Loading

தேன்மலரை கல்லூரிக்கு அனுப்பி வைத்த வேலாயி வீட்டிலுள்ள மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க அவரது கைப்பேசி ஒலித்தது. கைப்பேசியின் ஒலியைக் கேட்ட வேலாயியின் முகம் பிரகாசமாக, உதட்டிலும் அவரை மீறியப் பூரிப்பானப் புன்னகைத் தோன்றியது.

வேலாயி அப்புன்னகையுடனே சென்று அழைப்பை ஏற்று கைப்பேசியின் ஒலியை அணைத்தவர் “யய்யா…” என்று வாய்நிறைய அன்போடு சிறிது குரல் கமற அழைத்தார்.

வேலாயியுடன் மறுமுனையில் பேசிய அந்நபர் அதே அன்போடு “அம்மா… நல்லார்க்கியா…” என்று கேட்டார்.

வேலாயி புன்னகையுடன் “எனக்கென்னயா நா நல்லார்க்கேன்…. நீ நல்லார்க்கியாயா… சாப்டியா…” என்று கேட்டார்.

மறுப்பக்கம் பேசிய சிதம்பரம் சிறு புன்னகையுடன் “நா நல்லார்க்கேன் ம்மா… சாப்டேன்… என் பொண்ணு எப்டியிருக்கா… அப்றம் நா அங்க ஊருக்கு வரேன்… அத சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்…” என்றார்.

வேலாயி முகங்கொள்ளாப் புன்னகையுடன் “அய்யா… நிசமாவாய்யா…. சரிய்யா… நீ வா… அவ நல்லார்க்கா… அவள பத்தி நானே உன்கிட்ட ஒரு விசியம் பேசனுனு நினைச்சேன்… நீயே நேர்ல வரேன்ட்ட… வாய்யா பேசுவோம்….” என்றார்.

சிதம்பரம் “சரி ம்மா… இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்துல அங்க இருப்பேன்… நீ நம்ம சுரேஷ ஏர்போர்ட்டுக்கு வர சொல்லிரு…” என்றார்.

வேலாயி “அய்யா… சுரேஸு தேன காலேச்சுல விட போய்ருக்கான்யா…” என்று கூற,

சிதம்பரம் “அப்டியா மா… சரி ம்மா… நா ஹனிக்கு ஃபோன் பண்ணிக்றேன்…” என்றார். வேலாயி “சரிய்யா…. பத்மா வா… நானும் தேனுக்கு போன் போட்றேன்…” என்றார்.

சிதம்பரம் “இல்ல ம்மா… நானே ஹனிகிட்ட பேசிக்றேன்…” என்று கூறவும் சரி என்று கூறி அழைப்பைத் துண்டித்த வேலாயி தன் மகன் வரப்போகும் மகிழ்ச்சியில் தடபுடலாக சமைக்க உற்சாகமாக அடுக்களை நோக்கிச் சென்றார்.

தேன்மலரும் சுரேஷும் வாளாடியிலிருந்து கிளம்பி பல்கலைகழகத்திற்குச் செல்ல திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் காரை திருப்பி திருச்சி நோக்கிச் செல்லும்போதே மழைப் பெய்ய ஆரம்பிக்க, சுரேஷ் காரின் வேகத்தைக் குறைத்து மெதுவாகச் செல்ல ஆரம்பித்தான். கார் பால்பண்ணை தாண்டி டிவிஎஸ் டோல்கேட்டில் நுழையும்போது தேன்மலரின் கைப்பேசி சினுங்கியது. கைப்பேசியை எடுத்துப் பார்த்த தேன்மலரின் முகம் மலர, தேன்மலர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்ததால் அவளின் முக மலர்ச்சியைக் கண்டு சுரேஷும் புன்னகைத்து

“என்ன தேனு… மூஞ்சி இவ்ளோ பிரகாசமாவுது… யாரு ஃபோன்ல…” என்று கேட்டான்.

தேன்மலர் மேலும் முகம் மலர்ந்து இதழ் விரித்து “அப்பா ண்ணே…” என்று கூற,

சுரேஷ் “அதானே பாத்தேன்… சித்தப்பான்னாலே உன் மூஞ்சி ப்ரைட் ஆயிடுதே… சரி பேசு…” என்று கூற தேன்மலர் புன்னகைத்து விட்டு அழைப்பை ஏற்றாள்.

தேன்மலர் அழைப்பை ஏற்கவும் சிதம்பரம் “ஹனி… ஐ கேவ் எ சர்ப்ரைஸ் ஃபார் யூ…” என்றார்.

தேன்மலர் உற்சாகம் நிறைந்த குரலில் “அப்பா… எப்டியிருக்க… என்ன சர்ப்ரைஸ்…” என்று கேட்க,

சிதம்பரம் “சர்ப்ரைஸ்னு சொல்றேன்… என்னனு கேக்றியே ஹனி… சரி விடு… சர்ப்ரைஸ் தெரியனுனா…. இன்னும் 2 ஹவர்ஸ்ல ஏர்ப்போர்ட் வந்து என்னை பிக்அப் பண்ணிக்கோ…” என்றார்.

அதைக் கேட்ட தேன்மலர் காருக்குள்ளேயே ஒரு குதி குதித்து “ஹய்ய்… அப்பா அப்ப நீ வரியா…” என்று கேட்க,

சிதம்பரம் “எஸ் ஹனி…” என்று கூற,

தேன்மலர் “லவ் யூ ப்பா… ஐ வில் பி இன் தி ஏர்ப்போர்ட் இன் 2 ஹவர்ஸ் சிதம்பரம்… பீ இன் டைம்… ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ…” என்றாள்.

சிதம்பரம் வாய்விட்டு சிரித்து “ஓகே ஹனி… ஐ வில் பி இன் டைம்… லவ் யூ ஹனி… உம்மா” என்று முத்தம் வைக்க,

தேன்மலர் “ஓகே ப்பா… பை…” என்று கூற,

சிதம்பரம் “ஹனி… தி இஸ் அன்ஃபேர்… எனக்கான முத்தம்…” என்று கேட்க,

தேன்மலர் சிரித்து “நேர்ல வா தரேன்…” என்று கூற, சிதம்பரம் சிரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு தனக்கான விமான அறிவிப்பு வரவும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு விமானம் ஏறச் சென்றார்.

இங்கு சிதம்பரம் அழைப்பைத் துண்டித்ததும் தேன்மலர் “ஊஊஊகூகூ…” என்று காருக்குள்ளேயேக் குதித்துக் கத்தியவள் முகமும் அகமும் நிறையப் புன்னகையுடன் கார் ஓட்டிக் கொண்டிருந்த சுரேஷின் கையைப் பிடித்துக் குலுக்கி “அண்ணே… அப்பா வருதாம்ண்ணே…” என்று குதுகலத்தோடுக் கூறினாள்.

சுரேஷ் சிரித்த முகமாய் இருக்கும் தேன்மலரை இரசித்தவன் இதழ் விரித்து “உன் சிரிப்ப பாத்தேத் தெரிஞ்சுகிட்டேன் தேனு…” என்று கூற, தேன்மலர் அவனைக் கண்டு அசடு வழிய சிரித்தாள்.

சுரேஷ் சிரித்து அவள் தலையை ஆதுரமாக வருடியவன் “அதுக்கு ஏன்டா மூஞ்சிய இப்டி வச்சுக்ர… நீ இப்டி கலகலன்னு இருக்றதுதான் அண்ணனுக்கு வேணும்… எனக்கு தெரியாதா சித்தப்பாவ உனக்கு எவ்ளோ புடிக்கும்னு… அண்ணே சும்மா உன்னை கிண்டல் பண்ணேன்…” என்று கூற, தேன்மலர் மலர்ந்தப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

சுரேஷும் புன்னகைத்து “ஆமா… சித்தப்பா எப்ப வராராம்…” என்று கேட்க,

தேன்மலர் “இன்னும் ரெண்டு மணி நேரத்துல அப்பா வந்துருவாராம் ண்ணே… அதுக்குள்ள காலேஜ்க்குப் போய் எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு அத முடிச்சுட்டு வர்ற வழிலதானே ஏர்ப்போர்ட்…. அப்பாவ வரும்போது பிக்அப் பண்ணிக்லாம்…” என்று கூற சுரேஷ் புன்னகையுடன் தலையசைத்து கண்கள் மின்ன பேசிய தேன்மலரை கண்டு கண் நிறைந்தவன் டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருக்கும் தேன்மலர் வேலைப் பார்க்கும் பல்கலைக்கழகத்தை நோக்கிக் காரை வேகமாகச் செலுத்தினான்.

கார் பல்கலைக்கழகத்தை அடைந்ததும் தேன்மலர் சுரேஷை காரிலேயேக் காத்திருக்கச் சொல்லிவிட்டு தான் பேராசிரியராகப் பணியாற்றும் உயிரித் தொழில்நுட்பத்துறை கட்டிடம் நோக்கி நடையில் ஒருவித துள்ளலோடு உற்சாகமாகச் சென்றாள். கட்டிட நுழைவாயிலிலேயே தேன்மலரின் உற்ற தோழி ராகவியும் உற்ற தோழன் அருள் என்கிற அருள்ச்செல்வனும் புன்னகையுடன் இவளுக்காகக் காத்திருந்தனர். வழக்கத்தைவிட தேன்மலர் உற்சாகத்துடனும் முகம் நிறையப் புன்னகையுடனும் வருவதைக் கண்ட இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

தேன்மலர் அவர்கள் அருகே வரவும் ராகவி “என்ன தேனு… இன்னிக்கு மூஞ்சில எரியுற பல்புல வாட்ஸ் கூடுனாப்ல இருக்கு… என்ன மேட்டர்…” என்று கேட்டாள்.

தேன்மலர் மாறாப் புன்னகையுடன் “ஆமா கவி… நூறு வாட்ஸ் பல்பு ஒரு ஃபோன் கால்னால ஆயிரம் வாட்ஸ் பல்பா ப்ரைட்டாயிடுச்சு…” என்று கூற,

அருள் “அப்டி என்ன கால் ஹனிமலர்… ஒருவேளை உன் அப்பாயி உனக்கு மாப்ள பாத்து அந்த மாப்ள ஏதும் கால் பண்ணாரா…” என்று கேட்க, தேன்மலரும் ராகவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அருளைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டனர்.

ராகவி “அருளு… நீ இப்ப சொன்னியே… அத அப்றமா ஞாபகப்படுத்து சிரிக்றேன்….” என்று கூற,

அருள் முழித்து அசடு வழிய “மொக்கையா இருந்துச்சோ…” என்று கேட்க,

தேன்மலர் உதடு சுழித்து அவனை ஏற இறங்கப் பார்த்து “ரொம்ப கேவலமா இருந்துச்சு….” என்றாள்.

ராகவி “அவன் கெடக்றான் தேனு… உன் மகிழ்ச்சிக்கு காரணம் யாதோ? யாரோ?” என்று கேட்க, தேன்மலர் புன்னகையோடு ராகவியையும் அருளையும் மாறி மாறி பார்க்க இருவரும் தேன்மலரையே ஆர்வமாகப் பார்க்க,

“அப்பா…. அப்பா இன்னிக்கு வரேன்னு ஃபோன் பண்ணாங்க…” என்றாள்.

ராகவியும் அருளும் விழி விரிய இதழ்களில் புன்னகை உறைய “நிஜமாவா தேனு, ஹனிமலர்….” என்று ஒன்றுபோல் கேட்க, தேன்மலர் ஆம் என்று தலையசைக்க, இருவரும் சிரிக்க, தேன்மலரும் சிரிக்க, பின் மூவரும் ஹைஃபை அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அருள் “ஹனிமலர் அப்பா வராரு… ஸோ கண்டிப்பா ட்ரீட் வேணும்… அப்றம் நாங்களும் அப்பாவ பாக்க உன்கூட வருவோம்…” என்று கூற,

ராகவியும் “கரக்ட் டா… நாங்களும் வருவோம்…” என்று கூற தேன்மலர் சிரித்து சரி என்று கூறவும் மூவரும் சிரித்துப் பேசியபடி கட்டிடத்திற்குள் சென்றனர்.

மூவரும் கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்த துறைத் தலைவர் அறைக்குச் சென்றனர். அனுமதிப் பெற்று அறையினுள் நுழைந்த மூவரையும் கண்ட துறைத் தலைவர் சீதாராமன் புன்னகையுடன் “நம்ம டிபார்ட்மெண்டோட முப்பெரும் தலைவர்களும் ஒன்னா வந்துருக்கீங்க… என்ன விஷயம்… இந்த தடவ என்ன பிரச்சனை…” என்று கேட்டார்.

அருள் “சார் நாங்க மூனு பேரும் ஒன்னா வந்தாலே பிரச்சனையா சார்… வேற எதுக்கும் நாங்க ஒன்னா வந்ததில்லயா…” என்று கேட்டான்.

சீதாராமன் சிரித்து “என்னப்பா பண்றது… கடைசி ரெண்டு தடவ நீங்க ஒன்னா வந்தப்ப கம்பளைன்ட் பண்ண தானே வந்தீங்க…” என்றார்.

ராகவி “சார்… ஆனாலும் இது ஓவர் சார்… அதுக்கு முன்னாடி நாங்க பண்ண நல்ல விஷயம்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா…” என்று சலித்துக் கொள்ள, சீதாராமன் வாய்விட்டு சிரிக்க,

தேன்மலர் “சார் அந்த ரெண்டு தடவயும் நாங்களா சார் ப்ராப்ளம் க்ரியேட் பண்ணோம்… ஸ்டுடென்ட்ஸ் எங்ககிட்ட கம்ப்ளைன்ட் பண்ணாங்க நாங்க உங்ககிட்ட கம்ப்ளைன்ட் பண்ணோம்… ஆனா நீங்க தான் சீனியாரிட்டி பாத்து நடேசன் சார சும்மா வார்ன் பண்ணிட்டு விட்டுட்டீங்களே…” என்று ஆதங்கப்பட்டாள்.

சீதாராமன் சிரித்து “ஜஸ்ட் கிட்டிங் தேன்மலர்… பசங்களுக்கு ஸைலன்ட்டா ஐடியா குடுத்து ப்ரின்ஸ்பள்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணி… என்னையும் டோஸ் வாங்க வச்சு நடேசன் சார் பல்லையும் புடுங்கீட்டீங்களே… அப்றம் என்ன…” என்று கேட்க, மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சீதாராமனை பார்த்து சிரிக்க அவரும் சிரித்தார்.

பின் தேன்மலர் “சார்… எனக்கு இன்னிக்கு லீவ் வேணும்…” என்று கேட்க,

சீதாராமன் “அதான் இன்னிக்கு மழை அடிச்சு ஊத்துதா… லீவே கேக்காத தேன்மலரா லீவ் கேக்றது…” என்று அவர் கிண்டல் செய்ய,

தேன்மலர் “சார்…” என்று அழைக்க,

சீதாராமன் “சரி மா… லீவ் எடுத்துக்கோ… ஆமா என்ன திடீர்னு…” என்று கேட்க, தேன்மலர் தன் தந்தை வரப்போவதாகக் கூறவும் சீதாராமன் மகிழ்ந்து “அப்ப நீ ஒருவாரம் கூட லீவ் எடுத்துக்கோ தேன்மலர்…” என்றார்.

தேன்மலர் சிரித்து “இன்னிக்கு ஒருநாள் போதும் சார்…” என்றாள்.

சீதாராமன் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு ராகவி, அருள் புறம் திரும்பி “நீங்க ரெண்டு பேரும்…” என்று கேள்வியாய்ப் பார்க்க,

ராகவி “சார் எங்களுக்கும் லீவ் வேணும்…” என்று கேட்க,

சீதாராமன் “ஏன் உங்க அப்பாவும் ஊர்லேர்ந்து வர்ராங்கலா…” என்று கேட்டார்.

அருள் “சார்… தேன்மலர் அப்பாவும் எங்க அப்பா தான் சார்….” என்று கூற,

சீதாராமன் புன்னகைத்து அருளை ஏற இறங்கப் பார்த்து “ஹ்ம்ம்… எது பண்றதாயிருந்தாலும் மூனு பேரும் சேர்ந்துதான் பண்ணுவீங்க… ம்ம்ம்… சரி போங்க… நீங்க ரெண்டு பேருமே இப்ப தான் பர்ஸ்ட் டைம் லீவ் கேக்றீங்க… ஸோ லீவ் எடுத்துக்கோங்க…. இன்னிக்கு ஸ்டூடென்ட்ஸ்க்கெல்லாம் லீவ்ன்றதால உங்க மூனு பேருக்கும் லீவ் தரேன்… நல்ல ப்ரண்ட்ஷிப் உங்கள்து…” என்றார்.

அதற்கு மூவரும் புன்னகை புரிந்து ஒருமித்தக் குரலில் “தேங்க் யூ சார்…” என்றனர். சீதாராமன் சிரித்து “ஓகே கேரி ஆன்… என்ஜாய் தி டே…” என்று கூற, மூவரும் பதிலுக்குப் புன்னகை சிந்தி நன்றி கூறி அவ்வறையிலிருந்து வெளி வந்தனர்.

தேன்மலர் “சரி ஒரு ஒன் ஹார் டைம்… ரெண்டு பேரும் உங்களுக்கு ஏதாவது வேலையிருந்தா முடிச்சுட்டு வாங்க… எனக்கு மாலிக்குலர் பயாலஜி லேப்ல ஒரு சின்ன வேலையிருக்கு… அதமுடிச்சுட்டு நானும் வரேன்… ரெண்டு பேரும் உங்க வேலைய முடிச்சுட்டு கரவுன்ட் ப்ளோர்ல வெயிட் பண்ணுங்க நா வந்தர்ரேன்…” என்றாள்.

ராகவி சரி என்று விட்டு அவள் வேலையைப் பார்க்கச் செல்ல, அருள் “ஹனிமலர்… மாலிக்குலர் பயாலஜி லேப்ல என்ன வேலை…” என்று கேட்க,

தேன்மலர் புன்னகைத்து “நேத்து தேர்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ்ல சில பேர் அவங்க ஓன் இன்ட்ரஸ்ட்ல மினி ப்ராஜக்ட் பண்றாங்கடா…. அதுக்கு சில பாக்ட்டிரியல் கல்ச்சர் இன்னிக்கு போடனும்…. இன்னிக்கு மிஸ் பண்ணிட்டா… இதுவரைக்கும் அவங்க பண்ண வொர்க்லாம் வேஸ்ட் ஆயிடும்… அதான் என்கிட்ட கேட்டாங்க… நா பண்றேன்னு சொல்லீற்கேன்…” என்றாள்.

அருள் “ஓஓஓ ஓகே… அப்ப நானும் ஹெல்ப் பண்றேன் வா… எனக்கு பெருசா வேல ஒன்னுமில்ல…” என்று கூறவும் தேன்மலர் புன்னகைக்க, இருவரும் லேபை நோக்கிச் சென்றனர்.

தேன்மலரும் அருளும் லேபில் வேலையை முடித்தவர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே செல்ல ராகவி அங்கு அவர்களுக்காகக் காத்திருந்தாள்.

பின் மூவரும் பேசியபடி வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தனர். தேன்மலர் சுரேஷை கைப்பேசியில் அழைக்க, தேன்மலர் அழைத்த இரண்டாவது நிமிடம் சுரேஷ் காரை அவர்கள் முன்பு நிறுத்தியிருந்தான். மூவரும் காரில் ஏற சுரேஷ் புன்னகையோடு ராகவியையும் அருளையும் நலம் விசாரித்து விட்டு காரை அதே திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஏர்ப்போர்ட் நோக்கிக் காரைச் செலுத்தினான்.

தேன்மலர், ராகவி, அருள் மூவருமே அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிரி மருந்தியல்(biopharmaceutical) படித்தனர். இளங்கலையாக உயிரித்தொழில்நுட்பம் படித்திருந்தாலும் முதுகலையாக உயிரி மருந்தியல் தேர்வு செய்ததே அவர்கள் நட்பிற்கு அடித்தளம் அமைத்து தர, மூவருமே இணைப் பிரியாத நண்பர்களாயினர். மூவருமே படிப்பில் கில்லாடி ஆதலால் முதுகலையில் தேன்மலர் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற அதற்கு அடுத்தடுத்த இடங்களை முறையே அருளும் ராகவியும் பெற்றனர்.

பின் மூவரும் அதே பல்கலைக்கழகத்தில் பி எச் டி படிப்பை இரண்டே வருடத்தில் முடித்து தற்போது அங்கேயேப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றனர். படிக்கும்போதே படிப்பாலும் உதவும் குணத்தாலும் அந்த பல்கலைக்கழகத்தில் மூவரும் பிரபலமடைந்திருந்தனர். அதனால் உயிரித் தொழில்நுட்பத்துறையிலும் உயிரி மருந்தியல் துறையிலும் பணிபுரியும் அனைவருக்குமே இவர்கள் மூவர் பற்றியும் நன்குத் தெரியும். உயிரி மருந்தியல் துறையில் அவர்களை பணியாற்ற அழைக்க ஆனால் மூவருக்கும் உயிரித் தொழில்நுட்பம் பிடித்திருந்ததால் மூவரும் அத்துறையில் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

அதனால் மூவருக்கும் மூவர் குடும்பங்களைப் பற்றியும் குடும்ப உறுப்பினர்களை பற்றியும் நன்கு தெரியும். தேன்மலர் வீட்டில் அவளும் அவளது அப்பாயி மட்டுமே ஆதலால் மூவரும் தங்களுக்கான நேரத்தை செலவிட அடிக்கடி தேன்மலர் வீட்டையே தேர்வு செய்தனர். தேன்மலர் வீட்டிற்கு ராகவியும் அருளும் அடிக்கடி வருவதால் சுரேஷும் அவர்களுக்கு நன்குப் பழக்கமானான். ராகவி வீட்டில் அவளுக்கு தீவிர மாப்பிள்ளை தேடலில் ஈடுபட்டுள்ளதால் அதைக் கேள்வியுற்ற வேலாயி எப்பொழுதும் தேன்மலரின் திருமணத்தைப் பற்றியேப் பேசிக்கொண்டிருப்பவர் இப்பொழுது தேன்மலரிடம் தீவிரமாகத் திருமண பேச்சை பேசி இன்று காலையில் அவளிடம் திருமணத்திற்கு சம்மதமும் வாங்கி விட்டார்.

சுரேஷ், சிதம்பரம் வரும் விமானம் வரும் நேரத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே ஏர்ப்போர்ட் சென்று விட, தேன்மலர், ராகவி, அருள் மூவரும் விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தில் அரட்டையில் ஈடுபடலாயினர். சுரேஷ் அவர்களுக்குத் தனிமை தந்து சற்று தள்ளி வந்து போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அரட்டையின் ஊடே ராகவியின் திருமணப் பேச்சு வர, தேன்மலரும் அருளும் அவளைக் கேலி செய்தனர். அவர்கள் கேலியிலிருந்து தப்பிக்க ராகவி வேலாயி பேச்சை எடுக்க அப்போது பேச்சு வாக்கில் தேன்மலர் காலை வேலாயியிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து மாப்பிள்ளை பார்க்கச் சொன்னதைக் கூற, ராகவியும் அருளும் அதிர்ச்சியோடும் ஆச்சர்யத்தோடும் தேன்மலரை பார்த்தனர்.

ராகவி “டேய் அருளு நம்ம தேனா டா இது…” என்று கேட்க,

அருள் “எனக்கும் அதுதான் கவி சந்தேகமாயிருக்கு… கல்யாணம்னாலே அப்பாயிகிட்ட மல்லுக்கு நிக்கிற ஹனிமலர் எப்புடி சரி சொன்னா…” என்றான்.

தேன்மலர் “என்னனு தெரிலடா… காலையில அப்பாயி ரொம்ப சென்டிமென்ட்டா பேசி அழுதுருச்சு… இதுல எத்தனை நாளைக்கு இருக்க போறேன் அது இதுன்னு வேற பேசிருச்சு… எனக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு… எப்பயாயிருந்தாலும் கல்யாணம் பண்ண போறோம் அத இப்ப பண்ணா என்னனு தோனுச்சு… அப்பாயிக்கும் அது ஆசை நிறவேறும்ல அதான் சரினு சொல்லிட்டேன்…” என்றாள்.

ராகவி “ஆத்தா மகமாயி இப்பயாவது மலயறங்கி வந்து அந்த வயசான மனுஷி ஆசைய நிறைவேத்தனுனு தோனுச்சே…” என்று கூற, தேன்மலர் புன்னகைத்தாள்.

அருள் “அப்ப ரெண்டு கல்யாண சாப்பாடு வெயிட்டிங் கா… சூப்பர்…” என்று கூற, தேன்மலரும் ராகவியும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க,

அருள் முதலில் குழம்பியவன் “ஏய் பிசாசுங்களா… அப்ப…” என்று கூற,

ராகவி “உங்க வீட்ல பேசியாச்சு… உனக்கு ஆல்ரெடி அப்பா பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க பக்கி….” என்றாள்.

அருள் அவளை முறைக்க, தேன்மலர் “அது எப்டிடா… உன்னை மட்டும் சிங்கிளா சந்தோஷமா இருக்க விடுவோம்…” என்று கூற,

அருள் அவளையும் முறைத்து பெருமூச்சு விட்டு “ரெண்டு பிசாசுங்க கூட சகவாசம் வச்சுருக்கேன்… இனி மூனாவதா ஒரு பிசாசுக்கூட குப்பைக் கொட்டனும் அவ்ளோ தானே… பரவால்ல…” என்று கூற, தேன்மலரும் ராகவியும் சிரிக்க அருளும் சிரித்தான்.

அச்சமயம் சிதம்பரம் வரும் விமானம் தரையிறங்கியதற்கான அறிவிப்பு வரவும் மூவரும் சிரிப்பை நிறுத்திவிட்டு பரபரப்புடனும் புன்னகையுடனும் வருகைப் பகுதியில் விழிப் பதித்தனர். அவர்களைக் கவனித்த சுரேஷும் அவர்களோடு இணைந்து சிதம்பரத்தைக் காண ஆவலாகக் காத்திருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்