Loading

அத்தியாயம்- 20

 

         தேன்மலர் காரணம் கூறாமல் கட்டிக் கொண்டு அழுகவும் அருள் குனிந்து அவள் தவற விட்டக் கைப்பேசியை எடுத்துப் பேசினான். அருள் விழிகள் கலங்க “சரி நா கொஞ்ச நேரத்துல கூப்ட்றேன் ராஜேஷ்…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான். 

 

      அருள் விழிகள் கலங்க கீழே அமர்ந்து தேன்மலர் முகத்தை நிமிர்த்தி “ஹனிமலர்…” என்றழைத்துப் புன்னகைக்க, தேன்மலர் “அருளு…” என்ற கேவலோடு அவனை அணைத்துக் கொண்டாள். 

 

      தேவா தான் அருளும் ஏன் கண்கள் கலங்குகிறான்? என்று புரியாமல் குழம்பி ஒருவேளை தன்னவளின் அப்பாவுக்கோ அப்பாயிக்கோ ஏதேனுமென்று எண்ணியவன் மறுகணம் மறுத்து அப்படியெல்லாம் இருக்காதென்று படபடத்துப் பயங்கொள்ளும் தன் இதயத்திற்கு தைரியம் கூறி “மலர்… என்னாச்சு மா… மாமா நீயாவது சொல்லு என்னாச்சு… ரெண்டு பேரும் அழுது என்னை பயமுறுத்துரீங்க…” என்றான். 

 

         அருள் நிமிர்ந்து கலவரமான முகத்துடன் நின்றிருந்த தேவாவிடம் “மாப்ள… உன் அம்மாச்சி கிட்ட வெளக்கமாத்தடி வாங்க ரெடியா இருந்துக்க…” என்றான். 

 

      தேவா முதலில் விழித்து பின் “மாமா… என்ன சொல்ற அப்ப அம்மாச்சி…” என்று கேட்க, 

 

       அருள் புன்னகையோடு “ம்ம்… அப்பாயி கண்ணுமுழிச்சு கல்லு குண்டு மாறி எந்திரிச்சு உக்காந்து என்ன எங்கடா கூட்டிட்டு வந்துருக்கீங்க… கடத்திட்டு வந்துட்டீங்களாடானு அங்க ரகள பண்ணிட்ருக்காம்… பாவம் ராஜேஷ் அடி வாங்கிருப்பாப்ல போல… சீக்ரம் ஹனிமலர அப்பாயிட்ட பேச சொல்லுங்க என்னை அடிங்றாங்ன்றாப்ல…” என்றான். 

 

       தேன்மலரும் தேவாவை பார்த்துப் புன்னகைக்க, தேவா முறைத்து “சந்தோஷமான விஷயம் தானே… அதுக்கு ஏன் ரெண்டு பேரும் இப்டி பாசமலர் படம் ஓட்டி கொஞ்ச நேரத்துல எனக்கு நெஞ்சு வலி வரவைக்க பாத்தீங்களே பாவிங்களா….” என்றான். 

 

     அதைக் கேட்டு தேன்மலரும் அருளும் வாய்விட்டுச் சிரிக்க, தேவா அவர்களை முறைத்து பின் அவனும் அவர்களின் சிரிப்போடுக் கலந்துக் கொண்டான். மூவரும் சிரித்து ஓய, அருள் “ஹனிமலர்… ராஜேஷ்க்கு கால் பண்ணு பாவம் ராஜேஷும் துர்காவும் அப்பாயிய சமாளிக்க முடியாம திணறிட்ருப்பாங்க…” என்றான். 

 

    தேன்மலர் புன்னகைத்து “அதுவும் சரி தான்… அப்பாயி அவங்கள ஒருவழியாக்றத்துக்குள்ள பேசிறணும்….” என்றபடி ராஜேஷிற்கு அழைத்தாள். 

 

               சிதம்பரத்திற்கு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் ராஜேஷும் ஸாமும் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருக்க, துர்கா ராஜேஷிற்கு அழைத்து வேலாயி சுயநினைவுத் திரும்பி எழுந்து விட்டதாகவும் எழுந்ததிலிருந்து கேள்விகளாய்க் கேட்டுக் குடைந்துக் கொண்டிருப்பதாகவும் தன்னால் அவரை சமாளிக்க இயலவில்லை என்று கூறி அவனை உடனேக் கிளம்பி வருமாறுக் கூறினாள்.

 

       ராஜேஷ் ஸாமிடம் விடயம் கூறி, அவனை தான் வரும் வரை மருத்துவமனையில் இருக்கச் சொல்லிவிட்டு தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு விரைந்தான். ராஜேஷ் அங்கு செல்ல, துர்கா வெளியில் கலவரமாக நின்றுக் கொண்டிருப்பதைக் கண்டு “ஏன் துர்கா… உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா… கோமாலேர்ந்து இப்ப தான் எழுந்துருக்காங்க… வயசானவங்க வேற… அவங்கள தனியா விட்டு நீ வந்து இங்க நிக்கிற… நர்ஸ் தானே நீ… கோமாலேர்ந்து எழுந்தா கொஞ்சம் ஹார்ஷாதான் பிகேவ் பண்ணுவாங்கன்னு தெரியாது… கேள்வி கேக்றாங்கன்னு பரீட்சைக்கு பயபட்ற குழந்தை மாறி பயந்து வெளிய வந்து நிக்ற… அவங்கள பாத்துக்க தானே தேன்மலர் உன்னை இங்க அனுப்பி வச்சாங்க… நீ என்ன பண்ணிட்ருக்க….” என்று அவன் பாட்டிற்கு அவளைப் பேசவே விடாமல் பொரிந்துத் தள்ளினான். 

 

       பொறுத்து பொறுத்துப் பார்த்த துர்கா “சார் கொஞ்சம் என்னை பேச விட்றீங்களா…” என்று கத்த, ராஜேஷ் “என்ன…” என்றான். 

 

       துர்கா “சும்மா என்ன நடந்துச்சுனு தெரியாம நீங்க பாட்டுக்கு கத்திட்ருக்கீங்க… அக்கா என்னை எதுக்கு இங்க அனுப்பி வச்சாங்கன்னு எனக்கு நீங்க சொல்ல தேவயில்ல…. என் வேல என்ன என் பொறுப்பு என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்….” என்று அவனை முறைத்து “முதல்ல உள்ள போய் பாருங்க… உங்களுக்கே புரியும்… அப்றம் இப்டி என்ன ஏதுன்னு தெரியாம பொரியுரத நிறுத்துக்கிங்க… எல்லாரும் என்ன மாறி பொறுமையா கேட்டுட்ருக்க மாட்டாங்க…” என்றாள். 

 

      ராஜேஷ் அவளை முறைத்து விட்டு வேகமாக உள்ளேச் செல்ல, துர்கா மெல்ல தயங்கி “முருகா என்ன எந்த சேதாரமும் இல்லாம ஊருக்கு கொண்டு போய் சேத்துட்டனா… நா பழனிக்கு நடந்தே வரேன் பா…” என்ற பலத்த வேண்டுதலோடுப் பயந்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தாள். 

 

            ராஜேஷ் வீட்டினுள் நுழைந்து, வேலாயி இருந்த அறைக் கதவைத் திறக்க, வேலாயி இவனைக் கண்டாரோ இல்லையோ “வாடா பொசக் கெட்ட பயலே‌… நீயும் அந்த சிரிக்கியும் தான் என்னை கடத்திட்டு வந்ததா… என்ன நீ மட்டும் வர… இப்ப இங்க ஒருத்தி இருந்தாளே…” என்று ராஜேஷின் பின்னால் பார்வையைச் செலுத்தினார். 

 

      துர்கா அறையினுள் நுழைவதைக் கண்டதும் “அதானே பாத்தேன்… இந்தா வந்துட்டாள்ள… கூட்டு களவானிங்களா… என்னை ஏன்டா கடத்திட்டு வந்தீங்க…. பல்லு போன கெழவிய வச்சு என்ன பண்ணுவீங்க…” என்று சத்தமிட்டார். 

 

       ராஜேஷ் அவரருகில் சென்று “பாட்டிமா… ஏன் இப்டி கத்துறீங்க…. உங்கள யாரும் கடத்தல…. நா ஒரு டாக்டர்… அவங்க ஒரு நர்ஸ்…” என்று துர்காவை கைக்காட்டிக் கூற, 

 

      வேலாயி “ஓஓஓ அப்ப உறுப்பு திருட்ற கும்பலா நீங்க… மருவாதயா சொல்லுடா என்கிட்டருந்து என்ன திருடுன…” என்று அவனது சட்டையைக் கோர்த்துப் பிடித்தார். 

 

      ராஜேஷ் “பாட்டி நாங்க திருட்டு கும்பலில்ல… நீங்க இவ்ளோ நாளா கோமால இருந்தீங்க… உங்க பேத்தி தேன்மலர் தான் உங்கள பாத்துக்க சொல்லி எங்கள வேலைக்கு வச்சுருக்காங்க…” என்றவாறு அவரது கையைச் சட்டையிலிருந்து விலக்கி விட முற்பட, 

 

        வேலாயி “பொய்யா சொல்ற… என் பேத்தி சொன்னாளா… அப்ப என் பேத்தியையும் கடத்திட்டீங்களாடா… மருவாதயா உண்மய சொல்லு என் பேத்திய எங்க வச்சுருக்க…” என்று அவனைக் குனிய வைத்து அவன் முதுகிலேயே மொத்த, ராஜேஷ் பெரும்பாடுப் பட்டு அவரிடமிருந்து விலகினான். 

 

        பின் ராஜேஷ் பொறுமையாக “பாட்டி நா சொல்றத கொஞ்சம் கேளுங்க….” என்னும்போதே வேலாயி “நீ சொல்லி நா என்னத்தடா கேக்றது… நா சொல்றத நீ கேளுடா… ஒழுங்கு மருவாதயா என்னைய கொண்டி என் ஊட்ல உட்ருங்க… இல்ல வயக்காட்ல கருதறுக்றாப்ல உங்கள அறுத்துப் போட்ருவேன் சாக்றத…” என்று எச்சரிக்க, ராஜேஷும் துர்காவும் பயந்து விழித்து எச்சிலை விழுங்கி தங்கள் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டனர். 

 

       ராஜேஷ் அதன்பின்பும் சும்மாயிருக்காமல் “பாட்டி… நா சொல்றத கொஞ்சம் கேளுங்க…” என்று கூறியது தான் தாமதம் வேலாயி “போடா… போய் என்னை என் ஊட்ல கொண்டி உட்ற ஏற்பாட்ட பாரு…” என்று அருகிலிருந்த தலையனை, மருந்துக் குடுவைகள், காகிதங்கள் என்று கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கி வீச ஆரம்பிக்க, துர்காவும் ராஜேஷும் தலை தெறிக்க அவ்வறையிலிருந்து வெளியே ஓடி வந்து கதவைத் தாழிட்டனர்.  

 

             துர்காவும் ராஜேஷும் மேல் மூச்சு வாங்கி, வியர்த்து வழிந்து நின்றிருக்க, ராஜேஷ் துர்காவை பார்த்து “சாரி மா… நீ சொல்ல வர்றத முன்னாடியே கேட்ருக்கணும்… கேக்காததுக்கு நல்லா வாங்கிட்டேன்…” என்றான். 

 

      துர்கா அவனை ஒரு தினுசாகக் கண்கள் சுருக்கிப் பார்த்து “ஏய்யா நீ உண்மையாவே டாக்டர் தானா… இல்ல காசு குடுத்து டாக்டர் ஆனியா… அந்த கெழவி கருதறுக்ற மாறி அறுத்துருவேன்னு அந்த கத்து கத்திட்ருக்கு அதுகிட்ட போய் பொறுமையா இரு பெருமையா இருங்ற…” என்றாள். 

 

     ராஜேஷ் பே என்று விழித்து “என்ன துர்கா மரியாதயெல்லாம் கொறையுது…” என்று கேட்க, துர்கா “யோவ்… எதாவது சொல்லிற போறேன்…” என்றவள் ஆழமூச்செடுத்துத் தன்னை நிதானித்தாள். 

 

       பின் “முதல்ல உங்கள மரியாதயில்லாம பேசுனதுக்கு சாரி… சார் புரிஞ்சுக்கோங்க…. அப்பாயிக்கு அவங்களுக்கு அடிப்பட்டது கோமால இருந்ததுலா ஞாபகமில்ல… அவங்க எப்பவும் போல வீட்ல தானும் தான் பேத்தியும் இருந்ததுதான் அவங்க நினப்புலயிருக்கு… புது இடம், புது ஆளுங்க நாம… அக்காவுமில்ல அதான் நாம அவங்கள கடத்திட்டு வந்துட்டோம்னு நினச்சுட்டாங்க… தான் பேத்திய காணோம்னதும் நாம தான் அக்காவ என்னமோ பண்ணிட்டோம்னு பயம், கோவம்லாம்…. கிராமத்து மனுஷில அதான் மழை மாறி சடசடன்னு பேசி தன் கோவத்தயும் ஆதங்கத்தயும் காட்றாங்க…. இவங்க நார்மலாகனுனா அப்பாவோ அக்காவோ இவங்கள்ட்ட பேசணும்… அப்பாவால இப்ப பேச முடியாது… ஸோ அக்காவுக்கு விஷயத்த சொல்லி பேச சொல்லுங்க… அக்காவுக்கு கால் பண்ணுங்க சார்…” என்றாள்.

 

       ராஜேஷ் அவளை வியப்பும் நன்றியுமாய்ப் பார்த்து “ம்ம்ம்… சரி மா… சாரி துர்கா நானும் அவசரப்பட்டு திட்டிட்டேன்…. எவ்ளோ படிச்சுருந்து என்ன நா அவங்கள வெறும் பேஷன்ட்டா பாத்தேன்… நீ அவங்க உணர்வுகளையும் புரிஞ்சுக்கணுனு சொல்லிட்ட… தேங்க்ஸ் துர்கா உளவியல் ரீதியாவும் அவங்கள புரிஞ்சுக்கணுனு எனக்கு புரிய வச்சுட்ட…. தோ நா இப்பவே தேன்மலருக்கு கால் பண்றேன்…” என்றுவிட்டு தேன்மலருக்கு அழைத்து விடயம் கூற, தன் அப்பாயி கண்விழித்த மகிழ்ச்சி தாளாமல் தான் தேன்மலர் அழுதது, தேவாவும் அருளும் விடயம் கேட்டு மகிழ்ச்சிக் கொண்டதெல்லாம்.

 

               ராஜேஷ் அருளிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்கவும் துர்கா ராஜேஷிடம் “என்னாச்சு…” என்று வினவ, 

 

     ராஜேஷ் “தேன்மலர் எமோஷ்னல் ஆகிட்டாங்க போல… அருள் கால் பண்றேன்னு சொல்லிற்காரு…” என்கவும் துர்கா “ஹை அருள் அண்ணனும் அக்காவோட தான் இருக்காங்களா… சரி கால் பண்ணட்டும் அண்ணாவோட பேசி எவ்ளோ நாளாச்சு…” என்று முகம் மலர புன்னகைக்க, அவளின் புன்னகை ராஜேஷையும் ஒட்டிக் கொண்டது. 

 

       தேன்மலர் ராஜேஷிற்கு அழைக்கவும் அவசரமும் ஆர்வமுமாக ராஜேஷ் அழைப்பை ஏற்று “அருள்… தேன்மலர கொஞ்சம் பேச சொல்லுங்க பாட்டிய சமாளிக்க முடியல…” என்று கூற, 

 

     தேன்மலர் “ராஜேஷ் நா தேன்மலர் தான் பேசறேன்… அப்பாயி ரெண்டு பேரையும் படுத்தி எடுத்துருச்சா… சாரி ராஜேஷ்…” என்றாள். 

 

      ராஜேஷ் “அதெல்லாம் ஒன்னுமில்ல தேன்மலர்… அவங்க நாங்க உங்கள எதாவது பண்ணிட்டோம்னு நினச்சு கோவமா இருக்காங்க…” என்று கூறவும் தேன்மலருக்கு தன் அப்பாயியின் அன்பை நினைத்து விழிகள் நனைய, “சரி ராஜேஷ் நா வீடியோ கால்ல வர்றேன்… நீங்க ஃபோன கொண்டு போய் அப்பாயிகிட்ட குடுங்க….” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு அவனுக்கு வீடியோ கால் செய்தாள். 

 

      ராஜேஷ் அழைப்பை ஏற்க, அவனருகில் நின்ற துர்கா முகம் மலர “ஹாய் அக்கா… எப்டியிருக்கீங்க…” என்று கேட்க, 

 

     தேன்மலரும் புன்னகையோடு “நல்லார்க்கேன் மா… நீ எப்டியிருக்க… அப்பாயி பயமுறுத்திருச்சா… உங்க ரெண்டு பேர் முகமும் வேர்த்து திகிலாயிருக்கே…” என்று கேட்டாள். 

 

     துர்கா புன்னகைத்து “கொஞ்சம் அப்டி தான் க்கா… ஆனா அதுபூரா உங்க மேல உள்ள பாசத்துனால தான்…” என்றாள்.

 

      தேன்மலர் மென்னகைப் புரிய, அருகிலிருந்த அருள் “என்ன துர்கா… அக்கா தான் கண்ணுக்கு தெரியுறாளா அண்ணன் தெரிலயா…” என்று கேட்டான். 

 

       துர்கா “அதெப்டி எங்க அண்ணன மறப்பேன்…. நீங்க அக்காவோட இருக்கீங்கன்னு சார் சொன்னவொடனே எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா… உங்ககூட ரொம்ப நாள் கழிச்சு பேச போறோம்னு… ஆனா நீங்க தான் நாங்க இங்க வந்ததுலேர்ந்து பேசவேயில்ல…” என்று கோபித்துக் கொள்ள, அருளுக்கு சங்கடமாகிப் போனது. 

 

      அருள் தேன்மலரை முறைக்க, தேன்மலர் “ஆத்தாடி அவனே இப்ப தான் மலயேறி ஒரு ஆட்டமாடி இறங்கிருக்கான்… இந்த துர்கா பொண்ணு மறுபடியும் அவன மலயேத்தி விட்ருவா போலயே…” என்று மனதில் நினைத்தவள், “நாந்தான் மா ஸேப்டி பாத்து ராஜேஷ் நம்பர அருள்கிட்ட தரல…” என்கவும் துர்கா புன்னகைத்து “சாரி ண்ணா…” என்று கேட்க, 

 

      அருள் தேன்மலரை முறைத்துக் கொண்டே “பரவால்ல மா…” என்று அவளிடம் இயல்பாகப் பேச ஆரம்பிக்கவும் தான் தேன்மலருக்கு மூச்சு சீராக வந்தது. 

 

               ராஜேஷும் துர்காவும் அருளிடம் பேசிக் கொண்டிருக்க, பின்னே நின்றிருந்த தேவாவை பார்த்து இருவரும் தேவாவை பற்றி விசாரிக்க, அருள் தேவாவை அருகில் அழைத்து “இவன் தேவா… என் மாப்ள…” என்று தேன்மலரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவன் தோள்மீது கைப்போட்டு புன்னகைக்க, தேவாவும் புன்னகைத்தான். 

 

     தேன்மலர் “தேவா சார் எனக்கு நெறய ஹெல்ப் பண்ணிட்ருக்காரு… இவரும் இனி நம்மள்ல ஒருத்தர் தான்…” என்றாள். 

 

       ராஜேஷ் “ஹாய் தேவா…” என்க, பதிலுக்கு தேவாவும் ஹாய் சொல்ல, அருளின் பார்வையைச் சரியாகப் புரிந்துக் கொண்ட துர்காவோ “ஹாய் மாமா… நா துர்கா… தேனு அக்காவோட தங்கச்சி…” என்கவும் தேவா முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

 

        தேன்மலருக்கு துர்கா வின் பேச்சும் மாமாவென்ற அழைப்பும் மனதில் மழைச் சாரலாய் இறங்கி செவிகளைக் குளிர்விக்க, அதற்கு எதிர் பதமாய் அவளது கன்னங்கள் அன்னிச்சையாய் அந்தி வானமாய் சிவக்க, அதை மறைக்க தேன்மலர் புன்னகைத்துத் தலையைத் திருப்ப, தேவா அவளது நாணத்தை விழிகளில் காதல் வழிந்தோட ரசனையாய் மென் முறுவலோடுப் பார்த்திருப்பதைக் கண்டவள் மேலும் சிவந்து வேறுபுறம் திரும்பிக் கொண்டாள். 

 

      அருளுக்கோ அவர்கள் இருவரையும் கண்டு அப்படி ஒரு புன்னகை. துர்காவும் நமட்டுச் சிரிப்போடு இவற்றையெல்லாம் பார்த்திருக்க, அப்பொழுதுதான் புரிந்துக் கொண்ட ராஜேஷ் “வாழ்த்துகள் தேவா… சரியான சாய்ஸ்…” என்று கூறவும் தேன்மலருக்கு வெட்கம் இன்னும் பிடுங்கித் திண்ண,

 

     “ராஜேஷ் அப்பாயிகிட்ட பேசத்தானே இந்த கால்… போங்க போய் அப்பாயிய காட்டுங்க…” என்கவும் ராஜேஷும் துர்காவும் சிரித்துக் கொண்டே வேலாயி இருந்த அறைக்குள் சென்றனர். 

 

     தேவாவோ தேன்மலரின் சிவந்த முகத்தையே விழி அகலாமல் பார்த்துத் தன்னுள் நிறைத்துக் கொண்டிருக்க, அருள் இருவரையும் புன்னகையோடு நிறைவாகப் பார்த்திருந்தான். 

 

                ராஜேஷும் துர்காவும் அறைக்குள் நுழையும் போதே “திருட்டு களவானிங்களா… மறுபடியும் வந்துட்டீங்களா… என் பேத்தி எங்கடா… என்னை ஊட்ல கொண்டி உட ஏற்பாடு பண்ணீங்களா இல்லயா…” என்ற வேலாயியின் கோபமானக் குரலைக் கேட்ட தேன்மலரும் அருளும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். 

 

       தேன்மலர் “ஏய் கெழவி… உன் அக்கறல பொங்கல் கிண்டுனது போதும்… மூனு மாசமா என்ன தனியா தவிக்க விட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுத்தில… இப்ப மட்டும் என்ன உனக்கு பேத்தி ஞாபகம்….” என்றாள். 

 

      தேன்மலரின் குரலைக் கேட்டதுமே வேலாயியின் அகமும் முகமும் குளிர்ந்து மலர, விழியோரம் ஈரம் கசிய “என் பேத்தியா ய்யா….” என்று விழிகளில் ஆர்வமும் அன்பும் விழி நீராய் வழிந்தோட, குரல் கரகரக்க குழைந்துக் கேட்டார். 

 

       சற்றுமுன் வரைக் கோபமாகக் கத்திக் கொண்டிருந்தவர் பெயர்த்தியின் குரலைக் கேட்டதுமே பாசத்தில் குழைந்து விட்டாரே என்று ராஜேஷ், துர்கா, தேவா, அருள் நால்வரையும் நெகிழச் செய்ய, தேன்மலர் என்னவென்றுச் சொல்ல முடியா உணர்வில் விழி நீர் திரையிட உதடுத் துடிக்கக் கண்களில் தவிப்பும் ஆர்வமும் போட்டியிட கைப்பேசியின் திரையைப் பார்த்திருந்தாள். ராஜேஷ் புன்னகையுடன் கைப்பேசியை வேலாயியிடம் கொடுக்க, கைகள் நடுங்க உதட்டில் புன்னகைத் துளிர்க்க, கண்களில் நீர் கரிக்க ஆசையாக அதை வாங்கி அதில் தன் பெயர்த்தியின் முகம் பார்த்தவர் “தேனு… நல்லார்க்கியா த்தா…” என்று கேட்டார். 

 

       தேன்மலர் அன்பு வழிய வேலாயிய பார்த்து விழி நீர் வழிய, “ம்ம்ம்…” என்று தலையாட்டியவள் “ஏன் அப்பாயி இப்டி பண்ண… நா எவ்ளோ தவிச்சு போய்ட்டேன்னு தெரியுமா…” என்று அழுதாள். 

 

       வேலாயியும் அழுது “தப்பு தான் த்தா… மன்னிச்சுரு… எனக்கு மட்டும் உன்னை தனியா தவிக்க விடனுனு ஆசயா த்தா… தேனு… தாயி… அழுவாத ராசாத்தி… அப்பாயிக்கு தாங்கலடா… என் தங்கமே…” என்றார். 

 

        தேன்மலர் வேலாயி அழுவதைக் கண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் “நாந்தான் சொன்னேன்ல நீ போய் மாடு அவுக்காதன்னு… அப்றம் ஏன் நீ போன… இப்ப பாரு என்னாச்சுன்னு…” என்று கோபித்துக் கொண்டாள்.

 

             வேலாயி “நா என்ன செய்றது தேனு… சுமதி வர்றதுக்குள்ள மழை புடிச்சுருச்சு… நானும் என் மவன் வந்த சந்தோசத்துல அத மறந்துட்டேன்… அதுவும் மதியத்துலேர்ந்து மழையில நனஞ்சுகிட்டே நின்னுச்சு… பாக்கவே பாவமாயிருந்துச்சு… அதான் அவுத்து கொட்டாயில கட்டலாம்னு அவுத்தேன்… அது பச்ச புல்ல பாத்தோன என்னை இழுத்து தள்ளிருச்சு…” என்றார். 

 

      தேன்மலர் “சரி போ… இப்ப எப்டியிருக்க…. தலை எதும் வலிக்குதா அப்பாயி…” என்று கேட்க, 

 

       வேலாயி புன்னகைத்து “அதெல்லாம் இல்ல தேனு… கொஞ்சம் அசதியா இருக்கு… தெம்பேயில்லாத மாறி தோனுது… குறுக்கு தான் கொடையுது…” என்றார். 

 

     வேலாயி என்னதான் புன்னகைத்துக் கொண்டே கூறினாலும் தேன்மலருக்கு அவரின் வலி கண்களில் தெரிய அவளும் அதைத் தாங்காதுக் கண்ணீர் வடித்தபடி ராஜேஷை பார்த்தாள். 

 

      அதுவரை ராஜேஷ் வேலாயி தனக்கு எப்படி அடிப்பட்டதென்று தெளிவாகப் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து பின் துர்காவை முறைக்க, அவளுக்கும் இது அதிர்ச்சி தான் என்பதை அவள் வாயைப் பிளந்தவாறு வேலாயியை பார்த்துக் கொண்டிருப்பதிலேயே உணர்ந்தவனுக்கு துர்கா நின்ற விதம் கண்டு உள்ளுக்குள் சிரிப்பு மூண்டாலும் அதைத் தன் வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டான். 

    

         தேன்மலர் தன்னைப் பார்க்கவும் “பயப்பட ஒன்னுமில்ல தேன்மலர்…. இவ்வளவு நாள் ஆகாரம் எதுவுமில்லல… ஸேலைன் தானே இறங்குச்சு… சாப்ட சாப்ட தெம்பு வந்துரும்… படுத்தே இருந்தாங்கள்ல அதான் முதுகு வலிக்குது…. உடனே ரொம்ப நடக்க முடியாது… கொஞ்ச கொஞ்சமா நடந்தாங்கன்னா சரியாயிடும்… ரொம்ப பெயின் இருந்தா பெயின் ரிலீவர் குடுக்கலாம்…” என்றான்.

 

              தேன்மலருக்கு அப்போதுதான் நிம்மதியே வந்தது “சரி ராஜேஷ்… நீங்களே என்ன சாப்பாடு குடுக்கலாம் மாத்திரை குடுக்கலாம்ன்றத பாத்துக் குடுங்க…” என்று கூற, 

 

     ராஜேஷ் புன்னகைத்து “நீங்க கவலப்படாதீங்க தேன்மலர் நா பாத்துக்றேன்….” என்றான். 

 

      வேலாயி “தேனு… ஏன் த்தா நீ போன்ல பேசுற… நீ எங்கயிருக்க… ஏன் நீ என் பக்கத்துல இல்ல…” என்று ஏக்கத்தோடு வினவ, 

 

       தேன்மலர் தன் விழி நீரை உள்ளிழுத்துக் கொண்டு புன்னகைத்து “அப்பாயி…. நா ஒரு முக்கியமான வேலயில இருக்கேன்… ஏன் அப்டி என்ன வேலன்னுலாம் கேக்காத…. உன் பேத்தி எது செஞ்சாலும் சரியாயிருக்கும்னு நினச்சினா எதுவும் கேக்காத… உன்கூட ராஜேஷும் துர்காவும் இருப்பாங்க… துர்கா தான் உன்னை இத்தன நாள் பாத்துக்கிட்டா… இப்ப விளையாண்டு அவங்க ரெண்டு பேரையும் பயமுறுத்துன மாறி இனி எப்பவும் பண்ண கூடாது… அவங்க சொல்றத கேளு… நா உன்னை ஒரு வாரத்துல பாக்க வரேன்…” என்றாள். 

 

       வேலாயி அவளை ஒருமுறை ஏக்கத்தோடுப் பார்த்துவிட்டு “சரி தேனு… நீ சொன்ன மாறியே இருக்கேன்… ஆனா இந்த அப்பாயிய பாக்க ஒரு வாரத்துல வந்துரனும்…” என்று கண்டிப்புடன் கூற, 

 

      தேன்மலருக்கு அப்படி ஒரு புன்னகை. தேன்மலர் “வந்துருவேன் அப்பாயி….” என்றாள். 

 

       அருள் “அப்பாயி… பேத்தி கூட பேசி முடுச்சுட்டனா என்கூட பேசலாம்ல…” என்று கூற, 

 

          வேலாயி முகங்கொள்ளாப் புன்னகையுடன் “என் பேரன் கூட பேசாம இருப்பனா… ரெண்டு பேரும் ஒன்னா தான் சுத்துறியளா… ஆமா மூனு கொரங்குல ரெண்டு மட்டும் ஒன்னாயிருக்கு மூனாவது எங்க…” என்று கேட்டார். 

 

      அருள் “ம்ம்ம்… மூனாவதுக்கு ஜோடி வரப்போவுது அதான் எங்ககூட வரல…” என்கவும் வேலாயி மகிழ, தேன்மலரோ வியப்புக் கலந்த மகிழ்ச்சியில் அருளை பார்க்க, அருள் கண்க்காட்டவும் தேன்மலர் தன் முகத்தைப் புன்னகைத்தவாறு வைத்துக் கொண்டாள். 

 

       வேலாயி “ம்ம்ம்… நா நல்லார்ந்திருந்தா இந்நேரம் தேனுக்கும் நல்லது நடத்திருப்பேன்…” என்று ஆதங்கப்பட, 

 

       தேன்மலர் “அப்பாயி….” என்று கண்டிப்புடன் கூற, 

 

        வேலாயி “நா என் ஆதங்கத்த சொன்னேன் த்தா…. ஆமா அருளு மாப்ள எப்டி ராமாயிய பத்ரமா பாத்துக்குவானா…. குணமானவனா…” என்று அக்கறையாக வினவினார். 

 

         அருள் சிரித்து “அதெல்லாம் ராமாயிக்கு பொருத்தமான ஆள் தான்…” என்று கூற, 

 

          தேன்மலர் “ஏன் அப்பாயி உனக்கு தான் ராகவினு கூப்ட வரலல…. கவினாவது கூப்ட்லால ராமாயின்னு ஏன் கூப்டற…. இப்ப மட்டும் அவ இத கேட்ருந்தா உன்கிட்ட மல்லுக்கு நின்றுப்பா…” என்றாள். அதைக் கேட்டு வேலாயியோடு சேர்ந்து ராஜேஷ், துர்கா, அருள், தேவா என்று அனைவரும் சிரிக்க, தேன்மலரும் சிரித்து விட்டாள்.

 

          பின் வேலாயி “ஆமா இது என்ன இடம் தேனு… ஆஸ்பத்ரி மாறி இல்லயே… வீடாட்டம்ல இருக்கு…” என்று கேட்க, தேன்மலரும் அருளும் ஒருவரையொருவர் பார்க்க, அருள் பேசு என்பது போல் தலையசைத்தான். 

 

      தேன்மலர் ஆழமூச்செடுத்து வேலாயி கண்விழித்துக் கேட்டால் என்ன பதில் கூற வேண்டுமென்று முன்பே தானும் அருளும் பேசி வைத்திருந்ததை நிதானமாகப் பதட்டமில்லாமல் கூற ஆரம்பாத்தாள். 

 

       “அப்பாயி… உனக்கு அடிப்பட்டுச்சுல… அதனால அப்பா தான் நா யூஎஸ் கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் பாத்துக்றேன்னு உன்னை அங்க கூட்டிட்டு போய்ட்டாரு… எனக்கும் இங்க ஒரு முக்கியமான வேல…. ராஜேஷ் டாக்டர், துர்கா நர்ஸ்… மோகன் மாமா தான் இவங்களும் உன் கூடயிருக்கட்டும்னு அப்பாவோட அனுப்பி வச்சாங்க… ஏன்னா அப்பா வேல விஷயமா அடிக்கடி வெளிய போகும்ல…. இப்ப கூட அப்பா ஜெர்மனி போய்ருக்கு… வர ரெண்டு வாரமாகும் அதுவர நீ அமைதியா துர்கா சொல்றபடி கேட்டு இருக்கனும்….” என்று கூற, 

 

       வேலாயி தேன்மலரையே இருநொடிகள் ஊன்றி பார்த்து பின் உணர்ச்சித் துடைத்த முகமாய் “சரி தேனு… நா இருந்துக்றேன்…” என்றார். 

 

      வேலாயி கேள்வி கேட்காமல் உடனே சரியென்றது தேன்மலருக்கும் அருளுக்கும் தங்கள் மேல் ஏதோ சந்தேகம் அவருக்கிருப்பதைக் காட்டிக் கொடுத்தாலும் அப்போதைக்கு அவர் எதுவும் கேட்காததே நிமமதியளிக்க, கொஞ்ச நாட்களில் இந்த பிரச்சனையெல்லாம் முடித்துவிட்டு வேலாயியிடம் அனைத்தையும் கூறிக் கொள்ளலாம் என்று பார்வையில் விடயத்தைப் பரிமாற்றம் செய்து வேலாயியை கண்டு புன்னகைக்க அவரும் புன்னகைத்தார்.

 

       பின் வேலாயி அதிர்ச்சி விலகாமல் நின்று கொண்டிருந்த துர்காவை அருகில் அழைத்து “பயந்துட்டியா த்தா… நா சும்மா விளையாண்டேன்… என்னை இவ்ளோ நல்லா பார்த்துக்கிட்டு மறுபடியும் என் பேத்திய பாக்க வச்சு பேச வச்ச நீயும் என் பேத்தி தான் த்தா…” என்று கூறவும் தான் துர்கா இயல்பாகி “அப்பாயி…” என்று அவரைக் கண்டிக் கொண்டாள்.

 

       பின் ராஜேஷிடமும் அவர் தன் செயலுக்கு மன்னிப்பு வேண்ட, ராஜேஷ் “என்ன பாட்டிமா இது… பெரியவங்க நீங்க என்ட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு… விளையாட்டு தானே நா சீரியஸா எடுத்துக்கல… ஆனா மறுபடியும் அடிச்சுராதீங்க… எப்பா என்னா அடி…” என்கவும் அங்கே சிரிப்பலை எழுந்தது. 

 

            பின் தேன்மலர் தேவாவை வேலாயிக்கு காட்டி “அப்பாயி…. இவரு தேவா…. இப்ப இவரு வீட்ல தான் தங்கிருக்கோம்… இவரு தான் இப்ப எங்களுக்கு ஹெல்ப் பண்றாரு…” என்றாள். 

 

       வேலாயி தேவாவை கண்டு புன்னகைத்து “ராசா கணக்கா இருக்கய்யா நீ…” என்கவும் தேவாவிற்கு அப்படி ஒரு புன்னகை. 

  

      தேவா தேன்மலரை பார்க்க தேன்மலருக்கு தான் அய்யோவென்று இருந்தது. வேலாயி மிகவும் கூர்மை. தன் சிறு அசைவை வைத்தேக் கண்டுபிடித்துவிடுவார் என்பதால் வேலாயி தேவாவை புகழ்ந்தைக் கேட்டுப் புன்னகைக்கவும் முடியாமல் அவனின் பார்வைக் கண்டெழும் வெட்கத்தை மறைக்கவும் முடியாமல் அவஸ்தையாய் உணர்ந்து, கீழே ஏதோ விழுந்து அதை எடுப்பதுப் போல் கீழேக் குனிந்துக் கொண்டாள். 

 

      தேவா அவளது செயலில் வாய்க்குள் சிரித்து “நல்லார்க்கீங்களா அம்மாச்சி…” என்கவும், 

 

      வேலாயி “அம்மாச்சியா…” என்று கேள்வியாகப் பார்க்க, 

 

        அருள் “இவன் என் மாப்ள ப்பாயி…. அப்ப இவனுக்கு நீ அம்மாச்சி தானே…” என்கவும் வேலாயி அருளை அழுத்தமாகப் பார்த்தபடி ஆம் என்று தலையசைத்தார். 

 

      பின் வேலாயி “நல்லார்க்கேன் பேராண்டி… நீ, வீட்ல எல்லாரும் சௌக்கியமா…” என்று கேட்க, 

 

      தேவா புன்னகை மாறாது “நா மட்டும் தான் அம்மாச்சி…. அப்பாவும் அம்மாவும் ஒரு வருஷம் முன்னாடி என்ன விட்டு போய்ட்டாங்க… என் அம்மு ரெண்டு மாசம் முன்னாடி போய்ட்டா…” என்றான். 

 

       வேலாயிக்கு அவன் கூறியது கேட்டு கண்கள் கலங்கி விட்டது. “இந்த பாரு ராசா… இனி நீ மட்டும் கெடையாது… உனக்கு அம்மாச்சி இருக்கேன்… என் பேத்தியிருக்கா… பேரன் இருக்கான்… இங்க வேல வேலைன்னு வேலய கட்டிட்டு அழுவுற உன் மாமேன் இருக்கான்… இனி உனக்கு யாருமில்லன்னு நீ சொல்லகூடாது…” என்று கண்டிப்புடன் கூற, 

 

     தேவா அவரது அன்பில் நெகிழ்ந்து விழிகள் கலங்கி “இனி சொல்ல மாட்டேன் அம்மாச்சி…” என்றவன் “ஆமா அம்மாச்சி நீ எப்டி இந்த வயசுலயும் இவ்ளோ அழகாயிருக்க…” என்று கிண்டல் செய்ய, வேலாயிக்கு அப்படி ஒரு புன்னகை. 

 

        வேலாயி சிரிப்போடு சிறிது வெட்கம் இழையோட “கிண்டல் பண்ணாத ராசா… என்னவோ தெரில ராசா உன்னை பாத்து கொஞ்ச நேரம் தான் ஆவுது உள்ளுக்குள்ள ஏதோ போட்டு புழியுராப்ல இருக்கு… என் பேராண்டி… என் ராசா… உன்னை இப்பவே நேர்ல பாக்கணும் போலயிருக்கு ராசா… என்னவோ உன்னை ரொம்ப புடிச்சு போச்சு…” என்றார். 

 

       தேவா அருளை எப்படி என்பதுபோல் பார்க்க அருள் வாயில் கை வைத்து “எப்டிறா இவ்ளோ ஈஸியா இந்த விக்கெட்ட எடுத்த… ம்ம் என்னமோ இருக்குடா உன்ட்ட… பாத்த கொஞ்ச நேரத்துலயே எல்லாருக்கும் உன்னை புடிச்சுருது…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாகக் கிசுகிசுக்க, தேவா முகங்கொள்ளாப் புன்னகையுடன் நின்றிருந்தான். 

 

      அருள் தேவாவின் விழி சென்ற திசைப் பார்க்க, தேன்மலர் வேறுபுறம் திரும்பிப் புன்னகைத்திருப்பதைக் கண்டவன் “அது சரி… அப்ப நாந்தான் ஜோக்கரா…” என்றவன் “மாப்ள… போதும் வீட்ல வெள்ளம் வந்து போவுது…” என்று தேவாவின் தோளை சுரண்ட தேவா திரும்பி ஈஈஈ என்று சிரித்து வைக்கவும் அருள் அய்யோவென்று தலையில் அடித்துக் கொண்டான் . தேவாவும் வேலாயியும் பேசிய சிறிது நேரத்திலேயே நெருக்கம் ஆகிவிட்டனர். 

 

             தேவா, தேன்மலர், அருள் மூவரும் வேலாயியிடம் சிறிது நேரம் பேசியிருந்து வேலாயியிக்கு எப்படியிருக்க வேண்டுமென்று கூறிவிட்டு ராஜேஷ், துர்காவிடமும் வேலாயியை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டிக்க மனமேயில்லாமல் துண்டித்தனர். தேன்மலர் முகத்தில் புன்னகையும் நிம்மதியும் இருப்பதுக் கண்டு அருளும் தேவாவும் மகிழ்ச்சிக் கொண்டனர். தேன்மலர் அருளிடம் ராகவி பற்றி கேட்க, அருள் அவளுக்கு நிச்சியம் முடிவான விடயத்தைக் கூற தேன்மலருக்கு தற்போது தன் தோழி அருகில் தான் இருக்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தமிருந்தாலும் அவளுக்குத் திருமணமாகப் போகும் மகிழ்ச்சிதான் மனம் நிறைத்தது. 

 

       பின் அனைவரும் உறங்கச் செல்லும் முன் தேன்மலர் தேவாவிடம் வந்து அவனது விழிப் பார்த்து “இன்னிக்கு எனக்கு திரும்ப கெடச்ச சந்தோஷமும் நிம்மதியும் உங்களுக்கு சீக்ரமே கெடைக்கும்… கெடைக்க வைப்பேன்… அம்முவுக்கு ஒரு நியாயம் கெடக்காம எனக்கும் முழுசான சந்தோஷம் கெடைக்காது தேவா…” என்று கூற, தேவா தான் அவளை விழி நீர் திரையிட ஒருபுறம் நெகிழ்ந்து, ஒருபுறம் அழுத்தமாக, ஒருபுறம் வைராக்கியமும் உறுதியுமாக, இறுதியில் காதலாக என்று இப்படி என்னவென்று கூற முடியா உணர்வில் பார்த்தவன் அவள் கைகளைக் கோர்த்துக் கொண்டான். 

 

      இருவரும் வெகு நேரம் அப்படியேப் பார்த்துக் கொண்டிருக்க, இருவரையும் கண்ட அருள் புன்னகைத்து அவர்களுக்கு தனிமைத் தந்து உறங்கச் சென்றுவிட்டான். பின் தன்னுணர்வு பெற்ற தேவாவும் தேன்மலரும் வெட்கம் கலந்தப் புன்னகையோடு ஒருவரையொருவர் பார்த்து விட்டு உறங்கச் சென்றனர். 

 

        மறுநாள் பொழுது இனிதே விடிய, காலை வீட்டிற்கு வந்த அமீராவிற்கு தேவா அருளை தன் நண்பனென்று அறிமுகம் செய்து வைக்க, பின் தேவா, தேன்மலர், அருள், அமீரா நால்வரும் சிரித்துப் பேசியபடி காபி அருந்தினர். அமீரா விடைபெற்றுச் சென்றதும் அருளும் தேவாவும் குளித்து வந்து தேன்மலர் கைமணத்தில் தயாராணக் காலை உணவை தேன்மலரோடு சேர்ந்து ஒரு கைப் பார்த்தனர். அவர்கள் சாப்பிட்டு எழவும் தேன்மலரின் கைப்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

 

       தேன்மலர் அழைப்பை ஏற்று பேசி முடித்து வந்தவள், தேவாவிடமும் அருளிடமும் “ஒரு எமெர்ஜென்ஸி நாம ஒரு வாரம் கழிச்சுலாம் யூஎஸ் போக போறதில்ல… ரெண்டு மூனு நாள்ல கெளம்பியே ஆகணும்… பிக் பி உடனே வர சொல்றாரு…” என்கவும் அருளும் தேவாவும் தீவிரமான மனநிலைக்கு வந்தனர். 

 

        அருள் “சரி தேனு… அப்ப நா என் பாஸ்போர்ட்டும் உன்னோடதையும் ஊருக்கு போய் எடுத்துட்டு வந்தர்றேன்…” என்று கூற, 

 

      தேன்மலர் “அதுக்குலாம் நேரமுமில்ல அவசியமுமில்ல… நீ உன்னோடத யாராவது சென்னை வர்றவங்கள்ட்டயோ இல்ல கொரியர்லயோ அப்பாவ குடுத்துவிட சொல்லு…. ஏன் எதுக்குன்னு கேட்டா வேல விஷயமான்னு சொல்லு… என்னோடத பத்தி நீ கவலப்படாத அது என்கிட்ட பத்ரமாயிருக்கு…” என்றாள். அருள் சரி என்றான். பின் அருளும் தேவாவும் “அதெப்டி… உன் பாஸ்போர்ட் உன்கிட்ட…” என்று கேட்க, தேன்மலர் அவர்களைப் பார்த்து மர்மமாகப் புன்னகைத்தாள்.

தொடரும்…..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்