அத்தியாயம்: 2
“கிட்டத்தட்ட ரெண்டு வர்ஷம் தடை போட்டதுக்கு அப்றம் சென்னை அணி இந்த வர்ஷம் களத்துல இறங்கி, கடைசி வரை, அதாவது கோப்பைக்கான பாதைல வீர நடை போட்டு வெற்றிக்கு பக்கத்துல வந்திருக்கு.. அதுக்கு இந்த அணில இருக்குற ஒவ்வொருத்தருக்கும் ரசிகர்கள் சார்பாக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்..
இந்த ஐபிஎல் சீசன்ல கலந்துக்கிட்ட ஒவ்வொரு இந்திய வீரருக்கும் இது முக்கியமான டோர்னமெண்ட் தா.. ஏன்னா இதுல அவங்க காட்டப் போற ஆக்ரோஷமான ஆட்டம் தா, அவங்கள இந்தியா அணில ஒருத்தரா மாத்தி, அடுத்ததடுத்த மாசம் நடக்கப் போற ஏசியன் டீ20 சாம்பியன் விளையாட இலங்கைக்கு அனுப்பி வைக்கும்..
ஆல் ரெடி இன்டியன் டீம்ல இவங்க தா இருக்கப் போறாங்க, யார் யாருக்கு எல்லாம் இடம் கண்பார்ம்னு ஒரு லிஸ்ட நேத்து இந்தியன் கிரிக்கெட் ஃபோர்டு வெளியிட்டிருந்துச்சி.. அதுல பவுலர்ஸ் மட்டும் மிஸ்ஸிங்.. பாஸ்ட் அண்டு ஸ்பின்னுக்குன்னு இன்னைக்கி நடக்கப் போற மேட்ச்ல இருந்து தா செலக்ட் பண்ணப் போறதா ஒரு நியூஸ் வந்தது..
எனக்கு ஆர்வம் தாங்கல.. யார் யார் அந்த பவுலர்ஸ்ன்னு உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா.. ” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வந்திருந்த சிறப்பு விருந்தினரிடம் கேட்க..
“கண்டிப்பா நவீத் க்ரிஷ்க்கு வாய்ப்பு இருக்கு.. ஆல் ரெடி அவரோட ஸ்பின் பவுல் லால இந்த சீசன்யே மறக்க முடியாத ஒரு சீசனா மாத்தி எல்லாரையும் திரும்பி பாக்க வச்சிட்டாரு.. அதுலயும் லாஸ்ட்டா அவரு விளையாண்ட மேட்ச் செம்மையா இருந்தது.. நாலு ஓவர், நாலு விக்கெட் பத்தே ரன் குடுத்து கலக்கிட்டாரு.. நிச்சயம் இந்திய அணில அவருக்கு வாய்ப்பு பிரகாசமா இருக்கு.. ” என்றார் அந்த கிரிக்கெட் ஜாம்பவான்..
” நவீத் க்ரிஷ், ஒரு fast bowler.. அவரோட ஆக்ரோஷமான பந்து வீச்சப் பத்தி, கடந்த ஆறு வர்ஷமா ரஞ்சி ட்ராஃபி கேம் பாக்குற எல்லாருக்கும் தெரியும்.. அப்படி இருக்கும் அவரோட பவுலிங் ஸ்பீடு.. அன்டர் 19 கிரிக்கெட் மேட்ச்ல தொடங்கி, இந்தியன் டீம்முக்காக இதுவர அனோக சர்வதேச போட்டிகள்ல விளையாண்டு வெற்றி வாகை சூட காரணமா இருந்திருக்காரு.. அவரோட பெரிய கனவு வேல்டு கப் மேட்ச்ல விளையாடுறது தா.. கண்டிப்பா இந்த மேட்ச் முடியும் போது நவீத் இந்தியன் டீம்ல இருக்காருன்னு ஃபோர்டு அனோன்ஸ் பண்றத கேக்க நா ஆவலா இருக்கேன்.. ” என்ற நிகழ்ச்சி நெறியாளர், தொடர்ந்து நவநீத கிருஷ்ணனின் சாதனைகளையும், கடந்து வந்த பாதையையும் பற்றி பேசிக் கொண்டே இருந்தார்..
விழிகளை தொலைக்காட்சியில் பதித்து விட்டு, தட்டில் இருந்த சாதத்தை அளந்து கொண்டு இருந்தவனை தலையில் தட்டி, “தின்னு முடிடா.. எவ்ளோ நேரம் தா உக்காந்திருப்ப.. அந்த மேட்ச் மயிறு பாத்தா வயிறு நிறைஞ்சிடுமாக்கும். ” என ஒரு வயோதிக பாட்டியின் குரல் கேட்க..
“ம்ச்.. ” என்றானே தவிர அவரை திரும்பியும் பார்க்கவில்லை..
” நா சீரியல் பாக்குற நேரத்துலயா வந்து டீவி முன்னாடி உக்காரனும்.. ” என முணுமுணுத்தவர்..
“நாளைக்கி பள்ளிக்கூடம் லீவா.. ” என சத்தமாக கேட்க..
“இருக்கு அப்பத்தா.. நாளைக்கி பரிச்ச கூட இருக்கு..” என்ற பதில் வந்தது பேரனிடம் இருந்து அல்ல, பேத்தியிடம்..
“டேய்.. பரிச்சைக்கி படிக்காம இந்த டீவி முன்னாடி உக்காந்திருந்தா விளங்குமா.. ரிமோட்ட குடுத்திட்டு, சாப்டுட்டு, புக்க எடுத்திட்டு போய் படி.. இல்லன்னா படுத்து தூங்கு.. மணி என்னாகுதுன்னு தெரியுமா.. ” என சீரியல் பார்க்க விடாத கடுப்பில் அவர் கத்த..
“அப்பத்தாஆஆஆ… கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டிங்களா… ஒன்னுமே கேக்க மாட்டேங்கிது.. ” என சிடுசிடுப்புடன் தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகப்படுத்த.. வீடே அலறியது..
” ஒரு பக்கிங்களும் நம்மல மதிக்க மாட்டேங்கிது.. இரு எம்புள்ள வரட்டும்.. இங்க நடக்குற அத்தன கூத்தையும் சொல்லி உன்ன ஓட ஓட அடிக்க வைக்கிறேன்.. ” என புலம்பியபடி முந்தானையை உதறி இடையில் சொருகிக் கொண்டு வீட்டை காலி செய்து பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டார், சீரியல் பார்க்க..
“கவின்.. வால்யூம்ம குறைச்சி வை.. ” என பெண்ணின் குரல் சமையலறையில் இருந்து கேட்க.. அவனோ காதில் வாங்காது திரையில் மூழ்கி இருந்தான்..
“ஐய்யோ போச்சி.. அவுட்டு.. இப்படி வரிசையா எல்லாரும் அவுட் ஆனா எப்படி தா ஸ்கோர் எடுக்க முடியும்.. கல்கத்தா டீம் ரொம்ப ஸ்டாங்காது.. அத ஜெயிக்கனும்னா ஸ்கோர் 200 மேல இருக்கனும்.. இப்படி விளையாண்டா 150 கூட தொட முடியாது.. ” என சலித்துக் கொண்டவன்..
விளம்பரம் போட்ட சிறு இடைவேளையில் தட்டில் இருந்த உணவை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு, சில நிமிடங்களில் மீண்டும் டீவியின் முன் அமர்ந்தான்.. மீண்டும் விக்கெட் விழ.. அவனின் முகத்தில் அதீத கோபத்தை காண முடிந்தது..
“அண்ணா விளம்பரம் தான ஓடுது.. சின்சான் வை ண்ணா.. ” என அவனின் தங்கை நயனிகா நச்சரிக்க..
“மத்த சேனல் மாறி இதுல நிறைய விளம்பரம் போட மாட்டாங்க.. ”
“அட்லிஸ்ட் ஒருக்க மாத்திட்டு வைண்ணா.. ”
“மாத்துற கேப்ல மேட்ச் போட்டுட்டா என்ன பண்றது.. அதுனால முடியாது.. ” என்றவனை பற்றி புகார் செய்ய சமயலறைக்கு ஓடினாள் ஏழு வயது நயனி..
அவளின் அண்ணனோ, விட்டது தொல்லை என நிம்மதியாக இருக்க.. நேரம் சென்றது.. இதோ கல்கத்தா அணிக்கு வெற்றி பெற இலக்காக 234 ரன்களை சென்னை பதிவு செய்ய.. 235 என்ற இமாலய இலக்கை அடைய வேண்டி விளையாடியது கல்கத்தா..
சீராக விக்கொட்டுகள் விழுந்த போதும் அதிரடி ஆட்டதால் வெற்றி பெற ஆறு ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தது சென்னை அணி..
கடைசி ஓவர்..
அதை வீச நவீத் அழைக்கப்பட்டான்.. அவனுக்கு சந்தோஷமாக இருந்ததோ இல்லையோ.. அவனின் தீவிர ரசிகனான கவின், அமர்ந்த நிலையிலேயே குதிக்கத் தொடங்கினான்..
“வின்னு.. சென்னைக்கு தா கப்பு.. பந்து போடப் போறது யாரு.. நவீத்ல.. சும்மா ஸ்டெம்பு பறக்கப் போது.. ” என ஆர்ப்பரிக்க.. அதற்கு தகுந்தார் போல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்று பந்து மூன்று ரன் என நகம் கடிக்க வைக்கும் ஹாட் சீட் மொமென்ட்க்கு கொண்டு வந்தான் நவீத்..
முதல் பந்து டாட் பாலாக அமைய, ரன் ஏதும் எடுக்கப்படவில்லை.. ஆனால் அடுத்த பந்தில் four சென்று boundary line னை தொட்டு விட்டது..
ஒரு பந்து மூன்று ரன் தேவை..
கடைசி பந்து துரதிர்ஷ்டவசமாக நோ பாலாகிப் போக.. தேவையான ரன் இரண்டாக குறைந்து free hit குடுக்கப்பட்டது..
தன் கையில் இருந்த பந்தை உருட்டி உருட்டி பார்த்து என்ன வேகத்தால் எந்த ஸ்டெயிலில் வீசலாம் என்று யோசித்தபடியே இருந்தவனின் தோலில் கேப்டன் தட்டிக் குடுத்து தலையசைத்து விட்டு செல்ல.. நவீத் பந்தை வீச ஓடி வரத் தொடங்கினான்..
பந்து எப்படி போடப்பட்டது என பார்ப்பதற்குள் டீவியை மறைத்தபடி வந்தது அந்த உருவம்..
“கனிம்மா வழிய விடுங்க.. ஒரே பால் தா.. கனிம்மா.. ” என இங்கும் அங்கும் அசைந்த படி நவீத் வீசிய கடைசி பந்தை பார்க்க விடாமல் செய்து விட்டாள்.. கனிரா..
” கனிம்மா.. ” என ஆங்காரமாக கத்தினான் ஒன்பது வயது சிறுவன் கவின்ராஜ்..
சென்னை வெற்றி பெற்றது போலும்.. அனைவரும் க்ரவுண்டுற்குள் ஓடி வர.. கரம் விரித்து நவீத் மண்டியிட்டு அமர்ந்தான்.. அவனை சூழ்ந்து கொண்டவர்கள் அவனை ஆரத்தழுவி தங்களின் அலப்பரிய சந்தோஷத்தை வெளிப்படுத்த.. டீவி அணைக்கப்பட்டது..
“அதா சென்னை வின் பண்ணிடுச்சில்ல.. அப்றம் ஏ முறைக்கிற.. போ.. ” என்றாள் கனிரா..
“மேன் ஆஃப் தி மேட்ச் யாருன்னு பாக்குறதுக்குள்ள ஆஃப் பண்ணிட்டிங்க.. போடுங்க.. ”
“முடியாது கவின்.. மேட்ச் முடிஞ்சது.. சென்னை வின் பண்ணிடுச்சி.. போய் தூங்கு.. நாளைக்கி நியூஸ்ல சொல்லுவாங்க யாருக்கு என்னென்ன குடுத்தாங்கன்னு.. போ.. ” என உத்தரவிட.. கையில் இருந்த டீவி ரிமோட்டை தூக்கி எரிந்து விட்டு கோபமாக சென்றான் அவன்..
“உடச்சாட்டானா.. இந்த பயலுக்கு இந்த வயசுல இம்புட்டு கோபம் ஆவாது.. எல்லாத்துக்கும் நீ குடுக்குற இடம் தா காரணம்.. வரட்டும்.. எம்மகெ வருவான்ல அவன பாத்து பேசிக்கிறேன்.. ” என ஹாலில் பாய் விரித்து படுத்துக் கொண்டார் சேர்வத்தாய்..
உள்ளே மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த நயனியின் அருகில் படுத்துறங்காது புரண்டு புரண்டு படுத்தவனை கண்டு கொள்ளாது இருவருக்கும் இடையில் படுத்தாள் கனிரா.. கவின் பக்கம் திரும்பாது நயனியை அணைத்தபடி படுத்துக் கொள்ள..
“ம்ச்.. கனிம்மா இந்த பக்கம் திரும்புங்க.. ” என்ற கவினின் குரல் காதில் விழாது போல் கனி இருக்க..
“உங்களத்தா.. இந்த பக்கம் திரும்புங்க. அவள மட்டும் தா கட்டிப்பிடிப்பிங்களா.. ”
“ஆமா. “
“ஏ.. என்ன கட்டிப் படிச்சா என்ன.. ”
“எம் பேச்ச கேக்காதவங்களோட குரல் எனக்கு கேக்காது.. அவங்க சொல்ற எதையும் நா செய்ய மாட்டேன்.. ” என்க.. சிறுவனுக்கு ரோசம் வந்திருக்க வேண்டும்.. அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.. ஆனால் உறக்கம் தான் வரவில்லை..
இது போன்று அவன் திரும்பி படுத்தால் கனிரா வந்து அவனை அணைத்து சமாதானம் செய்வாள்.. இன்று அது நடக்காது போக..
“எனக்கு பாத்ரூம் போகனும்.. ” என்றான் சிறுவன்..
” போ.. இதுக்குலாமா பர்மிஷன் கேப்பாங்க.. ”
“பர்மிஷன் கேக்க இது ஸ்கூல் இல்ல.. ”
“அப்ப எதுக்கு கேக்குற.. ”
“தெரியாத மாறி நடிக்காத கனிம்மா.. வாங்க.. ” என அவளின் கரம் பற்றி இழுக்க.. அவள் திரும்பிக் கொண்டாள்.. படுக்கையில் மண்டியிட்டு ஏறி அமர்ந்தவன்.. அவளின் கன்னத்தில் முத்தமிட்டு..
“ஸாரி.. இனி டீவி ரிமோட்ட உடைக்க மாட்டேன்.. போதுமா.. வா கனிம்மா.. அவசரம்.. ” என்க.. புன்னகைத்தபடி எழுந்து சென்று மின் விளக்கிற்கு உயிர் குடுத்தாள்.. சில நிமிடங்களில் வெளியே வந்த சிறுவனிடம்..
“தண்ணி நல்லா ஊத்தி விட்டியா.. ” என கேட்க..
“அதெல்லாம் ஊத்தியாச்சி.. ” என்றவன் அவள் விளக்கை அணைக்கும் முன் வேகவேகமாக சென்று படுக்கையில் படுத்துக் கொண்டான்..
அந்த பொடியனுக்கும் இருட்டிற்கும் ஆகாது.. பயம்..
அவனின் செயலில் நகைத்தவள் இருவருக்கும் இடையே வந்து மீண்டும் படுத்துக் கொள்ள..
கவின், “அப்பா எப்ப வருவாரு.. ”
கனி, “அடுத்த வாரம் இன்னேரம் இங்க இப்பாரு.. ”
கவின், “எனக்கு அம்மாவ பாக்கனும் போல இருக்கு.. ” என்றவனை கனி திரும்பி பார்க்க..
“எனக்கும் தா.. ஏ அம்மாவ மட்டும் சாமி சீக்கிரமா கூட்டீட்டு போய்டுச்சி.. அம்மா என்ன தப்பு பண்ணாங்க.. ” என்றபடி நயனி கனியின் இடை அணைக்க..
“சாமிக்கு தப்பு பண்றவங்கள விட பண்ணாதவங்கள தா ரொம்ப பிடிக்கும்.. பக்கத்துல வச்சி அழகு பாக்குறேன்னு கூட்டீட்டு போய்டுச்சி.. ”
கவின், “பொய்.. அம்மா எப்படி தப்பு பண்ணாம இருப்பாங்க.. அதெல்லாம் நிறைய பண்ணிருக்காங்க.. “
நயனி, “அம்மா தப்பு பண்ண மாட்டாங்க.. ” என கோபமாக கூறினாள் அவள்..
அவளிடம் இல்லை என கவின் வாதிட..
“என்னடா தப்பு பண்ணிட்டாங்க ஏ அக்கா.. ” என கனிராவும் சிறு கோபத்துடன் கேட்க..
“பச்ச பிள்ளைய அடிக்கிறது தப்பு தான.. என்னெல்லாம் எத்தன முறை கரண்டியால வெளுத்திருப்பாங்க.. அப்ப அம்மா தப்பு பண்ணிருக்காங்க தான.. ” என்க.. கனிக்கு சிரிப்பு வந்தது..
“இதெல்லாம் தப்பா.. பிள்ளைங்க சேட்ட பண்ணா அடி விழத்தா செய்யும்.. ” என்றவள் இருவருக்கும் போர்வை போர்த்தி உறங்கச் சொன்னாள்..
“ம்ச்.. இத தப்பு கணக்குல சேத்து அம்மாவ சாமி கூப்பிடாம இருந்திருக்கலாம்.. ” என்ற கவின் விழிகள் நனைந்திருந்தது..
“நடந்த எதையும் நம்மால மாத்த முடியாத கவின்.. நீ தூங்கு.. காலை ஸ்கூல் இருக்கு.. ” என்றவள் இருவரையும் தட்டிக் குடுத்து உறங்க வைத்தாள்..
அவளின் விழிகளை மூட விடாது அவளின் தமக்கை இமைகளுக்குள் நின்று கொண்டு அவளை பார்த்து சிரித்த படி, உறக்கத்தை தூக்கிச் சென்று விட்டாள்…
நல்ல நகர்வு சூப்பர் 👌
கனி நவீத் தான் ஜோடியா??
ஆமா சிஸ்..