, பொண்ணுங்களோட பாத்ரூம் இருக்கு.. அங்கேயே குளிச்சு முடிச்சு ரெடியாகி வா.

 

சீக்கிரம் வேலைக்குப் போகணும்..” என்று கூற, இவளும் எழுந்து குளிக்கக் கிளம்பினாள்.

 

இன்னமும் முழுதாக விடிந்திராத விடியக்கருக்களில் தெளிவாக அவளால் எதையுமே பார்க்க முடியவில்லை தான். ஆனால் இருட்டுக்குள் துழாவி அவள் கண்டுகொண்டதில் அங்கே ஏதேதோ கனரக வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.

 

அவையெல்லாம் என்னவாய் இருக்கும் என்று யோசித்தபடியே குளித்துவிட்டு வந்தால், ஏதோ சத்து மாவு கூழ் போன்ற நீராகாரம் முதலில் கொடுத்தார்கள். அதைக் குடித்துவிட்டு வந்தால்.. அப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்திருக்க.. இப்பொழுது தான் தெளிவாகவே பார்க்க முடிந்தது அவளுக்கு.

 

ஊன்றிப் பார்த்தால்.. அங்கு ஆண்களும், பெண்களுமாக ஒரு நூறு பேருக்கும் மேலாக வேகவேகமாக அவரவர் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தனர்.

 

“இ.. இங்க என்ன வேலை செய்யணும்?” என்று சுற்றிலும் பார்த்தபடியே அக்னி, ராதாம்மாவிடம் கேட்க, அவரோ.. அவளை மேலும் கீழும் பார்த்தபடி..

 

“ஹ்ம்ம்.. எல்லாம் ரோடு போடற வேலை தான்.. ஏன் மகாராணிக்கு கம்பியூட்டர் கம்பெனில வேலை கொடுப்பாங்கன்னு நினைச்சீங்களோ?” என்று நக்கலாகக் கேட்க, தலையைக் குனிந்து கொண்டு வேலை செய்யத் தயாரானாள்.

 

கற்களை எல்லாம் தேவையான இடத்தில் கொண்டு வந்து கொட்டுவதும், சாலையில் போடும் தாரை வகைப்படுத்துவதும் தான் வேலை.

 

விடியலிலேயே வேலையை ஆரம்பித்துவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக வெயில் ஏற.. ஏற.. அவளால் முடியவில்லை.

 

கடினமான வேலைகள் எல்லாம் செய்து பழகியவள் தான் அவள். ஆனால் பயிற்சிக்கு செய்வது வேறு.. பழக்கமாகவே செய்வது வேறு அல்லவா?

 

ஜல்லிகளை எல்லாம் காரைச் சட்டியில் வைத்து தலையில் சுமந்து கொண்டு வந்து அவள் கொட்டிக் கொண்டிருக்க, அவளைப் போல வேலை செய்பவர்களை எல்லாம் மேற்பார்வை செய்து கொண்டிருந்தவனோ.. அவள் வேலையில் திருப்தியே அடையாமல்.. 

 

“வேகமா செய்யணும்..”

 

“இன்னும் நிறைய கல்ல அள்ளிப் போட்டுக்கிட்டு வரணும்..”

 

“ஆடி அசஞ்சு அன்னநடை போட்டுட்டு வர நீ..”

 

“உன்னை எல்லாம் யார் வேலைக்கு சேர்த்தது?”

 

“ரெண்டு ஆள் சாப்பாடு சாப்படற நீ? ஆனா அரையாள் வேல கூட செய்ய மாட்டேங்கற?” என்று தொடர்ந்து வசவு மழை பெய்து கொண்டே இருந்தான்.

 

இன்னும் இன்னும்.. இன்னும் இன்னும் என்று வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு.. பதினோரு மணி வெயிலையே தாங்க முடியாது தலை கிறுகிறுக்க, சமாளிக்க முடியாமல் அவள் கீழே விழப் போகயில்.. அவளை ஒரு வலிய கரம் வந்து பிடித்தது.

 

விழுந்தவளைத் தன் மடியில் ஏந்திக் கொண்டு அவன் நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வையின் பொருளை புரிந்துகொண்டு அங்கிருந்தவர்கள், ஓடோடி வந்து அவள் முகத்தில் நீரைத் தெளித்தனர்.

 

சோர்ந்திருந்த முகத்தில் சிப்பிகளைப் போன்றிருந்த இமைகள் இரண்டும் சிரமத்துடன் பிரிந்துகொள்ள, ஏதோ ஓர் அந்நிய ஆடவனின் மடியில் படுத்திருப்பதை உணர்ந்த அக்னி, அடுத்த கணமே திடுக்கிட்டு எழுந்தாள்.

 

“என்ன வேலைக்கு புதுசா?” என்றான், அவன் சினேகமாக முறுவலித்து.

 

என்னவோ அவன் குரலும், முகமும், அந்த சிறு முறுவலும் அவளை, அவனிடத்தில் தடுமாற வைத்தது.

 

பதில் கூறக் கூட மறந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு சொடக்கிட்டு அவள் கவனத்தைத் தன் புறம் திருப்பினான் அவன்.

 

“எ.. என்ன?” என்று அவள் மிரண்டு விழிக்க, அவனோ மீண்டும் தனது கேள்வியைக் கேட்டான்.

 

“ஆமாம்.. நான் இங்க புதுசு தான் தம்பி..” என்று பதிலுரைத்தாள் அக்னி.

 

“என்ன தம்பியா?” என்று இவன் அதிர, அக்னியோ..

 

“ஆமா.. தம்பி தான்.. அது தான் நல்லது..” என்று தனக்கே கூறுவது போல சொல்லிக் கொண்டாள்.

 

அதற்கு அந்தப் புதியவனோ மென்மையாக சிரித்து..

 

“ஹ்ம்ம்.. நானும் புதுசு தான்.. இங்க வந்து ஒரு வாரம் ஆச்சு..” என்று கூற, அக்னியோ,

 

“அப்படியா? நான் நேத்து தான் வந்தேன்.. ஆமா உன் பேர் என்ன தம்பி?” என்று கேட்டாள்.

 

“நான் சூர்யா.. உங்க பேர் என்ன அக்கா?” என்றான் அவளிடம்.

 

அவன் சூர்யா என்றதும், சட்டென, “என் பேர் சந்திரா..” என்று அந்த நேரத்தில் வாயில் வந்த பெயரை அடித்து விட்டாள்.

 

இங்கு இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, சுற்றி இருந் கூட்டம் அவர்களையே விசித்திரமாய் நோக்கிக் கொண்டிருந்தது. அதை உணர்ந்த சூர்யாவோ..

 

“இதோ.. அக்கா இப்போ சரியாகிட்டாங்க.. இனி நல்லாவே வேலை செய்வாங்க..” என்று ராதாம்மாவைப் பார்த்துக் கூறியவன், அக்னியிடம் திரும்பி..

 

“என்னக்கா? இப்போ உங்களால வேலை செய்ய முடியும் தானே?” என்று கேட்டான்.

 

அவளால் நிச்சயமாக முடியவில்லை தான். ஆனால், வேலை செய்ய முடியவில்லை என்று கூறினால், எங்கே.. உனக்கு‌ இனி இங்கு வேலை இல்லை என்று கூறி அவளை விரட்டி விடுவார்களோ என்று அஞ்சி,

 

“என்னால வேலை செய்ய முடியும் தம்பி..” என்று கூறிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போனாள்.

 

செல்லுபவளையே ரௌத்திரமான‌விழிகளுடன் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை, அக்னியைத் தவிர மற்ற அனைவருமே கவனித்தார்கள்.

 

அடுத்த ஒரு வாரத்தில் அக்னியும், அந்த சூர்யாவும் நன்றாக நெருங்கிவிட்டார்கள். ஓர் ஆழ்ந்த சிநேகம் இருவருக்கும் உண்டானது!

 

இருவரும் ஒன்றாகப் பேசுவதும், அக்னி மறைமுகமாக அவனிடம் இருந்து ஏதாவது விவரம் கிடைக்குமா என்று போட்டு வாங்கப் பார்ப்பதுமாக காலம் கழிந்தது.

 

என்ன தான் தம்பி என்று வாய் வார்த்தையாக அழைத்தாலும், நிச்சயமாய் அவனை அப்படி நினைக்க முடியவில்லை அவளால்!

 

தம்பி என்று அழைப்பது அவளுக்கு ‌அவளே போட்டுக் கொண்டிருக்கும் வேலி!

 

அவனுக்கும் அதே போலத் தானோ? என்பது அவளது சந்தேகம்!!

 

இப்படியாக காலம் பொறுமையாகக் கடக்க.. அடுத்து வந்த ஒரு மாதத்தில் இளைத்து, கறுத்து, ஆள் அடையாளமே தெரியாது போய்விட்டிருந்தாலும், அக்னி தான் வந்த காரியத்தை மறக்காமலேயே அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாகக் கலந்துவிட்டிருந்தாள்.

 

அன்றும் அப்படித் தான் அவளும், சூர்யாவும் ஒன்றாக உணவருந்திக் கொண்டிருந்த நேரத்தில், ராதாம்மா அவளை அழைத்தார்.

 

“ஏய் சந்திரா.. இங்க வா..” என்று அவர் அழைக்க, உண்டு கொண்டிருந்த உணவை அப்படியே வைத்துவிட்டு அவள் எழுந்து ராதாம்மாவிடம் ஓடினாள்.

 

“இனி உனக்கு இங்க வேலை இல்ல..” என்று அவர் கூறியதும் ஒரு கணம் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது அக்னிக்கு.

 

“எ.. என்ன சொல்லறீங்க?” என்று அவள் வெளிவராத குரலில் கேட்க, ராதாம்மாவோ..

 

“உனக்கு இனிமே இங்க வேலை இல்ல.. ஊருக்குள்ள, தம்பியோட பேலஸ்ல வேலை..” என்று கூற, அக்னியோ விழித்தாள்.

 

“தம்பியோட பேலசா? எந்த தம்பியோட பேலஸ்?” என்ற அவளது கேள்விக்கு..

 

“எல்லாம் பேலசுக்குப் போனா தெரியும்..” என்று கூறி பேச்சை முடித்துவிட்டார்.

 

திரும்பி வந்து உணவை முடித்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தால், அதற்குள் ராதாம்மாவோ.. 

 

“உன்ன கிளம்புன்னு சொன்னா இங்க என்ன பண்ணிட்டு இருக்க? சோறெல்லாம் பேலசுல போடுவாங்க, மொதல்ல உன் துணி மணியெல்லாம் எடுத்துட்டு கிளம்பு..” என்று அவளிடம் கூறியவள், சூர்யாவிடம் திரும்பி..

 

“தம்பி.. நீயும் பேலசுக்கு கிளம்பணும்.. அஞ்சே நிமிஷம் தான உனக்கு டைம். சீக்கிரம் சாப்பிட்டுட்டு கிளம்பு..” என்று கூற, அவனோ நிதானமாக மீதமிருந்த ஒரு வாய் சோறை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு

கிளம்பினான்.

 

ஒரு சிறிய டெம்போ அக்னி, சூர்யாவுடன் சேர்த்து இன்னும் சிலரையும் ஏற்றிக் கொண்டு பேலஸை நோக்கிக் கிளம்பியது!

 

அந்த பேலஸ் தான் ருத்ரன் வசிக்கும் இடமாய் இருக்குமோ என்ற எண்ணத்திலேயே அக்னியின் மனது பரபரக்கத் துவங்கியது!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
13
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்