அத்தியாயம்- 23
தேன்மலர் துயில் கலைந்து எழுந்த வேளை வெளியே இருள் கவியத் தொடங்கியிருந்தது. தேன்மலர் முகம் கழுவிவிட்டு வேலாயியை பார்க்கச் செல்ல, அங்கு ஏற்கனவே தேவா வேலாயியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதுக் கண்டு இதழ்களில் புன்னகைத் தவழ கதவருகே நின்றாள்.
தேன்மலரை கவனித்த வேலாயி “தேனு… ஏன் அங்கயே நிக்ற வா த்தா….” என்க, தேவா வேகமாகத் திரும்பித் தன்னவளை நோக்கிக் காதல் பார்வை வீச, தேன்மலர் அதைக் கண்டும் காணாமலும் வந்து “அப்பாயி…” என்று வேலாயியின் கையைப் பிடித்துக் கொள்ள, தேவாவின் அதரங்கள் மந்தகாசப் புன்னகைச் சிந்தியது.
வேலாயி “ஏன்டி பொசக் கெட்டவளே… எத்தன வாட்டி சொன்னாலும் உன் மண்டயில ஏறாதா… மூஞ்சி கழுவனா மூஞ்சிய ஒழுங்கா தொடைக்றியா…. என் ராசா தான் பாவம் உன்னை கட்டிக்கிட்டு என்ன அவஸ்தை பட போறானோ…” என்றவாறு அவளை இழுத்துத் தன் புடவைத் தலைப்பால் அவளது முகத்தைத் துடைத்து விட்டார்.
தேன்மலர் “அதான் துடைச்சுவிட நீயிருக்கீல ப்பாயி…. அதென்ன அவஸ்தை பட போறானோ… என்னை பாத்தா கொடுமக்காரி மாறி தெரியுதா உனக்கு….” என்று இடுப்பில் கை வைத்து மூக்கு விடைக்க அவரை முறைத்தாள்.
தேவா மந்தாசப் புன்னகையோடு “அம்மாச்சி… மலர் அவஸ்தை தான்… ஆனா செல்லமான அவஸ்தை…. இப்ப நீங்க முகம் துடைச்சு விடுங்க… எங்க கல்யாணத்துக்ப்றம் நா துடைச்சு விட்றேன்….” என்று கூறி தன்னவளைக் காதலும் குறும்பும் ததும்பும் விழிகளால் தீண்டி, ஒரு புருவம் உயர்த்தினான்.
வேலாயியை கோபமாக முறைத்துக் கொண்டிருந்த தேன்மலர், தன்னவனின் கூற்றைக் கேட்டு அவன்புறம் திரும்பியவள் அவனது விழியிலும் புன்னகையிலும் தன்னைத் தொலைத்து நாணமேறி நின்றிருந்தாள்.
வேலாயியோ முகங்கொள்ளாப் புன்னகையுடன் இருவரையும் பார்த்திருந்தவர் “என் பேத்தி குடுத்துவச்சவ தான்யா… ராசா… தேனு பொறுப்பானவ தான்… கொஞ்சம் முனுக்குன்னு கோவம் வரும்… ஆனா அதுவும் நியாயமா யார் மேல அன்பா இருக்காலோ அவங்க மேல தான் வரும்… எல்லா விசியத்தையும் தெளிவா யோசிச்சு பொறுப்பா செஞ்சு முடிப்பா…. எல்லார் மேலயும் அக்கறையாக இருப்பா… ஆனா தன்மேல அக்கறை எடுத்துக்க மாட்டா…. அப்பப்பப இப்டி விளையாட்டு புள்ள மாறி நடந்துக்குவா… அதுவும் அவ யார்கிட்ட அதிகம் ஒட்டுதலா இருக்காளோ அவங்ககிட்ட மட்டும் தான்…. அத மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கயா… அவ அம்மாகிட்ட வளந்ததவிட என்கிட்ட தான் அதிகம் வளந்தா… அதான் மனசு கேக்கல… நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும்…. இருந்தாலும் இப்டி சின்ன புள்ள மாறி நடந்துக்றாளேன்னு நீ நாலு சொல்லு சொல்லிட்டீனா…. சொல்லு தாங்க மாட்டாயா அவ… எவ்ளோ தான் தைரியமானவளா இருந்தாலும் தனக்கு புடிச்சவங்க சொல்ற ஒத்த வார்த்த உசுரையே உருவிப் போட்ரும்யா…. அதான் சொன்னேன்…” என்று விழிகள் கலங்க தவிப்பாய் தேவாவின் கையைப் பற்றிக் கொண்டார்.
தேன்மலர் சிலையென சமைந்து, வேலாயியை விழி நீர் திரையிட உணர்வுக் குவியலாய்ப் பார்த்திருக்க, தேவா பதறி “அச்சோ என்ன அம்மாச்சி இது…. என்கிட்ட போய் பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு… யாருமேயில்லன்னு இருண்டு போய் கெடந்தப்ப எனக்குள்ள அவளோட அவளுக்காக வாழனுன்ற ஒளி தந்தவ என் மலர்… என் உசுர எப்டி அம்மாச்சி நானே உருவிப் போடுவேன்…. மலர பத்தின கவல இனி உங்களுக்கு வேண்டாம்… அவ இனி என் பொறுப்பு…. என் மலர நா பத்ரமா பாத்துக்குவேன் அம்மாச்சி…. உங்க பயமும் அன்பும் எனக்கு புரியுது…. சொல்றதவிட செயல்ல காட்றதுதான் எனக்கு பழக்கம் அம்மாச்சி… அதனால சீக்ரமா எங்களுக்கு கல்யாணத்த பண்ணி வச்சு நாங்க வாழப் போற வாழ்க்கைய கண்ணாற பாத்து சந்தோஷப் படுங்க….” என்று கூறி கண்கள் கலங்கிப் புன்னகைத்தான்.
வேலாயி முகங்கொள்ளா புன்னகையுடன் “இவ அப்பன் வரட்டும் ராசா…. உடனே தேதிய முடிவு பண்ணி கண்ணாலத்த நடத்திபுடுவோம்….” என்று கூற தேவா முகத்தில் அப்படி ஒரு புன்னகை.
ஏற்கனவே வேலாயி பேச்சில் உணர்வுக் குவியலாய் நின்றிருந்த தேன்மலர், தேவாவின் பேச்சில் தன்மேலான அவனதுக் காதலை எண்ணி நெகிழ்ந்து, இதயத்தில் சுகமான வலியை உணர்ந்தவள் அவனையே விழி நீரோடு அவன் மீதானக் காதலும் வழிய இமைக்காமல் பார்த்திருந்தாள்.
அவளைக் கவனித்த தேவா “அழாதே…” என்று கண்களால் உணர்த்தி சைகையால் வேலாயிய சுட்டிக்காட்ட, தேன்மலர் “அழல…” என்று தலையை இடம் வலமாக ஆட்டிக் கண்களைத் துடைத்து அவனையேக் காதல் பொங்கப் பார்த்திருந்தாள்.
வேலாயி “தேனு…. உனக்கும் அதான்… என் ராசா சொன்னத கேட்டில்ல… என் ராசா பெத்தவங்க, கூட பொறந்தவள இழந்துட்டு நிக்கிது… என்னதான் வெளிய சிரிச்சு பேசுனாலும்… அவங்க இல்லாத ஏக்கமும் வலியும் மனசுக்குள்ள இருந்துக்கிட்டு தான் இருக்கும்… நீதான் என் ராசாவுக்கு அந்தக் குறையே தெரியாம பாத்துக்கணும்…. உன் வாலு தனத்தல்லாம் மூட்டக் கட்டி வச்சுட்டு…. என் ராசாவ கண்ணும் கருத்துமா பாத்துக்கணும்… என்ன புரிஞ்சுதா…” என்று அமட்டலாகக் கேட்டார்.
தேன்மலர் தேவாவை விட்டு விழி அகற்றாது இதழ்களில் புன்னகைத் தவழ தலையாட்டியவள் “ஏய் கெழவி அதெல்லாம் என் புருஷன நா பத்ரமா பாத்துப்பேன்… நீ ஒன்னும் சொல்ல தேவயில்ல…” என்க, வேலாயி “அடிசக்க…” என்று கைத்தட்டி வாய்விட்டு சிரித்தார்.
தேவா வசீகரப் புன்னகையுடன் அவளைப் பார்த்துப் புருவத்தை ஏற்றி இறக்க, அப்போதுதான் தேன்மலருக்கு தான் பேசியதுப் புரிய, நாணம் மேலோங்கிட அவனைப் பார்க்க முடியாமல் நாக்கைத் கடித்து “நா போய் நைட்டு சாப்பாடு செய்றேன்….” என்று விட்டு நில்லாமல் அங்கிருந்து ஓட, தேவா சத்தமாக சிரிக்கும் சத்தம் அவளைப் பின்தொடர அதன் விளைவாய் அவளது முகம் சிவந்து அதரங்கள் நாணப் புன்னகைச் சூடி நின்றது. அடுக்களைக்குச் சென்ற தேன்மலர் அதை நினைத்து தனக்குத் தானே சிரித்து வெட்கப்பட்டுக் கொண்டு நிற்க, அரவமே இல்லாமல் வந்து நின்ற தேவா, சிறிது நேரம் அவளது வெட்கத்தை ரசித்து நின்றிருந்தான்.
பின் மெல்ல அவளின் பின்புறம் சென்று காதோரம் “மலர்…” என்று மென்மையாய் அழைக்க, தேன்மலருக்கு திடீரென்று பின்புறம் கேட்ட அவனது குரலால் ஒரு நொடி மூச்சடைக்க, காதோரம் இழையும் அவனின் சூடான மூச்சுக் காற்று அவளுள் பதட்டத்தையும் இதயமதில் குளிர் மழையையும் ஒரு சேர விளைவிக்க, அவளது உள்ளங்கை சில்லிட, நாணமும் தவிப்புமாய் அவனது புறம் திரும்பி அவனது விழிகள் நோக்கினாள்.
அதரங்களில் மந்தகாசப் புன்னகை இழையோட, காதலோடு போட்டிப் போடும் நாணம் சிந்தும் அவளது விழிகளோடுக் காதல் கசிந்துருகும் தன் விழிகளை சில கணங்கள் கலக்கவிட்டு, மென்மையாய் அவளது இடைப்பற்றி அவளைத் தன்புறம் இழுத்தான். அவனது திடீர் இழுவையில் காதல் வழியும் தன் விழிகளை விரித்து சிறிது அதிர்ச்சிக் காட்ட, அவன் வசீகரமாய்ப் புன்னகைத்துக் கண்ணடிக்கவும் அவனவள் செல்லமாக முறைத்து அவனது நெஞ்சத்தில் வலிக்காமல் இரு அடிகள் வைத்தாள்.
தேவா அவளை விட்டு விழிகள் அகற்றாது “மலர்…” என்று குரலில் காதல் குழைத்தழைக்க, தேன்மலர் அவனது விழிகளை ஊடுருவி இதழ்களில் புன்னகைத் தவழ “ம்ம்…” என்றாள்.
தேவா மென்னகையோடு “அம்மாச்சிட்ட என்ன சொன்ன….” என்று கேட்க,
தேன்மலர் “அய்யோ… கரக்ட்டா பாயிண்ட்டுக்கு வரானே….” என்று உள்ளுக்குள் நினைத்தவள் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு “என்ன சொன்னேன்…” என்று திருப்பிக் கேட்டாள்.
தேவா மந்தகாசப் புன்னகைத் தவழ “ம்ம்… அப்ப என்ன சொன்னன்னு மறந்துட்ட அப்டி தானே…” என்று கேட்க, தேன்மலர் சளைக்காமல் “ஆமா…” என்றாள்.
தேவா “சரி விடு… நா ஞாபகப் படுத்துறேன்….” என்றுவிட்டு அவளை மேலும் தன்னோடு இறுக்க, அவனது அணைப்பும் அருகாமையும் ஏற்கனவே அவளை இம்சை செய்துக் கொண்டிருந்தாலும் அதை வெளிக்காட்டாது இருந்தவள் இப்போது வெட்கம் மேலோங்க நெளிந்தவாறு “என்ன பண்றீங்க தேவா…. யாராவது வந்தா… என்ன நினப்பாங்க….” என்றாள்.
தேவா புன்னகை மாறாமல் “ம்ம்… என்ன நினப்பாங்க…. நாம ரொம்ப அன்பா அந்யோன்யமா இருக்கோம்னு நினப்பாங்க…. இப்ப எதுக்கு பேச்ச மாத்துற… நீ என்ன சொன்னன்னு சொல்ற வரைக்கும்…. நா உன்னை விட மாட்டேன்…” என்று கூறிக்கொண்டே மேலும் அவளைத் தன்னோடு இறுக்கினான்.
தேன்மலர் “அச்சோ… விட மாட்டான் போலயே…” என்று நினைத்தவள் “சரி சொல்றேன்…” என்று கூற, தேவா அவளை விலகி புன்னகையோடு நின்றிருந்தான்.
தேன்மலர் அவனது விழிகளை நேராய் ஊடுருவி வெட்கமும் காதலும் குரலில் தொனிக்க “என் புருஷன நல்லா, பத்ரமா பாத்துப்பேன்னு சொன்னேன்…” என்று கூறவும் தேவா முகத்தில் அப்படி ஒரு புன்னகை.
தேன்மலருக்கும் அவனின் புன்னகை ஒட்டிக் கொள்ள, அவனையேப் பார்த்திருந்தாள்.
தேவா “ஆமா செல்லக்குட்டி…. இவ்ளோ ஆசை எப்டி எப்போ…” என்று கேட்க,
தேன்மலர் புன்னகையோடு “ம்ம்… அது எப்போன்னு தெரில…. ஆனா நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்றியான்னு கேட்டீங்களே அப்போவே என் மனசுக்குள்ள அவ்ளோ சந்தோஷம்… அப்டியே ஜில்லுன்னு இருந்துச்சு… ஆனாலும் ஏதோ தயக்கம்…. இப்ப நீங்க அப்பாயிகிட்ட பேசுனப்ப எனக்கு அப்டியே அழுகையே வந்துடுச்சு… உங்கள அப்டியே அணச்சுக்கனும் போல இருந்துச்சு….” என்றாள்.
தேவா விழி விரித்து குறும்பு மின்ன “இப்பகூட அணச்சுக்கலாம்…. நா எதுவும் சொல்ல மாட்டேன்…” என்று கூற,
தேன்மலர் புன்னகைத்து “ஹான் ஆசை தான் போங்க…” என்று கூற, தேவா வாய்விட்டு சிரித்தான்.
பின் தேன்மலர் “என்னை எப்டி தேவா உங்களுக்கு புடிச்சுது…. கேக்றது தப்பு தான் இருந்தாலும் கேக்றேன்… நா அவ்ளோ அழகில்ல கலர் இல்ல…. நா உங்ககூட நின்னா உங்களுக்கு ஈக்வலா இருப்பேனா…” என்று முகம் வாடி வலிக் கூடி கேட்டாள்.
தேவா ஒருகணம் அவளை முறைத்து பின் நிதானமாக விழிகள் கலங்க “இப்டிலாம் பேசாதடி… கேக்காதடி கஷ்டமாயிருக்கு…. யார் சொன்னா நீ அழகில்லன்னு…. கலர் என்னடி கலர்… நீ பேரழகிடி… உனக்கு என்ன அப்டி ஒரு சந்தேகம் நீ வேணா பாரு நாம ஜோடியா போனா எத்தன பேரு நம்ம ஜோடிய பாத்து நல்லார்க்குன்னு சொல்றாங்க பொறாம படப் போறாங்கன்னு…. உன்னை பாத்தவொடனே புடிச்சுருச்சுன்னுலா சினாமா தனமா பொய் சொல்ல மாட்டேன்… உன்னை பாக்க பாக்க… ஏதோ ஒன்னு என்னை உன் பக்கம் ஈர்த்துச்சு… என்னன்னுலா சொல்ல தெரில…. அப்றம் நீ நா பாக்கலன்னு நினச்சு அன்னிக்கு தோட்டத்துல நிக்கும்போது சைட் அடிச்சியே…. அப்போ எப்டி இருந்துச்சு தெரியுமா… அப்படியே ஜில்லுன்னு… அன்னிக்கு ஃபுல்லா அவ்ளோ சந்தோஷமா இருந்தேன்…. எனக்கு முதல்ல குழப்பம் தான் உன்மேல எனக்கு வெறும் ஈர்ப்பா இல்ல காதலான்னு… அன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லன்னுதும் உன் கண்ல தெரிஞ்ச வலியும் தவிப்பும் உன் அன்பும் காலம் பூரா எனக்கு கெடைக்காதான்னு ஏங்க வச்சுது… அப்றம் நா தூங்கிட்டதா நினச்சு நீயும் அமீராவும் பேசுனீங்களே…. அமீரா பேசுனதுக்கு எனக்கு அப்டி எந்த எண்ணமுமில்லன்னு சொன்னியே… அப்போ எனக்கு எப்டியிருந்துச்சு தெரியுமா… அவ்ளோ வலி மனசுல… அப்பதான் தெரிஞ்சுகிட்டேன் இது வெறும் ஈர்ப்பில்லன்னு… அப்பதான் முடிவு பண்ணேன் நீ என்னை ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலனாலும் நீதான் என் பொண்டாட்டின்னு… மறுநாள் காலையில நா உனக்கு முத்தம் குடுத்தப்போ ஒரு செகண்ட் உன் கண்ல சந்தோஷம் வந்துச்சு… அப்றம் தான் அதிர்ச்சி வந்துச்சு…. அதுலயே உனக்கும் என்னை புடிச்சுருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன்…. ஆனா அமீராட்ட நீ பேசுனது வச்சு நீயால்லாம் உணர மாட்ட… நாந்தான் உணர வைக்கனுனு முடிவு பண்ணி… என் மனசுல இருக்றத உன்கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்றியான்னு கேட்டேன்… அழகு, கலர் இதெல்லாம் பாத்து வந்தா அது காதலே இல்லடி… காரணம் பாத்து காதல் வந்தா அந்த காரணம் காணாம போனாலோ, அதுவே சலிச்சு போனாளோ காதலும் காணாம போயிரும்டி…. இனி உன் மனசுல இது மாறி எதுவும் தோனக்கூடாது சரியா….” என்று கேட்டான்.
தேன்மலர் விழி நீர் வழிய தலையசைத்து அவனை அணைத்து மார்பில் முகம் புதைத்து “சாரி தேவா… நா ஏதோ லூசு தனமா கேட்டு உங்கள கஷ்டபடுத்திட்டேன்… இனி நா அது மாறி பேச மாட்டேன்… சாரி…” என்று அழுது அவனது சட்டை நனைக்க,
தேவா அவளது முகம் நிமிர்த்தி விழிகளைத் துடைத்து “என்ன மலர் மா இது… சின்ன புள்ள மாறி அழுதுட்டு…” என்று கேட்க,
தேன்மலர் “இல்ல தேவா… நா உங்கள கஷ்டபடுத்திட்டேன்….” என்று கூற,
தேவா புன்னகைத்து அவளது தலையில் முட்டி “அய்யோ அழுமூஞ்சி… நீ எங்க என்னை கஷ்டபடுத்துன…. உனக்கு நீ அழகா இல்லயோன்ற இன்பீரியாரிட்டி உனக்கு தெரியாமயே உனக்குள்ள இருந்துருக்கு…. அதான் அப்டி கேட்டுட்ட… இப்போ நா சொல்லவும் உனக்கு புரிஞ்சுருக்கு… மாமா எதுக்கு இருக்கேன்… ஒவ்வொரு நிமிஷமும் நீ எவ்ளோ அழகுன்னு உனக்கு தெரிய வக்கிறதுதான் இனி என் வேலையே…” என்று கூற, தேன்மலர் அவனது விழி நோக்கி சிரித்தாள்.
தேவாவும் சிரிக்க, தேன்மலர் எக்கி அவனது நெற்றியில் இதழ் பதிக்க, தேவா இமை மூடி அதை ரசித்திருந்தான். பின் தேன்மலர் அவனை விட்டு விலகிப் புன்னகைக்க, தேவாவும் புன்னகைத்தான். அடுக்களைக்கு ஏதோ எடுக்க வந்த துர்கா இவர்களைக் கண்டு “நா எதுவும் பாக்கலப்பா…” என்று திரும்ப, அங்கு அருள் வாயைப் பிளந்தவாறு நின்றிருந்தான்.
தேன்மலரும் தேவாவும் சங்கடமாக நெளிந்துப் புன்னகைத்துவிட்டு வெட்கப் பட்டு அங்கிருந்து அகல, அருளும் துர்காவும் வாய்விட்டு சிரித்திருந்தனர். பின் தேன்மலர் இரவு உணவு செய்ய, துர்கா அவளுக்கு உதவிப் புரிந்தாள்.
ராஜேஷ் மருத்துவமனையிலிருந்து வந்தவுடன் அனைவரும் அமர்ந்து உணவு உண்டு முடிக்க, வேலாயிக்கு துர்கா மாத்திரைக் கொடுத்து தூங்க அழைத்துச் செல்ல, தேன்மலர், தேவா, அருள், ராஜேஷ் நால்வரும் கூடத்தில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
தேன்மலர் ராஜேஷிடம் “ராஜேஷ் அப்பாவோட மெடிக்கல் ரிப்போர்ட் டெல்லில குடுத்தது, சென்னைல குடுத்தெல்லாம் பத்ரமா இருக்கா…” என்று கேட்டாள். ராஜேஷ் “இருக்கு தேன்மலர்…. ஏன் கேக்றீங்க…” என்று வினவ,
தேன்மலர் “காரணமா தான் ராஜேஷ்… நா ஊருக்கு போகும் போது அது வேணும்… அப்றம் அப்பாவுக்கு இப்ப நடந்துக்கிட்ருக்ற ட்ரீட்மென்ட் பத்தின ரிப்போர்ட்ஸும் வேணும்…” என்றாள்.
ராஜேஷ் “சரி தேன்மலர்…. நீங்க கிளம்பும்போது கரக்ட்டா எல்லாம் ஒரு பைல்ல உங்களுக்கு தரேன்…” என்று கூற, தேன்மலர் “தேங்க்ஸ் ராஜேஷ்…” என்று புன்னகைத்தாள்.
அருள் “ராஜேஷ்… வந்ததுலேர்ந்து நீங்க உங்க பேம்லி பத்தி கேக்கவேயில்லயே…” என்று கேட்க,
ராஜேஷ் “நீங்களும் தேன்மலரும் என் பேம்லிக்கு பொறுப்பேத்துருக்கும் போது நா ஏன் அவங்கள பத்திக் கவலப்படனும் கேக்கணும்…” என்று திருப்பிக் கேட்டான்.
தேன்மலரும் அருளும் அவனின் நம்பிக்கைக் கண்டு நெகிழ்ந்து புன்னகைத்து “நீங்க கேக்லனாலும் நாங்க சொல்லணும்…” என்று அவனின் குடும்பத்தினர் நலன் கூற, தேவா தன்னவளைப் பெருமையாகப் பார்த்திருந்தான்.
அப்போது ஸாமும் கின்ஸியும் அங்கு வர, மற்றவர்கள் அவர்களைப் புன்னகையோடு வரவேற்க, துர்காவும் வேலாயியை தூங்க வைத்துவிட்டு அவர்களோடு வந்து இணைந்துக் கொண்டாள்.
ஸாம் “ஸ்வீட்டி பை…. ராஜேஷ் குடுத்த மருந்தோட ரிப்போர்ட்… இந்த பைல்ல இருக்கு…” என்று சிதம்பரத்திற்கு டெல்லி மருத்துவமனையில் கொடுத்த மருந்தை ஆராய்ச்சி செய்ததற்கான ஆய்வறிக்கையை அவளிடம் கொடுத்தான்.
தேன்மலரும் அருளும் அதை வாங்கி ஒருமுறை படித்துப் பார்த்து சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார்கள்.
தேவா “மலர்… நேத்து சொன்னியே மாமாமேல ஏதோ மருந்த டெஸ்ட் பண்ணாங்கன்னு… அதோட ரிப்போர்ட்டா…” என்று கேட்க, தேன்மலர் ஆமென்று தலையசைத்தாள்.
சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ, கின்ஸி “அடுத்து என்ன பண்ண போறோம்…” என்று கேட்டாள்.
தேன்மலர் “யோசிப்போம்…” என்றாள்.
அப்போது தேன்மலருக்கு பிக் பி அழைக்க, தேன்மலர் சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு ஜே பற்றி கேட்க, பிக் பி “அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்… கண்ணு முழிச்சதும் நா எப்டி இங்க என்னன்னு கேட்டான்… அவன் அப்பார்ட்மெண்ட் ஃபயர் ஆக்ஸிடென்ட் ஆனதாகவும் அதுல அவன் மயங்கி விழுந்துட்டதாவும் அவன ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணதாவும் நம்ப வச்சாச்சு… வீட்ல ஃபயர் ஆக்ஸிடென்ட் ஆன மாறியும் செட் பண்ணியாச்சு.. அங்க உள்ள மத்தவங்களயும் அதே மாறி நம்ப வச்சு சொல்ல வச்சாச்சு…” என்றார்.
தேன்மலர் “ஆனா உடம்புல காயம்…” என்கவும் பிக் பி சிரிக்க,
தேன்மலர் “பிக் பி…” என்றிழுக்க,
பிக் பி “நீ எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொன்னதுனால தான் ஏஞ்சல் இதோட விட்டேன்…” என்றார்.
தேன்மலர் பெருமூச்சோடு “ஓகே பிக் பி… நா அப்றம் பேசறேன்…” என்று அழைப்பைத் துண்டித்து மற்றவர்களிடமும் பிக் பி கூறியதைக் கூறினாள்.
தேவாவும் அருளும் புன்னகைக்க, ராஜேஷும் துர்காவும் கோபத்தில் அமர்ந்திருக்க, ஸாமும் கின்ஸியும் எவ்வுணர்வும் காட்டாது தேன்மலரை பார்த்திருந்தனர். பின் அடுத்து என்ன செய்வதென்று பேசியவர்கள், சிதம்பரம் ஓரளவுக் குணமாகும் வரை வேலாயிக்கு விடயம் தெரியாமலிருக்க, சிதம்பரத்தை மேலும் இரண்டு வாரம் மருத்துவமனையிலேயே வைத்திருக்க முடிவுச் செய்தனர். தேன்மலர் அதன்பிறகு வேலாயியிடம் பக்குவமாய் எடுத்துக் கூறி புரிய வைத்து விடுவதாகக் கூறினாள். அதன்பின் அனைவரும் சில விடயங்கள் பேச, தேவா தன் மனதில் தோன்றிய திட்டம் ஒன்றைக் கூற, அனைவருக்குமே அது சரியென்று பட, அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். பின் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு ஸாமும் கின்ஸியும் கிளம்ப, மற்றவர்கள் உறங்கச் சென்றனர்.
இவர்கள் தூங்கி எழட்டும் அதற்குள் நாம் ஆர்யன், ரகு, லிங்கம் மூவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வருவோம்.
தேன்மலர், தேவா, அருள் மூவரும் அமெரிக்கா கிளம்பிய அன்று தான் ஆர்யனுக்கும் சாருமதிக்கும் திருமணம் நடந்தது. தேவா மற்றும் செந்திலின் திட்டப்படி தேன்மலர் அமெரிக்கா சென்ற விடயம் அன்று இரவு விமான நிலையத்தில் பணியாற்றும் ஆர்யனின் ஆளிற்கும் லிங்கத்தின் ஆளிற்கும் தெரியப்படுத்த, அது ரகுவையும் லிங்கத்தையும் சென்றடைந்தது.
ரகு ஆர்யனின் திருமண வேலைகளிலும் மறுநாள் நடக்கவிருக்கும் வரவேற்பு வேலைகளிலும் ஆழ்ந்திருந்தவன், இவ்விடயம் கேள்விப்பட்டு முதலில் கோபப்பட்டவன் பின் யோசனையில் ஆழ்ந்தான். ஒருவேளை ஜே தங்களிடம் கூறிய ஆதாரம் பற்றி தேன்மலருக்கு ஏதேனும் தெரிய வந்து அதற்காகத் தான் அவள் அங்குச் சென்றிருப்பாளோ என்று யோசித்தவன் உடனே ஜேவிற்கு அழைக்க, ஜே அழைப்பை ஏற்காததால் அவன் கேட்க வேண்டிய விடயத்தை அந்தக் கணினி குரலிடம் கூற, அது அதை ஜே பின்புக் கேட்பதற்காகப் பதிவு செய்துக் கொண்டது.
ஆர்யனுக்கு அன்று முதலிரவு ஆகையால் அதைக் கெடுக்க வேண்டாமென்று ஆர்யனிடம் இதுபற்றி மறுநாள் கூறிக் கொள்ளலாமென்று அமெரிக்காவிலிருக்கும் தனக்குத் தெரிந்த நபர்களிடம் ஜேவை பற்றியும் தேன்மலரை பற்றியும் விசாரிக்கக் கூறினான்.
லிங்கமோ ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான். சென்னை முழுக்க, தானும் தனது ஆட்களும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியக் கணக்காய் தேன்மலரைக் கவனமாகத் தேடிக் கொண்டிருக்க, அவளோ தங்கள் கண்களைக் கட்டி விட்டு அமெரிக்கா சென்றதை நினைத்து சினத்தில் சீறினான். தன் ஆட்களை அழைத்துக் கொண்டு அவள் என்று சென்னை வந்தாலும் சரியென்று விமான நிலையத்தின் முன் தனது பரிவாரங்களோடுத் தங்கி விட்டான்.
சாருமதியோ தன் மனம் கவர்ந்தவனின் கரம் பிடித்த மகிழ்ச்சியும் பூரிப்பும் காதலும் முகத்தில் மிளிர, அழகுப் பதுமையென ஆர்யனின் வீட்டில் அவனது அறையில் அலங்கரிக்கப் பட்ட கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அறைக்குள் வந்த ஆர்யன், சாருமதியை கண்டதும் முகம் மலரப் புன்னகையுடன் அவளை நோக்கி வந்தான். சாருமதி மீது ஏற்கனவே அவனுக்கு ஆர்வம் இருந்தது தான், ஆனால் அவளை பட்டுப் புடவையில் மணக்கோலத்தில் பார்த்ததும், அவனருகே வெட்கமும் பூரிப்புமாய் அமர்ந்திருந்தவளைக் கண்டு அவனுள்ளும் ஏதோ ஒரு சொல்ல முடியா உணர்வெழுந்து அவனை மகிழ்ச்சியில் பறக்கச் செய்தது. அதோடு அவளதுக் கழுத்தில் மங்கல நாண் முடிந்த வேளை, அவள் தன்னவள் தனக்கானவள் மட்டுமே என்ற எண்ணமும் கர்வமும் அவனுள் எழுந்தது. அதே எண்ணத்துடன் அவளருகில் வந்தமர்ந்து அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பிடித்துக் கொண்டான்.
பின் ஆர்யனும் சாருமதியும் திருமணம் பற்றியும் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின் ஆர்யன் மெல்ல அவளை நெருங்கி அவளது கன்னத்தில் இதழ் பதிக்க, சாருமதி வெட்கம் கொண்டு சிலிர்க்க, இதுவரை தன்னைத் தேடி வந்த பெண்களில் எவருமே இப்படி தன்னிடம் வெட்கப்பட்டுக் கண்டிராத ஆர்யனுக்கு அவளின் வெட்கம் அவள் மீதான ஈர்ப்பையும் ஆசையையும் தூண்ட, மெல்ல மெல்ல அவளை சீண்டி, முத்தமிட்டு அவளோடான இல்லற வாழ்வை ஆரம்பித்தான். சாருமதியோ அவனது ஒவ்வொரு தீண்டலிலும் அவனில் தன்னை இழந்தவள், தன் மனம் நிறையக் காதலோடு தன்னை அவனிடம் ஒப்புவித்தாள். ஆர்யன் மோகத்திலும், சாருமதி காதலினாலும் அன்பினாலும் தன் அன்பு அவனுக்கு தன் மீது காதல் வரவழைக்கும் என்ற நம்பிக்கையிலும் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர்.
ஆர்யன் மறுநாள் காலை மகிழ்ச்சியாக எழுந்துத் தயாராகி ரகுவை காண வர, ரகு தேன்மலர் அமெரிக்கா சென்ற விடயம் கூறவும் முதலில் ஆத்திரம் கொண்டு கிடைத்தப் பொருட்களைத் தூக்கிப் போட்டு உடைத்தவன், ரகு தான் தேன்மலரை பற்றி விவரங்கள் அறியக் கூறியிருப்பதாகக் கூறவும் கோபம் தணிந்தான்.
பின் சிறிது நேரம் ரகுவும் ஆர்யனும் யோசனையில் ஆழ, ரகு “டேய்… அந்த டாக்குமென்ட்ஸ ஜே எரிச்சுட்டேன்னு சொன்னாலும்… நாம கேர்புல்லா இருக்கணும்.. ஏன்னா இத்தன நாள் அமைதியா இருந்துட்டு இப்ப அமெரிக்கா போயிருக்கான்னா… ஏதோ விஷயம் இருக்கு…” என்று கூற,
ஆர்யன் “ஆமா ரகு… எனக்கும் அப்டி தான் தோனுது…” என்று யோசனையாகக் கூறினான்.
பின் ரகு ஏதோ நினைவு வந்தவனாக “ஆர்யா… அவளுக்கு அப்டி எதுவும் எவிடென்ஸ் கெடைச்சாலோ இல்ல அவ அப்பன குணப் படுத்தி அவனே நேர்ல சாட்சி சொல்ல வந்தாலோ… அவள லாக் பண்ண தான் நம்மகிட்ட ஒரு விஷயம் இருக்கே…” என்று கூறி மர்மமாகப் புன்னகைக்க,
ஆர்யன் “ஆமால்ல… ச்ச அதெப்டி மறந்தோம்…” என்று மர்மமாகப் புன்னகைத்தான்.
பின் இருவரும் லிங்கத்திற்கு அழைக்க, லிங்கம் “சாரு… நானும் சிட்டி புல்லா தூக்கமில்லாம தேடியும் அவ எப்டி எஸ் ஆனான்னு தெரில… அவ எப்டியும் சென்னை வரசொல்ல ஏர்போர்ட் வந்துதானே ஆவனும்… அதான் நானும் என் ஆளுங்களும் இங்கயே தங்கிட்டோம்…” என்றான்.
ரகு “புரியுது லிங்கம்… அவ நமக்கு ரொம்ப ஆட்டம் காட்றா… வரட்டும்… நீங்க அங்கயே இருங்க… அவ சென்னைல கால் வச்சதும் அவள நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வந்துருங்க… எதுக்கும் இருக்கட்டும் ஸேப்டிக்கு… எங்க ஆளுங்க கொஞ்ச பேர அனுப்பி வக்கிறேன்… அவங்களையும் உன்கூட வச்சுக்க….” என்று கூற, லிங்கம் சரி என்றான்.
பின் அவனிடம் மேலும் சில விடயங்கள் பேசிவிட்டு, தங்கள் ஊரிலிருந்து தேன்மலரை தேடச் சென்னை வரவழைத்திருந்த ஆட்களுக்கு அழைத்து லிங்கத்தோடு இருக்கச் சொல்லிவிட்டு ஆர்யனும் ரகுவும் மகிழ்ச்சியான மனநிலையுடன் ஆர்யனின் வரவேற்பு வேலைகளைக் கவனிக்கலாயினர்.
தேன்மலர் மறுநாள் டிக்கு அழைத்து தான் அமெரிக்கா வந்திருப்பதாகக் கூற, டி ஆதாரம் கிடைத்துவிட்டதாகக் கூறினார்.
தேன்மலர் “டி… அந்த ஆதாரம் எரிஞ்சு போயி 4 நாளாச்சு….” என்று கூற, டி அதிர்ந்து “என்ன சொல்ற…” என்று கேட்டார்.
தேன்மலர் “ஆமா டி… அந்த ஜே வேற யாருமில்ல அப்பாவோட ப்ரண்ட் ஹென்ரி ஜோன்ஸ் தான்…” என்கவும்
டி “நா கெஸ் பண்ணதுதான்…. ஆனா உனக்கு எப்டி தெரியும்…” என்று கேட்க,
தேன்மலர் “டி… எனக்கு எப்டி தெரியும்னலா இப்ப சொல்ல முடியாது… ஆனா உங்கிட்டேற்ந்து ஒரு ஹெல்ப் வேணும்…” என்றாள்.
டி “சரி மா… என்ன வேணும் சொல்லு…” என்று கேட்க, தேன்மலர் “அப்பா உங்களுக்கோ… இல்ல ஹயர் அபிஸியல்ஸ் யாருக்காவது ஏ ஆர் பார்மச்சுட்டிக்கல்ஸ் பத்தி எதாவது மெயில் பண்ணாறா…” என்று கேட்க,
டி “ஆமா… உங்க அப்பா என்கிட்ட தான் ரிப்போர்ட் பண்ணனும்… எனக்கு மெயில் பண்ணாரு… அதனால தானே என்னால உங்கப்பாவுக்கு அவங்கலால தான் ஆபத்துன்னு உன்னை கான்டாக்ட் பண்ணி சொல்ல முடிஞ்சது…” என்றார்.
தேன்மலர் “ம்ம்… அப்ப ரொம்ப நல்லதா போச்சு… நீங்க மறுபடியும் ஒரு க்ரூவ ஏ ஆர் பார்மச்சுட்டிக்கல்ஸுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு அனுப்பி வைக்க முடியுமா…” என்று கேட்டாள்.
டி சிறிது யோசனைக்குப் பிறகு “இப்டி உடனே இன்னொரு இன்ஸ்பெக்ஷன் பண்ண முடியாது… இருந்தாலும் சிதம்பரம் அந்த இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்ட சப்மிட் பண்ணாததால இன்னொரு தடவ பண்ண முடியும்… நா பண்றேன் மா… ஆனா ஒரு ரெண்டு வாரம் டைமாகும்…” என்றார்.
தேன்மலர் முகம் மலர்ந்து “தேங்க்யூ டி… எனக்கு இது போதும்…” என்றுவிட்டு மேலும் சில விடயங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு தேவா மற்றும் அருளிடம் கட்டை விரல் உயர்த்திக் காண்பிக்க, தேவாவும் அருளும் புன்னகைத்தனர்.
தேன்மலர், தேவா, அருள் மூவரும் ஸாம் மற்றும் கின்ஸியிடம் சில விடயங்கள் கூறி தாங்கள் ஊருக்குச் சென்றவுடன் அதைத் தொடங்கச் சொன்னனர். பின் மூவரும் இரண்டு நாட்கள் அமெரிக்காவில் இருந்துவிட்டு, அங்கிருந்துக் கிளம்பும் முன் சிதம்பரத்தை ஒருமுறை பார்த்துப் பேசிவிட்டு அவரிடம் விடைபெற்று வந்தனர். இன்னும் ஒரு வாரம் இருந்துவிட்டு போகச் சொன்ன வேலாயியை சமாளிக்கத் தான் மூலரும் படாதப் பாடுப்பட்டனர்.
தேன்மலர் “அப்பாயி… நானும் வேலையா சென்னைல இருக்கேன்… நீ இப்ப தான் உடம்பு சரியாகி மறு ஜென்மம் எடுத்து வந்துருக்க… அப்பா ஊர்ல இல்லாத நேரத்துல உன்னை நா இப்ப ஊருக்கும் கூட்டிட்டு போக முடியாது… நீ கொஞ்சநாள் அப்பாவோட இரு… எனக்கும் அங்க ரொம்ப முக்கியமான வேல… அத சீக்ரம் முடிஞ்சா தானே நா உன்கூடவேயிருக்க முடியும்… இப்டி ஒரு வாரம் ரெண்டு வாரம்னு லீவ் எடுத்தா…. இன்னும் ரெண்டு வாரம் நா வேல பாக்கனும்… அப்றம் உன்னை ஊருக்கு கூப்ட்டு போக லேட்டாகும் பரவால்லயா…” என்று மிரட்ட,
அருளும் “ஆமா ப்பாயி… கவியக்கூட பாக்க போக முடியாம நாங்க வேலயா அலஞ்சுட்ருக்கோம்… கவி நிச்சயத்துக்குகூட எங்களால போக முடியுமான்னு தெரில…” என்று தேன்மலர் பேசியதற்கு இணங்கிப் பேசவும் தான் வேலாயி அமைதியாக அவர்களை வழியனுப்பி வைத்தார்.
மூவரும் ராஜேஷிடமும் துர்காவிடமும் வேலாயி மற்றும் சிதம்பரத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ராஜேஷ் கொடுத்த சிதம்பரத்தின் மெடிக்கல் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு அவர்களிடம் விடைபெற்று கிளம்ப, ஸாமும் கின்ஸியும் அவர்களுக்கு வாஷிங்டன் விமான நிலையம் வரை வந்து விடையளித்தனர்.
விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே தேவா தானும் செந்திலும் திட்டமிட்டத் திட்டத்தைக் கூற, தேன்மலரும் அருளும் முதலில் அதைக் கேட்டு அதிர்ந்தாலும் பின் ஆழ்ந்து யோசித்தனர்.
தேன்மலர் ஒரு தெளிவான முடிவிற்கு வந்தப் பின்னர் “ரிஸ்க்கு தான்… பட் ட்ரை பண்லாம்…” என்று கூறி புன்னகைக்க, அருளும் அர்த்தமாகப் புன்னகைக்க, தேவாவின் இதழ்களில் மர்மப் புன்னகைத் தவழ்ந்தது.
அத்தியாயம்- 24
தேவா, தேன்மலர், அருள் மூவரும் லண்டன் வந்திறங்க, தேவா அருள் கையில் ஒரு பயணச்சீட்டைக் கொடுத்து “மாமா…. நாங்க இன்னும் ரெண்டுமணி நேரத்துல சென்னை கெளம்புற ப்ளைட்ல கெளம்புறோம்…. நாங்க கெளம்புன ஒருமணி மணிநேரம் கழிச்சு தான் உனக்கு ப்ளைட்… இந்தா டிக்கெட்…” என்றான்.
அருள் திகைத்து, முறைத்து “டேய் என்ன விளையாட்றியா…. எல்லாரும் சேந்தே போலாம்…. உங்கள மட்டும் என்னால தனியா அனுப்ப முடியாது…” என்று முறுக்கிக் கொண்டு நிற்க, தேன்மலர் விழிகளால் தேவாவிடம் ஏதோ வினவ, தேவா விழிகளால் ஏதோ கூறவும், தேன்மலர் “சரி அவன சமாதானப்படுத்துங்க…” என்று விழியால் மொழிந்தாள்.
தேவா பெருமூச்சோடு “மாமா… ஏன் சொல்றேன்னு கொஞ்சம் புரிஞ்சுக்க மாமா… நீ எங்ககூட இருக்கன்னு தெரிய வேணாம்… அதுவுமில்லாம செந்தில் கூடவும் ஒருத்தர் இருக்கணும் மாமா….” என்றான்.
சிறிது நேர சிந்தனைக்குப் பின் அரைமனதாக “சரி மாப்ள…. ஆனா பத்ரம் மாப்ள….” என்று அருள் தேன்மலரையும் ஒரு பார்வைப் பார்த்துக் கூற, தேவா மென்னகையோடு அவனது கைப்பற்றி அழுத்தம் கொடுக்க, அருள் மென்னகைப் புரிந்தான்.
தேவா சில பொருட்கள் வாங்க வேண்டுமென்று விமான நிலையத்திலிருந்தக் கடைகளைத் தேடிச் செல்ல, அருள் தேன்மலருக்கு சில அறிவுரைகள் கூறி அவளை அணைத்து விடுவித்தான்.
அச்சமயம் தேவாவும் கடையிலிருந்து வந்து சேர, தேவாவும் தேன்மலரும் அருளிடம் விடைபெற்று தங்கள் விமானத்திற்கான செக்கிங் முடித்து, விமானத்தில் சென்று அமர்ந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தேன்மலர் தேவாவின் கையோடுக் கைக்கோர்த்துக் கொண்டு தன்னவனின் முகந்தனில் விழிப் பதித்திருந்தாள். கண்கள் மூடி சாய்ந்தமர்ந்திருந்த தேவா கண்விழித்து திரும்பித் தன்னவளை நோக்கி “என்ன மா… பயமாயிருக்கா…” என்று வினவினான்.
தேன்மலர் புன்னகைத்து கண்சிமிட்டி இல்லை என்று தலையாட்டி “எனக்கு எதுக்கு பயம்… அதுவும் நீங்க கூடயிருக்கும்போது… நானே அவனுங்கள பாக்கணுனு நினச்சுட்ருந்தேன்… நீங்க அதுக்கு வழி பண்ணிக் குடுத்துட்டீங்க… தேங்க்ஸ் தேவா…” என்றாள்.
தேவா மந்தகாசப் புன்னகையோடு “ம்ம்… எதிரிய பாக்க இவ்ளோ சந்தோஷப்பட்ற ஆள் நீயாதான் இருப்ப… நீ தைரியமானவன்னு தெரியும் ஆனா இவ்ளோ தைரியமானவன்னு நினக்கல…” என்று கூற, தேன்மலர் “தேவா…” என்று அவனைச் செல்லமாக முறைத்து தோளில் அடித்தாள்.
தேவா சிரித்து அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, மூக்கைப் பிடித்திழுத்து “உனக்கு வர வர கை நீளமாயிடுச்சுடி…. இப்பலா ஆ ஊன்னா அடிக்ற… ஊருக்கு போய் அதுக்கு ஒரு ட்ரீட்மென்ட் குடுத்தா தான் சரியா வருவ….” என்றான்.
தேன்மலர் “ஆஹான்… என்ன ட்ரீட்மென்ட்…” என்று ஒற்றைப் புருவம் உயர்த்த,
தேவா வசீகரப் புன்னகையோடு “ம்ம்… அத சொல்ல மாட்டேன்… ட்ரீட்மென்ட் குடுக்கும் போது உனக்கே தெரியும்….” என்றான்.
தேன்மலர் அவனை செல்லமாக முறைத்து உதடு சுழித்து முகம் திருப்பிக் கொள்ள, தேவா “ஓஓஓ மேடம் கோச்சுக்கிட்டீங்களா… ஓகே ஓகே… எனக்கு தூக்கம் வருது…” என்று அவளது தோளில் தலைசாய்த்துக் கண்கள் மூடிக் கொண்டான்.
தேன்மலர் தன் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் “உன் மேல கோவம்கூட படமுடில… எப்டியாவது பேசி சிரிச்சே ஆள கவுத்தர்ற…. கள்ளன் டா நீ…” என்று அவனது முகத்தைப் பார்த்து இதழ்களில் புன்னகை உறைய முணுமுணுக்க,
தேவா விழிகள் திறவாது புன்னகையோடு “ம்ம்… என்னை கவுத்தக் கள்ளிக்கு ஏத்த கள்ளன் தான்டி நா… சைட் அடிச்சது போதும்… கொஞ்ச நேரம் தூங்கு… அப்றம் அங்க போய் இறங்கனவொடனே பங்காளிங்கல்லாம் பஞ்சாயத்துக்குக் கூட்டிட்டுப் போக ரெடியா இருப்பானுங்க… பஞ்சாயத்து எப்ப முடியுமோ என்னவோ… அதனால இப்பவே நல்லா தூங்கிக்கோ…” என்றான். தேன்மலர் நாணத்தில் இதழ்விரித்து தன் தோள் சாய்ந்திருந்த அவனது தலைமீது தன் தலைசாய்த்து விழி மூடிக் கொண்டாள்.
சென்னையில், தேன்மலர் சென்னை திரும்பும் விடயம் அறிந்து லிங்கமும் அவனின் ஆட்களும் விமான நிலையத்தில் தயாராய் அவளுக்காகக் காத்திருந்தனர். ஆர்யன் தன் புது மனைவி சாருமதியுடன் நேரம் காலம் ஏதுமின்றி கூடிக் களித்திருந்தான். ரகு அலுவலக வேலையிலும், தேன்மலர் வருவதை அறிந்து அவளை இம்முறைத் தப்பிக்க விடக்கூடாதென்று முனைப்புடன் அதற்கான ஏற்பாடுகள் செய்வதிலும் தன்னைத் தொலைத்திருந்தான். ஆர்யனும் தன் புது மனைவியிடம் முத்தங்களுடன் பிரியாவிடைப் பெற்று அலுவலகம் வந்து சேர, ரகு விடயம் கூறவும் அதுவரை அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் மறைந்து கோபமும் இறுக்கமும் குடியேறியது. இங்கு அவளைப் பிடிப்பதில் மும்முரமாகப் பல பேர் பல வேலைகள் செய்துப் பொறி வைத்துக் காத்திருக்க, தேன்மலரோ எக்கவலையுமின்றி தன்னவனின் அருகாமையில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தாள்.
தேவாவும் தேன்மலரும் சென்னை வந்திறங்கி, தங்கள் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு விமான நிலையம் விட்டு வெளி வர, அவர்கள் முன் லிங்கம் வந்து நின்றான். இருவரையும் வழி மறித்த லிங்கத்தின் கண்களில் தேன்மலர் மீதானக் கோபத்தின் அனல் அருகில் நிற்பவரையும் எரித்து விடுமளவு தெறித்தது. அதற்கெல்லாம் அசருபவளா தேன்மலர், அவளும் லிங்கத்தை நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையோடு எதிர்கொண்டாள். தேவா என்ன நினைக்கின்றான் என்று அவனது உணர்ச்சிகள் துடைத்த முகமதில் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
அச்சமயம் லிங்கத்தின் ஆளொருவன் “அண்ணாத்த… அன்னிக்கு பீச்ல இவகூட இருந்தவன் இவன் தான் அண்ணாத்த… அன்னிக்கு எங்க கண்ல மண்ணை தூவி தப்புச்சீங்கள்ள… இப்ப பாரு எப்டி தொக்கா மாட்டிற்கீங்கன்னு…” என்றான்.
லிங்கம் திரும்பி ஒரு பார்வைப் பார்க்க, அவன் வாயை மூடிக் கொண்டான். தேன்மலர், தேவா இருவரும் எவ்வித மாறுதலுமின்றி அவர்களைப் பார்த்திருந்தனர்.
லிங்கம் “எவனாவது வாய தொறந்தீங்க…” என்று தன் ஆட்களைத் பார்த்து முறைத்து விட்டு தேன்மலரிடம் திரும்பி “என்னையே டபாய்ச்சுட்டு சுத்தல்ல விட்டீல்ல… இப்ப எப்டி மாட்ன பாத்தியா…. உன்னை அப்டியே கொன்னு போட்ற அளவு காண்டாக்கீது… ஆனா இப்ப உன்னை எதுவும் பண்ண முடியாம இருக்கேன்… இதுவர நா மார்க் பண்ண எதையுமே மிஸ்ஸாவ வுட்டதில்ல…. ஆனா நீ…” என்று பல்லைக் கடித்தவன் பின் முறுவலித்து “பரவால்ல… என்னால ஒன்னும் பண்ண முடிலேன்னா என்ன… இப்ப உன்னை கூட்டி போற இடத்துல வகையா செய்வாங்க…” என்று கூறி குரூரமாகச் சிரித்தான்..
பின் தேவாவை கண்டு “ஆமா சார் யாரு… ஹீரோவோ…” என்று நக்கலாகக் கேட்க, தேவாவும் தேன்மலரும் மெல்லியப் புன்னகை ஒன்றை சிதறவிட்டனர்.
தேன்மலர் “லேட் ஆகல… ஆமா கார்லதானே வந்தீங்க… போலீரோவா இல்ல அன்னிக்கு வந்த மாறி டவேராவா….” என்று கண்களை சுழற்றி தேடியவள் “ம்ப்ச்… அதே டவேராவா… சரி பரவால்ல அட்ஜஸ்ட் பண்ணிக்றேன்… அப்றம் அன்னிக்கு மாறி டகடக சவுன்ட் வராம வண்டி ஓட்டுங்க… ப்பா என்னா சவுன்டு காதே போச்சு…” என்று காதைக் குடைந்தாள்.
லிங்கத்தின் ஆட்கள் “என்னடா இவ… கடத்த வந்துருக்கோம்… கொஞ்சம் கூட பயமேயில்லாம ஏதோ ஊர் சுத்தி பாக்க போற மாறி கூலா போலீரோவா டவேராவான்னு கேக்றா…” என்று தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.
லிங்கம் “ஏய்… என்ன… கொஞ்சம் கூட பயமேயில்லாம அசால்ட்டா என்ன வண்டின்னு நீ பாட்டுக்கு பேசுற…” என்று கத்த,
தேன்மலர் அயர்ச்சியாக அவனைப் பார்த்தவள் தேவாவின் கைப்பிடித்து அழைத்து “நீங்க வாங்க…. இவனுங்க டயலாக் பேசிட்டு பொறுமையா வரட்டும்…” என்று விட்டு காரில் அமர்ந்துக் கொண்டாள்.
லிங்கமோ தன்னை அவள் உதாசீனம் செய்ததுக் கண்டு சினத்தில் சிலர்த்தெழுந்தவன் தன் ஆட்களைக் கண்டு “ஏன்டா நிக்கிறீங்க தடிமாடுங்களா… அதான் மேடம் கார்ல ஏறிட்டாங்களே… போங்க போய் கார்ல ஏறுங்க….” என்று கத்த, அவனது ஆட்கள் அமைதியாக அவர்கள் வந்த காரிலேறி அமர்ந்தனர்.
லிங்கம் முடிந்த மட்டும் காரில் அமர்ந்திருந்த தேவாவையும் தேன்மலரையும் முறைத்து விட்டு அவர்கள் அமர்ந்திருந்த காரின் முன் சீட்டில் சென்று அமர, இருவரின் பக்கமும் ஆர்யனின் ஊரிலிருந்து வந்த ஆட்கள் இருவர் அமர்ந்துக் கொண்டனர். கார் விமான நிலையம் விட்டு புறப்பட, தேன்மலர் தங்களின் இருப்பக்கமும் ஆஜானு பாகுவான உடல் தோற்றத்தில் அமர்ந்திருந்த இருவரைரும் வாயைப் பிளந்துப் பார்த்து “அண்ணா… என்ன ண்ணா சாப்ட்றீங்க இவ்ளோ பெருசா வளந்துருக்கீங்க….” என்று கேட்டாள்.
அவர்கள் இருவரும் முழியை உருட்டி, கருவிழி வெளியேத் தெறித்து விழுந்து விடுமளவு முறைக்க, தேன்மலர் உடலைக் குறுக்கி, கையைக் குவித்து “அய்யோ பயந்துட்டேன்…” என்று கூற, அவர்கள் அவளை மேலும் முறைக்க, அவளோ ஓட்டுநரிடம் “அண்ணா… ஏ ஆர் ரஹ்மான் பாட்டா போடுங்கன்னா…” என்றாள்.
அதைக் கேட்ட லிங்கம் திரும்பி அவளை முறைக்க, அவளோ “பாத்து ண்ணா… கண்ணு வெளில வந்து விழுந்துற போது… நீங்க எல்லாரும் எப்டி மொறைக்றதுன்னு ட்ரெய்னிங்க போறீங்களா என்ன…. என்னை மொறச்சு மொறச்சு ப்ராக்கிடீஸ் பண்ணிக்றீங்க… பேசாம பாட்ட போடுங்க ண்ணா… போரடிக்குதுல்ல….” என்றாள்.
லிங்கம் அவளை என்ன செய்வதென்று தெரியாமல் முடிந்தளவு முறைத்து விட்டு திரும்பிக் கொள்ள, தேன்மலர் “சரி நீங்க பாட்டு போட மாட்டீங்க போல… நானே பாட்றேன்….” என்றுவிட்டு “நீதானே… நீதானே… என் நெஞ்சை தட்டும் சத்தம்… அழகாய் உடைந்தேன்… நீயே அர்த்தம்…” என்று கர்ணக் கொடூரக் குரலில் பாட, காரிலிருந்த ஓட்டுநர் முதற்கொண்டு அனைவரும் தங்கள் காதுகளை மூடிக் கொண்டனர்.
தேவாவோ தன்னவளை நமட்டுச் சிரிப்போடுப் பார்த்திருக்க, லிங்கம் ஓட்டுநரின் தலையில் தட்டி “பாட்டை போட்டு தான் தொலையேன் டா.. இம்சை… காது ஜவ்வு கிழிஞ்சுரும்போல….” என்று கத்த, அவன் வேகமாக மியூசிக் ப்ளேயரை தட்ட, அதில் “உனக்காக வாழ நினைக்கிறேன்….” என்று பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.
தேன்மலர் லிங்கத்தை பின்னிருந்து சுரண்ட, அவன் எரிச்சலாகத் திரும்ப, அவள் “இத முன்னாடியே பண்ணீற்கலால….” என்று கூற, லிங்கம் ஏதும் சொல்ல முடியாமல் கோபமாகத் திரும்பி தன் தலையில் அடித்துக் கொண்டான்.
தேன்மலர் தேவா புறம் திரும்பி “எப்புடி…” என்பது போல் சட்டைக் காலரைத் தூக்கி விட்டு ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, தேவா புன்னகையோடு “ம்ம்ம்…” என்று தலையசைத்தான். அதன்பின் தேன்மலர் அமைதியாக வர, கார் தேன்மலரை முதலில் கடத்திச் சென்ற போரூர் குடோனுக்குள் நுழைந்தது.
கார் நின்றதும் தேவாவும் தேன்மலரும் தங்கள் உடைமைகளோடுக் கீழிறங்க, லிங்கம் தன் ஆட்களை வெளியே நிற்கச் சொல்லி விட்டு ஆர்யனின் ஊர் ஆட்களோடு “ம்ம் வாங்க…” என்று இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
அன்று விடியற்காலை நேரம் என்பதாலும் அவசரமாக ஓடி வந்ததாலும் சரியாகக் கவனிக்காத அந்தக் குடோனை இன்று தேன்மலர் தன் கூர்விழிகளால் அளந்தபடி வந்தாள். தேவாவும் தன் கூர்விழிக் கொண்டு அங்கிருந்த பொருள் ஒவ்வொன்றையும் அளந்து எடைப்போட்டப் படி வர, எதிரே தென்ப்பட்ட ஒரு ஆளிடம் கண்ணால் பேசியவன், அவன் கண்ணால் ஏதோ சைகை செய்யவும் தேவா சிறு தலையசைப்போடு அவனைக் கடந்தான்.
இருவரையும் அலுவலக அறைக்குள் அழைத்துப் போகும் முன் லிங்கம் அவர்களது உடைமைகளை வெளியே வைத்துவிட்டு வரச் சொல்லவும் இருவரும் தங்கள் பெட்டிகளையும் பைகளையும் வெளியே வைத்துவிட்டு வந்தனர். இருவரையும் லிங்கம் மெட்டல் டிடெக்டர் மூலம் ஸ்கேன் செய்து அவர்களதுக் கைப்பேசியையும் வாங்கி வைத்துக் கொள்ள, தேவாவும் தேன்மலரும் லிங்கத்தை ஒருப் பார்வைப் பார்த்துவிட்டு மிடுக்காகக் கூலர்ஸை அணிந்துக் கொண்டு அலுவலக அறைக்குள் இருந்த அந்த ரகசிய அறைக்குள் நுழைந்தனர்.
ஆர்யனும் ரகுவும் கூலர்ஸ் அணிந்து மிடுக்கானத் தோரணையுடன் இவர்களைப் பார்த்திருந்தனர். தேவாவும் தேன்மலரும் அதே மிடுக்கோடுச் சென்று அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
சிறிது நேரம் அங்கு எண்விழி யுத்தம் மௌனமாய் நடக்க, தன் கூலர்ஸை கழட்டிய ஆர்யன் தேன்மலரை மேலிருந்து கீழ் வரை கண்களால் அளந்து “பரவால்ல… ஆள் சும்மா டக்கரா தான் இருக்க… சேலை, சுடிதார விட பேண்ட் ஷர்ட்ல சும்மா கும்முன்னு இருக்க…” என்று ஒரு தினுசாகக் கூற, தேவா அவனைப் பார்வையிலேயே எரித்து விடுவது போல் முறைத்துக் கையை முறுக்க, தேன்மலர் தன்னவன் கைமீது கைப் பதித்து அழுத்தம் கொடுக்க, தேவா சற்று அமைதியானான்.
தேவா கண்ணாடியைக் கழட்டாததால் அவன் முறைத்ததை ஆர்யன் அறிந்திருக்கவில்லை. தன் கூலர்ஸை கழட்டிய தேன்மலர் அவனது விழிகளை நேராய்ப் பார்த்து உதட்டோரம் மெல்லியப் புன்னகையைக் கசிய விட்டு “ம்ம்… பல பெண்களுக்கு சர்வீஸ் செஞ்ச அனுபவம்… ம்ம் பரவால்ல… அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ்ல நீங்க இத சொல்லலனா தான் ஆச்சர்யம்…” என்றாள்.
ஆர்யன் வேகமாகத் தன் கூலர்ஸை கழட்டி “ஏய்… வாட் டூ யூ மீன்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,
தேன்மலர் மென் முறுவலோடு அழுத்தமாக “ஐ மீன் த ஸேம் வாட் யூ தாட் இன் யுவர் மைண்ட்…” என்றாள்.
ஆர்யன் “யூ… ப்லடி **** ***…” என்று திட்ட, தேன்மலர் குரலில் கடுமையேற்றி “யூ ஆர் தி*** ***… என்ன இல்லாததயா சொன்னேன்… நீ என்ன பெரிய உத்தமனா…. பொண்ணுங்க உன்னை தேடி வந்தா நீ என்ன கண்ணனா…. அவங்க ஏன் உன்னை தேடி வர்ராங்கன்றது உனக்கே தெரியும்… அப்ப நா சரியாதானே சொன்னேன்… நீ சர்வீஸ் தானே பண்ற….” என்றாள்.
ஆர்யன் அவளதுப் பேச்சில் அடங்கா ஆத்திரம் கொண்டு, அவளை ஏதோ கூற வர, ரகு “ஆர்யா… என்ன பண்ற…. என்ன விஷயம் பேசணுமோ… அத மட்டும் பேசு… தேவயில்லாததுலா பேசாத….” என்று தாங்கள் என்ன காரியமாக அவளை அழைத்து வரச் சொன்னோம் என்று நினைவூட்ட, ஆர்யன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தான்.
தேன்மலர் வந்ததிலிருந்தே அவளது நடை, உடை, பாவனை, பேச்சு, மிடுக்கு, நிமிர்வு என்று அனைத்தையும் உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்த ரகு, அவள் ஆர்யனுக்கு கொடுத்தப் பதிலடியையும் ரசிக்கத் தவறவில்லை. அவனுக்குமே தேன்மலர் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையும் உதா நிற ஜீன்ஸும் அவளை மிடுக்குடன் காண்பிப்பதாய்த் தோன்றியது. எப்பெண்ணையும் இப்படி கவனித்திராத ரகு தேன்மலரை இவ்வளவு நுணுக்கமாக அளவெடுத்துக் கொண்டிருந்தான்.
ரகு தன் கூலர்ஸை கழட்டாததால் ஆர்யன் முதற்கொண்டு மற்ற இருவருக்குமே அவனதுப் பார்வைத் தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால் ஆர்யனின் கோபத்திற்கு ஆளவதோடல்லாமல் ஆர்யனுக்கு கிடைத்தது போல் பதிலடி தனக்கும் தேன்மலர் தந்திருப்பாள் என்றெண்ணிய ரகுவின் இதழ்களில் புன்னகை விரிந்தது. நொடியில் அதை மறைத்துக் கொண்ட ரகு, தேவா மீது தன் பார்வையைப் பதித்தான்.
ஆர்யன் தன் கோபத்தை அடக்கியவன் தேவா மீது தன் கேள்வியானப் பார்வையைப் பதித்து “ஆமா இவன் யாரு…” என்று கேட்க,
தேன்மலர் மென் முறுவலோடும் நிமிர்வோடும் கர்வத்தோடும் தன்னவனை நோக்கியவள் “என்னை கட்டிக்க போறவரு…” என்றவள், ஆர்யன் புறம் திரும்பி “ஸோ இவர வச்சுட்டே பேசலாம்… இவருக்கும் எல்லாமே தெரியும்…” என்று எல்லாமே என்றதில் அழுத்தம் கொடுத்துக் கூறினாள்.
ஒரு நொடி ஆர்யன் மற்றும் ரகு முகத்தில் அதிர்ச்சி ஓடி மறைந்துக் கடுமையேற, இப்போழுது ரகு தன் கூலர்ஸை கழட்டி கூர்ப் பார்வையை தேவாவின் மீதும் தேன்மலரின் மீதும் பதித்தான்.
ரகு “எல்லாமே ன்னா….” என்று கேட்க,
தேவா “எல்லாமே ன்னா… எல்லாம் தான்….” என்று கூற, ஆர்யன் முகத்திலும் ரகு முகத்திலும் இறுக்கம் கூடியது.
ரகு “ம்ம்… ஓகே… எதுக்கு அமெரிக்கா போனீங்க…” என்று கேட்க,
தேன்மலர் தெனாவட்டாக “அத ஏன் உங்ககிட்ட சொல்லனும்… அங்க போறதும் போகததும் எங்க பர்ஸ்னல்…” என்றாள்.
ஆர்யன் அவளை முறைத்து “ஏய்… என்னடி திமிரா…” என்று கத்த,
தேன்மலர் “ஏய் சும்மா கத்தாத…. உங்களுக்கு என்னடா கோவம் வருது… நியாயப்படி நீங்க அப்பாவுக்கு பண்ணதுக்கு நாந்தான் கோவப்படணும்…” என்று கத்தினாள்.
அவளது கூற்றில் ரகு உணர்ச்சிகளற்று அமைதியாகிட, ஆர்யன் முறுவலித்து “ம்ஹ்ம்… உங்கப்பன் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தா அந்த வேலய மட்டும் பாக்கணும்… அதவிட்டுட்டு மத்ததெல்லாம் நோண்டுனா…. இப்டி தான்… இப்ப தெரிஞ்சுருக்கும் உன் அப்பனுக்கு ஆர்யன் கிட்ட மோதுனா என்ன நடக்கும்னு…” என்றான்.
தேன்மலர் முகம் இறுகி, பின் மென் முறுவலோடு “ம்ம்… நீ உன்கிட்ட மோதுனா என்ன நடக்கும்னு காட்டிட்ட… சிதம்பரத்து மேல கை வச்சா என்ன நடக்கும்னு இனி நீ தெரிஞ்சுப்ப….” என்றாள்.
ஆர்யன் நக்கலாக “ஹா என்ன நடக்கும்… என்ன பண்ண முடியும் உன்னால…” என்று கேட்க,
தேன்மலர் இதழ்கடையோரம் மென்னகையைக் கசிய விட்டவள் “ம்ம்… என்னால என்ன முடியும்னு சீக்ரமே பாப்ப… அதுக்குள்ள என்ன அவசரம் தம்பி….” என்றாள்.
ஆர்யன் “ஓஹோ… அவ்ளோ கான்பிடன்ஸ்… ம்ம்… உன் அப்பாவுக்கு என்னாச்சு, ஏதாச்சுன்னு குழப்பி விட்டு உன்னால ஒன்னும் பண்ண முடியாம உன்னை எங்க கண்ட்ரோல்ல வச்சுருந்தோம் நியாபகமிருக்கா…” என்று கேட்டான்.
தேன்மலர் இறுகியக் குரலில் “ம்ம் அதெப்டி அவ்ளோ சீக்ரம் மறக்க முடியும்…. ஆனா உன் கண்ட்ரோல்ல இருந்தப்ப… நீ வாட்ச் பண்ணிட்ருந்தப்ப தான் உனக்கே தெரியாம என் அப்பாவ அமெரிக்கா அனுப்பி… என்னை தேடி உன்னை சுத்த வச்சேன்… அதுக்குள்ள மறந்துட்டியா என்ன….” என்று கேட்டாள்.
ஆர்யன் கோபமாக “அத மறக்கலடி…. ஆனா உன்னை தேடி கண்டுபுடிச்சுட்டேன் பாத்தியா…” என்று சிரிக்க, தேவாவும் தேன்மலரும் மென்முறுவலோடு அவனை ஏறிட, அமைதியாக அங்கு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ரகு முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.
ஆர்யன் “என்ன சிரிப்பு ரெண்டு பேருக்கும்… திடீர்னு மாட்டிக்கிட்டதால மூள குழப்பிடுச்சா…” என்று நக்கலாகக் கேட்க,
ரகு “ஆர்யா… உனக்கு தான் டா கோவத்துல என்ன பேசறதுன்னு தெரியல…. அவங்க முகத்த பாரு… கொஞ்சம் கூட அதிர்ச்சியோ பயமோ பதட்டமோயில்ல… வந்தப்பக் கூட கூலா வந்து உக்காந்தாங்க…. அவங்கள நாம கண்டுபுடிக்கல…. அவங்க எங்க இருக்காங்கன்னு அவங்க தான் நமக்கு தெரியப் படுத்தீற்காங்க….” என்று இருவரையும் இன்னதென சொல்ல முடியாதப் பார்வையால் பார்த்துக் கூறினான்.
தேவாவும் தேன்மலரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தனர். தேவா நாற்காலியில் நன்கு சாய்ந்தமர்ந்துக் கைகளைக் கட்டிக் கொண்டு “உன் நண்பனுக்கு இருக்ற அறிவு கூட உனக்கில்லயே ஆர்யா… நீலாம் எப்டி இத்தன வருஷமா பிஸ்னஸ் பண்ற…” என்றான்.
ஆர்யனின் கோபம் எல்லை மீறி தேவாவை கை ஓங்க, அவனது விலயக் கரம் தேன்மலரின் தளிர் கரத்தால் தடுத்து நிறுத்தப்பட, ஆர்யன் அவளை முறைக்க, தேன்மலர் அவனைத் தீப் பார்வைப் பார்த்து அவனது கரத்தை இறுக்கமாகப் பிடித்துத் தள்ளி விட, ஆர்யனின் கை மேசை மீது மோதியது.
ஆர்யன் “ஏய்… என் மேலயே கை வக்கிறியா…” என்று கத்த,
தேன்மலர் விழிகள் கோவத்தில் கோவைப்பழமாய் சிவந்து “ஏய்… சும்மா கத்தாத… நீ என்ன பெரிய இவனா…. எவ்ளோ தைரியமிருந்தா என் தேவா மேல கை வைக்க வருவ….” என்றவள் விரல் சொடுக்கி “இன்னொரு தடவ… உனக்கு இந்த எண்ணம் வந்துச்சு…” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
பின் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவள் “இப்ப எதுக்கு எங்கள கூட்டிட்டு வந்த…. உனக்கு எனக்கு என்ன விஷயம் தெரியும்னு உனக்கு தெரியனும் அவ்ளோ தானே….” என்றவாறு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவள் அவனையும் அமருமாறு கைக் காண்பித்தாள்.
கோபத்தின் உச்சத்தில் நின்றிருந்த ஆர்யனை ரகுவின் தொடுதல் அமைதியாக்க, அவளை முறைத்தவாறே தன்னிருக்கையில் அமர்ந்தான். தேன்மலர் மெல்லிய முறுவலுடன் ஆர்யனையும் ரகுவையும் ஊடுருவ, ஆர்யன் கோபமாகவும் ரகு உணர்ச்சிகளற்ற முகமாய் அவளைப் பார்த்திருந்தனர்.
தேன்மலர் “நீங்க என் அப்பாவுக்கு போதை மருந்துக் குடுத்தது… அதனால தான் அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததுன்ற ரிப்போர்ட் என்கிட்ட இருக்கு… அப்றம் என் அப்பாவுக்கு நீங்க ரிசர்ச் பண்ற புது மருந்த டெஸ்ட் பண்ணது… எல்லாமே எனக்கு தெரியும்… அதுக்கான எவிடென்ஸும் என்கிட்ட இருக்கு….” என்று ஜே அவர்களுக்கு உதவியதும் தெரியும் என்பதையும் அவர்களின் பார்மா கம்பெனியில் நடக்கும் மற்ற வேலைகளும் தெரியும் என்பதனையும் மறைத்துக் கூறினாள். அதைக் கேட்ட ஆர்யன் மற்றும் ரகு இருவரின் இதழ்களும் புன்னகையைத் தத்தெடுக்க, தேவாவும் தேன்மலரும் கேள்வியாய் அவர்களை நோக்கினர்.
ஆர்யன் இப்போது தனது கூலர்ஸை அணிந்து “இவ்ளோ நாளா நீ ரொம்ப அறிவாளின்னு நினச்சேன்…. ஆனா நீ இவ்ளோ முட்டாளா இருக்கியே….” என்றான்.
தேவா “என்ன சொல்ற…. புரியுற மாறி சொல்லு…” என்றான்.
ரகு “சாருக்கு இப்டி சொன்னா எப்டி புரியும் ஆர்யா… நா சொல்றேன்…” என்று தேவாவை பொறாமையும் கோபமும் கலந்து முறைத்துப் பார்த்தான்.
தேவாவின் கூர்விழிகள் அதனைக் குறித்துக் கொள்ள, அமைதியாய் அவனை ஏறிட, “உங்ககிட்ட இருக்ற எவிடென்ஸ் எல்லாத்தையும் எங்களால ஒன்னுமில்லாம பண்ண முடியும்…” என்றான்.
தேன்மலர் “என்ன சொல்ற…” என்று கேட்க, ரகுவின் பார்வையிலிருந்த பொறாமை மறைந்து, கோபமும் ஏக்கமும் நிறைய அவளை நோக்கியவன் சிறிது மென்மையும் கூட்டி “இந்த வீடியோ பாருங்க புரியும்…” என்று ஆர்யனுக்கு கண்காட்ட, ஆர்யன் அவனது கைப்பேசியை உயிர்ப்பித்து ஒரு வீடியோவை ஓட விட்டான்.
தேவாவின் கண்கள் ரகுவின் முக மாறுதல்களை உன்னிப்பாகக் கவனித்துக் குறித்துக் கொள்ள, அவனும் தேன்மலரோடு சேர்ந்து அந்த வீடியோவை கண்டான். அதில் சிதம்பரம் தானாகவே போதை மருந்து ஊசியை தனக்குச் செலுத்தியதுப் பதிவாகியிருந்தது. அதைக் கண்டு தேவா மற்றும் தேன்மலர் முகத்தில் சில நொடிகளுக்கு அப்பட்டமான அதிர்ச்சித் தென்பட, அதைத் தங்களது வெற்றியாக நினைத்து ஆர்யனும் ரகுவும் புன்னகையோடு அவர்களைப் பார்த்திருந்தனர்.
சில நொடிகளில் தேவாவும் தேன்மலரும் தங்களை நிதானித்துக் கொண்டனர்.
தேவா முகம் உணர்ச்சிகளை துடைத்திருக்க, தேன்மலர் மெல்லிதாக முறுவலித்து “இப்ப இதுக்கு என்ன… இதுல என்ன ஆச்சர்யமிருக்கு…” என்றாள்.
ஆர்யன் “நடிக்க ட்ரை பண்ணாத… கொஞ்ச நேரம் முன்னாடி ஷாக் ஆனததான் நாங்க பாத்தோமே….” என்றான்.
தேன்மலர் “ஆமா ஆனேன் தான்… ஆனா நீ இத பண்ணலனாதான் ஆச்சர்யப்படனும்… நீ என்ன பண்ணி எங்க அப்பாவ அப்டி பண்ண வச்சுருப்பன்னு சொல்லட்டா….” என்று புருவம் உயர்த்த, ஆர்யன் மற்றும் ரகுவின் விழிகள் வீடியோவை பார்த்தும் பயப்படாத தேன்மலரைக் கண்டு ஆச்சர்யத்தால் விரிந்தது.
தேன்மலர் “என்னயும் என் அப்பாயியையும் எதாவது பண்ணிருவோம்னு…. எங்கள வீடியோ எடுத்து எங்க அப்பாட்ட போட்டு காட்டிருப்ப… அதனால என் அப்பாவும் நீ சொன்ன மாறி அவரே இன்ஜெக்ட் பண்ணிருப்பாரு… ஆம் ஐ ரைட்…” என்று மிடுக்காகக் கேட்க, அவள் கேட்டத் தோரணையில் ஆர்யன் மற்றும் ரகுவின் தலை தானாக ஆமென்று அசைந்தது. பின் இருவரும் ஆச்சர்யம் விடுத்தனர்.
ரகு “இந்த வீடியோ வச்சு என்ன பண்ண முடியும்னு தெரியுமா…” என்று கேட்க,
தேன்மலர் “என்ன பண்ணுவீங்க… உங்களுக்கெதிரா நா எவிடென்ஸ் சப்மிட் பண்ணா நீங்க இந்த வீடியோவ காட்டி எங்க அப்பா போதை பழக்கத்துக்கு அடிமை… உங்ககிட்ட பணம் கேட்டாரு தரலன்னதும் அவரும் நானும் சேந்து உங்க மேல இல்லாததும் பொல்லாததும் சொல்றோம்னு எங்க அப்பா பேர கெடுப்பீங்க… கேஸ திசை திருப்புவீங்க… அதானே….” என்றாள்.
ரகு கேள்வியாய் “தெரிஞ்சுமா… இப்டி பேசற….” என்று கேட்க,
தேன்மலர் “நீங்க யாரு என்னன்னு தெரியாதப்பவே உங்க நடவடிக்க எப்டியிருக்கும்னு ஊகிச்சு எங்க அப்பாவ ஸேப்பா யூ எஸ் அனுப்பி வச்சவ நா… இப்ப உங்கள பத்தின நதிமூலம் ரிஷிமூலம் மொத்தத்தையும் தெரிஞ்சுகிட்டப்றம் நீங்க எப்டி செயல்படுவீங்கன்னு கண்டுபுடிக்றது அவ்ளோ கஷ்டமில்லயே…” என்றாள்.
அதைக் கேட்ட ஆர்யனும் ரகுவும் குழப்பமும் கேள்வியுமாய் ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ள, அதுவரை அமைதியாயிருந்த தேவா “இந்த வீடியோவ வச்சு உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க… நாங்க எங்கிட்ட இருக்ற எவிடென்ஸ் வச்சு என்ன பண்ண முடியுமோ பண்றோம்…” என்றவன் “மலர் மா… வந்த வேல முடிஞ்சது… வா நாம கெளம்பலாம்…” என்று எழுந்து தேன்மலரின் கைப்பிடித்து எழுப்பினான்.
ஆர்யனும் ரகுவும் ஒருவரையொருவர் அர்த்தமாய்ப் பார்க்க, ரகு “அதுக்குள்ள அவசரபட்டா எப்டி…” என்று கூற,
ஆர்யன் “அதெப்டி அவ்ளோ ஈசியா எங்களுக்கெதிரா எவிடென்ஸ் வச்சுட்டு… வீடியோ பாத்தும் அமைதியா முடிஞ்சத பாருங்கன்னு போனா… நீங்க வேற ஏதோ ப்ளான்ல இருக்கீங்கன்னு புரிஞ்சுக்க முடியாத அளவு முட்டாளுங்களா நாங்க…” என்றான்.
தேவா நக்கலாக சிரித்து “ஏன்டா சினிமா நெறையா பாப்பியா… வீடியோ பாத்தா பயப்பட்னும்… அவ்ளோ சீக்ரம் வெளில போ முடியாதுன்னு உளறிட்ருக்க… உங்ககிட்ட நாங்களா வந்து சிக்குனோம்னு சொன்னப்பவே புரிஞ்சுருக்க வேணாம்… உள்ள வர தெரிஞ்சவங்க வெளி போகவும் வழி யோசிச்சுருப்பாங்கன்னு… உன் ஃபோனுக்கு நாங்க உன் ரூம்குள்ள நுழையும் போது ஒரு மெஸேஜ் வந்துருக்கும் பாரு ராஜா…” என்றான்.
ஆர்யனும் ரகுவும் அவனைக் கேள்வியாய்ப் பார்க்க, “தேவா இப்ப நீங்க ஒரு குறும்படம் ஓட்டி காமிச்சீங்கள்ள அது மாறி அது நாங்க அனுப்புன குறும்படம்… பாருங்க…” என்று கூற, ஆர்யன் அவனது வாட்ஸப் மெஸேஜில் அரை மணித்தியாலங்கள் முன்பு அறியாத எண்ணிலிருந்து வந்த வீடியோவை ஓடவிட்டு பார்க்க, அதில் அவனது புது மனைவி சாருமதி காரில் வந்துக் கொண்டிருக்க, அந்தக் காருக்கு பின்னே அவனது கம்பெனி வேன் ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது.
ஆர்யனும் ரகுவும் அதைப் பார்த்துவிட்டு தேவாவை பார்க்க, “சிஸ்டர் எங்க வராங்க தெரியுமா… நீ வர சொன்னதா நம்ம ஆள் ஒருத்தன் சொல்லவும் அவங்க சந்தோஷமா கெள்மபி இங்க வராங்க…. முன்னாடி நம்ம வண்டிதான் உன் கம்பெனி வண்டி மாறி ரெடி பண்ணி வருது அதுல நம்ம ஆள் தான் வீடியோ எடுக்றது… நாங்க ஸேஃபா போகலனா…. முன்னாடி போற வண்டி அப்டியே யூ டேர்ன் போட்டு உன் புது பொண்டாட்டி வர்ற கார இடிக்கும்…” என்று கூற,
ஆர்யன் “டேய்…” என்று பல்லைக் கடிக்க, தேவா “பதறாதச் செல்லம்… சிஸ்டர் உயிருக்கு ஒன்னும் ஆகாது… ஆனா அடிபடும்… அப்டி ஆச்சுன்னா உன் மாமனாரு சும்மாயிருப்பாரா… தான் ஒத்த மகளுக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு விசாரிக்க மாட்டாரு… அப்டி விசாரிச்சா உன்னை பாக்க கெளம்பி வந்த உன் பொண்டாட்டி வந்த கார உன் கம்பெனி வேனே இடிச்சுச்சுன்னு சொன்னா யார் மேல கண்ணா சந்தேகம் வரும்… உன் மாமனாருக்கு இருக்ற செல்வாக்குக்கு அவருக்கு சந்தேகம் வந்தா உன் தொழில், உன் சொத்து, நீ அப்றம் உன் நண்பன் எல்லாத்தையும் என்ன பண்ணுவாருன்னு நா சொல்லி தான் நீ தெரிஞ்சுக்கணுனு இல்ல….” என்றான்.
ஆர்யன் வேகமாக தன் மனைவிக்கு அழைக்க முயற்சிக்க, தேன்மலர் “நீ ட்ரை பண்றது வேஸ்ட் ஆர்யன்… நாங்க இந்த ரூம்குள்ள என்டர் ஆகும் போதே ஜாமர ஆன் பண்ணியாச்சு… அது எங்க பேக்ல பத்ரமாயிருக்கு… அதுக்கு உன் ஆளுங்களும் பாதுகாப்பான இருக்காங்க…. ஸோ உனக்கு வேற ஆப்ஷனில்ல… நீ எங்கள போகவிட்டுதான் ஆகனும்…” என்றாள்.
அதைக் கேட்ட ஆர்யன் ரகு இருவருமே ஆத்திரத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு தேவாவும் தேன்மலரும் அங்கிருந்து செல்ல அனுமதிக்க, தேன்மலர் “அப்றம் இன்னொரு விஷயம்… எங்கள ஃபாலோ பண்ண முயற்சிக்க வேணாம்… அப்டி செஞ்சா உன் சாருமதி தான் பாவம் கஷ்டபட வேண்டி வரும்… நீங்க ரெண்டு பேரும் எனக்கு குடுத்த ஒன்னொன்னையும் ரிட்டர்ன் வாங்க ரெடியாகிக்குங்க…” என்றவள் தன் கூலர்ஸை அணிந்துக் கொண்டு தேவாவின் கைக்கோர்த்து “வாங்க தேவா போலாம்…” என்று கூற, தேவா மென்னகையோடு அவளோடு குடோனிலிருந்து வெளியே வந்தான்.
லிங்கம் அவர்களை பின்தொடர முயற்சிக்க, ரகு அவனுக்கு அழைத்து அவர்களைப் பின்தொடர வேண்டாமென்று கண்டிப்புடன் கூறவும் லிங்கம் முடிந்த மட்டும் இருவரையும் முறைக்க, இருவரும் அவனை ஒருப் பொருட்டாகக் கூட மதிக்காது அவனிடமிருந்து தங்கள் உடைமைகளை வாங்கிக் கொண்டு ஆட்டோ பிடித்து மீண்டும் விமான நிலையம் வந்தனர்.
அருளும் சென்னை வந்திருக்க, செந்திலும் அவனும் அங்கு அவர்களுக்காகக் காத்திருந்தனர். தேவாவையும் தேன்மலரையும் கண்ட அருளும் செந்திலும் என்ன நடந்ததென்று விசாரிக்க, போகும் வழியில் சொல்கிறோம் என்று இருவரும் கூறவும் நால்வரும் காரிலேறி தேவாவின் வீட்டை நோக்கிப் பயணித்தனர். போகும் வழியில் தேவாவும் தேன்மலரும் நடந்தைக் கூற, அருளும் செந்திலும் சிந்தனையில் ஆழ, நால்வரும் அமைதியாக வீடு வந்து சேர்ந்தனர்.
ஆர்யனின் குடோனிற்கு வந்த சாருமதியை ஆரத்தழுவிய ஆர்யன் அதன்பின்பே நிம்மதிக் கொண்டான். அவனது அணைப்பில் கன்னம் சிவந்து நின்றிருந்த சாருமதியை வெளியே செல்ல அழைத்ததாகக் கூறிய ஆர்யன் அவளை அங்கிருந்துக் கிளப்பிச் செல்லும் முன் ரகுவிற்கு கண் காட்டிவிட்டுச் செல்ல, ரகு, தேவா யாரென்று அறிய யாருக்கோ அழைத்து விசாரிக்கக் கூறினான்.
அத்தியாயம்- 25
வீடிற்கு வந்த நால்வருமே அயர்ச்சியாய் உணர, செந்தில் தேவா, தேன்மலர், அருள் மூவரையும் சென்று உடை மாற்றிவிட்டு வரச்சொல்லி விட்டு அவர்கள் வருவதற்குள் நால்வருக்குமான உணவை ஆர்டர் செய்து, அடுக்களைக்குச் சென்று நால்வருக்கும் எலுமிச்சைப் பழச்சாறுப் பிழிந்து எடுத்து வந்தான். மூவரும் உடை மாற்றி வர, மூவருக்கும் கொடுத்துவிட்டு தனக்கும் ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு ஸோஃபாவில் அமர்ந்தான்.
அருள் தான் “மாப்ள… இப்ப என்ன பண்றது… நாம ஒன்னு ப்ளான் பண்ணா… இவனுங்க ஒரு ரூட்ல போறானுங்க…. நம்ம ப்ளான்ல எதும் சேஞ்சஸ் பண்ணுவோமா…” என்று கேட்டு அங்கு நிலவியக் கணத்த மௌனத்தைக் கலைத்தான்.
தேன்மலர் “இல்ல அருளு…. இவனுங்களுக்கு பயந்துட்டுலா ப்ளான மாத்த முடியாது… இவனுங்க என்ன ரூட்ட மாத்துரது… அவனுங்கள நம்ம ரூட்ல வர வைப்போம்…. அதுக்கு மட்டும் இப்ப வழி யோசிச்சா போதும்….” என்றாள்.
தேவா “செந்தில்… நா சொல்லிட்டு போனேனே என்னாச்சு…” என்று வினவ,
செந்தில் “ஏற்பாடு பண்ணீற்கேன் தேவா… நீ கேட்டது கொஞ்சம் கஷ்டம்தான்… பொறுமையாயிரு ரெண்டு நாள்ல நம்ம ஆளு நல்ல நியூஸ் சொல்லுவான்…. மத்தபடி ஆர்யன், ரகு விஷயத்துல சக்ஸஸ் தான்… நீங்க அங்க போறத்துக்குள்ள உங்களுக்கு தேவையான விஷயம் நூறு சதவீதம் உங்க கைக்கு வந்துரும்…. ஏன்னா ஆளு அப்டி….” என்றான்.
தேவா மெல்லிய முறுவலுடன் தலையசைத்து செந்திலின் தோள் தட்டி, “ம்ம்…. தேங்க்ஸ் செந்தில்….” என்றான்.
செந்தில் மென்னகையோடு “நமக்குள்ள என்ன மச்சான் தேங்க்ஸ்லா…” என்றான்.
தேவா புன்னகைக்க, தேன்மலர் முகத்தில் பதட்டமும் குழப்பமும் தவிப்புமும் நிறைய “தேவா…. அவனுங்க கிட்ட அப்பாவ பத்தின வீடியோ இருக்கே…. அத என்ன பண்றது…” என்று கேட்டாள்.
அருள் “ஆமா மாப்ள… அந்த வீடியோ மட்டும் வெளில வந்தா அப்பாவுக்கு எவ்ளோ பெரிய கெட்ட பேராகும் தெரியுமா… கிட்டத்தட்ட தேச துரோகி லெவல்ல மீடியா அவர பத்தி பேச ஆரமிச்சுரும்… அப்பாவோட லட்சியம் கனவு அவரோட இத்தன வருஷ உழைப்பு எல்லாம் ஒன்னுமில்லாம போய்டும்… அப்றம் இந்த ஜனங்க எது உண்மை எது பொய்னு ஆராயாம மீடியா என்ன சொல்லுதோ அத நம்பி அவங்களா அதோட எக்ஸ்ட்ரா கதைய சொருகி திரிச்சு அப்பாவ மட்டுமில்ல ஹனிமலர், அப்பாயி யாரையுமே நிம்மதியா வாழ விட மாட்டாங்க….” என்று ஆதங்கமும் கோபமுமாய்க் கூறினான்.
தேவா முகம் இறுகி “மாமா… நா இருக்கும்போது அவ்ளோ தூரம் போக விட்ருவனா… அதுக்கு ஒரு வழியிருக்கு…” என்றான்.
தேன்மலரும் அருளும் தேவா என்ன கூறப் போகிறான் என்று ஆவலாக அவனைப் பார்த்திருக்க, செந்தில் மட்டும் இதழ்களில் புன்னகை உறைய அர்த்தம் பொதிந்தப் பார்வையோடு அவனைப் பார்த்திருந்தான்.
தேவா “அதுக்கு முன்னாடி அவன் வீடியோ காமிச்சானே ஒரு ஃபோன் அதோட நம்பர் மட்டும் என்னன்னு தெரியனும்…. ஏன்னா அது அவனோட பர்சனல் நம்பர் அவனோட ஃபேமிலி க்ளோஸ் ப்ரண்ட்ஸ் தவிர வேற யாருக்கும் அந்த நம்பர் தெரியாது… அவன் மூனு நாலு நம்பர் யூஸ் பண்றான்…. ஸோ அது மட்டும் தெரிஞ்சா போதும்…” என்றான்.
அருள் குழப்பமாக “மாப்ள அந்த வீடியோவுக்கும் ஃபோன் நம்பர் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம்…. புரில…” என்று கூற, தேன்மலர் சிந்தனையும் கேள்வியுமாய் தன்னவனை கூர்விழியால் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.
தேவாவோ தன்னவளுக்கு வசீகரப் புன்னகையைப் பதிலாய்த் தந்தவன் “மாமா… நம்பர் தெரிஞ்சா தானே அவன்கிட்ட இருக்ற வீடியோவ…” என்னும் போதே செந்தில் ஆர்டர் செய்த உணவு வந்துவிட, “சரி மொதல்ல சாப்ட்லாம்… அப்றம் பேசலாம்… வயிறு என்னை கொஞ்சம் கவனிடான்னு கத்த ஆரமிச்சுருச்சு…” என்றுவிட்டு உணவை வாங்கி வந்து மேசையில் கடைப் பரப்ப ஆரம்பித்தான்.
அருள் “மாப்ள…. சஸ்பென்ஸ் வைக்காம ஒழுங்கா சொல்லிரு… இல்லனா சாப்பாடு என் தொண்டைல இறங்காது… மண்டைய பிச்சுக்கலாம் போல இருக்கும்….” என்றான்.
தேவா “அப்ப ரொம்ப நல்லதா போச்சு… மச்சான் வேற பிரியாணி, சுக்கா, கறிக்கொழம்புன்னு பயங்கரமா ஆர்டர் பண்ணீற்காப்ல…. உன் பங்கையும் சேத்து நானே சாப்ட்டுர்றேன்….” என்று கூற,
அருள் “என்னது பிரியாணி யா… இதோ வரேன்…” என்றுவிட்டு முதல் ஆளாகச் சென்று சாப்பிட அமர்ந்தான்.
தேன்மலரோ தலையில் அடித்துக் கொள்ள, தேவா “என்ன செல்லக்குட்டி… உனக்கும் வேணாமா… இல்ல மாமா ஊட்டி விடனுனு வெயிட் பண்றியா… அப்டினா ஊட்டிவிட மாமா ரெடி…” என்று தன்னவளைப் பார்த்து கண்ணடிக்க, தேன்மலர் அவனை முறைத்துக் கொண்டே வந்து சாப்பிட அமர்ந்தாள்.
செந்திலோ சிரித்தால் அடி விழுமோ என்று பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு வந்தமர, தேவா சிறு சிரிப்போடு அனைவருக்கும் பரிமாறி விட்டு சத்தமிடும் தன் வயிற்றையும் கவனிக்க ஆரம்பித்தான். அனைவருமே நல்ல பசியில் இருந்ததால் அமைதியாகத் திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர்.
கைக்கழுவி வந்த தேன்மலர் “இப்பவாவது சார் ஏன் நம்பர் கேட்டீங்க… என்ன பண்ண போறீங்கன்னு சொல்றீங்களா…” என்று கைகளைக் குறுக்கேக் கட்டிக் கொண்டு ஒரு தினுசாகப் பார்த்து புருவம் உயர்த்தினாள்.
தேவா “பேபி மா… எனக்கு தெரியும் நீ கண்டுபுடிச்சுட்டன்னு… நீயே சொல்லேன்…” என்று ஒருவித சிரிப்போடு விழிகளில் குறும்பு ததும்ப தன்னவளை விழியகலாதுப் பார்த்துக் கூற,
தேன்மலர் அவனை ஊன்றிப் பார்த்து “பரவால்ல… உங்க வாயாலயே சொல்லுங்க…. எனக்கு கேக்கணும்…” என்றாள்.
அருள் இருவரையும் மாறி மாறி குழப்பத்தோடுப் பார்க்க, செந்தில் சிரிப்போடு நின்றிருப்பதைப் பார்த்து “டேய் செந்திலு… நீ நிக்கிற சைசும் சரியில்ல… சிரிக்கிற தினுசும் சரியில்ல… உனக்கு ஏதோ தெரிஞ்சுருக்கு… ஆமா நீங்க ரெண்டு பேரும் அன்னிக்கு தனியா போய் குசுகுசுன்னு பேசுனீங்களே… என்னடா பேசுனீங்க…” என்று கேட்டான்.
செந்தில் நமட்டு சிரிப்போடு “அட என்ன அவசரம் மாமா… இப்ப என் தங்கச்சி கேட்டுகிட்டதுக்காக மாப்ளயே சொல்லுவாரு… அப்றம் இடி மின்னலோட அடைமழையும் பெய்யும் நாம ஜாலியா வேடிக்க பாக்கலாம்…” என்று கூற, அருளும் குழப்பம் விடுத்து ஆர்வமாக தேவா மற்றும் தேன்மலரை கவனிக்கலானான்.
தேவா “அது பாப்புக்குட்டி… அந்த ஃபோனோட நம்பர் கெடச்சா மாமாவ பத்தின வீடியோவ டெலிட் பண்ணிருவேன்ல….” என்றான்.
தேன்மலர் “எப்டி…” என்று கேட்க, தேவா மென்னகைப் புரிந்து “அய்யா தான் எதிக்கல் ஹேக்கர் ஆச்சே….” என்றான்.
அருள் அதிர்ந்து வாயை பிளந்து செந்திலிடம் “அப்ப இவன் சாப்ட்வேர் இன்ஜினியர் இல்லயா…” என்று கேட்க,
செந்தில் “அன்னிக்கு மாப்ள என்ன கூப்ட்டு தனியா சொல்லும்போது எனக்கும் இதே மாறி தான் ஷாக்கா இருந்துச்சு…” என்றவன் சரி “அதவிடு மாமா… இப்ப தங்கச்சிக்கும் தெரிஞ்சுருச்சு… என்ன நடக்க போவுதுனு அங்க பாரு…” என்று கூற, அருளும் அமைதியாக இருவரையும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.
தேன்மலர் சாதாரணமாக “ஓஓஓ… ம்ம்… அது இருக்கட்டும்… அப்ப அன்னிக்கு எனக்கும் அருளுக்கும் மட்டும் தெரிஞ்ச நம்பர உன் ஹேக்கிங் வேலய வச்சு கண்டுபுடிச்சுருக்க… ம்ம்ம்… சொல்லு எப்டி கண்டுபுடிச்ச…” என்று கேட்டாள்.
தேவா “ஆஹா… கெத்தா எதிக்கல் ஹேக்கர்னு சொல்லிட்டு… மண்ட மேல இருக்ற கொண்டய மறந்துட்டியே டா… ஆத்தி இவ பாக்ற பார்வையே சரியில்லயே… இப்ப என்ன சொல்லி சமாளிக்றது…” என்று மனதில் நினைத்து திருதிருவென்று விழித்தான்.
தேன்மலர் அவனைத் தீர்க்கமாகப் பார்த்து “என்ன முழிக்ற… என்ன சொல்லி சமாளிக்கலான்னா… உண்மைய தவிர எது சொன்னாலும் பனிஷ்மென்ட் டபுளா இருக்கும்…” என்றாள்.
தேவா ஈஈஈ என்று இளித்து “அதெப்டி என் மலர் மா ட்ட பொய் சொல்லுவேன்….” என்று கூற,
தேன்மலர் “ஆஹான்… அப்ப இத்தன நாள் சார் என்ன பண்ணீங்க…” என்று கேட்டாள்.
தேவா “அய்யோ இன்னிக்குன்னு பாத்து இந்த வாய் வேற அவளுக்கு வேல பாக்குதே…” என்று மனதில் எண்ணியவன் வெளியே சிரித்து “மலர் மா உண்மைய மறைக்றது வேற… பொய் சொல்றது வேற…. நீ ரெண்டையும் கன்பியூஸ் பண்ணிக்ற… நா சாப்ட்வேர் இன்ஜினியர் தான் கூடவே எதிக்கல் ஹேக்கரும்…” என்றான்.
தேன்மலர் “ம்ம்ம்… சரி… எப்டி அருள் நம்பர கண்டுபுடிச்ச….” என்று கேட்க,
தேவா “அய்யோ எங்க சுத்தியும் அங்கயே வந்து நிக்கிறாளே… உண்மைய சொன்னா என்னையே வேவு பாத்தியான்னு அடிப்பாளோ…” என்ற சிந்தனையிலிருக்க,
தேன்மலர் “என்ன எங்க சுத்துனாலும் அங்கேயே வந்து நிக்கிறா… உண்மைய சொன்னா அடிப்பாளோன்னு தானே யோசிக்ற….” என்று கேட்டாள்.
தேவா விழித்து அன்னிச்சையாய் ஆமென்று தலையாட்ட, தேன்மலர் இதழோரம் சிறிதாய் புன்னகையை வழிய விட்டு “உனக்கு டவுட்டே வேணா கண்ணா… கன்பார்மா அடிப்பேன்…” என்று கையை முறுக்கினாள்.
தேவா “என் மைண்டும் அவளுக்கு வேல பாக்க ஆரமிச்சுருச்சே… அடி வாங்குறதுன்னு ஆயிருச்சு… உண்மைய சொல்லியே அடி வாங்கிப்போம்…” என்றெண்ணியபடி “அது பேபி மா… அம்மு லேப்டாப் தானே நீ யூஸ் பண்ற…. ஸோ நீ அதுல என்னென்ன பண்றன்னு நா செக் பண்ணப்பதான்…. நீ ஒரு மெயில் ஐடிய அடிக்கடி ஓபன் பண்ணது தெரிஞ்சது…. நீ அதுலேர்ந்து மெயில் எதுவும் சென்ட் பண்ணல… வேற மெயிலும் அதுக்கு வரலயா… ஸோ அந்த ஐடிய என்னால் ஹேக் பண்ண முடில…. அதனால என்ன பண்ணேன்னா…” என்றிழுக்க,
தேன்மலர் “ம்ம்… என்ன பண்ண…” என்று கேட்க,
தேவா “அந்த ஐடியோட பாஸ்வேர்ட க்ராக் பண்ணி…. அதுக்குள்ள போயி டராப்ட்ஸ்ல இருந்த மெசேஜஸ் எல்லாத்தையும் படிச்சுட்டேன்…. அதுல தான் நீ ஸாமையும் கின்ஸியையும் எமெர்ஜென்ஸினா காண்டாக்ட் பண்ண குடுத்துருந்த அருள் நம்பரையும் உன் நம்பரையும் பாத்தேன்… உடனே அருள காண்டாக்ட் பண்ணேன்…” என்றான்.
தேன்மலர் “அப்ப என்கிட்ட லேப்டாப்பையும் குடுத்துட்டு… என்னை வேவும் பாத்துருக்க…” என்று கேட்க,
தேவா “அப்டியில்ல மலர் மா… உன் ஸேப்டிக்கு…” என்றிழுத்தான்.
தேன்மலர் அவனை முறைத்து “திருட்டு பயலே…” என்று சட்டைக் கையை மடித்துவிட்டு கையை முறுக்க,
தேவா “பேபி…. மாமா பாவம்… அடி தாங்க மாட்டேன்…” என்றுவிட்டு பின்னே நகர, தேன்மலர் முன்னேறவும் தேவா ஓட்டமெடுக்க, தேன்மலரும் அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.
தேவா கூறியதைக் கேட்ட அருள் அதிர்ச்சியாகி பின் தேவா, தேன்மலர் இருவர் மீதும் கோபத்தில் நின்று கொண்டிருந்தான். தேவா ஓடிக் கொண்டே “டேய் மாமா… மச்சான்… ரெண்டு பேரும் வேடிக்க பாக்றீங்களே… மனசாட்சி இருக்காடா உங்களுக்கு… இந்த பத்ரகாளிட்டேற்ந்து காப்பாத்துங்க டா…” என்றான்.
செந்தில் சிரிக்க, அருள் “உனக்கு வேணுன்டி மாப்ள… உண்மய மறச்சல்ல வாங்கு நல்லா…” என்று கூற,
தேவா இருவரையும் முறைத்து “எனக்கும் ஒரு காலம் வரும் அப்பயிருக்குடா உங்களுக்கு… சீக்ரமே நீங்களும் நா மாட்டிட்டு முழிக்ற மாறி முழிப்பீங்கடா… இது என் சாபம் டா…” என்றுரைத்தான்.
அருளும் செந்திலும் சிரித்து “அந்த சாபம் சீக்ரம் நிறைவேறட்டும் டா…” என்று கூற, தேவா ஒரு நொடி நின்று அவர்களை முறைக்க, அதை சரியாய் பயன்ப்படுத்திய தேன்மலர் தன்னவனைப் பிடித்து வெளுக்க ஆரம்பித்தாள்.
அடித்து ஓய்ந்து கை வலிக்க, மூச்சு வாங்க, அவள் அவளவனை முறைத்து நிற்க, அவளவனோ தன்னை ஒருத்தி அடித்த சொரணை சிறிதுமின்றி “அதான் முடிச்சுட்டியே… அப்றம் என்ன மா முறைக்கிற….” என்று கேட்டான்.
தேன்மலர் விழிகள் கலங்க “ஏன் தேவா இப்டி பண்ணீங்க… உங்கள நம்பி நா எல்லாம் சொன்னேன்ல… அருள்கிட்ட கூட சொல்லாததெல்லாம் சொன்னேன்… உங்களுக்கு என்மேல நம்பிக்கயில்லாம போயிடுச்சா…” என்று கேட்டாள்.
அதுவரை அவளை சிரிப்போடுப் பார்த்து நின்ற தேவா “என்ன மலர் மா இப்டி கேட்டுட்ட…. நம்பிக்கயில்லாம இல்லடா…. நீ அருள பத்தி சொல்லும்போதே உனக்கும் மாமாவுக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் எவ்ளோ ஸ்டராங்ன்னு புரிஞ்சுகிட்டேன்… உன்னை காணாம மாமா எவ்ளோ கஷ்டபடுவான்னு தான் அப்டி பண்ணேன்…. உன்கிட்ட கேட்டாலும் நீ எதுவும் சொல்ல மாட்ட… உன்னை பத்தி காலேஜ்ல விசாரிச்சா ஆர்யனுக்கும் தெரிய வாய்ப்பிருந்துச்சு… வேற வழியில்லாம தான் இப்டி பண்ண வேண்டியதாயிடுச்சு… உன்மேல நம்பிக்கயில்லாம இல்லடி…” என்று தன்னை இப்படி தவறாய் எண்ணி விட்டாளே என்று தவிப்பும் காதலுமாய் அவளை ஏறிட்டு கூறினான்.
தேன்மலர் அழுகையோடு அவனைக் கட்டிக் கொண்டு “சாரி தேவா… நீங்க என்ன நம்பலயோன்ற வருத்தத்துல அப்டி பேசிட்டேன்…. சாரி…” என்று மன்னிப்பு கேட்க,
தேவாவும் விழிகள் கலங்க “பரவால்ல மா… இப்ப நீ கேட்டதால தானே என்னால விளக்கம் குடுக்க முடிஞ்சது… உன் வருத்தத்த மனசுலயே வச்சுருந்துருந்தீனா நமக்குள்ள இடைவெளி அதிகமாயிருக்கும்…. இப்ப எல்லாம் தெளிவாயிருச்சுல்ல…” என்று கூற, தேன்மலர் மேலும் அவனுள் புதைந்துக் கொண்டாள்.
அருளும் செந்திலும் கூட விழிகள் கலங்க அவர்களைப் புன்னகையோடுப் பார்த்திருக்க, அருளை கண்ட தேன்மலர் தன்னவன் அணைப்பிலிருந்து விலகி வந்து அவனதுக் கைப்பற்றி “சாரி டா அருளு… நா வேணும்னு உன்ட்ட ஸாம், கின்ஸி பத்தி மறைக்கல…. அதுக்கான ரீஸன உன்ட்ட முன்னாடியே சொல்லிட்டேன்… எங்க மூனு பேரு ப்ரண்ட்ஷிப்பும் காலேஜ்லயே யாருக்கும் தெரியாது… அத சீக்ரட்டா மெயிண்டெயின் பண்ணதான் இப்டி மூனு பேருக்கும் காமனா ஒரு மெயில் ஐடி க்ரியேட் பண்ணி… எதாவது விஷயம் சொல்லனும்னா அத டைப் பண்ணி ட்ராப்ட்ல ஸேவ் பண்ணிருவோம்…. அப்றம் அத பாத்து என்ன விஷயம்னு தெரிஞ்சுப்போம்…. அப்டி தான் ரெண்டு பேர்ட்டயும் ஒரு வாரம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லி அப்டி நா காண்டாக்ட் பண்ணலனா உன்னை காண்டாக்ட் பண்ண சொல்லி உன் நம்பர் குடுத்துருந்தேன்…” என்றாள்.
அவளது விளக்கத்தில் அருளின் இதழ்கள் விரிந்து “எனக்கு தெரியாதா உன்னை பத்தி… என்னை மாமா காண்டாக்ட் பண்ண மாறி நீ காண்டாக்ட் பண்ணலயேன்ற சின்ன வருத்தம் தான்… ஆனா அது இப்பயில்ல…” என்று கூறவும் தேன்மலரும் புன்னகைப் புரிய, தேவாவும் செந்திலும் நிறைவாக அவர்களைப் பார்த்திருந்தனர்.
பின் நால்வரும் கூடத்திற்கு வந்தமர, செந்தில் “மாப்ள… நாராயணசாமி பத்தி இன்னொரு விஷயமும் தெரிய வந்துச்சு… அதக் கேட்டப்றம் அவன் கேடு கெட்டவன்னு தெரியும் ஆனா இவ்ளோ கேடு கெட்டவனா இருப்பான்னு அதிர்ச்சியா இருந்துச்சு…” என்று கோபமாகக் கூற, தேவா, தேன்மலர், அருள் மூவரும் இறுக்கமான மனநிலையுடன் அவன் கூறுவதைக் கேட்க ஆயத்தமாயினர்.
செந்தில் “நாராயணசாமி போதை மருந்து கடத்துரான்னு தெரியும்… ஆனா அத அவன் சைட்ல விக்கிறான்… அதோட…” என்று நிறுத்தியவன் முகம் கோபம், வலி, ஆதங்கம் என்று பல உணர்வுகளை வெளிக்காட்டி “சொல்லவே கூசுது… அதோட அவன் அவன்கிட்டயும் அவன் ஆளுங்ககிட்டயும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி மருந்து வாங்க வர்ற பொண்ணுங்கள… அவன் எக்ஸ்பையரி ஆன மருந்து விக்க ஹெல்ப் பண்ற டாக்டர்ஸ், டீலர்ஸ், மெடிக்கல் ரெப், அப்றம் ஆதரவற்றவ்ங்கள கடத்தி அவங்க பாடி பார்ட்ஸ திருடி விக்க ஹெல்ப் பண்ற டாக்டர்ஸ், கவர்ன்மென்ட் ஆபிசர்ஸ்னு இப்டி அவன் தொழிலுக்கு யார் யாரால பிரச்சன வருமோ அதுல யாரெல்லாம் வீக்கானவங்களோ… அவங்க ஆசைக்கு அந்த பொண்ணுங்கள யூஸ் பண்ணிக்றான்… அதுல சில பொண்ணுங்க மருந்து கெடச்சா போதும்னு அவன் சொல்றபடி கேக்றாங்க… சிலர் ஒத்துக்கலனா அவங்களுக்கு போதை மருந்த குடுத்து அவங்க சுய நினைவு இல்லாதப்ப… அனுப்பி வச்சுட்டு… அத வீடியோ எடுத்து வச்சுகிட்டு அந்த பொண்ணுங்களோட இருந்தவனுங்க எப்பயாவது பிரச்சன பண்ணா அப்ப அதக்காட்டி அவனுங்கள வழிக்கு கொண்டு வர்றதும்… அந்த பொண்ணுங்கள மிரட்டி அவங்கள மறுபடியும்….” என்று அதற்கு மேல் கூற முடியாமல் தன் கோபத்தை ஃஸோபாவின் கைப்பிடயைக் குத்தி வெளிப்படுத்த, மற்ற மூவரும் விழிகளில் அனல் தெறிக்க அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரம் அங்கே பெருத்த அமைதி நிலவ, தேன்மலர் “நாம இனியும் லேட் பண்ணக்கூடாது… உடனே நாராயணசாமிக்கு எதிரான எவிடென்ஸ திரட்டனும்… அப்பா ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸ் எதிரா சேகரிச்ச எவிடென்ஸ் எரிஞ்சா என்ன… அப்பா எதாவது ஸாப்ட் காப்பி வச்சுருக்காரானு கண்டுபுடிக்கனும்… இல்லன்னா அப்பா ஏன் திடீர்னு எப்பவோ நா ஆசைப்பட்ட பெங்களூர் வீட்ட வாங்கி அதபத்தி யார்கிட்டயும் சொல்லாதன்னு சொல்லனும்… ஸோ செந்தில் அண்ணா இங்க நாராயணசாமிக்கு எதிரா வேல செய்யட்டும்… நாம மூனு பேரும் ரெண்டு நாள்ல பெங்களூர் கெளம்புவோம்….” என்று இறுக்கமாக அதேசமயம் உறுதியாகக் கூறினாள்.
தேன்மலர் கூறியது அனைவருக்குமே சரியென்று பட, மற்ற மூவரும் அதனை ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தனர்.
தேவா செந்திலிடம் “மச்சான்… சீக்ரம் நாராயணசாமி லேப்டாப் என் கைக்கு வந்தாகனும்…. அப்றம் நம்ம ப்ளான்ல சின்ன திருத்தம்… அவன் லேப்டாப் கெட்ச்சா ஸாலிட் எவிடென்ஸா இருக்கும்னு தான் ஹேக் பண்ணி டேட்டா எடுக்காம லேப்டாப்பையே கேட்டேன்… இப்போ நீ சொல்ற விஷயத்த பாத்தா… அந்த லேப்டாப் மாறி டூப்ளிகேட் ரெடி பண்ணு… அப்றம் நா சொல்றேன் அது மாறி செய்யலாம்…” என்றான்.
செந்தில் “வந்துரும் மாப்ள… ஆள் ரெடி பண்ணிட்டேன்… அவன் இன்னும் ரெண்டு நாள்ல வேலய முடிச்சுருவான்…. சரி மாப்ள அதே மாறி ரெடி பண்ணி தரேன்…” என்றான்.
தேன்மலரும் அருளும் ஏன் என்று கேட்க, தேவா விவரம் கூற, இருவரது முகத்திலும் இறுக்கத்தைத் தாண்டிய ஒரு ஒளியும் அவனை நினைத்து பெருமிதமும் மின்னியது. பின் நால்வரும் தங்களது திட்டம் பற்றி விரிவாகப் பேசித் தெளிவாக யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர். மாலை நெருங்க செந்தில் விடைபெற்று கிளம்ப, தேவா, தேன்மலர், அருள் மூவரும் பயண அலுப்பு தீர உறங்கலாமென்று தத்தம் அறைகளுக்குச் சென்றவர்கள் இரவு உணவையும் மறந்து அயர்ச்சித் தீர மறுநாள் விடியல் வரை உறங்கி எழுந்தனர்.
அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிய தேன்மலர் தன் வேலைகளை முடித்துக் கொண்டு தோட்டத்திற்குச் செல்ல அங்கு ஏற்கனவே தன்னவன் நடை பயின்றுக் கொண்டிருப்பதைக் கண்டுப் புன்னகையோடு அவனை நோக்கிச் சென்றாள். தன்னவளைக் கண்ட அவளவனும் முகம் மலர நடை பயிலுவதை நிறுத்த, அவனருகில் வந்த அவனவள் “என்ன தேவா சீக்ரம் எழுந்துட்டீங்க….” என்று மென்னகையோடுக் கேட்க,
தேவா “சீக்ரமே தூங்கிட்டோம்ல… அதான்… நல்ல தூக்கம்…” என்று கைகளை நீட்டி சோம்பல் முறித்தவன், சட்டென்று அவளது இடை வளைத்து தன்னருகில் இழுக்க, தேன்மலர் அவனது மார்பில் மோதி அவனது திடீர் தீண்டலில் விழித்து வெட்கத்தில் நெளிந்து மிரட்சியாக அவனைப் பார்த்திருந்தாள்.
தேவா மந்தகாசப் புன்னகையோடு “என்னடி பாக்ற…. கை நீண்டா ட்ரீட்மென்ட் உண்டுன்னு சொன்னேன்ல… நேத்து என்னா அடி… யப்பா… இப்ப அதுக்கும் சேத்து உனக்கு ட்ரீட்மென்ட் இருக்கு…” என்று கண்ணடித்துக் கூறினான்.
தேன்மலர் விழித்து “சாரி தேவா… ஏதோ கோவத்துல… ப்ளீஸ் விட்ருங்களேன்…” என்றவாறு அவனிடமிருந்து விடுபட முயல,
அவனோ தனதுப் பிடியை மேலும் இறுக்கி அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து அவளதுக் கண்களை காதலாகப் பார்த்து “அப்படியெல்லாம் விடமுடியாது செல்லக்குட்டி… அப்றம் நேத்து ட்ராப்ட்ஸ் புல்லா படிச்சேன்னு சொன்னேனே அதுல என் மலர் மா என்னை சைட் அடிச்சதையும் நா ஹேன்ட்சம்மா இருக்கேன்… என்னை பாத்தா பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குன்னும் நானே லைஃப் பார்டனரா வந்தா செமயா ரொம்ப சந்தோஷமா இருப்பேன்னு எழுதிருந்ததையும் படிச்சுட்டேன்… ஸோ என்கிட்ட அத மறச்சதுக்கும் சேத்து கண்டிப்பா ட்ரீட்மென்ட் உண்டு…” என்று அழுத்தமாக அதேசமயம் சற்று கிறக்கமாகக் கூறினான்.
தேன்மலருக்கு அவனதுக் குரலில் தெரிந்த மாற்றம் நாணத்தைப் பூசிவிட, அவனது விழிகளைப் பார்க்க முடியாமல் விழித் தாழ்த்தியவள் படபடப்பில் திக்கித் திணறி “தேவா… ப்ளீஸ்…” என்று கூற, அது அவளது காதுக்கே கேட்டிருக்குமா என்பது சந்தேகமே.
அவளவனோ கள்ளச் சிரிப்புடன் அவளது முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு வர, தன்னவனின் வெப்பமான மூச்சுக் காற்றின் தீண்டல் உயிர் வரை சென்று அவளை ஏதோ செய்ய, அதில் விழி மூடியவள் நாணம் மேலிட இதழ்கள் மென்னகைச் சூட, உள்ளுக்குள் மழைச்சாரல் பொழிந்தக் குளுமையுணர்ந்து தன்னவனின் பனியனை இறுக்கமாகப் பற்றியபடி நின்றிருந்தாள். தன்னவளின் செயலில் இன்னும் இதழ் விரித்த தேவா, அவளது மூடிய விழிகளில் முத்தமிட்டு, அவளது கன்னத்தோடுத் தன் கன்னம் வைத்து இழைக்க, அதில் பெண்ணவள் வெட்கம் தாளாது நெளிய, அவன் அவளது இடையில் அழுத்தம் கொடுத்து மேலும் தன்னோடு அவளை இறுக்க, அதில் அவனது பனியனை மேலும் இறுக்கமாகப் பற்ற, அவன் இதழால் கன்னம் தீண்டி, காது மடல் உரச, அவள் அவனது செயலில் உருகிக் கரைந்து அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.
தேவா மென்னகைப் புரிந்து மேலும் அவளை இம்சிக்காது அணைப்பின் இறுக்கம் தளர்த்தி அவளது காதில் “ஓய் பாப்புக்குட்டி… எப்டி நம்ம ட்ரீட்மென்ட்…” என்று மென்மையானக் குரலில் கேட்க, அவனவளோ வெட்கம் தாளாது “ம்ம்… போங்க தேவா…” என்ற சிணுங்கலோடு அவனது மார்பில் முகம் புதைத்துக் கொள்ள, தேவா மென்னகையோடு மென்னமையாய் அவளை அணைத்துக் கொண்டான்.
இருவரும் நிலமகளின் மீது தன் கிரணங்களால் மஞ்சள் பூசியவாறு ஆதவன் உதிக்கும் அந்த அழகிய காலை வேளையில் அந்த அழகானத் தருணத்தை தங்களது மனதிலும் நினைவடுக்குகளிலும் பொக்கிஷமாய் சேமித்தவாறு அதில் லயித்திருந்தனர். இருவரும் அந்த அணைப்பினில் ஒருவருள் ஒருவர் காதலாய் ஆழமாய்க் கரைந்து, ஒருவருள் ஒருவர் தொலைத்துக் கொண்டிருந்தனர். பின் இருவரும் அருகிலிருந்த மரத்திலிருந்து கரிச்சான் குருவி எழுப்பிய ஒலியில் தன்னிலை அடைந்து அணைப்பிலிருந்து விலகி, வெட்கமும் காதலுமாய் விழிகளால் கலந்தவர்கள் அருள் எழுவதற்குள் உள்ளேச் செல்வோமென்று கைக்கோர்தவாறு வீட்டினுள் சென்றனர்.
அருள் எழுந்தவுடன் மூவரும் ஒன்றாக அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருக்க, அப்போது அமீராவும் அவளது அன்னையும் வந்தனர். தேன்மலரும் அமீராவும் ஒருவரையொருவர் அணைத்து விலக, தேன்மலர் அமீராவின் நிச்சயம் எப்படி நடந்ததென்று கேட்க, அமீராவும் அவளது அன்னையும் நன்றாக நடந்து முடிந்ததென்று கூறி இனிப்புகள் வழங்க, மூவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அமீராவின் அன்னை அருளை கேள்வியாகப் பார்க்கவும் தேவா தன் நண்பன் என்று அருளை அவருக்கு அறிமுகம் செய்து வைக்க, பின் அவரும் அமீராவும் சிறிது நேரம் பேசியிருப்பது விட்டுச் சென்றனர். அதன்பின் மூவரும் காலை உணவை முடித்து அடுத்தகட்ட வேலைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது செந்திலும் வந்து சேர, பின் நால்வரும் அவர்களது திட்டத்தை செயல் படுத்துவதற்கான வேலைகளில் இறங்கினர்.
இப்படியே அந்த நாளும் மறுநாளும் கடக்க, மறுநாள் மாலை அருளும் செந்திலும் அவர்களது நெருங்கிய நண்பனுக்குத் திருமணமென்பதால் திருமணத்திற்கு முன் அவன் தரும் பாச்சுலர் பார்ட்டிக்குக் கண்டிப்பாக வரவேண்டுமென்று வற்புறுத்தி அழைத்ததால், இருவரும் தட்ட முடியாமல் தேவா மற்றும் தேன்மலரிடம் சொல்லிக் கொண்டு பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்குச் சென்றனர்.
பார்ட்டி முடிந்து இருவரும் பார்ட்டி நடந்த ஹாலிருந்த நான்காம் தளத்திலிருந்து தரைத் தளத்திற்கு மின்தூக்கி வழியேச் சென்றுக் கொண்டிருக்க, அப்போது இரண்டாம் தளத்தில் ஒரு பெண் வேகமாக மின்தூக்கிக்குள் பயமும் பதட்டமுமாக நுழைய, அவளைக் கண்ட அருளும் செந்திலும் அதிர்ந்து இவள் இங்கே எப்படி என்று குழம்பினர்.
அருள் “அமீரா… நீ இங்க என்ன பண்ற…” என்று கேட்க, அப்போது தான் விழிகளில் நீர் திரையிட நிமிர்ந்து அருளையும் செந்திலையும் பார்த்த அமீரா அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகையின் காரணம் புரியாத அருளும் செந்திலும் அவளிடம் என்ன, ஏதென்று கேட்க, அமீரா அழுதுக் கொண்டேயிருக்கவும் அதற்குள் தரைத் தளம் வர, அவளை ஹோட்டலை விட்டு வெளியே இருந்த பார்க்கிங் இடத்திற்கு அழைத்து வந்து அருள் என்னவென்று அதட்டிக் கேட்க, அமீரா அழுகையோடு நடந்ததைச் கூறினாள்.
அதைக் கேட்ட அருளுக்கும் செந்திலுக்கும் அப்படி ஒரு கோபம், அருள் தேவாவிற்கு அழைத்து தேன்மலரோடு அமீராவின் தந்தையையும் அழைத்துக் கொண்டு தாங்களிருக்கும் ஹோட்டலிற்கு வரச்சொல்லி விட்டு செந்திலை தேவா வந்தால் மேலே அழைத்து வரச்சொல்லி அவனை கீழே நிறுத்தினான். பின் அருள் அமீராவை கைப்பிடித்து அழைத்துக் கொண்டு ஹோட்டலின் இரண்டாம் தளத்திற்குச் சென்றான். அமீரா வேண்டாமென்று அருளிடம் கெஞ்ச, திரும்பி அவன் பார்த்தப் பார்வையில் என்ன உணர்ந்தாளோ பின் அமைதியாக அவனுடன் சென்றாள்.
தொடரும்….