Loading

அத்தியாயம்- 9

 

               தேன்மலர் பெங்களூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அதேசமயம் நடுக்கடலில் ஒரு ஆடம்பரமானக் கப்பலில் இருவர் பெட்டிகள் கைமாற்றி புன்னகையோடு கைக்குலுக்கி விட்டு இருவரும் தனித்தனியே வேறு வேறு திசையில் பிரிந்துச் சென்றனர். அதில் வெளிநாட்டவன் போலிருந்தவன் அந்தக் கப்பலிலேயேத் தங்கியிருப்பவன் போல அவன் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் பெட்டியைத் தன் பாதுக்காப்பாலனிடம் கொடுத்துவிட்டு அங்கு இவனைப் பார்த்து சிரித்து நின்ற இருப் பெண்களை அழைத்துக் கொண்டு அவனறைக்குச் சென்றுவிட்டான்.

 

        நம் நாட்டவன் போலிருந்த மற்றொருவன் அக்கப்பலிலிருந்து இறங்கி தயாராய் நின்றிருந்த சிறிய மோட்டார் படகில் ஏற, அவன் காதில் அவனது ஆள் ஏதோ கூற, அவன் முகம் இறுகி, காது விடைத்து முகம் நெருப்புக் கங்காய் சிவந்த மறுநொடி அவனுக்கு விடயம் கூறியவன் கன்னம் அவன் விட்ட அறையில் சிவந்தது. அடி வாங்கியவனோ அமைதியாகத் தலையைக் கீழேக் குனிந்து நிற்க, “ரகு…” என்று திரும்பாமல் கையை மட்டும் நீட்ட, அவனின் உதவியாளன் மற்றும் நண்பனுமான ரகு பாபு கைப்பேசியில் யாருக்கோ அழைத்து அதை அவனிடம் தந்தான். 

 

          கைப்பேசியைக் கையில் வாங்கியவன் கோபத்தில் சிலபல நல்ல தெலுங்கு மற்றும் தமிழ் வார்த்தைகளால் மறுபுறம் பேசியவனை அர்ச்சித்து விட்டு தெலுங்கும் தமிழும் கலந்து “என்னடா கிழிச்சுட்ருந்தீங்க… ஒரு வேல குடுத்தா அத கோட்ட விட்டுட்டு நிக்றீங்க… அவ எவ்ளோ ப்ளான்டா காய் நகத்திருக்கா… அந்த அறிவுல கொஞ்சமாவது உங்களுக்கு இருக்காடா… பெரிய இவன் மாறி சொன்னீங்க எங்க கழுகு பார்வைலேர்ந்து யாரும் தப்பிக்க முடியாதுன்னு… இப்ப ஒரு பொம்பள உங்க கண்ல விரல விட்டு ஆட்டிட்டால்ல… நீங்கல்லாம்…. ச்சீ உங்களுக்குலாம் சாப்பாடுப் போட்டு சம்பளம் குடுக்றேன் பாரு என்னை சொல்லனும்… ச்சை சரி அவ எப்டி தப்பிச்சான்னு ட்ரேஸ் பண்ணுங்கடா தடிப் பசங்களா… அப்றம் அவ ப்ரண்ட்ஸ் அவங்க குடும்பம்னு கேர்புல்லா வாட்ச் பண்ணுங்க…. மவனே இதுலயும் சொதப்புனீங்க செலவேயில்லாம கைலாசா (அவன் அந்த ஈசன் வாழ்ற இடத்த சொன்னான். உங்களுக்கு வேற புரிஞ்சா நா பொறுப்பில்ல பா) அனுப்பி வச்சுருவேன்… மைண்ட் இட்…” என்று கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தான். 

 

          பின் அவனிடம் அடி வாங்கியவனை முறைக்க, ரகு “அவன ஏன்டா முறைக்கிற… அவன் விஷயத்தை தானே சொன்னான்…” என்று கூற, அப்போதும் அவன் முறைத்திருக்க, ரகு “ஆர்யா… ஆர்யா… இங்க பாரு டா…” என்று அவன் தோள் தொட்டு அவனைத் தன்புறம் திருப்ப முயற்சித்தான். 

 

        ஆர்யா என்கிற ஆர்யன் திரும்பி ரகுவை முறைக்க, ரகு “எனக்கு புரியுதுடா… அவங்க தப்பிச்சது நமக்கு ரிஸ்க் தான்… அதுக்கு அவன் என்ன பண்ணுவான்… அவனும் நம்ம கூட தானே இருக்கான்…” என்று கூற, ஆர்யனுக்கும் அவன் கூற்று சரி என்று பட்டதோ என்னவோ சிறிது கோவம் தணிந்து அடுத்த என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான். 

 

                        படகுக் கரையைத் தொடும் முன் தன் யோசனையை முடித்த ஆர்யன் “ரகு லிங்கத்துக்கு ஃபோன் போட்டு அவள தேட சொல்லு….” என்றான்.

 

        ரகு தலையாட்டிவிட்டு தன் கைப்பேசியில் சில எண்களை அழுத்தியவன் நல்ல தமிழில் “லிங்கம்… நா ரகு பேசறேன்… உனக்கு ஒரு முக்கியமான வேலை… கொஞ்சம் சீக்ரட்டா பண்ணனும்… நா ஒரு பொண்ணு ஃபோட்டோவும் அவ கூட ரெண்டு வயசான கெழடுங்க முடியாம இருந்துச்சுங்க அதுங்க ஃபோட்டோவும் அனுப்பறேன்… அங்க அடையார்ல தான் காலைல வரைக்கும் இருந்துச்சுங்க… இப்ப திடீர்னு எஸ்கேப்பு… நீ அதுங்க எங்க போச்சுங்கன்னு கண்டுபுடிச்சு சொல்லு… கிடச்சா என்ன பண்ணனும்னு அப்றமா சொல்றேன்… ஜாக்ரத லிங்கம் அந்த பொண்ணு லேசுப்பட்டவ இல்ல… மூளக்காரி…” என்று எச்சரித்தான். 

 

          அந்தப் புறம் பேசிய லிங்கமோ “சாரு… லிங்கத்தான்ட சொல்லிட்டல்ல… கவலய உடு… அவ மூளக்காரின்னா நம்ம பசங்க ஷார்ப்பானவனுங்க… நழுவுற மீனையே கைல புடிப்பானுங்க… அந்த மீனுங்கல எப்டி வலை வீசிப் புடிக்றானுங்க மட்டும் பாரு… அப்றம் சாரு வழக்கம்போல வேல முச்சோன துட்டு குடுத்தா போதும்… லிங்கத்தான்ட சொல்லீட்டல்ல… சொன்ன வேலய பக்காவா முச்சி கால் பண்றேன்… வை சாரு…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான். 

 

         அவன் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யனுக்கு கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தவன் அவன் கூறியபடி புகைப்படங்களை லிங்கத்திற்கு அனுப்பி முடிக்க படகு கரையை வந்தடையவும் சரியாக இருந்தது. அந்த அழகிய கோவாவின் கண்டோலிம் கடற்கரையில் இவர்களின் ஆட்கள் தயாராய் நிற்க, ஆர்யனும் ரகுவும் மிடுக்கோடு சற்றுக் கோபமாக கடல் மணலில் நடந்து தங்கள் காரை நோக்கிச் சென்றனர். 

 

          செல்லும் வழியில் வெளிநாட்டுப் பெண் ஒருத்தி ஆர்யனின் கட்டுக்கோப்பான உடலிலும் சிவந்த அவன் நிறத்திலும் இறுகிய முகமாய் அவன் நடந்து வந்தாலும் அதிலிருக்கும் கம்பீரத்திலும் மிடுக்கிலும் கவரப்பட்டு அவனை நெருங்கியவள் “ஹாய் ஹேன்ட்ஸம்…” என்று கூறி அவன் டையை சரி செய்து அவன் உடலோடு ஒட்டிக் கொள்ள, ஆர்யன் இதழ்களை சிறிதாக விரித்து “ஹே பேபி… ஐ அம் ஆன் இம்பார்ட்டன்ட் வொர்க்… லெட்ஸ் மீட் சம் அதர் டைம்…” என்று கூறி அவள் கையில் தன் விசிட்டிங் கார்டை திணித்தவன் அவளது புறங்கையில் முத்தமிட்டு கன்னம் தடவி அவளைக் கடந்துச் செல்ல, அப்பெண் திரும்பி அவனை விழி அகலாமல் பார்த்தவள் “லைக் யூவர் ஆட்டிடூயூட் ஹேன்ட்ஸம்…” என்று முணுமுணுத்துவிட்டு அவனது கார்டை பத்திரப் படுத்திக் கொண்டாள். 

 

        ரகுவோ சிறு சிரிப்பொடு அவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் ஆர்யனோடு சென்றான். ஆர்யன் அப்படிதான் எவ்வளவு கோபம் என்றாலும் பெண்களிடம் மட்டும் அதை வெளிப்படுத்தவே மாட்டான். ஏனெனில் அவனைப் பொறுத்தவரை பெண்கள் அனைவரும் சொர்க்கலோகத்தை பூமியில் காட்டும் அப்ஸரஸ்கள். ஆர்யன் முதன் முதலில் கோபம் கொண்டது நம் தேன்மலர் மீதுதான். ஆனால் ரகு இவ்விடயத்தில் அவனுக்கு நேர் எதிர் தனக்கு வரப் போகும் மனைவியைத் தவிர மற்ற பெண்கள் அனைவரும் அவனுக்கு தங்கைகளே! 

 

           ஆர்யனும் ரகுவும் காரில் ஏற, கார் ஆர்யனின் ரிசார்ட்டை நோக்கிப் புறப்பட்டது. ஆர்யன் தன் கைப்பேசியில் ஜே என்று சேமித்திருந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தான். அங்கு ஆர்யனின் ரிசார்ட்டில் ஆடம்பரமான அறையில் உல்லாசமாக இருந்த ஜேவின் கைப்பேசி சினுங்க சற்று எரிச்சலோடு கைப்பேசியை எடுத்த ஜே திரையில் ஆர்யனின் எண்ணைக் கண்டதும் யோசனையோடு அழைப்பை ஏற்று காதில் வைக்க, ஆர்யன் ஆங்கிலத்தில் “அவங்க மிஸ்ஸிங்… நா இன்னும் பத்து நிமிஷத்துல அங்கயிருப்பேன்… என் ரூம்ல வெயிட் பண்ணுங்க….” என்று கூறி அவனின் பதிலை எதிர்ப்பார்க்காது அழைப்பைத் துண்டித்தான். 

 

                  ஆர்யன் கூறிய செய்தியில் அந்த அயல்நாட்டானின் முகம் தக்காளிப் பழமாய் சிவந்தது. தன் மீதிருந்த பெண்ணை வேகமாகக் கீழே தள்ளிவிட்டு அவசர அவசரமாக தன் ஆடைகளைத் தேடி அணிந்து அறைக் கதவைத் திறக்கும் வேளை, அவனால் கீழே தள்ளப்பட்ட பெண் ஏன் என்று புரியாமல் விழித்தவள் “என்னாச்சு… ஏன் பாதிலயே போற… நா இருக்கவா போகவா…” என்று வினவ, திரும்பி அவளை நோக்கி சில டாலர்களை எறிந்தவன் “நீ போலாம்…” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறினான். 

 

          அவன் ஆர்யனின் அறைக்குச் சென்ற ஐந்து நிமிடத்தில் ஆர்யனும் ரகுவும் வந்துவிட, ஜே “என்னாச்சு ஆர்யன்… எப்டி…” என்று கேட்டான். ஆர்யன் இறுக்கமாக தன் இருக்கையில் அமர்ந்து “தெரில… லெவன் தேர்ட்டி போல சிப் சிக்னல், ஃபோன் சிக்னல் எல்லாமே கட்டாயிடுச்சு… நாம அவங்கள குறைச்சு எடப்போட்டுடோம்னு நினக்கிறேன்… தேட சொல்லீற்கேன்… மே பீ டூ ஹார்ஸ்ல இன்பர்மேஷன் வந்துரும்…” என்றான். 

 

         அதைக் கேட்ட ஜே அனல் தெறிக்க “வாட்…” என்று நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்தவன் “என்ன ஆர்யன் இது… இவ்ளோ கேர்லெஸா இருக்க… உன்னை நம்பி தான் நா இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்துருக்கேன்… மாட்னா உன்னைவிட எனக்குத்தான் தண்டனை ஜாஸ்தி… இதுக்கு தான் அந்த சிதம்பரத்த க்ளோஸ் பண்ண சொன்னேன்… நீ தான் அதவிட அவன நம்ம டெஸ்ட் ரேட் மாறி யூஸ் பண்ணலான்னு சொன்ன… இப்ப பாரு…” என்று கத்தியின் பின் “ஓகே ஆர்யன்… என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது… அவங்க எங்கன்ற இன்பர்மேஷன் நீ சொன்ன மாறி இன்னும் டூ ஹார்ஸ்ல வரணும்… இல்லனா என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்…” என்று மிரட்டி விட்டு அவன் அங்கிருந்து அகன்றான்.

 

         ஆர்யனோ அவன் சென்றதும் “ஆஆஆ” என்று கத்திக் கொண்டே மேசையிலிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து சுவற்றில் எறிய அது சுக்கு நூறாக உடைந்து அறையின் பாதியை கண்ணாடி துகள்களால் நிறைத்தது. ரகு அமைதியாக “கூல் ஆர்யா… கூல் இப்ப கோவப்பட்றத்துக்கான நேரமில்ல…” என்று கூற, தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட ஆர்யன் “ம்ம்… ஆனா ரகு இந்த கெழவன் பேசுன பேச்சுக்கு… இவன அப்றம் வச்சுக்றேன்… முதல்ல அவங்க கெடைக்கட்டும்… அவள…” என்று பல்லைக் கடித்தான். பின் ஆர்யன் கோபமாக அமர்ந்து விட, ரகு ரிசார்ட்டின் வேலைகள் எப்படி நடக்கிறதென்று விசாரிக்க ரிசார்ட்டின் மேனேஜரை தேடிச் சென்றான். 

 

                       சரியாக இரண்டு மணி நேரத்தில் அவனது ஹேக்கிங் டீமிடமிருந்து ஃபோன் வர, அதை ஆவலோடு எடுத்துப் பேசியவன் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த, கொண்டிருக்கும் கைப்பேசி எண்களிலிருந்து எந்த உருப்படியானத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளை சோதித்த போதும் அதிலிருந்து இதுவரை அவர்கள் பணம் எடுத்ததற்கான, மாற்றியதற்கான அடையாளமோ எந்த டேக்ஸியோ ப்ளைட்டோ அல்லது வெளியில் சிறு பொருள் வாங்கியதற்கான எந்த அடையாளமுமில்லை என்று கூற, ஆர்யன் அவர்களின் காது கருகும் வரை நல்ல நல்ல வார்த்தைகளால் வசுவு மழைப் பொழிந்து விட்டு அழைப்பைத் துண்டித்தான். 

 

         பின் யாருக்கோ அழைத்து தேன்மலர், சிதம்பரம் மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்களை அவன் ஆணையின் பெயரில் ஹேக் செய்து கண்காணித்துக் கொண்டிருந்த அந்த இரண்டு வாலிபர்களையும் கட்டிப் போட்டு சென்னையிலுள்ள அவனது பண்ணை வீட்டில் அடைத்து வைக்கக் கூறினான். 

 

         ஆர்யன் கோபமாக தன் அறையில் உலாத்திக் கொண்டிருக்க, அச்சமயம் மேனேஜரை பார்க்கச் சென்றிருந்த ரகு “ஓகே லிங்கம்… நீ அவ எங்க போயிருக்கான்னு கண்டுபுடி… இந்த விஷயத்தை நாங்க பாத்துக்றோம்…” என்று லிங்கத்திடம் பேசியவாறு வந்தான். 

 

        ஆர்யன் கேள்வியாய் அவனைப் பார்க்க, ரகு “ஆர்யா… அவ மட்டும் வீட்ட பூட்டிட்டு ஆட்டோல போறத அந்த தெருவுல உள்ள யாரோ பாத்துருக்காங்க… மத்தவங்க எங்கன்னு தெரில… ஆனா ரெண்டு நாள் முன்னாடி நைட் ஒரு ட்ராவலர் வேன் அந்த தெருவ தாண்டிப் போனத அந்த தெரு மூக்குல ஆட்டோ போட்ருக்கற ஆட்டோக்காரன் பாத்துருக்கான்…” என்றான். ஆர்யன் ரகு கூறியதைக் கேட்டு வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்தான்.

 

         பின் ராஜேஷ், துர்கா இருவரின் கைப்பேசி சிக்னலும் கட்டானதாகக் கூறியதை நினைவுக் கூர்ந்தவனுக்கு ஏதோ தவறாகப் பட, நிதானமாக யோசித்தவனுக்கு ஏதோ பொறித் தட்ட “ரகு… ஏர்ப்போர்ட்… ஏர்ப்போர்ட்ல செக் பண்ண சொல்லு…” என்றான். 

 

         ரகு உடனே தன் ஆள் மூலம் சென்னை ஏர்ப்போர்ட்டில் பயணிகள் விவரத்தை சோதித்தவனுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ரகு அதை ஆர்யனிடம் சொல்ல, ஆர்யன் சிறிது யோசித்தவன், நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ரகசியமாக தேன்மலர் மற்றும் சிதம்பரத்தின் விவரம் கொடுத்து அவர்களின் பெயர்கள் பயணிகள் பட்டியலில் உள்ளதா என்று தன் செல்வாக்கைப் பயன்படுத்தித் தேடச் சொன்னான்.

 

                     அவன்பாடடுக்குத் தேடிக் கொண்டிருக்கட்டும் அதற்குள் நாம் தேன்மலரை பார்த்துவிட்டு வருவோம். பெங்களூர் பேருந்தில் ஏறி அமர்ந்த தேன்மலர் மனதில் கலவையான உணர்வுகள். தன் உயிரான உறவுகளை ரகசியமாய் தூரதேசம் அனுப்பி வைத்தக் கவலை ஒருபுறம், இப்படி அனுப்பி வைக்க வேண்டியதாகிவிட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம், தன் தந்தையை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களின் மேல் கோபம் ஒருபுறம், ஆனால் ஏன்? எதற்கு? இப்படி செய்தார்கள் என்ற கேள்வி ஒருபுறம், தனக்கு உற்ற நேரத்தில் தோள் கொடுத்த தோழனுக்குத் தெரியாமல் வருகிறோமே என்ற சோகமும் சங்கடமும் ஒருபுறமிருந்தாலும் அவனை இப்பிரச்சனையிலிருந்து விலக்கி வைத்த நிம்மதி ஒருபுறம், ராஜேஷ் மற்றும் துர்காவை இதில் இழுத்துவிட்ட குற்றவுணர்வு ஒருபுறம், அடுத்து எப்படி? என்ன செய்வது? எதைக் கண்டுப்பிடிப்பது? என்ற குழப்பம் ஒருபுறம் என்று பல உணர்வுகள் அவளை மாற்றி மாற்றி ஆக்கிரமிப்புச் செய்தாலும், இறங்கிவிட்ட பின் வாங்கக் கூடாது என்ற அவள் உறுதியும் எப்படியும் இதற்கான காரணம் கண்டறிய வழிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவளை அவ்வுணர்வு போரில் வெற்றிக் கொள்ளச் செய்தது. ஒருவழியாக பேருந்து பெங்களூர் எல்லையைத் தொட, தேன்மலர் எல்க்ட்ரானிக் சிட்டியில் இறங்கிக் கொண்டாள். 

 

          ஏற்கனவே தேன்மலர் பெங்களூர் வந்திருந்தாலும் அப்பொழுது அவள் அப்பா, அம்மாவோடு காரில் வந்ததாலும் அதுவும் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் என்பதாலும் தற்போழுது அவளுக்கு எப்படி செல்வதென்று தெரியவில்லை. ஒரு ஆட்டோக்காரரிடம் விலாசத்தைக் கூறி அங்கு செல்ல வேண்டுமென்று கூற, அவர் பத்து நிமிடத்தில் போய் விடலாம் என்று கூறியதாலும் தமிழ்காரராய் போய்விடவும் இவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவரிடமே ஒரு நல்ல உணவகமாகப் பார்த்து நிறுத்தச் சொல்லி தனக்கான உணவை வாங்கிக் கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி தன் தந்தை தனக்குப் பரிசளத்த இல்லத்தை வந்தடைந்தாள். ஆட்டோவிற்கான பணம் செலுத்தி அவருக்கு நன்றியுரைத்து இல்லத்தின் கேட்டைத் திறந்தவள் கண்களில் நீர் வழிய சிறிது நேரம் அப்படியே நின்றாள். 

 

         பின் டெல்லி கிளம்பிய அன்று அருளுக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த அந்த இல்லத்தின் சாவிக் கொண்டுக் கதவைத் திறந்து விளக்கைப் போட்டவள் ஒருமுறை வீட்டைக் கண்களால் நிறைத்தாள். வீட்டைப் பார்த்தப் பின் அவளுக்கு அன்று தன் அப்பா, அம்மாவுடன் இவ்வீட்டில் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கழித்த அந்த நாட்கள் நிழலாடியது. 

 

          சிதம்பரத்தின் நண்பர் தன் மகனின் திருமணத்திற்கு சிதம்பரத்தை குடும்பத்தோடு வர வேண்டுமென்று கட்டாயப் படுத்தியதால், வரமாட்டேன் என்று அடம்பிடித்த தேன்மலரையும் சிதம்பரமும் வள்ளியும் கெஞ்சி கொஞ்சி அழைத்து வந்திருந்தனர். வேண்டா வெறுப்பாக வந்த தேன்மலருக்கு பாரம்பரியமும் நவீனமும் கலந்துக் கட்டிய அந்த வீடும் வீட்டிலிருந்தக் குடும்பமும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட அனைவரோடும் இயல்பாக ஒட்டிக் கொண்டாள். திருமண வீட்டில் துள்ளித் திரியும் தங்கள் மகளைக் கண்டு சிதம்பரமும் வள்ளியும் அவ்வளவு மகிழ்ந்தனர். அதெல்லாம் அவள் நினைவிலாட விழியோரம் துளிர்த்த நீருடனும் இதழில் மென்னைகையோடும் அந்த வீட்டை மறுமுறை சுற்றிப் பார்த்தாள். பின் தான் வாங்கி வந்த உணவை உண்டும் உண்ணாமலும் கீழிருந்த ஒரு அறையில் உறங்கச் சென்றாள். தன் சொந்தங்களை அமெரிக்கா அனுப்பிய நாளிலிருந்து உறங்காமலிருந்தவளுக்குப் பயணக் களைப்பும் சேர்ந்துக் கொள்ள படுத்தவுடன் உறங்கிப் போனாள்.

 

                       இவள் இங்கு நிம்மதியாக துயில் கொள்ள இவளால் அங்கு ஆர்யன் துயில் தொலைத்து அவதியுற்று கோபத்தில் அவனது அறையின் நீள அகலத்தை நடந்தே அளந்துக் கொண்டிருந்தான். ஆர்யன் தன் செல்வாக்கைப் பயன் படுத்தி இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அவர்களைப் பற்றியத் தகவல் தேடச் சொல்ல, ஆனால் அன்றைய விமானங்கள் எதிலும் அவர்கள் பயணம் செய்ததற்கான தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்தவர்கள் இரண்டு நாட்கள் நேரம் கேட்டு அந்த வாரம் முழுவதுமான தகவல்களைத் தேடி பதில் கூறுவதாகக் கூறவும் ஆர்யன் சரி என்று விட்டு தன்னறையில் இருந்தப் பொருட்களின் மீது தன் கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். அவனின் கோபம் கண்ட ரகு தனக்குத் தெரிந்த மேலும் சில ஆட்களிடம் கூறி தமிழ்நாடு ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் அவர்களைத் தேட ஏற்பாடுச் செய்தான். பின் ரகு ஆர்யனிடம் அவர்களைக் கண்டுப்பிடித்து விடலாம் என்று பேசிப் பேசி அவனை சமாதானப் படுத்தியவன், ஜே விடமும் பேசி புரிய வைத்து அவனது கோபம் தணித்து அவனை ஆர்யனிடம் பேச வைத்தான். ஆர்யனுக்கு ஜேவின் மேல் கோபமிருந்தாலும் தற்போது அதைக் காட்டுவதற்கான தருணம் இதுவல்ல என்றுணர்ந்து அவனிடம் மன்னிப்புக் கேட்டு இரண்டு நாட்களில் அவர்களைக் கண்டுப்பிடித்து விடுவதாகக் கூறவும், ஜே வும் ஆர்யனிடம் தான் பேசியதற்கு மன்னிப்பு வேண்டினான். அதன்பின் ஆர்யனின் கோபம் முழுவதும் தன் கண்ணில் மண்ணைத் தூவிச் சென்ற தேன்மலர் புறம் திரும்பியது. 

 

         இரண்டு நாட்கள் ஆர்யன் சரியாக உண்ணாது உறங்காது இருக்க, சிதம்பரம், வேலாயி, துர்கா, ராஜேஷ் நால்வரும் கேரளத்திலுள்ள கண்ணூர் விமான நிலையத்தில் துபாய் செல்லும் விமானத்தில் பயணித்ததாகத் தகவல் வர, ஆர்யன் அதை ரகு மற்றும் ஜேவிடம் கூற, அதைக் கேட்ட ஜே துபாயில் தனக்குத் தெரிந்த ஆட்கள் மூலம் விசாரித்ததில் அவர்கள் அமெரிக்கா சென்றது தெரிய வர, ஜே முகத்தில் கோபத்தைத் தாண்டிய சிறு மிரட்சித் தென்பட்டதை ஆர்யனும் ரகுவும் கவனிக்கத் தவறவில்லை. ஜே தான் உடனே அமெரிக்கா சென்று அவர்கள் எங்கிருக்கிறார்களென்று அறிந்து அவர்களை தான் பார்த்துக் கொள்வதாகவும் அதற்குள் அவர்கள் தேன்மலரை தேடிக் கண்டுப்பிடிக்கும்படியும் கூறிவிட்டு அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யச் சென்றான். 

 

        ஆர்யன் “ச்ச… ஒரு பொண்ணு என்னை ஏமாத்திருக்காளே…” என்று சுவற்றில் ஓங்கிக் குத்தி தன் கோபத்தை வெளிப் படுத்தியவன், தன் ஆட்கள் மூலம் அவளின் நண்பர்களான அருள் மற்றும் ராகவியை கண்கானித்ததில் அவர்கள் இருவரும் கல்லூரியில் தேன்மலர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அவர்களின் துறைத் தலைவரிடம் புலம்பியதையறிந்து அவர்களுக்கு உண்மை தெரியாது என்று நிம்மதியுற்றவன் அவள் எங்கு சென்றிருப்பாளென்ற யோசனையில் ஆழ்ந்தான். 

 

                    இரண்டு நாட்கள் முன்பே தேன்மலர் ஆட்டோவில் ஏறி சென்றதாக அறிந்த லிங்கம் அந்த ஆட்டோ ஓட்டுநரை தேடிக் கொண்டிருக்க, அவனோ அவனின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்குச் சென்றிருப்பது அறிந்து அவனது கைப்பேசி எண்ணிற்குத் தொடர்புகொள்ள, அப்போதெல்லாம் ஒரு குழந்தை எடுத்து ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி அவனைக் கடுப்பேற்றி விட்டது. 

 

        இரண்டு நாட்கள் கழித்து ஆட்டோ ஓட்டுநர் ஊரிலிருந்து வந்ததை அறிந்த லிங்கம் அவனை தங்கள் இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த குழந்தை ஏற்றிய கடுப்பையெல்லாம் அவன்மீது சிலபல அடிகளாக இறக்கி விட்டு, பின் தேன்மலரின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தான். ஆட்டோ ஓட்டுநர் அடி வாங்கிய வலியில் முணகிக் கொண்டே சிறிது யோசித்து அவளைப் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டதையும் அவள் பெங்களூர் சென்ற பேருந்தில் ஏறியதையும் கூற, அவனை மீண்டும் அடித்து தாங்கள் விசாரித்ததை யாரிடமும் கூறக்கூடாதென்று எச்சரித்து அவனை அனுப்பி வைத்தனர் லிங்கத்தின் கூட்டத்தார். 

 

         லிங்கம் இத்தகவலை ரகுவிடம் கூற, ரகு தன் ஆட்கள் மூலம் பெங்களூரில் தேன்மலரை தேட ஏற்பாடுச் செய்தான். அந்த பஸ் கண்டக்டரைப் பிடித்த லிங்கம் தேன்மலர் புகைப்படத்தைக் காட்டி அவள் வீட்டில் பார்த்திருந்த மாப்பிள்ளைப் பிடிக்காமல் ஓடி வந்துவிட்டதாகவும் அவளதுக் குடும்பத்தினர் கவலையோடு அவளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் கூற, கண்டக்டர் அன்று பேருந்தில் எங்கோ வெறித்தபடி தண்ணீர் கூட அருந்தாமல் வந்த அவளை நினைவில் வைத்திருந்தவர் அவளின் அந்த நிலைக்கான காரணம் லிங்கம் கூறியதாகத் தானிருக்கும் என்று முடிவு செய்து அவள் எலக்ட்ரானிக் சிட்டியில் இறங்கியதாகக் கூறினார். லிங்கம் அவருக்கு நன்றியுறைத்து விட்டு அந்தத் தகவலை ரகுவிடம் கூற, ரகு ஆர்யனிடம் கூற, ஆர்யன் உடனே லிங்கத்தை அவனின் ஆட்களோடு பெங்களூர் புறப்பட்டுச் செல்லக் கூறினான். 

 

                     பெங்களூர் சென்ற தேன்மலர் அன்று நன்றாக உறங்கி எழுந்து, மறுநாள் விடிந்ததும் தன் வேலைகளை முடித்தவள் எதைத் தேடுகிறோமென்றேத் தெரியாமல் அன்று முழுவதும் தண்ணீர் கூட அருந்தாமல் வீடு முழுக்கத் தேடி உருப்படியாக ஒன்றும் கிடைக்காமல் அயர்ந்துப் போனாள். அடுத்து என்ன செய்வதென்ற பெருங்கேள்வி அவள் முன் தொக்கி நிற்க, யோசனையும் குழப்பமுமாய் அவ்விரவைத் தூங்கா இரவாகக் கழித்தாள். மறுநாள் காலை கடைக்குச் சென்று உணவு உண்டு வீட்டிற்கு வந்தவளுக்கு முதல்முறை தவறானப் பாதையில் செல்கிறோமோ என்ற பயம் வர, யோசனையோடு யாரிடமும் தற்போது உதவிக் கோர முடியாதே என்று ஆதங்கப்பட்டாள். இவ்வளவு நாட்கள் தைரியமாக சரியாய் தெளிவாய் முடிவெடுத்தவளுக்கு முதல் முறை ஏதோ தவறாக நடக்கப் போவது போல் உள்ளம் அடித்துக் கொண்டது. இருந்தும் எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்ற தைரியமும் நம்பிக்கையும் அவளது பயத்தை வெற்றிக் கொண்டது. அதுவரை பசியெடுக்காத அவளது வயிறு என்னை சற்று கவனியேன் என்று கெஞ்ச, சரி சாப்பாடு வாங்கலாம் என்று மணியைப் பார்த்தவள் அது இரவு எட்டு என்று காட்ட, அவளுக்கே ஆச்சர்யம்தான் தான் இத்தனை யோசனையோடு காலையிலிருந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது. முகம் அலம்பி வீட்டைப் பூட்டி விட்டு சாப்பாடு வாங்கக் கிளம்பினாள். 

 

         வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைப் பயணத்திலிருந்த உணவகத்திற்குச் சென்று தனக்கான உணவை பார்சல் வாங்கியவள் வீட்டிற்குத் திரும்பினாள்‌. வரும் வழியில் யாரோ தன்னைத் தொடர்வது போல் உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க, சந்தேகப்படும்படி யாருமில்லாததால் திரும்பி வேகமாக வீட்டிற்கு விரைந்தாள். வீட்டின் கேட்டேத் திறக்கும் வேளை பின்னே வேகமாக ஒரு கார் இடிப்பது போல் வந்து நிற்கும் முன்னே, அதிலிருந்து வேகமாக இறங்கியவர்களில் இருவர் தேன்மலரை பிடித்துக் கொள்ள, அவளது முகத்தில் பின்னிருந்து ஒருவன் மயக்க மருந்தை அடிக்க, தேன்மலர் அவர்கள் பிடியிலிருந்து திமிற, அவள் கையிலிருந்த உணவு பை, பர்ஸ் எல்லாம் கீழே விழ, அவளைக் காரில் வந்தவர்கள் வேகமாக காரினுள் ஏற்றி காரை மின்னல் வேகத்தில் ஓட்டி அந்தத் தெருவிலிருந்து வெளியேறினர்.

தொடரும்….

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்