Loading

அகநக அழகே!

அத்தியாயம் – 1

கடினமான முகத்துடன் வெறித்து நோக்கிக் கொண்டிருந்த அழகுமணியின் கைகளை பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் நித்யா!

“ப்லீஸ்டி.. இதுல உங்க குடும்ப கவுரவமும்.. மானமும் கூட அடங்கியிருக்குடி..” என்று அவள் கூற, அவளைத் திருப்பிப் பார்த்த அழகுமணியோ, தீயாய் முறைத்தாள்.

“அவனுங்களுக்கெல்லாம் இருக்கறதுக்கு பேரு மானம்.. இதுல அந்த மானம் போயிடுச்சுன்னா கூடவே கவுரவம் சேர்ந்து போய்டுமா?

அப்படிப் போனா.. சந்தோசமா போகட்டும்னு தான் நான் நினைப்பேன்..” என்று அவள் எரிச்சலுடன் கூற, நித்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“ப்ளீஸ் மணி.. சரி விடு.. உனக்காகவோ, உன் குடும்பத்துக்காகவோ இல்லைனாலும்.. என் குடும்பத்த நினச்சு பாருடி..” என்று அழகுமணியின் காலிலேயே நித்யா விழுந்துவிட..

“ஏய்.. என்னடி பண்ற?” என்று பதறியபடி பின்னால் நகர்ந்து கொண்டாள் அவள்.

“ஆமா மணி.. நீ மட்டும் மனசு வைக்கலைனா, என் அண்ணனோட வாழ்க்கை அவ்வளவு தான்..” என்று அவள் கூற, அழகுமணியோ..

“ச்சை.. உன்னையும்.. உங்க அண்ணனையும் பெத்ததுக்கு உங்க அப்பாவும், அம்மாவும் சாமியாரா போயிருக்கலாம்டி..” என்று நெற்றியை நீவிக் கொண்டவள்.. சிறிது யோசனைக்குப் பிறகு..

“சரி.. பண்ணித் தொலையறேன்..” என்றவள் தனது மொபைலை எடுத்தாள்.

“ஹெலோ.. தர்ஷா..” என்று அழகுமணி கூற.. நித்யாவோ அதிர்ச்சியடைந்தாள்.

“ஹேய்.. அவளுக்கு எதுக்குடி போன் பண்ணின?” என்றிவள் கேட்க, அவளிடம் வாயின் மீது கை வைத்து.. “ஷு..” என்றபடி போனில் பேசத் துவங்கினாள் மணி.

“ஹெலோ தர்ஷா.. நான் தான் அழகுமணி பேசறேன்.. இன்னைக்கு எனக்கு.. இல்ல இல்ல.. எங்க வீட்டு நாய்க்குட்டிக்கு பிறந்தநாள்.. ஹோட்டல்ல ஒரு சின்ன ட்ரீட்டு.. நான் நிறைய பேர கூப்பிடல.. உன்ன மாதிரி ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ மட்டும் தான் கூப்ட்ருக்கேன்..

சோ ஈவினிங் வந்துட்டறியா?” என்று கேட்டு ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலின் பெயரைக் கூற மறுமுனையில் இருந்த தர்ஷாவுக்கோ விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன!

அவளுக்கு எப்பொழுதுமே அழகுமணியின் பணத்திலும், அவள் அழகிலும் சிறு மோகம் இருந்தது.

கூடவே அவளின் சிநேகம் கிடைத்தால், அதுவே தனக்குச் சற்று பெருமை தான் என்று எண்ணி சிலமுறை அவளிடம் பேச முயன்றிருக்கிறாள் தர்ஷா.

ஆனால் அழகுமணிக்கு, தர்ஷாவின் சில நடவடிக்கைகள்.. அவளது வாழ்க்கை முறையில் அவ்வளவு பிடித்தம் இல்லை.. ஆனாலும் அவளது வாழ்க்கை, அவளது விருப்பம் என்று சாதாரணமாக, உடன் படிப்பவள் என்ற அளவில் பழகுவதுண்டு.

இப்பொழுது அந்த அழகுமணியே ஸ்டார் ஹோட்டலில் விருந்து.. அதுவும் நெருங்கிய நண்பர்களுக்கான விருந்து என்று இவளை அழைத்திருக்கிறாளே? எனவும் தலைசுற்றாத குறை தான் அவளுக்கு.

“நான் வரேன் அழகு.. நீ சொன்ன டைம்முக்கெல்லாம் சரியா கிளம்பி வரேன்..” என்று ஆர்வமாய் அவள் கூறியதில் எரிச்சல் பிறந்தது அவளுக்கு.

பின்னே? அவளுக்குப் பிடிக்காத அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவளுக்கு எரிச்சல் வராதிருக்குமா?

ஆம்.. சிறு வயதில் இருந்து உடன் வளர்ந்த ராட்சசர்கள் இருவரால் அவள் பெயரையே அவள் வெறுத்து விட்டிருந்தாள்.

“ஆமா.. சீமைல இல்லாத பேரழகின்னு இவளுக்கு அந்தப் பேர வச்சிருக்கீங்க..”

“இந்த அகோரத்துக்குப் பேரு அழகியாம்?” என்ற அவர்களது குரல் இப்பொழுதும் காதில் கசிய, கண்களை இறுக்க மூடித் திறந்தவள்.. தர்ஷாவிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அழைப்பைத் துண்டித்தாள்.

“என்ன மணி.. தர்ஷாக்கு ஏன் போன் பண்ணின? நான் என்ன சொன்னேன்.. நீ என்ன செஞ்சிருக்க?” என்று இன்னமும் பதட்டமாகவே நித்யா கேட்க, அவள் முன்பாக கை நீட்டி அவள் கூற வருவதைத் தடுத்தாள் மணி.

“இங்க பாரு நித்யா.. தேவை உனக்கு.. ஆனா திட்டம், என்னோடது.

என்னால கண்டகண்டவன்கிட்ட எல்லாம் கெஞ்சிட்டு இருக்க முடியாது.. இது தான் என்னோட ரூட்டு.. நீ சொல்லறது உண்மைன்னா.. என்னோட இந்த பிளான் சக்ஸஸ் ஆகும்..

இல்லைனா, எல்லாம் நன்மைக்கென்னு நீ எடுத்துக்கணும்..” என்று அவள் கூற, அரைமனதாக நித்யா சம்மதித்தாள்.

அவளுக்கும் தான் அப்பொழுது வேறு வழியும் இல்லையல்லவா?

அவர்கள் திட்டமிட்டபடியே மாலை நான்கு மணியளவில் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

அங்கே சென்று அழகுமணி ஒரு இருக்கையிலும், அவர்கள் பேசுவது கேட்கும்படியாக நித்யா சற்று மறைவான ஓர் இடத்திலும் அமர்ந்து கொண்டார்கள்.

அவர்கள் வந்து சில நிமிடங்களிலேயே தர்ஷாவும் வந்துவிட்டாள்.

வந்தவள், அங்கே அழகுமணி மட்டும் இருப்பதைக் கண்டு சற்று திகைத்தாலும்.. “என்ன அழகு.. இன்னும் உன் மத்த ப்ரண்ட்ஸ் யாரும் வரலையா?” என்று கேட்க, அதற்கு அவளோ..

“இன்னும் யாருமே வரல தர்ஷா.. உன்ன மாதிரி யாரும் பங்க்சுவல் இல்ல பாரு..” என்று மறைமுகமாகப் பாராட்டவும் சற்று பெருமையாக இருந்தது தர்ஷாவுக்கு.

இவர்களுக்காக மட்டும் அப்போதைக்கு ஏதாவது ஆர்டர் செய்யலாம் என்று மணி கூறவும், தர்ஷாவும் சம்மதித்தாள்.

ஆர்டர் எடுத்துக் கொண்டு சர்வர் கிளம்பிவிட, மெல்லப் பேச்சு கொடுத்தாள் மணி.

“அப்புறம் தர்ஷா.. ப்யூச்சர்ல என்ன பிளான்?” என்று சாதாரணமாக அவள் கேட்க, தர்ஷாவோ சற்று வெட்கம் கொண்டாள்!

“பியூச்சர்ல என்ன.. கல்யாணம் தான்!” என்று அவள் கூற மணியோ சற்று சந்தோஷமாகவே சிரித்தாள்.

“ஓஹோ கல்யாணமா.. என்ன லவ் மேரேஜா? இல்ல அரேஞ்ட் மேரேஜ் தானா?” என்று அவள் கேட்க தர்ஷாவின் முகம் சற்று சுருங்கியது.

ஒரு கணம் சுணுக்கமுற்ற அந்த முகம், மறுகணமே பிடிவாதத்தை காட்டியபடி..

“லவ் மேரேஜா தான் இருக்கும்னு நினைக்கிறேன்..” என்று கூற, அழகுமணியின் முகமோ சற்று கோபத்தைக் காட்டியது!

ஆனால் அதை உடனே சரிசெய்து கொண்டவளோ..

“அப்படியா? ரொம்ப சந்தோஷம்!! ஆர் யூ இன் லவ் வித் சம் ஒன்?” என்று அவள் கேட்க முகத்தில் நாணம் சூடிக்கொள்ள மெல்ல தலையசைத்துச் சிரித்தாள் தர்ஷா!

“ஓஹோ கங்கிராட்ஸ்.. சரி நீ லவ் பண்ற ஆள் யாரு?

நம்ம காலேஜா? இல்ல வெளில யாராவதா?” என்று மணி சந்தோஷம் காட்டி கேட்க, தர்ஷாவும் தனது மனதைத் திறக்கத் தொடங்கினாள்.

“நம்ம காலேஜ் இல்ல.. ஆனா கொஞ்சம் பிக்சாட்..” என்று கூறியவள், ஒரு மர்மமான புன்னகையுடன்.. “உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவரும் கூட..” என்று கூற, மணி யோசிப்பது போல் பாவனை செய்தாள்.

“எனக்கு வேண்டப்பட்டவரா? யாரது?” என்ற இவளது கேள்விக்கு.. தர்ஷா புன்னகையுடன், “உங்க நகை கடைக்குப் போட்டிக் கடை..

‘அலங்காரா ஜுவல்லர்ஸ்’ ஓட ஓனர தான் நான் லவ் பண்றேன்..” என்று பெருமிதமாகக் கூற தொண்டைக்குள் ஏதோ சிக்கிக் கொண்டது அழகு மணிக்கு!

ஆனாலும் அதனை மறைத்துக் கொண்டு.. “வாட்?” என்று சந்தோஷமாக அதிர்வது போலக் காட்டிக் கொண்டவள், “அந்த சார் லவ் எல்லாம் பண்ணுவாரா?” என்று கேலியாகக் கேட்டாள்.

“ஏன் ராகவ் லவ் பண்ணக் கூடாதா?” என்று தர்ஷா கேட்க.. மென்மையாக சிரித்த மணியோ..

அவன் லவ் பண்றதுக்கு என்ன? ஆனா.. அவன் கொஞ்சம் சிடுமூஞ்சி.. அதான் எப்படி லவ்வெல்லாம்னு யோசிச்சேன்.

ஆனா.. உன்ன மாதிரி அழகான பொண்ண யார் தான் விரும்ப மாட்டாங்க? எனிவே கங்கிராட்ஸ்..” என்று அவள் அழகாகக் கூற, தர்ஷாவின் கன்னம் இன்னமும் சிவந்தது!

அதைத் தொடர்ந்து மணியோ.. “ஆனா உன்கிட்ட அழகோட இன்னொரு திறமையும் இருக்கு.. என்ன தெரியுமா? நீ எடுத்திருக்க படிப்பு!

ஜுவல்லரி டிசைன் எடுத்து படிச்சிட்டு இருக்க இல்ல.. அது இன்னுமே ராகவ இம்ப்ரஸ் பண்ண வச்சுருக்கும்னு நினைக்கிறேன்..” என்று அவள் கூற.. தர்ஷாவோ,

“நான் ஜுவல்லரி டிசைன் எடுத்து படிச்சது வேற ஒரு காரணத்துக்காக! ஆனா இப்போ யோசிச்சு பாரு.. ராகவ் மாதிரி ஒரு மிகப்பெரிய பணக்காரன கல்யாணம் பண்ணனினதுக்கு அப்புறம்.. எனக்கு எதுக்கு இந்த படிப்பும், வேலையும்?

ஜாலியா மகாராணி மாதிரி கால் மேல கால் போட்டு உட்கார்ந்து ராகவ் சம்பாதிக்கிற காசெல்லாம் ஜாலியா செலவு பண்ண போறேன்..

கூடவே ராகவ் கூட ஒவ்வொரு நாடா சுத்தி வரப்போறேன்.. என்னோட கனவெல்லாம்.. நானும், ராகவும் வாழப்போற வாழ்க்கைய பத்தி தான்..

நிறைய மெமரிஸ் மேக் பண்ணனும்.. நானும் அவரும் மட்டுமேயான தனி உலகத்துல இருக்கணும்.. நித்தம் நித்தம் காதல் செய்யணும்.. அவ்வளவு தான்..” என்று அவள் சந்தோஷமாகக் கண்களில் கனவு மின்ன கூற, அதுவரை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மணியின் முகமோ சற்று வாடியது.

“நீ சொல்லறதெல்லாம் சரி தான் தர்ஷா.. ஆனா..ராகவ் உன்கிட்ட எல்லாம் சொல்லி இருக்கானா.. இல்லையா?” என்று அவள் கேட்க தர்ஷாவோ..

“என்ன சொல்லணும்?!” என்று பதிலுக்கு வினவினாள்!

“அப்போ எதுவுமே சொல்லல தான் போலிருக்கு..

இந்த சொத்தும், பணமும்.. நகைக்கடைகள் எல்லாமேவும் தற்காலிகமா ராகவ்கிட்டயும், என் அண்ணன்கிட்டயும் ஒப்படைச்சிருக்காங்க.

அது அவங்களுக்கே நிரந்தரமான சொத்துன்னு எல்லாம் ஒன்னும் பிரிச்சு கொடுக்கலையே?

அப்புறம் இன்னொன்னு கேட்டுக்கோ.. அந்தக் குடும்பத்துக்கு நான் ஒரே ஒரு பொண்ணு! அதாவது இப்போ உயிரோட இருக்கற ஒரே ஒரு பெண் வாரிசு!

அதனால என் பாட்டிக்கும் சரி.. ராகவோட அம்மா, அப்பாக்கும் சரி.. என் மேல அவ்வளவு இஷ்டம்!

இப்பவே பாதி சொத்து என் பேர்ல தான் இருக்கு.

பியூச்சர்லஸ்.. ராகவ் கிட்ட இருக்குறதும் சரி.. என் அண்ணன் கிட்ட இருக்குறதும் சரி எனக்குத் தான்!” என்று அவள் சாதாரணம் போலக் கூற, இப்பொழுது தர்ஷாவின் முகம் கறுத்தது!

அவளது முக வாட்டத்தைப் பார்த்து.. “அச்சச்சோ தர்ஷா, நீ தப்பா நினைச்சுக்காத.

எப்படி இருந்தாலும் பேங்க்ல அவங்க பேர்ல போட்டு இருக்க பணமே பல்க் அமௌன்ட் தான்! அத வச்சு புதுசா தொழில் தொடங்கினா சீக்கிரமே பெரிய லெவலுக்கு வந்துடலாம்.

அதுவும் உன்ன மாதிரி அழகான ஒரு லக்கி சார்ம், ராகவ் கூட இருக்கும் போது அவன் சீக்கிரமா.. சில வருஷங்கள்லயே பெருசா வளர்ந்துடுவான் பாரு!” என்று புன்னகைத்த படி தர்ஷாவின் முகவாயை பிடித்து கூற, இன்னமும் தர்ஷாவின் முகம் தெளியவில்லை!

அதை அபார்த்து உள்ளுக்குள் தன் திட்டம் வேலை செய்கிறது என்ற சந்தோஷத்தில், மணி மேலும் கூறலானாள்.

“நிஜமா இத நான் உன் மனசு சங்கடப்படுத்தறதுக்காக சொல்லல..

ஆனா.. நான் நிஜத்த சொல்லணும் இல்ல? எல்லா உண்மையும் தெரிஞ்சுக்கிட்டு நீ எங்க குடும்பத்துக்குள்ள வரணும்னு நான் நினைக்கறேன்.

அப்போ தான் நம்ம ரிலேஷன்ஷிப்பும் சுமூகமான இருக்கும்..

எங்க வீட்டுல பொண்ணுங்கன்னா ரொம்ப ப்ரீஷியஸ்.. முதல் மரியாதை பொண்ணுங்களுக்குத் தான்.. அதனால தான் என் தாத்தாவே என் அம்மாவுக்கும், மாமாவுக்கும் சரி பாத்தியா அப்பவே சொத்து பிரிச்சு கொடுத்தார்.

அந்த சரி பாதி சொத்துல, மாமாக்கு நிறையவே பணம் போயிருந்தாலும்.. அவர் அப்போ இந்த நகை கடை பிசினஸ் எல்லாம் எடுத்து செய்யல.

அவருக்கு வேற தொழில்கள் மேல நாட்டம்.. வேற வகைல சம்பாதிக்க ஆரம்பிச்சாரு.. ரியல் எஸ்டேட்.. அது இதுன்னு..

ஆனா, அதுல எவ்வளவு பணம் தான் வந்தாலும்.. எங்க நகைக்கடையில் வந்த அளவுக்கு வரல.

இங்க என் அப்பா.. அம்மாக்கு வந்த சொத்தோட, அவரோட குடும்ப சொத்தையும் சேர்த்து நகைக்கடையை ஆரம்பிச்சாரு.

அது ஒன்னுக்கு நாலு கடையா பெருகுச்சு. அத பார்த்ததுக்கு அப்பறம் தான் என் மாமா, அப்பாவ பங்குக்கு சேர்த்து நகைக்கடை ஆரம்பிச்சாரு.

சோ, என் அப்பாவும் மாமாவும் சேர்ந்து ஆரம்பிச்ச கடைகள்தான் இப்போ இருக்கிற அலங்கார் மற்றும் ஆபர்ணா பிரான்ச்சஸ்.

ஆனா என் அண்ணாவும், ராகவும் தலையெடுக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்.. ரெண்டு பேருக்கும் நாலு நாலு கடையா பார்த்துக்க பிரிச்சு கொடுத்திருக்காங்க.

நல்லா புரிஞ்சுக்கோ.. அவங்க அந்தக் கடைகளோட மேனேஜிங் டைரக்டர்ஸ் தன்.

ஆனா அதுக்கு எல்லாம் ஒரே ஒரு வாரிசு.. அந்த வீட்டுப் பெண் வாரிசு தான். அதாவது நான் தான்!

ஆனா தர்ஷா நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. அவங்க ரெண்டு பேர் பேர்லயுமே நிலைய பணம் இருக்கு. அவங்க புதுசா நகை கடை ஆரம்பிக்கவும் செய்யலாம்.. அதுல பயங்கரமா முன்னேறவும் செய்யலாம்..” என்று கூற தர்ஷாவின் கறுத்த முகமும் இன்னமும் தெரியவில்லை!

மணியின் கைப்பிடிக்குள் இருந்த தனது கரத்தை மெல்ல விலகிக் கொண்ட தர்ஷா, “சரி அழகு.. எனக்குக் கொஞ்சம் தலை வலிக்கற மாதிரி இருக்கு.. நான் இன்னொரு நாள் உன்னை மீட் பண்றேன்..” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவெனை எழுந்து சென்று விட்டாள்.

அவள் செல்வதை மறைவாக உட்கார்ந்திருந்து பார்த்திருந்த நித்தியாவோ, “ஹேய் மணி.. என்னடி.. அவகிட்ட நீ என்ன சொன்ன?” என்று கேட்க.. மணியோ, நடந்ததை எல்லாம் விரிவாகக் கூறினாள்!

அதற்கு நித்யாவோ.. “தேங்க்ஸ் மணி.. நீ எங்க குடும்பத்தை காக்க வந்த சேவியர்!

என் அண்ணனும், அவளும் ஏற்கனவே காதலிச்சு இப்போ நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்த பிறகு.. ராகவ் கிட்ட இருக்கிற பணத்தை பார்த்து அவன் கிட்ட மயங்கி, இப்போ என் அண்ணனை விட்டுட்டு ராகவ் கூட போற நிலைமைல இருந்தா..

சோ, அவளை பத்தி உண்மையை சொல்லி என் அண்ணன அவகிட்ட இருந்து விலக சொன்னாலும் அவன் ஒத்துக்கல.

வாழ்ந்தாலும்.. செத்தாலும் அவ கூட தான் வசனம் பேசிட்டு இருக்கான். ‘அவளோடது உண்மையான காதல் தான்.. நடுவுல இந்த ராகவ் தான் ஏதோ மனச குழப்பி இருக்கான்..’ அப்படின்னு சொன்னான்.

நான் அதனால தான் உன்கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன்..

ராகவ்கிட்ட பேசி எப்படியாவது என் அண்ணனோட வாழ்க்கைய காப்பாத்த கேட்டேன்..

ஆனா நீ.. தர்ஷா கிட்டயே பேசி காரியத்த சாதிச்சுட்ட.. ராகவ் மேல வந்த மயக்கம் எல்லாம் வெறும் கானல் தான்னு கண்டிப்பா தர்ஷா புரிஞ்சுக்கணும்..

அதனால என் அண்ணனோட வாழ்க்கையும் நல்லபடியாகணும்டி..” என்று மிகவும் உருக்கமாக நித்யா கூற, அவளை கைதொட்டு சமாதானப்படுத்தினாள் மணி.

“இங்க பாரு நித்யா.. உன் அண்ணா, உனக்கு மட்டுமே அண்ணாவா இருக்கல. எனக்கும் தான் அவர் அண்ணா..

அவங்க வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சனைனா நான் எப்படி பார்த்துட்டு இருக்க முடியும்?

அது சமயம் என்னால ராகவ் கிட்ட எந்த உதவியும் கேட்க முடியாது.

அதனால தான் நான் தர்ஷாகிட்ட பேசினேன். நான் சொன்னதுல பாதி பொய்ன்னாலும், சிலது உண்மை தான்..

ஆனா நீ சொன்னத வச்சு பார்க்கும் போது, உன் அண்ணாவும், நித்யாவும் உண்மையாவே காதலிச்சு இருக்காங்க. இதுக்கு நடுவுல இந்த ராகவ் ஏதாவது பண்ணி இருக்கணும்.

இல்ல.. அவனோட பணத்த காண்பிச்சு தர்ஷாவ மயக்கி இருக்கணும். அதனால தர்ஷா மனசளவுல கொஞ்சம் தடுமாறிட்டா.

இப்போ அவ கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவ எடுப்பானு நான் நம்புறேன். என்ன தான் நான் பொய் சொல்லி இருந்தாலும் அந்த பொய்யால அண்ணா நல்லா இருந்தாங்கன்னா.. அது எனக்கு போதும்..” என்று மென்மையாக அவள் கூற நித்தியாவின் கண்களிலும் சந்தோஷத்துடன் சிறு கண்ணீர் வழிந்தது!

“ச்சே.. என்னது இது சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு? எப்படியோ தர்ஷாவுக்கு, ராகவ் மயக்கம் தீர்ந்துட்டா போதும்.. ஆனா அதுக்கப்பறம் நீயும், உன் குடும்பமும் இதையெல்லாம் மறந்துட்டு அவளை நல்லா பார்த்துக்கணும்..” என்று மணி கூறிக்கொண்டிருக்கையிலேயே, அப்போது அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்புறமாக இருந்து வந்தான்.. அதே ராகவ்!

அழகுமணியைப் பார்த்தபடியே அமிலமாய் அவளை முறைத்தவன்.. மெல்ல அவளருகே நடந்து வர, அதைக்கண்ட நித்யாவுக்குத் தான் தொண்டையில் நீர் வற்றிவிட்டது.

மெல்ல அழகுமணியிடம் வந்தவன், அவளது கையைப் பற்றி இழுத்தபடி விறுவிறுவென தனது காரை நோக்கி செல்ல, அழகு மணியோ..

“ஏய்.. கைய விடுடா.. என்ன விடுடா..” என்று அவனிடம் இருந்து விடுபட திமிற, அவனோ அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

“வாய மூடிட்டு வாடி..” என்று அவளிடம் சீறியபடி அவளைத் தர தரவென இழுத்துக் கொண்டு அவன் ப் நடக்க.. அங்கேயே நின்றிருந்த நித்யாவோ.. அதிர்ச்சியுடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தனது காரில், தனக்காக காத்துக்கொண்டு இருந்த டிரைவரிடம், அழகுமணியின் காரை வீட்டிற்கு எடுத்து வரும்படி பணித்தவன்.. மணியை காருக்குள் ஏற்றி சீட்டில் அமரவைத்துவிட்டு, அவளை சீட்பெல்ட்டுடன் பிணைத்துவிட்டுத் தானும் காரில் ஏறியமர்ந்து காரை ஓட்டினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
21
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்