Loading

தேன்மலர், ராகவி, அருள் மூவரோடும் சேர்ந்து சுரேஷும் சிதம்பரத்தை எதிர்நோக்கி வருகைப் பகுதியை ஆவலோடுப் பார்த்திருந்தான். அவனது ஆவலைப் பொய்யாக்காமல் மற்ற பயணிகளின் கூட்டத்தின் நடுவே சிதம்பரமும் நடந்து வந்துக் கொண்டிருக்க, அவரைக் கண்டு கொண்ட சுரேஷ் தேன்மலரிடம் சொல்ல விழைந்து அவளைப் பார்க்க, ஆனால் அவளோ அவனுக்கு முன்னேயே தன் தந்தையைக் கண்டுக் கொண்டவள் ஏர்ப்போர்ட், தான் ஒரு பேராசிரியை என்பதெல்லாம் மறந்து தன் தந்தையின் செல்ல மகளாக சிறுக் குழந்தையாய் மாறி “அப்பா… அப்பா…” என்று கத்திக் குதித்துக் கொண்டிருந்தாள்.

அவளோடு சேர்ந்து ராகவியும் அருளும் கூட குதித்துக் கொண்டிருக்க, அங்கு போவோருக்கும் வருவோருக்கும் அவர்கள் மூவரும் காட்சிப் பொருளாகினர். ஆனால் அவர்கள் மூவரும் அதைப் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாது சிதம்பரம் அவர்கள் அருகே வந்ததும் “அப்பா…” என்ற கூவலோடு அவரை அணைத்துக் கொண்டனர்.

சிதம்பரமும் சிரிப்புடன் அவர்கள் மூவரையும் அணைத்துக் கொண்டார்.

ராகவி “அப்பா… வயசாக ஆக நீங்க அழகாயிட்டே போறீங்க ப்பா…” என்று சிதம்பரத்தை மேலும் கீழும் ரசனையாகப் பார்த்தபடி கூற, சிதம்பரம் வாய்விட்டு சிரித்தார்.

அருள் “அப்பா… செம சர்ப்ரைஸ் ப்பா நீங்க வந்தது…” என்று கூற,

சிதம்பரம் புன்னகையுடன் அவன் தோள்தட்டி “யங்மேன் யூ ஆர் லுக்கிக் ஹான்ட்ஸம்… என்ன பொண்ணு பாத்ரலாமா…” என்று கேட்க,

அருள் சிரித்து “ஏன் ப்பா ஏன்… நா சந்தோஷமா இருக்றது பொறுக்கலயா….” என்று கேட்டான்.

தேன்மலர் சிதம்பரத்தின் கையோடு தன் கையை பிணைத்துக் கொண்டு அவர் தோள் மீது சாய்ந்து, அருளை பார்த்தபடி அவன் கையை கிள்ளிவிட்டு “அப்பா…. அவனுக்கு ஆல்ரெடி பொண்ணு பாக்க ஸ்டார்ட் பண்ணியாச்சு… ஸீன் போட்றான் ப்ராடு…” என்றாள்.

அருள் அவளை முறைத்து “அப்பா… இந்த பிசாசுங்க ரெண்டும் எனக்கே தெரியாம வீட்ல பொண்ணு பாக்க சொல்லீருச்சுங்க…. கேட்டா இவங்களுக்கு மாப்ள பாக்றாங்களாம்… அதனால நானும் கல்யாணம் பண்ணிக்கனுமா…. இது போங்கு ப்பா… நா ஒத்துக்க மாட்டேன்… நா இன்னும் கொஞ்ச நாள் சிங்கிளா தான் இருப்பேன்…” என்று ராகவியையும் முறைத்து முறுக்கிக் கொண்டான்.

ராகவியும் தேன்மலரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துவிட்டு “நாங்க இருக்க விட்ருவோமா…” என்று கூற, அருள் மேலும் அவர்களை முறைக்க,

தேன்மலர் “அவன் கெடக்றான் ப்பா லூசு பய… ஆமா சார் என்ன திடீர்னு ஊர் பக்கம் வந்துருக்கீங்க… ஆபிஸ் வேலையா இந்தியா வந்தியா…” என்று கேட்டாள்.

சிதம்பரம் வகையாக மாட்டிக் கொண்டோமே என்று திருதிருவென்று முழிக்க, தேன்மலர் முறைக்க, ராகவியும் அருளும் அதைக் கண்டு சிரிக்க,

சுரேஷ் “சித்தப்பா… நல்லா வகையா மாட்டிக்கிட்டியா…” என்று கூறி சிரித்தான்.

சிதம்பரம் “ஐய்யோ இவன் வேற எரியற தீயில எண்ணெய ஊத்துறானே…” என்று மனதில் நினைத்தவர் “ஹிஹிஹி… வாடா எங்கண்ணே மகனே… உன்னை மாறி ஒரு மகன் இருந்தா போதும்… டெய்லி வேல்ர்டு வார் 3 தான் வீட்ல… உன்னை அப்றமா கவனுச்சுக்றேன்…” என்று கூறி தேன்மலர் புறம் திரும்ப, அவளோ அவர் தோளில் சாய்ந்தாவாறு நின்றவள் வெடுக்கென்று அவரிடமிருந்து கையை உருவிக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவரை முறைக்க,

சுரேஷ் “ஆத்தாடி… தேனு காளி அவதாரம் எடுத்துட்டா…. சேதாரம் நமக்கும்ல ஆகும்….” என்று எண்ணியவன் “அப்பாவும் பொண்ணும் பேசிட்டு பொறுமையா வாங்க… நா போய் கார திருப்பி ரெடியா வைக்கிறேன்…” என்று கூறி அங்கிருந்து சென்றான்.

சிதம்பரம் “மகனே உன்னை ஸ்பெஷலா கவனிக்றேன் போடா மகனே…” என்றுவிட்டு ராகவியையும் அருளையும் பார்க்க,

அருள் “அண்ணே இரு ண்ணே நா வந்து கார் துடைச்சு தரேன்….” என்று சுரேஷ் பின்னேச் செல்ல,

ராகவி “அடப்பாவி அருளு… வெலங்காதவனே… என்னை மட்டும் இந்த பத்ரகாளிட்ட கோத்து விட்டு போறியேடா… இருடா நானும் வரேன்…” என்றவாறே அவன் பின்னால் ஓடினாள்.

சிதம்பரம் “நீங்களும் போய்ட்டீங்களா…” என்று முணுமுணுத்து விட்டு தன்னை முறைத்து நின்றிருக்கும் தன் மகளை பாவமாகப் பார்த்தார்.

தேன்மலர் கோபமாக “அப்டி பாத்தா… நீ தான் எங்கள பாக்கனு வரலயே… போ போய் உன் வேலைய கட்டிட்டு அழு… எவ்ளோ தைரியமிருந்தா வேலையா வந்தனு சொல்லுவ…. எல்லாம் வேலாயிய சொல்லனும்… செல்லம் குடுத்து உன்னை கெடுத்து வச்சுருக்கு… எங்களவிட உனக்கு வேல முக்கியமாடானு மண்டைல தட்டி உன்னை ஊர்ல உக்கார வச்சுருந்தா… நீ இப்டி பண்ணுவியா… எங்களனு பாக்க வந்து எத்தனை வருஷமாச்சு… எப்ப பாரு வேலையா வந்தா மட்டும் வீட்டு பக்கம் வர்ரது… சிதம்பரம் நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை…” என்று ஏர்ப்போர்ட் என்று கூட பாராமல் அப்பெரிய மனிதனை வறுத்து தாளித்துக் கொண்டிருந்தாள். சிதம்பரமோ தவறு செய்தக் குழந்தை அம்மா முன்பு உதடு பிதுக்கி தலையைக் குனிந்து நிற்பது போல் தன் மகள் முன்பு நின்றிருந்தார். அங்கு போவோரும் வருவோரும் இவர்களை விசித்திரமாகப் பார்த்துச் சென்றனர்.

தேன்மலரோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் தந்தையைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

கோபம் தீரத் திட்டி முடித்த தேன்மலர் “அருள் பய தானே ஆரம்பிச்சான்… இருக்கு அவனுக்கு…. அப்றம் இந்த சுரேஷ் எரும மாடு உன்னை பத்தி என்ட்ட நல்லா ஏத்திவிட்டு எஸ்ஸாயிடுச்சா… சீக்ரம் வாப்பா… அந்த ரெண்டு தடியன்களையும் இன்னிக்கு அடிக்ற அடில….” என்றவாறு புடவையை இழுத்து சொருகியவாறு வெளியேச் செல்ல விழைய,

சிதம்பரம் அவள் கையைப் பிடித்து நிறுத்தி “ஹனி… விட்றா சின்ன பசங்க பொழச்சு போகட்டும்… அப்பாக்கு நீ இன்னும் ஸ்பெஷல் ஹக் தரவேயில்ல….” என்று அவளைத் திசை மாற்றிவிட்டார்.

தேன்மலர் இதழ் விரித்து கண்களில் குறும்பு மின்ன அவரைப் பார்த்து “அது எப்டி ப்பா மறப்பேன்…” என்று கூறி சிதம்பரத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கியவள் அவர் கன்னத்தில் இதழ் பதித்து, “ஃபோன்ல கேட்டது நேர்ல கெடச்சுருச்சா…” என்று கேட்டாள்.

சிதம்பரம் உதடு சுழித்து “ஹனி இது வழக்கமா தர்ரது…” என்று கூறும் பொழுதே மற்றொரு கன்னத்தில் இதழ் பதிக்க, சிதம்பரம் சிரித்து “ம்ம்ம்… இதுதான் என் ஹனி…” என்று கூற, தேன்மலர் வாய்விட்டு சிரித்தாள்.

சிதம்பரம் “ஆமா… அருள் மாப்ள பாக்றாங்கனு என்னமோ சொல்றானே ஹனி…” என்று கேட்டார்.

தேன்மலர் அவரை ஒரு முறைப் பார்த்து பின் முகம் சிவந்து அவர் முகத்தைப் பார்க்காமல் மென் சிரிப்போடு “அது ப்பா…. அப்பாயி ரொம்ப நாளா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்ருந்துச்சா…. இன்னிக்கு காலைல சரினு மாப்ள பாக்க சொல்லிட்டேன்…” என்றாள்.

தன் மகளைக் கண்ட சிதம்பரம் “பரவால்லயே என் ஹனிக்கு வெக்கம்லா வருது…” என்று கூற, தேன்மலர் “அப்பா…” என்று சினுங்கி பின் அவரை முறைக்க, சிதம்பரம் வாய்விட்டு சிரிக்க, தேன்மலர் “போ ப்பா…” என்று சினுங்கியவாறே அவரைக் கட்டியணைத்துக் கொண்டாள்.

தேன்மலருக்கு ஒரு பழக்கமுண்டு தனக்குக் கோபம் வந்தால் கோபத்திற்கு காரணமானவரை மட்டுமல்லாது தன் கோபத்தை ஏற்றி விடுபவரையும் அதை வேடிக்கைப் பார்ப்பவரையும் சேர்த்தே திட்டுவாள் அதனால் தான் மற்ற மூவரும் தேன்மலர் கோபம் கொண்டவுடன் நழுவி விட்டனர்.

பின் இருவரும் பேசியபடியே ஏர்ப்போர்ட்டை விட்டு வெளி வந்து சுரேஷ் தயாராய் காருடன் நின்றிருக்க, இருவரும் அதில் ஏறிக் கொண்டனர். காருள் அமர்ந்திருந்த ராகவியும் அருளும் அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்க,

தேன்மலர் “ரெண்டு பேரும் ஓடியா வர்ரீங்க… வீட்டுக்கு வாங்க… இருக்கு உங்களுக்கு…” என்று கூற, ராகவியும் அருளும் திருதிருவென்று முழிக்க, அதைக் கண்டு சிதம்பரமும் சுரேஷும் சிரித்தனர்.

தேன்மலர் சுரேஷை பார்த்து வில்லங்கமாக சிரித்து “உனக்கென்ன ண்ணே அப்டி சிரிப்பு…. உனக்கு தான் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் இருக்கு…” என்று கூற,

சுரேஷ் “ஆயி… என்னடாயி… அண்ணேன்டா…” என்று கூற (ஆயி என்று பெரும்பாலும் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆண்கள் தங்கள் குடும்பத்திலோ சொந்தத்திலோ உள்ள வயதில் இளையப் பெண்ணை மரியாதையாக அழைக்கும் சொல்லாகும்),

தேன்மலர் தோளைக் குலுக்கி “அதனால தான் உன்னை தனியா கவனிக்கப் போறேன்….” என்றாள்.

அதைக் கேட்டு சுரேஷ் முகம் சுருங்கி “இதுக்கு நா பேசாமயே இருந்துருக்கலாம்…” என்று முணுமுணுக்க, ராகவியும் அருளும் அவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அவன் அவர்கள் இருவரையும் முறைத்து விட்டு கார் ஓட்டுவதில் தன் கவனத்தைத் திருப்பினான்.

தேன்மலர், ராகவியையும் அருளையும் ஒருப் பார்வைப் பார்க்க அவர்கள் தங்கள் வாயை மூடிக் கொண்டனர். பின் சிதம்பரமும் தேன்மலரும் ஹைஃபை அடித்துக் கொண்டு சிரிக்க, மற்ற மூவரும் அவர்களை முறைத்து பின் சிரிக்க, பின் பேச்சும் சிரிப்புமாய் தங்கள் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.

சிதம்பரம் அமெரிக்காவில் எப் டி ஏ(FDA- Food and Drug Administration) வில் ஒரு பெரும் பொறுப்பில் வேலைப் பார்ப்பவர். எப் டி ஏ அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (The Food and Drug Administration (FDA or USFDA)) என்பது அமெரிக்க செயலவையின் கீழ், நல மற்று மனித வள திணைக்களத்தின் ஒரு முகமை ஆகும். இந்த நிறுவனத்தின் பணி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சட்டக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் மேற்ப்பார்வை மூலமாகவும் நிர்வகித்து பொது மக்களின் நலத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதேயாகும்.

அமெரிக்காவில் விற்கப்படும் எந்தவொரு மருந்தும் இந்த நிறுவனத்தின் அனுமதியைப் பெறவேண்டும். அமெரிக்காவில் மட்டுமல்ல அந்நாட்டிற்கு எந்த நாட்டு மருந்து நிறுவனமும் மருந்து ஏற்றுமதி செய்ய எப் டி ஏ விடம் அனுமதிப் பெற வேண்டும். அதோடல்லாமல் எப் டி ஏ வில் குறிப்பிடப் பட்டுள்ள சட்டத் திட்டங்கள் மற்றும் வழிமுறைகளின் படி மருந்து ஏற்றுமதி செய்யும் அயல்நாட்டு நிறுவனங்கள் மருந்தை உற்பத்திச் செய்ய வேண்டும். அதைக் கண்காணிக்க ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்துடனும் எப் டி ஏ ஒப்பந்தம் வைத்துக் கொண்டு அந்நாடுகளில் பொறுப்பாளர்களை நியமிக்கும். இந்தியாவில் இந்த எப் டி ஏ வின் தலைமையகம் புது டில்லியில் உள்ளது. இந்தியாவில் எப் டி ஏ மத்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு(cdsco- central drugs standard control organization) உடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து தனக்கு வேண்டியத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும். Cdsco மண்டல அலுவலகங்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை, காசிதாபாத் என்ற நான்கு இடங்களிலும் அதுமட்டுமல்லாது துணை மண்டல அலுவலகங்கள் சிறு அலுவலகங்கள் என ஏழு அலுவலகங்கள் இந்தியா முழுமையும் மருந்து நிறுவனங்களையும் மருந்து தயாரிப்பில் உபயோகிக்கப்படும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களையும் கண்காணிக்கிறது.

எப் டி ஏ அமெரிக்காவிற்கு மருந்து ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒரு குழுவை அனுப்பி அவற்றின் தரத்தையும் மருந்துகளின் தரத்தையும் ஆராயும். மேலும் அந்நிறுவனங்கள் எப் டி ஏ வின் சட்டத் திட்டங்களையும் வழிமுறைகளையும் பின்பற்றுகிறதா என்றும் கண்காணிக்கும். சிதம்பரம் அம்மாதிரி குழுக்களுக்கு அவ்வப்போது தலைமையேற்று இந்தியா வருவது வழக்கம். இப்போதும் அதுப்போல வந்தவர் கிடைத்த ஓய்வு நேரத்தில் தன் அன்னையையும் மகளையும் காண சொந்த ஊர் வந்துள்ளார்.

சிதம்பரம் அமெரிக்காவிற்கு வேலைக்குச் சென்ற ஐந்து வருடத்தில் அந்நாட்டின் குடியுரிமைப் பெற்றிருந்ததால், கடின உழைப்பாலும் பலக்கட்ட பரீட்சைகளைத் தாண்டியும் எப் டி ஏ வில் வேலைப் பெற்று படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு உயர்த்தப் பதவியில் உள்ளார். தன் மனைவி தன்னோடு வந்தப்போது அவருக்குக் குடியுரிமை வாங்கியிருந்தவர், தேன்மலர் வேலாயியோடே வசித்ததால் அவளுக்கு மட்டும் வாங்காமல் விட்டார். அப்படியும் தேன்மலர் படிக்க அங்கு வந்தப்போது இதைப்பற்றி அவர் கேட்க அவள் மறுத்து விடவும் அவள் விருப்பத்திற்கே விட்டு விட்டார். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் சிதம்பரம் அடிக்கடி இந்தியா செல்லும் குழுவோடு இணைந்துக் கொள்வார். ஏனெனில் ஒருசில இந்திய நிறுவனங்களின் பெயர் அங்கு மிக மோசமாகக் கெட்டு விட்டதால் தன் தாய் நாட்டின் மீது மேலும் அவச்சொல் விழாமல் காக்க அவ்வப்போது இப்படி குழுவோடு இந்தியா வந்து சரியில்லாத நிறுவனங்களை எச்சரித்து அவர்களை சரியான முறையில் வழி நடத்துவார்.

கார் ஊர் எல்லைக்குள் நுழையும்போதே சிதம்பரத்தின் மனம் சொல்லொனா மகிழ்ச்சியில் திளைத்தது. என்ன தான் அயல்நாட்டின் குடியுரிமைப் பெற்று அங்கு ஆடம்பரமாக வாழ்ந்தாலும் தான் பிறந்து வளர்ந்த மண்ணைக் கண்டதும் சிதம்பரத்தின் மனம் சிறு பிள்ளையாய் மாறித் துள்ளத் தான் செய்தது. அவர் அகத்தின் மகிழ்ச்சி கண்களில் மின்ன அதன் விளைவாய் அவர் அதரங்கள் புன்னகையை ஏந்த, அவரைக் கண்க்கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்த தேன்மலர் இதழ்களும் புன்னகையில் வளைய, கண்கள் தன் தந்தையின் மகிழ்ச்சியை ரசிக்க, மனமோ பேருவகையில் திளைத்தது. இவர்கள் இருவரையும் கண்ட மற்ற மூவரும் இரசனையாய்ப் பார்த்துப் புன்னகைத்திருந்தனர்.

இவர்கள் ஊருக்குள் நுழைந்தநேரம் மழை வேறு பொழிய ஆரம்பிக்க, கார் ஜன்னல்களையெல்லாம் சுரேஷ் திறந்து விட, அனைவரின் முகத்தில் தெளித்த மழைச்சாரல் அவர்களின் மகிழ்ச்சியான மனநிலையை மேலும் ரம்மியமாக்கியது. அமைதியாக மழையை ரசித்து அதில் தங்களைத் தொலைத்தவாறே அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். வேலாயி வீட்டு வாசலிலேயேக் குடைகளோடு நின்றிருந்தவர், கார் வந்து நின்றதுமே முகமும் அகமும் மலர காரை நோக்கிக் குடையோடு வந்தவர் தான் வந்த குடையில் தன் மகன் சிதம்பரத்தை “அய்யா… நனையாம வாய்யா…” என்று தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டு கையிலிருந்த இரண்டு குடைகளை தேன்மலர் கையில் கொடுத்து “இந்தா… நீங்கல்லாம் இதுல வாங்க…” என்றுவிட்டு சிதம்பரத்தை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றார்.

தேன்மலர் அருள் கையில் ஒரு குடையைக் கொடுத்து விட்டு, தன்னிடமிருந்ததில் ராகவியை அழைத்துக் கொண்டுச் சென்றாள். அவர்களைக் தொடர்ந்து சுரேஷும் அருளும் வீட்டினுள் சென்றனர்.

வீட்டினுள் நுழைந்ததும் நுழையாததுமாய் தேன்மலர் “அப்பாயி… உன் மகன பாத்தோடன பேத்தி கண்ணுக்குத் தெரியாதே… நீ பாட்டுக்கு உள்ளப் போற…” என்று ஆரம்பிக்க,

வேலாயி “போடி போக்கத்தவளே…. வாப்பட்டிக் கழுத (வாயாடிக் கழுத)… உள்ள நொழஞ்சொடனே வம்பு பேச்ச பாரு…” என்றவர்,

“ராயவி… அருளு…. சுரேஸு நீயும் உள்ள வா… எல்லாரும் கைக்கால் கழுவிட்டு வாங்க சாப்டலாம்…. அய்யா வாய்யா… நாம உள்ள போலாம்….” என்றவாறு சிதம்பரத்தை அழைத்துக் கொண்டு அடுக்களைக்குச் சென்றார்.

ராகவி “அப்பாயி… ஒரு தடவையாவது என் பேர கரக்ட்டா சொல்றியா… இதுக்கு நீ எப்பவும் போல ராக்காயினே கூப்டலாம்….” என்று சடைத்துக் கொண்டே அவர் பின் செல்ல, அருள், தேன்மலர், சுரேஷ் மூவரும் சிரித்தவாறே அவளைப் பின் தொடர்ந்தனர்.

வேலாயி சிதம்பரத்தை அழைத்துச் சென்று அவருக்குச் சூடாக சூப் குடிக்கக் கொடுக்க, சிதம்பரம் புன்னகையுடன் அதை வாங்கி குடித்துக் கொண்டே “அம்மா… என்னை கவனிக்றது இருக்கட்டும்…. நீ சாப்ட்றியா இல்லயா… இளைச்சு போயிருக்க… ஹனி உன்னை கவனுச்சுக்றாளா இல்லயா…” என்று கேட்டார்.

வேலாயி புன்னகைத்து வாஞ்சையாய் சிதம்பரத்தின் கன்னம் தடவியவாறே “என் பேத்தி என்னை நல்லா பாத்துக்காம இருப்பாளா… அவ என்னை நல்லாதான் பாத்துக்றா… வயசாகுதுல முன்ன மாறிலா சாப்ட முடிய மாட்டேங்குதுய்யா…. சாப்ட்டாலும் வவுத்துக்கு ஒத்துக்க மாட்டேங்குது… அதுக்குன்னு தேனும் ஏதேதோ எனக்கு பண்ணிக் குடுக்குது… ஆனா அதெல்லாம் இந்த நாக்குக்கு ருசிக்கல… நல்லா திண்ணு வளந்த கட்டையா இது…. எனக்கு ஒன்னும் ஆவாது… கொள்ளு பேரனோ பேத்தியோ பாக்காம கண்ண மூட மாட்டேன் நானு… என்னை நினைச்சு நீ வெசனப்பட்டு உன் உடம்ப கெடுத்துக்காதய்யா… நீ நல்லா சாப்ட்டு தெம்பா இரு… அப்றம் உன்கிட்ட ஒரு விசியம் பேசணும்ய்யா….” என்றார்.

சிதம்பரம் சிரித்து விட்டு “ஹ்ம்ம் உன் பேத்திய நீ விட்டு குடுக்க மாட்டியே… சரிம்மா சொல்லு என்ன பேசணும்…” என்று கேட்டார்.

வேலாயி “நா என்னத்த பெரிசா பேசிற போறேன்… எல்லாம் நம்ம தேனு கண்ணாலம் விசியமாத்தான்…” என்று கூற,

சிதம்பரம் புன்னகைத்து “வரும்போது ஹனி சொன்னா ம்மா… அப்ப மாப்ள பாக்க ஆரம்பிக்றேன்…” என்றார்.

வேலாயி முகங்கொள்ளாப் புன்னகையுடன் “அதுக்குள்ள அப்பன்ட்ட எல்லாத்தையும் ஒப்பிச்சிருச்சா அந்த வாப்பட்டி கழுத… சந்தோசம்ய்யா… நானும் நம்ம விநாயகத்துட்ட சொல்லி தேனுக்கேத்த மாறி நல்ல மாப்ளயா பாக்கச் சொல்றேன்… சரி நீ எத்தன நாள் தங்குற… இல்ல வழக்கம்போல வேல விசியமா வந்தேன்னு ஒரே நாள்ல பொறப்பட போறியா…” என்று கேட்டார்.

அதுவரை சிரித்த முகமாய் இருந்த சிதம்பரத்தின் முகம் வாடி சங்கடத்தைத் தத்தெடுத்து திணறியவாறே “அம்மா… அது வந்து…” என்று அவர் வாய் ஏதோ கூற வர, பெற்றவளுக்குத் தெரியாதா பிள்ளையைப் பற்றி வேலாயி பெருமூச்சு விட்டு முந்தானையை உதறி சொருகி “சரி வாய்யா… சாப்ட போலாம்…” என்றுவிட்டு வேகமாக கண்களில் தேங்கியக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அடுக்களையை விட்டு வெளியேறினார்.

சிதம்பரம் வேகமாகச் செல்லும் தன் அன்னையின் முதுகை வெறித்தவர், சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு பின் மெல்ல அங்கிருந்து வெளியேறினார்.

சிதம்பரம் எப்பொழுது அமெரிக்காவிற்கு வேலைக்குச் சென்றாரோ அப்போதிருந்தே இது வழக்கமாயினும் வேலாயியால் ஒற்றை மகனை கண்காணாத தூரத்திற்கு அனுப்பிவிட்டு அவன் உண்டானா? உறங்கினானா? என்று தினம் ஏக்கமும் துக்கமும் கொள்ளும் மனதினை அடக்க அவர் படும் நாடு அவர் மட்டுமே அறிவார். இதில் சிதம்பரம் எப்போதாவது ஊருக்கு வருபவர் இதுப்போல் ஒருநாளிலேயேக் கிளம்பிச் செல்வது அவரது வேதனையைக் கூட்டியது.

சிதம்பரம் ஊரில் வந்து தங்குவதென்பது மிகவும் அரிதாகிவிட, தங்களைக் காணவாவது வருகிறானே என்ற சிறு ஆறுதல் தான் வேலாயியின் வேதனையை சிறிது மட்டுப்படுத்துகிறது. சிதம்பரத்திற்கும் தன் பெற்றவளின் வேதனை புரிந்தாலும் தனது வேலையாலும் தான் கொண்ட லட்சியத்தாலும் தன் குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்க முடியாமல் அவ்வப்போது தாயின் மடியையும் மகளின் அருகாமையையும் எண்ணி ஏங்கித் தவிக்கும் மனதினை பெரும் பூட்டுப் போட்டுப் பூட்டி விடுவார். இருந்தபோதும் அவர் இந்தியா வரும் காலங்களில் அவரது பூட்டிக் கிடக்கும் ஏக்கத்தையும் தவிப்பையும் அன்னை, மகளின் மேல் வைத்த அன்பு எனும் உளி உடைத்து விடுவித்த மறுநிமிடம் தன் அன்னை மற்றும் மகளைக் காண ஊருக்குக் கிளம்பியிருப்பார்.

தேன்மலர், ராகவி, அருள், சுரேஷ் நால்வரும் கைக்கால் கழுவிவிட்டு சாப்பிட வர, வேலாயியும் சிதம்பரமும் தங்கள் மனத்தின் வேதனையை மறைத்து சிரித்துப் பேசியபடி கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

தேன்மலர் “என்ன அம்மாவும் பய்யனும் கதைப் பேச ஆரம்பிச்சாச்சா… சரி வாங்க சாப்ட்டுட்டே வந்து பேசுங்க….” என்றபடி அனைவருக்கும் உணவு பரிமாற ஆரம்பித்தாள்.

வேலாயி காலையில் வைத்த நாட்டுக் கோழி குழம்போடு மதியத்திற்கு ஆட்டுக் கறிக் குழம்பு, கறி மிளகுப் பிரட்டல், மீன் குழம்பு, மீன் வறுவல் என்று வகை வகையாக சமைத்திருக்க,

அதைக் கண்டு சுரேஷ் “அப்பாயி…. சித்தப்பா வர்ராருனதும் தடபுடலா விருந்தே ரெடி பண்ணிட்டியே… சித்தப்பா வர்ராருனு உனக்கு ஃபோன் பண்ணிருப்பாரு… ராகவியும் அருளும் வருவாங்கன்னு உனக்கு எப்டி தெரியும்… அவங்களுக்கும் சேத்து சமச்சுருக்க…” என்று கேட்டான்.

அதைக் கேட்ட மற்றவர்கள் இதழ்களில் புன்னகைத் தவழ சுரேஷை பார்க்க, வேலாயி “எனக்கு தெரியும்டா… அப்பன் வர்ரானனோனே இந்த வாப்பட்டி லீவு போடுவா… இவ லீவு போட்டா கூடவே இந்த ராக்காயியும் இந்த நெடுமாட்டுப் பயலும் தொத்திட்டு வருங்கன்னு தெரியும்… அதான் இதுங்களுக்கும் சேத்து சமச்சேன்….” என்று கூறியவாறே ராகவியையும் அருளையும் கொமட்டில் குத்தினார்.

ராகவி “அப்பாடா… அப்பாயி நீ ராக்காயினே கூப்டு… தயவு செஞ்சு ராகவின்ற அழகான பேர ராயவி ரேயவினு கூப்ட்டு கொல்லாத…” என்று கூற, வேலாயி உதடு சுழித்து “போடி பொச கெட்டவளே…” என்று கூற, ராகவி சிரித்தாள்.

அருள் சிரித்து “அப்பாயி… இன்னொரு தடவ நெடுமாட்டு பயலேனு சொல்லுப்பாயி…” என்று கண்கள் சுருக்கிக் கெஞ்சும் குரலில் கேட்க, வேலாயி அவன் தலையில் தட்டி “பேசாம சாப்ட்றா நெடுமாட்டு பயலே…” என்று திட்ட, அருள் சிரித்து “அய்யோ… தேங்க்ஸ் டார்லிங்…” என்று அவர் கன்னம் கிள்ளி முத்தம் வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

வேலாயி தன் கன்னத்தைத் தேய்த்து “பைத்தியக்காரா…” என்று திட்டி விட்டு, சோற்றை பிசைந்து உருண்டைப் பிடித்து தன் மகனுக்கு ஊட்ட ஆரம்பித்தார். மற்றவர்கள் சிரித்துவிட்டு சாப்பிடுவதில் கவனமாக, தேன்மலர் வேலாயி கண்கள் மின்ன சிதம்பரத்திற்கு ஊட்டுவதை இமைக்காமல் பார்த்திருந்தாள்.

தேன்மலருக்கு வேலாயியின் வேதனை தெரியும், அதனால் தான் அவ்வப்போது ஏதாவது குறும்பு செய்து அவரிடம் வம்பு வளர்த்து அவர் வாயைப் பிடுங்கிக் கொண்டிருப்பாள். சிதம்பரம் வரும்போதெல்லாம் வேலாயி இவ்வாறு அவருக்கு ஊட்டி விடுவதுக் கண்டு தேன்மலர் வேலாயியின் மகிழ்ச்சியும் அன்பும் கண்டு மனம் நிறைந்துப் போவாள்.

வேலாயியிக்காகவே தன் தந்தையிடம் அடிக்கடி வரும்படியும் தங்களோடு இருக்கும்படியும் கூறி சண்டைப் போடுவாள். ஏனெனில் சிதம்பரம் எவ்வளவு விரும்பி அவ்வேலையை செய்துக் கொண்டிருக்கிறாரென்று நன்கு உணர்ந்தவள். ஆதலால் தன் தந்தை தன்னுடனே இருக்க வேண்டுமென்று அவள் ஆசைக்கொண்டதில்லை. தன் தந்தையின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்றிருந்தாள். அனைவரும் சாப்பிட்டு முடித்து கைக்கழுவிவிட்டுக் கூடத்தில் அமர்ந்துப் பேச ஆரம்பிக்க, சிதம்பரம் ஒரு தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு தேன்மலரை அடுக்களைக்கு அழைத்துச் சென்றார்.

தேன்மலர் முகம் மலர தன் தந்தையின் தோளில் தொங்கிக் கொண்டுச் சென்றவள் அடுப்பு மேடையில் ஏறி அமர்ந்துக் கொள்ள, சிதம்பரம் தன் மகளுக்கு சிரித்த முகமாய் உணவு ஊட்ட ஆரம்பித்தார்.

தேன்மலர் உண்டுக் கொண்டே “ஆமா ப்பா… ஏதோ சர்ப்ரைஸ் இருக்குன்னியே… என்ன ப்பா…” என்று கேட்க,

சிதம்பரம் சிரித்து “நீ பர்ஸ்ட் சாப்ட்டு முடி… அப்பா சொல்றேன்…” என்று கூற, தேன்மலர் சிரித்து சரியென்று தலையாட்டி அமைதியாக உண்டு முடித்தாள்.

சிதம்பரம் உணவை ஊட்டி முடிக்கும் வரை தன் மகளின் முகத்தை விட்டுப் பார்வை விலக்காது தன் கண்களில் நிறைத்துக் கொண்டார். தேன்மலர் உண்டு முடித்ததும் அவளை தன்னறைக்கு அழைத்துச் சென்ற சிதம்பரம் தான் கொண்டு வந்த பையிலிருந்து சிறிய டப்பாவை எடுத்துத் திறக்க, தேன்மலர் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

சிதம்பரம் புன்னகையோடு தன் மகளின் உணர்ச்சிகளைப் பார்த்தவர் “டூ யூ லைக் இட் ஹனி?” என்று கேட்க,

தேன்மலர் நிமிர்ந்து கண்கள் மின்ன “லவ் இட் ப்பா… லவ் யூ ப்பா…” என்று தாவி அவரை அணைத்துக் கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சிதம்பரம் சிரித்து “லவ் யூ ஹனி…” என்றார். பின் வெள்ளைத் தங்கத்திலான அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டச் சங்கிலியில் அரிதான பெரிய கருப்பு வைரம் நடுவில் பதித்திருக்க சுற்றிலும் சிறிய வெண் வைரங்கள் பதித்து சிறிய பதக்கம் போல் கோர்த்திருந்த அந்த அழகியக் கைச்செயினை தேன்மலரின் கையில் போட்டு விட்டார்.

தேன்மலர் ஒருமுறை தன் கைகளை சுழற்றிப் பார்த்தவள், அந்த கைச்செயின் மிகப் பாந்தமாய் தன் கையில் பொருந்தியிருப்பதைக் கண்டவள் புன்னகையோடு “ரொம்ப அழகா இருக்கு ப்பா… ப்ளாக் டைமன்ட் ரொம்ப ரேர்ல… எப்டி ப்பா…” என்று கேட்டாள்.

சிதம்பரம் புன்னகைத்து “உனக்கு புடிச்சுருக்குல… என் ஹனியே ரேர் பீஸ் தான்… ஸோ என் ஹனிக்கு எல்லாம் பெஸ்ட்டா ஸ்பெஷலா இருக்கனுல்ல…” என்று கண்சிமிட்ட,

தேன்மலர் சிரித்து “நீ இருக்கியே ப்பா… உன் வாய்லேர்ந்து அவ்ளோ சீக்ரம் எதையும் வாங்க முடியாது… சரி சர்ப்ரைஸ் எங்க….” என்று கேட்டாள்.

சிதம்பரம் “இதுதாண்டா சர்ப்ரைஸ்….” என்று கூற,

தேன்மலர் “அப்பா சும்மா விளையாடாத… உன்னை பத்தி எனக்குத் தெரியும்… சொல்லு…” என்றாள்.

சிதம்பரம் சிரித்து “உன்னை ஏமாத்த முடியுமா… சரி சர்ப்ரைஸ் என்னனு சொல்லுவேன்… ஆனா நீ யார்கிட்டயும் சொல்லக் கூடாது… அப்பாயி உன் ப்ரண்ட்ஸ் யார்க்கிட்டயும்…” என்றார்.

தேன்மலர் யோசனையோடே “சரி சொல்ல மாட்டேன்…. நீ என்னனு சொல்லு…” என்று கூற,

சிதம்பரம் தன் பையிலிருந்து ஒரு பத்திரத்தையும் ஒரு சாவியையும் அவளிடம் கொடுத்து “ஹனி… நீ ப்ளஸ் டூ முடிச்சப்போ நீ, நா, அம்மா மூனு பேரும் பெங்களூர் போய்ருந்தப்போ என் ப்ரண்ட் வீட்ல தங்கியிருந்தோமே ஞாபகமிருக்கா…” என்று கேட்க, தேன்மலர் குழப்பத்தோடு தலையாட்ட, சிதம்பரம் மென்னகையோடு “நீ கூட அந்த வீடு ரொம்ப அழகாயிருக்கு புடிச்சுருக்கு…. இப்டி ஒரு வீடிருந்தா நல்லார்க்கும்னு சொன்னியே… அந்த வீடு இப்ப நிஜமாவே நம்ம வீடாயிடுச்சு….” என்று கூற, தேன்மலர் மகிழ்ச்சியில் கண்களில் நீர் திரள நம்பமுடியாமல் தன் தந்தையைப் பார்க்க,

அவர் “அவன் வீட்ட வித்துட்டு லண்டன்ல இருக்கற அவன் பய்யனோட தங்கபோறதா சொன்னான்… நானே அந்த வீட்ட வாங்கிக்றேன்னு வாங்கிட்டேன்… என் ஹனிக்காக…” என்று கூறி இமைமூடித் திறக்க, தேன்மலர் தாவி அவரை அணைத்துக் கொண்டு அழுதாள்.

“அப்பா… நா எப்பவோ சும்மா புடிச்சுருக்குன்னு சொன்னத ஞாபகம் வச்சு வாங்கிற்கியே ப்பா… ஐ அம் லக்கி டூ கேவ் யூ அஸ் மை அப்பா ப்பா… லவ் யூ ப்பா… லவ் யூ ஸோ மச்…” என்றாள்.

சிதம்பரம் சிரித்து அவள் தலை வருடி பின் அவள் முகம் நிமிர்த்தி கண்களைத் துடைத்து விட்டு “லவ் யூ ஹனி… அப்ப நீ அங்க எவ்ளோ ஹேப்பியா இருந்தன்னு நா பாத்தேன்டா…. அப்பவே வாங்கனுனு நினைச்சேன்… பட் இப்போ தான் டைம் வந்துருக்கு…. அப்றம் இந்த சர்ப்ரைஸ் நமக்குள்ள மட்டும்தான் மறந்துராத ஹனி…” என்று கூற,

தேன்மலர் சிரித்து “டன் ப்பா… நமக்குள்ள மட்டும் தான் இருக்கும்…” என்றாள்.

சிதம்பரம் சிரித்து தன் மகளின் நெற்றியில் இதழ் பதித்தவர் “ஹனி… வெளில எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க போவோமா…” என்று கேட்க,

தேன்மலர் “சரி ப்பா… நீ போ… நா இந்த டாக்குமன்ட்ட அப்பாயிக்குத் தெரியாம வச்சுட்டு வரேன்…” என்று கூறி தன்னறைக்குச் சென்றாள். சிதம்பரம் புன்னகையோடு வந்து கூடத்தில் மற்றவர்களோடு வந்தமர, தேன்மலரும் பத்திரத்தைப் பத்திரப் படுத்திவிட்டு அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.

தேன்மலர் தன் கைச்செயினை அனைவரிடமும் காட்ட, அனைவரும் ஆச்சர்யத்தில் விழி விரித்து நன்றாக இருப்பதாகக் கூறினர். பின் சிதம்பரம் மற்றவர்களுக்கும் தான் வாங்கி வந்ததைக் கொடுக்க அவர்கள் முகத்திலும் மகழ்ச்சி மின்னியது. அப்போது வேலாயி மாட்டிற்கு தண்ணீர் காட்ட வேண்டுமென்று எழ, தேன்மலர் அவரை அமர வைத்துவிட்டு அவள் சென்று அந்த வேலையை முடித்து விட்டு வந்தாள். அருளும் தேன்மலரும் வேலாயியை வம்பிழுத்து வாயைப் பிடுங்க, மற்றவர்கள் அவர்களைப் பேச்சை ரசித்து சிரித்திருந்தனர். சிதம்பரம் அந்த மகிழ்வானத் தருணங்களைத் தன் மனதறையில் பொக்கிஷமாக சேமித்துக் கொண்டார். சிதம்பரமும் அவர்களோடு கலகலவென்று உரையாடி மகிழ, தேன்மலருக்கும் வேலாயியிக்கும் அதனைக் கண்டு அத்தனை ஆனந்தம். பின் மாலை நெருங்க அனைவரும் காபி அருந்திவிட்டு, சிதம்பரம் ஊருக்குக் கிளம்ப வேண்டுமென்றுக் கூறியதால், அனைவரும் அவரைக் கூட்டிச் சென்று ஏர்ப்போர்ட்டில் விட்டனர்.

சிதம்பரம் ஏர்ப்போர்ட்டுக்குள் செல்லும் முன் தன் அன்னையையும் மகளையும் ஏக்கத்தோடு இமை விலக்காமல் பார்த்துக் கண்களில் நிறைத்துக் கொண்டார். வேலாயியியும் தேன்மலரும் கண்கள் கலங்க அவர் உள்ளே செல்லும் வரை அவரைக் கண்களில் நிறைத்து நின்றனர். பின் வேலாயி, தேன்மலர், சுரேஷ் மூவரும் ராகவியையும் அருளையும் அவர்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு தங்கள் இல்லம் வந்து சேர்ந்தனர். காரிலிருந்து இறங்கும்போதே தேன்மலரை பக்கத்துவீட்டு பெண்மணி சிதம்பரம் வந்துப் போனதைப் பற்றி விசாரித்து பேச்சில் பிடித்துக் கொள்ள, சுரேஷ் எதிர்புறமிருந்த கொட்டகையில் காரை நிறுத்தச் செல்ல, வேலாயி வீட்டுக்குள் சென்றாள். பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசி முடித்து வீட்டிற்குள் சென்ற தேன்மலர் அங்கு தான் கண்டக் காட்சியில் ஒரு கணம் அதிர்ந்து உறைந்து நின்றவள் பின் கண்களில் நீர் உருண்டோட “அண்ணே….” என்று அந்த தெருவேக் கூடும் அளவிற்குக் கத்தினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்