Loading

அத்தியாயம்- 21

 

         தேன்மலர் புன்னகைக்கவும் அருளும் தேவாவும் புரியாமல் அவளைப் பார்க்க, தேன்மலர் மென்னகையோடு “நா ஊர்லேர்ந்து கெளம்பும்போதே எதுக்கும் இருக்கட்டும்னு பாஸ்போர்ட்ட கையோட எடுத்துட்டு வந்துட்டேன்…” என்றாள். 

 

     அருள் “அதுசரி…. ஆனா உன் லக்கேஜ் தான் பெங்களூர்ல மாட்டிக்கிச்சே… அப்றம் எப்டி பாஸ்போர்ட் உன்கிட்ட இருக்கும்…” என்று கேட்க,

 

       தேவாவும் “ஆமா… நீ மயங்கியிருந்தப்ப கூட உன் கைல வீட்டு சாவி தான் இருந்துச்சு… வேறெதுவுமில்லயே… அப்றம் எப்டி…” என்று கேட்டான். 

 

      தேன்மலர் குறுநகையோடு “என்னை கடத்துன அன்னிக்கு காலைலேர்ந்து என் மனசு ஏதோ தப்பா நடக்கப் போற மாறி படபடன்னு அடிச்சுகிச்சு… அதான் எதுக்கும் இருக்கட்டும்னு பாஸ்போர்ட்ட என் சுடிதார் பாக்கெட்ல எடுத்து வச்சுக்கிட்டேன்…” என்றாள். 

 

     அருளும் தேவாவும் அவளைப் பார்த்து சிரித்து “ம்ம்ம்… பயங்கரமான ஆள் தான் நீ…” என்று கூற, தேன்மலரும் சிரித்தாள். 

 

      தேவா “ஆமா மலர்…. பிக் பி யாருன்னு தான் சொல்லல… அட்லீஸ்ட் அவர் ஏன் உடனே புறப்பட்டு வர சொன்னாருன்னாவது சொல்லலால…” என்றான். 

 

     தேன்மலர் “அது எனக்கும் தெரியாது… எமெர்ஜென்ஸினு மட்டும் தான் சொன்னாரு… பட் அவரு சொன்னா காரணமிருக்கும்… ஸோ நாம கெளம்புற வழிய பாப்போம்….” என்றாள். 

 

     அருளும் தேவாவும் சிறிது யோசனைக்குப் பின் சரியென்று தலையாட்டினர். அச்சமயம் செந்தில் அருளின் உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கு வர, அருள் அவனிடமும் விடயம் கூறினான். அதைக் கேட்டு செந்தில் சிறிது நேரம் யோசனையோடு இருந்தான். 

 

       பின் “சரி நீங்க மூனு பேரும் கெளம்புங்க…” என்று கூற, 

 

     தேன்மலர் “அண்ணா… அப்போ நீங்க வரலயா…” என்று கேட்டாள். 

 

     தேவா “யாராவது ஒருத்தர் இங்கிருந்து நிலவரம் என்னன்னு பாக்கணும்ல அதான் செந்தில் வரலங்றாப்ல… சரி தானே செந்தில்…” என்று கேட்டான். 

 

              செந்தில் தேவாவை பார்த்து அர்த்தமாகப் புன்னகைத்து “ஆமா தேவா… நீங்க கெளம்புங்க… அதுக்குள்ள நா இங்க சில வேலயெல்லாம் முடிச்சு வைக்கிறேன்….” என்றான். 

 

      அருள் “அப்டி என்னடா வேலய முடிக்க போற…” என்று கேட்க,

 

       செந்தில் புன்னகையோடு “திமிங்கலங்களுக்கான வலைய நீங்க அங்க ரெடி பண்ணுங்க… நா இங்க நம்ம ஊர் மீனை புடிக்க தூண்டில் போட்றேன்…” என்றான். 

 

       அதைக் கேட்ட தேவா இதழ்களில் மர்மப் புன்னகை ஓடி மறைய, செந்திலை தனியே அழைத்துச் சென்று சில விடயங்களைக் கூறியவன் அதைத் தாங்கள் திரும்பி வருவதற்குள் முடித்து வைக்குமாறுக் கேட்டுக் கொள்ள, செந்தில் குறுநகையோடு “அதல்லாம் பக்காவா முடிச்றலாம் மாப்ள… நீங்க கவலப்படாம போய்ட்டு வாங்க….” என்றான். 

 

     தேவா “மாப்ளயா…” என்று கேட்க, 

 

     செந்தில் சிரித்து “ஆமா தேனுக்கு நா அண்ணன்னா நீ எனக்கு மாப்ள தானே…” என்று கூற, 

 

     தேவா சிறிது வெட்கம் கலந்தப் புன்னகை அதரங்களில் இழையோட “ஆமா மச்சான்…” என்க, செந்தில் வாய்விட்டு சிரித்தான். 

 

     தேவாவும் செந்திலும் பேசிவிட்டு வர, அருளும் தேன்மலரும் அவர்களைத் தான் பார்த்திருந்தனர். 

 

      தேன்மலர் “அப்டி என்ன எங்களுக்கு தெரியாம ரகசியம் பேசுறீங்க ரெண்டு பேரும்…” என்று கேட்டாள். 

 

     தேவா புன்னகையோடு “அது மச்சான், மாப்ளக்குள்ள… யாருக்கும் சொல்றதுக்கில்ல…” என்க, 

 

     அருள் “மாப்ள என்கிட்ட கூடவா…” என்று கேட்க, 

 

     செந்தில் “முக்கியமா மாமனுக்கு சொல்றதாயில்ல…” என்கவும் அருள் அவர்கள் இருவரையும் முறைத்து “போங்கடா நீங்களும் உங்க ரகசியமும்…” என்று விட்டு உள்ளேச் சென்றான். 

 

            தேன்மலர் தேவாவை பார்த்து உதடு சுழித்து, கழுத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு “நாளைக்கு யூஎஸ் கௌன்சலேட்க்கு போகணும் ரெடியாயிருங்க…” என்றுவிட்டு அடுக்களைக்குச் சென்றாள். 

 

     தேவா அவள் செல்வதைப் புன்னகையோடுப் பார்த்திருக்க, செந்தில் “ம்க்ம்…” என்று செரும, தேவா திரும்பிப் புன்னகைத்துத் தலைக் கோதியவாறே அவனை அழைத்துக் கொண்டு அருளை சாமாதானம் செய்யச் சென்றான். தேவாவும் செந்திலும் அப்படி இப்படி பேசி அருளை சாமாதானம் செய்து சிரிக்க வைத்தனர். பின் அருள் தேவாவிடம் அவனின் தாய், தந்தை மற்றும் குடும்பம் பற்றிக் கேட்டான். 

 

       தேவா “எங்களுக்கு சொந்த ஊர் மதுரை… அப்பா பாண்டியன் இங்க எல் ஐ சில வேல… அதனால நானும் அம்முவும் பொறந்தது வளந்ததெல்லாம் சென்னை தான்… அம்மா குமாரி அப்பாவுக்கு மாமா பொண்ணு, இல்லத்தரசி…. அப்றம் நா… அப்றம் என் தங்கச்சி மதிவதனி எங்களுக்கு அவ அம்மு… என்னைவிட அஞ்சு வயசு சின்னவ அதனாலேயே அவ மேல எனக்கு ரொம்ப பாசம்… அவளும் பி இ முடிச்சுட்டு இங்க ஐடி கம்பெனில வேலபாத்துட்ருந்தா… அம்மாவும் அப்பாவும் மதுரைக்கு ஒரு உறவுக்காரங்க விஷேஷத்துக்கு போனப்போ அக்ஸிடென்ட்ல போய்ட்டாங்க… அம்முவுக்கு அந்த சோகத்துலயே அடிக்கடி உடம்பு முடியாம போகும் அப்பதான் இந்த நாராயணசாமி பண்ண தில்லாலங்கடினால என் அம்முவும் என்னை விட்டு போய்ட்டா… ஊர்ல மாமா, சித்தப்பாலாம் இருக்காங்க… அங்க வந்துருனு கூப்டுவாங்க… ஆனா எனக்கு அங்க போக மனசில்ல…” என்றான். 

 

             அருள் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் தேன்மலரின் குடும்பம் பற்றியும் அவளின் தாய் மாமாக்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் அவர்களின் மகன்கள் பற்றியும் கூறினான். தேவா அவன் கூறுவதையெல்லாம் கவனமாகக் கேட்டு உள்வாங்கிக் கொண்டான். 

 

     பின் அருள், செந்தில் அவர்களின் குடும்ப பிண்ணனி பற்றி கூற, பின் பேச்சு அப்படியே பொது விடயங்கள், அரசியல் என்று திசைத் திரும்பி மீண்டும் தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையிலேயே வந்து நின்றது. தேன்மலர் சமையல் முடித்து மூவரையும் சாப்பிட அழைக்க, மூவரும் தங்கள் பேச்சுக்களைத் தொடர்ந்தவாறே உணவு கூடத்திற்கு வந்தனர். 

 

         தேன்மலர் அனைவருக்கும் பரிமாறி விட்டு அவளும் உணவருந்திக் கொண்டே அவர்களின் பேச்சில் கலந்துக் கொண்டாள். அன்றைய நாள் அப்படியே கழிய, மறுநாள் காலை திருச்சியிலிருந்து சென்னை வந்த உறவினர் மூலம் அருளின் பாஸ்போர்ட் வந்துவிட, அருளும் செந்திலும் பேருந்து நிலையத்திற்குச் சென்று அதை வாங்கி வந்தனர். 

 

       மதிய உணவை முடித்துக் கொண்டு தேவா, தேன்மலர், அருள், செந்தில் நால்வரும் தேனாம்பேட்டையில் உள்ள யூ எஸ் கௌன்சலேட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு அனைத்தும் முடிந்து விசா கிடைத்து அவர்கள் வெளியே வர இருள் கவியத் தொடங்கியிருந்தது. தேன்மலர் மறுநாளே அமெரிக்கா புறப்பட வேண்டுமென்று கூறவும் தேவா இணையத்தில் அதற்குண்டான பயணச்சீட்டை முன்பதிவுச் செய்தான். பின் மறுநாள் பாதுகாப்பாக தேவா, தேன்மலர், அருள் மூவரும் விமானம் ஏற சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று கூறி செந்தில் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான். 

 

               தேன்மலர் காரிலேயே அமர்ந்துக் கொள்ள, தேவாவும் அருளும் அவளுக்கும் சேர்த்து சில உடைகளும் பயணத்திற்குத் தேவையான பிற அவசியமானப் பொருட்களும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்று புறப்படுவதற்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்தனர். 

 

        தேவா ஆர்டர் செய்து தருவித்திருந்த உணவை மூவரும் தங்களின் பயணம் குறித்துப் பேசியபடியே உண்டு முடித்து உறங்கச் சென்றனர். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு அவர்களுக்கு விமானம் என்பதால் மூவரும் மூன்று மணிக்கே எழுந்துக் குளித்துத் தயாராய் இருக்க, செந்தில் வந்து அவர்களை தன் காரில் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றான். 

 

      தேவா செந்திலை தனியே அழைத்து ஒருமுறை அவனுக்கு அனைத்தும் ஞாபகப்படுத்த, பின் செக்கின் முடிய, செந்தில் ஏற்பாட்டின் படி தேவா, தேன்மலர், அருள் மூவரும் செந்திலிடம் விடைபெற்று வி ஐ பிகள் செல்லும் வழியில் சென்று தங்களின் விமானத்தில் ஏறினர். 

 

      மூவரும் லண்டன் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல விமானம் மாற வேண்டும். இரண்டு பகல், ஒரு இரவு பயண நேரம். தேவா, மூவருமே ஒன்றாக அமரும்படி பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தான். அருள் ஓரத்தில் அமர்ந்து விட, தேவாவும் தேன்மலரும் அருகருகே அமரும்படியானது. 

 

      இருவரும் அருகருகே அமர்ந்திருப்பது இருவருக்கும் சொல்லொனா பரவசத்தையும் குளுமையையும் உள்ளுக்குள் பரவச் செய்தது. இதில் தேன்மலர் கருப்பு நிற ஷர்ட்டும் உதா நிற ஜீன்ஸும் அணிந்து முடியை உயர்த்தி கொண்டைப் போட்டிருக்க, ஒன்றிரண்டு முடி கற்றைகள் அவள் நெற்றியில் தவழ்ந்தும் கன்னம் உரசியும் அவளோடுக் கதைப் பேசிக் கொண்டிருந்தன. 

 

               அதனைக் கண்ட தேவா சிறிது பொறாமையோடுப் பார்த்திருந்துவிட்டு பின் பெருமூச்சோடு அவளை ரசிக்கலானான். அருள் தேன்மலருக்கென்று இந்த உடையைத் தேர்வு செய்த போதே தேவா “மலர் இந்த மாறி ட்ரெஸ்லாம் போடுவாளா…” என்று ஆச்சர்யமாய்க் கேட்க, 

 

      அருள் புன்னகைத்து “ம்ம்… போடுவா… அவள சுடிதார்லயே பாத்ததுனால தான் உனக்கு இந்த ஆச்சராயம்…” என்றவன் தங்களுக்கும் அதேபோல் கருப்பு ஷர்ட்டும் உதா ஜீன்ஸும் எடுத்தான். மூவரும் ஒன்றுபோல் இன்று அதை தான் போட்டிருந்தனர். 

 

      தேவா அவளை விழி எடுக்காது ரசித்துக் கொண்டிருக்க, அவனதுப் பார்வைத் தாளாத தேன்மலர் “தேவா… என்ன பண்றீங்க… ஏன் இப்டி ஏதோ காணாதத கண்டது மாறி பாக்றீங்க…” என்று கிசுகிசுப்பாக வினவினாள். 

 

       தேவா அவள் விழியோடு விழிக் கலந்தவன் மெல்ல அவள் முகத்தருகேத் தன் முகம் கொண்டு வர, தேன்மலர் அவனதுச் செயலில் நாணம் கொண்டு திரும்பித் தலைக் குனிந்துக் கொள்ள, தேவா அவளது செவி மடலோடு தன் இதழ் உரச “ம்ம்ம்… ஆமா காணாதத தான் இப்ப காண்றேன்… இந்த ட்ரஸ்ல சும்மா அள்ற தெரியுமா… அப்டியே கம்பீரமா இந்த கதயில ராணிங்கள்லா வருவாங்கல்ல ஜான்சி ராணி, வேலு நாச்சியார், மங்கம்மா… அப்டி என் ராணி கம்பீரமா என் பக்கத்துல அதுவும் இவ்ளோ நெருக்கமா உக்காந்துருந்தா… நிறைய தோனுது ஆனா என் ராணியோட கண்ணு இன்னும் முழுசா அதோட விருப்பத்த சொல்ல மாட்டேங்குதே… அதான் வெறும் பாக்றதோட நிறுத்திக்க வேண்டியதாயிருக்கு…” என்று பெருமூச்செறிந்தான். 

 

      ஏற்கனவே அவனது இதழ் தன் செவிமடல் தீண்டியதில் உடலில் மின்சாரம் பாய உறைந்திருந்தவள் அவனின் கூற்று கேட்டு நாணத்தில் நெளிந்துப் பின் அவனது மூச்சுக் காற்றின் வெப்பம் உயிர் வரைத் தீண்டக் கண்கள் மூடி அதை அனுபவித்திருந்தாள். 

 

                தேவா அவளின் மூடிய விழியும் மெய் மறந்து அமர்ந்திருக்கும் விதமும் கண்டு மந்தகாசப் புன்னகை இதழ்களில் தவழ அவளை இம்சை செய்தது போதுமென்று விலகி நேராய் அமர்ந்த சில நொடிகளில் தேன்மலர் தன்னுணர்வுப் பெற்றாள். 

 

      தேன்மலர் நாணமும் புன்னகையுமாய் அவனைத் திரும்பி நோக்க, அவனோ அவளைக் கேலியாகப் பார்த்திருப்பதைக் கண்டு மேலும் நாணமுற்றவள் பொய்க் கோபம் கொண்டுச் செல்லமாக அவனது தோள்களில் இரண்டடி வைத்து “இப்டி எதுவும் வம்பு பண்ணாம… ஊர் போய் சேர்ற வர அமைதியா வாங்க…” என்றாள். 

 

       பின் இருவரும் அருள் தங்களைக் கவனிக்கின்றானா என்று பார்க்க, அவன் ஏற்கனவே வெளிச்சம் படாமலிருக்க கண்கவசம் அணிந்து சாய்ந்தமர்ந்திருப்பதைக் கண்டு இருவரும் நிம்மதி பெருமூச்சு விட, அருள் “நா எதுவும் பாக்கல பா…” என்று கூறவும் இருவருக்குமே சங்கடமாகிவிட்டது. 

 

      அவர்களின் அமெரிக்க பயணம் இப்படி காதலும் கிண்டலும் பேச்சுமாய் சுமூகமாய்ப் போனது. 

 

        அமெரிக்காவின் வாஷிங்டனில் ரேகன், டல்லஸ், பால்டிமோர் என்று மூன்று விமான நிலையங்கள் உண்டு. அதில் பால்டிமோர் விமான நிலையம் தான் நியூயார்க்கிற்கு சாலை வழிப் பயணமாக மூன்று மணி நேர பயணத் தூரத்தில் இருந்ததால் மூவரும் அங்கு வந்திறங்கும் விமானத்தில் தான் வந்து, ஆதவன் தன் அன்றைய வேலையின் மிச்சமாய் நீலவானில் செம்மையான தன் எச்சங்களைப் படர விட்டிருக்க, பிறைமதி தண்ணொளி வீசி தன் பணி செய்ய வந்த வேளையில் அமெரிக்க மண்ணில் கால் பதித்தனர். 

 

            மூவரும் விமான நிலையம் விட்டு வெளி வர, குளிர் உடலை ஊசியாய் ஊடுருவ மூவரும் தங்களது குளிரங்கியை அணிந்துக் கொண்டனர். இவர்களுக்காக வெளியே ஸாமும் கின்ஸியும் காத்துக் கொண்டிருக்க, அவர்களைக் கண்ட தேன்மலர் ஓடிச் சென்று அவர்களை அணைத்துக் கொண்டாள்.

 

       பல வருடங்களாக நேரில் பார்த்திராத நண்பர்கள் மூவரும் தங்களின் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டிருக்க, தேவாவும் அருளும் அவர்களைப் புன்னகையோடுப் பார்த்திருந்தனர். பின் நண்பர்கள் மூவரும் தங்கள் பாச மழையையும் நலன் விசாரிப்பையும் பொழிந்து முடிய, தேன்மலர் தேவாவையும் அருளையும் தன் நண்பர்கள் என்று ஸாமிற்கும் கின்ஸிக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். 

 

        அருளும் தேவாவும் புன்னகைத்து அவர்களின் நலம் விசாரித்து முடிய, அருள் “ஏன் ஹனிமலர்… இவங்கதான் நீ சொன்ன முக்கியமானவங்களா… சரி ரெண்டு பேர இண்ட்ரோ குடுத்துட்ட மூனாவதா பிக் பிய எப்போ இண்ட்ரோ குடுப்ப…” என்று கேட்டான். 

 

      அதற்கு ஸாம் “நீ ரொம்பலா வெயிட் பண்ண வேணா அருள்… நாம இப்ப நேரா பிக் பிய தான் மீட் பண்ண போறோம்….” என்று கொச்சைத் தமிழில் கூற, அருளும் தேவாவும் வாய்ப் பிளக்க, அதைக் கண்டு தேன்மலரும் கின்ஸியும் சிரித்தனர். 

 

        கின்ஸி “தேன்மலர் எங்களுக்கு அப்பப்போ தமிழ் சொல்லி குடுத்துருக்கா…” என்று தமிழில் கூற, தேவாவும் அருளும் தேன்மலரை பெருமையாகப் பார்த்தனர். 

 

                தேவாவின் பார்வையில் தேன்மலரை பற்றிய பெருமையையும் தாண்டி காதல் வழிந்தோட, அதைக் கண்டு கொண்ட தேன்மலர் சிறு புன்னகையோடு அவனை இடித்து “போதும் தேவா…” என்று கிசுகிசுக்க, அவளவனுக்கு அப்படி ஒரு புன்னகை. பின் அனைவரும் ஒரு காரிலேறி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த செடிகொடிகள் மண்டிக்கிடிந்த இடத்திற்குச் சென்று, உள்ளிருந்த திறந்தவெளி மைதானத்திற்குச் செல்ல, அங்கு அவர்களுக்காக ஒரு உலங்கூர்தி/ திருகிறக்கை வானூர்தி(ஹெலிகாப்டர்) தயார் நிலையில் காத்திருந்தது.

 

       உலங்கூர்தி ஓட்டி தேன்மலரை கண்டதும் “ஹாய் ஸ்வீட் ஹார்ட்… எப்டியிருக்க….” என்று கேட்க, 

 

      தேன்மலர் மலர்ந்தப் புன்னகையோடு “ஹாய் தாம்சன்… நல்லார்க்கேன்… நீங்க நல்லார்க்கீங்களா… இப்போ உங்க ஹெல்த் பரவால்லயா…” என்று கேட்டாள். 

 

     தாம்சன் சிறு புன்னகையைப் பதிலாய்த் தந்து “பி உங்களுக்காக காத்துட்ருக்காரு… கிளம்பலாமா…” என்று வினவ, தேன்மலர் மென்னகைப் புரிந்தாள். 

 

      தாம்சன் அனைவரதுக் கண்களையும் கட்டி விட, தேன்மலர் சிறு தலையசைப்போடு உலங்கூர்தியில் ஏற, அவளைத் தொடர்ந்து ஸாமும் கின்ஸியும் ஏற, அருளும் தேவாவும் எதற்காக கண்ணைக் கட்ட வேண்டும்? அவர்களின் இடத்திற்கு செல்லும் வழியைக் தாங்கள் அறியக் கூடாதென்றா? உலங்கூர்தியில் கூட்டிப் போகும் அளவிற்கு பிக் பி பெரிய ஆளா? தேன் மலருக்கும் அவருக்கும் எப்படி பழக்கமேற்பட்டது? என்று வியப்பும் யோசனையுமாய் ஏறி அமர, அவ்வுலங்கூர்தி வானிலேறி பறக்க ஆரம்பித்தது. 

 

                தேன்மலர புன்னகைத்து “என்ன அருள், தேவா… உங்க ரெண்டு பேருக்கும் ஏன் கண்ண கட்றாங்க… பிக் பி யாரு… ஹொலிகாப்டர்ல ஏன் கூட்டிட்டு போறாங்க…. எனக்கும் பிக் பிக்கும் எப்டி பழக்கம்… இப்டி பல கேள்வி உங்க மண்டய கொடையுதா?” என்று வினவினாள். 

 

     அருளும் தேவாவும் ஆச்சர்ய அதிர்ச்சிக் கொண்டு “ஆமா…” என்று கூற, தேன்மலர் பிக் பியை பற்றிக் கூற ஆரம்பித்தாள். 

 

      தேன்மலர் கல்லூரி பயின்றக் காலத்தில் ஸாம், கின்ஸி, தேன்மலர் மூவரும் அடிக்கடி இரவு வெளியேச் செல்வது, இலக்கேயில்லாமல் காரில் வெகு தூரப் பயணம் மேற்கொள்வதென்று தங்கள் நட்பைக் கல்லூரியில் யாருக்கும் தெரியாமல் வெளியில் வளர்த்துக் கொண்டிருந்தனர். அப்படி ஒருநாள் இரவு மூவரும் காரில் வாஷிங்கடன் தாண்டி நியூயார்க் செல்லும் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருக்க, அப்போது யாருமற்ற வனாந்திரப் பகுதியைக் கடக்கையில் ஒரு நபர் அடிப்பட்டு சாலையில் கிடப்பதுக் கண்டு மூவரும் காரிலிருந்து இறங்கி அந்நபரைக் காப்பாற்ற விரைந்தனர். அருகேச் சென்றதும் நான் அந்நபர் யாரென்று ஸாம் சொல்லி தெரிந்தது. பிக் பி அமெரிக்காவின் நிழலுகின் முடி சூடா மன்னன். அவன் செய்யும் தொழில்கள் அநேகம். அதில் பிரதானமானது கடத்தல். கடத்தலில் அவனின் பிடித்தம் ஆயுதங்கள். அதோடல்லாமல் பிக் பி போதைப் பொருள், தங்கம், டாலர், அறிய வகைப் பொருட்கள், சமயத்தில் ஆட்களைக் கூட கடத்துவதென்று அவனின் கடத்தல் உலகம் மிகப்பெரியது. அதோடு அவனுக்கு ஸ்டீல், கார், கப்பல் போன்ற தயாரிப்பு நிறுவனங்களும் உண்டு. தொழிலுக்காகக் கொலையும் செய்வான். பிக் பிக்கு பல பெரிய புள்ளிகளுடன் தொடர்புண்டு, அதில் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என்று அநேகர் அடங்குவர். அங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவனை கண்டும் காணாமலுமேயிருப்பர். மீறி இவனிடம் மோதினால் அவன் இவ்வுலகில் பிறந்ததற்கான தடமேயில்லாமல் ஆகிவிடும். அதனால் இவனுக்கு எதிரிகள் ஏராளம். 

 

                இவற்றையெல்லாம் ஸாம் மூலமறிந்து தேன்மலரும் கின்ஸியும் அதிர்ச்சியில் உறைந்திருந்தத் தருணம் ஸாம் “இவர காப்பாத்துனா… நாம போலீஸ், இவரோட எதிரின்னு பல பேர்ட்ட மாட்டிப்போம்… இவர இப்டியே விட்றலாம்….” என்று கூற, 

 

     கின்ஸி பயந்து ஸாமின் கூற்றிற்கு ஆமோதிப்பாய் “ஆமா தேன்மலர் வா போய்ட்லாம்….” என்று அவளது கைப்பிடித்து இழுத்தாள். 

 

     தேன்மலர் அவர்கள் இருவரையும் முறைத்து “இவர் யாரா வேணா இருக்கட்டும்… இப்போ இவர காப்பாத்தறது தான் எனக்கு முக்கியம்…. நாளைக்கு உங்களுக்கு இதுமாறி எதாவது ஆகி நா பிரச்சனன்னு ஒதுங்கி போனா உங்களுக்கு எப்டியிருக்கும்…” என்று கேட்க, ஸாமும் கின்ஸியும் பதில் கூற முடியாமல் தலைக் குனிந்துக் கொண்டனர். 

 

       தேன்மலர் “உங்களுக்கு பயமாருந்தா…. நீங்க எதுவும் பண்ண வேணாம்… போலீஸ் கேட்டா நா சமாளிச்சுக்றேன்… நா இவர காப்பாத்தியே ஆவேன்… எதாவது ஒரு ஹாஸ்பிட்டல்ல எங்கள இறக்கி விட்டுவிட்டு நீங்க உங்க வழில போங்க…” என்று உறுதியாகக் கூறினாள். 

 

      ஸாமும் கின்ஸியும் “எதாயிருந்தாலும் நாம மூனு பேரும் சேந்தே பேஸ் பண்ணலாம்…” என்கவும் தேன்பலர் இதழ்களில் புன்னகை அரும்ப, ஸாமும் கின்ஸியும் சிறிதாக இதழ் விரித்து அவளோடு சேர்ந்து பிக் பியை தூக்கி வந்து காரில் கிடத்தினர். 

 

                  அரை மயக்க நிலையிலிருந்த பிக் பி இவர்களின் உரையாடல்களைக் கேட்டு புன்னகை அரும்ப தேன்மலருக்கும் மற்ற இருவருக்கும் நன்றியுரைத்து “ஹாஸ்பிட்டல்லாம் வேணாம்… நா சொல்ற இடத்துக்கு போங்க…” என்று நியூயார்க்கின் வெளிப்புறத்திலிருந்த ஒரு இடத்தைக் கூற, மூவரும் அவரை அழைத்துக் கொண்டு அவர் சொன்ன இடத்திற்கு விரைந்தனர்.

 

       அது ஒரு மருத்துவரின் இல்லம். அம்மருத்துவர் பிக் பியை கண்டதுமே சிநேகமாகப் புன்னகைத்து விரைவாக உள்ளே அழைத்துச் சென்று அவருக்கான சிகிச்சையளிக்க ஆரம்பித்தார். பின் மூவரும் தங்கள் இல்லம் திரும்பி விட, ஒரு நாள் அதேபோல் அவர்கள் வெளியில் சென்றிருக்க, தீடீரென்று நால்வர் முன் தோன்றி அவர்கள் மூவரையும் துப்பாக்கி முனையில் கை கால்கள் கட்டி கண்ணையும் கட்டி இதேபோல உலங்கூர்தியில் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மூவரின் கட்டுக்கள் அகற்றப்பட்ட நேரம் பிக் பி இவர்கள் முன் புன்னகையோடு அமர்ந்திருப்பதைக் கண்டு தேன்மலர் மகிழ்ச்சி மிகுதியில் “பிக் பி…” என்று அவரைக் கட்டிக் கொள்ள, அதுவரை அதிர்ச்சியில் உறைந்திருந்த ஸாமும் கின்ஸியும் கூட அவர் மீது விழுந்துக் கட்டிக் கொண்டனர். 

 

       அப்படி ஆரம்பித்ததுதான் பிக் பிக்கும் நண்பர்கள் மூவருக்குமிடையேயான உறவு. தேன்மலர் பிக் பி பற்றி கூறி முடிக்க, தேவாவும் அருளும் அதிர்ச்சியின் உச்சத்தில் பேச்சற்று, உணர்வற்று, வாயைப் பிளந்தபடி சிலையாய் சமைந்திருக்க, அவர்கள் சென்ற உலங்கூர்தி ஒரு இடத்தில் தரையிறங்கியது.

 

                  பின் அனைவரது கட்டுக்களும் தாம்சனால் அவிழ்க்கப்பட, தாங்கள் ஒரு உயரமானக் கட்டிடத்தின் மேல் நிற்பதுக் கண்டு தேவாவிற்கும் அருளிற்கும் தலையேச் சுற்றி விடும்போலிருக்க, ஸாம், கின்ஸி, தேன்மலர் மூவரும் புன்னகையோடு படிகள் வழியே இறங்கி அங்கிருந்த மின்தூக்கிக்குள் சென்று நிற்க, தேவாவும் அருளும் மெல்ல நிதானித்து அவர்களும் மின் தூக்கிக்குள் நுழைய தேன்மலர் பொத்தான்களை அழுத்த, அது அந்தக் கட்டிடத்தின் நாற்பத்தி ஒன்பதாவதுத் தளத்தில் சென்று நின்றது. 

 

       மின்தூக்கித் திறந்ததும் ஒரு பெரிய அறைய கண்ணாடிகளால் சூழப்பட்டிருக்க, அங்கிருந்தப் பொருட்கள் அனைத்துமே வெள்ளை நிறங்களாகவேயிருந்தன. அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பரமானப் பிரம்மாண்ட அறை. அந்த வெள்ளை நிற அறைக்கு எதிர் பதமாய் ஒரு நாற்பத்தைந்து வயதில் ஒரு ஆள் முழு கருப்பு நிற சூட்டில் நேர்த்தியாய் வாரப்படத் தலை, தோற்றத்தில் ஒரு கம்பீரமும் ஸ்டைலும் மிளிர கண்களில் கூலிங் க்ளாஸ் சகிதம் நின்றிருக்க, ஸாம், கின்ஸி, தேன்மலர் மூவருமே “பிக் பி…” என்ற கூவலோடு ஓடிச் சென்று கட்டிக் கொண்டனர். 

 

      தேவாவும் அருளும் பிக் பியையே வைத்த விழி இமைக்காமல் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருக்க, மூவரிடமும் நல விசாரிப்புகளை முடித்த பிக் பி, இருவரையும் கண்டு “ஹே ஹேண்ட்ஸம் யங் மென்…” என்று கையசைக்க, தேவாவும் அருளும் முதலில் விழித்து பின் “ஹாய் பிக் பி…” என்றனர். 

 

                   பிக் பி “நீ தேவா… நீ அருள்… ரைட்…” என்று கூற, 

 

      தேவாவும் அருளும் தேன்மலரை “நீதான் சொன்னியா?” என்பதுபோல் பார்க்க, 

 

     பிக் பி “ஹே ஏஞ்சல் சொல்லல…” என்று கூறி புன்னகைத்தார். 

 

       தேவாவிற்கும் அருளிற்கும் அப்போதுதான் புரிந்தது அவருக்கிருக்கும் செல்வாக்கிற்கு தங்களைப் பற்றி அவர் அறிந்திருப்பது ஆச்சர்யமில்லை என்று இயல்பாகி பிக் பியை பார்த்துப் புன்னகைத்து “ரைட்..” என்றனர். 

 

        பிக் பியும் புன்னகைத்து விட்டு தேன்மலரிடம் திரும்பி “ஏஞ்சல்… வாங்க என்கூட…” என்றழைத்துவிட்டு மின்தூக்கிக்குள் செல்ல மற்றவர்கள் அமைதியாக அவரைப் பின் தொடர்ந்தனர்.

 

       மின்தூக்கி இருபதாம் தளத்தில் நிற்க, பிக் பி அந்த தளத்தில் இருந்து ஒரு அறைக்குள் நுழைய, அது வீடுபோல் ஒரு தோற்றத்திலிருக்க, அதனுள் ஒரு கண்ணாடிக் கதவின் முன் நின்றவர் “ஏஞ்சல் அங்க பாரு….” என்று அறையினுள் சுட்டிக் காட்டினார். 

 

       தேன்மலரும் மற்றவர்களும் கண்ணாடிக் கதவின் வழியே அறைக்குள் பார்க்க, அங்கு ஒரு நபர் கண்கள் மூடிப் படுத்திருந்தார். அவரைக் கண்ட தேன்மலர் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்து பின் தெளிவடைந்த மறுகணம் அதிர்ச்சி தெரிய, ஸாம், கின்ஸி, தேவா மூவரும் யாரிவர் என்ற கேள்வியோடும் குழப்பத்தோடும் நிற்க, அருள் அவரை எங்கோ பார்த்தது போல் உள்ளதே என்று புருவ முடிச்சுகள் விழ நின்றிருந்தான். 

 

      தேன்மலர் அதிர்ச்சி விலகாமல் பிக் பியைக் கண்டு அர்த்தமாய் கண்களால் ஆமாவா என்று வினவ பிக் பி இமை மூடி திறந்து “ஆமா ஏஞ்சல்… இவன் தான் ஜே…” என்று கூறவும் யாரோ ஜே என்று நினைத்திருந்த தேன்மலருக்கு அங்குப் படுத்திருந்த நபரைக் கண்டு அதிர்ச்சி, கோபம், ஆதங்கம், இயலாமை என்ற கலவையான உணர்வுகள் அவளை ஆட்கொள்ள சிறிது நேரம் சிலையென நின்றிருந்தாள்.

 

அத்தியாயம்- 22

 

 

        பிக் பி ஜே என்று குறிப்பிட்ட நபரைக் கண்டு தேன்மலர் அதிர்ந்து நின்றதைக் கண்ட தேவா மென்மையாக “மலர்…” என்றழைத்து அவளது தோள் தொட, தேன்மலர் கண்ணீர் திரையிட விழிகள் சிவக்க அவனைத் திரும்பிப் பார்த்தாள். 

 

       தேவா “இவரு உனக்கு தெரிஞ்சவரா…” என்று கேட்க, தேன்மலர் ஆமென்று தலையசைக்க, தேவா அவளே சொல்லட்டுமென்று அமைதியாக நின்றான். 

 

      யோசனையோடு நின்றிருந்த அருளும் தேன்மலரிடம் கண்களால் வினவ, அவளும் இமை மூடித் திறக்க, இருவரதுக் கண்களும் சிவந்து அனலெனத் தகித்து சில கணங்களில் பல விடயங்களைப் பரிமாறிக் கொண்டன. அதை அங்குள்ள அனைவருமேக் கவனித்தாலும் பிக் பியின் கண்கள் மட்டும் கூர்மையாக உள்வாங்கி இதழ்கள் மெல்லிய முறுவலை ஏந்தி நின்றது. 

 

       ஸாம் தன் கைப்பேசியில் எதையோப் பார்த்துவிட்டு “இவரு ஹென்ரி ஜோன்ஸ் தானே… இவரும் அங்கிளும் ப்ரண்ட்ஸ் தானே ஸ்வீட்டி பை….” என்று கேட்க, 

 

     கின்ஸி “வாட்… அங்கிளோட ப்ரண்டா…” என்று அதிர, தேன்மலர் மௌனமாகத் தலையசைக்க, தேவா விழிகளில் அனல் தெறிக்க நின்றிருந்தான். ( ஹென்ரி ஜோன்ஸ் சிதம்பரத்தோடு இந்தியா வந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர். சிதம்பரம் மருத்துவமனையில் இருந்தபோது தேன்மலரை சந்தித்து அவளுக்கு ஆறுதல் கூறி சிதம்பரத்தின் அருமை பெருமைகளைப் பேசினாரே அதே ஹென்ரி ஜோன்ஸ் தான்). 

 

      தேன்மலர் பிக் பியிடம் “ஏன் பிக் பி இவரு தான் ஜேன்னு முன்னாடியே சொல்லல…” என்று வினவினாள். 

 

            பிக் பி புன்னகை மாறாமல் “சொன்னா என்ன பண்ணிருப்ப…. இப்ப மாறி அதிர்ச்சியாகி கோபப்பட்ருப்ப…. இவன் எதிரியா இருந்தா உன்ட்ட சொல்லிற்பேன்… இவன் கூடயிருந்தே ரத்தம் உறுஞ்சுற துரோகி… எதிரிய விட ஆபத்தானவன்… அதனால தான் அவன தூக்கிரட்டுமான்னு கேட்டேன்… நீ தான் வேணானு சொன்ன… அப்றம் நீ இன்னொன்னும் பாக்கணும்….” என்று அங்கிருந்த இன்டர்காமை அழுத்திய அடுத்த நிமிடம் பிக் பியின் ஆள் ஒருவன் அவரதுக் கையில் கோப்பு ஒன்றைக் கொடுத்துச் சென்றான். 

 

       பிக் பி அதை தேன்மலரிடம் நீட்ட, தேன்மலர் யோசனையும் கேள்வியுமாய் அதை வாங்கிப் பிரிக்க, அருளும் தேவாவும் அது என்னவென்று பார்க்க அவளின் இருபக்கமும் வந்து நின்றனர். தேன்மலர் அந்தக் கோப்பைத் திறந்துப் பார்க்க உள்ளே சில ஆவணங்கள் முக்கால்வாசி எரிந்தும் எரியாத நிலையில் இருக்க, அதைத் திருப்பி பார்த்த தேன்மலர் ஒரு தாளின் கீழே தனது தந்தையின் பெயர் இருப்பதைக் கண்டு, அந்த ஆவணங்களில் நிதானமாக அதேச் சமயம் கூர்மையாக எரியாமல் இருந்த பாகங்களைப் படித்துப் பார்த்தாள். அதைப் படித்துப் பார்த்த தேன்மலர், தேவா, அருள் மூவரின் முகங்களும் குழப்பம், அதிர்ச்சி, கேள்வி, கோபம் என்ற பல உணர்வுகளைச் சிந்த, ஸாமும் கின்ஸியும் வேகமாக அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியடைய, பிக் பி அவர்களைக் கண்டு முறுவலித்தார்.

 

               அருள் “ஹனிமலர்… இது அப்பா ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸ் பண்ற இல்லீகல் ஆக்ட்டிவிட்டீஸ்கான எவிடென்ஸ் தானே… ஆனா அது எப்டி ஜே கைல அதுவும் இவ்ளோ நாள் கழிச்சு… குழப்பமாயிருக்கே….” என்று கேட்டான். 

 

        தேன்மலர் “தெரில அருளு… நானும் அத தான் யோசிக்றேன்…. ஜே கைல தான் எவிடென்ஸ் இருக்கே… அப்றம் ஏன் இன்னும் என்னை ஆர்யனும் ரகுவும் தேடனும்….” என்று கேள்வி முடிச்சுகள் விழ நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள். 

 

       கின்ஸி “என் டிடெக்டிவ் மூள என்ன சொல்லுதுனா… இந்த எவிடென்ஸ் ஜேக்கு இப்பதான் கெடச்சுருக்கனும்… கெடச்சவொடனே அத டிஸ்போஸ் பண்ண நினச்சு எரிக்கப் போன டைம்ல பிக் பி அவர கடத்திருக்கணும்…” என்று கூற, 

 

     பிக் பி “யூ ஆர் ரைட் பேபி….” என்றார். 

 

      தேன்மலர் “ஆனா இவருக்கு அப்பாவ இப்டி பண்ற அளவுக்கு அப்டி என்ன கோவம்….” என்று ஆற்றாமையில் கத்த, 

 

      தேவா “சிம்பிள் மலர்…. மாமா அவரவிட பெரிய பொஸிஷனுக்கு போனதுப் புடிக்காம… பதவி மோகத்துலயும் மாமா மேல உள்ள பொறாமைலையும் இப்டி பண்ணிருக்கலாம்….” என்றான். 

 

      தேன்மலர் கண்கள் சிவக்க, உதடுத் துடிக்க அவனைப் பார்த்துவிட்டு, “பிக் பி… என்னதான் நடக்குது இங்க… கோபத்துல என்னால எதயும் யோசிக்க முடில… நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க… சொல்லுங்க….” என்றாள். 

 

      பிக் பி அவளை ஆறுதலாக அணைத்துக் கொள்ள, தேன்மலர் அவரது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். பிக் பி ஆதுரமாய் அவளது தலையை வருடியபடி “ஏஞ்சல் இப்போ நீ கோவத்துக்கு இடம் குடுக்காத… உன் எதிரி சாதாரணமானவன் இல்ல…. கூடவே துரோகியும் கைக்கோத்துருக்கான்… இப்ப தான் நீ இன்னும் தைரியமாவும் தெளிவாவும் இருக்கணும்….” என்றார். பின் அவர் எப்படி ஜே வை கடத்தினார் என்று கூற ஆரம்பித்தார். 

 

                 சிதம்பரம், தான் ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸிற்கு எதிராகத் திரட்டிய ஆவணங்களையெல்லாம் தன்னை ஆர்யனும் ரகுவும் எது வேண்டுமானுலும் செய்யக் கூடுமென்று முன்பே அறிந்து அதைப் பத்திரமாக டெல்லி அலுவலகத்திலிருந்த ஒரு நம்பிக்கையான நபரிடம் கொடுத்து வைத்திருந்தார். சிதம்பரம் திடீரென்று பக்கவாதத்தில் முடங்கியதும் அந்நபருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அதை நேரடியாக சிதம்பரத்திடமும் கொடுக்க முடியாமல், அவருடன் வந்த குழுவிலுள்ளவர்களிடமும் கொடுக்க முடியாமல் தடுமாறினார். அதன்பின் தேன்மலர் சிதம்பரத்தை சென்னை அழைத்து வந்து பின் அவரை யாருக்கும் தெரியாமல் அமெரிக்கா அனுப்பி வைத்துவிடவும் அந்நபருக்கு சிதம்பரத்தையோ தேன்மலரையோ எப்படி தொடர்புக் கொள்வதென்று தெரியவில்லை. 

 

       சிறிது நாட்கள் பொறுமை காத்த அந்நபர் டி யிடம் பேசிவிட்டு அந்த ஆவணங்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். இந்தியாவிலிருந்து ஏதேனும் கொரியரோ பார்சலோ வந்தால் அதை முதலில் தம்மிடம் தெரியப்படுத்த வேண்டுமென்று செக்யூரிட்டிகளிடம் ஏற்கனவே கூறி வைத்திருந்த ஜே வின் கைகளை அந்த ஆவணங்கள் சென்றடைந்தது. ஜே வை கண்காணிப்பு வளைத்திற்குள் வைத்திருந்த பிக் பிக்கு ஜே, ஆர்யன் மற்றும் ரகுவிடம் அதுபற்றி பேசிக் கொண்டிருக்கோம்போது தெரிய வர, உடனே பிக் பி தன் ஆட்களை அனுப்பாமல் அவரே ஜேவின் இடத்திற்கு விரைய, அதற்குள் ஜே அந்த ஆவணங்களைத் தீயிலிடவும் தயாராய்த் தான் கொண்டு வந்திருந்த மயக்க மருந்து ஊசியை ஜேவின் கழுத்தில் பின் புறமாகச் சென்று செலுத்தி விட்டு அந்த ஆவணங்களை உடனே தீயிலிருந்து எடுத்து அணைக்க, அதற்குள் அவை முக்கால்வாசி எரிந்துவிட்டிருந்தது. தன் ஆட்களை வரவழைத்த பிக் பி, அந்த ஆவணங்களையும் மயங்கிக் கிடந்த ஜேவையும் தன்னிருப்பிடம் கொண்டுச் செல்லக் கூறிவிட்டு, பின்பு தான் தேன்மலருக்கு அழைத்து உடனே அங்குப் புறப்பட்டு வரச்சொன்னது. 

 

             இதைச் சொல்லி முடித்த பிக் பி “இப்ப சொல்லு ஏஞ்சல்… நா என்ன பண்ணட்டும்… உன் பிரச்சனய என்னால ஒரு நிமிஷத்துல முடிக்க முடியும்…. ஆனா நீ என்கிட்ட உன் பிரச்சனய முன்னாடியே சொல்லாம பாதி சமாளிச்சு ஜே யாருனு கண்டுபுடிச்சு அவனை கண்காணிச்சா போதும்னு சொன்னப்பவே புரிஞ்சுது இத நீயே சமாளிக்கனுனு நினக்கிறனு…. ஆனா உனக்காக பிக் பி இருக்கேன்ற நினப்பு எப்பவும் இருந்தாலே போதும்…” என்று கூறி புன்னகைத்தார். 

 

       தேன்மலர் விழிகளில் நீர் திரையிட “தேங்க்ஸ் பிக் பி… நா இப்போ உள்ள போய் அவன பாக்கலாமா…” என்று கேட்க, பிக் பி புன்னகைத்து ரிமோட் மூலம் ஜே இருந்த அறைக் கதவைத் திறந்தார். 

 

      இவர்கள் இருவரையும் மற்றவர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, தேன்மலர் ஜே வை காண வேண்டுமென்று கூறவும் தேவா “மலர் நானும் உன்கூட வரேன்…” என்று கூறவும், திரும்பி அவனைக் கண்ட தேன்மலர் சிறு தலையசைப்போடு முன்னேச் செல்ல, தேவா அவளைப் பின் தொடர்ந்தான். 

 

      ஸாமும் கின்ஸியும் ஒருவரையொருவர் கேள்வியாய்ப் பார்த்துக் கொள்ள, அருள் இதழ்களில் சிறு வளைவு இருப்பதைக் கண்டு இருவரும் அருளை நெருங்கி விசாரிக்க, அருள் தேவாவை பற்றிக் கூற, அவர்களும் மென்னகையோடு நின்றிருந்தனர். 

 

                 அறைக்குள் சென்ற தேன்மலருக்கு ஜே வை பார்க்கப் பார்க்க அவன் அன்று மருத்துவமனையில் சிதம்பரத்தைப் பற்றி பெருமையாகப் பேசியதும் தனக்கு ஆறுதல் கூறியதும் நினைவு வர, இன்று அதற்கு நேரெதிராய் தன் தந்தைக்குப் பெரும் துரோகம் இழைத்தவனாய் இருப்பதுக் கண்டு சினத்தில் உடல் விரைத்து முகம் இறுகிப் போனாள். 

 

      தேன்மலரை கவனித்த தேவா, தன்னுள்ளும் கோபம் எழுந்தாலும் அதை உள்ளடக்கி, தேன்மலரின் கைப் பற்றிக் கொள்ள, அவள் நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க, தேவா கண்களால் அமைதியாகும்படிக் கூறவும் “போலாம் தேவா….” என்றாள். 

 

      பின் தேவா அவளை அழைத்துக் கொண்டு வெளியே வர, பிக் பியின் கண்கள் ஒரு நொடி தேவாவை ஆழமாக ஊடுருவி பின் தேன்மலரிடம் நிலைத்தது. தேன்மலர் தன்னை சமன்படுத்த முயன்றுக் கொண்டிருந்தாள். 

 

       அவளின் நிலைக் கண்ட அருள் “ஹனிமலர்… எனக்கும் கோவம் வருது தான்… ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப்…” என்று கூற, 

 

      தேன்மலர் “நானும் அததான் அருளு ட்ரை பண்றேன்… பட் முடில…” என்றாள். 

 

      பின் “அருளு…. நீயே இனி என்ன பண்ணாலாம் என்னனு பாத்துக்கோ…. நா கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்… பிக் பி… நா கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்….” என்றாள். 

 

      பிக் பி இன்டர்காமை அழுத்த, ஒரு ஆள் வர, “ஏஞ்சல…. என் ரூம்க்கு கூட்டிட்டு போ…” என்று கட்டளையிட, அவன் “மேம் ப்ளீஸ்….” என்று அவளை அழைக்க, தேவா அவளைப் பார்க்க, அவளும் அவன் விழிகளையே பார்த்து விட்டு பின் பிக் பியின் ஆளோடுச் சென்றாள். 

 

            பிக் பி “சரி சொல்லு அருள்… இப்போ நா என்ன பண்ணட்டும்….” என்று கேட்க, 

 

      அருள் யோசனையோடு நிற்க, தேவா “மாமா… எனக்கு ஒரு யோசன தோனுது சொல்லட்டுமா…” என்றான். 

 

       அருள் “சொல்லு மாப்ள…” என்கவும் அருள், பிக் பி, ஸாம், கின்ஸி என்று அனைவரையும் பார்த்த தேவா பேச ஆரம்பித்தான். 

 

       “இவன எப்டி அவனுக்கு தெரியாம இங்க கொண்டு வந்தீங்களோ… அதே மாறி அவன கொண்டு போய் விட்ருங்க பிக் பி…” என்கவும் பிக் பியை தவிர மற்ற அனைவரும் அவனை அதிர்ச்சியும் கேள்வியுமாய்ப் பார்த்தனர். 

 

       தேவா “ஆமா… ஏன்னா மலருக்கும் இவர எதுவும் செய்ய மனசு வராது… அதனால இவர இப்போதிக்கு கொண்டு போய் விடுங்க… ஆனா அவன கண்காணிச்சுட்டே இருங்க… கொஞ்ச நாள் ஆர்யனும் ரகுவும் கூட ஆதாரம்லா அழிஞ்சுபோன சந்தோஷத்துல இருக்கட்டும்….” என்றான். 

 

      அருள் இதழ்கள் புன்னகையில் விரிய, பிக் பி அவனது தோள் தட்டி “ஐ லைக் யு யங்மேன்… உன்னை என்கூட வச்சுக்கனுனு தான் தோனுது… ஆனா ஏஞ்சலோட ஹேப்பினஸ் எனக்கு ரொம்ப முக்கியம்….” என்றார். 

 

        தேவா வியந்து பிறகு மெல்லிதாகப் புன்னகைக்க, பிக் பி “எனக்கு தெரியாம ஏஞ்சல் வாழ்க்கையில எதுவும் நடக்காது… என் உயிர காப்பாத்துன ப்யூர் ஹார்ட்…. அவளுக்கு ஒன்னுன்னா நா சும்மா இருக்க மாட்டேன்… ஆனா ஏஞ்சலுக்கு நானா ஹெல்ப் பண்றது புடிக்காது அதான் ஒதுங்கி நிக்றேன்…. மறுபடியும் சொல்றேன் ஏஞ்சல் ஹேப்பினஸ் எனக்கு ரொம்ப முக்கியம்….” என்று கூற, தேவா இதழ்கள் விரிய “எனக்கும் என் பொண்டாட்டி சந்தோஷம் ரொம்ப முக்கியம் பிக் பி….” என்கவும் பிக் பி அவனது தோள் தட்டி “ஸ்மார்ட்…” என்று சிரித்தார். இருவரது உரையாடல்களையும் ஸாம், கின்ஸி, அருள் மூவரும் புன்னகையோடுப் பார்த்திருந்தனர். 

 

               பின் தேவா “பிக் பி… இவன் எவ்ளோ நாளா மயக்கமா இருக்கான்… இடைல முழிச்சு பாத்தானா…” என்று கேட்க, 

 

     பிக் பி “இல்ல தேவா…. இவனுக்கு மயக்கம் தெளியவே விடல…. ஒரு டோஸேஜ் மருந்து ஒன்றை நாள் தாக்குப் புடிக்கும்…. இதோட ரெண்டு டோஸேஜ் குடுத்தாச்சு….” என்றார். 

 

       தேவா “அப்போ மூனு நாளா அவன் இங்கயிருக்கான்… ஆமா பிக் பி… இவன எப்டி அவனுக்கு டவுட் வராம அவன் இடத்துல கொண்டு போய் விடப் போறீங்க….” என்று வினவினான். 

 

      பிக் பி இதழ் வளைத்து “நீங்க எல்லாரும் கூட ஏஞ்சலோட என் ரூம வந்து பாருங்களேன்…” என்றுவிட்டு பிக் பி முன்னே செல்ல, தேவா அருளை பார்க்க, அருள் “வா மாப்ள…” என்று மென்னகையோடு பிக் பியை தொடர்ந்தான். 

 

     ஸாமும் கின்ஸியும் சிரித்து “அட வாங்க தேவா…. பிக் பி பாத்துப்பாரு…” என்றார்கள். 

 

      தேவா புன்னகைக்க, ஸாம் “ஆமா ப்ரோ…. ஸ்வீட்டி பைய எப்டி மீட் பண்ணீங்க…” என்று கேட்க, தேவா தான் தேன்மலரை சந்தித்தைக் கூறினான். 

 

       ஸாம் “ஓஓஓ… ஓகே ப்ரோ… ஆமா ப்ரோ ஸ்வீட்டி பைய பாக்கும் போதெல்லாம் உங்க கண்ல ஸ்பார்க் தெரியுதே… என்ன விஷயம்…” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான். 

 

       தேவா “ப்ரோ நீங்க ரிசேர்ச்சராவே இருங்க… ஏன் ஆக்டர் ஆக ட்ரை பண்றீங்க…. நீங்களும் கின்ஸியும் அருள்கிட்ட பேசுனத நா பாத்துட்டேன்….” என்று கூறவும் 

 

      கின்ஸி சிரித்து “தேவையாடா இது உனக்கு…. ப்ரோ ஆனாலும் நீங்க இவ்ளோ ஷார்ப்பா இருக்க கூடாது…” என்றாள். 

 

      தேவா மென்னகைப் புரிய, ஸாம் “எப்டி ப்ரோ… ஸ்வீட்டி பைய தானே பாத்துட்ருந்தீங்க… எங்கள எப்டி கவனிச்சீங்க…” என்று கேட்க, 

 

     தேவா புன்னகைத்து “நாம பிக் பி ரூமுக்கு வந்துட்டோம்னு நினக்கிறேன்… எனக்கு மலர பாக்கனும்… பை…” என்றுவிட்டு அருளோடு சேர்த்துக் கொள்ள, ஸாம் தோளைக் குலுக்கி விட்டு கின்ஸியின் கைப் பற்றிக் கொண்டு அந்த பெரிய அறையினுள் நுழைந்தான். 

 

          அறை முழுவதும் எங்கும் வெண்மைமயம். மெலிதான இசை ஒலித்துக் கொண்டிருக்க, அவ்வறையே குட்டி வீடோ என்று எண்ணும் அளவிற்கு அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது. அவ்வறையின் உள்ளே அலுவலக அறை, நூலகம், இன்டக்ஷன் அடுப்பு, ஓவன், குளிர்சாதனப் பெட்டி மற்றும் இதர அடுக்களை சாமான்களை உள்ளடக்கிய சிறிய அடுக்களை, கண்ணாடிச் சுவர்களால் சூழப்பட்டக் குளியலறை, ஒருபுறம் பியானோ, கிடார் போன்ற இசைக் கருவிகள் இருக்க, ஒரு புறம் பாதி வரைந்தும் வரையாத ஓவியமும் அதனருகில் அனைத்து ஓவிய உபகரணங்களும் சுவற்றில் நிறைய ஓவியங்களும் மாட்டப் பட்டு என்று மிக பிரம்மாண்டமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவுமிருந்தது. தேன்மலர் ஒரு ஓவியம் முன்பு தன்னை மறந்து விழிகள் விரிய நின்றிருந்தாள்.

 

       பிக் பி புன்னகையோடு அவள் பின் வந்து நிற்க, தேன்மலர் விழிகள் விரிய அந்த ஓவியத்தையும் அவரையும் மாறி மாறி பார்க்க, பிக் பி “என்ன ஏஞ்சல் பெயின்டிங் புடுச்சுருக்கா…” என்று கேட்க, தேன்மலர் “ரொம்ப….” என்று அவரைக் கட்டிக் கொண்டாள். 

 

      மற்றவர்களும் அந்த ஓவியத்தைக் கண்டு வியந்து விழி விரித்து நிற்க, பிக் பி அவர்களையும் புன்னகையோடுப் பார்த்திருந்தார். அருள் “பிக் பி… இதெல்லாம் நீங்க வரைஞ்சதா….” என்று கேட்க, 

 

      பிக் பி “அதுல உனக்கென்ன சந்தேகம்….” என்க, 

 

      அருள் “பின்ன வராதா… எல்லா பெயின்டிங்கும் எவ்ளோ தத்ரூபமா… அப்டியே நேர்ல பாக்ற மாறி இருக்கு…. பரவால்ல பிக் பி உங்களுக்குள்ளயும் ஒரு கலைஞன் இருக்கான்…” என்றான். 

 

     பிக் பி “உனக்கு ரொம்ப வாய் தான்….” என்று சிரிக்க, மற்றவர்களும் சிரித்தனர். 

 

            பின் தேன்மலர் அருளை பார்க்க, அருள் “என் மாப்ள பிக் பிட்ட எல்லாம் சொல்லிற்கான் ஹனிமலர்….” என்று தேவா பிக் பியிடம் தற்போதைக்கு ஜேவை ஒன்றும் செய்ய வேண்டாமென்று கூறியதைக் கூற, தேன்மலரின் விழிகள் தேவாவின் மேல் நிலைத்தது. 

 

      தேவாவும் அவளையேப் பார்க்க, இரு விழிகளின் சங்கமத்தைக் கலைக்க வேண்டாமென்று பிக் பி மற்றவர்களை அறையைச் சுற்றிக் காண்பிக்கிறேனென்று அழைத்துச் செல்ல, மற்றவர்களும் அர்த்தம் பொதிந்தப் புன்னகையோடு தேவாவையும் தேன்மலரையும் கடந்து பிக் பியோடு சென்றனர். தேவாவும் தேன்மலரும் நெடு நேரம் விழிகளால் ஒருவருள் ஒருவர் ஊடுருவிக் கொண்டிருக்க, தேவா மெல்ல தேன்மலரை தன் மூச்சுக் காற்று அவள் மீது படுமளவு நெருங்க, அவனது நெருக்கத்தால் தேன்மலர் சட்டென்று விழித் தாழ்த்தி படபடக்கும் இதயத்தோடுத் திரும்பிக் கொள்ள, தேவா மென்னகையோடு மேலும் அவளை நெருங்கி அவளது காதோரம் குனிந்து “மலர்…” என்று காதல் குழைத்து மென்மையாய் அழைத்தான்.

 

         அவனது அழைப்பில் நெகிழ்ந்து தன்னை மறந்த தேன்மலர் விழிகள் மூடி “ம்ம்…” என்க, தேவா மென்னகைப் புரிந்து கிறங்கும் குரலில் “அந்த பெயின்ட்டிங்ல ரொம்ப அழகாயிருக்க மலர் மா…. அப்டியே நேர்ல பாக்ற மாறியே…” என்றான். 

 

        தேன்மலர் விழி திறவாது “ம்ம்…” என்றாள். 

 

      தேவா “ஆனா எனக்கு அந்த பெயின்ட்டிங்க விட… அதோ அங்கயிருக்கே அதுதான் புடிச்சுருக்கு…” என்று கூறவும், தேன்மலர் கேள்வியாகத் திரும்பிப் பார்க்க, தேவா சற்று தள்ளி மாட்டப்பட்டிருந்த ஓவியத்தைக் காண்பித்தான். 

 

             தேன்மலர், ஸாம், கின்ஸி மூவரும் ஒருமுறை நயகரா அருவி சென்றிருந்தபோது, தேன்மலர், கின்ஸி, ஸாம் மூவரும் அருவியை ரசித்தவாறு நின்றிருந்தப் பக்கவாட்டுப் புகைப்படத்தை பிக் பி ஓவியமாக வடித்திருக்க, அதை தான் அனைவரும் வியந்துப் பார்த்தனர். 

 

       தேவா சுட்டிக் காட்டிய ஓவியமோ தேன்மலர் அவளது பட்டமளிப்பு விழாவில் புடவை அணிந்திருந்த போது கின்ஸி எடுத்தப் புகைப்படமாக இருக்க, அதைக் கண்ட தேன்மலர் தேவாவை பார்க்க, தேவா விழிகளில் காதல் தேக்கி “புடவைல ரொம்ப அழகாயிருக்க மலர் மா… பெயின்ட்டிங்ல புடவை தரிசனம் கெடச்சாச்சு… ம்ஹ்ம் நேர்ல எப்பயோ…” என்று பெருமூச்சு விட்டான். 

 

        அவனின் மூச்சுக்காற்று அவளின் மீது மோதவும் திணறிப் போன தேன்மலர் வெட்கம் கொண்டு “சீக்ரம் பாக்லாம்….” என்று கூற, தேவா விழிகளில் ஆர்வமும் காதலும் போட்டி போட, “ம்ம்…” என்று கேட்க, தேன்மலர் “ம்ம்…” என்று நாணப் புன்னகை உதிர்த்தாள். 

 

      தேவா “அச்சோ… மலர் மா…” என்று அவளை அணைக்கப் போக, தேன்மலர் அவனது நெஞ்சில் கை வைத்துத் தடுத்து பிக் பியோடு மற்றவர்களும் தங்களை நோக்கி வருவதைச் சுட்டிக் காட்ட, தேவாவிற்கு சப்பென்று ஆனாலும் புன்னகையோடு அவளதுக் கையை இறுக்கப் பற்றி நின்று கொண்டான். 

 

              மற்றவர்கள் அருகில் வர, பிக் பி தேன்மலரை பார்த்து அர்த்தமாய்ப் புன்னகைக்க, தேன்மலர் நாணத்தில் சிவந்து மென்னகைப் புரிய, பிக் பி வாய் விட்டு சிரித்து அவளது தலையில் கை வைத்து “என் ஏஞ்சல் எப்பவும் நல்லார்க்கணும்… என் ஏஞ்சலுக்கு ப்லஷ் பண்ண தெரியும்னு இப்ப தான் தேவா தெரிஞ்சுகிட்டேன்….” என்று கூறி சிரித்தார். 

 

         அதைக் கேட்ட தேவாவும் சிரித்துக் கொண்டே தேன்மலரை பார்க்க, அவனது விழி வீச்சை எதிர்கொள்ள முடியாத தேன்மலர் “பிக் பி….” என்று செல்லமாக சினுங்கி அவரை முறைக்க, மற்றவர்களும் அவளைக் கண்டு சிரிக்க, தேன்மலரும் சிரித்து விட்டாள். 

 

       பின் தேவா “பிக் பி… எனக்கு அந்த பெயின்ட்டிங்க தர்றீங்களா…” என்று தேன்மலர் புடவையிலிருக்கும் ஓவியத்தைக் கேட்க, பிக் பி புன்னகையோடு அதை எடுத்து அவனிடம் கொடுக்க, தேவா ஓவியமாய் தன்னருகில் தன்னைப் புன்னகையோடுப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவளை ஒரு பார்வையும் ஓவியத்திலிருக்கும் தன்னவளையும் ஒரு பார்வையும் பார்த்தபடி வாங்க, தேன்மலர் முகத்தில் நாணம் கலந்தப் பெருமிதம் மின்னியது. 

 

       ஸாமும் நண்பர்கள் மூவரும் சேர்ந்திருக்கும் ஓவியத்தை பிக் பியிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டான். பின் அனைவரும் பிக் பியோடு அமர்ந்து சிற்றுண்டி உண்டுவிட்டு அவரிடம் விடைபெற்று கிளம்ப, பிக் பி அனைவரையும் அணைத்து விடுவித்து தேவாவிடம் “ஏஞ்சல் ஹேப்பினஸ் முக்கியம் தேவா…” என்க, 

 

     தேவாவும் தேன்மலரின் கைப் பற்றி “என் பொண்டாட்டி சந்தோஷம் எனக்கும் முக்கியம் தான் பிக் பி…” என்க, பிக் பி புன்னகைக்க, ஸாமும் கின்ஸியும் கைக்கோர்த்து தேவாவையும் தேன்மலரையும் மெய்மறந்துப் பார்த்திருக்க, அருள் முகத்தில் நிறைவானப் புன்னகை. 

 

      பின் பிக் பியிடம் விடைபெற்று அனைவரும் மொட்டை மாடி செல்ல, தாம்சன் வந்தது போலவே அனைவரது கண்களையும் கட்டி உலங்கூர்தியிலேற்றி அவர்கள் ஏறிய இடத்திலேயே இறக்கி விட, அனைவரும் தாமசனிடம் விடைபெற்று தாங்கள் வந்தக் காரிலேறி நியூயார்க்கை நோக்கித் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். 

 

              மூன்றரை மணி நேரத்தில் நியூயார்க் வந்தடைந்தனர். இடையில் ஒரு அரைமணி நேரம் செலவழித்து ட்ரைவ் இன் ஹோட்டலில் தங்களுக்கு வேண்டிய உணவுகளை வாங்கி வரும் வழியிலேயே உண்டனர். வழியெல்லாம் தேன்மலர், தேவா, அருள் மூவரும் ஜெட்லாக்கினால் தூங்கிக் கொண்டு வர, ஸாமும் கின்ஸியும் மாற்றி மாற்றி காரை ஓட்டிக் கொண்டு வந்தனர். 

 

      நியூயார்க் வந்தவுடன் ஸாம் தேன்மலரை பார்க்க, தேன்மலர் “மொதல்ல அப்பாவ பாக்கலாம்…” என்று கூறவும், ஸாம் மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினான். 

 

      மருத்துவமனை வந்தறிங்கியதும் தேன்மலருக்கு ஏனோ படபடவென்றிக்க, கண்கள் கலங்கி, கை காலலெல்லாம் நடுங்க, அருள் அவளது கையை ஆறுதலாகப் பற்றவும், தேன்மலர் தன்னை நிதானித்துக் கொண்டாள். 

 

      தேவா, தன் மாமனாரை முதன் முதாலாகப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் இந்நிலையிலா அவரைப் பார்க்க வேண்டுமென்று வருந்தினான். ஸாமும் கின்ஸியும் தேன்மலருக்கு ஆறுதல் கூறி சிதம்பரத்தின் நிலையை எடுத்துக் கூறி அவளை சிதம்பரத்திடம் அழைத்துச் செல்ல, அருளும் தேவாவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். 

 

      சிதம்பரம் இருந்த அறையினுள் தேன்மலர் நுழையவுமே சிதம்பரத்தின் கண்கள் தன் மகளை நெடு நாட்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியில் கலங்கி மகிழ்ச்சியில் மின்னியது. 

 

                   சிதம்பரத்திற்கு ரத்தக் கசிவு பக்கவாதம் ஆகையினாலே அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. போதை மருந்துக் கொடுத்ததினால் சிதம்பரத்திற்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையிலிருக்கும் ஒரு ரத்த நாளம் வெடித்து, மூளைக்கும் மூளையை மூடியிருக்கும் சவ்விற்குமிடையே ரத்தக் கசிவு ஏற்படுத்தியது. அந்த ரத்தக்கசிவினால் அவரின் பெருமூளை(செரிப்ரம்) பாதிப்படைய, அதனாலேயே அவரது இடப் பக்க கை, கால்கள் இழுத்து பேச்சிலும் தடுமாற்றம் வந்தது. தற்போது அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்கசிவு ஏற்படாமல் கட்டுப்படுத்தியிருந்தாலும் முன்பு பெருமூளையில் ஏற்பட்ட பாதிப்பினாலும் அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாட்களே ஆனதினாலும் சிதம்பரத்தின் கை, கால் இழுப்பும் பேச்சு குழறலும் பிஸியோதெரப்பி மற்றும் ஸ்பீச் தெரபி மூலம் மெல்ல மெல்ல தான் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறியிருந்தார். 

 

       அதனால் சிதம்பரம் தன் மகளைப் பார்த்த மகிழ்ச்சியை கண்களில் வெளிப்படுத்த, தேன்மலர் தலையில் கட்டுடன், இடப் பக்கக் கை, கால் முடங்கிக் கிடக்கும் தன் தந்தையைக் காண சகியாமல் கண்ணீர் உகுக்க, அருளும் தேவாவும் அவளது தோள் தொட, தேன்மலர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன் தந்தை அருகேச் சென்று அமர்ந்தாள். 

 

            சிதம்பரம் தன் மகளை விழிகளில் நிறைத்துக் கொண்டிருக்க, தேன்மலர் “சிதம்பரம்…. இது கொஞ்சம் கூட நல்லாயில்ல…. டாக்டர் சொல்ற மாறி கேட்டு சாப்ட்டு… பிஸியோ, ஸ்பீச் தெரபிலாம் கரக்ட்டா பண்ணி சீக்ரம் சரியாகி வா… உன்கூட சண்டை போட நிறைய விஷயம் இருக்கு…” என்று கூற, சிதம்பரம் புன்னகைத்தார். அருள் “அப்பா… இப்ப எப்டியிருக்கீங்க…” என்று கேட்க, சிதம்பரம் இமை மூடித் திறந்து ஸாமையும் கின்ஸியையும் பார்க்க, 

 

       அருள் புன்னகையோடு “தெரியும் ப்பா… அவங்க ரெண்டு பேரும் உங்கள பாத்துக்கும்போது நல்லாயிருக்கீங்களானு கேட்டது தப்பு தான்… மன்னிச்சுருங்க….” என்று கூற, சிதம்பரம் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. 

 

      ஸாமும் கின்ஸியும் கூட புன்னகைத்து விட்டு மருத்துவரைப் பார்த்துவிட்டு வருகிறோம் என்று வெளியேச் செல்ல, சிதம்பரத்தின் பார்வை தேவாவின் மேல் படர்ந்தது. 

 

      தேவா மென்னகையோடு “நா தேவா மாமா… அருளோட ப்ரண்ட்….” என்று கூற, 

 

      சிதம்பரம் அருளை கேள்வியாகப் பார்க்கவும் அருள் “ஆமா ப்பா… என் மாப்ள இவன்…” என்று தேவாவின் தோள் மேல் கைப்போட்டு இறுக்கிக் கொண்டான். 

 

      தேன்மலர் தேவாவின் மாமா என்ற விளிப்பில் பயமும் சங்கடமுமாய் சிதம்பரத்தைப் பார்த்திருக்க, தேவா சிதம்பரம் அருகேச் சென்று அவர் கைப்பிடித்து தன்னைப் பற்றி அனைத்தும் கூறி, “மாமா… எனக்கும் மலருக்கும் எப்டி அறிமுகம்னு இப்ப சொல்ல முடியாது… எனக்கு மலர புடிச்சுருக்கு… எனக்கு மனைவினா அது மலர் மட்டும் தான்…. நா மலர் கிட்டயும் என் விருப்பத்த சொல்லிட்டேன்… ஆனா மலர் இன்னும் முழுசா பதில் சொல்லல…. அவளுக்கு உங்க விருப்பமும் அம்மாச்சி விருப்பமும் ரொம்ப முக்கியம்…. நானும் உங்களயோ மலரையோ கட்டாயப் படுத்த மாட்டேன்…. நீங்க நல்லா குணமாகி வாங்க…. உங்களுக்கு இதுல விருப்பமிருந்தா எங்களுக்கு கல்யாணத்த நடத்தி வைங்க…. இல்லனா மலரோட நினைவுகளோட நா வாழ்ந்துப்பேன்…” என்று கடைசியாகத் தன் குரலில் சிறு வலிக் காட்டி முடித்தான். 

 

                சிதம்பரம் தேன்மலரைப் பார்க்க, தேவாவின் குரலில் இருந்த வலி அவளைப் பாதித்ததன் எதிரொலியாக அவளது விழிகள் நீர் திரையிட, தன்னவனைத் தீண்டி விட்டு தன் தந்தையை ஏக்கமும் இறைஞ்சலுமாய்ப் பார்த்தது. தேன்மலரின் கண்ணீர் மூலமே அவளது விருப்பத்தை அறிந்துக் கொண்ட சிதம்பரம் இத்தனை வருடங்கள் தான் சொல்லாமலேயேத் தன் விருப்பத்தை நிறைவேற்றிய மகளுக்கு தன் விருப்பத்தையும் சம்மதத்தையும் தேவாவின் கையில் அவளதுக் கையை சேர்த்து வெளிப்படுத்தினார். 

 

        தேவாவிற்கும் தேன்மலருக்கும் அதில் சொல்லொனா மகிழ்ச்சி, மகிழ்ச்சி மேலீட்டால் இருவரும் கண்ணீரோடுப் புன்னகைப் புரிந்து இணைந்தவாறு அவரது பாதம் தொட்டு ஆசி வாங்கினர். சிதம்பரம் அருளிடம் கண்களால் வினவ, அருள் இமை மூடித் திறக்கவும் சிதம்பரத்தின் முகத்தில் நிறைவான மகிழ்ச்சித் தாண்டவமாட, தன் மகளையும் மருமகனையும் ஜோடியாக நிற்க வைத்து சிறிது நேரம் கண்குளிர ரசித்தார். 

 

      தேவா அருகில் நின்ற தேன்மலருக்கு தன் தந்தையின் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறமும், முதன் முதலாக தேவாவை மனம் முழுக்கக் காதலாக நிறைத்துத் தன்னவன் அருகில் தன்னவன் கரம் கோர்த்து நிற்பதினால் விழைந்த நாணம் ஒருபுறமும் அவளைப் படுத்தி எடுக்க, அதை மறைக்கப் புன்னகையோடுத் தன் தந்தையின் முகந்தனைப் பார்த்திருந்தாள். 

 

       அந்நேரம் ஸாமும் கின்ஸியும் அங்கு வந்துவிட, நடப்பது ஒன்றும் புரியாமல் அவர்கள் அருளை பார்க்க, அருள் சிதம்பரம் சம்மதம் கூறிய விடயத்தைக் கூறவும் இருவரும் தேவா மற்றும் தேன்மலரின் இருபுறமும் சென்று நின்று கொண்டு அவர்களை இடித்துக் கிண்டல் செய்ய ஆரம்பிக்க, இருவரது முகமும் வெட்கத்தைப் பூசிக் கொள்ள, சிதம்பரத்தின் மனதில் அப்படி ஒரு நிறைவு. 

 

         பின் தேன்மலர் சிதம்பரம் அருகே வர, சிதம்பரம் “அப்பாயிய பாத்தியா….” என்று ஒரு கையை ஆட்டியும் வாயை அசைத்தும் வினவ, 

 

     தேன்மலர் “இல்ல ப்பா… மொதல்ல உன்னை பாத்துட்டு போலான்னு தான் வந்தோம்… அப்பாயிய பாக்க மொதல்ல போயிட்டா… அப்றம் அது நகரவே விடாது… அதுக்கும் நீ இப்டியிருக்றது தெரியாது நீ வேல விஷயமா வெளில போயிருக்க வர மூனு வாரம் ஆகும்னு சொல்லி வச்சுருக்கேன்….” என்றாள். 

 

    சிதம்பரம் சற்று ஆசுவாசமடைந்து “இப்போ சொல்லாத…” என்றார்.

 

      சைகையால்…. தேன்மலரும் “இல்ல ப்பா… சொல்ல மாட்டேன்…” என்று கூற, சிதம்பரம் முகம் வேதனையைத் தத்தெடுக்க, தேன்மலர் “அப்பா… நீ என்ன நினக்கிறனு தெரியுது…. உன்னால எனக்கு எந்த கஷ்டமுமில்ல…. நா உன் பொண்ணு ப்பா…. நீ சரியாகி வர்றதுக்குள்ள நீ எந்த விஷயத்த முடிக்கனுனு நினச்சியோ அந்த விஷயத்த நா முடிச்சுருப்பேன்…. உனக்கு என்மேல நம்பிக்க இருந்தா இனி அத நினச்சு கவலப் பட்றதோ யோசிக்றதோ வச்சுக்க கூடாது…” என்று உறுதியாகக் கூற, தன் மகளைக் கண்ட சிதம்பரத்தின் கண்களில் நெகிழ்ச்சியும் பெருமிதமும் வழிந்தோடியது. 

 

        தேன்மலர் புன்னகையுடன் “உனக்கு என்ன வேலனா…. நல்லா சாப்ட்டு ரெஸ்ட் எடுத்துட்டு… வேகமா நடந்து, பேசி என்னை சீக்ரம் பாக்க வர்றது தான்…” என்கவும் சிதம்பரமும் புன்னகைத்தார். 

 

              இவர்கள் இருவரையும் மற்றவர்கள் நெகிழ்ச்சியோடுப் பார்த்திருக்க, தேன்மலரின் அருகே நின்ற தேவாவிற்கு தன் பெற்றோரின் ஞாபகம் வந்து கண்கள் கலங்கியது. அதைக் கவனித்த தேன்மலர் தன்னவன் கையை இறுகப் பற்ற, தன்னவள் தீண்டலில் மெய் சிலிர்த்த தேவா, தன்னவளைக் கண்டுப் புன்னகைப் புரிந்தான். பின் அனைவரும் சிதம்பரத்திடமிருந்து விடைபெற்று கிளம்பி வேலாயி தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். 

 

      அப்போது தான் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று வெளியே வந்த ராஜேஷ், தேன்மலர், அருள், தேவா மூவரையும் கண்டு அதிரிச்சியான மகிழ்வு கொண்டு “ஹே… என்ன ஒருவாரம் கழிச்சு வரேன்னு சொல்லிட்டு இன்னிக்கே வந்து நிக்றீங்க….” என்று கேட்க, மூவரும் புன்னகைத்தார். 

 

       ராஜேஷ் “ஸாம் அதான் நீங்க என்னை ஹாஸ்பிட்டல் வர சொன்னீங்களா…” என்று கேட்க, 

 

     ஸாம் சிரிக்க, ராஜேஷ் “தேன்மலர்…. அப்போ அப்பாவ பாத்துட்டு தான் வர்றீங்களா….” என்று கேட்க, 

 

     தேன்மலர் “ஆமா ராஜேஷ்… நீங்க கிளம்புங்க…. நாங்க ரெண்டு நாள் இங்க தான் இருக்க போறோம்… பொறுமையா பேசிக்கலாம்….” என்றாள். 

 

     ராஜேஷ் சரியென்று தலையசைத்து “அருள், தேவா…. நைட் பாக்கலாம்.. உங்கிட்ட நிறைய பேசணும்…” என்றுவிட்டு அவன் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி வரைய, தேன்மலர் வீட்டின் அழைப்பு மணியை அடித்து விட்டுக் காத்திருந்தாள். 

 

               வெளியே வைத்திருந்த கேமராவின் உதவியால் தேன்மலரின் வருகையை அறிந்த துர்கா முகம் மலரக் கதவைத் திறந்தவள் “அக்கா… என்ற கூவலோடு தேன்மலரைக் கட்டிக் கொள்ள, தேன்மலரும் சிரிப்புடன் அவளைக் கட்டிக் கொண்டாள். 

 

      அருள் “அக்கா தான் கண்ணுக்கு தெரியுறாளா…” என்று கேட்க,

 

       துர்கா தேன்மலரிடமிருந்து பிரிந்து “அதெப்டி எங்க அண்ணன மறப்பேன்…. அண்ணனுக்கு என் கையால தான் இன்னிக்கு சாப்பாடு….” என்றாள். 

 

     அருள் அவளது தலை வருடி “நல்லார்க்கியா டா…” என்று வினவ, துர்கா புன்னகையோடு “எனக்கென்ன ண்ணா கொறச்சல்…. நா நல்லார்க்கேன்…” என்றாள். 

 

     பின் “மாமா… வாங்க வாங்க அக்காவ பத்தி உங்ககிட்ட நிறைய சொல்லணும்…” என்க, தேவா புன்னகைத்துக் கொண்டே தன்னவளை ஓரக்கண்ணால் பார்த்தான். 

 

      “ஸாம் அண்ணா…. கின்ஸி அக்கா…. வாங்க… நீங்க ரொம்ப நாளா கேட்டுருந்த சக்கர பொங்கல் சாப்ட்டு தான் இன்னிக்கு கிளம்புறீங்க….” என்று கூற, 

 

     ஸாமும் கின்ஸியும் முகம் மலர்ந்து “தேங்க்ஸ் துர்கா… அப்போ இன்னிக்கு செம சாப்பாடிருக்கு…” என்றவாறு வீட்டினுள் செல்ல, மற்றவர்களும் சென்றனர். 

 

     அனைவரும் வேலாயி இருந்த அறைக்குச் செல்ல, அனைவரையும் எதிர்பார்க்காத வேலாயி ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருக்க, தேன்மலர் “ஓய் அப்பாயி…. என்ன ப்ரீஸாயிட்ட….” என்று அவரது கன்னம் கிள்ளினாள். 

 

     வேலாயி அவளதுக் கைப் பிடித்திழுத்து அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு கண்கள் கலங்க, தேன்மலரும் அவரது அணைப்பில் அழுதாள். பின் ஒருவாறு இருவரும் அமைதியாகி விலக, தேன்மலர் “இங்க பாரு அப்பாயி…. இன்னொரு தடவ என் பேச்ச கேக்காம இப்டி அடிபட்டு படுத்துக்கிட்டனு வச்சுக்க…. நா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என்று கூறவும் வேலாயிக்கு அப்படி ஒரு சிரிப்பு.

 

                வேலாயி “சரி த்தா தேனு… இனிமே உன் பேச்ச மீறி எதுவும் செய்ய மாட்டேன்… ரொம்ப சிரம பட்டியா த்தா…” என்று குரலில் வேதனைத் தொனிக்க அவளது கன்னம் பற்ற, 

 

     தேன்மலர் புன்னகைத்து “அப்பாயி…. நா எந்த சிரமமும் படல…. என்னை விட்டு நீ போக மாட்டனு தெரியும்…. அதனால நா தைரியமா தான் இருந்தேன்… நா உன் பேத்தி அப்பாயி…. அவ்ளோ சீக்ரம் கலங்கிருவனா…” என்றாள். 

 

     வேலாயி நெகிழ்ந்து கண்ணில் நீர் கசிய “என் தாயி… எனக்கும் தெரியும் த்தா… நீ எவ்ளோ கஷ்டபட்ருப்பன்னு…. இனி இந்த அப்பாயி உனக்கு எந்த கஷ்டமும் வரவிட மாட்டேன் த்தா…” என்று அவளது தலை வருட, தேன்மலர் அவரது கைகள் பற்றி முத்தமிட்டாள். 

 

    பின் வேலாயி “அருளு… ராசா…” என்று அருளையும் தேவாவையும் அருகில் அழைத்து கன்னம் தடவி, “நல்லார்க்கியளா ராசாக்களா….” என்று கேட்டார். 

 

     அருள் “நல்லார்க்கேன் அப்பாயி… நீ எப்டியிருக்க….” என்க,

 

      தேவா “அம்மாச்சி… குறுக்கு வலிக்குதுனிங்களே இப்ப எப்டியிருக்கு…” என்று கேட்க,

 

       வேலாயி முகம் மலர “நல்லார்க்கேன் ய்யா… இப்ப பரவால்ல ராசா… வலி கொறஞ்சுருக்கு…” என்றார். 

 

    பின் ஸாமும் கின்ஸியும் “க்ராண்ட் மா…. எங்கள மறந்துட்டீங்க….” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள, 

 

     வேலாயி “எப்டியா உங்கள மறப்பேன்….” என்று அவர்கள் இருவரையும் அருகில் அழைத்துக் கொஞ்சி முடித்தார். 

 

       துர்கா இதையெல்லாம் புன்னகையோடுப் பார்த்துக் கொண்டு நின்றிருக்க, வேலாயி “துர்கா… அங்க என்ன மசமசன்னு நின்னுட்ருக்க… வந்து என்னை ஒரு கைப்புடி… என் பேரப் புள்ளைங்களுக்கு என் கையால சமச்சுப் போடணும்…” என்றார். 

 

             தேன்மலர் “அப்பாயி…” என்று கண்டிப்புடன் கூற, 

 

     துர்காவும் “அப்பாயி…. நா சம்ச்சு போட்றேன் அப்பாயி… நீங்க இப்ப ஸ்ட்ரெயின் பண்ண கூடாது ரெஸ்ட் எடுங்க….” என்று கூற, வேலாயி விடாமல் அடம் பிடிக்கவும் அடுக்களையில் ஒரு நாற்காலியில் அவரை அமர வைத்து அவரது மேற்பார்வையில் துர்கா சமைக்க, தேன்மலர் வேலாயியோடு பேசிக் கொண்டிருக்க, அருள், ஸாம், கின்ஸி, தேவா நால்வரும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். 

 

      சமையல் முடிய அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு முடித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வேலாயி தேவாவை பார்த்து “ஏன் ராசா… உனக்கு கண்ணாலம் ஆயிருச்சா…” என்று கேட்க, தேவா இல்லையென்று கூற, 

 

      வேலாயி “உறவு முறையில எதுவும் பொண்ணிருக்கா….” என்று கேட்க, 

 

     தேவா “இருக்கு அம்மாச்சி… ஆனா எல்லாம் ரொம்ப சின்ன புள்ளைங்க….” என்று கூறவும் “அப்ப என் பேத்திய கண்ணாலம் பண்ணிக்றியா…” என்று கேட்கவும் அனைவருக்குமே அது ஆனந்த அதிர்ச்சி தான். 

 

      தேன்மலர் வேலாயிய பார்க்க, வேலாயி “எனக்கு தெரியாதா த்தா என் பேத்திய பத்தி…. அன்னிக்கு என்கிட்டேருந்து எவ்ளோ மறைக்க நினச்சாலும் உன் முகமே உன் மனச காட்டிக் குடுத்துருச்சு த்தா… பத்தாததுக்கு ராசா வேற என்னை அம்மாச்சினு கூப்டும்போதே நினச்சேன் ராசாவுக்கும் உன்னைய புடிச்சுருக்குன்னு….” என்கவும் தேன்மலர் விழி நீர் கசிய “அப்பாயி…” என்று அவரைக் கட்டிக் கொள்ள, 

 

      தேவாவும் “அய்யோ நீ ரொம்ப ஷார்ப் அம்மாச்சி…” என்று அவரது கன்னம் பிடித்துக் கொஞ்சினான்.

 

       பின் தேவாவும் தேன்மலரும் இணைந்து அவரிடம் ஆசி வாங்க, வேலாயி துர்காவிடம் திருநீறு எடுத்து வரச்சொல்லி இருவருக்கும் பூசிவிட்டு தன் ஆசியை வழங்கினார். அதைக் கண்ட ஸாமும் கின்ஸியும் அவரதுக் காலில் விழ, அவர்களுக்கும் திருநீறு பூசி ஆசிர்வதித்தார். 

 

              பின் வேலாயி “உங்கப்பன் வந்தவொடனே… இத பத்தி பேசி உங்க கண்ணாலத்துக்கு நாள் குறிக்கனும்…” என்று கூற,

 

       தேன்மலர் நாணத்தோடு “அப்பாயி… அப்பாகிட்ட இவரு ஏற்கனவே பேசி சம்மதம் வாங்கிட்டாரு….” என்று கூற, வேலாயி தேவா, 

 

      தேன்மலர் இருவரின் காதையும் பிடித்து திருகி “திருட்டு கழுதைங்களா..” என்று கூறி சிரிக்க, அவர்களும் சிரித்தனர்.

 

       வேலாயி “எப்டியோ என் பேத்திக்கு ஒரு நல்ல மாப்ள கெடச்ச மாறி… என் பேரனுக்கு ஒரு பொண்ணு கெடச்சுட்டா… ரொம்ப சந்தோசம்….” என்று அருளின் தலை வருட, 

 

      அருள் “அதெல்லாம் கெடைப்பா ப்பாயி…. உன் பேரன கட்டிக்காம எங்க போயிற போறா….” என்று கூற, அங்கே சிரிப்பலை எழுந்தது. 

 

     பின் ஸாமும் கின்ஸியும் விடைபெற்றுச் செல்ல, வேலாயி “எனக்கும் குறுக்கு வலிக்குது…. துர்கா செத்த அமுக்கி விடு த்தா… நா செத்த கண்ணசர்றேன்….” என்று கூற, தேன்மலர் “அப்பாயி… நா அமுக்கி விட்றேன் ப்பாயி…” என்றாள். 

 

     துர்கா “அக்கா நா எதுக்கு இருக்கேன்…. நீங்க போய் கொஞ்சம் நேரம் தூங்கி எந்திரிங்க… நா அப்பாயிய பாத்துக்றேன்….” என்றுவிட்டு வேலாயிய அழைத்துச் சென்றாள். 

 

               பின் அருள், தேன்மலர், தேவா மூவரும் கிடைத்த ஆதாரமும் எரிந்து வீணாகிப் போனதை நினைத்து அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கலாயினர். 

 

      அருளும் தேன்மலரும் தீவிர சிந்தனையிலிருக்க, தேவா “மலர்… அந்த டாக்குமெண்ட்ஸல எனக்கு சிலது புரிஞ்ச மாறியுமிருக்கு… புரியாதமாறியுமிருக்கு… எனக்கு கொஞ்சம் க்ளியர் பண்றியா…” என்று கேட்க, 

 

     தேன்மலர் “என்ன புரிலனு சொல்லுங்க…. சொல்றேன்…” என்றாள். 

 

       தேவா “இப்ப ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸ்ல மருந்து தயாரிக்றப்ப சுத்தமான முறைகள் சில இடத்துல தவறுது ஓகே…. ஆனா ஏதோ ஏபிஐனு சொன்னது புரில…. அப்றம் க்ளினிக்கல் ட்ரயல்னா என்னனு மேலோட்டமா தெரியும் டீடெய்ல்டா அப்டினா என்ன? அதுக்கு முன்னாடி என்ன பண்ணுவாங்க? ஏன் ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸ் அப்ரூவல் வாங்காம புது மருந்துகள கண்டுபுடிக்றதும் அத மனுஷங்க மேல டெஸ்ட் பண்றாங்க? எதாவது பேன் பண்ண கெமிக்கல்ஸ யூஸ் பண்றாங்களா?” என்று கேட்டான். தேன்மலர் அருளை பார்க்க, அருள் புன்னகையோடு நின்றிருப்பதுக் கண்டு அவளும் புன்னகையுடன் தேவா கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூற ஆரம்பித்தாள்.

 

                “ஏபிஐ னா ஆக்டிவ் பார்மச்சுடிக்கல் இன்கிரிடியன்ட்… இது தான் நம்ம நோய குணப்படுத்த போற மருந்து… ஏபிஐ செடிகளோட சாறுலேர்ந்தோ இல்ல அரசாங்கத்தாலயும் எப் டி ஏ வாலயும், cdsco வாலயும் ICH (International Council for Harmonisation of Technical Requirements for Pharmaceuticals for Human Use ) ஆலயும் அப்ரூவ் செய்யப்பட்ட சில கெமிக்கல்ஸாவும் இருக்கலாம்…. அத நாம நேரடியா உட்கொள்ள முடியாது…. அதனால அதோட சக்திய குறைக்காத வகையில ஏபிஐயோட எக்ஸிபியன்ட்ஸ்/ பைன்ட்ர்ஸ் சேப்பாங்க…( டிஸின்ட்டங்ரன்ட்ஸ்) அதோட நம்ம உணவுக்குழாய்ல போய் உடைற மாறி ஒரு பொருள் சேப்பாங்க…. அதோட ப்ளேவர்க்கு ஒரு பொருள் அப்றம் ஸ்வீட்னர் சேப்பாங்க… இதல்லாம் குறிப்பிட்ட அளவுல சேத்து கம்ப்ரஸ் பண்றது தான் மாத்திரை… இதே டைலுவன்ட்ஸ்( கரைப்பான்) சேத்தா அது சிரப்…. இந்த ஏபிஐன்றது மில்லி கிராம் அளவுல தான் இருக்கும்…. சில மாத்திரைல, உதாரணத்துக்கு பாராசிட்டமால் 500mg ன்னு போட்ருப்பாங்கல்ல…. இப்போ ஒரு மாத்திரை ஒரு கிராம் இருக்குன்னா அதுல அந்த 500mg பாராசிட்டமால் அதுல எவ்ளோ அளவு இருக்குன்றத குறிக்குது… மத்ததெல்லாம் பைன்டர்ஸும் டிஸின்ட்டங்ரன்ட்ஸும் தான்…. சில நோய்களுக்கு வெறும் ஏபிஐ மட்டுமே மருந்தாயிருக்கும்… அந்த மாறி கேஸஸ் ரொம்ப ரேர் தான்…. அப்றம் இந்த ஏபிஐ அளவு இப்ப பாராசிட்டமால்னு எடுத்துகிட்டா ஒரு பேட்ஜ்ல நூறு மாத்திரை தயாரிக்றாங்கன்னா… நூறுலயும் 500mg தான் இருக்கணும்…. அப்டி மாறுனா அந்த நூறு மாத்திரையும் ரிஜக்ட்ட் தான்…. ஏ ஆர் பார்மசுட்டிக்கல்ஸ் அந்த மாறி தான் சில தப்பு பண்றாங்க…. அப்றம் குறிப்பிட்ட மாத்திரைய தயாரிக்க உரிமம் வாங்கிட்டு அந்த மாத்திரையோட செய்முறையையும் அளவுகளையும் சரியா கடைப்புடிக்காம அவங்க ரிசர்ச் பண்ணி அவங்களா அதுல மாற்றம் கொண்டு வந்து தயாரிச்சுட்டு, ரூல்ஸ் படி அந்த மாத்திரை தயாரிக்கிற மெத்தட் படி தான் நாங்க தயாரிக்றோம்ன்னு ரிப்போர்ட் குடுத்துர்றாங்க… குறிப்பிட்ட நோய்களுக்கு அவங்க மருந்து பழசவிட நல்லா தான் வேல செய்து இருந்தாலும் ரூல்ஸ் மீற்ராங்களே… இப்டி ஒன்னு ரெண்டு தடவ அவங்க பண்றது சக்ஸஸ் ஆனாலும் எல்லாமும் சக்ஸஸ் ஆகும்னு சொல்ல முடியாதுல்ல… நாளைக்கு இவங்க புதுசா குடுக்ற மருந்துனால யாருக்காவது எதாவது ஆச்சுன்னா யாரு பொறுப்பேத்துக்குவா? அப்றம் க்ளனிக்கல் ட்ரையல்… அது ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிட்க்றதுக்கான ப்ராஸஸ்ல முக்கியமான அங்கம்…. ஏன் வருது எதுனால வருதுன்னு நோயோட தன்மைய நல்லா ஆராய்ஞ்சு தெரிஞ்சுகிட்டு… இப்போ ஒரு நோய் நுண் கிருமினாலயோ, இல்ல பரம்பரை வழியா வர்ற ஜீன் டிபெக்ட்னாலயோ இல்ல உணவு பழக்க வழக்கத்துனாலயோ இப்டி எதுனால வருதுன்னு தெரிஞ்சுகிட்டு அதோட மூலக்கூற அழிக்கக் கூடிய பொருள் எதுன்னு கண்டுபுடிச்சு… அது செடிலேர்ந்து எடுத்த எக்ஸ்டார்க்டாயிருக்கலாம் இல்ல சில கெமிக்கல்ஸா இருக்கலாம்… அத மொதல்ல மனித உடல் செயல்பாடுகளோட ஒத்துபோற ஒரு நுண்ணுயிரி மேல டெஸ்ட் பண்ணி பாக்கணும்… அப்றம் விலங்குகள்… நாய், வெள்ளை எலி, குரங்கு, ஆடு, வெள்ளை பன்னி ன்னு இப்டி நோயோட தன்மை, மருந்தோட தன்மை ரெண்டையும் கருத்துல வச்சு முன்னாடி சொன்ன எந்த விலங்கினம் அதுக்கு ஒத்துப் போகும்னு பாத்து அது மேல டெஸ்ட் பண்ணி… அதோட சாதக பாதகங்கள ஆராயணும்…. குடுக்ற மருந்த ஒரே அளவா குடுக்காம குறிப்பிட்ட கால இடைவெளியில அளவ மாத்தி மாத்திக் குடுத்துப் பாத்து அதோட விளைவுகள ஆராயணும்…. இப்போ அதுல சக்ஸஸ் ஆனா தான் க்ளினிக்கல் ட்ரையல் வரணும்… அதுக்கு முன்னாடி IRB(Institutional Review Board) அப்றம் அமெரிக்கானா எப் டி ஏ இந்தியானா cdsco ட்ட முறையா பர்மிஷன் வாங்கனும்…. க்ளினிக்கல் ட்ரையல்ல நாலு பேஸ் இருக்கு…. அதுக்கு முன்னாடி பேஸ்0 இதுல எந்த நோய்க்கு மருந்து கண்டுபுடிக்றோமோ அந்த நோயால பாதிக்கப்பட்டவங்க ஒரு 10-15 பேருக்கு அவங்களோட முழு சம்மதத்தோட அவங்கிட்ட ஒரு டாக்குமென்டல அவங்க இதுக்கு சம்மதிக்றாங்கன்னு கையெழுத்து வாங்கிட்டு டெஸ்ட் பண்ணி பாப்பாங்க…. அது சக்ஸஸ் ஆனா பேஸ்1 இதுல 30-50 ஆரோக்கியமா இருக்றவங்களுக்கு அந்த மருந்த குடுத்து பாப்பாங்க…. அதுவும் சக்ஸஸ் ஆனா பேஸ்2 இதுல 100-300 பேர் அந்த நோயோட இருக்றவங்களுக்கு குடுப்பாங்க… அதுல அந்த மருந்து எப்டி வேல செய்துனு பாப்பாங்க…. அதுவும் சக்ஸஸ் ஆனா பேஸ்3 இதுல 300-3000 நோயுள்ளவங்க, ஆரோக்கியமா இருக்றவங்னு குடுப்பாங்க… அதுவும் வேற வேற அளவுல வேற வேற மருந்தோட சேத்து குடுத்து அப்போ அந்த மருந்து எப்டி வேல செய்துனு பாப்பாங்க…. அது சக்ஸஸ் ஆனா பேஸ்4 இதுல பல நாடுகள்ல பல ஆயிரம் பேருக்கு பல அளவுகள்ல குடுத்து பாப்பாங்க…. அது பல நாள்லேர்ந்து பல வருஷங்கள் வரைக்கும் நடக்கும்… அப்பதான் அந்த மருந்து ரொம்ப நாள் உபயோகிச்சா பின்விளைவுகள் எதுவும் வருதான்னு தெரியும்…. இப்படி ஒரு நோய்க்கு ஒரு மருந்த ஆறு மாசத்துலேர்ந்து வருஷகணக்கா உழைச்சு கண்டுபுடிச்சாலும்…. அந்த மருந்து இப்டி செயல்படும் இன்னன்ன பயன்கள் தரும் இன்னன்ன பக்க விளைவுகள் வரும்னு தெரிஞ்சு முழு மருந்தா சந்தைக்கு வர கிட்டத்தட்ட பன்னெண்ட்ரை வருஷமாகும்… இந்த க்ளினக்கல் ட்ரையல்ல பங்கெடுத்துக்றவங்க நோயாளிகளாவோ இல்ல வாலன்டியராவோ இல்ல அந்த நோயினால பாதிக்கப்பட்ட குடும்பத்தாளங்களாவோ இருப்பாங்க… அவங்க இதுல கலந்துக்கும் முன்னாடி அவங்களுங்கு எல்லா விளக்கமும் குடுத்து அவங்க இதுலேர்ந்து எப்ப வேணா விலகிக்கலாம்ன்ற உறுதி தந்து டாக்குமென்டல சைன் வாங்கிப்பாங்க…. இது மாறி ஒரு மருந்து கண்டுபுடிச்சுருக்கோம்னு எதாவது ஒரு பார்மச்சுட்டிக்கல் சொன்னா இந்த க்ளினிக்கல் ட்ரெயலுக்கு ஸ்பான்ஸர் பண்ண ஸ்பான்ஸர்ஸ் முன் வருவாங்க… அதுலேர்ந்து தான் க்ளிக்கல் ட்ரையலுக்கான செலவும் வாலன்டியர்ஸா வர்றாங்கள்ல அவங்களுக்கான பணமும் குடுப்பாங்க…. இதுலயும் ஒரு சில கெமிக்கல்ஸும் செடிகளும் யூஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்லிற்பாங்க… அந்த மாறி பொருள்கள மருந்து கண்டுபுடிக்க யூஸ் பண்ணக் கூடாது… ஏ ஆர் பார்மச்சுட்டிக்கல்ஸ் இப்டி எந்த பர்மிஷனும் வாங்காம சில மருந்துகள மனுஷங்கள கடத்திட்டு போயோ இல்ல அவங்களுக்கு தெரிஞ்ச டாக்டர்ஸ கைக்குள்ள போட்டுகிட்டு அவங்ககிட்ட வர்ற பேஷன்ட்ஸ் மேலயோ டைரக்ட்டா டெஸ்ட் பண்றாங்க…. அப்டி தான் அப்பாக்கு வேணும்னே ஸ்ட்ரோக் வரவச்சு… ரத்தக்கசிவு பக்கவாதத்துக்கு இதுவர நேரடியான மருந்து எதுவமில்ல, சில மெடிசின்ஸ் குடுத்து ப்லட் லீக்கேஜ நிறுத்தி சர்‌ஜரி பண்ணிதான் குணப்படுத்தறாங்க…. அதுனால ஏ ஆர் பார்மச்சுட்டிக்கல்ஸ் அதுக்கு மருந்து கண்டுபுடிக்க ட்ரை பண்றாங்க… இப்போ அப்பா மேல அவங்க டெஸ்ட் பண்ண மருந்து ரொம்ப ஆபத்தானது… அதுல ஒன்னு ரத்தத்த உறைய வைக்கும்… அப்றம் இன்னொன்னு உறைஞ்ச ரத்தத்த உடைச்சு உருக்கும்…. ரத்தம் உறைஞ்சா மறுபடியும் இன்னொரு பக்கவாதம் வர்றதுக்கான வாய்ப்புகளும் உறைஞ்ச ரத்தம், ரத்த நாளம் வழியா இதயத்துக்கு போய் மாரடைப்ப ஏற்படுத்துற வாய்ப்பும் அதிகம்…. அப்றம் உறைஞ்ச ரத்தத்த உடைச்சு உருக்றதால மறுபடியும் ரத்தக்கசிவு ஏற்படுத்துற வாய்ப்பு அதிகம்…. அவங்க அப்பாவுக்கு கம்மியான டோஸேஜ் குடுத்தனாலயும் நாங்க அப்பாவுக்கு அத ஒன்றரை மாசத்துலயே நிறுத்துனனாலயும் அப்பாவுக்கு பாதிப்பு கம்மி… அந்த மருந்த தொடர்ந்து யூஸ் பண்ணா இன்னும் நிறைய ஆபத்து வரும்…. அதுவுமில்லாம அவங்க ஏபிஐ ஐ டைரக்ட்டா குடுத்துருக்காங்க…. அதுனால தான் அந்த மருந்து இவ்ளோ ஆபத்தானதா இருக்கு… அவங்க டோஸேஜ கம்மி பண்ணி அதுக்கூட பைன்டர் சேத்தா இந்த மருந்து சக்ஸஸ் ஆக வாய்ப்புகள் அதிகம்….” என்றாள். 

 

                  இதைக் கேட்ட தேவா “ஒரு மருந்து கண்டுபுடிக்றதுல இவ்ளோ விஷயமும் காலமும் இருக்கா….” என்று ஆச்சர்யப்பட்டான். 

 

       தேன்மலரும் அருளும் புன்னகைக்க, அருள் “மாப்ள… இதுக்கே ஆச்சர்யப்படாத… இது சும்மா ஒரு துளிதான்… இதுக்கு பின்னாடி நிறைய விஷயம் இருக்கு…. அப்றம் இந்த க்ளினிக்கல் ட்ரையல் நம்ம நாட்ல பெரும்பாலும் ரூல்ஸ் படிலாம் நடக்றதில்ல…. நமக்கே தெரியாம நம்ம மேல நிறைய டெஸ்ட் நடக்குது… அது முழுக்க பேஸ்3 தான்… இப்ப நீ காய்ச்சல்னு டாக்டர் ட்ட போவ… அவரு உனக்கு ஒரு மாத்திரை குடுப்பாரு…ரெண்டு நாள் சாப்ட்டும் சரியாகலனா மறுபடியும் அவர்கிட்ட போவ அப்ப வேற மாத்திரை தந்து இது சாப்டுப்பா சரியாயிருன்னுவாரு…. இதுதான் நம்ம மேல சோதிக்றது… மருந்த வேற அளவுள வேற மருந்தோட சேத்துக் குடுத்து பாப்பாங்க… இதுக்கு முறையா பர்மிஷன் வாங்கி உனக்கும் தெரியப் படுத்தி செய்யணும்… ஆனா அப்டி நடக்றதில்ல… ஏன்னா நம்ம நாட்ல யாருக்கும் இதுபத்தி தெரியாது… அப்டியே தெரிஞ்சாலும் கேள்வியும் கேக்க மாட்டாங்கன்ற தைரியம்…. நாமதான் தொட்டதுக்கெல்லாம் பயந்து டாக்டர்ட்ட ஓட்றோமே… பத்தாததுக்கு கூகிள்ள கண்டதையும் சேர்ச் பண்ணி ஒருவேளை அந்த நோயா இருக்குமோன்னு நாம பயந்து குழம்புனதுமில்லாம டாக்டர்ட்டயும் வாதம் பண்ணி அவரையும் குழப்பிவிட்டுட்றோம்… அவரும் சரி போ நீ இந்த மாத்திரையே சாப்டுனு ஒருவேளைக்கு நாலஞ்சு மாத்திரைய எழுதிக் குடுத்துருவாரு…. இங்க பொறுப்பு இருக்றவங்களும் பணத்த வாங்கிட்டு கண்டுக்காம இருந்துருவாங்க… இப்டி நம்ம அறியாமை, பயம், இயலாமை, லஞ்சம், ஊழல், கேள்வி கேக்க தயங்குறதுன்னு நம்ம பலவீனம்லாம் பல மருந்து கம்பெனிகளுக்கு பலமா மாறி உலகத்துல உள்ள சில மருந்து கம்பெனிகளுக்கு நம்ம நாட்டு மக்கள் தான் சோதனை எலிங்களா நமக்கே தெரியாம இருக்கோம்… இதுல என்ன கொடுமன்னா நம்ம நாட்டு பார்மா கம்பெனிங்க சிலதும் நம்ம மேல நாம அறியாமயே மருந்த சோதிக்றாங்க… அமெரிக்கா ஆபத்துன்னு பேன் செய்யப்பட்ட மருந்து பலது நம்ம நாட்ல நாம அடிக்கடி பயன்படுத்தற மருந்தாயிருக்கு…. நம்ம நாட்டு பார்மா கம்பெனிங்க மருந்துங்களே சிலது அமெரிக்கால எப் டி ஏ வால பேன் பண்ணி நம்ம நாட்ல இன்னும் நாம சாப்ட்டுட்ருக்கோம்…. அதுலயும் ஆசிய கண்டத்துக்கு கீழயிருக்கற நாட்ல உள்ள பெரும்பாலான பார்மா கம்பெனிங்க நம்ம மக்கள் மேல தான் சோதனை பண்றாங்க… ஏன்னா இங்க தான் கேள்வி கேக்ற பொறுப்புல இருக்றவன ஈஸியா பணத்தால் ஆஃப் பண்ண முடியும்… அவனுக்கும் ரூல்ஸ் ஃபாலோ பண்ண தேவியில்ல.. பணம் மிச்சம்… எவன் இருந்தாலும் செத்தாலும் யாருக்கும் பதில் சொல்ல தேவயில்ல…. இதெல்லாம் மக்களுக்குள்ள பயம் போய் இத பத்தின விழிப்புணர்வும் புரிதலும் வந்து கேள்வி கேக்ற தைரியமும் வந்தா தான் சரியாகும்… அதுவர நாம இப்டிதான் வாழ்ந்தாகனும்…” என்று கோபமும் ஆதங்கமுமாகக் கூறி முடித்தான். அதைக் கேட்ட தேவா ஆத்திரமும் ஆதங்கமும் மேலோங்க நின்றிருக்க, தேன்மலர் அவனதுக் கைப்பற்றி அவனை அமைதிப்படுத்த, பின் மூவரும் யோசனையோடு சிறிது நேரம் ஓய்வெடுக்கலாமென்று அவரவர் அறைக்குச் சென்றனர்.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்