அத்தியாயம்- 8
துர்காவின் ஆச்சர்யமான மகிழ்ச்சி கண்டு தேன்மலர், சிதம்பரம், ராஜேஷ் மூவரும் புன்னகைத்தனர். சிதம்பரம் குழறியவாறு “ஆச்சர்யமா இருக்காமா துர்கா… துர்கா தானே…” என்று கேட்க, துர்கா ஆமென்று வேகமாக தலையாட்ட, “எனக்கு சென்னை வந்த கொஞ்ச நாள்லயே ஓரளவு பேச வந்துருச்சு… ஆனா என் உடம்புல மைக்ரோ சிப் இருந்ததால நா அமைதியா இருந்துட்டேன்… ஆமா என் உடம்புல மைக்ரோ சிப் இருக்குன்னு உனக்கெப்டி தெரியும் ஹனி…” என்று தன் மகளை நோக்கிக் கேள்வித் தொடுத்தார்.
தேன்மலர் புன்னகை முகமாய் “அது…. சொல்லனுமா சிதம்பரம்…” என்றிழுக்க, சிதம்பரம் சிரித்து “வாலு… சொல்லு ஹனி மா…” என்றிட, தேன்மலர் “உங்ககூட வொர்க் பண்றவரு தான் சொன்னாரு…” என்றாள்.
சிதம்பரம் கேள்வியாய் புருவம் நெரிக்க, தேன்மலர் “எனக்கே நீ என்கிட்ட பேச தயங்கும்போது டவுட் இருந்துது… அப்றம் அவரு என்ட்ட பேசனப்றம் கன்பார்ம் ஆச்சு… யாரோ டி ன்னு சொன்னாரு… அவருதான் எப்டியோ என்னை காண்டாக்ட் பண்ணி உங்க அப்பா கைல சிப் இருக்கு அத மட்டும் எப்டியாவது ரிமூவ் பண்ணிடுங்க… மத்தத நா பாத்துக்றேன்னு சொன்னாரு…” என்றாள். சிதம்பரம் அதைக் கேட்டு சற்று நிம்மதியுற்றாலும் தீவிர யோசனையில் ஆழ்ந்தார்.
அதைக் கவனித்த ராஜேஷ் தேன்மலரை பார்க்க, தேன்மலர் தான் பார்த்துக் கொள்வதாய் சைகை செய்துவிட்டு “அப்பா…” என்றழைக்க, சிதம்பரம் யோசனை கலைந்து தன் மகளைப் பார்த்தார்.
தேன்மலர் “அப்பா… டி நாம இங்க இருக்றது ஸேஃப் இல்லனு சொன்னாரு… ஸோ ராஜேஷ், துர்கா, அப்பாயி, நீ நாலு பேரும் முன்னாடி அமெரிக்கா போங்க… நா சந்தேகம் வராம இருக்க… ரெண்டு நாள் கழிச்சு அந்த சிப்ப டெஸ்ட்ராய் பண்ணிட்டு நானும் வரேன்…” என்றாள்.
சிதம்பரம் சிறிது யோசிக்க, அவரது முகம் இயலாமை, தவிப்பு, கோவம், வருத்தம் என்ற கலவையான உணர்வுகளை வெளிப்படுத்த, அதை தேன்மலர் கவனமாக கவனித்து மனதில் குறித்துக் கொண்டாள்.
பின் சிறு புன்னகையோடு “சரி டா… பட் நீ ஸேஃப் ஹனி…” என்று கூற, தேன்மலர் சரியென்று புன்னகைத்தாள். சிதம்பரம் “ஹனி… அம்மா…” என்க, தேன்மலர் ராஜேஷ் மற்றும் துர்காவின் உதவியோடு அவரை வேலாயியின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
தேன்மலர் வேலாயியிடம் சென்று “அப்பாயி… உன் மகன் உன்னை பாக்க வரலனு பொலம்புவியே… இப்ப அப்பா வந்துருக்கு பாரு… அதோட இன்னொரு ஹைலைட்டான விஷயம் என்னன்னா…. என் ஊர விட்டு எங்கயும் போக மாட்டேன்னு பிகு பண்ணுவியே… இப்ப ஒன்றை மாசமா சென்னைல இருக்க… அதுமட்டுமில்ல உன் புள்ள கூப்ட்டும் நீ போகாத சீமைக்கு இப்ப உன் புள்ளகூடவேப் போகப் போற…” என்று கூறி புன்னகைக்க, எவ்வுணர்வுமின்றி கிடக்கும் வேலாயியை கண்ட சிதம்பரத்தின் கண்கள் கலங்க, தேன்மலர் புன்னகை மாறாமல் “அப்பா… அப்பாயி சீக்ரம் கண்முழிக்கும்… நீ கவலப் படாத ப்பா…” என்று சிதம்பரத்தின் கண்களைத் துடைத்து விட, சிதம்பரம் அநாதரவாய் நிற்கும் இந்நிலையிலும் நம்பிக்கையாய்ப் பேசும் தன் மகளை பெருமைப் பொங்கப் பார்த்தவர், அந்நம்பிக்கையை தன்னுள்ளும் விதைத்துக் கொண்டார். பின் சிதம்பரத்தை அவர் அறைக்கு ராஜேஷ் அழைத்துச் செல்ல, தேன்மலரும் துர்காவும் இரவு உணவு சமைத்து சிதம்பரத்திற்கு கொடுத்துவிட்டு ராஜேஷோடு தாங்களும் உண்டனர்.
சிதம்பரத்தைக் காணச் சென்ற தேன்மலர் அவர்கள் நால்வரும் இன்றிரவே புறப்பட வேண்டுமென்று கூற, சிதம்பரம் சரியென்று அவளைப் பத்திரமாக வரும்படிக் கூறினார். பின் ராஜேஷ் சிதம்பரத்திற்கான மருந்துகளைக் கொடுக்க, அதன் விளைவாய் சிதம்பரம் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றார். தேன்மலர் அந்த சிப் இருந்த குடுவையை அப்போதே அறையிலிருந்து கூடத்திற்கு மாற்றிருந்தவள், தற்போது அதை சிதம்பரத்தின் அறையில் வைத்துவிட்டு வெகு நேரமாய் தன்னிடம் ஏதோ கேட்க தயங்கிக் கொண்டிருக்கும் ராஜேஷை தேடிச் சென்றாள்.
வீட்டின் வெளியே ராஜேஷும் துர்காவும் பேசிக் கொண்டிருக்க, அவர்களிடம் வந்த தேன்மலர் “துர்கா… அப்பாயிய ஒரு தடவைப் பாத்துட்டு ஊருக்கு போக, உனக்கு அப்பாயிக்கு எல்லாம் சரியா எடுத்து வச்சுருக்கியான்னு ஒரு தடவ செக் பண்ணிக்கோ…” என்று கூற, துர்கா “சரி க்கா… அக்கா நீங்க என்கிட்ட முழுசா சொல்லலனாலும் ஏதோ பிரச்சனைல இருக்கீங்கன்னு மட்டும் புரியுது… எப்டி இருந்தாலும் இந்த தங்கச்சி எப்பவும் உங்ககூட இருப்பா…” என்று கூறி புன்னகைத்துச் செல்ல, செல்லும் அவளைப் பார்த்த தேன்மலர் ஒரு பெருமூச்சோடு ராஜேஷின் புறம் திரும்பினாள்.
ராஜேஷ் “தேன்மலர்… இப்பவாவது துர்காகிட்ட எல்லாம் சொல்லலாம்ல…” என்று கேட்க,
தேன்மலர் “இல்ல ராஜேஷ்… அவளுக்கு என்ன விஷயம்னு அமெரிக்கா போனப்பறம் தெரிஞ்சா போதும்… பழகுனது கொஞ்ச நாளானாலும் என்கிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டா… சின்ன பொண்ணு அவ… அவள இதுல இழுக்க வேணானு தான் நினச்சேன்… பட் எனக்கு வேற வழியில்ல… உங்களால அப்பாயி, அப்பா ரெண்டு பேரையும் மேனேஜ் பண்ண முடியாதுல்ல… எனக்கு இங்க முடிக்க வேண்டிய வேல நிறைய இருக்கு… இல்லனா அவளுக்கு பதிலா நானே உங்ககூட வந்துருவேன்…” என்று கூறும்போது அவள் குரலிலும் முகத்திலும் அப்படி ஒரு தீவிரம்.
பின் நொடியில் தன்னுணர்வை சரி செய்துக் கொண்டவள் “இப்ப தெரிஞ்சா அவ பயப்படவோ என்னை பத்திக் கவலப்படவோ சான்ஸ் இருக்கு… அதனால தான்…” என்றாள். அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜேஷிற்கு இந்த சிறிய வயதில் இத்தனை பக்குவமா? தெளிவா? என்று ஆச்சர்யம் கொண்டவன் அவளின் நம்பிக்கையையும் எவ்வளவு ஆபத்தான சூழலில் இருக்கிறோம் என்று உணர்ந்தும் அவளின் பதற்றமற்ற தெளிவானத் திட்டமிடலையும் அடுத்து அவள் செய்ய கையில் எடுத்திருக்கும் காரியத்தின் தீவிரத்தையும் நினைத்து வியந்து சிலிர்த்து நின்றான்.
பின் தன்னை நிதானித்து “தேன்மலர்… ஏன் நீங்க உங்க அப்பாகிட்ட எதுவுமே கேக்கல… அட்லீஸ்ட் அந்த டி சொன்ன எல்லா விஷயத்தையும் சொல்லீற்கலால…” என்று கேட்டான்.
அவனைத் தீர்க்கமாகப் பார்த்த தேன்மலர் “ராஜேஷ் என்ன நீங்க புரியாம பேசறீங்க… நீங்க தானே சொன்னீங்க அவரு உணர்ச்சிவசபட்ற மாறி எதாவது சொன்னா அவருக்கு ப்லட் ப்ரஷர் ஹையாகி அவர் கன்டிஷன் மோசமாகும்னு… அதான் எதுவும் சொல்லவுமில்ல கேக்கவுமில்ல… அப்பாகிட்ட கேட்டா நிமிஷத்துல விஷயம் தெரிஞ்சுரும் தான்… ஆனா அதுக்கப்றம் அவரோட நிலைம? அப்பா வேலைல எவ்ளோ சின்ஸியர்னு எனக்கு தெரியும் அவரோட லட்சியம் எப்படிப்பட்டதுன்னும் எனக்கு தெரியும்… அதனால தானே சின்ன வயசுலேர்ந்து அப்பா பாசத்துக்கு ஏங்கியும் அவருக்கான ஸ்பேஸ் குடுக்கனுனு ஒதுங்கியிருக்கேன்… அப்பாயியையும் அப்பாவ எதுவும் சொல்லவிடாம இருக்கேன்… இப்போ அத கேட்டா அப்பா அமெரிக்கா போக ஒத்துக்க மாட்டாரு… என்ன ஆனாலும் என் வேலய முடிச்சுட்டு தான் அடுத்ததுன்னு நிப்பாரு… எனக்கு என் அப்பா முக்கியம்… அதுக்காக நா என்ன வேணாலும் செய்வேன்… அப்பாவோட வேலய முடிக்க வேண்டியது இனி என் பொறுப்பு… அப்றம் அந்த டி சொன்ன எல்லாம் சொன்னா… அப்பாவுக்கு எனக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சுனு தெரிஞ்சுராது… அப்டி தெரிஞ்சா அப்பா சும்மா இருப்பாரா? அப்றம் அவருக்கு எப்டி ட்ரீட்மெண்ட் பண்றது? ஸ்ட்ரோக்லேர்ந்து அவர எப்டி நிரந்தரமா க்யூர் பண்றது?” என்று கேட்டாள்.
ராஜேஷிற்கு அவள் கேட்பது நியாயமாகப் பட “சரிங்க தேன்மலர்… நீங்க சொல்றதும் சரி தான்… நா அப்ப கிளம்பறத்துக்கு தேவையான வேலய பாக்றேன்…” என்று கூறி அவன் செல்ல, தேன்மலர் “ராஜேஷ் ஒரு நிமிஷம்…” என்கவும் ராஜேஷ் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.
தேன்மலர் “நீங்க அங்க போனதும் உங்கள ஸாம்னு ஒருத்தர் வந்து அழைச்சுப்பாரு… அப்றம் அப்பாவுக்கு குடுக்கப் போற ட்ரீட்மென்ட் எல்லாம் ஸீக்ரட்டா தான் இருக்கும்… அதுக்கு டி ஏற்பாடு பண்ணீற்கறதா சொன்னாரு… என்ன தான் அவரு சொன்னாலும் யாரையும் அவ்ளோ ஈஸியா நம்ப நா தயாராயில்ல… அதனால நீங்களும் துர்காவும் கொஞ்சம் கேர்புல்லா இருங்க… ஹெல்ப் வேணும்னா ஸாம்கிட்ட இல்லனா கின்ஸிகிட்ட மட்டும் கேளுங்க… ஓகே…” என்று கேட்க, ராஜேஷ் “சரிங்க…” என்றான்.
தேன்மலர் “அப்றம் டாலர்ஸா மாத்திக் குடுத்தேனே அத மறக்காம எடுத்து வச்சுக்கோங்க… துர்கா கிட்டயும் கொஞ்சம் எமெர்ஜென்ஸிக்கு குடுத்து வைங்க… அப்றம் அப்பா, அப்பாயிக்கு தேவையானது நீங்க தங்க இடம் எல்லாம் அரேன்ஜ் பண்ணிட்டேன்… மெடிக்கல் எக்ஸ்பென்சஸ்லாம் ஸாம் அக்கௌன்ட்ல பணம் போட்ருக்கேன் ஸோ அவன் பாத்துப்பான்… நா உங்களுக்கு குடுத்தது உங்க செலவுக்கு தான்… அப்றம் எதாவது வேணுனா நீங்க வெளில போகாதீங்க ஸாம்கிட்ட சொல்லுங்க…” என்றாள். ராஜேஷ் சரியென்று கூறி மேலும் சில விளக்கங்களை அவளிடம் கேட்டான்.
அனைத்தும் அவனுக்கு தெளிவித்த தேன்மலர் “ராஜேஷ்… உங்க பேம்லி பத்தி நீங்க எதுவுமே கேக்கலயே…” என்று கேட்க,
ராஜேஷ் மென்னகையோடு “நீங்க என் மேல நம்பிக்கை வச்சு இவ்ளோ பெரிய பொறுப்ப ஒப்படைக்கும்போது உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்காதா… உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு… அதனால என் குடும்பத்த பத்தி நா எதுவும் கேக்க மாட்டேன்…” என்றான்.
தேன்மலர் கண்கள் கலங்கி நன்றியோடு அவனை ஏறிட்டவள் “தேங்க்ஸ் ராஜேஷ்… அண்ட் சாரி ராஜேஷ்… நீங்க இவ்ளோ நம்பிக்கை வச்சுருக்கீங்க… ஆனா நா உங்க ஃபேமிலி இருக்ற இடத்த கூட உங்ககிட்ட சொல்லல…” என்றாள்.
ராஜேஷ் சிரித்து “தேன்மலர் நீங்க என் ஃபேமிலியோட ஸேஃபிட்டிக்காக தான் சொல்லாம இருக்கீங்கன்னு என்னால புரிஞ்சுக்க கூட முடியாதா… ஸோ இப்டிலா பேசி என்னை சங்கட படுத்தாதீங்க….” என்று கூற, தேன்மலர் புன்னகைத்து “சரி ராஜேஷ் நீங்க போய் கெளம்புங்க…” என்றுவிட்டு இருள் நிறைந்த வானத்தில் வெண் சந்தன நிறத்தில் பிறையாய் தண்ணொளி வீசும் நிலவிடம் தன் பார்வையைச் செலுத்தினாள். ராஜேஷ் சிறு புன்னகையோடு புறப்படச் சென்றான்.
தேன்மலர் மனதில் டெல்லியில் நடந்தது முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் ஒலிப்படமாய் ஓட்டிப் பார்த்தாள். அன்று டெல்லியில் அருளின் நண்பன் மூலம் தாங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளோம் என்றுணர்ந்த பின்பு அவள் மனதில் பல கேள்விகளும் குழப்பங்களும் சந்தேகங்களும் சுழன்று அடித்தன. முதலில் அவளுக்குத் தோன்றிய கேள்வி சிதம்பரத்திற்கு எப்படி ரத்த அழுத்தம் வந்திருக்க முடியும் என்பது தான். ஏனெனில் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் என்று அனைவரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ வருடத்திற்கு ஒருமுறையோ தங்கள் உடலை முழுமையாக மருத்துவமனையில் பரிசோதித்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிதம்பரம் ஊருக்கு வருவதற்கு ஒரு மாதம் முன்பு தான் தன் பரிசோதனையை முடித்திருந்தார்.
தேன்மலர் அவர் உடல்நலனில் மிகவும் அக்கறை கொண்டு அடிக்கடிக் கவலைக் கொள்வதால் அவளுக்கு ஒரு நகலை அனுப்புவது சிதம்பரத்தின் வழக்கம். அவ்வாறு அவர் அனுப்பிய நகலில் அவர் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளதாகவே முடிவு வந்திருந்தது. அதனால் தேன்மலருக்கு உயர் ரத்த அழுத்தத்தினால் தான் சிதம்பரத்திற்கு ரத்தக்கசிவு பக்கவாதம்(haemarragic stroke) வந்தது என்று கூறியது நெருடலாகவும் சந்தேகமாகவும் இருந்தது. இரண்டாவது அருளின் நண்பன் மூலம் தான், அருள் மட்டுமல்லாது தாங்கள் யார் யாரிடம் பேசுகிறோமோ அவர்களும் அவர்களின் குடும்பமும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளனர் என்ற உண்மை அறிந்தது அவளின் சந்தேகத்தை வலுக்கச் செய்தது. அதன்பின் சிதம்பரம் தவிப்பாய் சில நேரம் அழுததும் அவளது சந்தேகத்தை அதிகரித்தது. பின் ராஜேஷ் மூலம் டி என்ற நபர் தன்னைத் தொடர்பு கொண்டுக் கூறிய விடயங்கள் அவளது சந்தேகம் உண்மை என்று நிருப்பித்ததோடு கோபத்தையும் ஏன் என்ற கேள்வியையும் எழுப்ப, இதற்கு காரணமானவர்களையும் ஏன் செய்தார்கள் என்ற உண்மையையும் கண்டறிய வேண்டுமென்ற திண்மையையும் வைராக்கியத்தையும் அவளுள் விதைத்தது.
தேன்மலர் டி அன்று தன்னிடம் உறைத்ததை நினைத்துப் பார்த்தாள். தன்னை அவள் தந்தையோடு பணியாற்றுபவர் என்றும் தன்னை டி என்று அழைப்பார்கள் என்று அறிமுகப் படுத்திக் கொண்ட அந்நபர் “தேன்மலர்… எனக்கும் உன் அப்பாவுக்கும் வொர்க்ல எப்பவும் போட்டி இருந்துட்டேயிருக்கும்… ஆனா அது வெறும் போட்டியாதா இருந்ததே தவற பொறாமையா மாறல… உங்க அப்பாவும் நானும் அதிகம் பேசிக்க மாட்டோம்… ஆனா உங்க அப்பா இந்த தடவ இந்தியா வந்தது ஒரு முக்கியமான வேலைக்காக… ஆனா அப்டி வந்தவருக்கு ஸ்ட்ரோக்ன்னதும் எனக்கு சந்தேகமாச்சு… ஏன்னா அவரோட மெடிக்கல் ரிப்போர்ட் அவரு ஹெல்தியா இருக்றதா தான் வந்துச்சு… ஸோ எனக்கு தெரிஞ்ச ஸோர்ஸ் மூலமா விசாரிச்சப்ப உங்க அப்பா ஏதோ பெரிய விஷயம் ஒன்ன கண்டுபுடிச்சுருக்காரு… அத புடிக்காதவங்க உங்க அப்பாவ அத வெளில சொல்லிடக்கூடாதுன்னு ஒரு போதைப் பொருளின் பெயரைக் கூறி அத அதிக டோஸேஜ் உங்கப்பாவுக்கு இன்ஜெக்ட் பண்ணீற்காங்க… ஆல்கஹால் ட்ரக்ஸ் பழக்கமில்லாத உங்கப்பாவுக்கு அது ஒத்துக்காம ப்லட் ப்ரஷர அதிகப் படுத்தி ஸ்ட்ரோக்ல கொண்டு போய் விட்ருக்கு… அப்றம் உங்க அப்பா கைல மைக்ரோ சிப் இன்ஜெக்ட் பண்ணி அவங்களே ஆள் செட் பண்ணி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணீற்காங்க… அந்த சிப் மூலமா உங்க அப்பாவ ட்ராக் பண்ணி ஹெல்த் கன்டிஷனையும் அவரு அப்றம் அவர சுத்தி உள்ளவங்க என்ன பேசறாங்கன்றத தெரிஞ்சுக்றாங்க…. இத யார் பண்ணா ஏன் பண்ணானு இன்னும் எனக்கு தெரில… சரி இத சிதம்பரம் ரிலேட்டிவ் கிட்ட சொல்லி அலர்ட் பண்ணனும்னு எப்டி எப்டியோ தேடி கடைசில எனக்கான ஒரு டிடெக்டிவ் டீம் உருவாக்கி உங்கள கண்டுபுடிச்சேன்… அப்பதான் நீயும் அவங்க ட்ராக் லிஸ்ட்ல இருக்கன்னு தெரிஞ்சது… ஆனா நீ நா நினச்சு மாறி இல்ல நீயும் உன் ப்ரண்டும் எனக்கு முன்னாடியே நீங்க ட்ராக் லிஸ்ட்ல இருக்கீங்கன்னு தெரிஞ்சு… உங்க சைட்ல அதுக்கான வேல பாத்துட்ருந்தீங்க… ஸோ உன்னை எப்டி காண்டாக்ட் பண்றதுன்னு தெரியாதப்ப தான் உங்க அப்பாக்கு ட்ரீட்மென்ட் பண்றதுல ஏதோ தப்பு நடக்குதுன்னு ராஜேஷ் கண்டுபுடிச்சுருக்கான்… அத சீப் டாக்ட்ர்கிட்ட சொல்லலாம்னு அவன் போனப்ப அவன என் டிடெக்டிவ் டீம் தடுத்து அவனுக்கு புரிய வச்சு… இப்ப அவன் மூலமா நா உன்ட்ட பேசிட்ருக்கேன்… நீ ஸ்மார்ட் கேர்ள்… நா சொல்றது உனக்கு புரிஞ்சுருக்கும்… உனக்கு இப்ப நம்பலாமான்னு கூட சந்தேகம் வரும்… வரணும்… நீ சந்தேகப்பட்டாலும் எனக்கு கவலயில்ல… ஆனா உனக்கு ஹெல்ப் பண்ண நா ரெடியா இருக்கேன்…” என்றார்.
தேன்மலருக்கு அவர் மீது நம்பிக்கை வரவில்லை என்றாலும் அவர் கூறிய அனைத்து விடயங்களும் தன் மனதில் சந்தேகங்களாக ஓடிக் கொண்டிருந்ததால் அனலென தன்னுள் தகிக்கும் நெருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ஓகே டி… நா உங்கள நம்புனாலும் நம்பலனாலும் இப்ப எனக்கு உங்ககிட்ட கேக்க ஒரே ஒரு ஹெல்ப் தான் இருக்கு… எங்க அப்பாவ ட்ரீட்மென்ட்டுக்கு அங்க அனுப்பி வைக்கிறேன்… அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க… நீங்க கெட்டவரா இருந்தா இது ரிஸ்க் தான்… பட் எங்க அப்பாவுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்… எங்க அப்பாவ எப்டி ஸேஃவ் பண்ணனுன்னு எனக்கு தெரியும்…” என்றாள்.
அவளின் கூற்றில் மென்மையாய் சிரித்த டி “ஐ நோ யூ… ஸோ ஐ வோண்ட் டேக் ரிஸ்க்…” என்று கூற, தேன்மலரும் மென்மையாகப் புன்னகைத்து தனக்கு எதாவது வேண்டுமென்றால் ராஜேஷ் மூலமோ அல்லது மெயில் மூலம் அவருக்குத் தகவல் தெரிவிப்பதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
அதன்பின் நன்கு யோசித்த தேன்மலர் அருளிடம் கூட முழுதாகக் கூறாமல் சிதம்பரத்தின் உடலில் மைக்ரோ சிப் இருப்பதையும் அதை அகற்றி அவரோடு வேலாயியையும் அமெரிக்கா அனுப்பி வைத்துவிட்டு தானும் அமெரிக்கா போவதாக மட்டுமே கூறினாள். அதுவரை தங்களைக் கண்காணிப்பவர்களுக்கு சந்தேகம் வராதபடி நடந்துக் கொள்வதாக தேன்மலரும் அருளும் முடிவு செய்தனர்.
முதற்கட்டமாக துர்கா மற்றும் பாரதியிடம் முழுதாக எதையும் கூறாமல் மேலோட்டமாக சிதம்பரத்தின் வேலையில் பிரச்சனை என்று மட்டும் கூறியவர்கள் அதன்பின் அவர்களும் கண்காணிப்பில் உள்ளதைக் கூறி அவர்கள் இருவருக்கும் மற்றும் ராஜேஷிற்கும் அருளின் நண்பன் மூலம் புது சிம் வாங்கி அதன் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள ஏற்பாடுச் செய்தனர். அருள் தன் நண்பன் எம் எல் ஏ மகன் மூலமும் தன் ஹேக்கர் நண்பன் மூலமும் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்ய, தேன்மலர் அமெரிக்காவிலிருக்கும் தன் நண்பர்கள் ஸாம் டேலர் மற்றும் கின்ஸி ஸ்மித் மூலம் அங்கு சில ஏற்பாடுகளையும் டி மூலம் தன் தந்தையின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்தாள்.
ராஜேஷ், துர்கா, பாரதி மூவரும் கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்தாலும் ராஜேஷ் தன் நண்பன் மூலம் டி யின் டிடெக்டிவை சந்தித்து அவ்வப்போது தேன்மலர் சொல்லும் செய்திகளைத் தெரிவித்தான். அதோடல்லாமல் சிப் சிதம்பரத்தின் கையில் எங்கிருக்கிறதென்று எக்ஸ்ரே மூலம் அறிந்தால் அது அந்த சிப்போடுத் தொடர்பு கொண்டு தங்களை கண்காணிக்கும் நபர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடுமென்பதால் தன் நண்பன் மூலம் மைக்ரோ சிப் டிடெக்டர் மற்றும் ஸ்கனரை வரவழைத்து சிப் கையில் எங்கிருக்கிறதென்று கண்டுபிடித்தான்.
பாரதிக்கு திருமணம் முடிவாகியிருந்ததால் பாரதியை இப்பிரச்சனையில் சிக்கவிட நினைக்காத தேன்மலர் அருளிடமும் ராஜேஷிடமும் உதவி கேட்க, ராஜேஷ் பாரதியின் ஊரான திண்டுகல்லில் வேலைப் பார்க்கும் தன் நண்பனிடம் உண்மையானக் காரணம் கூறாது பாரதிக்கு விடுமுறை தர மறுப்பதால் உதவி செய்யுமாறுக் கேட்க, அவனும் பாரதியின் அம்மா உண்மையாகவே இதய நோயாளி என்பதால் அவரைத் தான் வேலைப் பார்க்கும் மருத்துவமனையில் அட்மிட் செய்தான். அதனால் பாரதியின் தாயின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவளை இப்பிரச்சனையிலிருந்து விலக்கி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
துர்காவிற்கு அன்னையும் அண்ணனும் தான். அண்ணனுக்கு ஐந்தாண்டுகள் முன்பு திருமணம் நடக்க, துர்காவிற்கு அண்ணியாக வந்தவள் அவள் அண்ணனை அவர்களோடு ஒட்ட விடாமல் பிரித்துக் கூட்டிச் சென்றுவிட, அந்த துயரத்திலேயே அவள் அன்னையும் இரண்டு ஆண்டுகள் முன்பு இறந்துவிட, துர்கா தன் அண்ணனிடமோ தங்களைக் கண்டுக்கொள்ளாத சொந்தங்களிடமோ செல்ல விருப்பமின்றி அவர்களது தொடர்பையும் முழுதாக முறித்துக் கொண்டு திருச்சியில் விடுதியில் தங்கி மோகனின் மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றி வந்தாள். தேன்மலருக்கு வேலாயியைக் கவனிக்க ஆள் வேண்டுமென்பதால் மட்டுமே துர்காவை மோகனிடம் சொல்லி ஏற்பாடு செய்தவள், பின் அவளின் குடும்பப் பிண்ணனி தெரிந்தப் பின் அவளைத் தன் தங்கையாகவே ஏற்றுக் கொண்ட தேன்மலர் நம்பிக்கையோடு துர்காவை அமெரிக்கா அனுப்ப ஏற்பாடு செய்தாள். அதோடல்லாமல் அமெரிக்க பயணம் அவளது வாழ்வில் ஏதேனும் மாற்றம் விளைவிக்கலாம் என்ற நம்பிக்கையிலும் யாருமற்றிருக்கும் அவளுக்கு இனி தானே உறவாக இருக்க எண்ணியதாலும் அவளை தைரியமாக அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தாள். அவளிடம் முழுதாக எதையும் கூறாமல் சிதம்பரம் சிக்கலில் இருப்பதாகவும் தேன்மலர் தன் தந்தையையும் அப்பாயியின் சிகிச்சைக்காக அவள் அவர்களோடுச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, துர்கா தேன்மலர் மீது கொண்ட அன்பாலும் நம்பிக்கையாலும் சிறிதுக் கூட யோசிக்காமல் சரி என்று விட்டாள்.
பிரச்சனையின் தீவிரம் புரிந்த ராஜேஷ் ஏனோ தனக்கென்னவென்று தேன்மலரை பிரச்சனையின் பிடியில் சிக்க வைக்க விருப்பமில்லாமல் தானாகவே முன்வந்து உதவுவதாகக் கூறவும் முதலில் தயங்கிய தேன்மலர் பிறகு அருளிடம் ஆலோசித்து விட்டு சரி என்றாள். அருளின் குடும்பத்தையும் அவர்கள் சுற்றுலா செல்வதாக அவர்களின் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்து கரூரிலிருந்து அவர்களை கொடைக்கானலில் உள்ள சிறு கிராமத்தில் அருளின் நண்பன் எம் எல் ஏ மகனின் பொறுப்பில் தங்க வைத்தனர்.
அருளையும் எப்படியாவது இப்பிரச்சனையிலிருந்து விலக்க வேண்டுமென்று யோசித்த தேன்மலர், அருளின் தாத்தாவிற்கு உடம்பு முடியவில்லை என்று தகவல் வந்ததுமே அதற்கானத் திட்டத்தைத் தன் மனதுள் வகுத்துக் கொண்டாள்.
நிலவினைப் பார்த்தவாறு இவ்வெண்ணங்களில் உழன்றுக் கொண்டிருந்தவளை “அக்கா…” என்ற துர்காவின் அழைப்பு நிகழ்காலத்திற்கு அழைத்து வர, மணியைப் பார்த்தவள், மெல்ல வீட்டினுள் வந்து வேலாயியை கண்களில் நிறைத்தவள் அவர் நெற்றியில் முத்தமிட்டவிட்டு கலங்கியத் தன் கண்களைத் துடைத்து விட்டு சிதம்பரத்தை காணச் சென்றாள்.
மருந்தின் வீரியத்தால் உறக்கத்தின் பிடியிலிருந்த சிதம்பரத்தின் கையைப் பற்றியவள் அவர் முகத்தைப் பார்த்து மனதுள் “அப்பா… உன்னை இப்டி முடக்கிப் போட்டவங்கள கண்டுபுடிச்சு அவங்கள ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்… உன் ஆப்ரேஷன் முடிஞ்சு நீ உடம்பு சரியாகி வர்ரத்துக்குள்ள அவங்களுக்கு நா முடிவு கட்டிருப்பேன் ப்பா… நீ முடிக்கணும், இந்த உலகத்துக்கு வெளிக் கொண்டு வரனுன்னு நினச்ச விஷயத்தை கண்டிப்பா வெளிக் கொண்டு வருவேன் ப்பா… இது உன் ஹனியோட ப்ராமிஸ்…” என்று சூளுரைத்து அவர் கையில் முத்தமிட்டாள்.
தேன்மலர் எழுந்துக் கொள்ள, சிதம்பரத்தின் சுண்டு விரல் அவர் அவளுக்கு ஆசையாகப் பரிசளித்த கருப்பு வைரம் பதித்தக் கைச் செயினில் மாட்டிருந்தது. தேன்மலர் விழி நீர் வழிய அதைப் பிரித்தெடுத்தவள், வேகமாக அவ்வறை விட்டு வெளி வந்து பொங்கி வரும் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு தான் செய்ய வேண்டிய செயல்களில் தன்னைப் புகுத்திக் கொண்டாள். அருளிற்கு அவர்களின் ப்ரத்யேக எண்ணிலிருந்துக் குறுஞ்செய்தி அனுப்ப, அவனிடமிருந்து “வித்தின் டென் மினிட்ஸ்” என்று உடனே பதில் வந்தது.
அருள் கூறியது போல் பத்து நிமிடங்களில் ஒரு ட்ராவலர் வேன் வீட்டின் முன் வந்து நின்றது. தேன்மலர், ராஜேஷ் மற்றும் துர்காவிடம் பத்திரமாக இருக்கக் கூறி, அவர்களுக்கு விடைக் கொடுத்தவள், வேலாயி மற்று சிதம்பரத்தை படுக்க வைப்பதற்காக வேனிலிருந்த இருக்கைகளையெல்லாம் அகற்றி ஆம்புலன்ஸில் இருப்பது போன்ற வசதிகளை ஏற்பாடு செய்திருக்க, அந்த வேனின் ஓட்டுநர் மற்றும் ராஜேஷின் உதவியோடு வேலாயியையும் சிதம்பரத்தையும் வேனில் ஏற்றினாள். பின் ராஜேஷும் துர்காவும் அதில் ஏறும் முன் அவர்களும் கண்காணிப்பு வளையத்திலிருந்ததால் அவர்களதுக் கைப்பேசியை அவள் வாங்கி வைத்துக் கொண்டாள். வேன் புறப்பட்டுக் கண்ணிலிருந்து மறையும் வரைப் பார்த்துக் கொண்டிருந்த தேன்மலர், வைராக்கியத்தோடு முகம் இறுக வீட்டினுள் சென்றாள்.
அவர்கள் இருந்தது தனி வீடு என்பதாலும் புதிதாகக் குடி வந்திருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அதிகம் பழகாமல் வீட்டிலேயே இருந்ததாலும் அது நடுநிசி நேரமாதலாலும் வேன் வந்ததோ திரும்ப ஆட்களை ஏற்றிக் கொண்டுப் போனதோ யாருக்கும் தெரியவில்லை. அருளுக்குத் தகவல் அனுப்பிவிட்டு மெத்தையில் வீழ்ந்து அடுத்தக் கட்ட திட்டம் பற்றி யோசிக்கலானாள். அருளும் தேன்மலரும் கலந்துப் பேசி முக்கிய ஏர்ப்போர்ட்களின் வழியாகச் சென்றால் சிக்கல் வரும் என்பதால் எளிதில் ஊகிக்க முடியாத அவ்வளவு சிரமமெடுத்து தாங்கள் அவ்வளவு தூரம் பயணிக்கக் கூடும் என்று எளிதில் கணிக்க முடியாத கேரளத்திலுள்ள கண்ணூர் ஏர்ப்போர்ட்டிற்கு சிதம்பரம் மற்றும் வேலாயியை ராஜேஷ் மற்றும் துர்காவோடு அனுப்பி வைக்க முடிவு செய்திருந்ததனர். அதன்படி அவர்களை வேன் மூலம் தேன்மலர் கண்ணூர் அனுப்பி வைத்தாள். கண்ணூரில் மறுநாள் இரவு எழரை மணிக்கு துபாய்க்கு விமானம் என்பதாலும் சென்னையிலிருந்து கண்ணூர் செல்லக் கிட்டத்தட்ட பதினைந்து மணி நேரம் ஆகுமென்பதாலும் அன்றிரவு ஒரு மணியளவில் அவர்களை அனுப்பி வைத்தாள்.
துபாய் சென்று அங்கிருந்து அவர்கள் வேறு விமானத்தில் அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்திருந்தாள். கண்ணூர் சென்று அவர்கள் விமானம் ஏறியதும் அந்த வேன் ஓட்டுநர் அருளின் நண்பனுக்குத் தகவல் சொல்லும் படியும், அவன் அருளுக்கும் அருள் அவளுக்கும் தகவல் சொல்லும் படியும் முடிவு செய்திருந்தனர். மறுநாள் தேன்மலர் சந்தேகம் வராமலிருக்க தான், துர்கா மற்றும் ராஜேஷ் ஏற்கனவே பேசி ரெக்கார்ட் செய்து வைத்திருந்த உரையாடல்களை அவ்வபோது அந்த சிப்பின் அருகில் ஒலிக்க விட்டாள்.
இரவு சரியாக எட்டு மணிக்கு அருளிடமிருந்து அவர்கள் விமானம் ஏறிவிட்டதாகத் தகவல் வந்தது. அமெரிக்கா செல்ல இரண்டு நாட்கள் ஆகுமென்பதால் இரண்டு நாட்கள் இவ்வாறே செய்த தேன்மலர், தன் நண்பன் ஸாமிடமிருந்து அருளுக்கும் தனக்கும் மட்டும் தெரிந்த அந்த எண்ணிற்கு “அரைவ்டு ஸேஃப்லி” என்ற குறுந்தகவல் வந்த அடுத்த நிமிடம் அந்த சிப்பை ஆத்திரம் தீர அடித்து நொருக்கினாள். பின் தன்னுடைய சிம், அருள் கொடுத்த சிம், துர்கா மற்றும் ராஜேஷின் சிம் என்று அனைத்தையும் உடைத்துப் போட்டாள் கைப்பேசிகளையும் உடைத்து தெருவிலிருந்தக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்தாள். வந்ததும் வீட்டைப் பூட்டி விட்டு பேக்கை எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடித்துக் கோயம்பேடு வந்தவள் உடனேப் புறப்படும் பெங்களூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
தொடரும்….